திருமதி தங்கம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முக நூலில் எனது நண்பர். ஒரு அழகிய சிறுகதையை அங்கு அவர் எழுதி இருந்தார். அவர் அனுமதியுடன் அதை இங்கு பிரசுரம் செய்கிறேன். தொடர்ந்து அவ்வப்போது எழுதித்தரவும் கேட்டிருக்கிறேன்,
நன்றி மேடம்.
மன்னிப்பு
தங்கம் கிருஷ்ணமூர்த்தி
( சிறுகதை )
'' அடடா ....மணி ஏழாக போறது ...லைட் கூட போடாம இருட்டுல உக்காந்துக்கிட்டு அப்டி என்ன தான் யோசனை பண்ணிட்டு இருக்கீங்க ?.....ஸ்வேதா வீட்டுல கொஞ்சம் டைம் ஆயிடுச்சு .. ......அதான் இங்கே வர லேட் ...!.''
பேசியவாறே டியூப் லைட்டின் சுவிட்சை தட்டி விட்டாள் சுலோச்சனா ;
மறுகணம் , ஹால் முழுவதும் வெளிச்சம் பரவியது ;
கடந்த இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக , தன்னை மறந்து சிந்தனையில் ஆழ்ந்திருந்த சதாசிவம் , மனைவி சுலோச்சனாவின் குரல் கேட்டு , திடுக்கிட்டு நிமிர்ந்தவர், பின் கசப்பான புன்னகையுடன் ,
'' ஹூம் ..என் மனசும் இப்போ இருட்டாயிருக்கே ?..இதுக்கு எந்த லைட் கொண்டு வந்து வெளிச்சப்படுத்த முடியும் ? ''
ஈன சுரத்தில் முனகியவாறு , தளர்ந்த நடையுடன் அங்கிருந்து எழுந்து கொண்டார் அவர்; பின் , வாஷ்பேஸினை திறந்து , குளிர்ந்த நீரை பலம் கொண்ட மட்டும் முகத்தில் வாரியடித்து கொண்டு , டவலால் அழுந்த துடைத்து கொண்டவர் , நேராக பூஜையறைக்கு சென்று , விபூதி அணிந்து , மீண்டும் ஹாலுக்கு வந்து சோபாவில் அமர்ந்து கொண்டார் ;
அவர்கள் வசிக்கும் அந்த சக்தி அடுக்கு மாடி குடியிருப்பு , மூன்று தளங்கள் கொண்டது : ஒவ்வொரு தளத்திலும் , தலா மூன்று ஃபிளாட்டுகள் வீதம் மொத்தம் ஒன்பது ஃபிளாட்டுகள்; அங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் , புதிதாய் திருமணமாகி வந்தவர்கள் ...மற்றும் உத்தியாேகம் நிமித்தமாக , .வெவ்வேறு மாநிலத்திலிருந்து வந்து , இங்குள்ள .சாஃப்ட்வேர் கம்பெனியில் பணி புரியும் , மணமாகாத பெண்கள் ...... இப்படி ...!.
அனைவரும் ஒரே குடும்பம் போல ஒருவரோடு ஒருவர் அன்யோன்யமாய் பழகி வந்தார்கள் ; அதிலும் , கீழ் தளத்தில் வசிக்கும் சதாசிவம் -சுலோச்சனா தம்பதியிடம் , வயதில் மூத்தவர்கள் என்கிற காரணத்தால் , அங்குள்ள அனைவருக்கும் ஒரு அன்பு கலந்த மரியாதை உண்டு ! அனைவருமே அவர்களை ' அம்மா , அப்பா ' என்று தான் அழைப்பார்கள் ! அதிலும் , சுலோச்சனா நல்ல பரோபகாரி .!...அனைவருக்கும் ஓடி ஓடிசென்று ஒத்தாசை செய்வாள் ..
இப்பாேது கூட , ஃபர்ஸ்ட் ப்ளோரில் வசிக்கும் .. கர்ப்பிணி பெண் ஸ்வேதாவுக்கு , காய்ச்சல் என்று வேலைக்காரியின் மூலம் கேள்விப்பட்டதிலிருந்து , கடந்த இரண்டு நாட்களாக , கீழ்த்தளத்துக்கும் ,மேல் தளத்துக்குமாய் ..சொடுக்கிவிட்ட பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கிறாள் சுலோச்சனா ;
அன்று மாலை கணவருக்கு , வெங்காய பக்கோடாவோடு , இஞ்சி ஏலக்காய் டீயும் கலந்து கொடுத்து விட்டு , பின் ஸ்வேதாவின் ஃப்ளாட்டுக்கு சென்று , அவளுக்கு கஞ்சி போட்டு கொடுத்து ...பின் ,ஜெட் வேகத்தில் ..இரவு நேரத்துக்கான சமையலையும் செய்து முடித்து ... சற்று முன்பு தான் தனது ஃப்ளாட்டுக்கு திரும்பியிருந்தாள் ;
.வீடு முழுவதும் இருட்டாக இருக்கவே , .முதல் காரியமாய் ஹால் லைட்டை போட்டு விட்டு , சமையலறையை நோக்கி விரைந்தாள் இரவுக்கான உணவு தயாரிக்கும் நோக்குடன் !
