வழி!
ராஜேந்திரகுமார்
"ஸார்! தீயை வைக்கிறதா? அது என்ன இலேசுப்பட்ட காரியமா? பெரிய 'இல்லீகல்' லாச்சே! ஒரு வருஷத் துக்குக் குறையாமல் உள்ளேதள்ளி விடுவான்கள்!"
"பேச்சுக்குச் சொன்னேம்பா!" பயந்து அலறி விட்டார் சாந்தலிங்கம். ''என்ன இது? நீயே என்னைக் கொண்டு போய் உள்ளே தள்ளிடுவாய் போலிருக்கே!"
"சரி. சரி. அவன் உன் வழிக்கு வரக் கூடாது. அவ்வளவுதானே. அதற்கு நான் ஒரு பிரமாதமான ஐடியா வைத்திருக்கிறேன். திட்டம் தருகிறேன். நம்ம சாஸ்திரிஜி அன்று தாஷ்கண்ட் பேச்சுவார்த்தை நடத்தியதைப் போல, நீயும் வா. அவளையும் அழைப் போம். இரண்டு பேரும் பேச்சு வார்த்தை நடத்துங்க. சமரணம் பண்ணி வைக்க நானாயிற்று." இப்படி ஆவுடையாப் பிள்ளை அவர்களது பிரச்னையைத் தீர்க்க முன்வந்தார்.
"நான் போய் அவன் வீட்டுப் படியை மிதிக்கணுமா?" ரோஷம் சாந்தலிங்கத்தின் மார்பை நிமிர்த்திற்று.'"அவன் வரட்டுமே!"
"நீயும் அவன் வீட்டுக்குப் போக வேண்டாம். அவனும் உன் வீட்டுக்கு வர வேண்டாம்" ஆவுடை சொன்னர். "இரண்டு பேருக்கும் பொதுவான ஏதாவது ஒரு ஹோட்டலில் சந்திக்கலாம். இரண்டு பேருமாகச் சேர்ந்து ஒருத்தர் வியாபாரத்தை ஒருத்தர் கெடுக்காமல் பிழைக்கிற வழியைப் பாருங்க."
மறுத்துக் கூற வழியின்றி. விரல்களைச் சங்கடத்துடன் நெட்டுயிர்த்தார் சாந்தலிங்கம்.
பிரபல ஹோட்டலின் ஒதுக்குப்புறமான அறையொன்றின் சோபாவில் அமர்ந்திருந்த சாந்தலிங்கத்துக்குக் குளிர் கண்டது. அதற்குக் காரணம் அந்த அறை குளுமை சாதனம் பொருத்தப் பட்டிருந்தது என்பது மட்டுமல்ல; தடபுட லான ஹோட்டலாக இருக்கிறதே. வாடகை, டிபன், காப்பி, சாப்பாட்டோடு பில் என்ன ஆகுமோ? அதை யார் தருவதோ...?
சுற்று முற்றும் பார்த்து அவர் விழிப்பதை உணர்ந்த ஆவுடையாப்பிள்ளை புரிந்து கொண்டார். "பயப்படாதேடா! ஹோட்டல் பில்தானே? நான் தரேன்" என்று கூறித் தேற்றினார்.
பத்து மணிக்கு வந்தார் வைத்தியலிங்கம்.
பரஸ்பர அறிமுகங்களுக்குப் பின் சந்திப்பைத் தொடங்கி வைத்துப் பேசலானார் ஆவுடையாப் பிள்ளை. "அரசியலில் மட்டுமின்றி. இப்படி இரண்டு போட்டி ஸ்தாபனங்களும் ஒன்றுபட்டு, திறந்த உள்ளத்தோடு பேசி, தகராறு இன்றி, சக வாழ்வோடு தொழில் புரிவார்களேயானால், நாட்டில் வியாபாரத் தொழில் போதுமான அளவு உயரக் கூடும். உங்களுடைய இந்த ஹோட்டல் சந்திப்பு வெற்றியடைய வாழ்த்துகிறேன். இந்தச் சந்திப்பு மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து நடைபெறும். முதல் நாளாகிய இன்று அடுத்த இரண்டு நாட்கள் பேசுவதற்கான அட்டவணையைத் தயாரித்து முடியுங்கள். அதோடு இந்த மகிழ்ச்சியான நாளை முன்னிட்டு இன்று இரவு என் வீட்டில் ஒரு விருந்து தரப்படும். வெங்காய சாம்பார் முதல் கொத்தமல்லி துவையல் வரை அயிட்டங்கள் உண்டு. அதோடு சாக்கலேட் ஐஸ் கிரிமும் உண்டு" என்று முடித்தார்.
