29.10.26

முழங்காலோ மைசின் முழங்கையோ மைசின்

சைக்கிள் வண்டி மேலே :: 04 எஸ் எல் ஆர் சி கே!



என்னுடைய பெரிய அக்காவுக்கு, நான்கு குழந்தைகள். ரெண்டு பசங்க, ரெண்டு பொண்ணுங்க. அந்த நாட்களில், ரெண்டு பசங்களும் தனித்தனியா இருந்தா ரத்தினங்கள். ஒண்ணா சேர்ந்தா அராஜகக் கொழுந்துகள். இவர்கள் இருவரிடமும்தான் நான் முப்பது வருடங்களுக்கு முன்பு, வகையாக மாட்டிக் கொண்டேன். 

மதுரை சென்றிருந்த போது, பேச்சு வாக்கில் அவர்களிடம், 'எனக்கு கேரியரில் உட்கார்ந்துதான் சைக்கிள் ஓட்டத் தெரியும்; சைக்கிளில் ஏற, இறங்கத் தெரியாது, சீட்டில் உட்கார்ந்தும் சைக்கிள் விட்டதில்லை' என்று 
கூறினேன்.  
  
அவ்வளவுதான் - அவர்கள் இருவருக்கும் பயங்கரக் கோபம் வந்துவிட்டது. "மாமா - நீங்க இப்படி சொல்வது உங்களுக்கே வெட்கமாக இல்லையா? அவனவன் ஹெர்குலிஸ் கணக்கா ஹீரோ சைக்கிள் ஓட்டறான். நீங்க கேரியரில் உட்கார்ந்து ..... ஹூம். நல்ல வேளை இப்பவாவது சொன்னீங்க. கிளம்புங்க ரேஸ் கோர்ஸ் பக்கம். பத்து ரூபாய் கொடுங்க. ஒரு அவர் சைக்கிள் இப்பவே எடுத்து வந்துவிடுகிறோம். இன்றைக்கு நைட்டு தூங்கப் போகும்பொழுது நீங்க * எஸ் எல் ஆர் சி கே யாகத் தான் தூங்கப் போவீர்கள்" என்றனர்.  

ஆமாம், ஆமாம் உடனேயே கேட்டேன், 'எஸ் எல் ஆர் சி கே - என்றால் என்ன?' 'எஸ் எல் ஆர் சைக்கிள் கிங்' என்றனர். ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்தபுஸ்டியாகப் புன்னகை புரிந்துகொண்டனர். (*எஸ் எல் ஆர் சி கே என்றால் வேறு ஏதாவது சைடு மீனிங் இருக்கா?) 

நான் பர்சைத் திறந்து, பத்து ரூபாயை எடுத்து சின்னவனிடம் கொடுத்து, "டேய் - பார்த்து ஒரு சின்ன சைக்கிளா, கேரியர் இருக்கற சைக்கிளா எடுத்து வாடா" என்றேன். "அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்" என்று சொல்லி, சிட்டாகப் பறந்தான் அவன். 

நான் சைக்கிள் கனவுகளில், (சக்கரம் இல்லாத வெள்ளை இறக்கைகள் ஸ்லோ மோஷனில் ஆடுகின்ற சைக்கிள்கள்) மிதந்தவாறு, பெரியவனுடன்  ரேஸ் கோர்ஸ் பக்கம் சென்றேன். 
சின்னவன், பத்தே நிமிடங்களில் அய்யனார் கோவில் குதிரை உயரம் கொண்ட, கேரியர் இல்லாத தொத்தல் சைக்கிள் ஒன்றின் மீது ஆரோகணித்து வந்தான். அந்த சைக்கிளைப் பார்த்த உடனேயே எனக்கு 'சைக்கிள் ஓட்டுவேன்' என்று இருந்த  கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் 'புஸ்' ஆனது. 

"என்னடா இது? கேரியர் எங்கேடா?"

"மாமா அவர் சைக்கிளில் எல்லாம் எந்த மானமுள்ள மடையனும் கேரியர் விட்டு வைக்கமாட்டான்."

"ஏன்?" 

"அதுவா, கேரியர் இருந்தா பசங்க சிட்டுங்களை ஏத்திகிட்டு குஷாலா ரவுண்டு அடிப்பானுங்க என்று அந்த மா. மடையர்களுக்குத் தெரியும்." 

எனக்குக் குழப்பம் வந்துவிட்டது. மானமுள்ள மடையன் என்றால் யாரு? அந்த மானமுள்ள மடையர்கள் ஏன் சிட்டுக்குருவிகளுக்கு உதவி செய்யத் தயங்குகின்றனர்? நான் குழம்பித் தெளிவதற்குள், சின்னவன், "இருங்க மாமா - சைக்கிள் நல்ல கண்டிஷன்ல இருக்குதா, ஆக்சிலேரேட்டர், பிரேக், க்ளட்ச் எல்லாம் ஒழுங்கா இருக்குதான்னு ஒரு ரவுண்டு போய்ப் பார்த்துவிட்டு வருகின்றேன்" என்று சொல்லி, என் பதிலுக்குக் காத்திராமல், சைக்கிளை ஓட்டிச் சென்றுவிட்டான். 

அப்போ பின்னாடி யாரோ ஒருவர், சைக்கிளில் வந்தவாறு, "புலி .... புலி' என்று கத்த, திக்பிரமை பிடித்து, ஓடத் தயாரானேன். அவருடைய சைக்கிளில் கேரியர் இருந்தது. அதில் சிட்டுக்குருவிகள் ஏதேனும் தென்படுகின்றனவா என்று ஆவலோடு பார்த்தேன். ஒரு புளிமூட்டைதான் இருந்தது. 
      
சின்னவன் பத்து நிமிடங்கள் கழித்து பிரசன்னமானான். இப்போ பெரியவனின் டர்ன். 'நாங்க  ரெண்டு பேரும் சேர்ந்துதானே உங்களுக்கு சைக்கிள் கற்றுத் தரப் போகிறோம். சைக்கிள் என்ன கண்டிஷன்ல இருக்கு என்று நானும் நல்லாத் தெரிஞ்சிகிட்டாதான் உங்களுக்குக் கற்றுத் தர சௌகர்யமா இருக்கும்.' 

பெரியவன் ரவுண்டு அடிக்கும் பொழுது சின்னவன் என்னிடம், ஒரு கேள்வி கேட்டான். 

"மாமா உங்களுக்கு எவ்வளவு அண்ணன்கள்?" 

"நாலு."

"போன மாதம் உங்க தம்பி வந்திருந்தார். அவரிடம், 'உங்களுக்கு எவ்வளவு அண்ணன்கள்?' என்று கேட்டேன். அவர் 'ஐந்து' என்றார் தெரியுமா?"

"அப்படியா? - என்னுடைய அம்மாவுக்கு எப்பவும் ஓர வஞ்சனைதான். கோகுலாஷ்டமி பட்சணங்கள் கூட, எனக்குக் கொடுப்பதைவிட என் தம்பிக்குத்தான் அதிகம் கொடுப்பா. எனக்கு நாலு அண்ணன்கள் மட்டும் கொடுத்து, தம்பிக்கு ஐந்து அண்ணன்களைக் கொடுத்திருக்கா. அம்மாவிடம் இது பற்றிக் கேட்கிறேன்." 
    
சைக்கிளும் பெரியவனும் வந்து சேர்ந்தார்கள். சின்னவன், சைக்கிளைக் கைப்பற்றி, என்னிடம், "மாமா, சைக்கிளுக்குப் பின்னாடி வந்து நில்லுங்க."
               
"ஏன்? நீ அடுத்த ரவுண்டு விடும்பொழுது, நான் அதைப் பிடித்துக் கொண்டே ஓடி வரவேண்டுமா?"

