29.6.26

"திங்க"க்கிழமை : உருளைக்கிழங்கு சாதம் - ஸ்ரீராம் ரெஸிப்பி

உருளைக்கிழங்கு சாதம் 

ஸ்ரீராம் 

யாரும் வராத நாட்கள்தான் நான் உள்ளே வருகிறேன்!  இன்று வந்து பார்த்தபோது கிச்சன் காலியாக இருந்தது.  சட்டென ஓரமாக வைத்திருந்த உருளைக்கிழங்கு வெங்காயத்தை எடுத்துக் கொண்டு உள்ளே வந்து விட்டேன்!

அன்றொருநாள் இதே வெயிலில் பாஸிருந்தார் என்னருகே...  புதிய முயற்சிகளுக்கு அவ்வளவாக ஆதரவளிக்காத அவர், வழக்கமில்லாத வழக்கமாக "இன்று பொட்டேட்டோ ரைஸ்" என்று அறிவித்து இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கினார்.

அன்று அவர் செய்து நாங்கள் சுவைத்ததை இன்று உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

எங்கள் வீட்டில் ஆறுபேர்.  மாமியார் அசைவம் சாப்பிட மாட்டார் என்பதால் ஐந்து பேருக்கான அளவாக சொல்கிறேன்.

ரொம்ப எளிமையானது. 

நான்கு உருளைக்கிழங்கு, அதற்குத் தக்கவாறு நான்கு பெரிய வெங்காயம் எடுத்துக் கொள்ளவேண்டும்.  உருளைக்கிழங்கை தோல்சீவி அழகாக டைமண்ட் டைமண்டாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.  வாணலியில் சிறிது எண்ணெய் இட்டு மஞ்சள்பொடி, காரப்பொடி, உப்பு போட்டு வதக்கி ரோஸ்ட்டாக்கி ஓரம் ஆகா வைக்கவும்.

வெங்காயத்தை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.  நான்கு அல்லது ஐந்து போன்று பற்கள் எடுத்துத் தோலெடுத்து இரண்டாக நறுக்கி எடுத்துக் கொள்ளலாம்.  சிலர் நசுக்கிப் போடுவார்கள்.  இப்படி துண்டாக நறுக்கிப் போட்டால் இளையவன் ரசிப்பான்.  எனவே முந்திரி பருப்பு போல நறுக்கி வைத்துக் கொள்ளவும்.  வாணலியில் பட்டை சோம்பு கசகசா போட்டு தாளிக்கவும்.  பொரிந்ததும் பூண்டு வெங்காயம் போட்டு வதக்கிக் கொள்ளவும்.  தேவையான அளவு வதங்கியதும் ஓரமாக வைத்திருக்கும் உருளைக் கிழங்கை இதில் சேர்த்துப் போட்டு கலக்கவும்.  இரண்டு பாராட்டு புரட்டியதும் அதில் அது தாங்கும் அளவு சாதம் போட்டு புரட்டவும்.  தேவையான உப்பு சேர்க்கலாம்.  கொத்துமல்லி தூவி இறக்கி விடலாம்.

தொட்டுக்கொள்ள வெங்காய ரைத்தா செய்து கொண்டோம்.













===============================================================================

பாரதியாரும் நாமக்கல்லாரும் 


அந்த மகாகவிஞர் பெயருடன். இவர் பெயரையும் சேர்த்துப் பேசியது இந்த இளம் கவிஞருக்கு இன்பம் ஊட்டியது. இந்தப் பாட்டு இலட்சக்கணக்கில் அச்சிடப் பட்டு தமிழ்நாடு எங்கும் வழங்கப்பட்டது.

மகா கவிஞர் பாரதியாரும் நாமக்கல்லாரின் பாட்டை ஒரு முறை புகழ்ந்து, போற்றி, பாராட்டி இருக்கிறார்.

பாரதியார் காரைக்குடியில் கானாடுகாத்தானில் தங்கி இருந்தபோது, அவரைத் தரிசிக்க இந்தக் கவிஞர் சென்றார். சென்ற இடத்தில் 'ஓவியக் கலைஞர்' என்று பாரதியாருக்கு இவரை அறிமுகப்படுத்தினார்கள்.