மறு நாள்....
போனைப் பிடித்துக் கொண்டிருந்த சாந்தவிங்கத்தின் முகத்தில் ஒரு படி அசடு வழிந்தது. "வந்து... நான் வரக்கூடிய நிலையிலில்லை!"
"நாசமாய்ப் போ!'' டெலிபோனுக்குள் ஆவுடையாப் பிள்ளை துள்ளிக் குதித்தார். "அவ்வளவு தடபுடலாகப் பேச்சுக்களை ஆரம்பித்து வைத்தேனே, என்னைச் சொல்லணும். இந்தாப்பா! எப்படியாவது புறப்பட்டு வா. இல்லாவிட்டால் கேவலமாக நினைப்பான் வைத்தியலிங்கம். தெரிகிறதா? இரண்டாவது நாளே தோற்றுப் போய் ஓடிவிட்டாய் என்றால்? அதுவும் எவ்வளவு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசப் போகிறாய் இன்று? எந்த ரக ஜவுளியை யார் விற்பனை செய்வது என்பது பற்றி முடிவு எடுக்க இருக்கிறோமே!''
"எனக்கு உடம்பு சரியில்லையே. வேணுமானால் என் மகனை அனுப்பி வைக்கிறேன். பேச வேண்டியதையெல்லாம் சொல்லி அனுப்பறேன். எனக்கு ரெப்ரெஸெண்டேடிவாக அவனே பேசட்டும்."
அவர் 'அப்பா ப்ளீஸ்...ஐயா ப்ளீஸ்' என்று கெஞ்சியபோது, "எதுவோ செய்" என்றார் ஆவுடையாப் பிள்ளை.
பத்து மணிக்கான கிரிக்கெட் மேட்சும். மூன்று மணிக்கான மாட்டினி ஷோவும் தவறிப்போன ஆத்திரத்தைக் கார் கதவைச் சாத்தும் முறையிலே காட்டிவிட்டு, ஹோட்டலின் 'ரிஸப்ஷனிஸ்ட்டிடம் "பி பிளாக் காமே! அது எந்த 'ஹெல்'லிலிருக்கிறது?" என்று பல்லைக் கடித்தபோது
..
"என் கூட வா! நான் அழைத்துக் கொண்டு போறேன்!" என்ற குரல் கேட்டது. ஆவுடையப்பன் நின்றிருந்தார். "என்ன? தம்பி ரொம்பக் கோவமாயிருக்கீங்க போலிருக்கு! சந்திப்பின்போது, கோபம் கூடாதப்பா!"
"சந்திப்பாம் சந்திப்பு மண்ணாங்கட்டி" என்று ஸ்ரீராம் முணுமுணுத்தபோது....'
"இப்ப இப்படித்தான் சொல்லுவே. ஆளைப் பார்த்தாயோ அசையவே மாட்டே. வா.... வா..." என்று இழுத்துப் போனார்.
"வணக்கம்."
அறைக்கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்த ஸ்ரீராம் ஆணியடித்தாற் போல நின்றுவிட்டான்.
தட்டினால் ரத்தம் சுண்டிப் பரவுமோ என்பது போல் செக்கச் சிவந்த நிறம் அந்தப் பெண்ணுக்கு. கண்ணில் தீட்டிய மையின் கருமைக்கும், முகத்தில் ஒற்றிய பவுடரின் வெண்மைக்குமாக முகம் பளிசசென்றிருந்தது.
"இவள்தான் ஷீலா." அறிமுகப்படுத்தி விட்டார் ஆவுடையாப்பிள்ளை. "உன் அப்பாவின் எதிரிக்கு ஒரே பெண்; செல்லப் பெண்."