"சீச்சீ அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. நான் சைக்கிளை எப்படி சாய்த்து வைத்துக் கொண்டு, இடது காலால் பெடல் மிதித்து, நேரே பார்த்து, வலது காலை சைக்கிளுக்கு அந்தப் பக்கத்தில் எடுத்துப் போடுகின்றேன் என்று பார்த்துக் கொள்ளுங்கள். அதே போல நீங்களும் ஓட்டணும்."

நின்றேன். பார்த்தேன். 'ப்பூ  ... இவ்வளவுதானா. ... tan alpha = y/x கணக்கு எல்லாம் போட்டு, சைக்கிளைக் கைப்பற்றி, வலது கையால் வலது கை (ஹாண்டிலைப்) பிடித்து, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து .... இல்லை இல்லை இடது காலால் பெடல் மிதித்து, நேரே பார்த்..... அதற்குள் காரியம் மிஞ்சிப் போய்விட்டது. சைக்கிள் என் பக்கம் சாய, நான் இடது பக்கம் விழுந்து, 'சைக்கிள் வண்டி (என்) மேலே' விழ, இடது முழங்காலில் இரண்டு இன்ச்சுக்கு சிராய்ப்பு.  

சின்னவன், பெரியவனிடம் "அண்ணா - மாமாவை வீட்டுக்குக் கூப்பிட்டுப் போயி, நம்ம மெடிக்கல் கப் போர்டிலிருந்து 'முழங்காலோ மை சின்' எடுத்து இவருக்குப் போட்டு விடு" என்று சொல்லி, மேலும் ஒரு ரவுண்டு அடிக்கச் சென்றான். அப்பவே அவனுக்கு மெடிசின் பெயர்கள் எல்லாம் அத்துப்படி. அக்கா தவிர மொத்தக் குடும்பமே மருத்துவப் பல்கலைக் கழகக் கண்மணிகள்! 

மருந்து போட்டுக் கொண்டு, தத்தித் தடவி மீண்டும் வீதிக்கு வந்தேன். இப்போ பெரியவனின் டர்ன். "மாமா - சென்ற முறை நீங்க சைக்கிளை சரியா சாய்க்கலை. இப்போ பாருங்க - நான் எவ்வளவு சாய்க்கிறேன் என்று ....." நன்றாகச் சாய்த்து, பெடல் மிதித்து ..... ஏறி ஓட்டிக் காட்டினான். 
            
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாகிய நான், அந்த வேதாள சைக்கிளை அளவுக்கு மீறிச் சாய்த்து ஒரு உந்து உந்திவிட்டு,  மேலே என்ன செய்யலாம் என்று தீர்மானிப்பதற்குள், சைக்கிள் வலது பக்கமாக வேரற்ற மரம்போல விழ, இப்போ 'சைக்கிள் வண்டி மேலே' நான் விழுந்தேன், எழுந்தேன். வலது முழங்கையில் ஒன்றரை அங்குல சிராய்ப்பு! 
              
வீட்டுக்கு நானே போய் 'முழங்கையோ மைசின்' தேடி எடுத்து, முழங்கையில் அப்பிக் கொண்டேன். 
              
தெருவுக்கு நான் திரும்பி வந்த போது, இடது முழங்கால், வலது முழங்கை இரண்டும் 'விண் ..... விண் ...' சிச்சுவேஷனில் இருந்தன.   "இனி என்னால் சைக்கிள் கற்றுக் கொள்ள முடியாது. நீங்க ரெண்டு பேரும் மீதி இருக்கின்ற நேரத்தை ஆளுக்குப் பாதி நேரம் சைக்கிளை ஓட்டிவிட்டு, வீடு வந்து சேருங்கள்" என்று பெருந்தன்மையுடன் கூறி, வெற்றிகரமாக வாபஸ் ஆனேன். 
   
(* எஸ் எல் ஆர் சி கே என்றால் ஒருவேளை single leg or crooked கை என்று ஏதாவது இருக்குமோ?)       

- 2013 ல்  KGG எழுதிய ஒரு தொடர்பதிவின் ஒரு பகுதியின் மீள் -

========================================================================================


 மனசாட்சியம் - 2​8

KGY Raman 


" கண்டனத்துக்குள்ளாகும் கண்டிப்பு "

நான் சிறுவனாக இருந்த அந்த நாட்களில் எந்தப் பக்கம் பார்த்தாலும் யாரோ ஒருவர் ஏதோ ஒரு விஷயத்துக்காக என்னைக் கண்டித்துக் கொண்டே இருப்பார். வயதில் பெரியவர்களாக இருப்பவர்களுக்கு,  சிறுவர்களை, அவர்கள் சொந்தமானாலும் சினேகிதர் வீட்டுப் பிள்ளைகள் ஆனாலும் அல்லது முற்றும் தெரியாத அந்நியப் பிள்ளைகளாக இருந்தாலும் கண்டிக்கிற உரிமை இருந்தது. நமக்குக் கோபம் வந்து, நமது அப்பா அம்மாவிடம்  " என்னை அந்த மாமா திட்டினார் "  என்று புகார் சொன்னால், பெரும்பாலும் பெற்றவர்கள் " நீ என்ன விஷமம் பண்ணினியோ யாருக்குத் தெரியும் ?  பெரியவங்க கண்டிக்கிறாங்கன்னா நீ என்னவோ தப்பு செய்திருக்கிறாய் என்று அர்த்தம். இனிமேலாவது சமத்தா நடந்துக்கோ "  என்று அவர்கள் பங்குக்கு நம்மை ஒரு தரம் கண்டித்து அனுப்புவார்கள். ஒரே ஒரு சமயம் என் குடும்பத்துப் பெரியவர் ஒருவர் என்னைச் சற்றுக் கடுமையாக ஒழுங்கு செய்ய முற்பட்டபோது என் அம்மா " அவன் அப்படியெல்லாம் செய்ய மாட்டான் .அவனை யாரும் திருத்துகிற  அவசியமில்லை. நீ வாடா இந்தப் பக்கம் " என்று இழுத்துக் கொண்டு போனார். விஷயம் அதற்கு மேல் நீளாமல் முற்றுப்பெற்றது.

இந்த நாட்களைப் போல் இல்லாமல் அந்த காலத்தில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய குளம் அல்லது ஸ்படிகம் போல் தெளிந்த நீர் ஓடுகிற வாய்க்கால் ஆறு எல்லாமே இருக்கும். சிறுவர்களாகிய நாங்கள் அங்கே போய் நீரில் குதித்துக் கும்மாளம் போடுவோம். ஊர் பெரியவர்கள் யார் வந்தாலும் மிகவும் சாதுப் பிள்ளைகள் போல சீரியஸாக குளித்துக் கொண்டிருப்பது போல் நடிப்போம். அதையும் மீறி சில சமயம் பட்டா மணியார் வீட்டு சின்னவர் வந்து " டேய் பசங்களா ! அரை மணி நேரமா பார்க்கிறேன், எல்லாரும் தண்ணில ஊறிக்கிட்டு இருக்கீங்க மரியாதையா எல்லாரும் கரையேறி வீட்டுக்குப் போகணும்  ! இல்லாத போனா நாலு அறை வைத்து நானே வீட்டுக்கு அனுப்பி விடுவேன் " என்று சொல்வார். நல்ல பிள்ளைகளாக உடனே கரையேறி வீட்டுக்குப் போய் விடுவோம்.

