25.10.26

நான் சென்ற அலுவலகப் பயணங்களில் கண்டவை - 05 பாலக்காடு:: நெல்லைத்தமிழன்

 

நான் டேடாமாஸ் என்ற கன்சல்டன்சி கம்பெனியில் செப்டம்பர் 1995ல் சேர்ந்தேன். அந்த கம்பெனியில் சுமார் 30 பேர்களுக்கு மேல் பணி புரிந்தோம். அதில் பலர், ஆன் சைட் சப்போர்ட் என்று சொல்லப்படுவது போல, அந்த அந்த கம்பெனிகளுக்கே நேரடியாக ரிப்போர்ட் செய்து வேலை பார்ப்பார்கள். வேலை பார்க்கும் கம்பெனியின் நேரத்தைத்தான் கடைபிடிப்பார்கள். ஒரு கம்பெனிக்கு, நல்ல ஆரக்கிள் ப்ரோக்ராம் டெவலப்பர்கள் மற்றும் சப்போர்டர்கள் தேவை என்றால் எங்கள் கம்பெனியைத் தொடர்பு கொள்வார்கள். அந்தக் கம்பெனி ஒருவருக்கு 1800-2000 தினார் மாதத்திற்குத் தருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதற்கான சரியான ஆட்களை source செய்து, இண்டெர்வியூ நடத்தி, பிறகு கம்பெனியின் I.T. துறை மேனேஜரும் ஏற்றுக்கொண்டபின், அவர்களை பஹ்ரைனுக்குக் கொண்டு வருவது எங்கள் கம்பெனி பொறுப்பு. மாதச் சம்பளம் இன்ன பிறவற்றைக் கொடுக்கும் பொறுப்பு எங்கள் கம்பெனியினுடையது. எங்கள் கம்பெனி சார்பாக, அந்தக் கம்பெனியில் வேலை பார்ப்பார்கள். அந்தக் கம்பெனி எங்கள் கம்பெனிக்கு பணத்தைச் செலுத்திவிடும். ஆள் சரியில்லை என்றாலோ, இல்லை கம்பெனியை விட்டு விலகிவிட்டாலோ, அடுத்த ஆளைத் தரவேண்டியது எங்கள் கம்பெனியின் பொறுப்பு. இந்த மாதிரி நிறைய பேரும், கம்பெனியின் சாஃப்ட்வேர் அப்ளிகேஷனை டெவெலப் செய்வது, சப்போர்ட் செய்வது, புது கம்பெனிக்கு இன்ஸ்டால் செய்வது என்று பலரும் இருப்பார்கள்.

ஒவ்வொருவரையும் தேர்ந்தெடுத்து பிறகு பஹ்ரைனுக்கு கொண்டு வந்து பயிற்சி தந்து அவர்கள் மூலமாக கம்பெனி லாபம் சம்பாதிக்கவேண்டும். கம்பெனிக்கு வந்து சில பல மாதங்கள் பணி புரிந்தபிறகு, பொதுவாக பலர் அமெரிக்க வேலை வாய்ப்பை நோக்கிச் செல்வர். அதிலும் Y2K எனப்படும் 21ம் நூற்றாண்டு ஆரம்பிப்பதால் செய்யவேண்டிய சாஃப்ட்வேர் மாற்றங்களால் நிறைய டெவலபர்கள் அமெரிக்க கம்பெனிகளுக்குத் தேவையாக இருந்தனர். (அதாவது அமெரிக்காவில் இருக்கும் கன்சல்டன்சி கம்பெனிகள்). அதனாலும் நிறைய ஆட்களை இண்டர்வியூ செய்து வேலைக்கு எடுப்பது அதிகரித்தது. சில நேரங்களில் இரண்டு மாதங்களுக்கு மூன்று பேர் ரிசைன் பண்ணிவிடுவார்கள். (இடையில் உடம்பு சரியில்லை என்று விடுமுறை எடுத்தாலோ இல்லை, போக வேண்டிய கம்பெனிக்கு போகாமலிருந்தாலோ, எங்கள் பொது மேலாளர்., அவர்கள் அமெரிக்கன் எம்பஸிக்குத்தான் விசா ஸ்டாம்ப் பண்ணச் சென்றிருப்பார்கள் என்று சொல்வார்).  நான் பல நாட்கள் இரவிலும் 11 மணி வரை வேலை செய்வேன். அதனால் என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியும்.

என்னுடன் பணியாற்றுபவர் பலரும், இரவில் அமெரிக்க வேலைக்காக டெலெபோன் இண்டெர்வியூ அட்டெண்ட் செய்வார்கள். இதைப் பார்த்த எனக்கு, நம்முடைய திறன் அல்லது மதிப்பீடு இப்போது எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்ளும் ஆசை வந்தது.  என்னுடன் கூட வேலை பார்ப்பவர்கள் போன வாரம் இண்டெர்வியூ அட்டெண்ட் பண்ணினேன், செலெக்ட் ஆகிவிட்டேன் என்று சொல்லும்போது என்னுடைய தகுதியையும் சோதித்துக்கொள்ளும் ஆசை வந்தது.  (இது நடந்தது 96-97 வாக்கில்)

ஒரு நாள் நான் கம்பெனியின் பொது மேலாளரைப் போய்ப் பார்த்தேன் (அவர்தான் கம்பெனியின் தலைவர்). அவரிடம், நான் நிச்சயம் அந்த கம்பெனியில் 3 வருடங்கள் வேலை பார்ப்பேன் என்றும், பஹ்ரைனிலேயே வேறு நல்ல வாய்ப்பு வரும்போது புதிய கம்பெனியில் நான் சேர, எனக்கு ‘ஆட்சேபணை இல்லை’ என்ற சர்டிபிடிகேட் தரவேண்டும் என்றும் சொன்னேன். நிச்சயமாக அமெரிக்காவிற்குச் செல்ல மாட்டேன், ஆனால் என்னுடைய தகுதியைச் சோதித்துக்கொள்ளும் ஆசை இருப்பதால் நானும் டெலெபோன் இண்டெர்வியூ அட்டெண்ட் செய்யும் எண்ணம் இருக்கிறது, எனக்கும் ஆஃபர் கிடைத்தது, ஆனால் நான் போகவில்லை என்று சொல்லத்தான் எனக்கு இஷ்டம் என்றேன்.  நானே நேரிடையாக அவரிடம் என்னுடைய நிலையைத் தெரிவித்துவிட்டதால், அவருக்கு என் மீது நல்ல நம்பிக்கை வந்தது. அவரிடம் சொல்லாமல் நான் டெலெபோன் இண்டெர்வியூ அட்டெண்ட் செய்தால், யாரேனும் அவரிடம் சென்று போட்டுக்கொடுக்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதாலும், எனக்கு அந்தக் கம்பெனியிலேயே அடுத்த மூன்று வருடங்கள் தொடரணும் என்ற எண்ணம் இருந்ததாலும், நானே சென்று பொது மேலாளரிடம் சொல்லிவிட்டேன்.