புதில் வணக்கம் போடவும் மறந்து நின்ற ஸ்ரீராமுக்கு, அவள் சிரித்தபோது தலை 'கிர் ரென்று கழன்று நின்றது.
"அப்பாவுக்கு உடம்புசரியில்லை" என்றாள்.
"என் அப்பாவுக்கு வயிறு சரியில்லை'' என்றான் அவன்.
''உட்கார்ந்து பேசுங்கள்" என்று ஆவுடை நினைப்பூட்டினார்.
"பேசவும் வேண்டுமோ!" என்று நெடுமூச்செறிந்தான் ஸ்ரீராம். "இன்று பேசலேண்டிய விஷயம் என்ன?" என்று அவளைக் கேட்டான், அந்தக் குயில் குரலை மீண்டும் கேட்க,
''ஏன்? உன் அப்பன் சொல்லி அனுப்ப வில்லையா?" என்று ஆவுடையின் கட்டைக் குரல் கேட்டதும், ஆத்திரம் ஆத்திரமாக வந்தது அவனுக்கு.
"வண்டி சொன்னார் வண்டி" என்று கையை விரித்துக் காட்டியவன் பொரிந்தான். "பேச்சு வார்த்தைகள் ஆரம்பமானவுடன் நீங்கள் போய் விடுவிர்கள் என்றுகூடச் சொன்னார்..
"அது அப்பன்கள் பேசும்போது." அசைய மறுத்தார் ஆவுடை. "சிறுசுகள் பேசும்போது நான் இருக்க வேண்டியது அவசியம்."
நூற்றெட்டுத் தரம் 'நாசமாய்ப் போக' என்று சபித்துவிட்டு, பேச்சுக்களைத் தொடர்ந் தான் ஸ்ரீராம். "உங்களுக்கு என்னென்ன புடவைத் துணிகள் பிடிக்கும்?"
"எனக்கா?" செயின் டாலரை உருட்டியவாறு சொன்னாள் ஷீலா: "டெரிலின், டெர்லான், டெக்ரான், நைலான், கம்மீஸுக்கான பியஸ்டா எல்லாம் ரொம்பவும் பிடிக்கும். ரோலி என்றால் ட்லிங்க்ளிங் நைலான்தான் ரொம்பவும் பிடிக்கும்" என்றள்.
"அப்படியானால் அதெல்லாம் உங்களுக்கே உரிமையாக இருக்கட்டும்" என்று அவன் கூறியபோது, "தோ, நோ" என்று அவசர அவசரமாக மறுத்தாள்.
"அதெல்ஸாம் உங்கள் கடையில் விற்பனையாகட்டும். எங்கள் கடையில் சாதாரண நூலும். பட் டும் விற்கட்டும்."
"பிடித்தமானது என்றீர்களே..." என்று ஆரம்பித்தவனை முறைத்துப் பார்த்துஅடக்கி விட்டவள் கேட்டாள்: "உங்களுக்கென்ன பிடிக்கும்?""
"இம்போர்ட்டட் செய்யப்பட்ட டெரிலின், டெரி காட்டன். காட்டன் துணியாலே, 'டைட்ஸ்' பாண்டு போடுவதென்றல் உயிர். எனக்குச் சாப்பாடு கூட வேண்டியிருக்காது அரை டஜன் பருத்தி கலர் 'ப்ளீடிங் மெட்ராஸ் இருந்துவிட்டால்."
''அந்தத் துணிக்கான உரிமை எங்களுக்கு'" என்றாள் அவள் சட்டென்று.
"ஐயோ! அந்தத் துணிக்கெல்லாம் மார்க் கெட் அதிகம், ஆயிரம் சொன்னாலும் விடாதே என்றாரே என் அப்பா."
''சும்மாயிருங்கள்! ஏன் எங்கள் கடைக்கு வரவே மாட்டீர்களா?"
பளீரென்று பொறி தட்டியது போல நினைவு விழித்தது ஸ்ரீராமுக்கு.
'அட மடையா! உன்ளை அடிக்கடி சந்திக்க வாய்ப்புத் தேடுகிறாளடா அவள் தேவைக்காக உன் கடை ஏறி வரவும், உன் தேவைக்காக அவள் கடைக்கு நீ போகவும் வழி செய்கிறாளடா மண்டு!' என்று இடித்துக் கூறியது. உள்மனம்.