பின் , பத்தே நிமிடத்தில் சுடச்சுட சப்பாத்தி , கூட்டு சகிதம் ஹாலுக்கு வந்த போது , சோபாவில் வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்தார் சதாசிவம் ;
'' என்னங்க ..நானும் வந்ததிலேருந்து பார்த்துக்கிட்டேயிருக்கேன் , அப்டி என்ன தீவிர யோசனை ?...என்னன்னு என் கிட்டே சொல்லுங்க ''
குரல் கேட்டு நிமிர்ந்த சதாசிவம் அவளிடமிருந்து தட்டை வாங்கியவாறே ,
'' ..ஹூம் ...உன்கிட்ட சொல்லாம வேற யார் கிட்டே சொல்லப்போறேன் ?..மனசெல்லாம் ஒரே பாரமாயிருக்கு ...! சுலோ ..அடுத்த வாரம் மதுரையிலே நடக்கப்போற , உமா கல்யாணத்துக்கு கட்டாயமா நாம ரெண்டு பேரும் போய் தான் ஆகணுமா ?...''
பலவீனமான குரலில் பேசியவரை வியப்புடன் ஏறிட்டாள் சுலோச்சனா ;
'' என்னங்க இப்டி ஒரு கேள்வி கேட்டுட்டீங்க ?...உமா யாரு ?..உங்க கூட பொறந்த தம்பி மக ... பெரியம்மா , பெரியப்ப்பாங்கற முறையிலே நாம ரெண்டு பெரும் போகாம இருந்தா நல்லாயிருக்குமா சொல்லுங்க ?...''
'' எனக்கு மட்டும் உமா கல்யாணத்துக்கு போகக்கூடாதுன்னு ஆசையா என்ன ?....நா என்ன மனசாரவா அந்த வார்த்தையை சொல்றேன் ?.......நம்ம மக அனு நம்மை விட்டு போன இந்த மூணு வருஷமாய் , எந்த கல்யாண விசேஷங்களிலும் நான் கலந்துக்கறதில்லைனு உனக்கு தெரியாதா ?....உள்ளுக்குள்ளே மலையாய் சோகத்தை வெச்சுக்கிட்டு வெளியே போலியான சந்தோஷமாய் வளைய வரதுல எனக்கு துளி கூட உடன்பாடில்லே சுலோ .. அதோட , அங்கே வந்திருக்கிறவங்களோட பார்வையெல்லாம் நம்ம மேல தான் ....முதுகுக்கு பின்னால் , நம்மை பத்தி ஆயிரம் விமர்சனங்கள் ..கேலிப்பேச்சுகள் !..ஹூம் ......''
முகத்தை மூடியபடி கேவிய அவரை பார்க்க பாவமாயிருந்தது சுலோச்சனாவிற்கு ;
அவரின் கரங்களை வாஞ்சையாய் பற்றிய சுலோச்சனா ஆறுதலாய் பேச ஆரம்பித்தாள் ;
'' ..பேசுறவங்க பேசிட்டு போகட்டும் ..அவங்க வாய்க்கு தான் சேதம் .! அவங்களுக்காக , நம்ம பொண்ணு உமா கல்யாணத்தை விட்டு கொடுக்க முடியுமா ?...அது போகட்டும் ..எனக்கு மட்டும் அனுவை பத்திய அந்த சோகம் இல்லியா என்ன ?....ஒண்ணே ஒண்ணு , கண்ணே கண்ணேன்னு ..ஆசை, ஆசையாய் , அருமை பெருமையாய் வளர்த்த நம்ம பொண்ணு , இந்த வயசான காலத்துல நம்மை தவிக்க விட்டுட்டு போய் சேர்ந்துட்டாங்கற துக்கம் கழுத்து மட்டும் இருக்கு எனக்கும் .! ஆனாலும், நம்ம கஷ்டம் நம்மோட !..அதுக்காக ஒரு பாவமும் அறியாத உமா என்ன பாவம் பண்ணினா ?...அவளும் நம்ம வீட்டு பொண்ணு தானேங்க ? ....மனசை போட்டு குழப்பிக்காம சாப்பிடுங்க ..சப்பாத்தி ஆறிட போகுது ''...!
