உருளைக்
கிழங்கு (R)Toasted Cutlet
தமிழில் வறுக்கப்பட்ட கட்லெட் என்று சொல்லலாமா?
உருளைக்கிழங்கு சீவல் வறுக்கப்பட்ட கட்லெட்?
உருளைக்கிழங்கு ஒரு versatile கிழங்கு. உடனடியாகச்
செய்வதற்கு, உருமாற்றி, எதனுடனும் சேர்த்து, பொரித்து, மசித்து, சீவி நொறுக்குத் தீனியாக
விதம் விதமாகச் செய்வதற்கு.... "என்னை வைச்சு காமெடி கீமடி, அடிச்சு, முறுக்கி என்ன வேணா செஞ்சுக்க" எனும் அப்பாவிக்
கிழங்கு!
இந்த ரெசிப்பி புதியது என்று விளம்பரம் எல்லாம்
செய்யமாட்டேன். நீங்களும் செய்திருப்பீங்க. இருந்தாலும் சும்மா ஒன்று போட்டு வைப்போமே!
என்ன சொல்றீங்க?
பாதியாக நறுக்கி
உருளைக் கிழங்கு நடுத்தர அளவு உங்கள் தேவைக்கேற்ப. நன்றாகச் சுத்தம் செய்துவிட்டு, தோல் மட்டும் உரிக்க வருவது போல் ஆவியில் வேக வைச்சுக்கோங்க. Note This - உருளைக் கிழங்கு வெந்துவிடக் கூடாது.
(பின் குறிப்பு - நான் செய்ய நினைத்தது வேறு. நான் வாங்கியிருந்தது இளைய உ கி - குழந்தை உ கி யை விடச் சற்று பெரிது என்பதால் இப்பெயர்! ஆனால் ஆவியில் வேக வைத்து எடுத்ததும், என் மனம் மாறிவிட்டது. ரொம்ப நாளாச்சே இப்படிச் செய்து என்று....அதனால் இச்செய்முறை! )
நெடுக்கு வாக்கில் பாதியாக நறுக்கிக் கொண்டு
பின்னர் ஒவ்வொரு பாதியையும் 3 அல்லது 4 கொஞ்சம் மெலிதான (பஜ்ஜிக்குச் சீவுவது போன்று
ரொம்ப மெலிதாக வேண்டாம்) படத்தில் பார்த்தால் தெரியும் என்று நினைக்கிறேன், அப்படி
நறுக்கிக் கொள்ளுங்கள்.
தேவையான உப்பு, தேவையான மிளகாய்த் தூள், பிடிக்குமானால்
பூண்டுவிழுது கொஞ்சம்
ஒரு அகலமான பேஸின் அல்லது கொஞ்சம் குழிவான
தட்டில் தேவையான உப்பு, தேவையான மிளகாய்த் தூள், பிடிக்குமானால் பூண்டுவிழுது கொஞ்சம்
பூண்டு வேண்டாம் என்றால் பெருங்காயம் கொஞ்சம்.
கோதுமை மாவு அல்லது மைதா மாவு - நான் கோதுமை
மாவு எடுத்துக் கொண்டேன் - அரிசி மாவு, சோள மாவு இவற்றை முறையே 1/2 : 1 : 1 விகிதத்தில்
கோதுமை மாவு அல்லது மைதா மாவு - நான்
கோதுமை மாவு எடுத்துக் கொண்டேன் - அரிசி மாவு, சோள மாவு இவற்றை முறையே 1/2 : 1 : 1
விகிதத்தில் உங்களுக்குத் தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் தண்ணீர் விட்டு ரொம்பத்
தண்ணியாகவும் இல்லாமல் ரொம்பக் கெட்டியாகவும் இல்லாத பக்குவத்தில் கரைத்துக்
கொள்ளவும்.
இந்தக் கலவையைக் கொஞ்சம் கொஞ்சமாக கலந்து வைச்சுக்கோங்க. தேவைப்பட்டால் மீண்டும் கலந்துகொள்ளலாமே!
தனியாக மற்றொரு பேஸின் அல்லது குழிவான தட்டில்
ப்ரெட் க்ரம்ப்ஸ் Bread Crumbs எடுத்து தயாராக வைத்துக் கொள்ளவும். நான் உப்பு ப்ரெட்
Crumbs எடுத்துக் கொண்டேன்.
அடுப்பை ஏற்றி, தோசைக்கல்லை அல்லது அகலமான சமமாக உள்ள இரும்பு Grill Pan இருந்தால் அதை அடுப்பின் பெரிய பர்னரில் வைத்து தோசைக்கல்லில் / Pan ல் சிறிது எண்ணை விட்டுத் தேய்த்துக்கொள்ளுங்கள்.
சாதத்திற்குத் தொட்டுக் கொண்டோ இல்லை
ஹார்லிக்ஸ் பாப்பா மாதிரி அப்படியேவோ சாப்பிடலாம்!
அவ்வளவுதாங்க!
-========================================================================
நன்றி
- JKC அண்ணா - புத்தகத்திற்கு. இன்று நம்ம ரெசிப்பி என்பதால், அடுத்த பகுதியும் நம்மளோடது
வேண்டாமே என்று, ஜெ கே அண்ணா அனுப்பிக் கொடுத்த புத்தகத்தில் "திங்க" வைச்
சார்ந்த அனுபவங்களின் புத்தகம் என்பதால் அதிலிருந்து ஒரு அனுபவம் இங்கு பகிரப்படுகிறது.
புத்தகத்தின் பெயர் சிரிக்க வைக்கும்
சொதப்பல்கள்.
ஆசிரியர் - ராஜலக்ஷ்மி பரமசிவம்,
சென்னை
வலைப்பூ - http://rajalakshmiparamasivam.blogspot.com
புத்தகம் வெளியிடப்பட்டிருக்கும் தளம் - http://FreeTamilEbooks.com
ராஜலக்ஷ்மி பரமசிவம் மின்னஞ்சல்: rajisivam51@gmail.com
ஆசிரியர் தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ளும் குறிப்பு -
என்னைப் பற்றி. நான் ஒய்வு பெற்ற ஆசிரியை மற்றும் குடும்பத்
தலைவி என்பதைத் தவிர சொல்வதற்கு ஒன்றுமில்லை.. சமீப காலமாக இணையத்தில் எழுதி வருகிறேன்.