பிறகு இரவில், நானும் டெலெபோன் இண்டெர்வியூ அட்டெண்ட் செய்தேன். ஒரு சில கம்பெனிகளின் ஆஃபர் லெட்டர் வந்தது. அதிலும் ஒரு கம்பெனி, உடனே விசா ஸ்டாம்ப் பண்ணுங்க, நாங்களே ஓரிரு வருடத்தில் கிரீன் கார்டுக்கு அப்ளை செய்வோம் என்றார்கள். நான் ஆஃபர் லெட்டரை வாங்கி என்னுடைய personal fileல் வைத்ததோடு அமெரிக்க வேலையை மறந்துவிட்டேன். விசா ஸ்டாம்ப் செய்து, பிறகு நான் வரவில்லை என்று சொல்லி அவனுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடாது என்ற எண்ணத்தால்.

யாராவது அமெரிக்க வேலை வாய்ப்பை வேண்டாம் என்று சொல்லுவார்களா என நீங்கள் நினைக்கக் கூடும். என்னுடைய நெருங்கிய உறவினர்கள் பலர் (20-30 பேர் இருக்கலாம்) அமெரிக்கவாசிகளாக இருக்கிறார்கள். அவர்களில் சிலர் 60 வருடங்களுக்கு முன்பே சென்றவர்கள். இருந்தாலும் எனக்கு அமெரிக்காவில் வேலை செய்வதில் ஆர்வம் இருந்ததில்லை. ஏனோ.. அமெரிக்கா செல்லவேண்டும், சுற்றிப்பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் கூட வந்ததில்லை. அதைப்பற்றி எழுதினால் என் எண்ணம் தவறு என்று பலரும் நினைக்கலாம். எனக்கு என் கல்ச்சர், வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள இஷ்டமில்லை. நான் மாறமாட்டேன் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனால் பசங்களைப் பற்றிச் சொல்ல முடியாதல்லவா? அதனால் அமெரிக்கா போகவேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டேன். இப்படி எழுதுவதால், அமெரிக்கா சென்ற எல்லோருக்கும் கல்ச்சர் மாறிவிட்டது என்று அர்த்தம் இல்லை. அமெரிக்கா கனடாவில் நிறையபேர் நம்முடைய வாழ்க்கை முறையில் வாழறாங்க, ஆனால் அவங்க பசங்களும் அப்படியே இருப்பார்கள் என்று சொல்லமுடியாது. இருந்தாலும் என் எண்ணம் அப்படித்தான் இருந்தது.

நாம் ஒரு தேசத்தையும் இன்னொரு தேசத்தையும் நினைத்துக் குழப்பிக்கொள்ளக் கூடாது. ஒவ்வொரு நாடும் தன்னளவில் ஒரு கலாச்சாரத்தையும், வாழ்க்கை முறையையும், உணவுப் பழக்கங்களையும், கல்வி முறையையும் கொண்டிருக்கும். இது உயர்ந்தது, இன்னொன்று தாழ்ந்தது என்று சொல்வது சரியான செயல் அல்ல. ஒவ்வொரு தேசத்திற்கும் நேர்மறைகள் இருக்கும் எதிர்மறைகளும் இருக்கும். அமெரிக்கா மிகவும் நல்ல தேசம். அங்கு வாய்ப்புகள் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கிறது. நல்ல திறமை உள்ளவர்கள் எதிலும் முன்னேறும் வாய்ப்பு உண்டு. இருந்தாலும் என் எதிர்காலம் அமெரிக்காவில் இல்லை என்று நான் முடிவு செய்திருந்தேன். நான் பல தேசங்களுக்கும் பயணப்பட்டு, அங்குள்ள வாழ்க்கை முறைகளையும் சிறிது தெரிந்துவைத்துள்ளதால், எனக்கு எது சரி என்று தெளிவாக இருந்தேன். அவ்ளோதான்.

அது சரி.. இந்த Y2K பிரச்சனை என்றால் என்ன என்று தெரியுமா? பலருக்கும் தெரிந்திருக்கும். கணிணியில் தேதியைக் குறிக்க, dd-mm-yy என்ற முறை வைத்திருப்பார்கள். ஆரம்ப காலத்திலிருந்து கிபி 2000க்கு அப்புறம் எப்படிக் குறிப்பது என்ற யோசனையே யாருக்கும் எழவில்லை. ரொம்ப தாமதமாகத்தான் (அதாவது 1990களுக்குப் பிறகு) 2000 வந்துவிட்டால் என்ன செய்வது, எல்லா சாஃப்ட்வேர்களையும் மாற்றவேண்டுமே, இன்னும் பல இடங்களிலும் மாற்றவேண்டுமே என்ற எண்ணம் வந்தது (அப்படி மாற்றாவிட்டால், ஜனவரி 1, 2000ம் ஆண்டை கணிணியில் 01-01-00 என்று குறிப்பிடவேண்டியிருக்கும். பிறகு இந்த 00, 1900வா இல்லை 2000மா என்ற பெரும் குழப்பம் வரும். இது மாத்திரம் அல்ல. வேறு பல குழப்பங்களும் உண்டு).  அதனால் எல்லா சாஃப்ட்வேர்களிலும் இந்த மாற்றத்தைச் செய்தாகவேண்டிய நிலையில் இருந்ததால், டெவெலப்பர்களுக்கு ஏக டிமாண்ட். அதுமட்டும் அல்லாமல், கன்சல்டன்சி கம்பெனிகளுக்கும் பணம் பண்ண நிறைய வாய்ப்பு. இந்தக் காரணத்தினால் அந்தக் காலகட்டத்துல நிறையபேருக்கு வேலைவாய்ப்பு பல்வேறு தேசங்களில் கிடைத்தது.

இன்றைய டாபிக் ரொம்பவே போரடித்திருக்குமோ என்ற சந்தேகம். இனி புகைப்படங்களைப் பார்க்கலாம்.