ஐந்தே நிமிடத்தில் சாப்பிட்டு விட்டு , தன் அறைக்கு சென்று கட்டிலில் படுத்து கொண்ட சதாசிவம் , ஆயாசத்துடன் கண்களை மூடி கொண்டார் :
கடந்த கால சம்பவங்கள் அத்தனை சீக்கிரம் மனதை விட்டு அகலுமா என்ன ?..
.மூன்று வருடங்களை ஒரு பக்கமாய் ஒதுக்கி பார்த்த போது , அவரையுமறியாமல் கண்களில் கண்ணீர் !
அன்று ...
'' டாடி ..இவர் ஜோசப் !...என்னோட காலேஜ்மேட் ..ஆரம்பத்துல நாங்க ரெண்டு பேரும் நண்பர்களாய் தான் பழகினோம் ....போக போக , என்னோட ரசனைகளை புரிஞ்சுகிட்டு இவர் பேசி பழகிய விதம் எனக்கு பிடிச்சு போகவே , ..நாளடைவில் .எங்களுக்குள்ள காதலாய் உருவாயிடுச்சு ..!ஒருத்தரை ஒருத்தர் மனப்பூர்வமாய் விரும்பி ரிஜிஸ்டர் மேரேஜ் செய்துகிட்டோம் ..! ஆனாலும் ,நம்ம மத வழக்கப்படி , சம்பிரதாயத்தை விட்டு கொடுக்காம ,ஜோசப் இன்னிக்கு எனக்கு முருகன் கோயிலில் தாலியும் கட்டினார் ..! ..நேராய் இங்கே தான் வரோம் ..! டாடி ...நீங்களும் , மம்மியும் எங்க ரெண்டு பேரையும் ஆசீர்வாதம் பண்ணணும் ..''
எச்சிலை கூட்டி விழுங்கி , தைரியத்தை வரவழைத்து கொண்டு ...ஏற்கெனவே மனதில் , ஆயிரம் தடவைகள் பேசி ஒத்திகை பார்த்த வசனங்களை , இப்போது அனு அங்கே ஒப்பிக்க ...
அருகே , தீர்ப்பை எதிர்பார்த்து நீதிபதி முகம் பார்க்கும் படபடப்புடன் ஜோசப் !
அனைவரையும் மிரட்சியுடன் பார்த்தவாறு , எதுவும் பேச தோன்றாமல் கற்சிலையாய் சுலோசனா !
அங்கே நில அதிர்வு ஏற்பட்டாற் போன்றதொரு சூழ்நிலை !
நெற்றி வியர்வை கன்னத்தில் கோடிட...சதாசிவம் ,
'' சுலோ ...எனக்கு படபடன்னு வருது ..! குடிக்க ஒரு டம்பளர் தண்ணி கொண்டா ..!''
பீதி நிறைந்த முகத்துடன் , அவரின் முகத்தை புடவை தலைப்பினால் துடைத்த சுலோச்சனா ,
மின்னல் வேகத்தில் அங்கிருந்து விரைந்து தண்ணீர் டம்பளருடன் அங்கே வந்தபோது , அவரின் உடல் மழையில் நனைந்த கோழிக்குஞ்சு போல ஏகத்துக்கு நடுங்கி கொண்டிருந்தது !
'' ஐயோ ...கடவுளே ! நா என்ன பண்ணுவேன் ?.....என்னாச்சுங்க உங்களுக்கு ?..''
அவரின் கதறலுக்கு , பலவீனமான குரலில் பதிலளித்தார் சதாசிவம் ;
'' ஒண்ணும் ஆகலை சுலோ ....ஆமா ....இந்த நிமிஷம் வரை ஒண்ணும் ஆகலை ..! ஆனா , உன் பொண்ணு ..,ஐ ஆம் சாரி ..மிஸஸ் ஜோசப் இன்னும் ஒரு செகண்ட் இந்த வீட்டுல இருந்தா , எனக்கு என்ன ஆகுமோன்னு தெரியாது ...சுலோ ..அவங்க ரெண்டு பெரும் இங்கிருந்து கிளம்பி போனதும் , அந்த இடத்தை டெட்டால் போட்டு நல்லா கழுவிடு ....இனி அவ யாரோ , நாம யாரோ ...ஆமா ....''
மேற்கொண்டு பேச பிடிக்காதவர் போன்று அவர் பார்வையை வேறு புறம் திருப்பி கொள்ள ..
