நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
30.10.26
சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன் சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன்
'சொல்லவா.. கதை சொல்லவா... நடந்த கதை சொல்லவா' தொடர்ச்சி....
ஆல் செட்! மேடம் வெற்றிகரமாக உண்மையிலேயே நல்லபடியாக பிரசவம் பார்த்து பேர்வாங்கினார்.
'சரி,, இதுல என்ன பிரச்சனைன்னு கேக்கற உங்க மைண்ட்வாய்ஸ் எனக்கும் கேட்குது..
சொல்றேன்...
என்று முடித்திருந்தேன் இல்லையா? என் மாமியார் மருத்துவமனை உள்ளே வந்த உடனேயே ஆக்சிஜன் ரீடிங் குறைந்து விட்டது என்றும் சொல்லி இருந்தேன். மாமியாரை பார்த்துக் கொண்டிருந்தது ஒரு பொது மருத்துவர். இரண்டு நாட்கள் பார்த்து விட்டு ஆக்சிஜன் அளவில் ஏற்றமில்லை என்று தெரிந்ததுமோ,
இதயத்தின் செயல்பாடு 25 சதவிகிதம்தான் என்று தெரிந்த பின்னரோ என்ன செய்திருக்க வேண்டும்? உடனே வேறு பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று சொல்லி இருக்க வேண்டும். இவர் என்னடா என்றால் இதயத்துக்கான மாத்திரைகளை ஒவ்வொன்றாய் கொடுத்து டெஸ்ட் செய்து கொண்டிருந்தார். நோக்கத்தில் தப்பு சொல்ல முடியாது. ஒருவேளை இங்கேயே சரி செய்துவிட முடியுமா என்று பார்த்திருக்கிறார் என்று சொல்லலாம். லாம்தான். ஆனால் அது பேஷண்ட் உயிருக்கு ரிஸ்க் இல்லையா?
ஐசாப்ட்டின் கொடுத்து கிட்னி அளவை மானிடர் செய்து அதை நிறுத்தி வைமாடாவுக்கு வந்து வேறு சில பக்க விளைவுகளை சோதித்து அதை மாற்றி என்று முயற்சித்துக் கொண்டிருந்தார். முயற்சித்துக் கொண்டிருந்தாரா, பழகிக் கொண்டிருந்தாரா என்று நினைக்கத் தோன்றியது.
நாங்கள் என்னடாவென்றால் இரண்டு நாட்கள் வைத்து அப்ஸர்வ் செய்து டிஸ்சார்ஜ் செய்வார் என்று எதிர்பார்த்திருக்க மூன்றாவது நாள் நான்காவது நாட்களில் மாமியார் நினைவே இல்லாமல் இருந்தார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நினைவுக்கு வந்தார்.
இதற்கு நடுவில் அவர் அதாவது மருத்துவர் ஒரு விசேஷம் என்று இரண்டு நாள் வெளியூர் சென்று அங்கிருந்தே இவரை மானிட்டர் செய்வதாக சொன்னார். செய்தார்தான்.
பொதுவாக மற்ற மருத்துவமனைகளில் - எனக்குத் தெரிந்து ராமச்சந்திராவில் - ஏனென்றால் நான் அங்கு உள்நோயாளியாக இருந்தேன்! - தினசரி அதிகாலை வந்து பெட்ஷீட், தலையணை உறை ஆகியவற்றை மாற்றி விடுவார்கள். பேஷண்ட்டுக்கு மட்டுமல்லாது, பேஷண்ட் அட்டெண்டரின் பெட்ஷீட், தலையணை உறைகளையும் மாற்றி விடுவார்கள்.
இங்கு என்னடா என்றால் மூன்று நாட்கள் ஆகியும் மாற்றாமல் இருந்ததைக் கண்டு, நான் கேட்டபிறகு கடனே என்று வந்து மாற்றினார்கள், காலை 11 மணிபோல. சம்பளம் ரொம்ப பேருக்கு கொடுக்க முடியாது என்று குறைவான பேர்களையே வேலைக்கு வைத்துக் கொண்டிருந்தார்கள் போலும். பத்து அறைக்கு இருவர்தான் இருப்பார்கள். கூப்பிட்டாலும் லேசில் வரமாட்டார்கள்.
அதில் இரண்டுபேர் பேஷண்ட் கோவாப்பரேட் செய்யவில்லை என்று கோபம் வேறு வந்தது அவர்களுக்கு. அதை பேஷன்டின் மேல் காட்டினார்கள்.
