24.10.26

வாரம் ஒரு பாசுரம் தொடர் பகுதி 43

  

நாலாயிர திவ்யப் பிரபந்தம் – வாரம் ஒரு பாசுரம் தொடர்

நெல்லைத் தமிழன்

குரு பரம்பரை மற்றும் பாசுரம் – பகுதி 43 

கோவிந்தப் பெருமாள், பெரிய திருமலை நம்பியை அடைந்து, அவரது சிஷ்யராக ஆகி, அவருக்குக் கைங்கர்யங்கள் செய்துகொண்டு, திருவாய்மொழி மற்றும் பிரபந்தங்களின் ஆழ்ந்த பொருளை அவரிடம் கற்றுக்கொண்டு வந்தார் என்று சென்ற வாரம் பார்த்தோம். 

இவர் பிற்பாடு இராமானுஜரை அடைகிறார். இதற்கிடையில் நாம் இராமானுஜர் வரலாற்றைத் தொடர்வோம். 

திருமலையில் நடந்தவைகளை அந்த ஸ்ரீவைஷ்ணவர் சொல்லக்கேட்டு (அதாவது உள்ளங்கை குளிர்ந்த நாயனார் பெரிய திருமலை நம்பியைச் சேர்ந்து, அவரிடம் சிஷ்யனாக ஆனதை) மிகவும் மனம் மகிழ்ந்த இராமானுஜர், அவருக்கு விடைகொடுத்தார். 

அதன் மறுநாள், பெரிய நம்பி திருமாளிகைக்குச் சென்று அவரிடம் பணிந்து தனக்கு த்வயத்தின் அர்த்தத்தை விளக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பஞ்சசம்ஸ்காரம் மதுராந்தகத்தில் செய்தபோதே த்வய மந்திரத்தைச் சொல்லியிருந்தாலும் இராமானுஜர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அதன் அர்த்தத்தை விளக்கினார். அது மட்டுமல்லாது, த்வயம், நாராயணனது திருவடிகளை உபாயமாகக் கொள்ளவேண்டும் என்று சொல்வதை ஆழ்வார்களது பிரபந்தத்தில் எங்கெங்கு வருகிறது என்று விளக்கமாகச் சொன்னார். இங்கு அந்தப் பாசுரங்களை எழுத ஆரம்பித்தால் பதிவு நீண்டுவிடும் என்றாலும், நாராயணனது திருவடிகளைச் சரணாகப் பற்றுவதே நாம் உய்வதற்கு உள்ள வழி என்பதால் சிவலவற்றை இங்கு எழுதுகிறேன். முழுப்பாசுரமும், அதன் அர்த்தமும் பிற்பாடு பதிவுகளில் எழுதுகிறேன். 

நாளும் நம் திருவுடை அடிகள்தம் நலங்கழல் வணங்கி – 1-3-8

ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம் – 3-3-6

வேங்கடத்து உறைவார்க்கு நம – 3-3-6

திருநாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்மினோ – 4-1-1

அலர்மேல் மங்கை உறை மார்பா—உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே 6-10-10

முகில்வண்ணன் அடியை அடைந்தருள் சூடி உய்ந்தவன் – 7-2-11

அடிமை செய்வார் திருமாலுக்கே – 7-2-11

நானுடைத் தவத்தால் திருவடி அடைந்தேன் – பெரிய திருமொழி 1-6-9 

என்று பல்வேறு பிரபந்த வரிகளைச் சுட்டிக்காட்டியும், ஆளவந்தாரின் ஸ்தோத்ர ரத்நத்தின் வரிகளைக் கொண்டும் த்வய மந்திர அர்த்தத்தை விளக்கினார் பெரிய நம்பி. (இப்படியெல்லாம் பெரிய நம்பி உபதேசித்ததை யார் எழுதிவைத்தார்கள் என்று கேட்டால் அதற்கு பதில் கிடையாது. குரு பரம்பரையில் பெரிய நம்பி, திவ்யப்பிரபந்தங்களைப் பிரமாணமாகக் கொண்டு விளக்கினார் என்று மட்டும்தான் வரும். அவை என்ன என்னவாக இருக்கும் என்பதைப் பெரியோர்கள் அனுமானமாக எழுதியிருக்கின்றனர்) 

த்வய மந்திரத்தை இன்னொரு முறை பார்த்துவிடுவோம். 

ஸ்ரீமன் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே
ஸ்ரீமதே நாராயணாய நமஹ 

பொருள்: திருமகளுடன் கூடிய ஸ்ரீமந் நாராயணனின் திருவடிகளையே நான் சரணடைகிறேன். பெரிய பிராட்டியிடன் கூடிய நாராயணனை நான் முழுமையாகப் பணிகிறேன். (அதாவது திருமகளுடன் கூடிய நாராயணனுக்கு கைங்கர்யம் செய்யும் பேற்றை நான் வேண்டுகிறேன் என்று ஸ்ரீமதே நாராயணாய நமஹ என்பதற்கு அர்த்தம் சொல்வர்) 

இதன் இன்னும் அதிகமான ரகசிய அர்த்தங்களை நீர் திருக்கோஷ்டியூர் நம்பியிடம் கேட்டுக்கொள்ளும் என்று பெரிய நம்பி, இராமானுஜரிடம் சொன்னார். 

உடையவர், பெரிய நம்பி கூறியதை மனதில் வைத்து உடனேயே திருவரங்கத்திலிருந்து புறப்பட்டு, திருக்கோஷ்டியூர் நோக்கிச் சென்றார். திருக்கோஷ்டியூர் நம்பி திருமாளிகைக்குச் சென்று நம்பியைக் கண்டு வணங்கி அடக்கத்துடன் நின்றார். 

இங்கு நான் ‘திருமாளிகை’ என்று குறிப்பிடுவதைப் பார்த்து படிப்பவர்கள், எல்லா ஆச்சார்யார்களும் மாளிகையில் வாழ்ந்துவந்தார்கள் என்று நினைத்துக்கொள்வர். வைணவத்தில், பெரியோர்களுடைய, ஆச்சார்யார்கள் வசிக்கும் இல்லத்தை ‘திருமாளிகை’ என்றும், தாம் வசிக்கும் இல்லத்தைக் குறிப்பிடும்போது ‘குடிசை’ என்றும் குறிப்பிடுவர். பிற பெரியவர்களிடம் அவர்களுடைய இல்லம் எங்கு இருக்கிறது என்று கேட்க, ‘தேவரீர் திருமாளிகை எங்கே இருக்கிறது?’ என்பர். அதே சமயம், “ஸ்வாமி, நம் குடிசைக்கு எழுந்தருள முடியுமா?” என்று கேட்பர்.  ‘எழுந்தருள முடியுமா?” என்பதை விட, ‘பொன்னடி சாத்த முடியுமா?’ என்றே கேட்பர். அதாவது தங்களது பாதங்கள் அடியேனுடைய குடிசையில் படவேண்டும் என்ற அர்த்தத்தில். வைணவத்தில் எப்படி ஒருவர் பேச வேண்டுமென்பதைக் கூட வழக்கப்படுத்திக் கொடுத்திருக்கின்றனர். ஆனால் பலரும் தற்போது, சாறை விட்டுவிட்டு சக்கையைப் பிடித்துக்கொள்வதைப் போல, பேச்சில் மாத்திரம் இத்தகைய வார்த்தைப் பிரயோகங்களைக் கடைபிடிக்கின்றனர் என்பது உண்மைதான். 