விழிகளால் பரிதாபமாய் கெஞ்சிய தாயை ஏறிட்ட அனு , விருட்டென்று அங்கிருந்து வெளியேறினாள் கணவனுடன் ! அப்பாவின் பிடிவாதம் அவளுக்கும் தெரியும் ...
அன்று சென்றவள் தான் ..!
சரியாக ஒரு வருடம் கழித்து , இருவரும் எங்கோ வெளியில் சென்று விட்டு காரில் திரும்பி கொண்டிருந்த போது , எதிரே வந்த லாரி மோதியதில் , ஜோசப் படுகாயத்துடன் தப்பிக்க ..
அனு அந்த இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக செய்தி வந்த போது .. அணையை உடைத்து கொண்டு பீறிட்டு கிளம்பும் வெள்ளம் போல , தன் வயதையும் மறந்து 'ஓ 'வென அன்று அலறிய காட்சி , இன்று கண் முன்னே வந்து நின்று அவர் கண்களை நிறைத்தது !
'' அம்மாடி அனு ... .... ..உன்னோட பிரிவாலே , நிரந்தரமாய் எங்க மனசுல ஒரு காயத்தை உண்டாக்கி ...அந்த வலியை தாங்கிக்கவே முடியாம , வாழ்க்கை பூரா இப்டி புலம்ப வெச்சுட்டு போய் சேர்ந்துட்டியே மா ...''
அழுது அரற்றியவாறே ..ஒரு கட்டத்தில் உறங்கி போனார் அவர் ;
அவர்களிருவரும் மதுரைக்கு கிளம்ப இன்னுமிரண்டு தினங்களே இருந்தன;
அன்று வெள்ளிக்கிழமையானதால் , சுலோச்சனா அருகிலிருக்கும் கோயிலுக்கு சென்றிருக்க ...
ஹாலில் டிவி பார்த்தவாறு சோபாவில் அமர்ந்திருந்தார் சதாசிவம்;
'' சாமி ..!''
வாசல் பக்கத்திலிருந்து வந்த குரல் கேட்டு கவனம் கலைந்தவர் , அங்கிருந்தபடியே எட்டி பார்த்தார் ;
க்ரில் கேட்டுக்கு வெளியே ஒரு இளம்பெண் நின்றிருந்தாள் !
பஞ்சடைந்த கண்கள் , ஒட்டிய வயிறு , எண்ணெய் தடவாத வறண்ட கேசம் , கிழிந்த ஆடை ;
ஏனோ அவளை கண்டதும் , அவளையுமறியாமல் நெஞ்சில் இரக்கம் மேலிட , அங்கிருந்து எழுந்து , வாசலுக்கு வந்தார் சதாசிவம் !
'' சாமி ...பசி உசுர் போகுது ...சாப்பிட கொஞ்சம் சோறு போடுங்க ..உங்களுக்கு புண்ணியமாய் போகும் சாமி ! ''
மறுகணம் , ஏதோ மந்திரவாதிக்கு கட்டுப்பட்ட தேவதை போல , அவரின் கால்கள் அனிச்சையாய் கிச்சனை நோக்கி விரைய ..
அடுத்த ஐந்தாவது நிமிடம் , ஒரு தட்டு நிறைய தயிர் சாதம் , ஊறுகாயுடன் , கூடவே ஒரு வாட்டர் பாட்டிலுடன் அவள் முன் ஆஜரானார் அவர் ;
ஆவலுடன் அவரிமிருந்து தட்டை வாங்கி கொண்ட அந்த பெண் , பின் சற்று தள்ளி புதராய் மண்டி கிடந்த செடிகளுக்கு அருகே அமர்ந்து , சாப்பிட ஆரம்பித்தவள் , ஐந்தே நிமிடத்தில் தட்டை காலி செய்து ...வயிறு நிறைந்த திருப்தியுடன் இப்போது நன்றி பெருக்குடன் அவரை நோக்கினாள் !
'' ஐயா ..சாமி ..தர்மதுரை ..வயிறு நிறைஞ்சுடுச்சு சாமி ..நீ நல்லாயிருக்கணும் ..!''
வாயார வாழ்த்தி விட்டு அவள் அங்கிருந்து நகர்ந்தாள் !...
அவள் சற்று முன்பு சொன்ன அந்த வார்த்தைகள் ஏனோ , திரும்ப திரும்ப சதாசிவத்தின் காதுகளில் முட்டி மோதிய வண்ணமிருக்க ...
அவள் சென்ற அந்த திசையை பார்த்தவாறே தன்னை மறந்து நின்றிருந்தார் அவர் !
'' என்னங்க ..உள்ளே டிவி ஓடிக்கிட்டிருக்கு ..நீங்க இங்கே வாசல்ல வந்து நின்னுகிட்டு என்ன பண்றீங்க ?..''