அதன் மூலம் பல வாசக நண்பர்கள் கிடைத்துள்ளார்கள் அவர்கள் கொடுக்கும் ஊக்கம் என்னைத்
தொடர்ந்து எழுத வைக்கிறது.
அவர்களுக்கு என் நன்றி.
என் தந்தையின் எழுதும் ஆர்வம் என்னையும் விடவில்லை . என்
அம்மாவோ என் எழுத்துக்களின் தீவிர விசிறி. அம்மாவினுடைய கருத்தையும் சில சமயங்களில்
நான் கட்டுரையாக்கியிருக்கிறேன். ஆகவே நான் எழுதுவதற்கு காரணமான என் பெற்றோருக்கு முதல்
நன்றி.
சிறு வயதில் எனக்கு நிறைய கதைகள் சொல்லி என் கற்பனைத்
திறத்தை வளர்த்த என் சித்தப்பாவிற்கும் இத்தருணத்தில் நான் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.
என் எழுத்துக்களின் முதல் விமரிசகரும், அங்கங்கே திருத்தங்கள்
செய்து என் பதிவுகளை செம்மைப்படுத்திக் கொடுப்பவருமான என் கணவருக்கும் நன்றி. இந்த
மின்னூலை தரவிறக்கம் செய்து படிக்கும் உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
============
உங்கள் சாம்பார் மட்டும் எப்படி இவ்வளவு சுவையாக வாசனையாக இருக்கிறது. உங்கள் சாம்பார் பொடி ரகசியத்தை சொல்வீர்களா?"
"உங்கள் ரசத்திற்காகவே இன்னும் கொஞ்சம் சாதம் சாப்பிடப்
போகிறேன்
இவையெல்லாம் என் தோழிகளும், உறவினர்களும் என் சமையலைப்
பற்றிப் புகழ்ந்து கூறும் வார்த்தைகள்.
Note: வீட்டிலுள்ளவர்கள் என் சமையலை இப்படிப் புகழ்வதில்லை. வெளியில் இருப்பவர்கள் கண்களுக்கு சமையலில் புலியாகத் தெரியும் நான் வீட்டில் இருப்பவர்களுக்கு எலியாகக் கூட தெரியவில்லை என்பதுதான் உண்மை.
அதிலும் என் கணவரிடம் கேட்டால்,
"ராஜி மிகவும் நன்றாக வெந்நீரும், தயிரும் செய்வாள்" என்று நக்கலடிப்பார்.
ஆனால் நான் நிஜமாகவே தயிர் உறைய
வைப்பதற்கு திண்டாடின கதை இருக்கிறதே ......அது பெரிய ராமாயணம். அவருக்கு நிஜமாகவே
தயிரை கண்ணில் காட்டாமல் திண்டாட விட்டிருக்கிறேன். பல வருடங்களுக்கு முன்பு.
ஸ்டாப்... ஸ்டாப் பல வருடங்கள் என்றுதான் சொன்னேன். உடனே A.D. யா B.C யா என்று கேட்காதீர்கள். 'இளம் தம்பதிகள்' நாங்கள். இப்பொழுதுதான் சமீபத்தில் மணமானவர்கள். எங்களுக்குத் திருமணமாகி ஒரு முப்பத்தாறு வருடம்தான் ஆகிறது. இளமையின் வாயிற்படியில் பேத்தி பேரன்களுடன் நிற்கிறோம்.
சரி. தயிர் விஷயத்திற்கு வருகிறேன்.
எங்களுக்குத் திருமணமான புதிது. டில்லி வாசம்.
புதுக் குடித்தனம், சமையல், வீட்டிற்கு சாமான்கள் வாங்குவது என்று
எல்லாவற்றிலும் trial and
error தான்.
ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்.
ஒரு முறை மாதாந்திர சாமான் லிஸ்ட்
எழுதும்போது, பாயசத்திற்கு சேமியா கால் கிலோ, ஏலக்காய் கால் கிலோ (தவறுதலாக எல்லாம்
இல்லை) என்று லிஸ்ட் எழுதி கடையில் கொடுத்து விட்டேன்.
மளிகைக் கடைக்காரரே அதை
"எடிட் செய்து இரண்டு ருபாய்க்கு ஏலக்காய் போதும் என்று கொடுத்தார் என்றால் பார்த்துக்
கொள்ளுங்களேன்.
இப்படித் தப்பும் தவறுமாகத்தான்
போய் கொண்டிருந்தது எல்லாம்..
ஆனாலும், அது ஒரு கனாக்காலம் தான்
இந்த ரேஞ்சில் போய்கொண்டிருந்த
குடித்தனத்திற்கு, குளிர் காலம் வந்து இன்னும் கொஞ்சம் குழப்பியது.
முதல் மழை போல், முதல் குளிர் எங்களுக்கு
டெல்லியில்.
எல்லோரும் ஸ்வெட்டர், ஷால் எல்லாம்
போட்டுக் கொண்டு "ரோஜா" படத்தில் வரும் தீவிரவாதி போல் நடமாடிக் கொண்டிருந்ததை
பார்த்து அதிசயத்தேன்.
ம்ம்ம்.நானும் அப்படித்தான்
அந்தக் குளிரில் எதை சமைத்தாலும்
சட்டெனக் குளிர்ந்து போய் விடும்.
ஒரு நாள் எப்பொழுதும் போல் சாதத்திற்கு
தயிர் போட்டுக் கொள்ளலாம் என்று எடுத்தால் பாலாகவே இருந்தது. முதல் நாளிரவு உறை ஊற்றின
ஞாபகம் இருந்தது. உறை ஊற்றினேனா இல்லையா என்கிற சந்தேகம்.