 

 

 

 

 

நாங்கள் வார நாளில் காலையில் சென்றதால் கூட்டம் இல்லை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்தவகைப் புல்வெளி, செயற்கை. இத்தாலியிருந்து முதலில் இந்தியா வந்தது என்று நினைவு. நான் 89களிலேயே கெம்ப்ளாஸ்டில் இத்தகைய புல்வெளியைப் பார்த்து வியந்திருக்கிறேன்.  (அப்போ வேலை செய்த இடதிற்கு இப்போது சென்று அங்கு கேண்டீனில் சாப்பிட்டால், அதே ருசி இருக்குமா என்று யோசிக்கிறேன்)

 

இந்தப் பூவின் பெயர் என்ன? நான் தாய்லாந்தில் பல இடங்களில் பெண்கள் (வேற என்னத்தை நீ கவனிச்சிருப்ப என்று நீங்கள் நினைப்பது என் காதில் விழுகிறது) இதனை அணிந்திருந்ததைப் பார்த்தேன். மிக அழகா இருந்தது, அந்தப் பூக்கள் (ளை அணிந்தவர்கள்னு எழுத வரலை)

 

 

 

இன்று படங்களும் கதையும் அதிகமாகிவிட்டதோ?  அடுத்த வாரம் தொடர்வோம்.

(தொடரும்) 

=====================================================================================\


மனசாட்சியம் - 2​4
KGY Raman

"தங்கமும் நானும் "

இந்தத் தலைப்பை ஒரு முறை படித்துப் பார்த்தபோது எனக்கே சற்று விசித்திரமாகப்பட்டது.‌ பார்க்கிற யாரும் தங்கம் என்பது எனது பக்கத்து வீட்டு அழகியின் பெயர் என்று கூட நினைக்கக் கூடும்.  (அந்த அழகியின் பெயர் தங்கம் அல்ல.)  என் அபிமான எழுத்தாளர் தி ஜானகிராமனின் " மோகமுள் " நாவலில் தங்கம் என்ற பெயரில் அடுத்தாத்து அதிர்ஷ்டக்கட்டை அழகி ஒருத்தி வருகிறாள். 

எல்லாராலும் விரும்பப்படும் ஆபரணத் தங்கத்தைத் தான் தலைப்பிலே குறிப்பிட்டிருக்கிறேன்.

எனக்கு விவரம் தெரிகிற வயது வந்த போது இரண்டாவது உலகப் போர் மும்முரமாக நடந்து கொண்டிருந்த டிப்ரஷன் காலம். மக்கள் வாழ்வின் அடிப்படைத் தேவைகளுக்கும் வேலை வாய்ப்புக்கும் திண்டாடி அலைந்து கொண்டிருந்த காலம். 

ஆனால் என் தந்தை வசதியான மிராசுதார் குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய இளம் வயது,  பொன் பொருள், நிலம் நீச்சு (?) மாடு கன்றுகள் என்று செழிப்பாக வாழ்ந்த காலம்.

நான் இரண்டாவது உலகப் போர்  ஆசாமி என்றால், அப்பா முதல் உலகப்போருக்கு முன்பாகவே பிறந்தவர். தங்கம் விலை கிடு கிடு என்று ஏறி சவரன் ₹ 13.00 க்கு வந்ததாம்.  (அப்படியானால் அதற்கு முன்பு இருந்த மலிவு விலை என்ன என்று அப்போது  எனக்குக் கேட்கத் தோன்றவில்லை.)

தாத்தா வீட்டில் ஒரு அவசரத் தீர்மானம் போடப்பட்டதாம்.  " இதற்கு மேலும் தங்கம் விலை உயராது. இப்பவே வீட்டில் இருக்கிற அதிகப்படி நகைகளை விற்று பணமாக மாற்றி வைத்துக் கொண்டு விடலாம். விலை இறங்கிய பின் நல்ல லாபத்துக்கு திரும்ப வாங்கிக் கொள்ளலாம்." 

இப்போது வேண்டுமானால் இது மிகவும் தவறான தீர்மானம் என்று சொல்லலாம். ஆனால் அந்தக் குறிப்பிட்ட நாட்களில் அது தவறாகப் போகக்கூடும் என்று கூட யாரும் நினைக்கவில்லை. 

நகைகளை புளி. எடை போடுகிற தராசில் வைத்து நிறுத்து தங்கத்தின் எடையை முடிவு செய்து, அந்த அடிப்படையில் பக்கத்து ஊர்ப் பெரிய மனிதர்களுக்கு நகைகளை விற்று விட்டார்களாம்.  பிறகு ரொம்பவே வருத்தப்பட்டு இருப்பார்கள். ஆனால் அது பற்றிய அப்பா என்னிடம் எதுவும் சொன்னதில்லை. 

" சரி , நகை விற்ற பணம் இருக்கிறது. நிலமாக வாங்கிப் போடுவோம் " என்று தாத்தா நினைக்கவில்லை. திறந்த வெளியில் வைத்த கற்பூரம் போல பணம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து முற்றிலும் மாயமாகிப் போனதுதான் நிஜம்.

மீண்டும் என் இளமைக்  காலத்திற்கு வருகிறேன்.
வீட்டிலே ஜனத்தொகை கணிசமாக இருந்த நாட்கள். மிகச் சாதாரணமான உத்தியோகம். மிகச் சொற்பமான வரும்படி.
உடைக்கும் உணவுக்கும் போராடிக் கொண்டிருந்த அந்தக் காலத்தில் நகை நட்டு பற்றி சிந்திக்க நேரமில்லை.  உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நகை என்பதே ஒரு அனாவசிய ஆடம்பரம் என்பதே எனது கொள்கையாக இருந்தது. அப்போது சவரன் விலை 72 ரூபாய். 

எனக்கு வேலை கிடைத்து திருமணமும் ஆனபின், தங்கம் பற்றிய என் கொள்கையில் ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டது. காரணம் மனைவி பழைய நகையை மாற்றி புதிதாக கனமாக செய்து கொள்ள வேண்டும் என்று நியாயமாக ஆசைப்பட்டது தான். அதற்கு குறி வைத்து ஒரு மாதிரியாக லட்சியத்தை நிறைவேற்றினேன். 

எனது Gold policy இதற்கு ஏற்ப மாறிப்போனது. இப்போது " நகைகள் பெண்களுக்குத் தேவைதான். அவர்களின் நகை ஆசைகள் புரிந்து கொள்ளக் கூடியவை. ஆனால் ஆண்களுக்கு தங்க நகை அது ஒரு மோதிரமாகவே இருந்தாலும் கூட தேவையற்றது." 

என் நண்பர் ஒருவர் கையில் ராட்சத சைஸில் மோதிரம் போட்டிருப்பார். இரண்டு மூன்று மோதிரங்கள் அணிந்து லட்சுமி கடாட்சத்தை பெருமை அடித்துக்கொண்ட வேறு சில நண்பர்களும் உண்டு. 
" ஏதோ புது இடத்திலே சொந்த பந்தம் இல்லாத ஊரிலே ஒரு சங்கடத்தில் மாட்டிக் கொள்கிறீர்கள் என்றால் கையில் இருக்கிற மோதிரம் உதவிக்கு வரும் அல்லவா ? " என்று தர்க்க ரீதியாக அவர் சொன்னதை ஏற்று நானும் ஒரு பவுன் மோதிரம் ஒன்று கைகளில் கொஞ்ச நாள் அணிந்து இருந்தேன். அவசர ஆத்திரத்திற்கு உதவும் என்பதால் என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டு என் கொள்கையில் வேண்டிய மாற்றங்களைச் செய்து கொண்டேன்.