அப்போது தான் கோயிலிலிருந்து வந்த சுலோச்சனாவின் குரல் அவரை உலுக்கி போட ..
சுதாரித்து கொண்டவர் , பின் அவளை பின் தொடர்ந்து உள்ளே சென்றார் ;
'' இந்தாங்க ..பிரசாதம் எடுத்துக்கோங்க ..! ''
அர்ச்சனை கூடையை அவரிடம் நீட்டிய சுலோச்சனா , பின் மெல்லிய குரலில் ,
'' என்னங்க ..கோயிலில் நம்ம காமுவை பார்த்தேங்க ...!''
'' காமுவா ?...யாரு .?''
அவர் வாய் அனிச்சையாய் முணுமுணுத்தாலும் , மனம் முழுவதும் அந்த பெண்ணின் முகமும் , அவள் ஆவலாய் சாப்பிட்ட அந்த காட்சியும் திரும்ப திரும்ப தோன்றி , தோன்றி மறைந்து கொண்டிருந்தது !
சுலோச்சனா தொடர்ந்தாள் ;
'' ..நாம இங்கே குடி வரதுக்கு முன்னாடி நாலு வருஷம் ராம் அபார்ட்மெண்ட்ல இருந்தோமில்ல ..அப்போ ..நம்ம ஃப்ளாட்டுக்கு எதிர்த்த ஃப்ளாட்டுல தானே இருந்தா இந்த காமு ..?..மறந்துட்டீங்களா ?.. இப்பவும் அவ அங்கேதானிருக்கா ..!.... ..இன்னிக்கு அவளும் கோயிலுக்கு வந்துருந்தா ...பேச்சு வாக்கிலே அவ ஒரு விஷயம் சொன்னா ...''
அவரின் முகத்தை சற்று ஆழ்ந்து நோக்கியவள் பின் , தொடர்ந்து ,
'' அந்த ஜோசப் ..அவங்க வீட்டுக்கு பக்கத்து ஃப்ளாட்டுல தான் இருக்கானாம் ...''
'' அந்த ஜோசப் ..அவங்க வீட்டுக்கு பக்கத்து ஃப்ளாட்டுல தான் இருக்கானாம் ...''
அவள் முடித்தது தான் தாமதம் , மறுகணம் காடு மடல்கள் ஜிவ்வென்று சூடேற முகம் சிவக்க கோபத்தில் கத்தினார் சதாசிவம் ;
'' ஸ்டாப் இட் ..நம்ம பொண்ணே நமக்கு இல்லேன்னு ஆனப்புறம் , அவனோட பேச்சு நமக்கெதுக்கு ?.. ..அவன் எக்கேடு கெட்டு போனா என்ன ?..''
அவரை நிதானமாய் கையமர்த்தினாள் சுலோச்சனா ;
'' அடடா ..நா இன்னும் விஷயத்துக்கே வரலே ...கொஞ்சம் பொறுமையாய் கேளுங்க .நா சொல்றதை ''
என்றவள் , மெல்லிய குரலில் ,
'' .இன்னிக்கு என்ன தேதின்னு உங்களுக்கு நினைவிருக்கா ?...''
'' ம்ம் ...ஆகஸ்ட் பத்து ! அதுக்கென்ன இப்போ ?''
'' மறந்துட்டீங்களா ?....மூன்று வருஷத்துக்கு முன்னாடி ..இதே நாள்ல தானேங்க நம்ம அனு நம்மளையெல்லாம் தவிக்க விட்டுட்டு ஒரேயடியாய் போனா ?...ஹூம் ..பத்து மாசம் சுமந்து பெத்து , இருபத்து மூன்று வருஷம் அவளோட சேர்ந்து வாழ்ந்த எனக்கும் ...' அனு அனு ன்னு ' வாய் ஓயாம , மூச்சுக்கு முன்னூறு முறை கூப்பிட்டு ..அவ மேல பாச மழையாய் பொழிஞ்ச உங்களுக்கும் , அவ செத்து போன இந்த நாள் மறந்து போயிடுச்சு ..ஆனா பாருங்க, ஒரே ஒரு வருஷம் மட்டும் அவ கூட வாழ்ந்த அந்த ஜோசப் , இன்னிக்கு அவளோட நினைவாய் கருணை இல்லம் போய் அறுநூறு அநாதை குழந்தைகளுக்கு சாப்பாடு போட்டுட்டு வந்தாராம் .....காமு சொன்னா ''
அவள் பேச பேச , சதாசிவத்தின் மூளையில் பளிச்சென்று ஒரு பொறி !
