22.9.26

சிறுகதை : நாளை முதல் நீ வேறோ நான் வேறோ... - ஸ்ரீராம்

 

நாளை முதல் நீ வேறோ நான் வேறோ...   

- ஸ்ரீராம் 



அந்த காஃபி ஷாப் இருவரும் ஏற்கனவே பலநாட்கள் வந்த இடம்தான்.  கல்யாணத்துக்கு முன் தினமும் சந்தித்த இடம்.  அதன்பின் இப்போது விவாகரத்து தீர்ப்பாகி இன்று மறுபடியும் இங்கே..  பிரிவுக்கு முன் கடைசியாக ஒருமுறை இங்கேதான் சந்திக்க வேண்டும் என்று இருவருக்குமே தோன்றியது ஒரு விநோதம்தான்.

அவன் வரும்போது அவள் முன்னரே வந்து அமர்ந்திருந்தாள். இவன் வருவதை கவனித்திருக்க வேண்டும் என்றாலும் அவள் பார்வை வேறிடத்தில் இருப்பது போல காட்டிக்கொண்டு, அருகில் வந்ததும் கைப்பையை அருகில் எடுத்துக் கொண்டு மெல்ல தலையசைத்து செயற்கையாகப் புன்னகைத்தாள். 

எதிரே அமர்ந்து சுற்றிலும் ஒருமுறை பார்த்து விட்டு அவளை பார்த்தான்.

"இன்னிக்கேவா கெளம்பறே?"

"நாளை ஈவினிங் ஃபிளைட்"

பழகிய சர்வர் புன்னகையுடன் காஃபி கொண்டு வைத்தான்.  அவனுக்குத் தெரிய நியாயமில்லையே... 

மங்கிய வெளிச்சத்தில் மௌனம் அவர்களை போர்த்திக் கொண்டிருந்தது.  அவர்களுக்குத் தெரியும், நாளை முதல் அவர்கள் சந்திக்கப் போவதில்லை.  அவள் வெளிநாடு போகிறாள்.  இவன் வேறு ஊர் செல்கிறான்.
எடுத்த முடிவு சரிதானா என்கிற எண்ணம் இருவருக்குள்ளுமே இப்போது இருந்தாலும் வெளியே சொல்ல முடியாத ஒரு இறுக்கம் சூழ்ந்து தலை கவிழ்ந்து ஒருவர் பார்க்காத போது இன்னொருவர் பார்த்துக் கொண்டார்கள்.  'எந்த ஊரில் எந்த நாட்டில் எங்கு காண்போமோ' என்கிற வரி இருவருக்குள்ளும் மனதில் ஓடியது. 

கால் மணி நேரத்துக்கும் மேல் சும்மா உட்கார்ந்திருந்தார்கள்.

ஒருவரை ஒருவர் இன்னும் கொஞ்சம் மதித்து பொறுத்துப் போயிருக்கலாம் என்று இப்போது தோன்றினாலும் அப்போது அப்படி தோன்றவில்லை என்பதை இருவருமே நினைத்தார்கள்.

இன்றைய தினத்தின் இந்த உணர்வுகள் நாளை மாறி வேறு துணையை மனம் நாடலாம்.   என் பலவீனத்தை நான் ஏன் வெளிப்படுத்த வேண்டும் என்று இருவருமே மனதுக்குள் நினைத்துக் கொண்டார்கள்.

காஃபி குடிக்கப்படாமல் அப்படியே இருக்க, பில் யார் கொடுப்பது என்கிற விவாதங்களுக்கு இடம் வைக்காமல் அவள் பில்லை கையில் எடுத்துக் கொண்டு எழுந்து நடந்தாள்.


=======================================================================================


1960 ஆம் வருட தென்றல் இதழ்.  


தெரியும்தானே?  தென்றல் என்பது கண்ணதாசன் நடத்திய இதழ்.  இந்தத் தகவலை நான் அறியாமலேயே சிறுவயதில் இதே 'தென்றல்' என்ற பெயரில் நான் ஒரு கையெழுத்துப் பத்திரிகை நடத்தினேன்.  நான் தென்றல் என்று பெயர் வைக்கக் காரணம் என் அண்ணனும் அவர் நண்பரும் 'வசந்தம்' என்று ஒரு கையெழுத்துப் பத்திரிகை நடத்தியதுதான்.


கேள்வி பதில் பகுதிக்கு கண்ணதாசன் 'ஐயம் அகற்று' என்று தலைப்பிட்டிருந்தார் போலும்.  அதில் வந்த ஒரு சுவாரஸ்யமான கேள்வி பதில்.


 

ஐயம் அகற்று - மேலை.சி. மதிமாறன், திருநல்லூர்.

தனித்து இயங்கக்கூடிய தமிழ் மொழியில் தனித் தமிழ் ஆண்டுகள் கிடையாதா? இப்போது தமிழாண்டுகள் என்று வழங்கி வருகின்ற "அறுபது ஆண்டுகளும்" தமிழ்தானா?