இரு பெண் பிள்ளைகள் பிறந்ததும் தங்க நகை சேமிப்பின் மகத்துவம் புரிந்தது. அந்தக் காலத்தில் நகை நட்டு இல்லாமல், வரதட்சணை கொடுக்காமல், கல்யாணம் செய்வது என்பது கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. எனவே இப்போது தங்க நகை சேர்க்கும் ஆசை இருந்ததே தவிர வசதி இல்லை. 

அரசு ஊழியர்களுக்கு உரிய பிராவிடண்ட் ஃபண்ட் கடன் மற்றும் முன்பண வசதிகளை உபயோகித்து தேவையான அவசிய பொருட்களை வாங்க முடிந்தது தவிர நகை வாங்க வாய்ப்பில்லை. ஆரம்ப காலங்களில் வந்த ஒரே ஒரு வாய்ப்பு என் அபிமான தங்க நகை விற்பனையாளர் கொடுத்த ஆலோசனையால் பயனின்றி போனது. ஐந்து பவுன் நகை செய்ய பணத்துடன் போனபோது " பவுன் 150க்கு விற்கிறது. ஆடி மாதம் வாருங்கள். விலை குறையும். " என்று சொல்லி என்னைத் திருப்பி அனுப்பி விட்டார். என் தாத்தாவுக்கு நடந்தது எனக்கும் நடந்து விட்டது. பணம் கரைந்து போனது. பிறகு நாட்கள் கழித்து இரட்டிப்பு விலையில் மீண்டும் சொத்து சேர்த்தோம். 

இதற்குப்பின், எனக்கும் தங்கத்துக்கும் உள்ள உறவு சுமுகமாக நன்றாகவே இருந்து வருகிறது. அதுவும் நமது  நெருங்கிய சொந்தங்களுக்கு நாம் அளிக்கிற பொன் பரிசுகள் மிகவும் மதிப்பு வாய்ந்தவையாக மாறும்போது ஏற்படும் மகிழ்ச்சி அலாதியானது.

45 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். எல்லோரும் நலமுடன் இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா. எல்லோரும் நலம் வாழ நாம் பாடுவோம்.

      நீக்கு
  2. அந்த மரம் டெம்பிள் டிரீ. அந்தப் பூக்களின் வாசம் அளவிட முடியாதது. மயக்கும். எங்கள் வீட்டில் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த வாசனையை கொஞ்சம் மெயிலில் அனுப்புங்களேன்..!!!\

      நீக்கு
    2. இந்த வெள்ளை வண்ண அழகுப் பூக்கள் நாங்கள் இருக்கும் இடத்திலும் இருக்கிறது. இது கொஞ்சம் சின்ன சைஸ். ஹவாய் தாய்லாந்து பெண்கள் அணிந்து கொள்வது கொஞ்சம் பெரிதாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவை எளிதில் வாடாத வகையை சேர்ந்தவை என்று தோன்றுகிறது. ஒருவேளை ஆர்கிட் என்கிறார்களே அந்தப் பூவாக இருக்குமோ ?

      நீக்கு
    3. வல்லிம்மா. அதில் மூன்று வகைகள் பார்த்திருக்கிறேன், வெள்ளை, மஞ்சள் நிறம் சேர்ந்தது, சிவப்பு, வயலட். இங்கு எங்கள் வளாகத்திலேயே உண்டு. நான் ஏதேனும் சொன்னால் புகைப்பட ஆதாரம் வைத்திருப்பேன்... பார்க்கிறேன் தாய்லாந்து ரிசப்ஷனிஸ்ட் அல்லது மற்றப் பெண்களை புகைப்படம் எடுத்திருக்கிறேனா என்று. புதனில் பகிர்கிறேன்.

      நீக்கு
    4. //வாசனையை கொஞ்சம் மெயிலில்// அல்லது நீங்கள் தாய்லாந்துக்குச் சென்று அதனை (வாசனையை... ) அனுபவிக்கலாம். அதுவே பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா என்ற கேள்விக்கும் பதில் கூறலாம்

      நீக்கு
    5. எங்க வீட்டிலும் இருந்தது இந்த மரம்.

      நீக்கு
  3. அமெரிக்காவில் குழந்தைகள் தமிழ் கற்கிறார்கள். கோவிலில் பாடுகிறார்கள். நாட்டியம் கற்கிறார்கள். தியாகராஜ உத்சவம் நடக்கிறது. இந்த இல்லினாய்ஸ் மாகாணத்தில் 40 இந்துக் கோவில்கள் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவேளை அம்மா..  அது பின்னாளில் ஏற்பட்ட மாற்றங்களோ என்னவோ  அப்போதைய நிலைமை கவலைப்படத்தக்கதாய் இருந்திருக்கலாம்.  மாற்றங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் வந்திருக்கலாம்.

      நீக்கு
    2. வல்லிம்மா..உண்மைதான். என் மாமா 60களில் சென்றபோது, பிட்ஸ்பர்க் வெங்கடேஸ்வரா கோயில் பற்றி பின்னாட்களில் சொல்லியிருக்கிறார். பிறகு நிறைய மாற்றங்கள், அதாவது நிறைய கோயில்கள், விழாக்கள்..... ஏன் நானிருந்த பஹ்ரைனிலேயே கிருஷ்ணர் கோயில் இருந்தது. துபாயில் கேட்கவே வேண்டாம், மூன்று கோயில்கள் அந்தக் காலத்திலேயே. வெள்ளிக்கிழமையில் இலவச பிரசாதம் வேறு

      நீக்கு
    3. ஸ்ரீராம்... கவலைப்படத்தக்கதாக நிலைமை இருந்ததில்லை. கோயில்கள் அப்போதே உண்டு. இருந்தாலும், நம் பசங்க, நம்மிடம் இருப்பதை விட, வெளியில் பன்னாட்டு மாணவ நண்பர்களுடன் மிக அதிகமாக இருப்பாங்க. அதனால் அவங்களுக்கு இரு கலாச்சார அதிர்வுகள், அதிர்ச்சிகள் இருக்கும் இல்லையா? மேற்கத்தைய நாடுகளில் (ஐரோப்பாவிலும்) நம்மாக் நம் குழந்தைகளைக் கட்டுப்படுத்துவது கடினம் என்ற எண்ணமும் என்னுள் ஆழப்பதிந்திருந்தது

      நீக்கு
    4. ரொம்பவெல்லாம் குழந்தைகளைக் கண்டித்தால் அங்கே எல்லாம் குழந்தைகளே போலீஸுக்குச் சொல்லிடுவாங்க என்பார்கள். ஒரு சின்னத் தாய்ப்பால் குடிக்கும் குழந்தையைக் கொடுமைப் படுத்திட்டதாகச் சொல்லிச் சில காலம் முன்னர் இந்தியப் பெற்றோரிடமிருந்து அரசு குழந்தையைப் பிரித்து வைத்திருந்ததாகப் பத்திரிகைச் செய்திகளில் பார்த்திருக்கோமே!