அடுத்த நாளும் இப்படியே ஆயிற்று.
அதற்கு அடுத்த நாளும் அப்படியே. ஊரே பிரிட்ஜ் மாதிரி இருக்கிறதே, அது தான் காரணமோ என்று
குழம்பினேன்.
என்னவரோ, தயிராவாது சரியாக செய்வாய்
என்று எதிர் பார்த்தேன். அதுவம்
இல்லையா.." என்று உதட்டை பிதுக்க...எனக்கு மானப் பிரச்சினையானது. எப்படியாவது தயிர்
செய்யக் கற்றுக் கொள்ளத் தீர்மானித்தேன். அதுவும் போர்க்கால அடிப்படையில்.
தயிர் செய்யக்... கற்றுக் கொள்ள
வேண்டுமா.. என்ன? நினைப்பீர்கள் எல்லோரும்.
தொடர்ந்து படியுங்கள் .தயிர் செய்வது
எவ்வளவு கஷ்டம் என்று உங்களுக்கே புரியும்.
என் தயிர் பாடம் இதோ
எதிர் வீட்டில் இருந்த பஞ்சாபி
அம்மாவிடம் ஆரம்பித்தேன்.
உடைந்த ஹிந்தியில் என் சந்தேகத்தைக்
கேட்டேன்.
அவரும், "ஆமாம் குளிரில் தயிர் உறைவது கொஞ்சம் கஷ்டம் தான்."
"Note this point என்னவரே"
என்று சொல்லியாயிற்று.
ஆனால் அவர் காதில் வாங்கினால்
தானே.....'எனக்குத் தெரியாது' என்று நினைக்கும் என் வாழ்க்கை துணைவரிடம் என்னத்தை சொல்ல.
அந்த அம்மா சொன்ன மாதிரி மறு நாள்
உறை ஊற்றி, ஸ்டவ் மேலேயே வைத்து விட்டேன்.
மறு நாள் ஆசையாக எடுத்தால்,
"நீ ஸ்டவ் மேல் வைத்து விட்டால்.... நான்
தயிராகி விடுவேனா என்ன?" என்று என்னைப் பார்த்து சிரித்தது பால்.
வேறு என்ன வழி? யோசனை பலமானது.
இப்பொழுது போல் போன் வசதியில்லையே,
சென்னையிலிருக்கும் அம்மாவைத் தொடர்பு கொள்ள. கடிதப்போக்குவரத்தோ ஒரு வாரத்திற்கு மேல்
ஓடி விடும், என்று யோசித்துக் கொண்டே, அஜ்மல்கான் ரோடில் நடக்கும் போது கண்ணில் தென்பட்டது
ஸ்வீட் கடை. நாவில் நீர் ஊறியது ஸ்வீட்டைப் பார்த்து அல்ல கல்லாவிற்கருகில் பெரிய மண்
சட்டியில் இருந்த, கட்டித் தயிரைப் பார்த்துதான்.
அட..தயிர்.. என்று காணாததைக் கண்டது
மாதிரி (உண்மையில் காணாதது தானே) கத்தினேன்.
கத்தியால் வெட்டும் போல் இருந்த
தயிரை வாங்கும் போது வேறு ஒரு யோசனை தோன்றியது.
ஒரு வேளை, மண் சட்டியில் உறை ஊற்றினால்
தயிர் கட்டியாக உறையுமோ என்று சின்ன ஆசை வந்தது.
அதை நடைமுறைப்படுத்த மண் சட்டியைத்
தேடிப் பிடித்து வாங்கிக் கொடுத்தார் என் கணவர்.
வாங்கிய அன்றே பாலைக் காய்ச்சி உறை ஊற்றின பின், ஆடாமல் அசையாமல் (இது என் கணவருக்கு அவர் ஆபிசில் கிடைத்த டிப்ஸ்) சர்வ ஜாக்கிரதையாக மெதுவாக கீழே வைத்தேன். தயிர் உறைந்தால் பிள்ளையாருக்கு 108 தேங்காய் உடைப்பதாக வேண்டிக் கொண்டு படுத்தேன்.
மறுநாள் காலை முதல் வேலையாக மண்சட்டி
மூடியைத் திறந்துமெதுவாக... ஒரு ஸ்புனால் தொட்டேன். தயிரை டிஸ்டர்ப் செய்யக் கூடாதல்லவா?
'லொடக்" என்று ஸ்பூன் உள்ளே
போனது. "நான் இன்னும் பாலாகத் தான் இருக்கிறேன்" என்று சொல்லாமல் சொல்லியது
பால்.
சரி இதற்கு மேல் என்ன செய்வது?
வெறுத்துதான் போனேன்.
அப்படி, இப்படி, கடையில் தயிர்
வாங்கி ஓட்டிக் கொண்டிருந்தோம். இப்போழுது போல், sealed packet இல் தயிர் கிடைக்காது.
அதனால்தான் வீட்டில் தயிருக்காக
பிரம்மப் பிரயத்தனம் எடுத்துக் கொண்டேன்.
அப்பொழுது ஒரு நாள் இவர் நண்பர்
வீட்டிற்கு சாப்பிடக் கூப்பிட, அங்கு சென்றோம். ஆசையாய் காத்திருந்தேன்... தயிருக்காக.
வந்தது அந்த நொடியும்.
என் தட்டில் கட்டித் தயிர். ஆசையாய்
சாப்பிட்டுக் கொண்டே
என் கேள்விகள் ஸ்டார்ட்...
என்ன பால் வாங்குகிறீர்கள்?
இது வாங்கிய தயிரா? இல்லை வீட்டிலேயே
உறை ஊற்றியதா?
கண்டிப்பாக அந்தம்மா குழம்பிப் போயிருக்க
வேண்டும். ஆனாலும் ஒரு தயிர் டிப்ஸ் கிடைத்தது.