'ஓ! ஓவியக் கலைஞரா! வருக கலைஞரே! தமிழ்நாட் டின் அழகே கலையழகுதான்!'' என்று பாரதியார் சொன்ன போது, கவிஞர் அவருக்கு முன்னால் வந்து வணங்கினார். அவரது கால்களைத் தொடப் போன நாமக்கல்லாரின் கையைப் பிடித்துக் கொண்டு, அருகில் அமர்த்தி,''பிள்ளை வாள், நீர் நம்மை ஓவியத்தில் தீட்டும்; நாம் உம்மைக் காவியத்தில் தீட்டுவோம் " என்று பாரதியார் சொல்லி விட்டுக் கலகலவென்று சிரித்தார்.

அப்பொழுது, "ராமலிங்கம் பிள்ளை கூடப் பாட்டுக்கள் செய்வார்" என்றாராம், அவரை அழைத்துப் போனவர்.

உடனே பாரதி "அப்படியா ? ஓவியக் கலைஞர், காவியக் கலைஞருமா? எதைப் பற்றிப் பாடி இருக்கிறீர்?... எங்கே, ஒன்று பாடும், கேட்போம்" என்றார்.

கூசிக் குன்றிக் குலைந்து, வெட்கித்தவராய். நாணத்துடன், "தம்மரசைப் பிறர் ஆள விட்டுவிட்டுத் தாம் வணங்கிக் கை கட்டி நின்ற பேரும்' என்ற முதலடியைக் கூறி முடிப்பதற்குள், பாரதியார் துள்ளிக் துள்ளிக் குதிக்க ஆரம்பித்துவிட்டார்!

பாட்டை முடித்தபோது, "பலே, பாண்டியா! பிள்ளை நீர் ஒரு புலவன்! ஐயமில்லை! தம்மரசைப் பிறர் ஆள - விட்டுவிட்டு - தாம் வணங்கி- கைகட்டி -நின்ற பேர்கள் - பலே! பலே! இந்த ஒரு அடியே போதும்' என்று கூறிப் பாராட்டினார்:

இவரைக் காந்திஜியின் பக்கம் இழுத்ததாகக் கூறப்படும் நிகழ்ச்சியானது:

காந்திஜி காசியில் இந்து சர்வ கலாசாலையின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசியபோது, அங்கே குழுமி இருந்த, அந்தக் கலாசாலைக்குப் பேரளவுக்கு நன்கொடைகள் வழங்கியிருந்த மகாராஜாக்களைப் பாராட்டாமல் "கோடானு கோடி மக்கள் உண்ணக் கஞ்சியும் உடுக்கக்  கந்தையும் இல்லாமல் தவிக்கும் இந்த நாட்டில் இன்னும் உங்களில் பலர், கோடிக்கணக்கான ஆபரணங்களை அணிந்து கொள்ளும் ஆடம்பரத்தில் வாழ்வது பாபமல்லவா?"  என்று பேசியதேயாகும்.

-இதுவே காந்திஜி ஒரு 'மகா புருஷர்' என்ற எண் ணத்தைக் கவிஞருக்கு உண்டாக்கியது.'

கரூரின் அமராவதி ஆற்றங்கரையில் அவர் நடத்திய பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ளாத தலைவர்களே அந்த நாளில் கிடையாதாம்.

- எங்கே படித்தேன், எதிலிருந்து எடுத்து வைத்தேன் என்று நினைவில்லை! -

23 கருத்துகள்:

  1. உருளைக் கிழங்கு ரைஸ்... இதுவரை சாப்பிட்டதில்லை.

    பூண்டு இல்லாமல், அவல் உப்புமா இந்தச் செய்முறையில் செய்து சாப்பிட்டிருக்கிறேன், குறைந்த அளவு வெங்காயம் அல்லது அது இல்லாமல். ரொம்பப் பிடிக்கும். (ஆனால் வருடத்துக்கு இரு முறை போல அதிசயமா)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..    அவல் உப்புமாவில் வெங்காயம் சேர்த்ததில்லை.  மோர் அவல், புளி அவல் சாப்பிட்டதுண்டு.  அதைத்தவிர அவலை பாலில் ஊற வைத்து சர்க்கரை சேர்த்து சாப்பிட்டிருக்கிறேன்!