பேச்சு வாக்கில் கவனித்தார்கள். சோபாவில் தொய்ந்து சாய்ந்து குறட்டை கட்டியம் கூற. தூங்கிவிட்டிருந்தார் ஆவுடை. பேச்சு திசை மாறி, சினிமா முதல் வகுப்பு லெக்சரர் உள்பட வரப்போகும் கிரிக்கெட் மாட்ச் வரை அவர்கள் அலசத் தொடங்கினார்கள்.
"போயும் போயும் உன்னை அனுப்பினேனே என்னைத்தான் சொல்லணும்" தலையிலடித்துக் கொண்டு துள்ளிக் குதித்தார் வைத்தியலிங்கம். "நல்லா உன்னை ஏமாற்றியிருக்கான் அந்த ராஸ்கல், நல்ல ரகத்தை அவன் எடுத்துக்கிட்டு, மட்டச் சரக்கை உன் தலையிலே கட்டியிருக்கான்.
"அவர் சொல்லலைப்பா! நான்தான் பிரித்தெடுத்தேன்! அவர் நல்லவரப்பா!
"பேசாதே! எனக்குக் கோபம் வரும்! கிழட்டு ராஸ்கல் அவன்..."
"என்ன சொன்னீங்க கிழவனா? அவரா! நீங்களும், உங்க பார்வையும். முதல்லே உங்க மூக்குக் கண்ணாடியை' மாற்றுங்க! புதுசா வாங்குங்க" என்று நாலடி நடந்தவன் அப்படியும் ஆத்திரம் தீராமல் திரும்பி, "சோடா பாட்டில் கண்ணாடியாக' என்று கூறிப் போனான். பல்லைக் கடித்துக் கொண்டிருந்தார் வைத்தியலிங்கம்,
மறு நாள்.....
ஹோட்டல் அறையில் இரண்டு 'லிங்கன்' களும் சண்டைப் பூனைகளைப் போல் கத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில்... கடற் கரையில்...
“டேய் மூர்த்தி! உனக்குத்தான் டிரைவிங் வருமே! என் காரை எடுத்து ஜாலியாக ஊரைச் சுற்றிவிட்டு ராத்திரி கொண்டுவந்து வீட்டில் விடு. நான் உன் சைக்கிளை எடுத்துப் போறேன்" என்ற ஸ்ரீராம் அவன் பதிலையும் காதில் வாங்காமல் சைக்கிளில் ஏறி, மிதி மிதி என்று மிதித்துக் கல்லூரியைக் கடந்து,
சைக்கிளில் போய்க் கொண்டிருந்த ஷீலாவை நெருங்கி, ''ஹலோ!" என்றான்.
எதிர்பாராத சந்திப்பினால் வியப்பு தாங்காமல் தள்ளாடி விழப்போனவள் சமாளித்து "நீங்களா?" என்றாள்.
"எவ்வளவு நாளாயிற்று... உங்களைப் பார்த்து..." என்ற ஸ்ரீராமைப் பார்த்து, கலீரென்று சிரித்தாள். "நேற்றுத்தானே சந்தித்துப் பேசினோம் ஹோட்டலில்! ஒரு நாள்தானே ஆகிறது?"
"ஒரு நாள்தானா? ஒரு யுகாந்தரம் ஆகவில்லையா?" என்றவாறு சிரித்தான் ஸ்ரீராம்.
அடுத்த அரை மணி நேரத்தில் கடற்கரை ஹோட்டலில் மேல் மாடியில் சளசளவென்ற அரட்டையுடன் டீயும், பிஸ்கட்டும், கேக்குமாகத் தின்று சிரிக்கச் சிரிக்கப் பேசினர்.
"ஆஹா! நான் ஒரு கவிஞனாகப் பிறக்கவில்லையே! பிறந்திருந்தால் உன் கன்னம் சிரிக்கும் போது குழி விழுவதைப் பற்றி ஒரு பாமாலையே பாடியிருப்பேனே!"