இதையெல்லாம் பார்த்தபிறகு மகனும் மருமகளும் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டார். அவர்கள் பிரசவத்தை இங்கேயே வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருந்தார்கள். இதில் மாமியாருக்கு காது வேறு கேட்காது. மெஷின் வாங்கி கொடுத்தான் போட்டுக் கொள்ளவில்லை. காதில் மெஷின் போட்டுக் கொண்டால் வயிறு வலிக்கிறதாம்!
அங்கிருந்த மேடம் சிறந்த முறையில் பிரசவம் பார்க்கிறார்கள் என்று பேர் வாங்கி இருக்கிறார். ஆனால் கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்வதில்லை. இந்தக் குறை பெரும்பாலும் எல்லா டாக்டர்களிடமும் இருக்கிறது. 90 % மருத்துவர்கள் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளிப்பதில்லை. கீதா அக்காவுக்கு வாய்த்த மருத்துவர்கள் போல 10 % பதில் சொல்கிறார்கள். நல்ல முறையில் விளக்கமும் கொடுக்கிறார்கள். துரதிருஷ்டம் எங்கள் மருத்துவர் 90% செக்ஷனில் இருந்தார். இந்த மருத்துவமனை என்றால்
எந்த நேரமானாலும் மேடமே வந்து பிரசவம் பார்ப்பார். மற்ற பெரிய மருத்துவமனைகளில் டியூட்டி டைமில் வலி வந்தால் பெரிய மருத்துவர் பார்ப்பார். இல்லாவிட்டால் சிறிய மருத்துவர் அல்லது செவிலியர்தான்!
ஆனால் -
அங்கு குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவர்கள் எப்போதும் இருப்பார்கள். (இதனாலும் பின்னர் ஒரு பிரச்னை வந்தது. அதை பின்னர் சொல்கிறேன்!) இங்கு அழைப்பின்பேரில் - அதுவும் அவர்களுக்கு வசதியான நேரத்தில்தான் - வருவார்கள்.
இதை எல்லாம் யோசித்து ஏற்கனவே இதுவா அதுவா என்று ஒற்றையா ரெட்டையா போட்டுப் பார்த்துக் கொண்டிருந்த மகன் டெலிவரி ராமச்சந்திராதான் என்று தீர்மானித்தான்.. அது கிளைக்கதை.
என்ன காரணம் தெரியவில்லை , எங்கள் வீட்டில் கொலு வைக்கும் வழக்கம் இல்லை. " கொலு எல்லாம் வருஷா வருஷம் வைக்கிற வழக்கம் இருந்தால் தான் வைக்கணும் " என்று எங்கள் வீட்டில் இருந்த பெரிய பாட்டி சொல்வார். கிராமத்தில் இருந்த சித்தப்பா வீட்டில் மட்டும் கொலு வைப்பார்கள். பள்ளிக்கூட விடுமுறை சீசன் என்பதால் நாங்கள் எல்லோரும் சித்தப்பா வீட்டுக்கு கொண்டாடப் போய் விடுவோம். ஒரே முக்கிய வீதியைக் கொண்ட மிகச் சிறிய கிராமம். எல்லா வீட்டுக்குள்ளும் உரிமையாக நுழைந்து " இன்னும் கொஞ்சம் சுண்டல் " என்று கேட்டுப் பெறலாம்.
பிந்தைய நாட்களில் பட்டணவாசமாக வந்த போது, நவராத்திரி ஆரவாரம் இன்னும் பலமாக இருந்தது. மாலை வேலைகளில் வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு பள பளவென்று ஆடை அணிகள் சகிதம் சிறுமிகள் வீடு வீடாகப் போய் பாட்டு பாடி தாம்பூலம் வாங்கி வருவதை பையன்களாகிய நாங்கள் பார்த்து மகிழ்ந்த பருவம். திண்ணையில் இருந்தே அக்கம் பக்கத்து வீடுகளுக்குள் இருந்து பரிச்சயமான பெண்கள் பாடுவது நமக்குக் கேட்கும். " நவராத்திரி எல்லாம் பெண்களுக்குத் தான். தடிப் பசங்களுக்கு இல்லை" என்பது எழுதாத விதி. அது அந்த ஊரில் மட்டும் தான் அப்படி இருந்ததா இல்லை எல்லா ஊரிலும் அப்படித்தானா என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை. சிறு சிறு கூட்டமாக வெளிவரும் பெண்கள் அவர்களுடைய நண்பர்கள் ஆன பசங்களுக்கு கொஞ்சம் பிரசாதம் பங்கு பிரித்துக் கொடுப்பார்கள். " இதை சாப்பிட்டுப் பார் ரொம்ப நல்லா இருக்கு "என்ற சிபாரிசுடன் முக்கால் அங்குல விட்டம் உள்ள காரவடை போன்ற அபூர்வ வஸ்துகள் கூட தின்னக் கிடைக்கும். சந்தடி நின்ற பிறகு உரிமையுடன் வீடுகளுக்குள் நுழைந்து எட்டிப் பார்த்தால் மிச்சம் மீதி இருந்தால் நமக்கும் கொஞ்சம் சுண்டல் கிடைக்கும்.