      நீக்கு
  4. தமிழ் மன்றம்,கேரள சமாஜ், கர்னாடகா மஹிளா மண்டலி, எல்லாம் இருக்கின்றன. பெற்றோர்கள் நல்லவர்களாக இருந்தால் வளர்ப்பு முறையும் சரியாக இருந்தால் குழந்தைகள் நன்றாகவே இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  பெற்றோர் சரியாக  வளர்த்தால் பிரச்னை இருக்காது.  இப்போது அமெரிக்காவில் இருக்கும் நமக்குத் தெரிந்த குடும்பங்கள் யாவும் இங்கு இந்தியாவில் இருப்பவர்களைவிட நம் முறைகளை நன்றாகக் கடைப்பிடிக்கிறார்கள். 

      நீக்கு
    2. ஆமாம். உண்மை. அருமையான கருத்து. இதற்கு உதாரணம் நம் சகோதரி கோமதி அரசு அவர்களின் அன்பான மகன் குடும்பம். அனைத்து இந்திய கலாசாரங்களையும் அழகாக பின்பற்றி ஒவ்வொரு பண்பாட்டு விழாக்களையும் சிறந்த முறையில் கொண்டாடி நமக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு எப்போதும் என் இதயபூர்வமான நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.

      நீக்கு
    3. வல்லிம்மா... உங்க கண்ணோட்டம் சரிதான். இருந்தாலும் நான் நினைத்தது, என் குழந்தைகளுக்கு அடுத்த தலைமுறையை (ஏண்டா..நீயே இருக்கப்போறதில்லை. உனக்கு எதற்கு அடுத்த அடுத்த தலைமுறை பற்றிக் கவலை? என்று நினைப்பது சரிதான். ஆனால் வீழ்ச்சிக்கு நான் காரணமாக இருக்கக்கூடாது என்று நினைத்தேன்)

      நீக்கு
    4. //அமெரிக்காவில் இருக்கும் நமக்குத் தெரிந்த குடும்பங்கள் யாவும் இங்கு இந்தியாவில் இருப்பவர்களைவிட// ஓரளவுக்கு உண்மைதான். இருந்தாலும் எனக்கு நிறைய உறவினர்கள், நண்பர்கள்-அதாவது தெரிந்தவர்கள் மேற்கத்தைய நாடுகளில் இருக்கின்றனர். பலர் வீட்டிலும் நீர்த்துவிட்டது. ஆனால் வேர், மிக மிக ஆச்சாரமாக இருந்த குடும்பங்கள்.

      நீக்கு
    5. கமலா ஹரிஹரன் மேடம்.... நான் எழுதும்போது கோமதி அரசு அவர்களின் குடும்பமும் நினைவில் வந்துபோனது. அதிரடி அதிராவும் கேனடாவில் கோயில் திருவிழாக்களில் கலந்துகொண்டதை எழுதியிருந்ததும் நினைவுக்கு வந்தது. என் மகள், என்னப்பா..இங்க வந்தாலும் ச்ராத்தம் செய்வதற்கு வசதி இருக்கிறது என்று சொன்னதும் நினைவுக்கு வந்தது. ஜீவி சார் அருமையான கல்வி முறைகள் வசதிகள் பற்றி எழுதியிருந்தாரே தவிர கலாச்சாரம் பற்றி எழுதிப் படிக்கலை. பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம் குடும்பமும் விதிவிலக்குகளில் இருக்கும் என்றே நம்புகிறேன். ஆனால் உதாரணங்கள் எல்லாமே முதல் மற்றும் இரண்டாவது தலைமுறைதான் என்பதை நினைவில் வைக்கணும்.

      இருந்தாலும், அந்த உதாரணங்கள் நூற்றில் பத்து என்பது என் எண்ணம்.

      நீக்கு
  5. நம் ஊரில் வளரும் குழந்தைகள் எல்லா விதத்திலும் இருக்கிறார்கள். எல்லா விதமாகவும் திருமணங்கள் நடக்கின்றன.I would not generalize any civilization. It depends upon so many factors.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் நெல்லைத்தமிழனின் அப்போதைய கவலையும் அக்கறையும் புரிகிறது.  இதற்காக அதிக சம்பளம் கூட என்று வேண்டாம் என்று அவர் எடுத்த முடிவும் ஆச்சரியப்பட வைக்கிறது.  பாராட்டத் தோன்றுகிறது.

      நீக்கு
    2. வல்லிம்மா... நீங்கள் எழுதியிருப்பது உண்மை. நிறைய காரணிகள் இருக்கின்றன. வளர்ப்பு, குடும்பம்-இதற்கு பெரிய முக்கியத்துவம் உண்டு. குலம் என்பது அவ்வளவு முக்கியம் வாரிசுகளின் குணத்திற்கு. இதனை சாதியுடன் சம்பந்தப்படுத்தாதீர்கள்.

      இருந்தாலும், நாம் (இந்தியாவில் பிறந்து இங்கேயே வளர்ந்து), நம் பெற்றோர் போல இல்லை, நீர்த்திருக்கிறோம். நம் பெற்றோர் அவர்கள் பெற்றோர் போல இல்லை, நீர்த்திருந்தனர். இந்தியாவிலேயே இப்படி என்னும்போது, வெளிநாட்டில் இன்னும் வேகமாக நீர்த்துப்போகும் என்பது என் நம்பிக்கை. (விதிவிலக்குகளை நாம் உதாரணமாகக் கொள்ள வேண்டாம்)

      நீக்கு
    3. //இதற்காக அதிக சம்பளம் கூட என்று வேண்டாம் என்று அவர் எடுத்த முடிவும் // வாங்க ஸ்ரீராம்... அது ஒரு பெரிய காரணியாக நான் நினைக்கவில்லை. ஆனால் வேலை எப்போதும் நிச்சயமாக இருக்கவேண்டும், நல்ல சூழல் இருக்கவேண்டும், அமைதியான குடும்பமாக இருக்கணும் (பக்தியுடன், நம் கலாச்சாரத்துடன்) என்பதுதான் எனக்கு முக்கியமாகத் தோன்றியது.