"பாமாலை வேண்டாம்! முடிந்தால் ஒரு பூமாலைக்கு ஏற்பாடு பண்ணுங்கள். உங்களை எனக்கு ரொம்பவும் பிடித்து விட்டது.''
"அவ்வளவு சீக்கீரமாகவா என்மேல் நம்பிக்கை வந்து விட்டது? வந்து 'இது' பிறந்து விட்டதா?" அவன் வியந்தான். "நேற்றுத்தானே முதல் முதலாகச் சந்தித் தோம்! ஒரு நாள்தானே ஆகிறது?"
"நேற்றுத்தானா? ஒரு நாள்தாளு ஆகிறது? யுக யுகாத்திரமாகவில்லையா?"
ஒரு விநாடி ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டவர்கள் "கொல்'லென்று சிரித்தனர்.
"விஷயம் தெரிந்துதான் தேடப் புறப் பட்டவன், நேரே இங்கே வந்துவிட்டேன்"--ஆவுடையா வந்து நின்றார். "அப்பன்கள் அங்கே சண்டை சண்டை போட, நீங்கள் இங்கே சிரிக்கிறிங்களா? அதுவும் நல்லதற்குத்தான். எப்படியோ சமாதானம் வந்தாலே எனக்குப் போதும்.. நேரமாச்சு, வீட்டுக்குப் போங்க. உங்கள் அப்பன்களிடம் பேசி உங்கள் கல்யாணத்தை முடிக்க நானாயிற்று. பொறுங்கள்" என்று விரட்டிவிட்டு, நிம்மதி யாய் அமர்ந்தார்.
"இப்படியொரு சமாதானம் வரணும்னு தானே அன்றைக்கு என் வீட்டிலேயே விருந்து கொடுத்தேன். அதுவும் ஐஸ்கிரீமோடு... அதுவும் ஸ்பெஷலாக சாக்கலேட் ஐஸ்கிரீமோடு" என்று தமக்குத் தாமே வாய் விட்டுக் கூறிக் கொண்டார்.
"என்ன ஸார்? சாக்கலேட் ஐஸ்கிரீம் வேணுமா?" என்ற ஸர்வர், அவர் ஏன் அப்படியோர் ஓட்டம் ஓடுகிறாரென்று புரியாமல் விழித்தான்.
-- 15/5/66 கல்கி
==========================================================================================
செய்திகள் சில
முதல் நிகண்டு :
உலக மொழிகளிலேயே தமிழ் மொழியில்தான் முதன்முதலாக அகரவரிசை தோன்றியது. அதன் பெயர் அகராதி நிகண்டு. இயற்றியவர் சிதம்பர கிரேவன சித்தர். இயற்றியளித்த ஆண்டு 1594. அதன் பிறகே மற்ற மொழிகளில் அகர வரிசை தோன்றியது.
சேம அச்சு :
தற்காலத்தில் வாகனங்களில் ஸ்டெப்னி' எனப்படும் மாற்றுச் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. வண்டியின் அச்சு முறிந்து விட்டால் அதற்கு மாற்றாகப் பயன்படுத்துவதற்கு சேமஅச்சு கொண்டு செல்லப்பட்டதாகப் புறநானூறு 102 ஆம் பாடல் கூறுகின்றது.
அணுகுண்டை வெல்லும் வழி!
பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டினிடம் ஒருவர் "அணு அபாயத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற ஏதேனும் வழி உள்ளதா?" என்று கேட்டார்.
அதற்கு ஐன்ஸ்டின், "ஏன் இல்லை. சமாதானம்தான் அந்த வழி!” என்று பதில் கூறினார்.
நானே போதும்!
ஒரு சமயம் ஓர் ஆங்கிலேயப் பத்திரிகை திருபர் காந்தியடிகளைக் கிண்டல் செய்யும் எண்ணத்துடன், "உங்கள் மக்கள் உங்களை என் தங்கள் பிரதிநிதியாக ஏற்றுக் கொண்டனர்? வேறு தலைவர்களே அவர்களுக்குக் கிடைக்கவில்லையா?" என்று கேட்டார்.
காந்தியடிகள் சிரித்துக் கொண்டே, "உங்களைச் சமாளிக்க நானே போதுமென்று அவர்கள் நினைத்திருக்கலாம்" என்றார்.