1949 அப்போதே எங்கள் ஊரில் இருந்த பெரிய ஹோட்டல் அதிபர் வீட்டு கொலு ரொம்ப பிரசித்தம். அதற்குப் பையன்களும் போகலாம். கூடத்தில் தடுப்புகள் போட்டு கயிறுகள் கட்டி வரிசையாக உள்ளே போய் கொலுவைப் பார்த்து விட்டு வெளியே வருவதற்கு வழி செய்து வைத்திருப்பார்கள். ஏகப்பட்ட கொலு பொம்மைகள் வகை வகையாக பிரிக்கப்பட்டு அழகுற அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். சினிமா தியேட்டர், பாட்டுக் கச்சேரி , சுவாமி ஊர்வலம் என்பது போன்ற நிகழ்ச்சிகளை பொம்மையாக வைத்திருப்பார்கள். அவற்றில் அன்றன்று சிறு சிறு மாற்றங்கள் செய்வார்கள். கொலுவை வைத்து விட்டால் நடுவிலே அதை மாற்றி வைக்கக் கூடாது என்கிற விதி பெரும்பாலும் பின்பற்றப்பட்டு வரும் அந்தக் காலத்திலும் கூட, அந்த வீட்டில் மட்டும் தினசரி என்ன மாற்றங்கள் செய்திருக்கிறார்கள் என்பது ஒரு சுவாரசியமான விஷயமாக இருந்தது. நூற்றுக்கணக்கான பேர் தினசரி வருவதால் தாம்பூலம் சுண்டல் ரவிக்கைத் துண்டு என்பவை எல்லாம் முக்கியஸ்தர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. பாக்கி எல்லாரும் போய்ப் பார்த்து வரலாம். அவ்வளவுதான்.
கொலுவுக்கு வரும் பெண்கள் பாட வேண்டும் என்பது கிட்டத்தட்ட ஒரு கட்டாயமான விதி. பாடத் தெரிகிறதோ இல்லையோ ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பாட்டைப் பாடியே ஆக வேண்டும். சற்று வசதியான பணக்கார வீட்டுப்பெண் பத்மாசனி நவராத்திரி ஒன்பது நாளும் ஒரே பாட்டையே எல்லா வீட்டிலும் பாடுவாள். அவளுடைய பாட்டை பிறர் கற்றுக் கொள்ளக் கூடாது என்கிற கருமித்தனம் தான் காரணம். " ஏண்டி பத்மா, வேற பாட்டுப் பாடேன். நேத்திக்கும் இதே தானே பாடினே " என்று கேட்கும் மாமிகளுக்கு " இந்த வருஷம் இதுதான் நவராத்திரி பாட்டு " என்று கறாராகச் சொல்லுவாள். இன்றைக்கு இருந்தால் பத்மாசனிக்கு 85 வயதாகி இருக்கும். எங்கள் வாடகை வீட்டு உரிமையாளர் பெண்ணுக்கு பத்மாசனியின் அந்த வருஷத்துப் பாட்டு ரொம்ப பிடித்துப்போயிற்று. " அவளை நம்ம வீட்டுக்கு வந்து பாடச் சொல்லுகிறேன். அந்தப் பாட்டை நீ கேட்டு ஒரு பேப்பரில் எனக்கு எழுதிக் கொடு " என்று என்னிடம் கேட்டுக்கொண்டாள். அப்படியே செய்து நல்ல பெயர் வாங்கிக் கொண்டேன்.
பள்ளிக்கூட புத்தகங்கள் பென்சில் ரப்பர் இவற்றை பூஜையில் வைத்து சுவாமியை வேண்டிக்கொண்டு " நன்றாகப் படிப்பு வர வேண்டும் " என்று பிரார்த்தனை செய்ததில் இருந்த பக்தி உணர்வு நாட்கள் செல்லச் செல்ல வீரியம் சற்றுக் குறைந்து விட்டதோ என்கிற வருத்தத்தை ஏற்படுத்தும்.
அறியாத பருவத்தில் ஆரவாரமான நாட்கள் அவை. நினைத்தாலே இனிக்கும் என்று தைரியமாக சொல்லக்கூடிய விசேஷ சமாச்சாரம்.