      எல்கேஜியில் என் மகளின் ஆசிரியை, அவருக்கு ஒரே பெண் குழந்தை என்பதால், ஸ்லீப் ஓவருக்கு என் மகளை வார இறுதியில் வரச் சொன்னபோது நான் சொன்ன பதில் NO NO ஹா ஹா ஹா

      நீக்கு
  6. மீண்டும் காலை பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்க்கலாம் வல்லிம்மா.. நான் எழுதிய கருத்தில் குறை இருந்தாலும் சுட்டிக்காட்டத் தவறாதீர்கள்

      நீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். பிரார்த்தனைக்கு நன்றி

      நீக்கு
  8. பதில்கள்
    1. சரணம் சண்முகா. வாங்க துரை செல்வராஜு சார்... நலமா? நிறைய நாட்கள் உங்களைக் காண முடிவதில்லையே. செல்போன் பிரச்சனை தீர்ந்ததா?

      நீக்கு
  9. பதிவின் படங்கள் அழகு..
    அருமை...

    பதிலளிநீக்கு
  10. சில லட்சியங்களை விடாமல் வைத்துக் கொண்டு நண்பர் நெ.த இருப்பது எனக்கு ஒரு மகிழ்ச்சியைத் தருகிறது. என்றாலும் எல்லாமே காலப்போக்கில் மாறித்தான் போகும் என்கிற இயற்கை விதிக்கு ஏற்ப நாம் விடாப்பிடியாக வைத்திருக்கும் நம்பிக்கைகளும் கொள்கைகளும் கூட கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் அடையலாம். அவை யாவும் இப்போதே கூட மிகவும் மாற்றம் அடைந்த நிலையில் தான் நமக்கு வந்திருக்கிறது என்றும் நான் நினைக்கிறேன்.

    பாலக்காடு படங்கள் எப்போதும் போல் அருமையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கேஜிஒய் சார்... விடாப்பிடியாக வைத்திருக்கும் நம்பிக்கைகளும் கொள்கைகளும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் அடையும். நாமுமே நம் பெற்றோரை விட, சிறு வயதில் வளர்ந்த சூழல் நம்பிய விஷயங்களைவிட நிறைய மாறியிருக்கிறோம். இது பற்றி நிறைய எழுதினால் தவறாயிடுமோ என்ற அச்சம் இருக்கிறது.

      ஆனால் பாலில் தண்ணீர் சிறிது கலப்பதற்கும் தண்ணீரில் பாலைக் கலப்பதற்கும் வேறுபாடு உண்டல்லவா?

      நீக்கு
  11. இங்கு கலாச்சாரங்களைப் பின்பற்றுபவர்களுக்கு வழிகாட்டுபவர்களை விட குழப்பி விட்டு கலகம் செய்பவர்கள் அதிகம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை செல்வராஜு சார்... நான் குழம்பாமல் இருக்கிறேன். எதை என் அப்பா, பெற்றோர் கடுமையாக விரும்பமாட்டார்கள் OBJECT செய்வார்களோ அதனை நான் செய்வதில்லை, வீட்டிலும் அதே நடைமுறைதான். எனக்கு அடுத்த தலைமுறை, அதில் மாற்றம் செய்யணும் என்று சொன்னால், அதை உங்கள் வீட்டில் செய்துகொள்ளுங்கள் என்றே சொல்லிவிடுகிறேன்.

      நீக்கு
  12. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    இன்றைய பதிவும் அருமையாக உள்ளது. பணியாற்றிய தங்கள் கம்பெனி மீது தாங்கள் கொண்ட தங்களின் அக்கறையும், பொறுப்புத்தன்மையும், நேர்மையும் ஆச்சரியப்பட வைக்கிறது. பொதுவாக எல்லோரும் மேல்நாட்டுக்குச் செல்ல மிக ஆசைப்படுவார்கள். மேல்நாட்டு படிப்பு, வேலை, அங்கேயே நிரந்தரமாக வாழும் வாழ்க்கை கிடைக்காதா என ஏங்குபவர்கள்தான் அதிகம். தாங்கள் கிடைத்த வாய்ப்பையும், புறக்கணித்து... உண்மையிலேயே உங்களின் பெருந்தன்மையாக பிற்காலத்தை பற்றி சிந்திக்கும் மனப்பான்மைக்கு ஒரு சல்யூட் வைக்கத் தோன்றுகிறது. .(ஆனால், தங்கள் குழந்தைகளுக்கு, அவர்களுக்கு விபரங்கள் தெரிந்த பின் வருத்தப்பட்டிருப்பார்களோ என்னவோ.?) கிடைப்பதை புறந்தள்ளுவதும், கிடைக்காதற்காக ஏங்கும் மனித இயல்பென்பதையும் "அவன்" வகுத்துத்தானே அனுப்பியிருக்கிறான் என்றுதான் எனக்கு எப்போதும் தோன்றும். எல்லாம் "அவன்" செயல்.

    பாலக்காடு படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. பெண்கள் தலையில் வைத்துக் கொள்ளும் மலர்கள் என்பதால், மலர்கள் மணம் வீசுகின்றன . (மனதில்) வல்லிசிம்ஹன் சகோதரியும் சொல்லி விட்டார். நான் கூட இறைவனுக்குச் சூடும் வெள்ளை நந்தியாவட்டை என நினைத்தேன். அத்தனைப் படங்களும், அலுவலக விபரங்களும் பார்க்கப் படிக்க நன்றாக இருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம்.

      என்னவோ தெரியலை 88லிருந்து எனக்கு மேல் நாட்டிற்கு வேலைக்குச் செல்ல ஆசை. 93ல்தான் அது சாத்தியமாயிற்று. 93லிருந்து 25 வருடங்கள் நான் கல்ஃபில்தான் இருந்தேன். (துபாய் பஹ்ரைன்)

      நிரந்தரமாக எங்கேயும் தங்க ஆசைப்படலை. இந்தியாவிற்கு வருவதுதான் என்னுடைய எண்ணமாக இருந்தது.

      குழந்தைகள் என்று எழுதியிருப்பதால் இதனை எழுதுகிறேன். தவறாக நினைக்க வேண்டாம். எளிதாக என்னால் அவர்களுக்குச் செய்ய முடிந்ததை நான் செய்ததில்லை. காரணம் சுகம் அவர்களுக்கு பழகிவிடக் கூடாது என்று. இப்போதும் அவர்களுக்கு அந்தக் குறை இருக்கிறது, வெளிப்படையாக என்னிடம் சொல்வார்கள், கிண்டல் பண்ணுவாங்க.