      நீக்கு
    2. எனக்கு ஆல் டைம் ஃபேவரைட் பேப்பர் அவல்னு சொல்ற மெல்லிய அவலை பாலில் ஜீனியோட போட்டு உடனே சாப்பிடுவது ரொம்பப் பிடிக்கும். பெரும்பாலும் வீட்ல ஸ்டாக் வைத்திருப்பேன். இன்னொன்று நைலான் ஜவ்வரிசி பெரியது. இது சேமியா பாயசத்துக்கு

      நீக்கு
    3. அவல் உப்புமா பல விதத்தில் செய்வேன். (இனிப்பு அவல், எலுமி அவல், புளி அவல், தயிர் அவல் என) அதிலும் வெங்காயம் வதக்கிப் போட்டு , வேர்க்கடலை முழுதாக வறுத்துப்போட்டு செய்யலாம். இதற்கு தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.( கூடவே மெதுவடையும்.) வீட்டில் அவ்வப்போது செய்வதுதான்.

      நீக்கு
    4. இந்த பேப்பர் அவல் பற்களுக்கு இதமானது. வாயில் பட்டவுடன் கரைந்து விடும். ஆனால், எந்த அவலையும் ஒருமுறை நல்ல நீரில் களைந்து விட்டு வடிகட்டிய பின், பிறகு சிறிது நீரில் ஊற வைத்து உபயோகிப்பேன். இந்த பேப்பர் அவல் அவ்வாறு நீரில் களைய இயலாது. அதனால், அதை சுத்தப்படுத்திய பின் வெறும் வாணலியில் கொஞ்சம் லேசாக வறுத்துக் கொண்டு,, மிக்ஸியில் பொடி செய்து, கொஞ்சம் ஜீனியோ, வெல்லம் அதையும் பொடி செய்து கொண்டு, சிறிதளவு உருக்கிய நெய்யை விட்டு அவல் மாலாடு செய்து சாப்பிடுவோம். என் பேத்திக்கும் மிகவும் பிடிக்கும். வாசனைக்கு சிறிது ஏலக்காய் சேர்த்துக் கொள்ளலாம். முந்திரியும் கூடவே வறுத்து சேர்ப்பது அவரவர் சௌகரியம்.

      அட....!இதுவே ஒரு "திங்க" பதிவாகி விட்டதே..! நான் பேசாமல் நிறைய என் வழக்கப்படி தட்டச்சி விட்டேன் போலிருக்கிறது.

      நீக்கு
    5. பேப்பர் அவல்?  கேள்விப்பட்டதில்லை.  அதென்னவோ எங்கள் வீட்டில் எப்போதும் கெட்டி அவல் என்று சொல்லி கேட்டுதான் வாங்குவார்கள்.

      நீக்கு
    6. அவல்மா லாடு!  அவல் மாலாடு..  நன்றாகத்தான் இருக்கும் போல.

      நீக்கு
    7. நெல்லை சொல்லியிருப்பது 'போகா' எனப்படும் புளி அவலின் வட இந்திய வடிவம். அதில் நிலக்கடலையையும் சேர்த்து தாளிப்பார்கள். புளி சுவைக்கு எலுமிச்சம்பழம் பிழிவார்கள். நன்றாக இருக்கும்.

      நீக்கு
    8. //பேப்பர் அவல்? கேள்விப்பட்டதில்லை.// பார்த்திருப்பீர்கள் ஸ்ரீராம். கெட்டி அவல் என்பது கனமாக இருக்கும், அதை ஊற வைத்து சமைக்க வேண்டும். கெட்டியாக இல்லாமல், சன்னமாக இருப்பதைத்தான் பேப்பர் அவல் என்று சரியாக குறிப்பிட்டிருக்கிறார் கமலா. அதை ஊற வைக்க முடியாது. வடி கூடையில் அலம்பி உடனே வாணலியில் சேர்த்து விட வேண்டும்.

      நீக்கு
  2. உருளை, சாதம் இரண்டும் கார்போ. ருசியா இருக்கும்தான்.

    ஒரு நாள் முயற்சித்துப் பார்த்துவிடுவோம்.

    பதிலளிநீக்கு
  3. பூண்டு பற்களை உரிக்கணும்னு செய்முறைல சரியா குறிப்பிடலை.