செகாவ் தன் வாழ்நாள் முழுவதும் காதலித்தார். மிக அதிக காதல் கதைகள் எழுதியவர் செகாவ். அது இரண்டு வகை. ஒன்று செகாவ் காதலித்தவர்கள். இன்னொன்று செகாவை காதலித்தவர்கள்....
எஸ் ரா பகிர்ந்து கொள்ளும் இந்த வாசிப்பனுபவம் சுவாரஸ்யமாக இருந்ததா என்று சொல்லுங்கள்.
கேள்வி : தியானம் செய்யும்போதுதான் எனக்குப் புதுசு புதுசாக என்னெவெல்லாமோ… மனதில் ஓடுகிறது. உங்களுக்கு?
கிரேசி பதில் : நானும் எனது நண்பன் ரவியும் தினமும் மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடத்துக்குச் சென்று, நல்ல பிள்ளைகளாக அமர்ந்துகொண்டு கண்ணை மூடி தியானம்(!) செய்வது வழக்கம். இதில் என்ன வேடிக்கை என்றால், நண்பன் ரவி நிஜமாலுமே தியானம் செய்வான். எனக்குத் தெரிந்த ஒரே தியானம் ‘மத்யானம்’ மட்டும்தான்!
தியானம் செய்துவிட்டு திரும்பும்போது ரவி என்னிடம் ‘‘டேய் மச்சான்… தியானம் செய்றப்ப குண்டலினி சக்தி முதுகுத் தண்டுவடத்துல ஏறுற ஃபீலிங் வருதா’’ன்னு கேட்பான். நான் சிரித்து மழுப்பிவிடுவேன். இப்படித்தான் ஒரு தடவை நாங்கள் இருவரும் தியானம் செய்துகொண்டிருக்கும்போது, ரவியிடம் நான் ‘‘ரவி.... நெத்திக்கிட்ட சஹஸ்ராஹாரத்துல சூடா ஒரு ஃபீலிங் ஏற்படுதுடா…’’ என்றேன். சட்டென்று கண்ணைத் திறந்துப் பார்த்த ரவி, ‘‘முட்டாள்! பின்னாடி தள்ளி உக்காருடா. சுவாமி ஆரத்தி காட்டுறார், அதான் சுடுது… புருவம் பொசுங்கிடப் போகுது…’’ என்றான்.
பன்னிரண்டு வருஷம் வனவாசம் முடிந்துவிட்டது. பதின்மூன்றாவது வருஷத்தில் ஏதேனும் ஒரு ஊரில் யாரும் கண்டுகொள்ளாதபடி வசிக்கவேண்டும். இதற்கு அக்ஞாதவாசம் பெயர்.
பாண்டுவின் புத்திரர்களான தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன் சகாதேவன் ஐவரும், அதுவரை தங்களுடன் இருந்த பிராமணோத்தமர்களை எல்லாம் அனுப்பிவிட்டு. எங்கே யார் யார் எப்படி மறைந்து வாழ்வது ஆலோசிக்கலானார்கள்.
விராட தேசத்திலே போய் மறைந்து வாழத் தீர்மானித்தார்கள். கங்கன் என்ற பெயரில் சந்நியாசி வேஷத்தில் விராடனை மகிழ்ச்சியூட்டி ஆலோசனை சொல்லும்பணி ஏற்க விரும்புவதாக யுதிஷ்டிரன் சொன்னார்.
"நான் அதே விராடனுடைய அரண்மனையில் சமையல் வேலை செய்வேன்" என்று கூறினான் பீமன்.
"எனக்கு பெண்ணாக இருக்கவேண்டும் என்று ஏற்கனவே ஊர்வசியால் சாபம் ஏற்பட்டிருக்கிறது. நான் வளையலும் ரவிக்கையும் அணிந்து விராடனுடைய அந்தபுரத்தில் ஸ்திரிகளுக்கு நர்த்தனம், கானம் கற்பிப்பேன்" என்றான் அர்ஜூனன்.
"நான் விராடனுடைய குதிரை லாயத்தில் குதிரைகளை கவனித்துக் கொள்ளும் வேலையில் மறைந்திருப்பேன்" என்று நகுலன் சொன்னான்.
"நான் விராடனுடைய பசுக்களையும் மாடுகளையும் கொள்வேன்" என்றான் சகாதேவன்.
"நானும் உங்களுடனேயே அதே விராடனுடைய அரண்மனையில் சைரந்தியாக இருந்து ஸ்திரிகளுக்கு தலை பின்னியும் பாணிகம் செய்தும் இருப்பேன்" என்றாள் திரொளபதி.
இவ்வாறு பாண்டவர்கள் தீர்மானித்த பிறகு தௌம்யா அவர்களை ஆசிர்வதித்து, அவர்களுக்கு , புத்திமதிகள் சொன்னார்.