      இயல்பாக குழந்தைகளுக்கு பிட்சா சாப்பிடுவது, ஐஸ்க்ரீம், பெரிய மால்களுக்குப் போய் அங்கு விளையாடுவது (காசு கொடுத்து), காரில் தினமும் பள்ளிக்குச் செல்லணும் என்ற ஆசைகள் உண்டு. இதெல்லாம் எனக்கு ஜுஜுபி என்றாலும் செய்ததில்லை. ஹாஹா.

      நான் செய்ததில், என்னடா மாதம் நாலு பவுன்களை வாங்காமல் விட்டுவிட்டோமே என்பது மாத்திரம்தான் வருத்தமாக (அதை தவறவிட்ட வாய்ப்பு என்று அர்த்தப்படுத்திக்கொள்ளுங்கள்) இருக்கு.

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    இன்றைய மனசாட்சியம் பகுதியும் அருமை. தங்கத்தின் மகிமை பற்றி அப்போதுள்ளவர்கள் அறிந்து கொள்ளவில்லையோ என நானும் அப்போது அவ்வப்போது எண்ணுவேன். எங்கள் அம்மாவும் அவர்கள் இளவயது காலத்தில் ஒரு பவுன் 13 ரூபாய் என சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அந்த ரூபாயின் மதிப்பையும் அவர்கள் கதை கதையாக கூறும் போது அன்றைய தங்கத்தின் விலையும் எவ்வளவு உயர்ந்தது எனபதையும், விபரம் அறிந்த வயதில் புரிந்து கொண்டேன். காலணா, அரையணா,போன்றவற்றின் பெருமைகளை அவர்கள் விவரிக்கும் போது அக்காலத்தவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும். சகோதரர் திரு ராமன் அவர்களின். அக்காலத்திய எண்ணங்களான கட்டுரை நன்றாக உள்ளது. படித்தேன். ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. இன்றைக்கு கேஜிஒய் அவர்கள் எடுத்துக்கொண்ட டாப்பிக் என்னைக் கடுப்பேற்றும் டாப்பிக். இது பற்றி விளக்கமாக எழுதினால்தான் புரியும். என் ஐபேடில் பதில் கொடுக்க இயலவில்லை. அதனால் இன்று புதிய வழக்கமாக காலையிலேயே லேப்டாப்பில் கருத்து எழுதறேன். இனித்தான் தாய் சீ உடற்பயிற்சி 45 நிமிடங்கள் செய்ய ஆரம்பிக்கணும். நடை ஓவர்.

    ஒன்று மாத்திரம் நிச்சயம். பிறக்கும்போதே ஒவ்வொருவரும் எவ்வளவு சம்பாதிக்கணும், எவ்வளவு asset வாங்கணும் என்று தலையில் எழுதிக்கொண்டே பிறப்பார்கள். அதற்கு மேல் எதையும் வாங்க இயலாது அல்லது மீறி வாங்கினால் அழிந்துபடும்.

    இதனை கிராமத்தில், எவ்வளவுதான் எண்ணெயைத் தடவிக்கொண்டு விழுந்து புரண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும் என்று சொல்வார்கள்

    பதிலளிநீக்கு
  15. இதனை எழுதினால் அலட்டுவதாக அமையுமோ என்ற அச்சமும் உண்டு. உண்மையை எழுத நினைக்கிறேன். எனக்கு, எதனாலோ தெரியவில்லை, ஒரு கொள்கை சிறிய வயதிலிருந்தே இருக்கிறது (ஒன்றா. பல கொள்கைகள் அல்லவா? அதனால் நான் கஷ்டப்படுவதை யாரிடம் சொல்வது என்று மனைவி நினைப்பாரோ என்னவோ). எந்தக் காரணம் கொண்டும் கடன் வாங்கக்கூடாது, கிரெடிட் கார்டில் (அதாவது எதிர்கால பணத்தை நினைத்துக்கொண்டு) பொருட்கள் வாங்கக்கூடாது. இதனால் இப்போது நினைத்துப்பார்க்கும்போது நான் இழந்தது அதிகம், ஆனால் ஒரு வேளை என் வாழ்க்கை மாறிப்போயிருந்தால் அப்போது, ஏண்டா அந்தக் கொள்கையைப் பின்பற்றாமல் விட்டோம் என்று நினைத்துக்கொண்டிருப்பேனோ என்னவோ.

    நான் 25 வருடங்கள் வாழ்ந்தது வரி இல்லாத இடங்கள். என் அப்பா, அவர் திருமணத்துக்கு நகை என்ன வேண்டும் என்று அவருடைய மாமனார் வீட்டில் ரொம்பக் கேட்டபோது, வாட்ச் செயின் தங்கத்தில் வேண்டும், வேறு நகை நான் போட்டுக்கொள்வதில்லை என்றாராம். அந்த செயினை நான் பார்த்திருக்கிறேன்.

    அதனால் துபாயில் முதன் முதலில் நான் வாங்கியது கிராம் 35 திர்ஹாமில், ப்ரேஸ்லெட் (அது 20 கிராமுக்கு மேல் இருக்கும். பார்க்கணும்). அதற்கு முன்பு, எனக்கு ஒரு கம்பெனியில் மேட்டூரில் வேலை கிடைத்தபோது முதன் முதலில் மூன்று மாத சம்பளத்தைச் சேர்த்து ஒரு நவரத்ன மோதிரம் 10 கிராமுக்கு வாங்கினேன்.

    வெளிநாட்டில் இருந்தபோது ஏன் நிறைய தங்கம் வாங்கவில்லை என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை. நினைத்தால் எரிச்சலாக இருக்கும், மாதம் மூன்று பவுன்கள் வாங்கியிருந்தாலும் அது எனக்கு பண விஷயத்தில் ஒரு பாதிப்பும் உண்டாக்கியிருக்காது. என்னவோ வாங்கவில்லை.

    என் அம்மா 2012ல் இரண்டாவது முறை வந்திருந்தபோது, பெண் குழந்தையை வைத்துக்கொண்டு தங்கம் வாங்காமல் இருக்கிறாயே என்று கடிந்துகொண்டார். அவரையும் கூட்டிச் சென்று தங்கம் வாங்கினேன். அப்போது விலை கிராம் 135 திர்ஹாம். அப்போதும் நான் மாதம் நான்கு சவரங்கள் வாங்கியிருந்தாலும் எனக்கு பணப் பிரச்சனை இருந்திருக்காது, அதாவது இந்த மாதம் இவ்வளவு செலவழித்துவிட்டோமே என்ற எண்ணமே வந்திருக்காது.