பட்டாணியாருக்குச் சொந்தமான மாந்தோப்பு குளம் ஆறு இரண்டுக்கும் மத்தியில் இருந்தது. அதிலே பச்சரிசி மாங்காய்  மரம் ஒன்று இருந்தது. பூவும் பிஞ்சும் காயுமாக பூத்துக் குலுங்கும். வடு முற்றி,  காய் சின்னதாக வளர்ந்தவுடன் அதற்குப் பிடித்தது சனி. பையன்கள் கல்லெறிந்து ஒரு மாங்காய் கூட மரத்தில் வைக்காமல் எடுத்துக் கடித்து சாப்பிட்டு விடுவார்கள். அதற்குக் கூட அந்த பட்டாமியார் எங்களை கோபித்துக் கொண்டதில்லை. மாறாக " டேய் பசங்களா , பழம் ரொம்ப நல்லா இருக்கும்னு சொல்றாங்க ! ஒரு காயைக் கூட பாக்கி வைக்க மாட்டேன் என்கிறீர்களே,  ஏண்டா உங்களுக்கு இந்த துர்புத்தி ? " என்று அலுத்துக் கொள்வாரே தவிர கடிந்து கொண்டதில்லை. தினசரி காலை பூஜை புரஸ்காரம் எல்லாம் ஆனபின் ஒரு சிறு வெள்ளிக் கிண்ணத்தில் சில கற்கண்டுத் துண்டுகளைப் போட்டுக் கொண்டு வெளியே வந்து குழந்தைகள் கண்ணில் பட்டால் ஒரு சின்னத் துண்டு கல்கண்டு கொடுப்பார். பெரிய பணக்காரர் ஆனாலும்,  அவர் கொடுப்பது சின்ன கல்கண்டே ஆனாலும், எங்களுக்கு அது ஏதோ அபூர்வ வஸ்துவாகத் தோன்றும். அப்படியான கருணை உள்ளம் கொண்ட பெரியவர்களும் உண்டு.

ஊர்ப் பெரியவர்களுக்கே இவ்வளவு உரிமை இருக்கும்போது , பள்ளி ஆசிரியர்களுக்கு எவ்வளவு இருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா ? 
" நல்லா அடிச்சு சொல்லிக் கொடுங்க " என்று பெரியவர்கள் வந்து ஆசிரியர்களுக்கு ஓபன் லைசென்ஸ் கொடுத்து விட்டுச் சென்று விடுவார்கள். சில ஆசிரியர்கள் நினைத்தாலே நடுங்கவைக்கும் கடுமையான தண்டனைகளைக் கூட வெகு சாதாரணமாகக் கொடுப்பார்கள்.  அவர்களை கேள்வி கேட்பவர்கள் யாருமே இருந்ததில்லை. 

இன்றைய நிலைமை நிச்சயமாக இப்படி எல்லாம் இல்லை.  நான் வேலை பார்க்கிற இடத்திலே ஒன்றுக்கும் உதவாத ஒரு சோம்பேறி குமாஸ்தாவை அவருடைய மேல் அதிகாரி கண்டிக்கப் போய், அந்த குமாஸ்தா அவாண்டமான புகார்களை சொல்லி மேலதிகாரியை இடைநீக்கம் செய்து வைக்கும் அளவுக்கு விஷயம் சிக்கலாகிப் போனது. அதிலிருந்து அவர் மீண்டு வர என்னால் ஒரு சிறு உதவி செய்ய முடிந்தது என்பது எனக்கு இன்று வரை பெரிய சந்தோஷம்.

" அவன் என் பிள்ளை. அவன் எப்படி இருந்தால் உனக்கென்ன ? " என்பதுதான் இன்று கண்டிக்க முற்படும் யாரானாலும் நிச்சயம் எதிர்கொள்ளக் கூடிய வசனம்.  சில சமயம் கணவன் மனைவி இருவருக்கிடையே கூட இது போன்ற சங்கடங்கள் ஏற்படுகின்றன. 

ஆபீஸ் பற்றிச் சொல்லவே வேண்டாம்.  " நமக்கு எதற்கு வம்பு " என்று கூடுமானவரை சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல், சம்பளத்தை வாங்கிக் கொண்டு , பத்திரமாக ரிட்டயர் ஆனால் போதும் " என்று எண்ணுபவர்களே அதிகம்.

மனோ தத்துவ நிபுணர்கள், " கண்டிப்பு தேவைதான். அதீத கண்டிப்பு அல்லது அடித்து வளர்ப்பது ஆபத்தானது.  கண்டிப்பு  முன் யோசனையுடன் செய்யப்பட வேண்டும். கண்டித்துச் சொல்வதைவிட, எப்படியெல்லாம் இருக்க வேண்டுமோ அப்படி இருந்து காட்டி, குழந்தைகளுக்கு ஒரு முன் உதாரணமாக பெற்றோர்கள் இருக்க வேண்டும் " என்று சொல்கிறார்கள். ஆசிரியர்கள் பிள்ளைகளை அடிக்கக்கூடாது என்று சட்டமே வந்து விட்டது என்று நினைக்கிறேன்.

கண்டிப்பு தேவையில்லை என்று சொல்வதற்கு ஒரு விசேஷ மனப்பான்மை இருக்க வேண்டும். அது என்னிடம் இல்லை.

===============================================================================================

 சென்ற வாரம் பார்த்த ரிக்ஷா மாமா படத்திலிருந்து இன்னொரு பாடல்...!

....தங்க நிலவுக்குள் நிலவொன்று... 



===========================================================================================


பிரபல, பத்திரிகை பிரியரான, குல்தீப் நய்யார், "பிட்வீன் த லைன்ஸ்' எனும், சர்ச்சைக்குரிய நூலை வெளியிட்டார்.
அந்த நூலை, டில்லியை அடுத்த, சிறிய ஊரான, குர்கானை சேர்ந்த, ஒரு சாதாரண,பெயர் தெரியாத, டீக்கடைக்காரருக்கு அர்ப்பணித்துள்ளார். காரணம், நம் நாட்டு பெரிய பெரிய அரசியல் தலைவர்களுக்கு உள்ளதை விட, அதிக புத்தி கூர்மையும், அரசியல் ஞானமும், அந்த டீக்கடைக்காரருக்கு, அதிகம் இருப்பதாக கூறுகிறார்.
[ தினமலர் வாரமலர் ]

===================================================================================

நேபாள பாதாள மஹாதேவ் கோவில் 


======================================================================================

கே ஜே யேசுதாஸின் இன்னொரு பக்கம் வியப்பளிக்கிறது.  எவ்வளவு கோபக்காரர் பாருங்கள்...


========================================================================================

ஓட்டை விழுந்த 
மூட்டையிலிருந்து 
உதிரும் இடியாப்பக் 
கொத்து போல 
சிறு துளி சாரல்களாய் 
பொழிகிறது வானம்


மொத்தமாக கொட்டி 
சுத்தமாக காலி 
ஆகி விடாமல் 
சிறு துளிகளாக 
சீராக பெய்கிறது 
சாரல் மழை

வெளிச்ச கீற்றுகளின் 
நடுவே தெரிகிறது 
வெள்ளி கம்பிகளாய் 
சாரல் மழை

==================================================================================================

1993  சின்னக்கண்ணம்மா படத்திலிருந்து ஒரு பாடல்.  பஞ்சு அருணாச்சலம் எழுதியது.  இளையராஜா இசை.  ஒரு ஆஸ்பத்திரியில் பிறந்த இரண்டு குழந்தைகள் இடம் மாறி விட, அது யதேச்சையாக தெரிய வருகிறது.  பாசப்போராட்டம் ஆரம்பிக்கிறது.  கிட்டத்தட்ட இதே போல ஒரு கதையை முன்னர் கே பாலச்சந்தர் கண்ணா நலமா என்று எடுத்திருந்தார்.

பெண் குழந்தை பிறந்தததும் அதைக் கொண்டாடி தந்தை பாடும் பாடல் 

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே என் மகளே...  பாடுபவர் மனோ.  கார்த்திக், கௌதமி, சுஹாசினி, நாசர் நடித்த படம்.