"ராஜ கிருகத்தில் வேலைக்கு அமருகிறவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதிகமாகப் பேசாமல் அரசனை உபாசிக்க வேண்டும். பின்னரே யோசனை சொல்ல வேண்டும். கேளாமல் ஒருபோதும் யோசனை சொல்லப் புகலாகாது.
சமயம் பார்த்து அரசனைப் புகழ வேண்டும். அற்ப காரியமாயினும் அரசனிடத்தில் தெரிவித்தே செய்ய வேண்டும்.
அரசன் மனித உருவம் கொண்ட நெருப்பு ஆவான். அதிகம் கிட்ட நெருங்கக் கூடாது. அலட்சியம் செய்யக் கூடாது.
"எவ்வளவு நம்பிக்கையும் அதிகாரமும் பெற்ற போதிலும் எந்தச் சமயத்திலும் உடனே நீக்கப்படலாம் என்று வாயிலைப் பார்த்தவண்ணமே எப்போதும் இருக்க வேண்டும்.
அரசனுடைய அன்பைப் பெற்றுவிட்டதாக எண்ணி அவனுடைய வாகனத்திலாவது, ஆசனத்திலாவது, ரதத்திலாவது ஏறக்கூடாது.
அரசனிடம் சேவை செய்கிறவன் சோம்பலற்று மனத்தை அடக்கியவனாக இருக்க வேண்டும்.
ரகசியமாகச் சொல்லப்பட்ட வார்த்தைகளை வெளியில் பேசக்கூடாது. சேடிகளிடமிருந்து எந்தவிதமான பரிதானமும் வாங்கக்கூடாது.
"வேறொரு சேவகனைப் பார்த்துப் பொறாமைப் படக்கூடாது. அறிவுள்ளவர்களை விட்டு மூடர்களை அதிகாரத்தில் அரசன் வைப்பான். அதைக் கண்டு மனக்கசப்பு அடையக்கூடாது. அரண்மனை ஸ்திரிகள் விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்களிடம் நேசம் பாராட்டக்கூடாது.
சுவர்களில் ஓரடி உயர எழுத்துக்களில் விளம்பரங்கள் விதவிதமாக ஒன்றி வாழ்ந்தன. நிஜாம் லேடி புகையிலை , ஆர்.கே.கட்பாடிகள் -எச்சரிக்கை! புரட்சி தீ! சுவிசேஷக் கூட்டங்கள் - ஹாஜி மூசா ஜவுளிக்கடை (ஜவுளிக்கடல் ) - 30 .9 -1973 அன்று கடவுளை நம்பாதவர்கள் சுமக்கப் போகும் தீச்சட்டிகள்
மதுரையில் ஒரு சாதாரண தினம். எப்போதும் போல "பைப்" அருகே குடங்கள் மனிதர்களுக்காக வரிசைத் தவம் இருந்தன . சின்னப் பையன்கள் 'டெடன்னஸ்" கவலை இன்றி மண்ணில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பாண்டியன் போக்குவரத்துக் கழக பஸ்கள் தேசியம் கலந்த டீசல் புகை பரப்பிக் கொண்டிருந்தன . விரைப்பான கால்சராய் சட்டை அணிந்த ப்ரோடீன் போதா போலீஸ்காரர்கள் இங்கிட்டும் அங்கிட்டும் செல்லும் வாகன- மானிட போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி கொண்டுஇருந்தார்கள் நகரின் மனித இயக்கம் ஒருவிதப் ப்ரோவ்னியான் இயக்கம் போல இருந்தது . கதர் சட்டை அணிந்த மெல்லிய அதிக நீளமில்லாத ஊர்வலம் ஓன்று, சாலையின் இடதுபுறத்தில் அரசாங்கத்தை விலைவாசி உயர்வுக்காக திட்டிக்கொண்டே ஊர்ந்தது. செருபில்லாத டப்பாக்கட்டு ஜனங்கள் மீனாட்சி கோயிலின் ஸ்தம்பித்த கோபுரங்கள் , வற்றிய வைகை , பாலம் .. மதுரை !