அந்தம்மா சொன்னபடி பாலை உறை ஊற்றி
கோதுமைமாவு டின்னிற்குள் டைட்டாக மூடி வைத்தேன். ம்க்கும்....
அதுவும் எனக்கு வேலை செய்யவில்லை.
என்னை சுற்றி எல்லோருமே வேண்டுமென்றே
நான் தயிர் சாப்பிடக் கூடாதென்று சதி வலை பின்னுகிறார்களோ? அதுதான் தயிர் ரகசியத்தை
யாருமே சரியாக சொல்ல மாட்டேன் என்கிறார்கள் என்ற சந்தேகம் வந்தது.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார்
போல் என் கணவரோ "கவலையே பாடாதே இனிமேல் தயிர் என்று பேப்பரில் எழுதிக் கொடு பார்த்துக்
கொண்டே சாப்பிட்டு விடுகிறேன்" என்று சொன்ன போது அழுகை வராததுதான் குறை..
யார் என்ன சொன்னாலும் அந்த யோசனையை
நடைமுறைப்படுத்த தவறியதேயில்லை.
ஆனால் எதுவும் சரியாக வரவில்லை.
கடைக்காரர் அருளினால்தான் தயிர்
சாப்பிட்டோம்.
இந்த தயிர் கூத்தும் ஒரு நாள் முடிவிற்கு
வந்தது.
ஆமாம் ஒரு நாள் தயிர் உறைந்தே
விட்டது. (ஒருபக்கம் ஆச்சர்யம். ஒரு பக்கம் அளவிட முடியாத சந்தோஷம் எனக்கு)
காரணம் குளிர் கொஞ்சம் குறைய ஆரம்பித்திருந்தது.
அன்று, நான் தயிருக்கு விழா எடுக்காததுதான் பாக்கி.
இப்பொழுது உங்களுக்குப் புரிந்ததா?
தயிர் செய்வது எவ்வளவு கஷ்டம் என்று ஒத்துக் கொள்கிறீர்கள்தானே!
இப்பொழுது மூன்று வருடத்திற்கு
முன்பாக மீண்டும் டில்லி வாசம்.
மீண்டும் "தயிர் புராணமா"?
என்று சலித்துக் கொள்ள வேண்டாம்.
Nestle, Amul, Mother Dairy என்று
பலரின் உதவியுடன் தயிர் சாப்பிட்டோம்.
வாழ்க்கைமுறை எவ்வளவு சுலபமானது பார்த்தீர்களா?


உருளை கட்லெட் வீட்டில் செய்யச் சொன்னதே இல்லை. என் ஆசை, கார ரோஸ்ட் கறி இல்லைனா அதீத வெங் பெரிதாக திருத்தி கொஞ்சம் உருளை மசித்த கறி.
பதிலளிநீக்குகட்லெட் ருசித்ததே இல்லை. கெச்சப்புடன் ரொம்ப நல்லா இருக்கும்னு தோணுது
வாங்க நெல்லை.. நேற்று நான் இதை வீட்டில் செய்து பார்த்தது தனி அனுபவம்! உருளை ஓவராக வெந்து விட்டது!
நீக்குவாங்க நெல்லை....இது நல்லாவந்திச்சு. நல்லாருக்க்ம்.
நீக்குவேக வைக்காமல் தோல் நீக்கிச் செய்யலாம் அப்படிச் செய்யும் போது உருளையை கொஞ்சம் மெலிதான வில்லைகளாகப் போட்டுக்கணும். இப்படிச் செய்து தோசைக்கல்லில் போட்டதும் மூடி போட்டு ஒருபக்கம் மட்டும் அப்புறம் திருப்பிப் போட்டு மூடி போடாமல் செய்யலாம்
கட்லெட் நா எண்ணை வைக்கணுமே ஹிஹிஹி அதான் இப்படி
நன்றி நெல்லை
கீதா
உருளையும் வெங்காயமும் இல்லைனா தென் இந்தியர்களுக்கு கொஞ்சம் கஷ்டம்னா, வட இந்தியர்களுக்கு ரொம்பவே.
பதிலளிநீக்குபடங்கள் நல்லா வந்திருக்கு. செய்முறை எளிது.
பிரட் க்ரம்ஸ் கடைகளில் கிடைக்குமா? வாழைக்காய்ல இதுபோல செய்ய முடியுமா?
சரியாகச் சொன்னீர்கள். சாப்பிடுபவர்களுக்கும், சமையல் செய்பவர்களுக்கும் உருளை கடவுள் மாதிரி!
நீக்குநெல்லை அண்ட் ஸ்ரீராம் டிட்டோ...இது அப்பாவிக் கிழங்கு.
நீக்குஆமாம் செய்முறை ரொம்பவே எளிது. ப்ரெட் கரம்ஸ் கடைகளில் கிடைக்குது நெல்லை, எம் கே அஹமெட் கடைகளில். லுலு மாலில் கண்டிப்பாகக் கிடைக்கும்.
நான் உப்பு ப்ரெட்டை பொடித்துக் கொண்டேன். கொஞ்சம் உலர விட்டு..
கீதா
நெல்லை ஆமாம் வாழைக்காயிலும் செய்யலாம்
நீக்குகீதா
பிரட் க்ரம்ஸ் நேற்று கடையில்தான் வாங்கினோம்.
நீக்கு//வாழைக்காய்ல இதுபோல செய்ய முடியுமா?// முடியும். ஒரு முறை என் பெண்ணும், மாப்பிள்ளயும் கனடாவிலிருந்து இந்தியா வந்தபொழுது சென்னை அடையாறு மத்ஸ்யாவில் பஃபே டின்னரில் வாழைக்காயில்தான் இதைப்போல செய்திருந்தார்கள். வாழைக்காய் பிடிக்காத என் அக்கா பேரனுக்கு உ.கி. என்று சொல்லி கொடுத்ததும் சாப்பிட்டு விட்டான்.
நீக்குசர்க்கரைவள்ளிக் கிழங்கிலும் செய்யலாம் என்று நினைக்கிறேன்.