குறள் செய்திகள் :
திருக்குறன் உத்திரப் பெருவழுதி பாண்டியன் முன் அரங்கேற்றப்பட்டது. திருக்குறளில் 14000 சொற்களும், 42194 எழுத்துக்களும் உள்ளன. 1838 -ம் ஆண்டில்தான் திருக்குறள் முதன்முதலாக அச்சடிக்கப்பட் டது. குறளில் 'குறிப்பறிதல்' என்ற அதிகாரம் இருமுறை வருகிறது.
நீலகேசி :
ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான "நீலகேசியில்" தாவர வியல் செய்திகள் விளக்கப்படுகின்றன. இந்நூலின் மொக்கல வாத சருக்கம் என்னும் பகுதியில் அறிவியல் கருத்துகள் பல உள்ளன.
லைப்ரரி :
நூலகங்களை ஆங்கிலத்தில் லைப்ரரி என்று குறிப்பிடுகின் றனர். 'லைபர்' என்கிற லத்தீன் வார்த்தைக்கும் 'புத்தகம்' என் பது பொருள். 'ஏரி' என்கிற வார்த்தைக்கு 'பாதுகாக்குமி டம் என்பது பொருள். புத்த கங்களையும் பாதுகாக்கும் இடம்தானே 'லைப்ரரி.
சுழியம் :
பூஜ்யம் என்பதைக் குறிக்க 'சுழி' என்ற சொல்லை பயன்படுத்தி வருகிறோம். 'கழி' என்ற சொல்லுக்கும் பல பொருள்கள் உள்ளன. எனவே பூஜ்யம் என் பதை 'சுழியம்' என்றும் கூறுகிறார்கள்.
நெ. இராமன் - - 2004 ஆம் ஆண்டு மஞ்சரியிலிருந்து -
பூஜ்யம் என்பதற்கு சுழியன் என்று சொல்லியதைப் படித்து எனக்கு சுகியன் நினைவு வந்துவிட்டது. வீட்டில் பண்ணச் சொல்லணும்.
பதிலளிநீக்குஹா.. ஹா.. ஹா... வாங்க நெல்லை.. நீங்க சொன்னதும் எனக்கும்...
நீக்குஆமாம் இல்ல!
நீக்குசேம அச்சின் பயன்பாடே வேறு. வண்டி பள்ளத்தில் இறங்கினால் பாரம் மாட்டின் நுகத்தடியைத் தாக்காமல் இருக்க உபயோகப்படுவது.
பதிலளிநீக்குபுறநாநூறு சொல்வதாக சொல்லி இருக்காரே...
நீக்குபுறநானூறு நான் சொன்ன அர்த்தத்தில்தான் சொல்கிறது. மேடு ஏறும்போதும் சேம அச்சு உபயோகப்படும் என்கிறது. மேடு ஏறும்போது அதனை மாடுகளுக்கு இடையில் நுகத்தடியில் மாட்டுவார்களோ? துரை செல்வராஜ் சாருக்குத் தெரிந்திருக்குமா?
நீக்குமாமனார் வீட்டில் பார்த்த வரைக்கும் நுகத்தடியில் எதையோ மாட்டி விட்டு ஒரு பக்கம் மாட்டு வண்டி ஓட்டுபவரும், இன்னொரு பக்கம் மாமனாருமாகச் சேர்ந்து வண்டியை மேட்டில் ஏற்றுவார்கள். நாங்கல்லாம் கீழே இறங்கிப் பின்னாடியே நடந்து போவோம். பின்னர் மேடு தாண்டியதும் வண்டியில் ஏறிப்போம்.
நீக்குகதைக்குப் படம் இல்லாத்து கீதா ரங்கன் காணாமல் போனதை சிம்பாலிக்கா தெரிவிக்கும் உத்தியா?
பதிலளிநீக்குஇதற்கான ஒரிஜினல் படத்தையே எடுத்து வைத்திருந்தேன். தேடித்தேடி...
நீக்குஇதை எடுத்து வைத்து சில மாதங்கள் ஆகிவிட்டன.
அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்குவாங்க வெங்கட்.. வணக்கம். நடக்கட்டும்.. நடக்கட்டும்...