திருக்கோஷ்டியூர் நம்பி, வந்த காரியம் யாது என்று வினவ, உடையவரும், திருமந்திர அர்த்த த்தை தங்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள பெரிய நம்பி அனுப்பினார் என்று சொன்னார். அதைக் கேட்டு, திருக்கோஷ்டியூர் நம்பியும், திருமந்திர அர்த்தத்தை மிகவும் விளக்கமாக உடையவருக்கு உபதேசித்து அருளினார். இதனை எப்போதும் அர்த்த அநுஸந்தானம் செய்துகொண்டிரும் என்று சொன்னார் (அதாவது மந்திரத்தை, அதன் அர்த்தம் மனதில் ஓடும்படி சொல்லிக்கொண்டிரும்). 

திருப்தி இல்லாமல், மேலும் அர்த்த விசேஷங்களைக் கேட்கவேணும் என்று மனதில் எண்ணம் ஓடுவது போல இருக்கின்றீரே என்று கேட்க, உடையவரும், ஆமாம், சரமஸ்லோகம் தங்களிடமிருந்து கேட்கவேண்டும் என்று பெருவிருப்பம் என்றார். சரம ஸ்லோகத்தினுடைய கௌரவத்திற்காகவும், உடையவரின் ஆசையைப் பரீட்சிப்பதற்காகவும், இந்த அளவில் திருவரங்கம் போம் என்று விடை கொடுத்தார்.

திருக்கோஷ்டி நம்பிகளின் திருமாளிகை, இதுவும் இதற்கு வலப்புறம் உள்ளதும். திருக்கோஷ்டியூர் கோயில் கிழக்கு நோக்கி இருக்கிறது. தெற்குப் பக்க வாசலுக்கு எதிரே திருக்கோஷ்டி நம்பிகளின் திருமாளிகை அமைந்துள்ள தெரு இருக்கிறது.

திருக்கோஷ்டி நம்பிகளின் திருமாளிகை. இடது புறம் உள்ளது ஒருவரிடத்திலும் வலது புறம் உள்ளது இன்னொருவரிடத்திலும் உள்ளது. வலது புறம் உள்ள திருமாளிகைக்குள் சென்று இறைவன் சன்னிதியையும் தரிசித்தேன்.

பெருமாள் சன்னிதி, திருக்கோஷ்டியூர் திருமாளிகை. வீட்டின் சுவர்களில் கல் தூண்கள், மேல் தளம் கல் தூண்கள் என்று பழைமை தெரிந்தது. இந்தத் திருமாளிகை சுமார் ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழைமையானது. நான் பல முறைகள் திருக்கோஷ்டியூருக்கு யாத்திரை மூலம் சென்றிருந்தாலும், கடந்த நவம்பரில் என் அண்ணனுடன் சென்றிருந்தோம். அப்போதுதான் இந்த மாதிரி முக்கிய இடங்களை நாங்கள் சென்று பார்த்துவந்தோம். (யாத்திரைக் குழுவில் வந்தால் அவர்கள் இதற்கெல்லாம் நேரம் தர மாட்டார்கள். உடனே இரவு 9 மணிக்குள் திருப்புல்லாணி சென்று சேர வேண்டும் என்பதால் அவசர அவசரமாக திருக்கோஷ்டியூரை விட்டுச் செல்வோம்) அந்தப் பயணம் பற்றி எப்போது எழுதுவேன் என்று தெரியவில்லை. இந்தப் பதிவின் முக்கியத்துவம் கருதி அந்தப் படங்களை இங்கு பகிர்கிறேன். 

இப்படி உடையவர் திருவரங்கத்திலிருந்து, பதினேழு முறை திரும்பத் திரும்ப திருக்கோஷ்டியூருக்கு நடந்து வந்து திருக்கோஷ்டியூர் நம்பியைச் சந்திக்க, திருக்கோஷ்டியூர் நம்பி பிறகு பார்ப்போம் என்று சொல்ல, ஏமாற்றத்துடன் திரும்பினார். திருவரங்கத்தில் உடையவர் இப்படி சரமச்லோகத்தின் அர்த்தத்தை திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் கேட்க முடியவில்லையே என்ற ஏமாற்றத்துடனும் வருத்தத்துடனும் இருப்பதை திருக்கோஷ்டியூரிலிருந்து போன ஸ்ரீவைஷ்ணவர் அறிந்து வந்து திருக்கோஷ்டியூர் நம்பியிடத்தில் தெரிவித்தார். நம்பியும் அதுகேட்டு மனம் இரங்கி, சரி, அவரை தண்ட பவித்திரத்துடன் வந்து போகச் சொல்லுவீர் என்று சொன்னார். (அதாவது சன்னியாசி கொண்டிருக்கும் முக்கோலுடன் வரச்சொன்னார். முக்கோலில் ஒரு வெள்ளைத் துணி/பை கட்டப்பட்டிருக்கும். அதன் பெயர் ஜலபவித்திரம்) இரகஸ்ய அர்த்தங்கள் என்பதால் வேறு யாரும் கூட வரக் கூடாது என்றும் சொன்னார்.

திரிதண்டமும் ஜலபவித்திரமும். (முக்கோல் மற்றும் அதில் கட்டப்பட்டிருக்கும் வெண்ணிறத் துணியால் ஆன பை).  எங்கள் ஆண்டவன் ஆச்ரமத்தின் முந்தைய ஆச்சார்யார், மற்றும் தற்போதுள்ள ஆச்சார்யார்.

ஸ்ரீவைஷ்ணவர், திருவரங்கம் வந்து இதனைச் சொன்னதும்,   ஆனந்தக் கண்ணீர் பெருக, உடனேயே திருக்கோஷ்டியூரை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார் இராமானுஜர். கோயிலிலிருந்து அவர் வசிக்கும் திருமாளிகையை நோக்கி ஒவ்வொரு அடிக்கும் தரையில் விழுந்து வணங்கிக்கொண்டே சென்றார். அப்படிச் செல்லும்போது, திருப்பாவையைச் சேவித்துக்கொண்டே சென்றார். 

திருக்கோஷ்டியூர் திருமாளிகையை அடைந்து வாசலில் திருப்பாவை சேவித்துக்கொண்டிருக்கும்போது, திருப்பாவையில் 18ம் பாசுரம் சேவித்துக்கொண்டிருக்கையில் ‘செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப, வந்து திறவாய் மகிழ்ந்து” என்று சொன்னதும், நம்பியின் குமாரத்தியான தேவகிப் பிராட்டியார் கதவைத் திறந்தார். இராமானுஜரும் மிகுந்த வியப்புற்று, அவரை விழுந்து வணங்கினார். இதனைக் கவனித்த திருக்கோஷ்டியூர் நம்பி, இராமானுஜரின் உள்ளம் முழுமையாகக் கனிந்துவிட்டது, இப்போது சரம ச்லோகத்தின் அர்த்தத்தை அவருக்கு வெளியிடலாம் என்று மனம் உகுந்தார். 

சரம ச்லோகத்தின் அர்த்தத்தையும், சரணாகதி தத்துவத்தையும் விளக்கமாக ஆழ்வார்களின் பாசுரங்களையும், புராண வசனங்களையும், ஶ்ருதி வாக்கியங்களையும், இதிஹாஸங்களின் வசனங்களையும் பிரமாணமாக வைத்து விளக்கிச் சொன்னார். 