ஆமாம் பானுக்கா, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, புடலை, பீர்க்கங்காய், சேம்பு (வேக வைத்து) கத்தரி, ஏன் வெங்காயத்திலும், அதாவது பஜ்ஜி செய்யப் பயன்படுத்தும் எல்லாவற்றிலும்...வெங்காயத்துல செய்யும் போது கொஞ்சம் கவனமா இருக்கணும். ரவுன்ட் பிரி உதிர்ந்து வெளிய வந்துவிடுமே. கத்தரிக்காயில் செய்யறப்ப மெலிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும் பஜ்ஜிக்குச் செய்வது போல.
நீக்குகீதா
பெண்களுக்கு மாத்திரம் திருமணமாகி முப்பத்தாறு வருடத்திலேயே பேரன் பேத்திகளோடு நின்றுவிடுகிறார்கள். ஆண்களுக்கு அப்படி நிகழாத்தின் இளமை ரகசியம் என்ன?
பதிலளிநீக்குபுரியவில்லை. இது ஒரு விளம்பர பின்னூட்டமோ?!
நீக்குபுதன் கேள்விக்கு அனுப்ப வேண்டியதை இங்கே அனுப்பி விட்டீர்களா நெல்லை?
நீக்குஅதான் எழுத்தாளர் ஒல்லியிருக்கார் இல்லையா.. 36 வயது இளமையில் வாசலில் பேரன் பேத்திகளுடன்னு.
நீக்குநான்தான் சரியா படிக்கறதில்லைனா, மற்றவர்களுமா?
நெல்லை சிரித்துவிட்டேன்....
நீக்கு//நான்தான் சரியா படிக்கறதில்லைனா, மற்றவர்களுமா?//
அந்த வரிய கொஞ்சம் சரியா வாசிச்சுப் பாருங்க!!!!! வயதுன்னு சொல்லவே இல்லையே!!
//எங்களுக்குத் திருமணமாகி ஒரு முப்பத்தாறு வருடம்தான் ஆகிறது. இளமையின் வாயிற்படியில் பேத்தி பேரன்களுடன் நிற்கிறோம்.//
இதுதானே அவர் சொல்லியிருக்காங்க!!!
கீதா
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குவணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஇன்றைய திங்களில், தங்கள் செய்முறையான உ. கி ரோஸ்ட், உ கி கட்லெட் படங்களுடனும், அருமையான செய்முறைகளுடனும் அழகாக, பார்க்கும் போதே சாப்பிடத் தோன்றும் சுவையுடனும் வந்துள்ளது. சாதத்திற்கு அதுவும் மோர்/ தயிர் சாதத்திற்கு வெகு பொருத்தம். தனியாகவும் மாலை சிற்றுண்டிக்கென இதை சாப்பிடலாம். நினைக்கும் போதே மனதிற்குள் சாப்பிட்ட உணர்வு ரம்மியமாக உள்ளது.
பிரெட் பொடிக்கு நம் வீட்டிலேயே மிக்ஸியில் பொடி செய்து கொள்ளலாமா? இல்லை கடைகளில் இது விற்பனைக்குள்ளதா? முதலில் உ. கி பற்றிய விமர்சனமும் படிக்க நன்றாக இருந்தது. மிக நன்றாகவும் பக்குவமாகவும் செய்துள்ளீர்கள் பாராட்டுக்கள்.
எங்கள் வீட்டிலும் உ. கி அனைவருக்கும் பிடிக்கும். இது கொஞ்சம் வாய்வு பதார்த்தம். ஆனாலும் அது நம்மை ஆசையுடன் பிடிக்கிற மாதிரி நமக்கும் ஆர்வத்துடன் அதை ஒருகைப்பிடிக்கும் ஆசை நிச்சயம் வரும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கமலாக்கா தயிர் சாதத்துக்குனல்ல கோம்போ....கூடவே குட்டீஸுக்கு ரொம்பப் பிடிக்கும் அப்படியே சாப்பிட்டுடுவாங்க
நீக்குநன்றி கமலாக்கா.
அப்பால வாரேன்
கீதா
கமலாக்கா, வாய்வு என்பதால்தான் அதுக்குதான் கொஞ்சம் பூண்டு சேர்ப்பது.
நீக்குநன்றி கமலாக்கா
கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஇறுதி படம் உ. கி பஜ்ஜியை நினைவூட்டுகிறது. ஆனால், இந்த உ. கி வில்லைகள் பத்திரமாக, குளிருக்கு அடக்கமாக பிரெட்டெனும் போர்வையை போர்த்தியபடி, எண்ணெய் குளத்தில் / கிணற்றில் நன்றாக முங்கி குளிக்காமல், குளித்தோமென ஒரு பாவ்லா செய்தபடி வந்திருக்கிறது. "எல்லாம் உங்கள் நன்மைக்கே" என்ற ஒரு பெருமித பார்வை வேறு பார்க்கிறது. சூப்பர் செய்முறை. உங்கள் பொறுமைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். இது போல கத்திரிக்காய், வாழைக்காய் அனைத்தையும் செய்யலாம். நானும் செய்துக் பார்க்கிறேன். நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கத்தரி ரொம்பவே குழைந்துவிடுமே. நல்லா வேகலைனா அரிக்கும். பஜ்ஜி நினைவில் எழுதியிருப்பாரோ?
நீக்குஇல்லை சகோதரரே. கத்திரி பஜ்ஜி நன்றாக சுவையுடன் இருக்கும். உப்புக்கார மாவுகளுடன் (ருசிக்கு கடலைமாவு கண்டிப்பாக அவசியம்.) சேர்ந்து விடும் போது அரிக்காது . இரண்டாவது அன்றைய தினத்தில் நமக்கென அமையும் கத்திரியின் (யோகம் நமக்கா , கத்திரிக்கா என்பது வேறு விஷயம்) யோகத்தையும் குறிப்பிட வேண்டும். மேலும், இதை எண்ணெயில் முங்கி குளிக்கச் சொல்லி விட்டால், அதன் ருசியே அலாதி. ஆனால் சகோதரி கீதாரெங்கன் போல நானும் கத்திரியை வைத்து தோசைக்கல்லில் இவ்வாறு செய்து (பிரெட் பொடி இல்லாமல்) ஒரு பதிவு போட்டிருக்கிறேன் என நினைக்கிறேன். அந்த நினைவில் சொன்னேன். நன்றி.