நீக்குகதை ஓகே..... குறிப்புகள் :) சுழியம் என்றதும் எனக்கும் நெல்லைத் தமிழன் போலவே சுகியன் நினைவுக்கு வந்தது......
பதிலளிநீக்குஹா.. ஹா.. ஹா... எனக்கு என்ன நினைவு வந்தது என்று சொல்ல முடியாது!
நீக்குகதைகள்.கான்வர்ஷேஷனில் ஆரம்பித்தாலே எனக்கு தொடர்ந்து வாசிக்க
பதிலளிநீக்குசலிப்பாக இருக்கும். அது சுஜாதாவாக இருந்தால் கூடத்தான்.
எஸ்.ஏ.பி.- யின் பாடதிட்டத்தில் வளர்ந்தவன் ஆகையால் --
ஜன்னல் கதைவைத் திறந்ததும் அதிர்ச்சி -- என்கிற மாதிரி ஒற்றை வரியில் ஆரம்பிக்க வேண்டும்
அது அடுத்த வரி, அதற்கடுத்த வரி என்று வாசிப்பை இழுத்துக் கொண்டே போகும் எழுத்து சாகசத்திற்கு இணையே இல்லை.
வாங்க ஜீவி ஸார்... அப்போ நீங்க இது மாதிரி எதிர்பார்ப்புகளாலும் ஏமாற்றங்களாலும் நிறைய (நல்ல) கதைகளை கூட மிஸ் பண்ணி இருப்பீங்கன்னு சொல்லுங்க!
நீக்குஎனக்கு எப்போதுமே கதை முக்கியமே இல்லை.
பதிலளிநீக்குஅதை எழுதிச் சொல்லும் லாவகம் தான் முக்கியம்.
அப்படியே இது நாள் வரை வளர்ந்தாச்சு.
என் தளம் பூவனத்தில் பாருங்கள்.
கதைகளோ, தொடரின் அத்தியாயங்களோ ஒற்றை வரியில் ஆரம்பிப்பதைப் பார்க்கலாம்.
அப்படி ஆரம்ப்பித்து கதையை அந்த ஆரம்ப வரிக்குத் தொடர்ச்சியாய் நீட்டுவது என்பது பழக்கப்பட்ட ஒன்றாக ஆகி விட்டது.
புரிந்து கொண்டேன். ஆனால் அந்த ப்ராசஸில் நீங்கள் சிலபல நல்ல கதைகளையும் மிஸ் செய்திருப்பீர்கள் என்று நான் நினைப்பதைச் சொன்னேன்.
நீக்கு ஜீவி சார் இவ்வார சனிக்கிழமை கதையை பார்த்து விட்டு பின்னரும்
நீக்கு//எனக்கு எப்போதுமே கதை முக்கியமே இல்லை.
அதை எழுதிச் சொல்லும் லாவகம் தான் முக்கியம்.
அப்படியே இது நாள் வரை வளர்ந்தாச்சு.//
என்று சொல்வீர்களா?
Jayakumar
முருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா வணக்கம்.
நீக்குநலமே விளைக
பதிலளிநீக்குநலமே விளையட்டும்.
நீக்குசுழியம் என்றதும் எனக்கும் சுழியன் நினைவுக்கு வந்தது......
பதிலளிநீக்குஆனால் இப்போதெல்லாம் கடலைப் பருப்பு பண்டங்கள் ஒத்துக் கொள்வதில்லை...
சுவைதான்!
நீக்குஏன் தேங்காய் பூரணம் வைத்தால் வேண்டாம் என்கிறதா? இப்படியான பாரம்பர்ய பண்டங்களை வீட்ல செய்யாமல்போனதாலத்தான் இளைய தலைமுறை மோமோஸ்னு ஓடுகிறார்கள்.
நீக்குஅதே, அதே, நானும் வெறும் தேங்காய்ப் பூரணம் தான் வைப்பேன். எனக்கும் கடலைப்பருப்பு அலர்ஜி.