===================================================================================

சிவந்த மண் படப்பிடிப்புக்கு வெளிநாடு சென்று வந்த அனுபவத்தை சிவாஜி கணேசன் விகடனில் எழுதினார்.  அதிலிருந்து...
 

அந்நிய மண்ணில் சிவந்த மண் 

சிவாஜி கணேசன்


சிற்றுண்டிச் சாலையில் தன் கையிலிருந்த சாண்ட்விச்சை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஸ்ரீதர். ஸ்ரீதரின் முகம் 'கடுகடு'வென மாறியதற்குக் காரணம் என்ன என்று நான் ஆராயத் தொடங்கினேன்.
.
'உங்களுக்கு அது பிடிக்கவில் லையா?" என்று கேட்டேன்.

 உடனே அவர், பிடிக்காமல் ஒன்றுமில்லை.  ஆமா, இது வெஜிடேபிள் சாண்ட்விச்தானே என்றார் சிறிது அவநம்பிக்கையுடன். 

காரணம் அவர், கோபு, ராஜேந்திரன் மூவரும் சுத்த சைவம். பக்கத்தில் இருந்த கிருஷ்ணசாமி வெஜிடபிள் சாண்ட்விச்தான் என்று ஆணித்தரமாகக் கூறினார்.

நம்பிக்கையுடன் கடித்துச் சாப்பிட ஆரம்பித்தார் ஸ்ரீதர்.

ஒரு கடி கடித்துப் பார்த்து ட்டு "ஏண்டா, ராஜி? இது உப்புக் கரிக்கவில்லையா?" என்றார்.

உடனே அவன் "ஆமா. ஆமா உப்போ உப்பு! ஒரே உப்பு!" என்றான்.

உடனே சுவாரஸ்யமாகச் சாப்பிட்ட கோபு ஹோட்டல்காரனுக்கு நன்றி உணர்ச்சி அதிகம்.  அதுதான் உப்பு அதிகம் சேர்த்திருக்கிறான் என்று ஜோக் அடித்தான்.

எனக்கு ஏனோ சந்தேகம் பிறந்தது.  எங்கே அந்த சாண்ட்விச்சை இப்படி காட்டுங்கள் என்றேன். 

அவரும் என் திசையில் அதைக் காண்பித்தார்.

எனக்கு தூக்கி வாரிப்போட்டது.  அடப்பாவிகளா நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருப்பது வெஜிடபிள்  அல்ல. இது ஹேம் சாண்ட்விச்.   அதாவது வெள்ளைப்பன்றியின் கறி என்று கூறி முடிப்பதற்குள் ஸ்ரீதர் தன் வாயில் இருந்ததை பிளேட்டில் துப்பி, மதுரை வீரன் கோவில் முன் நெருப்பு மிதிப்பவர்களைப் போல குதிக்க ஆரம்பித்து லிட்டார். "சோடா, சோடா! தண்ணி என்று சத்தம் போட, சிப்பந்தி சோடாவுடன் ஓடி வந்து, ஏதோ மாரடைப்பால் கஷ்டப்படுகிறார் என்று நினைத்து பதறிப் போனான். சோடாவைக் குடித்து, வாஷ்' பேஸினில் காரி காரித் துப்பினார். "எது நடக்கச் கூடாது என்று நினைத்தேனோ, அது நடந்துவிட்டதே!" என்று புலம்ப ஆரம்பித்தார்.  

சாப்பீட்டு முடித்த கோபு."ஆமாம்! நடந்தது நடந்து விட்டது. இதற்காகத் தீக்குளித்தா நாம் சுத்தம் செய்து கொள்ள முடியும்! ஆனால், ஒன்று: கொஞ்சம் உப்பைக் குறைத்திருந்தால் இது பிரமாதமான அயிட்டம்! என்றான். எல்லாரும் சிரித்து விட்டோம்.

இதற்குப் பிறகு எல்லாரும்புறப்பட்டு ஓட்டல் வந்து சேர்ந்தோம். ரோம் நகரில் எங்களுக்கு உதவி செய்ய, கேள் தல்லோ என்ற யூத மதத்தைச் சேர்த்த நண்பர் ஒருவர் நியமிக்கப் பட்டிருந்தார். அவருக்கு சாந்தமான முகம். அவருக்கு ஆங்கிலம் தெரியும் என்றவுடன் அவரை ஒவ்வொருவரும் தத்தம் அறைக்கு அழைத்தனர்.

ஆனால், ஸ்ரீதர் குறுக்கிட்டு "இத்த கோஷ் டீமுக்கே நான்தான் முதலாளி, என் அறைக்குதான் அவர் வரவேண்டும் என்று சொல்லி விட்டார்.

1969 விகடன் 

========================================================================================

எழுத்தாளர்களுக்கு இந்தியாவில் எவ்வளவு சம்பளம்  நூறு புத்தகங்கள் எழுதி இருக்கிறேன் என்று வெளின்பாட்டு விமான நிலையத்தில் எஸ் ராமகிருஷ்ணன் சொன்னதும் அப்போ நீங்க பில்லினர்னு சொல்லுங்க என்றார்களாம்.

==========================================================================================

சென்ற வாரம் எம் ஜி ஆர் பதில்கள் பார்த்தோமல்லவா...   இந்த வாரம் கருணாநிதி பதில் - தினமணி கதிரிலிருந்து.

உண்மையில் அருகாமை என்றால் அருகே என்று பொருள் அல்ல.  தொலைவு என்று பொருள்.  'தமிழறிஞர்' அதை அறியாமலிருந்தது ஆச்சர்யம்.


உங்கள் வீட்டிலேயே அலுவலகம் வைத்துக்கொண்டு இருக்கிறீர்களே,  நடுநடுவே வீட்டு நினைவு வராமலிருக்கிறதா?

அலுவலகம் கோட்டையில்தான் இருக்கிறது. அங்கு செல்வதற்கு வீட்டை விட்டுக் கிளம்புவதற்கு முன்பும் அங்கிருந்து திரும்பி வீட்டுக்கு  ஓய்வுக்காக வருகின்ற போதும் என் வீட்டை அலுவலகம் போல ஆக்கி விடுகிற பொறுப்பை அன்புக்குரிய பார்வையாளர்கள்தான் ஏற்று கொள்கிறார்கள்.  வீட்டுக்குள் இருக்கிற தொலை பேசி 85225 என்ற எண்ணிலிருந்து பார்வையாளர் பகுதியில் இருக்கிற தொலைபேசி எண் 87384 க்கு என் மனைவி  டயல் செய்து என்னிடம் பேசி "காபி - ஹார்லிக்ஸ் ஏதாவது வேண்டுமா?" என்று கேட்கும் போதுதான் வீட்டில் இருக்கிற நினைவே வருகிறது. மனைவி இருந்து பேசுவதும். பார்வையாளரிடம் நான் இருந்து பேசுவதும் மாடியில் மிக அருகாமையில் உள்ள இரு அறைகள் தான்!

காலையில் எத்தளை மணிக்குப் படுக்கையிலிருந்து எழுந்திருக்கிறீர்கள்?  எழுந்ததும் செய்யும் முதற்பணி என்ன?

ஆறு அல்லது ஏழு மணிக்குப் படுக்கையிலிருந்து எழுகிறேன். முதல் வேலையாக பத்திரிகைகளைப் பார்த்து விட்டு அதன் தொடர்ச்சியாக பைல்களை  எடுத்துக் கொண்டு கிளம்பி விடுகிறேன். 

பல அரசாங்க அலுவல்களை இடையே  பத்திரிகைகளுக்கு எப்படி எழுதுகிறீர்கள்?

ரயில் பிரயாணத்தின் போது பெரும்பாலும் எழுதுதுகிறேன்.. எழுத வேண்டு மென்று நினைத்தால் விடியற்காலை நாலு மணிக்கே எழுந்து எழுதத் தொடங்குவேன்.  ஓயாத பணிகளுக் இடையே எழுதவது என்பது கோடை வெயிலில் நடந்து வந்து ஒரு மரத்தடியில் இளநீர் பருகுவது போல் இருக்கிறது எனக்கு.