பன்னிரண்டு திங்களும் தமிழ்த்திங்கள். சக ஆண்டு (வாக ஆண்டு) தமிழகத்தில் வழங்கிய ஆண்டுதான், வடபுல ஆண்டு அன்று. விக்கிரம ஆண்டே தவிர, கொல்லம் ஆண்டு (தற்போது 1135-வது ஆண்டு) தமிழக ஆண்டுதான். தமிழ் ஆண்டு என்ற சொல்லை மாவட்டத்தில் கொல்லம் ஆண்டு என்பதன் மறு பெயராகவே வழங்குகிறது. தவிர, தமிழகத்தின் தமிழ் மாவட்டங்களுக்குள்ளேயே பிறந்த ஆண்டு மெய்கண்டான் ஆண்டு (இது 737-ம் ஆண்டு).

கேள்வி கேட்பவருக்கு எப்படியோ நிறைவு தரும் ஆண்டுகள் இயல்பில் ஒன்றேனும் அமையவில்லை என்பது தெளிவு. தமிழ் ஆண்டு இலக்கிய இலக்கண அமைப்புகளுக்கு ஏற்ப, காலக் கணிப்பு அமைப்பதே சிறப்பாகும்.

கலி ஆண்டு (இன்றைய ஆண்டு 5082) ஆரிய ஆண்டினும் பிற ஆண்டு முன் தொடங்கியது. ஆனால் கி.பி. 3-ம் நூற்றாண்டுக்கு அதாவது சக ஆண்டுக்கு முந்திய காலம் குறித்த ஆதாரம் எதுவும் இல்லை. இரண்டாவது இதன் வழக்கு வடதிசையில் மிகுதி. மூன்றாவது தொடக்கத் திராவிட, தமிழ் இயக்கத்தார் சமய வாழ்வு முழுவதும் பஞ்சாங்கமும் முற்றிலும் ஆரியருக்குரியன என்று ஒதுங்கி இருந்தனர்.

கேள்வி கேட்பவர் 60 ஆண்டு வட்டம் தமிழருடையதே என்றே கருதுவதாகத் தெரிகிறது. ஆனால் அது தமிழருடையதேயானாலும், பிற ஆண்டு போலயே பஞ்சாங்கம் கோள்களின் நகர்வுடன் கணிப்பிடப்படும் கணிப்புடன் ஊழி பல வரிசைப்படும் ஒரு வழிப்படும்.

அறுபதாண்டு வட்டமும் வானநூலாரால் வரையறுக்கப்பட்டது. தொல்பழங்காலத் தமிழர் வானநூலறிவு பற்றிச் சங்க இலக்கியக் குறிப்புகள் மூலம் அறிகிறோம்.

கிட்டத்தட்ட இன்றைய உலகின்... பண்பாடு உண்டு. தமிழர் மற்ற எல்லா உலக இனங்களையும் விட, ஆரியரை விட ஆண்டு, மாத, வார, நாட்களை நுட்பதிட்பமாகக் கணித்து இருந்தனர் என்றும், அதை இன்றைய பஞ்சாங்கம் வரை கொண்டு வந்தவரே ஆரியர் என்பதும் திராவிட ஆய்வியற் பேரறிஞர்கள் கூறுகின்றனர்.

விடுத்தவர் கேள்விக்கு இவை விளக்கங்களே தவிர விடையாகமாட்டா. தொல்பழங்காலத்திலிருந்து தமிழர் எவ்வாறு காலக் கணிப்பைக் குறித்தனர் என்பதை அறிய இலக்கியச் சான்றுகள் எதுவும் நமக்கு எட்டவில்லை. அதுவும் பிற்பட்ட சிலவே நமக்கு வந்து எட்டியுள்ளன. அறிவு நூல்கள், ஆகமங்கள் இலக்கிய வழிச் சிலவன்றி பிற அழிந்தொழிந்தன. பொருளாராய்ச்சி ஏதேனும் உண்மைகளைக் கொணரலாம்.

கல்வெட்டுக்களில் சக முதலிய ஆண்டுகள் தருவன மிகச் சிலவே. ஆயினும் எங்கேனும் ஒன்றன் ஆண்டு தெரிந்தால் மற்றவை கணிக்கப்படுமளவு பிற குறிப்புகளை ஆராய்ந்தே வரலாற்றாசிரியர்கள் கணித்துள்ளனர். இதற்கு உதவும் காலக்குறிப்புகள் பெரிதும் அரசனது பெயர், அவன் ஆட்சியாண்டு ஆகியவையும், சில இடங்களில் அவன் முன்னோரின் விவரமுமேயாகும்.