இன்றைய பகுதிக்குப் பொருத்தமாக, நாம் திருப்பாவையின் 18வது பாசுரத்தைப் பார்ப்போம். இதனைச் சேவிக்கும்போதுதான் திருக்கோஷ்டியூர் நம்பியின் திருமாளிகை திருக்கதவுகள் திறந்தன என்பதால் இந்தப் பாசுரத்தை இருமுறை சேவிக்கும் வழக்கம் வந்தது. 

உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்*

நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்*

கந்தம் கமழும் குழலி கடை திறவாய்*

வந்து எங்கும் கோழி அழைத்தன காண்* மாதவிப்-

பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்*

பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்*

செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப*

வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய் 

பொருள்: மதம் பிடித்த யானைகளை அடக்கும் ஆற்றல் உடையவரும், போர்க்களத்தில் பின்வாங்காத தோள் வலிமை உடையவருமாகிய நந்தகோபனின் மருமகள் நப்பின்னைப் பிராட்டியே, நறுமணம் வீசும் கூந்தலை உடையவளே, உன் திருமாளிகையின் கதவைத் திறப்பாயாக. விடிந்துவிட்டது என்பதால் கோழிகள் கூவுகின்றன. மாதவிப் பந்தலின் மீது குயில்கள் கீதம் பாடுகின்றன. பூப்பந்தைக் கையில் ஏந்தி விளையாடும் மென்மையான விரல்களைக் கொண்டவளே, உன்னுடைய கணவனான கண்ணனின் திருநாமங்களைப் பாட நாங்கள் வந்துள்ளோம். அதனால், தாமரை போன்ற சிவந்த கைகளில் அணிந்துள்ள வளையல்கள் ஒலியெழுப்பும்படியாக நீயே வந்து மகிழ்ச்சியோடு கதவைத் திறப்பாயாக 

விளக்கம்: உந்து மத களிற்றன் – எதிர்த்து வரும் மதம் கொண்ட யானைகளையும் வெல்லும் ஆற்றல் மிக்கவன்.  ஓடாத தோள் – பின்வாங்காத தோள் வலிமை, கந்தம் கமழும் குழலி – இயற்கையான மணம் வீசும் கூந்தலை உடையவள், கோழி அழைத்தன – கோழிகள் கூவுகின்றன, பந்து ஆர் விரலி – பூப்பந்தை ஏந்தி விளையாடும் மென்மையான விரல்களை உடையவள், மைத்துனன் – இங்கு மைத்துனன் என்றது கணவனான கண்ணனை 

தாயார் பரிந்துரைத்தால், பெருமாள் உடனே அருள் புரிவான் என்று நம்பிக்கை. இதனை புருஷகாரம் என்பர். அதனால் இங்கு ஆண்டாள், நப்பின்னைப் பிராட்டியை அவளுடைய கைவளை ஓசை எழுப்புமாறு கதவைத் திறக்கச் சொல்கிறாள். அது கேட்டு கண்ணன் எழுந்து உடனே அருள் செய்வான் என்று. 

மார்கழி மாதத்தில் திருப்பாவை உபந்நியாசம் (விளக்கப் பேருரை) நடக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாசுரத்தை ஒரு மணித்தியாலம் விளக்குவார்கள். இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா இந்தப் பாசுரத்தில் என்று ஆச்சர்யமாக இருக்கும். வியாக்கியான சக்கரவர்த்திகள் 900 ஆண்டுகளுக்கு முன்னரே இவற்றை எழுதிவைத்திருக்கிறார்கள்.

குருக்கத்திப் பூக்கள்

குருக்கத்திப் பூ மற்றும் குருக்கத்தி மலர்க்கொடி. இதனை மாதவிக்கொடி என்றும் சொல்வர்.

மாதவிக்கொடியைப் பார்த்தபோது, இதுபோல வேறே எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று என் புகைப்படக் கடலைத் தேடியபோது, செப்டம்பர் 2025ல் கடம்ப வனம்/மரம் (Ter Kadamb) என்ற இடத்திற்குச் சென்றிருந்தோம். மதுரா, விருந்தாவன் சுற்றுவட்டாரத்தில் இருக்கிறது (40 கிமீ, மதுராவிலிருந்து). இந்த கடம்ப வனத்துப் பகுதியில்தான் கண்ணன் ஆநிரை மேய்த்தானாம். அங்கு ஒரு பெரிய வளாகத்தில் கடம்ப மரங்களைப் பாதுகாத்து கோயில் வைத்திருக்கிறார்கள். இது மாதவிக் கொடி அல்ல.

இனி, அடுத்த வாரம் தொடரலாமா?...

==========================================================================


மனசாட்சியம்  - 23 
KGY Raman

"நல்ல மனம் வாழ்க"

தவறான விஷயங்களைச் செய்யாதே, தவறான விஷயங்களைப் பேசாதே என்பதையும் தாண்டி மனத்தளவில் கூட தவறு செய்யாதே என்று நமது  புராதனமான நூல்கள் உபதேசிக்கின்றன. 

" நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கெடுதல் (அல்லது இழப்பு ) " என்று எளிதாகச் சொல்லி விடுகிறோம்.  நினைப்பில் மட்டும் செய்தால் போதும் என்றால் வானத்தைச் சுருட்டலாம் மண்ணைத் திரிக்கலாம்,  கடலைக் குடிக்கலாம்.  மனதில் கட்டும் கோட்டைக்கு "ஆகாயக் கோட்டை " என்று ஏன் பெயர் வந்தது என்று சற்றுப் புரிகிறது அல்லவா ? மனத்தளவில் எதுவுமே அசாத்தியம் இல்லை என்று சொல்வதற்குக் காரணம், மனதளவில் மட்டும் செய்வதற்கு  எதுவானாலும் - அது நல்லதோ கெட்டதோ -  சுலபம்தான் என்பதை உணர்த்துவதற்காக இருக்கலாம். 

கட்டுப்பாடு இல்லாத மனம் ஒழுங்கானவைகளை மட்டும் தான் சிந்தித்தவாறு இருக்கும் என்று சொல்ல முடியாது அல்லவா ? 

இதை கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட பிரயோகங்களைப் படிக்கும் போது அவற்றின் சுவை பன்மடங்கு கூடுகிறது.

ஆண்டாள்:

"வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க"

பன்னிரெண்டாம் வாய்ப்பாடு ஒப்பிப்பது போல் இறைவனின் பெருமைகளை வாயினால் பாடுவது மட்டும் போதாது. அவற்றை மனதினால் ஆழமாக சிந்தித்து உள்வாங்கிக் கொள்ளவும் வேண்டும். 

" மனத்துக்கு இனியானை பாடவும் வாய் திறவாய் " 

இறைவனின் திருக்கோயிலோ, கடவுளர்களின் சித்திரமோ, ஆண்டவனின் திருவுருவமோ, இவை யாவும் கண்ணுக்கு மட்டும் மகிழ்ச்சி ஊட்டுவன அல்ல. சிந்தித்தால் மனமும் இனிக்கும். 

நான் மிகவும் ரசித்த வரிகள் இவை. 

திருக்குறள்:

" உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளை கள்ளத்தால் கள்வேன் எனல். "

விளக்கம் தேவையில்லை. 

தாயுமானவர் 

என் உளம் நிற்றி நீ ஆதலால் நான் பூசை செய்யல் முறையோ.

இதற்கு விளக்கம் கொடுத்தாக வேண்டும்.