நீக்குசில நாட்களாகவே எனக்கு கத்தரி பஜ்ஜி சாப்பிடும் ஆசை இருக்கிறது. வீட்டிலும் செய்வதில்லை. கடைகளிலும் கிடைப்பதில்லை. இப்ப நீங்க வேற நினைவு படுத்திட்டீங்க.. என்னவோ போங்க..
நீக்குகத்திரி பஜ்ஜி போல் பீர்க்கங்காய் வைத்து பஜ்ஜி செய்தால் அது இன்னமும் சுவையாக இருக்கும். எண்ணெய் என்ற எண்ணம்தான் இந்த பஜ்ஜி வகைகளை சாப்பிட செய்யாமல் தடுத்து வருகிறது. இருப்பினும் நேற்று குழந்தைகளுக்காக வீட்டில் பூரி செய்தோம் . எனக்கு நாலு பூரி (சிறியதாகத்தான்) தொண்டையை கொஞ்சம் பதம் பார்த்தது.
நீக்குஎனக்கு எங்கம்மா பண்ணிப்போடாத எதுவும் பிடிக்காது, பண்ணச் சொல்ல மாட்டேன், பண்ணினால் சாப்பிட மாட்டேன். யாத்திரையில் ஒரு தடவை கத்தரி பஜ்ஜி சாப்பிட்டு ரொம்பவே பிடித்துப்கோக, மனைவியைப் பண்ணச் சொல்லுவேன். அதுக்காக நல்ல பெரிய கத்தரி வாங்கிவருவேன்.
நீக்குஅதுவும் கெச்சப்பும் யம்மி யம்மி.
எனக்கு புடலை வட்டமாகத் திருத்திய பஜ்ஜி பிடிக்கும். வாழைக்காய் பஜ்ஜினா வெளீல கிடைக்கும் நீள பஜ்ஜிதான் ரொம்பப் பிடிக்கும். முன்பு எனக்கு வெங் பஜ்ஜியும் தயிர் சாதமும் ரொம்பப் பிடிக்கும். பஜ்ஜி மிளகாய் மனைவி பல தடவைகள் செய்வாள், என் வாய் சும்மா இருக்காமல் உள்ளே ஸ்டஃப் செய்திருப்பதை ஒவ்வொரு முறையும் ஏதோ சொல்ல, அந்த பஜ்ஜி பண்ணுவதையே நிறுத்திவிட்டாள். பஜ்ஜி மிளகாய் வாங்கிவந்தாலும் கிடையாது.
நெல்லை இப்படி எல்லாம்னா எதுவுமே சுவைத்துப் பார்க்க முடியாது பாருங்க, இப்ப கத்தரி பிடிச்சிப் போய் சாப்பிடறீங்க.
நீக்குகமலாக்கா அதேதான். கத்தரி, சேம்பு, வெங்காயம், ச வ, எல்லாத்துலயும் செய்யலாம் மேலே சொல்லிருக்காப்ப்ல..
//பஜ்ஜி மிளகாய் மனைவி பல தடவைகள் செய்வாள், என் வாய் சும்மா இருக்காமல் உள்ளே ஸ்டஃப் செய்திருப்பதை ஒவ்வொரு முறையும் ஏதோ சொல்ல, அந்த பஜ்ஜி பண்ணுவதையே நிறுத்திவிட்டாள்.//
ஹாஹாஹா பாவம் அவங்க.
//பஜ்ஜி மிளகாய் வாங்கிவந்தாலும் கிடையாது.//
ஹாஹாஹா பின்ன அவங்க தன் சுயமரியாதையை விட்டுக் கொடுப்பாங்களா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கீதா
தயிருக்கே இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறாரே... அப்படியானால் குளிர் காலத்தில் இட்லி, தோசை எல்லாம் கனவில்தான் சாப்பிட்டிருப்பாரா?
பதிலளிநீக்குமாவுப் பாத்திரத்தைச் சுத்தி கம்பளியால் மூட வேண்டும் அல்லது அவனில் வைக்கணும் எனப் படித்திருக்கிறேன்.
தில்லி வெங்கட் வந்து சொன்னால்தான் உண்டு.
இந்த ராஜலக்ஷ்மி பரமசிவம் மேடம் பதிவுகளுக்கு நான் சென்றிருக்கிறேன். அவரும் இங்கு வந்து பின்னூட்டங்கள் இட்டிருக்கிறார். பரமசிவம் ஸாரும் அப்படியே.. முகநூலில் இன்னமும் அவர் எனது நண்பர்.
நீக்குஸ்ரீராம் எனக்கும் பெயரைப் பார்த்ததும் எங்கேயோ பார்த்த நினைவு இருக்கே என்று தோன்றியது. எபிலதான் பழைய பதிவுகள்னு லைட்டா நினைவுக்கு வந்தது. அவங்க தளம் போனதில்லை.
நீக்குகம்பளி இல்லைனா ஓவனில் சூடு செய்துவிட்டு ஆஃப் செய்து வைத்தால். உறைந்துவிடும். என் தங்கை எல்லாம் திருமணம் ஆனதிலுரிந்து பல வருடங்கள் தில்லி வாசம்தானே. அதுவும் அவங்க மாமனார் மாமியார் வடக்கேதான் வாசம் எங்கள் உறவாக இருந்தாலும்.....அவங்க வீட்டில்தான் தயிர் உறையவைப்பாங்க.