மந்திச்சபை விஸ்தரிப்பு இப்போதைக்கு இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்த நீங்கள் திடீரென்று நால்வரை அமைச்சர்களாக்கியிருக்கிறீர்களே,  அதன் நோக்கமென்ன?

"இப்போது இல்லை" என்றுதானே சொன்னேன்.  "எப்போதும் இல்லை" யென்று சொல்லவில்லையே  'இப்போது' என்பது நேரத்தையும் குறிக்கும் ; வாரத்தையும் குறிக்கும்; வருடத்தையும் மாதத்தையும் கூட குறிக்கும்.

நெடுஞ்செழியன் பிரச்னையைத் தீர்க்க உங்களுக்கு உதவியாக இருந்தது எது?

அண்ணா கற்றுத் தந்த அரவணைப்புப் பண்பு.   நாவலருக்கும்  எனக்கும் இருந்த நாட்பட்ட நட்பு'.


======================================================================================



1988 தீபம் இதழில் வந்த சில துணுக்குகள்.









கல்கி சிறுகதைப் போட்டி முடிவு 1948

உதவும் சங்கீதக் கச்சேரி!  1948 ம் வருடம்.  டிக்கெட் விலைகளை பாருங்கள்!

94 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம். அனைவரும் நலமாக இருக்கப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  2. முதலில் படித்து சிரித்தது பாரீஸ் சாண்ட்விச் ஜோக் தான். ஹஹஹஹஹா. ஶ்ரீதர் குதித்ததைப் பார்க்காமல் போய் விட்டோமே என்றிருக்கிறது. நானும் இந்த விதத்தில் ஏமாற இருந்தேன். மீன் வச்ச சாண்ட்விச்சை வைத்து வெறும் சாண்ட்விச் என்று சாதித்தாள் ஸ்விஸ் மங்கை:((((((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா...  ஹா..  அவர்களுக்கு அதெல்லாம் சைவம் போல..

      நீக்கு
  3. எம் எஸ் அம்மாவின் கச்சேரிக்கு 48 இலேயே 500 ரூபாய் டிக்கெட்!!!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.. யார் வாங்கி இருப்பா?

      நீக்கு
    2. எங்க வீட்டில் பெரிய மாமனாரும் மாமியாரும் போவார்கள் என்று என் மாமியார் சொல்லக் கேள்வி. நான் பிறக்கவில்லை அப்போது:))))))

      நீக்கு
    3. அட...   என்னென்ன கீர்த்தனை எல்லாம் பாடினார்களாம்?!!

      நீக்கு
    4. மாமவ பட்டாபி ராமா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

      நீக்கு
  4. சிறுகதைப் போட்டி முடிவுகள் தெளிவாகத் தெரிகின்றன. வி எஸ் சுப்பையா, கோமதி சுப்ரமணியம். கடைசியில் கையெழுத்திருப்பவர்கள் டி கே சி, ரா.கிருஷ்ணமூர்த்தி,ஏ.என். சிவராமன் இவர்கள் எல்லாம் குற்றாலத்தில்
    கூடுவார்கள் என்று அப்போது அங்கு சென்ற உறவுகாரர் சொல்வார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1948 லேயே போட்டி நடந்திருக்கிறது!  இவர்கள் எல்லாம் எழுதி இருக்கிறார்கள்.

      நீக்கு
  5. 1677 கதைகளா. ஆச்சரியமாக இருக்கிறது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  6. காலாக்‌ஷேபம் சூப்பர். அத்தனை ஜோக்குகளும் சிரிக்க வைக்கின்றன. மிக நன்றி ஶ்ரீராம்.:)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அம்மா உண்மையில் நன்றி தினமணி கதிருக்கு தான்

      நீக்கு
  7. உங்களின் முழங்காலோ மைசின், முழங்கையோமசினும் சூப்பர். சைக்கிள் விடக்கற்றீர்களா இல்லையா:))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அம்மா உண்மையில் இதை எழுதியது கே ஜி ஜி

      நீக்கு
    2. ஓ பாராட்டுகள் கேஜி ஜி சார்

      நீக்கு
  8. கான்ஸ்டபில் நிறபது நம்மூரிலயும் படித்திருக்கிறேன். காப்பியடிக்கப் பட்ட ஜோக்கோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம் இப்போது ஒரு மீம்ஸ் வந்தால் எல்லா மொழிகளிலும் அதைக் காப்பி அடித்து விடுகிறார்கள் அது போல தான் இருந்திருக்கும்

      நீக்கு
  9. தாலாட்டுப்பாடும் டாக்டர் சூப்பர்:)))))

    பதிலளிநீக்கு
  10. இப்படியும் ஒரு கச்சேரி நடந்ததா!!!!! சூப்பர் நகைச்சுவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தினமணி கதர் புண்ணியம் அல்லது தீபம் புண்ணியம்

      நீக்கு
  11. கருணா நிதியின் பேச்சு வன்மை தான் தெரியுமே.

    பதிலளிநீக்கு
  12. சைக்கிள் கற்றுக்கொண்ட அனுபவத்தை மிகுந்த சுவையுடன் சொல்லியிருக்கிறார்.

    நான் ஶ்ரீராம் எழுதியிருக்கிறார் என்று படித்து நான்கு, ஐந்து அண்ணன்கள் என்றதும் கசின்கள் உள்ளார்களோ என நினைத்து கடைசியில் கேஜிஜி என்றதும் புரிந்தது.

    இயல்பான நகைச்சுவையான எழுத்து கைவரப்பெற்றிருக்கிறார். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..  நான் இவ்வளவு நகைச்சுவையடன் எழுதி விடுவேனாக்கும்....!  அது அவர் திறமை.

      நீக்கு
  13. சிவந்த மண் அனுபவம் புன்னகையை வரவழைத்தது.

    பதிலளிநீக்கு
  14. மனசாட்சியம் பகுதியில் அந்தக் காலத்தைக் கண்ணாடியில் காண்பிக்கிறார்.

    அந்த நல்ல உள்ளங்கள், நல்ல சூழ்நிலை அறுபது ஆண்டுகளுக்குள்ளாகவே காணாமல் போய்விட்டதே.

    இது வளர்ச்சியா இல்லை வீழ்ச்சியா?

    அண்ணன் பேச்சு (அப்பாவிற்குப் பிறகு) வேதமாக இருந்த காலம் போய் ஒவ்வொருவரும் தங்களைப் பற்றியே சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்களே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி கடவுள் செய்த குற்றமடி...!

      நீக்கு
  15. என் அப்பா, பிரம்பை முதுகுக்குப்்பின்னால் மறைத்து வைத்துக்கொண்டு, பள்ளி வாசலில் 75ல் நின்ற நினைவு வருகிறது. காலை ஒன்பது மணிக்குப் பிறகு வருபவர்களுக்கு எதிர்பாராமல் அடி கிடைக்கும், எனக்கும் சேர்த்துத்தான். அவர் கணித ஆசிரியர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் (10, 11ம் வகுப்புக்கு பாடம் எடுப்பார்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கப்பா தங்கப்பதக்கம் சிவாஜி போல போலிருக்கு..  அந்தப் படம் பார்த்துதான் அப்படியோ...!