இனம் புரியாத பதட்டம் உடலில் தொற்றி கொள்ள , பந்து போல் ஏதோ ஓன்று உருண்டையாய் நெஞ்சில் அடைத்து கொண்டது அவருக்கு .. .
இப்பாேது பைத்தியம் பிடித்தவர் போல் அங்கிருந்து ஓடினார் பெட் ரூமை நோக்கி ...
'' அம்மாடி ... அனு ..இந்த பாவியை மன்னிச்சுடும்மா ....நீ எங்களையெல்லாம் விட்டு பிரிஞ்ச இந்த நாளை எப்டிம்மா மறந்தேன் ....?..''
சுவரில் மாட்டியிருந்த அனுவின் போட்டோவின் முன்னே நின்று கண்ணீர் மல்க , கதறினார் அவர் .;
'' டாடி ..நீங்க என்னை மறக்கலியே ...? இன்னிக்கு உங்க கையாலேயே , எனக்கு வயிறு நிறைய சாப்பாடு போட்டு , குடிக்க தண்ணீரும் கொடுத்தீங்களே ?...இப்ப தான் எனக்கு திருப்தியாயிருக்கு ...டாடி ...நீங்க என்னை மன்னிச்சுட்டீங்க தானே ?..''
போட்டோவிலிருந்து உயிர் பெற்று அனு கேட்பது போன்ற ஒரு பிரமை தட்ட ... .... சதாசிவத்துக்கு அதிர்ச்சியில் சப்தநாடியும் ஒடுங்கி போனது !
அடுத்த கணம் , அந்த போட்டோவிலிருந்த அனு மறைந்து ,
அங்கே , சற்று முன்பு தன் வீடு தேடி வந்து சாப்பிட்டு விட்டு போன அந்த ஏழை பெண்ணின் முகம் , மின்னல் வேகத்தில் தோன்றி மறைந்தது !...
அவரின் உடல் வியர்வையில் முழுவதுமாய் நனைந்து , உணர்ச்சிகளின் போராட்டத்தில் சிக்கி , திக்குமுக்காடி போனார் !
" என்னங்க ...? ."
மனைவியின் குரல் கேட்டு சரேலென்று திரும்பிய அவர் கண்ணீர் நிறைந்த கண்களுடன் ..,
'' சுலோ ....சித்த முன்னாடி அனு இங்கே வந்திருந்தா ..பசிக்குதுன்னு சொன்னா ..இதோ , இந்த கையால தான் அவளுக்கு சாப்பாடு போட்டேன் ..திருப்தியாய் சாப்பிட்டு , சந்தோஷமாய் போனா ..''
விம்மலும் , கேவலுமாய் அவர் பேச , எதுவும் புரியாமல் பிரமை பிடித்தாற்போன்று நின்றாள் சுலோச்சனா !
இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை செல்வராஜு அண்ணா, பானுக்கா…
பதிலளிநீக்குகீதா
வாழ்க...
பதிலளிநீக்குபுதிய அறிமுகம் எங்களுக்கு....வருகிறேன்...கதையை நிதானமாக வாசிக்க....கண்ணிக்கு ஏதோ வயிறு வேறு சரியில்லை...புல் டிமான்ட் பண்ணுகிறாள்...ஸோ கொஞ்சம் கடமை ஆற்றிவிட்டு வருகிறேன்...நிதானமாக
பதிலளிநீக்குகீதா
அன்பின் ஸ்ரீராம் - கீதா/ கீதா மற்றும் உறக்கம் வராதோர் சங்கத்தின் முன்னோடிகள் அனைவருக்கும் வணக்கம்....
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.
பதிலளிநீக்குகதையின் ஓட்டம் அருமை....
பதிலளிநீக்குமுடிவில் மனம் கனக்கின்றது..
தாய் தந்தையரை மதிக்காமல்
பதிலளிநீக்குஅந்தப் பெண் அவர்தம் உயிரை உருவி எடுத்து விட்டாள்...
தன் சுகமே பெரிது என்ற நிலையில் எல்லாருடைய வார்த்தைகளும் பலிக்க வேண்டும்...
ஒருவரை ஒருவர் மறந்த நிலையில் துறந்த நிலையில் அவளுடைய பிறந்த நாளை நினைவில் கொள்வதற்கான அவசியமே இல்லை...
சரீரத்துடன் ஞானம் எய்த வேண்டும்..
அன்றி வேறு பயன் இல்லை...
சதாசிவம் செய்த புண்ணிய பலன் அவர் கையால் ஒரு கவளம் வாங்கி உண்டு ஆத்மா சாந்தியடைந்திருக்கிறது...