சரியான சூடு பதம் வேண்டும் குளிரில் உறைய வைக்க. மகனும் வீட்டில்தானே உறைய வைக்கிறான். அங்கு மைனஸ்ல 13, 18, 21 கூட போயிருக்கு...அவன் ப்ரெட் மெஷினில் தயிர் உறைய வைத்துவிடுகிறான்.
கீதா
கஹ மேடமே வந்தாச்சு. இந்த ஶ்ரீராமுக்கு என்ன ஆச்சு?
பதிலளிநீக்குஹா ஹா ஹா.க. ஹ வுக்கு "திங்க" ஆர்வம் என்கிறீர்களா? ஆனாலும், இப்போது ருசிக்காக எதையும் சாப்பிட மனமும், நாவும் ஒத்துழைக்கவில்லை. பசிக்காக மட்டுமே..! சகோதரர் ஸ்ரீராம் க. வே யில் பிஸியாக இருப்பார். நன்றி.
நீக்குகமலா அக்கா சொல்வது ஓரளவு உண்மை நெல்லை.. மேலும் கீதா வந்து பதில் கொடுப்பார் என்று காத்திருந்தேன். அவர் இன்னமும் காணோம்!
நீக்குஆமாம்..! அவரையும்( சகோதரி கீதாரெங்கன்) இதுவரை காணவில்லையே..! நானே அதிசயமாக வந்து விட்டேன். அவர் பதிவுக்கு முதலில் வருபவராயிற்றே.. பஜ்ஜி மாவு இன்னமும் தீராமல் வேறு ஏதாவது திப்பிச வேலைகளில் ஈடுபட்டுள்ளாரோ. ?
நீக்குகஹ மேடம்... இப்போதும் ருசிக்காகவே நான் சாப்பிடுவேன். தினமும் என் எடை பார்த்து எழுதும் வழக்கம் உள்ளதால், எண்ணெய் மிக்க் குறைவாகவே உபயோகிப்பாள் எனக்காகச் செய்யும் எல்லாவற்றிலும். அதுபோல எனக்கு கண்ணாடி ஜவ்வரிசி பெரிய சைஸ், சேமியா போட்டு பாயசம் மாதிரி ஆனால் ஜீனி மிக்க் குறைவாகச் செய்து தரச் சொல்லுவேன் (நல்லா இரண்டு பெரிய கப்). அதற்கும் என் பையன் வேட்டு வைத்துவிட்டான். நல்லா எப்போதும் பண்ணற மாதிரி பாயசம் ஒரு கரண்டி சாப்பிடுவது, ஜீனி குறைவாக இரண்டு பெரிய கப் சாப்பிடுவதைவிட பெட்டர்னு சொல்லிட்டான்.
நீக்குஸ்ரீராம், இன்று திங்கக்கிழமை வீட்டில் திங்க செய்யணுமே அதுவும் கம்பு இடியாப்பம், மோர்க்குழம்பு, வாழைக்காய் வதக்கல், மதியத்திற்கு வரகரிசி இட்லி!!
நீக்குகீதா
நெல்லை, சூப்பர் உங்க பையன். நல்ல பாயின்ட்!!!!
நீக்குகீதா
அது சரி, யாரோ இங்க கேட்டாப்ல நினைவு...."என்னாது ஜவ்வரிசி பாயஸ்மா?" கஞ்சின்னு சொல்லுங்கன்னு!!!!ஹாஹாஹாஹாஅ.....
நீக்குகீதா
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. வணக்கம்,.
நீக்குவாங்க கோமதிக்கா
நீக்குகீதா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குசகோதரி ராஜலட்சுமி பரமசிவம் அவர்கள் தயிருடன் பட்ட பாட்டை நல்ல நகைச்சுவையுடன் கூறியுள்ளார்.படித்து ரசித்தேன். இங்கு பெங்களூர் குளிருக்கே சென்ற தடவை நான் தயிரை காணாது கொஞ்சம் அவஸ்த்தைப்பட்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஒருவேளை ஒரு வாரத்துக்கு முன்னரே உரை குத்தியிருக்க வேண்டுமோ என்னவோ.. இந்தப் பதிவுக்கு நான் சென்ற நினைவு. அப்புறம் இந்த தயிர் உறைதல் பற்றி நிறைய பேர் பதிவிட்டார்கள்.
நீக்குபெங்களூர்ல குளிரா? ஓ பல மாதங்களுக்கு முன் உள்ள நிலையா? இப்கோ வெயில் அதிகம். மாவு ரொம்ப பொங்குது. இரண்டு நாளில் கெட்டுப்போகுது கடையில் வாங்கும் மாவு.
நீக்குஉருளைக்கிழங்கு விலை குறைவு. கிலோ 25 ரூ தான். காஸ் கிடைக்க கஷ்டப்படும் இந்நாட்களில் நிறைய சாப்பிட்டு நிறைய காஸ் உற்பத்தி செய்யலாம்.
பதிலளிநீக்குகட்லெட்டும் இல்லாமல் பஜ்ஜியும் அல்லாமல் இரண்டும் சேர்ந்த ஒன்றான இன்றைய கட்லெட் பஜ்ஜி பார்க்க நன்றாக உள்ளது.
Jayakumar
உருளை கட்லட் செய்முறையும் படங்களும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது போல் செய்ய உருலையை பக்குவமாக வேக வைக்க வேண்டும். பதமாக இருந்தால் தான் கட் செய்ய முடியும் அழகாய் இல்லையென்றால் உடைந்து விடும். பஜ்ஜிமாவு போல தோய்த்து கொண்டு பிரட் தூளை தூவி ரோஸ்ட் செய்து இருக்கிறீர்கள். இந்த முறையில் பிள்ளைகள் வரும் போது செய்து பார்க்கிறேன்.
நீங்கள் சொல்வது போல வெட்டி மிளக்கு தூள் உப்புத்தூள் போட்டும் தோசை கல்லில் ரோஸ்ட் செய்யலாம். எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் இவற்றுக்கு நன்றாக இருக்கும்.