      நீக்கு
    2. எங்கப்பா படிப்பைவிட ஒழுக்கத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் தருவார், என்னளவிலும். மற்றபடி விடலைப்பருவ வம்புகளுக்கெல்லாம் முக்கியத்துவம் தர மாட்டார். வளர்ந்துவிட்டால் கை நீட்டக் கூடாது என்பது அப்மா எனக்குச் சொன்ன அறிவுரை. (மேற்கத்தைய வளர்ப்பு முறையே வித்தியாசமானது. சின்னக் குழந்தையிலிருந்தே ஒன்றுமே சொல்லக்கூடாது என்பது அவங்க வளர்ப்புமுறை. நாமதான் பையனுக்கு அறுபது வயசானாலும் குழந்தை நேரத்துக்குச் சாப்பிடாமல் கஷ்டப் படறானே எனப் புலம்பும் கலாச்சாரம் உடையவர்கள்)

      நீக்கு
  16. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  17. அராஜகக் கொழுந்துகள். யார் என்று தெரிந்து விட்டது.
    ஏற்கனவே படித்த மாதிரி இருக்கே! என்று நினைத்தேன் சார் எழுதியது என்று மீள் பதிவு என்று தெரிந்து கொண்டேன்.

    "மாமா - சென்ற முறை நீங்க சைக்கிளை சரியா சாய்க்கலை. இப்போ பாருங்க - நான் எவ்வளவு சாய்க்கிறேன் என்று ....." நன்றாகச் சாய்த்து, பெடல் மிதித்து ..... ஏறி ஓட்டிக் காட்டினான். //

    அது நீங்கள் தானே ஸ்ரீராம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி...   ஆனா அவரு செமையா கதை விட்டிருக்காருக்கா.

      நீக்கு
  18. சைக்ளோபாக்யானம் அருமை...

    ஆக, பத்து ரூபாய்க்கு சிட்டான்கள் பல ரவுண்டுகள் விட்டது தான் மிச்சம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி   அவரு ரொம்ப ஓவரா சொல்லியிருக்காருண்ணே 

      நீக்கு
  19. /// மானமுள்ள மடையன் என்றால் யாரு? ...///

    குல தெய்வம் ராஜகோபால் பாணியில் சொல்லிப் பார்த்துக் கொண்டேன்...

    பதிலளிநீக்கு
  20. மனசாட்சியம் பகுதி அந்தக் கால பெற்றோர் , பெரியவர்கள் , ஆசிரியர்கள் எப்படி இருந்தார்கள் என்பதை இப்போது உள்ளவர்கள் தெரிந்து கொள்ள உதவும் நன்றாக சொல்லி இருக்கிறார்.
    இப்போது அக்கம் பக்கம் வீட்டார் கண்டிக்க முடியாது, வாத்தியார் அடிக்க முடியாது.
    பக்கத்து வீட்டு மாமரத்தில் கல் எறிந்து எடுத்து சாப்பிட முடியாது.

    //ஒரு சிறு வெள்ளிக் கிண்ணத்தில் சில கற்கண்டுத் துண்டுகளைப் போட்டுக் கொண்டு வெளியே வந்து குழந்தைகள் கண்ணில் பட்டால் ஒரு சின்னத் துண்டு கல்கண்டு கொடுப்பார்//
    இந்த வரிகளை படிக்கும் போது


    நான் சிறுமியாக இருந்த போது (தூத்துக்குடியில் இருந்த போது) பக்கத்து வீட்டு தாத்தா காலை சிவபூஜை முடித்து வந்து ஒரு நாள் திரட்சை, ஒரு நாள் கல்கண்டு என்று கொடுப்பார்.
    பிறகு என் மாமனார் தினம் காலை சிவ பூஜை செய்யும் போது கல்கண்டு இரண்டு சிறிய தட்டுகளில் வைத்து நைவேத்தியம் செய்து விட்டு பேர குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். பழங்கள் வைத்தாலும் குழந்தைகளுக்காக கல்கண்டு உண்டு.

    பதிலளிநீக்கு
  21. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...  வணக்கம்.  இணைந்து பிரார்த்திப்போம். 

      இப்பதான் நெனச்சேன்..  அக்கா இந்நேரம் வந்திருக்கணுமேன்னு.

      நீக்கு
    2. காலை எழுந்ததும் வழக்கப்படி ஆறு மணிக்கே பதிவை படித்து விட்டேன். முதலில் இது உங்கள் சைக்கிள் அனுபவமோ என நினைத்தபடி படித்தேன். பிறகு பாவம் உங்கள் மாமா என்பதும் தெரிந்து விட்டது. இங்கு மழை, குளிர், அத்துடன் எங்கள் அலைச்சலில் தலைவலி ஜலதோஷம் என்று இரு தினங்களாக இருந்ததால், நானும் ஒரு "தலைவலி மைசினை" எடுத்து தடவிக் கொண்டதில் ஏற்பட்ட கண் எரிச்சலுடன் மீண்டும் ஒரு சிறிய உறக்கத்திற்கு போய் விட்டேன். அதனால் தாமதம். :))

      நீக்கு
    3. தலைவலி மைசின் இல்லை, தலையோமைசின்!  அங்கே குளிரா...  இங்கே வியர்வை!

      நீக்கு
    4. தலையோமைசின் ஹா ஹா ஹா. திருத்திக் கொள்கிறேன்.

      இங்கு காலை மட்டும் நல்ல குளிர். இதோ இப்போது வெய்யில் பின்னுகிறது. ஆனால், வெய்யிலில் எங்காவது போனால்தான் வியர்வை. வீட்டில் சிரமமான வேலைகள் ஏதும் செய்யாமலிருந்தால் வியர்வையின்றி, இதமாக இருக்கிறது. இந்தக் குளிருக்கு மீண்டும் ஒரு மழை உருவாகலாம். (வ. கி. ப. ம.)

      நீக்கு
    5. இங்கு மழை மழை என்கிறார்கள்.. எங்கே.... எங்கே என்கிறோம் நாங்கள்.

      நீக்கு
    6. இருக்கிற குளிரும் அவ்வப்போதான ழையும் பத்தாது என்று இதோ ஊட்டிக்குச் சில நாட்கள் பயணம்

      நீக்கு
    7. ஊட்டிக்கா? அங்கே என்ன கோவில் இருக்கிறது?

      நீக்கு
    8. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. மூணாறு, கொடைக்கானல், அந்தமான், வட கிழக்கு போன்ற பல பகுதிகளுக்கும் சும்மா டிராவல் பண்ணிப் போவோம். அப்படி இந்த முறை ஊட்டி. விரைவில் வெளிநாடு

      நீக்கு
  22. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. சைக்கிள் ஓட்டி உங்கள் மாமாவை நீங்களிருவரும் (அண்ணன் தம்பியுமாக) எப்படியெல்லாம் அப்போதே கலாய்த்திருக்கிறீர்கள் என்பதையும், இது உங்கள் மாமா எழுதியது என்பதையும் கடைசியில் அவர் பெயருடன் அறிந்தபின் புரிந்து கொண்டேன். பாவம்.! அவருக்கு . முழங்கால், முழங்கையில் அடிபட்டதுதான் மிச்சம். மருந்துகளின் பெயர்கள் (உங்களால் அதற்கு அப்பெயர்கள் உருவாகியதா.?) சிறப்பு. நல்ல நகைச்சுவையுடன் எழுதியுள்ளார்.ஆமாம்.. உண்மையிலேயே 04 எஸ் எல் ஆர் சி கே! என்றால் என்ன? :)) பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 04 என்றால் நான்காம் பகுதி. இன்னொரு கேள்விக்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும்!

      நீக்கு
    2. ஓ.. புரிந்து கொண்டேன். அவர் வந்து பதிவை படித்து விளக்கம் சொல்வார் என எதிர்பார்க்கிறேன்.

      நீக்கு
  23. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.

    சைக்கிள் அனுபவங்கள் - ஹாஹா... எப்படியெல்லாம் வைத்து செய்திருக்கிறார்கள்! :) எனது சைக்கிள் ஓட்டிய நினைவுகள் மனதில் வந்து போனது.