இறைவனே. கோடானு கோடி வடிவங்களிலும் இருக்கின்ற உன்னை ஒரு வடிவினில் நிறுத்தி நான் பூசை பண்ண முடியவில்லை. ஏனென்றால் நான் பார்க்கின்ற மலர்களிலும் நீ இருப்பதால் அந்த மலர்களை எடுக்க எனக்கு மனம் வரவில்லை. சரி, கையை குவித்து ஒரு கும்பிடு போடலாம் என்றால் என் உள்ளம் வெட்கம் அடைகிறது. என் உள்ளே குடி கொண்டிருக்கும் உன்னை கை குவித்து வெளியே நிறுத்தி வணங்குவது எப்படி முறையாகும் ? எனவே நான் பூசை செய்யல் முறையோ ? (இல்லை என்பது குறிப்பு).

பாடலை நினைவிலிருந்து தருகிறேன்.  ஏதேனும் தவறுகள் இருக்கக் கூடும். பொருள் சொன்னதில் மாற்றம் இல்லை.

பண்ணேன் உனக்கான பூசை ஒரு வடிவிலே 

பாவித்திறைஞ்ச ஆங்கே பார்க்கின்ற 
மலரூடு நீயே இருத்தி ஆதலால் 

அப்பனி மலர் எடுக்க மனமும் நண்ணேன் 
அலாமல் இரு கைதான் குவிக்க எனில் 

நாணும் என் உளம் நிற்றி நீ !

நான் கும்பிடும் போது அரைக் கும்பிடு 
ஆதலால், நான் பூசை செய்யல் முறையோ?

விண்ணே ! விணாதியாம் பூதமே ! 
நாதமே ! வேதமே ! வேதாந்தமே !

மேதக்க கேள்வியே ! கேள்வியாம் 
பூமிக்குள் வித்தே ! அவித்தின் முளையே !

கண்ணே ! கருத்தே ! என் எண்ணே ! 
எழுத்தே ! கதிக்கான மோன வடிவே ! 

கருதரிய சிற்சபையில் 
ஆனந்த நர்த்தமிடும் 
கருணாகரக் கடவுளே!

இவ்வளவு சிறப்பான தாயுமானவர் பாடலை என் பத்தாம் வகுப்புத் தமிழ் புத்தகத்தில் இணைத்த ஆசிரியப் பெருமக்களுக்கு நன்றி ! 

அந்தத் தமிழ்ப் புத்தகத்தின் பெயர் " செந்தமிழ் இலக்கிய மணிமாலை " . அது பாட நூல்களை அரசு வெளியிடாத காலம்.‌ (1952)

60 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய நாளாக அமையபிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா. இன்று இனிய நாளாக அமையட்டும்

      நீக்கு
  2. ஆசார்யர்கள், கோவில்,பாசுரம் எல்லாமே நன்மை. சேவித்துக்கொள்கிறேன். நன்றி நெல்லை.

    பதிலளிநீக்கு
  3. திரு ராமன் அளித்திருக்கும் தாயுமானவர் பாடல் மிக உணர்ச்சிகரமாக இருக்கிறது. இந்த பக்தி எனக்கெல்லாம் கைவர எத்தனை நாட்களாகுமே.

    பதிலளிநீக்கு
  4. திருமாளிகை, குடிசை விளக்கங்களும் பாஷையும் அருமை.  தமிழின் பெருமை. 

    ஒன்றே முக்கால் வரிதான் என்றாலும் பார்த்துவிட்டு இந்தப் பக்கம் வந்தததும் த்வய மந்திரம் மறந்து விடுகிறது.  எனக்கு அருள் இல்லை ஞானமும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை இல்லை
      என ஏங்கவேண்டாம்
      இல்லைக்குப் பின்னாலே..
      இருக்கிறது எல்லாம்

      நீக்கு
    2. வாங்க ஸ்ரீராம்... திரும்பத் திரும்பப் படிக்கும்போது எதுவுமே மனதில் பதியும் அல்லவா?

      நீக்கு
    3. ஏகாந்தன் சார்... உங்க கருத்தைப் படித்ததும், சிவவாக்கியரின்

      இல்லை இல்லை என்று நீர் இயம்புகின்ற ஏழைகாள்
      இல்லை என்று நின்றதொன்றை இல்லை என்னலாகுமோ
      இல்லை அல்ல ஒன்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை
      எல்லை கண்டு கொண்ட பேர் இனிப் பிறப்பது இல்லையே!!

      என்ற பாடலும்,

      உளன் எனில் உளன் அவன் உருவம் இவ் உருவுகள்
      உளன் அலன் எனில் அவன் அருவம் இவ் அருவுகள்
      உளன் என இலன் என இவை குணம் உடைமையில்
      உளன் இரு தகமையொடு ஒழிவிலன் பரந்தே

      என்ற பிரபந்தப் பாசுரமும் நினைவுக்கு வருகிறது

      நீக்கு
    4. சிவவாக்கியர் ஒரு பிரும்ம ஞானி. நம்மாழ்வாரும் இந்தமாதிரித் தத்துவத் தெளிப்புகளை ஆங்காங்கே அருளியிருக்கிறார். இருவரையும் அறிய நேர்ந்ததில் மகிழ்வெனக்கு.

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். பிரார்த்தனைக்கு நன்றி

      நீக்கு
  6. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    அருமையான பதிவு. திருமாளிகை பற்றிய விளக்கம் மிக அருமையாக உள்ளது. தன்னடக்கத்தின் பொருளை எப்படி, எவ்வாறு உணர்ந்து கொள்ள வேண்டுமென அந்தக்கால பெரியவர்கள் சொல்லித்தந்த முறைகள் அற்புதம்.

    த்வய மந்திரத்தின் பொருளை உணர்ந்து கொண்டேன்.அன்னையின் அன்பை ஆதாரமாக கொண்டே இறைவனை காணவும், உணரவும் முடியும். பாசுர விளக்கமும் மிக அருமை.

    தங்கள குரு ஆச்சாரியார்களை தரிசித்து கொண்டேன். திருகோஷ்டி நம்பிகளின் திருமாளிகையையும், அங்குள்ள இறைவனின் சன்னிதியையும் தரிசித்துக் கொண்டேன். கோவில் சுற்றுலாவுடன் தனியாகவும் சென்று இதையெல்லாம் காண கிடைத்தது தங்களின் அதிர்ஷ்டமே..! இத்தகைய பேறு பெற்ற தங்களுக்கும் என் பணிவான நமஸ்காரங்கள். அருமையாக இப்பதிவை வாரந்தோறும் தொகுத்து தந்து எங்களையும் பக்தி மார்க்கத்தில் ஈடுபட ச் செய்யும் தங்களுக்கு என் பணிவான நன்றிகளும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். இப்போதெல்லாம் ஐபேடிலிருந்து கருத்து எழுத முடிவதில்லை (அது 12 வருடப் பழசு என்பதால் பல தளங்களின் மாற்றத்தினால் வேலை செய்வதில்லை. படிக்க முடிவதோடு சரி). அதனால் உடனுக்குடன் பதிலெழுத இயலவில்லை.

      திருக்கோஷ்டியூருக்குப் போயிருந்தபோது, அண்ணனைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு இந்த இடங்களுக்கு வேக வேகமாக நடந்து சென்றேன். எல்லாம் ஆர்வத்தினால்தான்.