ஆனால் எகிப்திய மன்னர்களின் பெயர்களுடனேயே ஆண்டுகள் தொடர்பாகக் கிடைப்பதால், அவற்றின் வரலாற்றுக் காலம் கணிப்பது எளிதாகிறது. தமிழகத்தில் அதுவும் தொடர்பாகக் கிடைத்த திருவிளையாடற் புராணங்களில் வடதிசைப் புராணங்களைப் போலச் சோழர் பாண்டியர் பிரம்மாண்டப் புராணங்கள் மரபு வரிசைப் பெயர்கள் உள்ளன. வரலாாற்றுக்கு உதவும் அளவுகூட இந்தத் தென்திசைப் புராணங்கள் உதவவில்லை. மெய்யான பட்டியலிட்டுப் பார்த்து இந்த வரிசை பொய்ப் பட்டியலாக அமைக்கப்பட்டிருப்பதுதான் இதற்குச் சான்றாகும்.

பொருளாய்வில் இனியும் கிடைக்க முடியாதென்றில்லை, கிடைக்க வழி உண்டு. வினாக்களைக் கேட்பவர் போன்றவர்கள் உள்ளத்தில் எழும் கேள்விகள் பெரிதும் கேள்விகளாகத்தான் உலவ முடியும். வீழ்ந்த இடைக்காலத்தின் திரையாக நிற்கிறது. வாழ்ந்த காலத்தை ஒரு புறம் நோக்கி வருங்கால வாழ்வுக்கு வகை காண விழைகிறோம். ஆனால் வாழ்ந்த செய்திகளை வருந்தி மெய் காணும் பொறுப்பும், வருங்காலப் பேருழிகளுக்கும் வழிகாட்டும் கடமையும் நமது இந்தியத் தேசிய அரசியலுக்கும்தான் உரியது.

திருவள்ளுவர் ஆண்டு (இப்போது வருகிறது ஆண்டு 1992) எழும் கேள்விகளுக்கு அந்த அளவுக்கு ஒரு தற்காலிக விடையாக வருங்காலத் தமிழகம் அமைய வரையறுக்கப்பட்டதே. காலப் பழம்பொருளாய்வு ஒரு வேளை உண்மையான திருவள்ளுவராண்டை திருந்திய திசையில் தரக்கூடும் என்று நினைக்கிறேன். அது கிறித்தவ ஆண்டை விட, புத்தர் ஆண்டை விட, சக ஆண்டை விடப் பழமையானதாய் இருக்கும் என்பதே என் நம்பிக்கை.


மா.பா. சாரதி, சென்னை:

'மூவருலா'வும், ஏரெழுபது எழுதி, இளமைப் பெருமை காத்த ஒட்டக்கூத்தரைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?

ஒட்டக்கூத்தரும், கம்பரும் ஒரே காலத்தவர் என்பதற்கு கற்பனை கலந்த கதைகளையன்றி ஆதாரமிக்க, இலக்கியச் சான்றுகள் ஏதேனும் உண்டா? கூத்தன் காலத்துக் குலோத்துங்கனும், கம்பன் காலத்துக் குலோத்துங்கனும் ஒருவரா? ஏரெழுபது இயற்றியவர் கம்பர் தானா?

பல்மொழிப்புலவர் பதில் தருகிறார்:

ஜெயங்கொண்டார் கலிங்கத்துப் பரணி பாடியது முதற் குலோத்துங்க சோழன் (கி.பி. 1070 - கி.பி. 1120) காலத்தில்தான். அக்காலத்துச் சோழ அரசின் புலவரிலைத் தலைவராயிருந்தவர் அவர். அவருக்குப் பின் அதே கவிச்சக்கரவர்த்திப் பட்டமேற்ற மூன்று கவிச்சக்கரவர்த்திகள் ஆட்சியில் அச்சக்கரவர்த்திகளின் ஆசிரியராயிருந்து (விக்கிரம சோழன் 1118-1135, இரண்டாம் குலோத்துங்கன் 1133-1150, இரண்டாம் இராசராசன் 1146-1173 ஆகிய) 'மூவருலா' பாடியவர் அவர். இந்த இரு கவிச்சக்கரவர்த்திகள்தாம் வரலாறு அறியும்.

ஒட்டக்கூத்தர் மூன்று வரலாற்றுப் பேரரசர்களைப் பற்றி உலா பாடியவர். அவர் காலத்தையும் அவர் காலத்தில் அவருக்கு இருந்த புகழ், மதிப்பையும் நாம் திட்டவட்டமாக அறிகிறோம்.