    பெற்ற பிள்ளைகளைக் கூட கண்டிப்பது என்பது வெகு ஜாக்கிரதையாகச் செய்ய வேண்டிய கால கட்டம் இது. நெய்வேலி நகரில் அடுத்தடுத்து இருந்த வீட்டில் இருந்த பெரியவர்கள் கூட எங்களை எல்லாம் கண்டிப்பார்கள். அது மிகச் சாதாரணமாக இருந்தது. இப்போது அப்படிச் செய்ய முடியாது. பிரச்சனை வரும்.

    மற்ற பகுதிகளும் நன்று.

    பதிலளிநீக்கு
  24. தேவா பேட்டி படித்தேன், உங்கள் மழை சாரல் கவிதை அருமை.பாடல் பகிர்வு மற்றும் அனைத்து பகிர்வுகளும் படித்தேன். நகைச்சுவை நன்றாக இருக்கிறது. கச்சேரி கேட்டு அழும் குழந்தைகள், தூக்கம் வர தாலாட்டு பாடும் மருத்துவர் நன்றாக இருக்கிறது. கச்சேரி யில் மருத்துவர் சொன்ன தாலட்டு பாடலை பாடி இருந்தால் யாரும் வெளியில் போய் இருக்க வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  25. -ஹிஹிஹி, ஆரம்ப வரிகளான பெரிய அக்காவுக்கு நான்கு குழந்தைகள், இரண்டு ஆண், இரண்டு பெண் என்றதுமே புரிஞ்சுடுத்து இது கேஜிஜி உங்களிடமும் உங்க அண்ணாவிடமும் மாட்டிக் கொண்டு அப்பாவியாக நின்னதைப் பத்தினதுனு. படிக்கும்போதே முன்னாடியே வந்துடுத்தே என்றும் நினைச்சேன். கடைசியில் பார்த்ததும் புரிஞ்சது. அதிலும் சைகிள் காரியரில் சிட்டுங்களை ஏத்திக்கும் விஷயமும், காரியரில் "புலி"யை வைச்சு விற்பாங்களானு நினைச்சதையும் (மதுரைக்காரங்களுக்கே இந்த "ள" "ல" "ழ" பிரச்னை உண்டு. வாளப்பளம்னு சொல்லுவாங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) நல்லா வாய்விட்டுச் சிரிச்சேன். என்னன்னா எல்லோரும் முன்னாடியே வந்து எல்லாத்தையும் சொல்லிடறாங்க. நான் சாவகாசமா உங்க நேரம் பதினோரு மணிக்குத் தான் வர முடியுது. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா..  கீதா அக்கா..  நீங்க கண்டு பிடிச்சுடுவீங்கன்னு தெரியும்.

      நீக்கு
  26. மேலே உள்ள மெயின் பகுதிக்குப் பொருந்தறாப்போல் தான் இன்னிக்கும் எழுதி இருக்கார். குழந்தைப் பருவத்திலேயே எங்களையும் இப்படிப் பெரியவங்க அதிலும் அக்கம்பக்கம் இருக்கும் பெரியவங்க, இன்னும் சொல்லப் போனால் நான்கு குடித்தனம் இருந்த எங்கள் வீட்டில் நான்கு குடித்தனக்காரர்களும் எங்களை எல்லாம் அதட்டுவாங்க, திட்டுவாங்க. என் அப்பாவோ, அம்மாவோ ஒண்ணும் சொன்னதில்லை. அப்பாவாவது, "நன்னா உறைக்கிறாப்போல் சொல்லுங்கோ மாமா/மாமி" என்பார். அம்மா வாயே திறக்க மாட்டார். பள்ளியிலோ கேட்கவே வேண்டாம். பள்ளிக்கே வந்து வீட்டில் நான் ஆனந்தவிகடன், கல்கி, குமுதம், கலைமகள்னு படிப்பதைப் பற்றிச் சொல்லி நல்லா அடிங்க, இல்லைனா டிசி கொடுத்து வீட்டுக்கு அனுப்பிடுங்க. சமையல் கத்துக் கொடுத்துட்டுக் கல்யாணம் பண்ணி வைச்சுடறேன் என்பார். எங்கேயானும் அவர் சொல்றாப்போல் செய்துடப்போறாரே எனப் பயந்து கொண்டே தான் எஸ் எஸ் எல் சி வரை பள்ளிக்குப் போயிருக்கேன். என் தாத்தா, மாமாக்கள், பெரியப்பாக்கள் இல்லைனா நான் இது கூட நிச்சயமாப் படிச்சே இருக்க முடியாது. ஆகவே அவங்கல்லாம் திட்டினாலும் பொருட்படுத்தியதில்லை. திட்டவும் மாட்டாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக்காலம் போல இல்லை இந்தக்காலம்.   அந்த நாளும் வந்திடாதோ...

      நீக்கு
  27. இப்போதுள்ள சூழ்நிலையில் பெற்ற குழந்தைகளையே பெற்றோர் ஏதும் சொல்லுவதும் இல்லை. அப்படியே ஏதேனும் சொல்ல நேர்ந்தாலும் சொல்ல முடிவதும் இல்லை. ஆசிரியர்கள் பாடு பரிதாபத்துக்கு உரியது. என் அப்பா சேதுபதி பள்ளியில் வேலை பார்த்தபோது அடங்காத மாணவர்களை அடக்குவதற்கு அப்பா, விளையாட்டு வாத்தியார், தறி வாத்தியார்கள் 2 பேர், தச்சு வாத்தியார் ஒருத்தர்னு நாலைந்து பேர்கள் இருந்தனர். ஸ்கூல் காம்பவுன்டில் அவங்க திசைக்கு ஒருத்தராக நின்னுண்டு அடாவடி மாணவர்களைக் கண்காணித்துக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவாங்கனு சொல்லிப்பாங்க. எங்க பள்ளியில் கிரவுண்டை 3 சுத்துச் சுத்தணும். அதுவே பலரால் முடியாமல் போனதுண்டு. அசெம்பிளியில் முழங்கால் போடணும். அது ரொம்பப் பெரிய அவமானமாகக் கருதப்படும். இப்போவெல்லாம் இப்படி தண்டனை கொடுக்க முடியாது. அவ்வளவு ஏன்? அவரவர் வகுப்பு அறையை அந்த வகுப்பு மாணவிகள் தான் சுத்தம் செய்வோம். தண்ணீர்ப் பானைகளைக் கழுவி அலம்பி புதுசாகத் தண்ணீர் பிடிச்சு வைப்போம். டஸ்டர், சாக்பீஸெல்லாம் இல்லைனா ஸ்டோர் ரூமுக்குப் போய்க் கேட்டு வாங்கி வைப்போம். ஆனால் இப்போல்லாம் இதெல்லாம் செய்ய முடியாது. கேந்திரிய வித்யாலயாவில் படிச்ச எங்க குழந்தைகள் படிக்கும்போது கூட வாரம் ஒரு நாள் முறை போட்டுக் கொண்டு இதெல்லாம் செய்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பல்லாம் அவங்கவங்க வகுப்பறையை சுத்தம் செய்யச் சொன்னா நியூஸ் பேப்பரிலேயே பெரிய விஷயமா கொடுமைங்கற மாதிரி போடறாங்க...  அப்புறம் எங்கே அடிக்கறது, முட்டி போட வைக்கறது?  ஆமாம், அமெரிக்கால எல்லாம் முட்டி போட வைக்க மாட்டாங்களா?  காதைப் பிடித்து திருக மாட்டாங்களா?

      நீக்கு
    2. முட்டி போடறதெல்லாம் கிடையாது. லைப்ரரிக்குப் போய்ப் படிக்க வேண்டும்.