கதை நன்றாக இருக்கு. சாதாரணப்பட்டவனா, தன்னைத் துறந்த பெண்ணின் மறைவு நாளை நினைவில் வைத்துக்கொள்ள என்ன அவசியம் என்றுதான் தோன்றிற்று. கதை, அன்பு, மனிதாபிமானம் என்ற இழைகளில் பின்னப்பட்டிருக்கிறது. கதாசிரியைக்கு பாராட்டுகள்.
பதிலளிநீக்குகதை நன்றாக இருக்கு. சாதாரணப்பட்டவனா, தன்னைத் துறந்த பெண்ணின் மறைவு நாளை நினைவில் வைத்துக்கொள்ள என்ன அவசியம் என்றுதான் தோன்றிற்று. கதை, அன்பு, மனிதாபிமானம் என்ற இழைகளில் பின்னப்பட்டிருக்கிறது. கதாசிரியைக்கு பாராட்டுகள்.
பதிலளிநீக்குகதை அருமை! மனதை கனக்க வைத்துவிட்டது. உணர்வுபூர்வமான கதை.
பதிலளிநீக்குகதாசிரியர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
அனு செய்த தவறு தன் பெற்றோரிடம் முன்னதாகவே சொல்லாமல் திடுதிப்பென்று திருமணம் செய்து கொண்டு வந்தது. ஏனென்றால் எந்த மாற்றமுமே உடனே ஏற்றுக் கொள்ள இயலாதுதான். மனம் ஏற்றுக் கொள்ளவும் பக்குவப்படவும் காலம் அவசியம். தனக்கு எப்போது ஜோசஃப் மீது விருப்பம் வந்ததோ அப்போதே அனு பெற்றோரிடம் சொல்லியிருக்கலாம்...வாக்குவாதங்கள் வரத்தான் செய்யும் பெரும்பாலான பெற்றோரால் சாதாரண விருப்ப த்ருமணங்களையே ஏற்க முடியாத போது... வேற்று மத காதல் திருமணங்களை ஏற்க முடியாதுதான்.....அந்த ஜோசஃப் நல்லவன் என்பதை அறிய காலம் கடந்துவிட்டதே...
கீதா
படித்த பிறகு வருகிறேன்.
பதிலளிநீக்குஇயல்பாய் தொடங்கிய கதை முடிவில் மனதை உலுக்கி விட்டது.
நீக்குசிலரை சிலர் புரிந்து கொள்ள காலங்கள் நிறைய தேவைப்படுகிறது இதுதான் விதி என்பதோ ?
உணர்வுப் பூர்வ கதை
பதிலளிநீக்குமனம் கனத்துத்தான் போய்விட்டது
கதை பெற்றோர்களின் ஆசி இல்லையென்றால் வாழ்க்கை நன்றாக இருக்காது என்பதை சொல்கிறது.
பதிலளிநீக்குகோபமாய் இருந்தாலும் பாசம் விடாது என்பதையும் கதை சொல்கிறது.
மீதிகாலத்தை சுலோச்சனா போல சதாசிவம் பிறருக்கு உதவி வாழட்டும்.
கதை எழுதியவருக்கு வாழ்த்துக்கள்.
சோகமென்பது மனிதக்கதையின் மறக்கமுடியாப் பக்கம். ஒவ்வொருவரும் அதை ஒவ்வொருவிதமாய் அனுபவிப்பார்கள். சிலரை... சோகம் அனுபவிக்கும்.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபெற்றவர்களின் உணர்வுகனை புரிந்து கொள்ளாமல் திடீரென ஒரு முடிவு எடுப்பது அவர்களின் இதயத்தை நொறுங்க செய்து விடும் என்பதை கதையின் கரு உணர்த்தியது.ஆனாலும் பெற்றவர்களின் பாசம் அவர்கள் உயிர் பிரியும் வரை அவர்களை விட்டு பிரியாது மனதை அறுத்துக் கொண்டேதான் இருக்கும். கதை முடிவில் மனதை நெகிழ வைத்தது. கதாசிரியைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அருமையான அறிமுகம். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குகதை நன்று பாராட்டுகள்
பதிலளிநீக்குநிஜத்தில் நடக்கும் சம்பவங்கள் கதையாகும்போது... மனதை அதிகம் பாதிக்க வைக்குது. அழகான எழுத்து நடை... சுவாரஷ்யம்.
பதிலளிநீக்குபிள்ளை செய்த ஒரு தப்புக்கு பெற்றோருக்கு ஆயுள் தண்டனையா? இல்லை...
பெற்றவர்கள் பட்டகடன் பிள்ளைகளைச் சேருமடி எனத் தொடருதோ... எனப் புரியாமல் இருக்கு...