கம்பர் எக்காலத்தவர் என்பது பற்றி இன்றும் அறிஞர் ஒருமுகமாக வரவில்லை. அவர் ஒட்டக்கூத்தர் காலத்தில் இருந்தவர் என்பதற்கு எத்தகைய ஆதாரமும் இல்லை. 'கவிச்சக்கரவர்த்தி' என்ற பட்டம் கம்பருக்கு எந்தச் சோழனோ, சேரனோ, பாண்டியனோ கொடுத்த பட்டம் அல்ல. அது மக்கள் கொடுத்த பட்டம் என்றுதான் தற்காலக் கவிதைப் பண்பாளர்கள் கூறுவர். சோழப் பேரரசர்களில் பெரும் பேரரசர்கள் அத்தனை பேரும் சைவர்கள். அவர்கள் காலம் அரிய அரசியல் ஆதரவு பெற்றிருக்க முடியாது. அவர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தவரா அல்லது 12-ம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தரின் உலாவுக்குரிய இரண்டாம் குலோத்துங்கச் சோழர் காலத்தவரா என்று பலரும் கொள்கின்றனர். ஆனால் அவரது கவிதைப் பண்பையும் அரசியல் ஆதரவற்ற நிலையையும் நோக்க அவர் மூன்றாம் குலோத்துங்கன் (1178-1218) காலத்தவர் என்றே கூறத்தகும். பாண்டியர் கையில் சோழநாடு சின்ன பின்னமுற்றுச் சீரழிந்த காலத்தில் ஆமுதத் தாத மலராகவே அவர் கவிதை விளங்கியிருத்தல் பொருந்தும்.

தமிழில் திருவள்ளுவர், ஔவையார் கதைகளைப்போல, மலையாளத்தில் எழுத்தச்சன், சமஸ்கிருதத்தில் காளிதாசன், பவபூதி முதலியார் கதைகளைப்போல, ஒட்டக்கூத்தர் கதையும் விசயநகர காலத்துக்குச் சற்று முன்னோ பின்னோ ஏற்பட்ட இடைக்கால புதிய எழுத்தாளக் கும்பலின் கட்டுரைக் கலையேயன்றி வேறல்ல. அவற்றில் உள்ளது பொய்ம்மை. பொய்ம்மை என்று தேடும் பொறுப்பை விட, எது பொய்ம்மை என்று காணும் பொறுப்பே நம் வரலாற்றுக்குப் பெரிது. அக்கதை பற்றி நாம் கூறத்தகும் ஒன்று, அவை நல்ல கட்டுக்கதை எழுத்தாளர்களின் படைப்புகள் என்பதில் சிறிதும் ஐயமில்லை என்பதுதான்.


அறிவிப்பு

நான் மார்ச் முதல் வாரத்தில் சென்னையிலேயே தங்க வேண்டியிருப்பதால் இயக்க உணர்வாளர்களும் மற்றவர்களும் 4/141, மவுண்ட் ரோடு, சென்னை - 2 என்ற முகவரிக்கு எழுதும்படி தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

அன்புக்குரிய,

ஏ.கே.வில்வம்.

46 கருத்துகள்:

  1. ////மங்கிய வெளிச்சத்தில் மௌனம் அவர்களை போர்த்திக் கொண்டிருந்தது///

    இப்படியான வரிகள எல்லாம்
    ஸ்ரீராம் அவர்களுக்கு பலாச்சுளை
    மாதிரி...

    பதிலளிநீக்கு
  2. விடையில்லாக் கேள்வி
    போல கதை...

    அழகு...

    பதிலளிநீக்கு
  3. பன்மொழிப் புலவர் என்ற பட்டம் நமக்குக் கிடைக்க வேண்டுமானால், யாருக்குமே புரிந்திராத, வார்த்தை வாக்கியம் போன்றவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் வழ வழா கொழ கொழா என மொழியில் ஜிலேபி பிழியத் தெரிந்திருக்க வேண்டுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் பக்கத்தை மிகவும் சிரமப்பட்டு கொண்டு வந்தேன்.  அதில் ஏதும் பிழையிருக்கலாம்.

      நீக்கு
    2. பிழை இருந்தாலும் சிரமம் பாராது அதைப் பெயர்த்து எழுதியது சிறப்பு. செயங்கொண்டாருக்குப் பின் இரண்டாவது கவிச் சக்ரவர்த்தி என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்பது தெளிவாக இல்லை. தமிழில் பிற இன-நில ஆதிக்கம் இல்லை, இல்லை, இல்லவே இல்லை, இருக்க முடியாது என்கிற பிடிவாதம் தமிழறிஞர்களிடையே இருப்பது நமது துரதிருஷ்டம்.

      நீக்கு
    3. என் கருத்தும் இதுவே தான்.

      நீக்கு
    4. அந்தப் படத்தை டவுன்லோட் செய்து பெரிதாக்கி  ​படிக்க முயற்சிக்கலாம்!