      எந்த மார்க்கத்தில் சென்றாலும், பக்தி மாத்திரம் இன்னும் வந்த பாடு இல்லை. நன்றி

      நீக்கு
  7. மேலே சொல்லி இருப்பதை
    வழிமொழிகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஏகாந்தன் சார். பக்தி உணர்வு என்பது சிலருக்கே கொடுத்து வைத்திருக்கிறது. எனக்கு எப்போது வருமோ தெரியவில்லை.

      நீக்கு
  8. //என் உளம் நிற்றி நீ ஆதலால் நான் பூசை செய்யல் முறையோ// நம் உள்ளத்தில் நீக்கமற இறைவன் நிறைந்திருக்கும்போது வேறு இடத்தில் தேடி, அவனை பூசை செய்தல் சரியா? என்ற கேள்வி. கேள்வி சரிதான், ஆனால் நம்மில் உறைந்திருக்கும் இறைவனை நாம் அறியும் ஞானம் வேண்டும், அப்படி ஞானம் வந்தால், உள்ளம் பெரும் கோயில், ஊனுடம்பு ஆலயம், தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் என்று தோன்றும். சாதாரண மானுடர்களுக்கு இந்த நினைப்பு எப்படி வரும்?

    //பண்ணேன் உனக்கான பூசை ஒரு வடிவிலே// இறைவன் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும்போது, இதுதான் அவன் இருக்கும் இடம் என்று ஒரு குறிப்பிட்ட இடத்தைக் காட்ட இயலுமா?

    இந்தப் பகிர்வைப் படிக்கும்போது, பதின்ம வயதில் ஹாஸ்டலில் கேட்ட கிறித்துவ பாடல் நினைவுக்கு வருகிறது (இதனை இயற்றி வெளியிட்டவர் எங்கள் ஹாஸ்டல் வார்டன்/பள்ளி துணை தலைமை ஆசிரியர் என்று நினைவு)

    எங்கே இறைவா இருக்கின்றாய்.. எனை நீ அலற்றி அழைக்கின்றாய்

    பூவிரிச் சோலை மலரினிலே
    சிறு புன்னகை தவழும் குழந்தையிலே
    ஆலய வாயிலில் இருக்கின்றேன்
    எங்கும் அன்பர் உங்களை அழைக்கின்றேன்... என்று வரும்

    நல்ல பகிர்வு

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.

    தகவல்கள் ஒவ்வொன்றும் சிறப்பு. பதிவுகளுக்கு நேரம் ஒதுக்கி, பல தகவல்களைத் தரும் உங்கள் முயற்சி சிறப்பு. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. குரு பரம்பரை வரலாறும், பாசுரமும் இன்று மிக அருமை.

    இராமானுஜர் வரலாறு படித்து இருந்தாலும் மீண்டும் நல்ல விளக்கமாக இங்கு தெரிந்து கொள்கிறேன்.

    // நாராயணனது திருவடிகளை உபாயமாகக் கொள்ளவேண்டும் என்று சொல்வதை ஆழ்வார்களது பிரபந்தத்தில் எங்கெங்கு வருகிறது என்று விளக்கமாகச் சொன்னார்.//

    அவைகளை தெரிந்து கொள்ள பகிர்ந்த பெரிய திருமொழி பகிர்வும் விளக்கமும் அருமை.

    //நாராயணனது திருவடிகளைச் சரணாகப் பற்றுவதே நாம் உய்வதற்கு உள்ள வழி என்பதால் சிவலவற்றை இங்கு எழுதுகிறேன். முழுப்பாசுரமும், அதன் அர்த்தமும் பிற்பாடு பதிவுகளில் எழுதுகிறேன். //

    எழுதுங்கள் படிக்கலாம்.


    ‘திருமாளிகை’ ‘குடிசையின் விளக்கம் அருமை.

    //பொன்னடி சாத்த முடியுமா?’ என்றே கேட்பர். அதாவது தங்களது பாதங்கள் அடியேனுடைய குடிசையில் படவேண்டும்//
    உண்மையான அன்பான பனிவு, பக்தி இருக்கிறது இதில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரியோர்கள், கனிவு, பக்தி ஆகியவைகளை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று வரையறுத்து வைத்திருக்கிறார்கள். ஆனால் உளப்பூர்வமாகச் செய்ய வேண்டியது, வெறும் வாய் வார்த்தைகளாக வருகிறது.

      நீக்கு
  12. //குருக்கத்தி மலர்க்கொடி. இதனை மாதவிக்கொடி என்றும் சொல்வர்.//

    சிலப்பதிகாரத்தில் இந்த மாதவி கொடி பந்தலின் கீழ் இருந்து கண்ணகி கதையை கோசிகன் சொல்வதாக வரும் 11 வது படிக்கும் போது பாடத்தில் வந்தது.
    குருக்கத்திப்பூக்கள் கோடைகாலத்தில் பூக்களை இழந்து இருந்தது , வாடி இருந்தது அது போல கண்ணகியும் கோவலனை பிரித்து வாடி இருப்பதாக வரும்.
    இன்று உங்கள் பதிவில் மாதவி கொடியை குருகத்திப் பூக்களை பார்த்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாதவிக் கொடி, குருக்கத்திப் பூக்கள் பற்றிப் படித்திருக்கிறேனே தவிர, பதிவு எழுதும்போதுதான் பலவற்றைத் தெரிந்துகொள்கிறேன்.

      சிலப்பதிகாரம் பற்றி எழுதியது சிறப்பு

      நீக்கு
  13. திருகோஷ்டி நம்பிகளின் திருமாளிகை, மற்றும் இறைவனின் சன்னிதியை தரிசனம் செய்து கொண்டேன். நிறைய தடவை போய் இருக்கிறேன். .திருகோஷ்டியூர் பார்த்தது இல்லை.இன்று உங்கள் மூலம் தரிசனம் கிடைத்தது நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் பல தடவைகள் சென்றிருந்தாலும் சென்ற முறைதான் இவற்றையெல்லாம் போய்ப் பார்த்தேன். ஒவ்வொரு திவ்யதேசத்திலும் சில நாட்கள் தங்கினால்தான் ஓரளவு முக்கியமான இடங்கள் அத்தனையும் காண இயலும்.

      நீக்கு
  14. நல்ல மனம் வாழ்க பதிவில் பாடல் பகிர்வுகளும் விளக்கமும் அருமை.
    இன்று இங்கும் ஆண்டாள் பாசுரம் இடம் பெறுகிறது.
    திருக்குறள் பகிர்வு , தாயுமானவர் பாடல் அதன் விளக்கம் நன்றாக இருக்கிறது.
    மனக்கட்டுபாடு மிக அவசியம் என்பதை அழகாய் சொன்னீர்கள்.


    //இறைவனின் திருக்கோயிலோ, கடவுளர்களின் சித்திரமோ, ஆண்டவனின் திருவுருவமோ, இவை யாவும் கண்ணுக்கு மட்டும் மகிழ்ச்சி ஊட்டுவன அல்ல. சிந்தித்தால் மனமும் இனிக்கும்.//

    உண்மை.
    நல்ல பதிவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. தாயுமானவரின் இந்தப் பாடலை முதன்முதலாக தரிசிக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில நேரங்களில், என் தேடுதல், பலவித பக்திப் பாசுரங்களுக்கு இட்டுச் செல்லும். சிவவாக்கியர், தாயுமானவர், நால்வர், ஆழ்வார்கள் என்று.. பக்தியை இலக்கியமாக போட்டி போட்டுக்கொண்டு கொடுத்திருக்கிறார்கள்.