    ஆடையுடன் கூடிய உருளையை விட ஆடையில்லாத்து படத்தில் அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது சரி...!  பூண்டை உரிக்காமல் போடமுடியுமா என்ன!  இரண்டு துண்டாக நறுக்கிக் கொள்வேன் என்று சொல்லி இருக்கிறேனே...

      நீக்கு
  4. நாமக்கல் கவிஞர் தன் வரலாற்றில் மிகச் சுவையாக அவர் எழுதியிருப்பார். அதைப் படிக்கும்போது பாரதி ஒரு அதீத மனிதர் என்று நம்மால் உணரமுடியும்.

    காந்தி உதாரண புருஷர்தான்...... இருந்தாலும் ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு என பல தருணங்களில் நடந்துகொண்டு அநீதி செய்தவர்.

    நல்ல குடும்பத் தலைவராக இல்லை, ஆனால் அது பெரிய விஷயம் அல்ல. பிச்சைக்காரனாய் வந்து கோடிக்கணக்காக ஊழல் செய்து எங்கெங்கோ பெத்ததுகளை பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபர் ஆக்கியிருந்தால் நல்ல குடும்பத் தலைவர் என நினைக்கும் மக்கள் கூட்டம் உள்ளது தமிழகம்.

    பதிலளிநீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    இன்றைய திங்கள் பதிவில் தங்களது செய்முறையான உ. கி சாதம் நன்றாக வைத்துள்ளது. அடுக்கடுக்கான படங்கள் அனைத்தும் பார்க்கவே நன்றாக உள்ளது. இங்கு குழந்தைகளுக்காக பள்ளிக்கு (மதிய உணவாக) வாரம் ஒருமுறை இப்படி செய்வதுதான். ஆனால், பட்டை சோம்பு வறுத்து சேர்ப்பதில்லை. (அதற்குப் பதிலாக சிறிது கரம் மசாலா பொடி) மற்றபடி இதை பிரகாரந்தான். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.நேற்று கூட உ. கி வெங்காயம் சேர்த்து வதக்கி மதிய உணவுக்கு தொட்டுக் கொண்டோம்.

    உங்கள் செய்முறைபடியும் ஒருநாள் செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா... செய்து பார்த்துட்டு சொல்லுங்க...

      நீக்கு
  7. இந்த வாட்டி, செய்முறை படங்கள் படிப்படியாக அடி பொ ளி, ஸ்ரீராம். சூப்பர் செய்முறை எளிதாகவும் இருக்குல்ல....நம்ம வீட்டில் எனக்கு மட்டும் கொஞ்சமா ஒரே ஒரு உகி (அவ்வளவுதான் இருக்கு) செஞ்சு சாப்பிட ஆயத்தம். இதே முறைல....ஆனா அதுக்குள்ள வழக்கமான நடை இப்ப...போகணும்..

    பின்னர் வருகிறேன். நான் மகனுக்கு டக் புக்குனு செஞ்சு கொடுத்ததையும் சொல்றேன்...கிட்டத்தட்ட இதே போல...முன்ன long long ago....my son demanded....there were just two potatoes அப்படின்னு தொடங்கி கதை சொல்றேன்!!!! ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  8. உ.கி. கறி செய்து அதில் சாதத்தைப் போட்டு பிரட்டி பொடேடோ ரைஸ் என்று பெயர் கொடுத்து விட்டீர்கள், கெட்டிக்காரர்தான்.

    பதிலளிநீக்கு
  9. ​அருமையான கண்டுபிடிப்பு உருளை சாதம். இது ஒரு மெகா சீரியலையே தொடங்கிவைக்கலாம். கத்தரிக்காய் சாதம், சேனைக்கிழங்கு சாதம், சிறு கிழங்கு சாதம், கோஸ் சாதம் என்று பள்ளி மதிய உணவு போன்று செய்து வெளியிடலாம்.
    நான் முன்பே கூறிய கோயில் பிரசாதம் செய்முறைகளை இணையத்தில் பிடித்து பதிவிடலாம். உதாரணமாக காஞ்சி குடலை இட்லியில் தொடங்கலாம்.
    இன்றைய பதிவில் நிறைய எழுத்துப்பிழைகள்.

    Jaya​kumar

    பதிலளிநீக்கு
  10. நாமக்கல் கவிகஞர்,பாரதி பற்றிய தகவல்கள் சிறப்பு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!