      நீக்கு
  4. பிரிவு என்பதே சட் என்று மனது எடுத்துவிடும் முடிவோ? பிறகு சிந்திக்கும்போது நல்ல நினைவுகள் வந்து, கொஞ்சம் பொறுமையாகிருந்திருக்கலாம் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்குமோ? இல்லை வேறு ஒரு துணை கிடைத்து, நல்ல முடிவை எடுத்தோம் என்ற எண்ணம் வந்து நெஞ்சு நிம்மதி கொள்ளுமோ? இல்லை... உன்னை ஏன் விட்டுவிட்டு ஓடியிருக்க மாட்டா, மாட்டார், உன் குணத்துக்கு.... என காலம் முழுவதும் அவச்சொல் வந்துகொண்டே இருக்குமோ? நான் நல்லவன்/வள், அந்தத் துணைதான் சரியில்லை என்று நிரூபிக்க எப்போதும் இயல்பை விட்டு, நடிக்க வேண்டியிருக்குமோ? இல்லை... விட்டது சனி விளாம்பழத்து ஓட்டோடு என காலம் பூராவும் தனியாகவே இருந்துவிடுவோம் என்ற முடிவுக்கு வருவோமோ?

    எத்தனையோ எண்ணங்களைத் தோற்றுவிக்கும் ஒரு பத்திக் கதை.

    பதிலளிநீக்கு
  5. இப்படிப் பல்வேறு சாத்தியங்களை மனதில் தோற்றுவிக்கும் வாய்ப்பு இந்த படத்துக்கு பொருத்தமான கதை அல்லது பத்து வரி கடைகளுக்கு தான் உண்டு. சுருக்கமாக சொல்லி நிறைய சிந்தனைகளை தோற்றுவிக்கலாம் . அந்த வகையில் கதை வெற்றி என்று கொள்ளலாம். ஒரு பெரிய சம்பவத்தை நாவல் போல விளக்கு அல்லது இரண்டு பக்கங்களுக்கு ஒரு விஷயத்தை சொல்லி இதனால் தான் அவர்களுக்குள் சண்டை இப்போது பிரிகிறார்கள் என்றெல்லாம் சொல்வதை விட அவர்கள் மனதுக்குள் ஏன் பிரிந்தோம் என்கிற உணர்வு இன்னமும் கூட இருக்கிறது என்பதை லேசாக சொல்லிக் காட்டி செல்வது எனது நோக்கமாக இருந்தது . வெற்றி அடைந்திருக்கிறேன் என்றுதான் நினைக்கிறேன். நன்றி நெல்லை.

    பதிலளிநீக்கு
  6. விவாகரத்து என்பது , " இனிமேலும் இவரைத் துணையாக என்னால் சகிக்க முடியாது " என்கிற வெறுப்போ கோபமோ மிகப்பெரிய அளவில் வரும்போது எடுக்கப்படும் கடைசியான நடவடிக்கை. அதற்கு மேலும் கூட சட்டப்படி அவர்களுக்கு ஆறு மாத அவகாசம் கொடுத்து மீண்டும் சேர்ந்து வாழ முடியுமா என்பதை சரி பார்த்துக் கொண்டு அது இயலாது என்று உறுதியான பின்னர் வந்து விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம் என்று விதிக்கப்பட்டு இருக்கிறது. விவாகரத்து வாங்கின கணவன் மனைவி பின் மனம் திருந்தி இணைந்து வாழ்ந்தார்கள் என்று சொல்வது கதைகளுக்கு மட்டுமே சரியாக இருக்கும் .சினிமாவில் மட்டுமே காண முடியும்.

    என் வாழ்நாளில் கிட்டத்திலிருந்து நான் பார்த்த விவாகரத்து ஒன்றே ஒன்றுதான். பெரிய பணச் செலவு இன்றி அது கிடைத்த போது எங்கள் பக்கத்தினர் (நாங்கள் மாப்பிள்ளை சைடு) அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்த வேண்டாத உறவு முற்றிலும் மறக்கப்பட்டு அடியோடு நினைவில் இருந்து அழிந்து விட்டது என்றே சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் ஒன்றிரண்டு விவாகரத்துகள் பார்த்திருக்கிறேன்.  குழந்தைகள் இருந்தால் அதுதான் பாவம்.  இப்போது என் நெருங்கிய நட்பில் இப்படியான உணர்ச்சிபூர்வமான வழக்கு ஒன்று சென்று கொண்டிருக்கிறது.  இப்படியும் நடக்குமா என்று திடுக்கிடும் திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கிறது.

      நீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. விவாகம் விவாகரத்து என்று வரும்போது சில பணக்கார பிரபலங்கள் செய்து கொள்ளும் விவாகங்களும் தேடி அடையும் விவாகரத்துகளும் சாதாரணமாக நாம் எதிர்பார்க்கிற காரணத்திற்காக இல்லை என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு மிகப் பிரபலமான உதாரணம் அமெரிக்க ஜனாதிபதி கென்னடியின் மனைவி புகழ்பெற்ற ஜாக்குலின் கென்னடி 80 வயதான ஒரு கப்பல் கம்பெனி காரரை மணந்து கொண்டதாகும். இது காதலால் உந்தப் பட்டு நடந்த திருமணம் என்று நினைக்கிற அசட்டுத்தனம் நம்மில் யாருக்கும் இராது என்று நம்புகிறேன்.‌ அதேபோல சினிமா நடிகை எலிசபெத் டெய்லர் விவாகரத்து பெறுவதில் சாதனை படைத்தவர். விவாகரத்து செய்த ஒருவரையே மீண்டும் மீண்டும் மணந்து காட்டியவர். சில துறைகளில் (அமெரிக்காவில் என்று சொல்ல வேண்டும் )விவாகம் விவாகரத்து இரண்டுமே விளம்பரத்திற்காக செய்யப்படுகிறதோ என்கிற ஐயம் தோன்றும் வகையில் தான் வாழ்க்கை முறை இருக்கிறது. நம் சமூகத்திலேயே கூட விவாகரத்து என்பது திரைத் துறையில் மட்டுமே பிரபலமாக இருக்கிறது அல்லவா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதெல்லாம் நம் போன்ற சாமானியக் குடும்பங்களிலேயும் சகஜமாக ஆகி விட்டது விவாகரத்து. எங்கள் குடும்பத்திலும் ஒரு சில விவாகரத்துக்கள் இருந்து மறு விவாகமும் நடந்து சகஜமாகவும் இருக்கின்றனர். சிலர் விவாகரத்து இல்லாமலேயே பிரிந்தும் வாழ்கின்றனர். நல்ல முடிவு எடுக்கும்படி பிரார்த்திப்பதைத் தவிர்த்து வேறே என்ன செய்ய முடியும் நம்மால்? :(

      நீக்கு
    2. @ராமன் : நீங்கள் சொல்லி இருக்கும் பிரபல விவாகரத்துகள் ரகம் ரகமானவை. இந் நாட்களில் ஒரு சிறு சண்டைக்கும் விவாகரத்தை நாடி விடுகிறார்கள்.  திருமணம் நடப்பதே பிரம்மபிராயத்தனமாக இருக்கும் இந்நாளில் இம்மாதிரி விவாகரத்துகள் வீண் செலவு, வீண் சேர்க்கை என்று ஆகிவிடுகிறது.  புதிதாக திருமணம் ஆவதே சிரமமான நிலையில் மறுமணம் என்று வரும் ஜோடிகளுக்கு ஜோடி கிடைப்பது மிகுந்த சிரமமும் ஆகிறது.  மேட்ரிமோனியல் சைட்களைப் பார்க்கும்போது இதெல்லாம் பார்க்க முடிகிறது.

      நீக்கு
    3. ஒரு வார வாழ்க்கையில் விவாகத்தை ரத்து செய்வதென்றால் சீரியசான காரணங்கள் இருக்க வேண்டும். இதில் மணம் செய்தவர் மட்டுமே முடிவு செய்ய வேண்டும். பெற்றோர்கள் பாச மிகுதியில் நடுவில் வந்ததால் முறிவு ஏற்படுவதையும் கடந்த 40 வருடங்களாகப் பார்த்து வருகிறேன். ஏன் இவ்வாறு நிகழ்கிறது யார் காரணம் என்பது கடைசி வரை விளங்குவதில்லை. சோகம் மட்டும் மிஞ்சுகிறது.விதி என்பது மட்டும் விளங்குகிறது.

      நீக்கு
    4. // ஒரு வார வாழ்க்கையில்//

      அப்படி எதுவும் குறிப்பு இல்லையே அம்மா? ஆனால் தம்பதிகள் நடுவே யாருமே வரமுடியாது; அவர்கள் விவகாரங்களில் தலையிடவும் முடியாது என்பதுதான் என் கருத்தும்!

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    கதை நன்றாக உள்ளது. நன்றாக இருவரின் உணர்வுகளை சிக்கனமான வார்த்தைகளுடன் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    /காஃபி குடிக்கப்படாமல் அப்படியே இருக்க, பில் யார் கொடுப்பது என்கிற விவாதங்களுக்கு இடம் வைக்காமல் அவள் பில்லை கையில் எடுத்துக் கொண்டு எழுந்து நடந்தாள்./

    "இந்த விட்டுக் கொடுத்தல் முதலிலேயே இருந்திருக்க கூடாதா" என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை. விட்டுத் தருவதன் பெருமை தெரியாமல் இப்படித்தான் பலர் இன்னமும் (சேர்ந்தோ , பிரிந்தோ) இருக்கிறார்கள். / வாழ்கிறார்கள். கதை மனதை என்னவோ செய்கிறது. (என்னவோ நானே இம்மாதியான சூழலில் பிரிவது மாதிரியான உணர்வு.) அருமையான எழுத்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இந்த விட்டுக் கொடுத்தல் முதலிலேயே இருந்திருக்க கூடாதா" என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை. //

      அதை விட்டுக் கொடுத்தலாகவா பார்க்கிறீர்கள்?  'நான் உன்னை எதிலும் எதிர்பார்க்கவில்லை.  என் வழி என்னால் முடியும், எனக்குத் தெரியும்' என்று பாவம் தோன்றவில்லையா?