இந்த விசயத்தில் பெற்றோரும் கொஞ்சம் விட்டுக் குத்துப் போனால் மகிழ்ச்சியாக வாழலாம்...
ஊர்..., வாழ்ந்தாலும் பேசும்... தாழ்ந்தாலும் பேசும் , ஆனா நாம் கவலைப்பட்டால் ஆரும் வந்து தடவி விடப் போவதில்லை... அதனால
நிம்மதி நிம்மதி உங்கள் சொய்ஸ்.... இன்பமும் துன்பமும் உங்கள் சொய்ஸ்:)...
மனதை என்னமோ செய்தது கதை ..
பதிலளிநீக்குகொஞ்ச நாளாவே செய்தி /சானல்ஸ் அது இதுன்னு போட்டு ரொம்பவே அப்செட் ..
பெற்றோர்களே காதல் தவறில்லை அது பாவ குற்றமில்லைன்னு சொல்லி வளருங்க உங்க பிள்ளை உங்களை மீறி எதுவும் செய்யாது .
Children often rebel against their parents because they feel kind of trapped when they are suppressed ,too much of parental control and over affection could lead to a big loss :(
நமக்கு சம்பந்தமில்லாத நாலு ஜந்துக்கள் பின்னாடி பேசம்னு உங்க உயிரான செல்வங்களை இழக்காதிங்க ..
பதிலளிநீக்கு'மன்னிப்பு’ ..... சிந்திக்க வைக்கும் சிறப்பான கதை.
கதையினில் கதாபாத்திரங்களான அவரவர்களின் சோகம், ஆங்காங்கு இழையோடுவதாக இருப்பினும், ஒவ்வொருவரின் உணர்வுகளையும் புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் மிகசிறப்பாக, இந்தக்கதை எழுதப்பட்டுள்ளது.
கதாசிரியை அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.
வை.கோபாலகிருஷ்ணன்
gopu1949.blogspot.in
காலம் நிறைய மாறினாலும் இன்னும் மாறாத விஷயம் இந்தக் கலப்புக் காதல் தான்.
பதிலளிநீக்குஇனியாவது ,சதாசிவம் தம்பதியர்க்கு அமைதி கிடைக்கட்டும்.
அருமையான கதை.வாழ்த்துகள்.
சொல்லாமல்,கொள்ளாமல் செய்து கொண்டது அசட்டுத்தைரியம்.பிறகு நேர்ந்த விபத்து காலம்செய்த கொடுமை. துக்கம் கொடிது. பரோபகாரம்,இதம் சரீரம் என்று வாழ்வதுதான் ஒரு வழி. பெற்றவர்களுக்குத் தெரியும் பிள்ளையின் அருமை. உருக்கமானகதை. அன்புடன்
பதிலளிநீக்குஅருமையான கதை.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
பெற்றோருக்குக் குழந்தைகள் பிரிவென்பது எவ்வளவு கொடிய அனுபவம்! முதலில் அனு சாதாரணமாக இறந்திருக்கிறாள் என்றே நினைத்துக் கதையைத் தொடர்ந்து படித்தால்! மாறுபட்ட சிந்தனை! என்றாலும் அனுவைச் சாகடித்திருக்க வேண்டாமோ என்று தோன்றுகிறது. சதாசிவம் மனம் மாறி விட்டதை உணர்த்த வேண்டி இந்த நிகழ்வு எனத் தோன்றுகிறது. கடைசியில் ஏழைப் பெண்ணின் பசியை ஆற்றியபோது அனுவின் பிறந்த அல்லது இறந்த நாளாக இருக்கும்! சதாசிவமே நினைவு கூரப் போகிறார் என்று நினைத்தேன். ஜோசஃப் நினைவு கூர்வதாகவும் சதாசிவம் மறந்து விட்டதாகவும் கதை போகிறது. பெற்றோருக்குக் குழந்தைகள் பிறந்த நாளோ, பிரிந்த நாளோ மறக்காது என்றே நினைக்கிறேன். ஆழப் பதிந்திருக்கும்.
பதிலளிநீக்குஎத்தனை விதமான கமென்டுகள் ...வித்தியாசமான அலசலுடன் கூடிய கருத்து பரிமாறல்கள் ..!
பதிலளிநீக்குஉங்கள் அனைவருக்கும் என் பணிவான நன்றிகள் ...இவையே எங்களை போன்ற எழுத்தாளர்களுக்கு ஒரு உந்துசக்தியாக இருந்து ..மென்மேலும் எழுதுவதற்கு உறுதுணை புரிகிறது ...மீண்டும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் ....
உங்கள் சிநேகிதி
தங்கம் கிருஷ்ணமூர்த்தி