நான் ரஸ்க் தூலில் புரட்டிக் கொண்டு ரோஸ்ட் செய்து இருக்கிறேன்.
வீட்டில் உருளை கறி மிச்சம் இருந்தால், பிரட் சாண்ட்விஜ்க்கு செய்த உருளை மசாலா மீதி இருந்தால் இப்படி கட்லட் செய்து விடுவேன் முன்பு குழந்தைகள் இருந்த போது . மகன் தனியாக உருளை நிறைய செய்து கட்லட் செய்து தர வேண்டியது தானே என்று கேட்பான்.
பூரிக்கு செய்யும் உருளைகிழங்கு மீதியானால் கூட அதில் கோதுமை மாவை கலந்து வட்டமாக தட்டி ரஸ்க் தூளை தூவி மாலை நேரம் தோசை கல்லில் போட்டு செய்து கொடுத்து விடுவேன்.
கீதா உருளை ரோஸ்ட் என்று போட்டு, சாதத்திற்கு தொட்டுக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டிருந்தாலும், எல்லோருக்கும் கட்லெட் என்றுதான் பதிவாகியிருக்கிறது.
பதிலளிநீக்குசெய்முறை படங்களோடு சிறப்பு. உடனே செய்து பார்த்துவிட தோன்றுகிறது.
ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் என் பதிவுகளுக்கு தொடர்ந்து வருவார், என் பதிவுகளை வலைச்சரத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
பதிலளிநீக்கு'புத்தகத்தின் பெயர் சிரிக்க வைக்கும் சொதப்பல்கள்.'
அவர் பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி.
அவர் பதிவில் இப்படி இடை இடையே நிறைய எழுதுவார்
இப்போது ஸ்ரீராம் மூலம் முகநூலில் இருக்கிறார் என்று அறிந்து கொண்டேன்.
நல்ல நகைச்சுவையாக தயிர் உறை ஊற்றிய அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார். வலைதளத்திலும் பகிர்ந்து இருக்கிறார் என நினைக்கிறேன்.
படித்த நினைவு .
முன்பு மகள் வீட்டுக்கு டெல்லி போய் இருந்த போது தயிரை ஹாட்பேக்கில் தான் உறை ஊற்றி வைப்பேன். அதன் மேலும் கம்பிளியை சுற்றி வைப்பேன். அவள் தயிர் உறை ஊற்ற மெஷின் வாங்கி இருந்தாள் அதில் உறை ஊற்றி வைப்பதை விட ஹாட்பேக்கில் வைப்பது நன்றாக விரைவில் உறைந்து விடும்.
ராஜலக்ஷ்மி பரமசிவம் வலைத்தள சுட்டி மூலம்
பதிலளிநீக்குகம்பனும் Passport
அவர் பாஸ்போர்ட் தேடலையும், கம்பனின் பாடல் வரிகள் விளகத்தையும் ரசித்தேன்.
ராஜலெக்ஷ்மி பரமசிவம் அவர்களைப் போலவே நானும் கூட பெங்களூர் வந்த புதிதில் தயிர் சரியாகத் தோயாமல் கஷ்டப்பட்டேன். மைக்ரோ வேவ் அவனை ப்ரீ ஹீட் பண்ணி அதற்குள் வைத்தால் தயிர் புளித்துப் போய் விடும். டில்லியிலிருந்து வந்த என் மருமகள் தயிர் தோய்த்த பாத்திரத்தை கம்பளியில் சுற்றி வைத்தால் தயிர் நன்றாகத் தோயும் என்றாள். அதன்படி செய்தோம், நல்ல தயிர் கிடைத்தது. எங்கள் வீட்டில் தயிர் பாத்திரத்தை சுற்றி வைக்க தனியாக கம்பளி வைத்திருக்கிறோம்.
பதிலளிநீக்குஇங்கே கனடாவில் என் மகள் தயிர் தோய்த்து, அதை ஓவனில் வைத்து, ஓவன் லைட்டை ஆன் செய்து வைத்து விடுவாள். தயிர் தோயும் ஆனால் கட்டியாக இல்லாமல், தோசை மாவு போல கொழ கொழவென்று இருந்தது. நான் ஓவனில் கீப் வார்ம் என்னும் ஆப்ஷனை தேர்ந்தெடுத்து ஓவனை சூடாக்கி விட்டு, அதில் தோய்த்த பாத்திரத்தை வைத்தேன். பிறகு ஓவன் லைட்டை ஆன் செய்வேன். பாத்திரத்தை ஓவனுக்குள் வைத்ததும் , கீப் வார்ம் என்பதை ஆஃப் பண்ணிவிட வேண்டும். சூப்பர் தயிர் கிடைக்கும்.
இட்லிக்கு அரைக்கும் பொழுதும் இதே முறையை கடைபிடித்தால் மாவு நன்றாக பொங்கும்.
முருகா சரணம்
பதிலளிநீக்குஇன்று தஞ்சையில் தேரோட்டம்
பதிலளிநீக்குகீழராஜவீதியில் இருக்கின்றேன்...
இன்றைய குறிப்பு
பதிலளிநீக்குஆகா....
ஆனால் உ.கி.சாப்பிடுவது இல்லை
உ.கி. சாப்பிடுவது குறைவிலும்
பதிலளிநீக்குகுறைவு..
பிரெட் க்ரம்ப்ஸ் எனப்படும் ரொட்டித் தூள் கடைகளில் உண்டு, கிடைக்கவில்லை என்றால் அவல் பொடித்து, பொரி பொடித்தது, ஓமப்பொடி/காராப்பூந்தி பொடித்து, உப்புமா ரவை, ரஸ்க் பொடி, என்பவற்றை உபயோகிக்கலாம். இவை கட்லட் உடையாமல் சேர்ந்து ஷாப்பில் நிற்க தண்ணீரை உறிஞ்சும் பொருட்கள் ஆகும்.
பதிலளிநீக்குஅசைவர்கள் முட்டை வெள்ளை கரு உபயோகிப்பது உண்டு.
Jayakumar