1965 இல் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போரின்போது, அன்றைய பிரதம மந்திரி லால்பகதூர் சாஸ்திரி காயமடைந்த ராணுவ வீரர்களை காண ராணுவ மருத்துவமனைக்கு சென்றார். அவர் பல காயமடைந்த ராணுவ வீரர்களை பார்த்தார் ... இறுதியில் எழுந்திருக்க முடியாமல் படுத்தே இருந்த ராணுவவீரரிடம் அருகில் சென்றார். அருகில் இருந்த டாக்டர், இந்த ராணுவ வீரரின் பல உறுப்புகள் சேதம் அடைத்துள்ளது அதனால் அவர் மிகுந்த கண்காணிப்பில் உள்ளார், அவர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு எனக்கூறினார். சாஸ்திரி அவர்கள் மிகவும் அருகில் சென்று அவருடைய தலைக்கு அடியில் தன்னுடைய கைகளை கொடுத்து தாங்கினார். அந்த ராணுவ வீரனின் கண்களிலிருந்து கண்னீர் பெருக்கெடுத்தது. சாஸ்திரி அவர்கள் அவரோடு கீழ்வருமாறு உரையாடினார்.
சாஸ்திரி : மேஜர், நீங்கள் உலக புகழ் பெற்ற இந்திய ராணுவத்தின் மேஜர். இந்திய ராணுவம் வீரத்திற்கும் துணிச்சலுக்கும் பெயர்பெற்றது. தயவுசெய்து உறுதியாக இருங்கள் அழாதீரகள் !. நீங்கள் விரைவில் குணமடைவீர்கள்.
மேஜர்: சார், இந்த கண்ணீர் என்னுடைய வலியினாலோ காயத்தினாலோ அல்ல. இந்த கண்ணீருக்கு காரணம் நான் ஒருநாள் என்னுடைய பிரதமமந்திரியை பார்ப்பேன் அப்போது அவருக்கு ராணுவ வணக்கம் தெரிவிப்பேன் என்ற கனவுதான். இன்று உங்களை நேரில் பார்த்துவிட்டேன் ஆனால் என்னால் எழுந்து உங்களுக்கு ராணுவ வணக்கம் தெரிவிக்க முடியவில்லையே என்றவருத்தம்தான் என்னை வாட்டுகிறது.
சாஸ்திரி கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.
வாழ்க்கையில மிகப்பெரிய பாடத்தை இந்தநிகழ்வு எனக்கு தந்தது. வாழ்க்கையில் சில சமயங்கள் நம்மால் எதுவுமே செய்யமுடியாத தருணங்கள் வரலாம்... அவர் எவ்வளவு பெரியமனிதராக இருந்தாலும்கூட.... எனவே, வாழுங்கள் ! அர்ப்பணிப்பு உணர்வோடு வாழுங்கள் ! நமக்கு எப்போது எங்கு முடிவு என்று தெரியாது.
125 நாட்களைக் கடந்து ஓடிய சிவாஜியின் 125 வது படம். 1968 ல் வந்த உயர்ந்த மனிதன். இன்று பகிரும் P. சுசீலா இந்தப் பாடல் விருது பெட்ரா பாடல். வாலியின் பாடல்களுக்கு இசை எம் எஸ் விஸ்வநாதன்.
பாடலின் ஆரம்பத்தில் வாணிஸ்ரீ ஏன் அப்படி ஒரு நடை போடுகிறார் என்று தெரியவில்லை! விரகமோ...
நாளை இந்த நேரம் பார்த்து ஓடி வா .நிலா.. தேசிய விருது பெற்ற பாடல்.
மாண்பு மிகு மனிதர் சாஸ்திரி. உருக்கமான நிகழ்வு. அவருக்கப்புறம் யாருமே அவர் போல இல்லை. இந்தச் சின்ன உருவத்தில் எத்தனை மகிமை. எளிமை. இருவருக்காகவும் கண்ணில் நீர் வருகிறது. அருமையான பதிவுமா. மிக மிக நன்றி.
வாழ்க்கையில மிகப்பெரிய பாடத்தை இந்தநிகழ்வு எனக்கு தந்தது. வாழ்க்கையில் சில சமயங்கள் நம்மால் எதுவுமே செய்யமுடியாத தருணங்கள் வரலாம்... அவர் எவ்வளவு பெரியமனிதராக இருந்தாலும்கூட.... எனவே, வாழுங்கள் ! அர்ப்பணிப்பு உணர்வோடு வாழுங்கள் ! நமக்கு எப்போது எங்கு முடிவு என்று தெரியாது.'' உன்னதமான வார்த்தைகள். மீண்டும் நன்றி.
சுஜாதா! சார் எங்கள் மதுரையை நாலு வரிகளில் சொல்லிவிட்டீர்கள்.''சுவர்களில் ஓரடி உயர எழுத்துக்களில் விளம்பரங்கள் விதவிதமாக ஒன்றி வாழ்ந்தன. நிஜாம் லேடி புகையிலை , ஆர்.கே.கட்பாடிகள் -எச்சரிக்கை! புரட்சி தீ! சுவிசேஷக் கூட்டங்கள் - ஹாஜி மூசா ஜவுளிக்கடை (ஜவுளிக்கடல் ) - 30 .9 -1973 அன்று கடவுளை நம்பாதவர்கள் சுமக்கப் போகும் தீச்சட்டிகள்''
67க்குப் பிறகு தான் இப்படி மாறியது. அதுவரை தேனாறு பாய்ந்த ஊர் எங்கள் மதுரை.