      நீக்கு
    2. உண்மைதான். உன்னை நம்பி என் பொருளாதாரம், வாழ்க்கை இல்லை என்பதை அவனுக்கு உணர்த்தவே இந்த வெளி நடப்பு.

      நீக்கு
    3. பார்வைகள் வித்தியாசப்படும் அம்மா! வாங்க...

      நீக்கு
    4. /அதன்பின் இப்போது விவாகரத்து தீர்ப்பாகி இன்று மறுபடியும் இங்கே.. பிரிவுக்கு முன் கடைசியாக ஒருமுறை இங்கேதான் சந்திக்க வேண்டும் என்று இருவருக்குமே தோன்றியது ஒரு விநோதம்தான்./

      என்னதான் விநோதமாக இருந்தாலும், விவாகரத்து தீர்ப்பானவுடன் அந்த கோர்ட் வாசலிலேயே இருவரும் ஒரு (Bye) யை சொல்லி விட்டு பிரிந்து விடலாமே..! எதற்காக மறுபடி எந்த எதிர்பார்ப்பில் முதலிலிருந்தே ஆரம்பம்.? அப்படி சந்தித்தும் பிரயாணம் எப்போததென்ற கேள்வியுடன் பிரிவும் நடக்கிறது.சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் கதை டைட்டில் நினைவுக்கு வருகிறது. இதற்கு தீர்ப்பானவுடன் அழகாக தொந்தரவில்லாமல் பிரிந்திருக்கலாம்

      "அப்புறம் நான் எப்படி இந்த கதையை எழுதுவதாம்.? என்ற ஸ்ரீராமின் முணுமுணுப்பும் கேட்கிறது. ஹா ஹா ஹா.

      நீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. இப்போது தொலைக்காட்சி நாடகங்கள்,சினிமா எல்லாம் விவாகரத்து பற்றி தான் இருக்கிறது. நீங்களும் அதை பற்றி எழுதி விட்டீர்கள்..

    //ஒருவரை ஒருவர் இன்னும் கொஞ்சம் மதித்து பொறுத்துப் போயிருக்கலாம் என்று இப்போது தோன்றினாலும் அப்போது அப்படி தோன்றவில்லை என்பதை இருவருமே நினைத்தார்கள்.

    இன்றைய தினத்தின் இந்த உணர்வுகள் நாளை மாறி வேறு துணையை மனம் நாடலாம். என் பலவீனத்தை நான் ஏன் வெளிப்படுத்த வேண்டும் என்று இருவருமே மனதுக்குள் நினைத்துக் கொண்டார்கள்.//

    ஒத்து போகாமல் பிரிந்தவர்கள் நினைவு இப்போது ஒத்து போகிறதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதெல்லாம் தொலைக்காட்சியே பார்ப்பதில்லை என்பதால் அதன் ட்ரென்ட் என்னவென்று தெரியாது. தொலைக்காட்சிப் பெட்டி இருந்தவரையிலும் கூட நம்மவர் மட்டும் தான் பார்ப்பார் சீரியல்களை எல்லாம். நான் சாயங்காலம் ஆறரை மணியிலிருந்து ஏழரை வரை உட்கார்ந்திருப்பேன். பின்னர் வேலைகளை முடித்துக் கொண்டு தூக்கம் வருதோ இல்லையோ படுத்துவிடுவேன். இப்போதும் அப்படித் தான். இங்கே அவங்க இருவரும் ராத்திரி பதினோரு/பனிரண்டு வரை பார்ப்பார்கள். பின்னர் தூங்கப் போவார்கள். சில சமயங்களில் குழந்தையும் அப்பா/அம்மாவுக்காக முழிச்சுண்டு இருப்பா. :)))

      நீக்கு
    2. // ஒத்து போகாமல் பிரிந்தவர்கள் நினைவு இப்போது ஒத்து போகிறதே! //

      அவர்களுக்குள் இன்னும் இருட்டுக்கு அண்டர்ஸ்டாண்டிங், அன்பை அவர்கள் உணரவில்லை.

      நீக்கு
    3. நானும் தொலைக்காட்சியை பார்ப்பதில்லை கீதா அக்கா. நான் தொலைக்காட்சிக்கு அருகே செல்வது OTT பார்க்கத்தான்!