      நீக்கு
    2. சமணம், பெளத்தம் என்று அதிகமாகி வந்த காலத்தில் நால்வர் , ஆழ்வார்கள் வந்த காலத்தை "பக்தி மறு மலர்ச்சி காலம் "என்பார்கள்.
      இவர்கள் வந்த பின் எளிமையான தமிழ் பாடல்கள் மக்களை கவர்ந்தன.
      தாயுமானவர், சிவாக்கியார் பாடல்கள் நல்ல தமிழில் எளிமையாக இருக்கும். இன்று நீங்களும் ராமன் சாரும் அதை பகிர்ந்தது மகிழ்ச்சி.

      நீக்கு
    3. சமணம், பெளத்தம் என்று அதிகமாகி இருந்த காலத்தில்

      நீக்கு
    4. கோமதி அரசு மேடம்... சமணம் பௌத்தத்தையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் அந்தச் சமயங்கள் வேதங்களை அடிப்படையாகக் கொண்டவை அல்ல.

      சிவவாக்கியர் பாடல்கள் பல புரிந்துகொள்ள கொஞ்சம் மெனெக்கிடணும். உங்கள் கருத்து மகிழ்ச்சி

      நீக்கு
  16. செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம்
    செல்வத்துள் எல்லாம் தலை
    எல்லோருக்கும் வணக்கம் __/\__. நலம்தானே? நவராத்திரி மும்முரத்தில் எ.பி.பக்கம் வர முடியவில்லை. சில சமயம் எட்டிப் பார்ப்பேன், கருத்தளிக்க அவகாசம் இல்லை.
    கனடாவில் இருந்தவரை சீக்கிரம் வந்து விடுவேன். காரணம், அங்கே முதல் நாள் இரவாக இருக்கும் பொழுதே, இங்கே மறுநாள் விடிந்து விடும். நான் ஊரிலிருந்து வந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகப் போகிறது, இன்னும் அந்த நேரக் குழப்ப ஹாங்கோவர் இருக்கிறது. நேற்று இரவு 'வாரம் ஒரு பாசுரம் பகுதியை' எதிர் பார்த்து எ.பி.யைத் திறந்து ஏமாந்தேன். ஹிஹி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம்.... ஹேங்க் ஓவர், ஒரு மாதம் ஆகியும் தீரவில்லையா?

      நீக்கு
  17. மீண்டும் ஒரு முறை சென்ற வார சனிக்கிழமை பதிவை படித்து விட்டு வந்தேன். எப்போதும் போல சிறப்பாக இருக்கிறது. ராமானுஜரின் எளிமையும், கற்றுக் கொள்வதில் அவருக்கு இருந்த ஆர்வமும் ஆச்சர்யமூட்டுகின்றன. வித்யாம் வினய சம்பன்னாம் என்னும் சொலவடை நினைவுக்கு வந்தது. அவர் நமக்கு(எனக்கு) வினயத்தை அருள பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வினயம் அவ்வளவு எளிதாக வந்துவிடுகிறதா? இயல்பான அகங்காரம்தான் வினயம் எனக்கு வராததற்குக் காரணம் என்று தோன்றும்.

      அப்போது காலமும், அதை உருப்படியாகப் பயன்படுத்தும் மனமும் இருந்தது. தற்காலத்தில் எதற்குமே நாம் உருப்படியாக நேரம் ஒதுக்க இயலுவதில்லை

      நீக்கு
  18. ஆண்டவன் ஆஸ்ரமத்தின் தலைமை பீடம் ஸ்ரீரங்கத்தில்தானே இருக்கிறது? அங்கு நான் சென்றிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். திருவரங்கத்தில்தான். அங்கு பௌண்டரீகபுரம் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் தலைமை பீடமும் இருக்கிறது (மேலூர் ரோட்டில். அதைத் தாண்டிச் சென்றால் ஆண்டவன் ஆஸ்ரமம் வரும்)

      நீக்கு
  19. திருக்கோஷ்டியூர் நம்பியின் திருமாளிகையை அப்படியே வைத்திருந்தால் நன்றாக இஉந்திருக்கும். ஏனோ நாம் அப்படி செய்வதில்லை. எல்லாவற்றையும் நவீனப்படுத்தி விடுகிறோம். திருவசநல்லூரில் ஸ்ரீதர அய்யாவாள் வீடு, ஈச்சங்குடியில் மஹாபெரியவர் பிறந்து, வளர்ந்த வீடு எல்லாவற்றையும் டைல்ஸ் எல்லாம் பதித்து, தோற்றத்தையே மாற்றி விட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியே வைத்திருக்கவேண்டும் என்ற கருத்து சரிதான். ஆனால் அதற்கு நிறைய செலவாகும். அந்த ரிசோர்ஸ் நம்மிடம் கிடையாது.

      நான் இராமானுஜர் வாழ்ந்த மடத்தின் உள்ளே சென்றிருக்கிறேன். டைல்ஸ் பதித்திருக்கிறார்கள். அப்போதுதான் சுத்தம் செய்வது எளிது என்று நினைக்கிறார்கள்.

      பல கோயில்களின் பழைமைத் தன்மையே பெயிண்டுகள் டைல்ஸ் போன்றவற்றால் மாறிவிட்டது.

      நீக்கு
  20. நெல்லையைத் தொடர்ந்து, ராமன் அவர்களின் தாயுமானவர் பாடல் விளக்கமும் சிறப்பு. பள்ளியில் படித்தது இவ்வளவு நினைவில் இருக்கிறது என்றால், ஆசிரியர் சிறப்பாக போதித்திருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  21. இந்தத் திருமாளிகை, குடிசை ஆகியவற்றின் பொருள் புரிந்திருந்தது. ஏனெனில் நாயன்மார்களின் வரலாற்றிலும் இத்தகையவை இடம் பெற்றிருக்கின்றன. என்றாலும் இன்று உங்கள் விரிவான விளக்கத்தின் மூலம் மேலும் விபரமாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. இப்போதும் ஸ்ரீரங்கத்தில் இம்மாதிரி மாளிகைகளைப் பார்க்க முடிகின்றது.
    என்னதான் தத்துவஞானம் வாய்க்கப் பெற்றிருந்தாலும் சிஷ்யர்களுக்கு குரு மனம் வைத்தால் தான் உபதேசமே கிடைக்கும் என்பதை இங்கே பெரிய நம்பி த்வய மந்திரத்தை ராமானுஜருக்கு உபதேசித்ததில் இருந்து புரிகிறது. "நாராயணா என்னும் நாவென்ன நாவே!" எனச் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகளூம் சொல்லி இருக்காரே. அத்தகைய நாராயணா என்னும் நாமத்தையும் அதன் விளக்கத்தையும் உபதேசமாக வாங்க ஸ்ரீராமானுஜர் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கார். நாமெல்லாம் எது மாத்திரம்?

    நீங்கள் இங்கே சுட்டிக்காட்டி இருப்பதே எழு எட்டுப் பாசுரங்கள். இன்னும் எத்தனையோ இருக்கக் கூடும். நாலாயிரத்திலும் ஆழமாகப் படித்து அல்லவோ அறியணும்? உங்களுக்கு அந்தப் பொறுமை இருப்பதோடு அந்த நாராயணனின் அருளும் நிறைந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா சாம்பசிவம் மேடம்.

      திருவரங்கத்தில் சில மாளிகைகள் தவிர மற்றவை நவீனத்திற்கு மாறிவிட்டன.