வியாசர் விருந்து எங்கள் சின்ன வயதில் மஹாபாரதத்தைக் கை கட்டியது. உயர்ந்த விருந்து. ஶ்ரீ ராஜாஜி எழுதி இருக்கும் அத்தனை வார்த்தைகளும் என்னாளும் எல்லோருக்கும் பயன்படும். குழந்தைகளுக்கு இரவு வேளையில் படித்துக் காண்பிப்பேன். பிற்காலத்தில் ஆங்கில வியாசர் விருந்தைப் படித்தார்கள்.
ஒரு சுவாரஸ்யமான காட்சித் துணுக்கு அருமை. கட்டி அணைத்து அன்பை சொல்கிறது பார்க்க பரவசம். அவரும் பயப்படாமல் அமர்ந்து இருக்கிறார். அவரின் அன்பை சொல்கிறது காட்சி.
ஆவுடையார் கோவில் பற்றி சொல்லும் பெரியவர் அருமை.நல்ல விளக்கமாய் சொல்கிறார், நிறைய ஆதங்கம் இருக்கிறது அதையும் இடை இடையே சொல்லி வருகிறார். பொறுமையாக கோயில் வரலாறு சொல்வதை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது. அவரும் அதை தான் சொல்கிறார் அவசர படாதே ! என்று.
//எஸ் ரா பகிர்ந்து கொள்ளும் இந்த வாசிப்பனுபவம் சுவாரஸ்யமாக இருந்ததா என்று சொல்லுங்கள். // சுவாரஸ்யமாக இருந்தது. தபால்பெட்டியை பற்றிசொன்னதை ரசித்தேன். எவ்வளவு விஷயங்களை தன்னுள் அடக்கி கொண்டு மெளனமாய் இருக்கிறது!
வனவாசம், மனவாசம் எனத் தன் கதையை இரண்டு பகுதிகளாக கண்ணதாசன் எழுதியதைப்போல், தமிழ்நாட்டின் கதை 67-க்கு முன், 67-க்குப் பின் என இரு பாகங்களாக சரியாக, நேர்மையாக எழுதப்பட்டு வெளிவந்தால் நலமாக இருக்கும்!
என்னாது? நெல்லை ஜெபமணியா? ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ அவர் இன்னுமா இருக்கார்? அல்லது அவர் மகன் மோகன்ராஜ்னு ஒருத்தர் முகநூலில் எழுதுகிறார். அவரைச் சொல்றீங்களா?
மருத்துவமனைகளில் பொதுவாக இத்தகைய நிகழ்வுகளே இடம் பெறுகின்றன. இதில் எந்த மருத்துவமனையும் விதி விலக்கு இல்லையோனு நினைக்கிறேன். மாமாவைத் திருச்சியில் ந்யூரோ ஒன் மருத்துவமனையில் சேர்த்ததை என் மைத்துனரும் சரி, எங்க பையரும் சரி விரும்பவே இல்லை. ஆனால் இது மாமாவே யூ ட்யூபை எல்லாம் பார்த்துட்டுத் தேர்ந்தெடுத்திருந்தார். பையருக்கு மருத்துவமனையை மாத்தணும், காவேரி அல்லது அப்போலோ போகணும் அல்லது வெல்லூர் சிஎம்சிக்குப் போகணும்னு ஆசை. முயற்சி செய்தார். காவேரியில் நியூரோ மருத்துவர்கள் விசிடிங் தான். அதுவும் நாம் கேட்டால் தான் வரவழைப்பார்கள். அப்போலோவிலும் அப்படியே. அதோடு அங்கெல்லாம் உடனே அறை கிடைக்காது. கொஞ்ச நாட்களாவது வெயிடிங்க் ஹாலில் இருக்கும் படுக்கைகளில் தான் பொது நோயாளி போலப் படுக்கணும். கூட வரும் நபர்கள் ரிசப்ஷனிலோ அல்லது எங்கு காலி நாற்காலி கிடைக்குமோ அங்கே இந்த வெயிடிங் ஹால் பக்கமாய் உட்கார்ந்துக்கணும். மேலும் காவேரியில் ஆட்டோக்கள், சொந்தக் கார்கள் உள்ளே வர முடியாது. வெளியே சாலையிலேயே இறங்கிக் கொண்டு அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டருக்கும் மேலே உள்ளே நடந்து வரணும். அதோடு தனி அறையும் இல்லை. பகிர்ந்துக்கணும் 2 அல்லது 3 பேருடன். தனி அறை வாங்கினாலும் வேறே யாரேனும் விஐபிக்கள் வந்தால் உடனே நாம் அறையைக் காலி செய்து கொடுக்கணும்.