      நீக்கு
    3. அது பரவாயில்லையே

      நீக்கு
  28. வழக்கம்போல் ரிக்ஷா மாமா வரலை. உங்க நாட்டில் இதுக்கு அனுமதி இல்லைனு சொல்லிடுத்து. நேபாள பாதாள மஹாதேவர் கோயில் பார்த்திருக்கோம். படங்களும் உண்டு. ஆனால் அப்போ ஃபில்ம் காமிரா என்பதால் படங்களை எங்கே வைச்சிருக்கோம்னு தெரியலை. :( குல்தீப் நய்யரின் இந்தப் புத்தகம் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன். தேவாவை மத்தியானமாய்ப் பார்க்கணும். இங்கே எட்டேமுக்கால் தான் ஆறது. காலங்கார்த்தாலே தான் இங்கே. :) மழைக்கவிதைகள் நல்லா இருக்கு. ஆனால் மழை வேறே; சாரல் வேறே. குற்றாலத்தில் பருவம் ஆரம்பிச்சதுனால் மதுரைப்பக்கங்களில் சாரல் இருக்கும். குற்றாலச் சாரல் என்றே அதைச் சொல்வோம். அதை அனுபவிச்சவங்களுக்குத் தான் புரியும்னு நினைக்கிறேன். தமிழ்நாட்டிலும் மழை ஆரம்பிச்சிருக்கும்னு நினைக்கிறேன். இங்கே இப்படி அவ்வப்போது எப்போவானும் நினைச்சுண்டு இடிக்கும். வானம் உறுமிப் பார்க்கும். சின்னக்கண்ணம்மானு படம் வந்திருக்கா? தெரியாதே! ஆனால் கார்த்திக்கின் நடிப்புப் பிடிக்கும். விஜய், சூரியாவெல்லாம் அவ்வளவாய்ப் பிடிக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படபடபடபடன்னு எல்லாத்தையும் சொல்லிட்டீங்க...  சின்னக்கண்ணம்மான்னு படம் வந்திருக்கு.  இசை இளையராஜா.    அந்தச் சாரல் மழையை பூஞ்சாரல்ன்னு சொல்லலாம்.

      நீக்கு
  29. சிவந்த மண் அனுபவங்கள் வெகு சமீபத்தில் வினோ மோகன் பகிர்ந்திருந்த நினைவு. ஆனால் ஸ்ரீதரின் இந்த அனுபவம் தெரியாது. எஸ்.ரா. சொல்லி இருப்பதையும் இப்போத் தான் பார்க்கிறேன். கருணாநிதி பதில்கள் வழக்கம் போல. தீபத்தில் வந்திருக்கும் துணுக்களில் ஓரிரண்டு தவிர்த்து மற்றவை படிக்கலை. ஓகே. பரவாயில்லை ரகத் துணுக்குகள். சிறுகதைப் போட்டி முடிவு, எம்.எஸ்.அம்மாவின் கச்சேரிக்கட்டணம் எல்லாமும் அசத்துகின்றன. இந்த வாரம் கேஜிஜி தயவில் ஓட்டியாச்சு. நாளைக்கு என்ன? புதுசாத் தேடணுமா? இஃகி,இஃகி,இஃகி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லைட்டா புரிஞ்சிகிட்டீங்க போல...  ஹிஹிஹி....

      நீக்கு
  30. மனசாட்சியம் பகுதி அந்தக்கால பெற்றோர், ஆசிரியர்கஆள் பற்றி நன்றாக சொல்கிறது. சிறுவயது எமது பாடசாலையில் ஒரு ஆசிரிய மிக நீ ...
    ......ண்.....ட... தடி ஒன்றை தனது மேசையில் வைத்திருப்பார் அது வகுப்பின் முக்கால் வாங்குவரை எட்டும். தடியை பார்க்கவே பயமாக இருக்கும் நல்ல காலம் அதில் அடிவாங்காமல் தப்பித்தேன்.

    ஜோக்ஸ் அழும் குழந்தைகள் ...ஹா...ஹா.
    டாக்டரின் தூக்கமருந்து....ஹா...ஹா

    பதிலளிநீக்கு
  31. KGG சாரின் அனுபவங்களை ஏற்கனவே படித்திருக்கிறோம். அவர் கேரியரில் உட்கார்ந்துதான் சைக்கிள் ஓட்டுவாரா? திருச்சி சங்கரன் என்ற மிருதங்க வித்வான் எங்கள் வீட்டிற்கு அருகில்தான் இருந்தார், அவரது சகோதரர் இப்படி கேரியரில் உடகார்ந்துதான் சைக்கிள் ஓட்டுவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரும் கேரியரில் அமர்ந்து வேகமாக சைக்கிள் ஓட்டுவார்.  ஆனால் அப்படி ஓட்டிக்கொண்டே திடீரென அவர் அப்படியே சீட்டிலும் அமர்ந்து ஓட்டத்தொடங்கி விடுவார்.  யாரென்று நினைவில்லை!

      நீக்கு
  32. பொக்கிஷப் பதிவுகள் அருமை! கலைஞரின் சாதுர்யம் அலாதி! ஸ்ரீதருக்கு ஏற்பட்ட அனுபவம் எனக்கும் ஒரு முறை இந்தியன் ஏர்லைன்ஸில் ஏற்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதில் என்ன சாதுர்யம்?  ஏதோ பதில் சொல்லி இருக்கிறார்.   MGR பதில்கள் படித்தீர்களோ?

      நீக்கு
    2. சாதுர்யம் என்பதற்கு எங்கள் மாமனார் வேறு ஒரு அர்த்தம் சொல்வார்.

      நீக்கு
  33. குமுதம் பத்திரிகையில் 'சின்ன கண்ணம்மா' பட விமர்சனத்தில் "கௌதமி இனிக்கிறார்" என்று எழுதிவிட்டு, சில பக்கங்கள் தாண்டி கார்த்திக்கும், கௌதமியும் இருக்கும் ஸ்டில்லை போட்டு, "இனிப்புடன் கார்த்திக்" என்று caption எழுதியிருந்தார்கள். விமசனத்தை படிக்காவிட்டால் ஒன்றும் புரியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு நினைவில்லை.  ஆனால் அப்போ கௌதமி நன்றாயிருப்பார்!

      நீக்கு
  34. மழைக் கவிதைகள் அழகு!

    பதிலளிநீக்கு
  35. //இந்த நாட்களைப் போல் இல்லாமல் அந்த காலத்தில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய குளம் அல்லது ஸ்படிகம் போல் தெளிந்த நீர் ஓடுகிற வாய்க்கால் ஆறு எல்லாமே இருக்கும். சிறுவர்களாகிய நாங்கள் அங்கே போய் நீரில் குதித்துக் கும்மாளம் போடுவோம்.// YESSSSS! அந்த வாய்க்கால்களெல்லாம் இப்போது குப்பையாக இருப்பதை பார்க்கையில் மனது வலிக்கிறது. ஸ்ரீரங்கத்தில் எங்கள் வீட்டிற்கு பின்னால் திருமஞ்சன காவேரி என்ற பெயரில் இருந்த வாய்க்காலை இப்போது குப்பை காவேரி என்கிறார்கள்:(( கோடையில் அதில் அதிகம் தண்ணீர் இருக்காது, அதைக்கடந்து, சற்று மேடேறி, லயங்கரை வழியாக நடந்து காவேரியில் போய் குளித்து விட்டு வருவோம். திருச்சியில் காவேரிக்கரையை ஒட்டி நிறைய குடியிருப்புகள் வந்திருப்பதைப் பார்த்தால் காவேரியும், கூவமாகி விடுமோ என்ற அச்சம் வருகிறது.
    எங்கள் ஊரில்கூட பூர்சம் வாய்க்கால் என்பது இப்போது காய்ந்து, குப்பை மேடாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு இந்த அதிருஷ்டம் எல்லாம் வாய்க்கவில்லை.

      நீக்கு

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!