      அந்தக் காலத்தில் சட் சட் என்று சொல்லித்தர மாட்டார்கள் போலிருக்கிறது. தற்காலத்தில் அதே நடைமுறை இருந்தால், ஒருவருக் கஷ்டப்பட நினைக்க மாட்டார்கள்.

      இராமானுஜர் வரலாற்றில் பின்பு எழுதுவேன். ஒரு சந்தேகத்திற்கு கூரத்தாழ்வான், ஆறு மாத காலங்கள் திருக்கோஷ்டியூர் நம்பியிடம் பணி செய்திருக்கிறார். நினைக்கவே ஆச்சர்யம். எவ்வளவு பொறுமை அந்தக் காலத்தில் இருந்திருக்கிறது..

      இப்போல்லாம், அப்பா பெயர் என்ன என்று கேட்டால், சட் என்று கூகுளில் தேடுகிறார்கள். அப்படி ஏஐ, கூகுள் கேல்குலேட்டர் போன்றவற்றின் பயன் அதிகரித்திருக்கிறது.

      நீக்கு
  22. நான் சின்ன வயசில் திருப்பாவை வகுப்புக்குப் போகும்போது எங்களுக்குச் சொல்லிக் கொடுத்த அத்தம்மா திருமதி ராஜம்மாள் சுந்தர்ராஜன் அவர்கள், ஒரு பஜனைப் பாடல் மூலமே எங்களுக்கு நாராயண நாமத்தைக் கற்பித்தார். எளிமையான வாக்கியங்களைக் கொண்ட அந்தப் பாடல் இப்போது அரை குறை நினைவில் இருக்கு.
    "ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ நாராயணாய
    உலகெல்லாம் முழங்க வேண்டும் ஓம் நமோ நாராயணாய
    பக்தரெல்லாம் பரவசமாய்ப் பாடுகின்ற நாமம்
    சித்த சுத்தி தந்தருளும் தெய்வமணி நாமம்.
    நீலமேக வடிவ்ழகை நித்தியமும் காண்போம்.
    நேரமெல்லாம் பாடி ஆடி நிர்ப்பயமாய் வாழ்வோம்.
    இவ்வளவு தான் நினைவில் இருக்கு. ஆனாலும் அடிக்கடி இதைப் பாடிக் கொள்வேன் எனக்குள்ளாக. சின்ன வயசில் இருந்தே இதுவும் கந்த சஷ்டி கவசமும் தான் வழித்துணை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலரும் நாம சங்கீர்த்தனை, நாம பஜனையே நமக்கு பக்தி உணர்வை அதிகரிக்கும். அதுவே இறைவனை அடைய சுலபமான வழி என்கின்றனர். அதற்கு ஏற்றபடி, பல இடங்களில் ராதா கல்யாணம், ருக்மணி கல்யாணம்..... லாம் நடத்தி நம சங்கீர்த்தனையை வளர்க்கிறார்கள்.

      எனக்கு விஷ்ணு சஹஸ்ரநாமம்தான் வழித்துணை

      நீக்கு
    2. கீதா சொல்லச் சொல்ல பழைய மதுரை நினைவுகள். மாதவிப் பந்தல், ரவி கண்ணபிரான் எல்லாம் நினைவுக்கு வருகின்றன. நம் கீதா ஒரு பொக்கிஷம்.
      நியுசிலாந்திற்குக் கூட ரவி போயிருக்கிறார்.

      நீக்கு
  23. ராமாநுஜர் திருக்கோஷ்டியூருக்குச் சென்றார் என்பது வரை தெரியும். ஆனால் அங்கே இருந்த அவர் திருமாளிகையில் தான் திருப்பாவையில் 18 ஆவது பாசுரமான "உந்து மதகளிற்றன்" சேவிக்கையில் நம்பியின் மகளைப் பார்த்து சாட்சாத் ஆண்டாளே எதிரே வந்துவிட்டதாக நினைத்து மெய்யுருகிப் போனார் என்பது இன்னிக்குத் தான் தெரிந்து கொண்டேன். இந்த நிகழ்வு பற்றித் திருப்பாவை கற்றுக்கும்போதே அரைகுறையாய்த் தெரிந்திருந்தது. பின்னர் இணைய வழி எழுத ஆரம்பிச்சதும் கொஞ்சம் கொஞ்சம் தெரிந்து கொண்டேன். ஆனால் அப்போல்லாம் இது ஸ்ரீரங்கத்தில் தான் நடந்ததுனு நினைச்சிருந்தேன். இன்னிக்குத் தெளிய வைச்சதுக்கு நன்றி.

    சரம ச்லோகத்தைப் பற்றி அறிந்து கொள்ள நடையாய் நடந்த ராமானுஜருக்கு அதுவும் உபதேசிக்கப்பட்டிருக்கிறது. நாங்க திருக்கோஷ்டியூருக்குப் போய்ச் சில ஆண்டுகள் ஆகிவிட்டன. முன்னெல்லாம் நினைச்சால் திருக்கோஷ்டியூர் போவோம். அங்கே ஒரு பட்டாசாரியார் எங்க பையருக்குக் குழந்தை பிறக்க வேண்டி ஒரு குறிப்பிட்ட இடத்தில் வந்து குறிப்ப்பிட்ட நாளில் விளக்கு ஏற்றி வைக்கச் சொன்னார். அதைச் செய்வதற்குனு மாசா மாசம்கூடப் போனோம். ஆனால் நம்பியின் மாளிகை இருப்பது எல்லாம் தெரிஞ்சுக்கலை. :( ஒரு வேளை நாங்களும் வைணவர்களாக இருந்திருந்தால் தெரிந்து கொள்ள முயற்சி செய்திருப்போம்.

    இன்னிக்கு உங்கள் மூலம் அவை எல்லாம் தரிசிக்கக் கிடைச்சது. மாதவிப் பந்தலையும் பார்த்தேன். ஆனால் முன்னரே குருக்கத்திச் செடியைத் தான் மாதவிப் பந்தல்னு சொல்லுவாங்க என்பதை எங்கேயோ படிச்சிருக்கேன். அதோடு இந்த "மாதவிப்பந்தல்" என்னும் பெயரிலேயே வலைப்பூ ஒன்று ஆரம்பித்து இளைய நண்பர் ரவிசங்கர் கண்ணபிரான் அவர்கள் எழுதிக் கொண்டிருந்தார். தீவிர வைணவர். அவரை எங்கள் குழுவில் அனைவருமே பதின்மூன்றாவது ஆழ்வார் என்றே அழைப்பார்கள். ரொம்பவே லாஜிகலாக எழுதுவார். நம்மையும் ஓர் புரட்டுப் புரட்டிப் போட்டுடுவார். நிறையப் புதிர்ப்போட்டிகள், க்ராஸ்வேர்ட் (தமிழில் தான். அதுவும் ஆன்மிகம் சார்ந்தே) எல்லாம் நடத்தி இருக்கார். பின்னர் தொடர்பு இல்லை. போன வருஷம் எப்படியோ மாமா இல்லை என்பதைத் தெரிந்து கொண்டு என் பதிவுக்கு வந்து வருத்தம் தெரிவித்திருந்தார். கோமதி அரசு, வல்லி சிம்ஹன் , துளசி கோபால் ஆகியோருக்கு அவரைத் தெரியும். எனக்கு மாதவிப் பந்தல்னாலே அவர் நினைவு தான் வரும். அம்பத்தூர் வீட்டுக்குப் பல முறை வந்திருக்கார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அப்போல்லாம் இது ஸ்ரீரங்கத்தில் தான் நடந்ததுனு நினைச்சிருந்தேன்.// நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன். இது பற்றி அடுத்த பதிவில் வரும் என்று நினைக்கிறேன். (எல்லாம் எப்போவோ எழுதி அனுப்பியாச்சு என்பதால் நினைவில் இல்லை)

      //நாங்களும் வைணவர்களாக இருந்திருந்தால்// அப்படி இல்லாமலேயே நீங்களும் நிறைய தெரிந்து வைத்திருக்கிறீர்களே. நானும் பல்வேறு வரலாறுகளை (நாயன்மார்கள்) படித்திருக்கிறேன். ஆர்வத்தின் காரணமாக, எங்கேயாவது ஒரு தொடர்புள்ள கோயில் பார்த்தால் உடனே காரிலிருந்து இறங்கி அந்தக் கோயிலுக்குச் சென்றுவிடுவேன். அப்படித்தான் அப்பர் முக்தி அடைந்த தலத்தைத் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

      மாதவிப் பந்தல் வலைத்தளச் சுட்டி முடிந்தால் தாருங்கள்.