    கடைசியாக நான் தங்கம் வாங்கினபோது கிராம் 220 திர்ஹாம். அது 2017ல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சவரன்கள் என்பது 8 கிராம். பொதுவா வெளிநாட்டில் ஒரு பவுன் என்றால் பத்து கிராம். நான் உறவினர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஒவ்வொரு முறை வரும்போதும் அவர்களுக்கு தங்கம் வாங்கிக் கொடுத்திருக்கிறேன் (அவர்கள் பணத்தில்தான்). அப்போதும் எனக்கு வாங்கிக்கணும் என்ற எண்ணம் இல்லை.

      ஆனால் எனக்கு எப்போதுமே, கட்டை விரல் தடிமனில் கழுத்தில் ஒரு செயின் (நீங்க ரவுடிகள் கழுத்தில் அந்த முறுக்கு செயினைப் பார்த்திருப்பீங்க) வாங்கிக்கணும் என்று ஆசை. மனைவி அனுமதி தரலை.

      நீக்கு
  16. முதன் முதலில் என் மாமனார், பெங்களூரில் எனக்கு மாநகராட்சி ஏலத்தில் கலந்துகொண்டு வீட்டிற்கு இடம் வாங்கலாம் என்றார். நான் அவரிடம், எந்தக் காரணம் கொண்டும் கடன் வாங்க மாட்டேன், என்னிடம் இதுதான் இருக்கிறது, இதற்கு இடம் வாங்குங்கள் என்றேன். அவர் எவ்வளவோ சொன்னார், வங்கியில் கடன் வாங்கினால் 1 கிரவுண்ட் அல்லது அதற்கு மேலும் வாங்கலாம் என்று. நான் கேட்கவில்லை. என் எண்ணத்திலும் நியாயம் உண்டு. நாளை நாம் இருப்போமா என்று யாருக்குத் தெரியும்? மனைவிக்கு பணத்தை வைத்துப் போகாவிட்டாலும் கடனை வைத்துவிட்டுப் போகக்கூடாது என்பதில் நான் தெளிவாக இருந்தேன். அதனால் சிறிய இடம் மாத்திரம் ஜெயநகரில் வாங்கினேன். அதில் நான் உடனே வீடும் கட்டினேன் (அதற்கு அவ்வப்போது பணம் அனுப்பினால் போதும்). இருந்தாலும் மனதில், அடுத்த மாதம் வேலை போய்விட்டால், மீதிப் பணம் எப்படி புரட்டுவது என்ற பயம் இருந்துகொண்டே இருந்தது.

    எத்தனையோ வாய்ப்புகள் வந்தபோதும் இடங்களை நான் வாங்கவில்லை.

    அதனால்தான் சொல்கிறேன், நமக்கு என்ன எழுதியிருக்கோ அதுதான் நமக்குக் கிடைக்கும். எனக்கு ஒரு குறையும் இதனால் மனதில் இல்லை என்பதையும் சொல்லிவிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  17. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.

    பணியிட அனுபவங்கள் நன்று. Y2K பிரச்சனை சமயத்தில் எத்தனை எத்தனை அனுபவங்கள் - இன்று போல அன்று Social Media இருந்திருந்தால் இன்னும் அதிகமாக பேசப்பட்டு இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. எங்கள் அலுவலகங்களிலும் கணினிகளில் இதற்கெனவே நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தது.

    அந்தப் பூ இங்கேயும் நிறைய உண்டு. ஹிந்தியில் இந்தப் பூவை Champa என்றும் Frangipani என்றும் அழைப்பதுண்டு.

    பாலக்காடு மற்ற படங்களும் நன்று. நாங்கள் சென்று வந்தபோது கிடைத்த அனுபவங்கள் நினைவுக்கு வருகின்றன.

    தங்கம் குறித்த எண்ணங்கள் எனது அனுபவங்களையும் நினைக்கத் தூண்டியது. எனது அம்மா, அவரது சிறுவயதில் தங்கத்தின் விலை என்னவாக இருந்தது என்று கூறியது இப்போது நினைவில் இல்லை. ஆனால் தங்கம் மீது எப்போதுமே ஒரு மோகம் அதிகமாகவே இருக்கின்றது - குறிப்பாக தென்னகத்தில்! வடக்கில் பெரிதாக தங்கத்தின் மீது ஈடுபாடு கிடையாது. விதம் விதமான மணிகள் அணிவதில் சிலர் விருப்பம் காட்டினாலும் பலர் வெறுங்கழுத்தாகவே இருப்பார்கள். தாலி என்பது கூட பெரிய அளவில் தங்கம் இருக்காமல் இருப்பதே நிறைய.

    தங்கம், வெள்ளி, பணம் காசு என எதுவாக இருந்தாலும் அளவுக்கு அதிகாம ஆசைப்பட்டு சேர்த்தால் பிரச்சனை தான். அளவுக்கு மிஞ்சினால் எல்லாமே பிரச்சனை தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட் நாகராஜ்.

      Y2K எனக்கு நிறைய அனுபவங்கள். அதுதான் என்னால் முடியும் என்ற எண்ணத்தை, என் திறமையை எனக்குக் காட்டிய நேரம். அந்தப் பூச்சாண்டியை வைத்து கம்பெனிக்கு ஏகப்பட்டது சம்பாதித்துக் கொடுத்தேன்.

      தங்கம் எப்போதுமே எட்டாத உயரத்தில்தான் இருந்துவந்திருக்கிறது. தங்கத்தின் மீதான மோகம், அவசரத்துக்கு பணம் புரட்டலாம் என்பதுதான்.

      வடநாட்டில், முகலாயர் படையெடுப்புகளால்தான் தங்கத்தின் மீதான ஆசையே எல்லோருக்கும் போய்விட்டது என்பது என் எண்ணம். கோயில்களும் அதனால்தான் நகைகள் ஆடம்பரங்கள் விக்ரஹங்கள் இன்றி சாதாரணமாக இருக்கின்றன (வடநாட்டில்). சோம்நாத் கோயில் எத்தகைய மஹோன்னதத்தில் இருந்தது, அங்கிருந்து எத்தனை எத்தனை தங்க வைர வைடூரியங்கள் கொள்ளை போகின என்பது உங்களுக்குத் தெரியுமல்லவா?

      வாழ்க்கையில் எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் விஷம்தான், அது குடும்பத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

      ஒரு தடவை என் சித்தப்பாவிடம், எவ்வளவு சம்பாதித்தால் போதும் என்று திரும்பிவிடலாம் என்று கேட்டேன். அதற்கு அவர், 'போதும்' என்பது மனதைப் பொறுத்ததுதான். அதற்கு இந்த அளவு, 1 கோடி, 3 கோடி என்று எதுவும் கிடையாது. இப்போது இருப்பதே போதும் என்று நினைத்தால், நம்மால் நன்றாக வாழ முடியும் என்று சொன்னார்.

      நீக்கு

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!