நீக்குஅது ஒரு காலம். காதல் என்பது மோதலில் ஆரம்பித்து முகூர்த்தத்தில் முடியும் பேசும் படங்கள் சக்கை போடு போட்ட காலம். அத்தகைய சினிமாவுக்காக எழுதப்பட்ட கதையாக இது தோன்றுகிறது. படிக்கும் பொது ஜெமினி, சாவித்திரி நினைவுக்கு வந்தனர்.
பதிலளிநீக்குJayakumar
கதையை அதிசயமா காலையிலேயே படித்துவிட்டேன். முன்னெல்லாம் ஒற்றைப் பெண் பிசினெஸ் மேனுக்குப் பிறந்தால் பசினெசை பின்னால் இணைத்துக்கொண்டு பெரிய அளவில் வரலாம் என பெண் எடுத்திருப்பார்கள். இப்போதைய காலத்தில் உல்டாவாக நடக்கலாம்.
பதிலளிநீக்குகதை வழக்கமான ராஜேந்திரகுமார் பாணியில் ஆங்காங்கே இருந்தாலும் முற்றிலும் இல்லை. டியேய் என அழைக்கும் தோழியும், உருளைக்கிழங்கு ஸ்ட்ரைக்கரில் கால் வைத்து வழுக்கி விழும் சீதாவும் இல்லாமல் ராஜேந்திரகுமார் கதை என்ன வேண்டிக்கிடக்கு? அதிலும் குமுதத்தில் வந்த வால்கள் பண்ணும் அட்டூழியங்களும், அதைத் தொடர்ந்து வரும் வாரத்தில் அப்புசாமி, சீதாப்பாட்டி பண்ணும் அமர்க்களங்களையும் மாறி மாறிப் படிச்சவங்களுக்கு இந்த ராஜேந்திரகுமார் கதை ஒண்ணும் பெரிய விஷயமே இல்லை.
பதிலளிநீக்குஇதே ராஜேந்திரகுமார் மாலைமதிக்காக ஒரு த்ரில்லர் சஸ்பென்ஸ் குறுநாவல் ஒண்ணு எழுதினார்.அதில் ரொம்ப தீவிரமான ஒரு விஷயத்தைக் கூட மிக எளிதாகக் கடந்திருப்பார்/ ஆனாலும் அவருடைய முழு நீள நகைச்சுவை நாவலான "எப்படியடி காதலிப்பது?" இவரோட மாஸ்டர் பீஸ் எனலாம். இது. அதிலும் இந்த ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ யைப் பிரபலமாக்கியவரே இவர் தான்.
பதிலளிநீக்குஅந்த த்ரில்லர் கதை தான் "நீயா என் காதலி!"யோ? நினைவில் இல்லை. படித்தே பல வருஷங்கள் ஆகின்றன. கூகிளாரைக் கேட்கணும் ஏதானும் கிடைக்குமானு. மனம் சட்டென ரிலாக்ஸாக இருக்கணும்னால் இவரோட எழுத்தைப் படிச்சாலே போதும். :)
பதிலளிநீக்குடியேய், இவள்களே, என்றோ என்னமோ ஒருத்தருக்கொருத்தர் சொல்லிப்பாங்க. பள்ளியில் செய்த கலாட்டாக்கள் போதாதுனு பின்னால் காலேஜுக்கும் போகும் எல்லாம். அங்கே தான் உருளைக்கிழங்கு ஸ்ட்ரைக்கர்னு நினைக்கிறேன். ஆஹா, அந்தக் காலத்துக்கே போயிட்டேன். எஸ்.எஸ்.எல்.சி படிக்க ஆரம்பிச்சிருந்தேன்னு நினைக்கிறேன். நானும் அப்போப் பள்ளி மாணவி தானே. அதான் மறக்கவே இல்லை.
பதிலளிநீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குராஜேந்திரகுமார் கதை நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்கு//பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டினிடம் ஒருவர் "அணு அபாயத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற ஏதேனும் வழி உள்ளதா?" என்று கேட்டார்.
அதற்கு ஐன்ஸ்டின், "ஏன் இல்லை. சமாதானம்தான் அந்த வழி!” என்று பதில் கூறினார்.//
சிறந்த வழி இதுதான்.
கதையிலும் சமாதானம் மகிழ்ச்சி.
கதையும் செய்தி ஒரே விஷயத்தை சொல்லி விட்டது.