      நீக்கு
    2. //மாதவிப்பந்தல்" என்னும் பெயரிலேயே வலைப்பூ ஒன்று ஆரம்பித்து இளைய நண்பர் ரவிசங்கர் கண்ணபிரான் அவர்கள் எழுதிக் கொண்டிருந்தார்.//

      ஆமாம் தெரியும். என் மகளுக்கும் தெரியும். அவர்
      குழந்தைகளுக்கு பெயர் வைக்க தமிழ் பெயர்கள் ஏராளமாக உள்ள புத்தகம் ஒன்று எழுதி இருந்தார் அதை மகள் வாங்கி வந்து கொடுத்தாள் . யாருக்காவது குழந்தை பிறந்தால் தமிழ் பேர் கேட்பார்கள் எங்களிடம் அதனால் அதை வாங்கி கொடுத்தாள் மகள்.

      இப்போது ஏனோ பதிவு எழுதுவது இல்லை.

      நீக்கு
  24. இன்னிக்குப் பெரியவரின் மனசாட்சியும் நெல்லையோடு சேர்ந்திசை பாடி ஆன்மிகத்தை ஓர் உள்ளார்ந்த ரசிகத்தன்மையோடும் எப்படிப் படிச்சுப் பொருள் கொள்ள வேண்டும் என்பதையும் விளக்கி வந்திருக்கு. தாயுமானவர் பாடல் நாங்கள் படிக்கையில் கூட வந்திருக்கு. தமிழில் ஔவையார், கம்பர், திருவள்ளுவர், தாயுமானவர் போன்றோரின் வாழ்க்கைச் சித்திரங்கள் பாடமாகவும் படிச்சிருக்கேன். எல்லாம் மூன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரையிலும். ஆனால் ஒன்பது, பத்து, பதினொன்றிலும் பாடங்கள் நல்ல முறையிலேயே இருந்தன.

    அப்போதெல்லாம் நளவெண்பா, வில்லி பாரதம், சீறாப்புராணம், பெத்லகேம் குறவஞ்சி, குற்றாலக் குறவஞ்சி, சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம், நந்திக்கலம்பகம் என இருந்தன. சங்கப்பாடல்களும் தவறாமல் இடம் பெற்றிருந்தன. இப்போல்லாம் படிக்கிறவங்களுக்கு இதை எல்லாம் தெரியுமா என்பதே சந்தேகம். இதை எல்லாம் படிச்சிருந்தால் தமிழ் உச்சரிப்பும் தமிழைப் புரிஞ்சுக்கறதும் அதிகமா இருந்திருக்குமே.

    எனக்குத் தெரிந்து 1971 க்குப்பின்னரே தமிழகம் முழுவதும் ஒரே பாடத்திட்டம்னு வந்ததுனு நினைக்கிறேன். நாங்க படிக்கும் காலத்திலே எஸ்.எஸ்.எல்.சிக்கு மட்டுமே தமிழகம் முழுவதும் ஒரே பாடத்திட்டம். மத்தவை ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு மாதிரி. தேர்வுகளும் அந்த அந்தப் பள்ளியில் நடத்துவது தான். இப்போ மாதிரி இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைக்கு பதிவைப் படித்ததும் எனக்கும் நீங்கள் நினைப்பதுபோலவே தோன்றியது. யதேச்சையாக அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன். காரணம் கேஜிஒய் அவர்கள் தினமும் வித்தியாசமான தலைப்புகளை எடுத்துக்கொள்கிறார்.

      நான் படித்தபோதும் பக்தி இலக்கியத்திலிருந்து பாடல்கள் உண்டு. பிறகு தற்போதைய காலத்தில் இல்லை என்று நினைக்கிறேன். எங்களுக்கு கல்லூரியிலும் நீதிபோதனை வகுப்பு இருந்தது. இப்போதைய தலைமுறைக்கு புதிதாக நீதிபோதனை தேவையில்லை என்று எல்லோரும் நினைக்கிறார்கள் போலிருக்கிறது.

      நீக்கு
  25. பாசுரம் விளக்கங்கள் அருமை. ஆச்சாரியர்கள் திருமாளிகைகள் கண்டு வணங்கினோம்.

    உங்கள் பகிர்வில் இவற்றை எல்லாம் அறிந்து கொள்கிறோம். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் சகோதரரே
    இன்றைய மனசாட்சிய பகுதியும் பாசுர பதிவின் பொருளை ஒட்டியே அமைந்துள்ளது. இதை காலையிலேயே குறிப்பிட நினைத்தேன். வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டதில் உடன் வர இயலவில்லை. இப்போது வந்து பார்த்ததில் அனைவரும் அதையே குறிப்பிட்டுள்ளனர். தாயுமானவரின் பாடல் அருமையாக உள்ளது. இறைவனை மனதுக்குள் இருத்தி வழிபடுவது எப்போதும் சாத்தியமில்லாமல்தான் போகிறது. வாயும், மனதும் ஒருசேர இறைவனை நினைத்தபடி, துதித்தபடி, சிந்தித்தபடி இருப்பதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவ்வருளுக்காக காத்திருக்கத்தான் வேண்டியுள்ளது.

    குருக்கத்தி மலர்கள் அழகாக உள்ளது. இதன் விபரங்கள் பற்றி அறிந்து கொண்டேன். கடம்பவனம் என சொல்லைப் படித்ததும், பி. சுசீலா அவர்களின் "கொன்றை முடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து என்ற பாடல் நினைவுக்கு வந்தது. அதில் ஆரம்பமாக கடம்பவனக்குயிலே என்ற வரி வரும்.இன்றைக்கு இரு பகுதிகளும் நன்றாக உள்ளது. மனதுக்கு நிறைவாகவும் உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. க.ஹ. மேடம்... எம்.கே தியாகராஜ பாகவதர் பாடலான 'அம்பா மனம் கனிந்து' பாடலிலும் கடம்பவன குயிலே என்று வரும். உங்கள் கருத்து படித்த உடன் எனக்கு இது நினைவுக்கு வந்தது.

      வாயும் மனதும் ஒருசேர இறைவனை நினைப்பது - மிக மிக அபூர்வமாகத்தான் நடக்கிறது. என்ன செய்ய?

      நீக்கு
    2. பி சுசிலா பாடிய உள்ள கலைவாணி நின் கருணை தேன் மழையே என்ற பக்தி பாடலில் கூட இந்த வரி வரும்

      நீக்கு

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!