      நீக்கு
    4. இருக்கு என்பதை "இருட்டு" நு ஆக்கிட்டீங்க! :)

      நீக்கு
    5. ஆமாம் அக்கா..  பேசாம ராஜினாமா பண்ணிடலாமான்னு பார்க்கறேன்.  கண்ல ஆபரேஷன் செய்யலாம்னு போனா இன்னும் ஆறு மாசம் போகட்டும் இன்னும் ஆறு மாசம் போகட்டும்ங்கறாங்க... :(

      நீக்கு
  12. திருவள்ளுவரைப் போல ஸ்ரீராமும் சுருக்கென்று கருத்துக்களைச் சொல்லிவிடுவார். இந்தக் கதையிலும் அப்படித் தான். இருவருடைய எண்ண ஓட்டங்களும் ஒரே அலையில் இருக்கையில் பிரிவு எப்படி வந்தது? ஆச்சரியம் தான். ஈகோ தான் முக்கியக் காரணமாக இருக்கும். ஆனால் இதில் இருவரும் பின்னால் சேர மாட்டார்கள் என்பதைச் சுட்டிக் காட்டும் விதமாக மனைவி கணவனிடம் சொல்லிக்காமல் பில்லை மட்டும் எடுத்துக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் செல்கிறாள். இருவரும் மனம் விட்டுப் பேசி இருக்கலாமோ என நினைப்பது சரியல்லை. ஏனெனில் ஏற்கெனவே மனம் விட்டுப் பேசிட்டு இருந்திருப்பதால் தான் ஒரே எண்ண அலையில் சிந்திக்கின்றனர். இங்கே ஸ்ரீராம் குறிப்பிட்டிருப்பதைப் படித்தால் " இன்றைய தினத்தின் இந்த உணர்வுகள் நாளை மாறி வேறு துணையை மனம் நாடலாம்." நெருடல் இங்கே ஏற்படுகிறது. உண்மையான காரணம் இதுவாய் இருக்குமா? இருவருக்குமே புதிய துணையின் தேவை தான் மனம் மாற வைத்திருக்கோனு தோன்றுகிறது. அது சரி, அதுவும் அலுத்தால்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // திருவள்ளுவரைப் போல ஸ்ரீராமும் சுருக்கென்று கருத்துக்களைச் சொல்லிவிடுவார்.//

      ஐ... அப்படியா? ஆஹா...

      // இங்கே ஸ்ரீராம் குறிப்பிட்டிருப்பதைப் படித்தால் //

      இல்லை.. இப்போது அவர்களுக்கு வேறு துணை ஏதுமில்லை. மீண்டும் சேரவிடாமல் தடுக்கும் அந்த ஈகோவின் சமாதானம் அது. ஒருவேளை நாளை அவர்கள் மீண்டும் இணையலாம்.

      நீக்கு
  13. கண்ணதாசன் பத்திரிகை நடத்தியதும் அதன் பெயர் தென்றல் என்பதும் தெரிந்திருந்தாலும் அவர் பத்திரிகையிலும் இந்த மாதிரிக் கேள்வி பதில்கள் எல்லாம் இருந்ததாகத் தெரியாது. . அவர் எழுத்து மாதிரி இல்லையேனு நினைச்சால் கடைசியில் யாரோ ஒருத்தருடைய பெயர். அவரோட இந்தத் தமிழ் பயமுறுத்துகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யார் அந்த பன்மொழிப்புலவர் என்று தெரியவில்லை.  எனக்குத் தெரிந்து பன்மொழிப்புலவர் என்று அப்பாதுரையைதான் குறிப்பிடுவார்கள்.

      நீக்கு
    2. நம் அப்பாதுரையையா? அட!!!!!.எனக்கும் கண்ணதாசனின் மொழி போலத் தோன்றவில்லை. கடைசியில் தான் பார்த்தேன். தொலைக்காட்சியில்
      முன்பெல்லாம் இருந்த ஆர்வம் இப்போது இல்லை. மனசுக்கு இனிமையாகப் பாடல்களைக் கேட்டுக் கொண்டு உறங்குகிறேன்.

      நீக்கு
    3. இல்லை அம்மா...   இவர் வேறு.   பாரதியார் பற்றி கூட குறிப்புகள் எழுதி இருக்கிறார்.

      நீக்கு
  14. மாடு மாதிரி உடம்பு வளர்த்து பலர் ஊர் வலம் வருகிறார்கள். மண்டைக்குள் எதுவும் வளரவில்லை. அதற்கான ப்ரயத்தனமும் இல்லை. இத்தகையோர் விவாஹம் செய்தாலென்ன, பிறகு அதை ரத்து செய்தாலென்ன!
    ரத்துசெய்ய ஒரு வழியாக முடிவெடுத்து, செய்வதற்கு முன் குழந்தை ஒன்று இந்த அசடுகளுக்குப் பிறந்து, அது யாராலும் சரியாக நேசிக்கப்படாமல், வளர்க்கப்படாமல் திண்டாடுவதே அத்தகௌ மணமற்ற மணங்களின் பெரும் சோகம்.

    பதிலளிநீக்கு
  15. பதில்கள்
    1. திருத்தம் இல்லாமலேயே கண்கள் சரியாக படித்தன.

      ஆமாம்.  குழந்தைகள் பாடுதான் திண்டாட்டம்.  இப்போதும் ஒரு கேஸ் அப்படி பார்த்து வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

      நீக்கு

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!