ஆமாம், நியூரோவுக்கு விசிடிங் மருத்துவர்கள் தான். முன்னாடியே சொல்லி வைச்சு அப்பாயின்ட்மென்ட் வாங்கணும். அப்படி வாங்கினாலும் கூப்பிடக் குறைந்தது 2 மணி நேரத்துக்கு மேல் ஆகிடும். எங்களுக்குக் காலை பத்தேமுக்காலுக்கு நேரம். ஒன்பதரைக்கே வரச் சொன்னாங்க. ஆனால் அங்கும் இங்கும் அலைக்கழிச்சுட்டுப் பின் கூப்பிடும்போது மதியம் ஒன்றரை. ஆம்புலன்ஸ் வேறே வெளி ஆம்புலன்ஸ் கூடாது. அவங்க ஆம்புலன்ஸ் தான். நாங்க கிளம்பறச்சே அது வெளியே போயிருந்ததால் இன்னொரு ஆம்புலன்ஸில் வேறே யாரோ போனதால் காத்திருக்க நேர்ந்தது.
நவராத்திரி சுவாரசியங்கள் ரொம்பவே சுவாரசியம் தான். உண்மையில் இப்படித் தான் நடக்கும். எங்க வீட்டிலும் கொலு உண்டு. பெரியப்பாக்கள் வீட்டிலும் உண்டு. தாத்தா வீட்டில் கொலுவெல்லாம் வைத்தால் தாக்குப் பிடிக்க முடியாது. ஆனால் நாங்க விமரிசையாகவே கொண்டாடி இருக்கோம். தினமும் இரவு எட்டுமணிக்கெல்லாம் கோவில் கோவிலாகக் கொலு அலங்காரம் பார்க்கப் போயிடுவோம். ராத்திரி பதினோரு மணி ஆயிடும். காலை எழுந்து பள்ளிக்கும் போயிருக்கோம். என்ன ஒரு பிரச்னைன்னா இந்த விடலைப் பசங்க சில பேர் தங்களுக்குள் குழு சேர்த்துக்கொண்டு வீடுகளுக்கு வந்து "மாமி, சுண்டல்"னு கத்துவாங்க. உடனே கொடுத்துட்டால் போச்சு. இல்லைனாக் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணுவதோடு சில சமயங்கள் மெயின் ப்யூஸைப் பிடுங்கிடுவாங்க. அதான் ஒரு பிரச்னை. அநேகமாக எல்லார் வீடுகளிலும் பத்து நாட்களில் ஒரு நாள் கட்டாயமாய் இப்படி நடக்கும்.
ஆர்.சூடாமணி நல்ல எழுத்தாளர். மாற்றுத் திறனாளி என்பார்கள். தன் சொத்தை எல்லாம் ஏதோ ஒரு ஆசிரமத்துக்கு எழுதி வைத்தார். தினசரிகளில் பெரிய தலைப்புக்களுடன் செய்தியாக வந்திருந்தது. அப்பா ரொம்பப் பெரிய இடம் என்பார்கள். இவர் காலத்து எழுத்தாளர்கள் அநுத்தமா, ராஜம் கிருஷ்ணன், ஜோதிர்லதா கிரிஜா, லக்ஷ்மி ராஜரத்தினம், லக்ஷ்மி, பிரேமா நந்தகுமார் ஆகியோரைப் போல் இவரும் புகழ் பெற்றார். இவருடைய மனதுக்கினியவள் கலைமகளில் நாராயணசாமி ஐயர் பரிசு பெற்றது.
மிருகங்களின் அன்பு பற்றிய ரீல்ஸை நிறையப் பார்ப்பதால் இதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. உண்மையான அன்புடன் அவைகள் பழகுகின்றன.
நா.பா.வின் இந்த "மணிவண்ணன்" என்னும் புனைப்பெயர் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் என்னமோ சென்னை வந்து தான் சித்தப்பா வீட்டில் அவரைப் பார்க்க நேர்ந்ததே தவிர, அப்பா நா.பா. சேதுபதி பள்ளியில் தமிழ் ஆசிரியர் வேலை பார்த்தப்போவே பேசிப் பழகி இருக்கார்.
ஆவுடையார் கோயில் மர்மம் பத்தி இனித் தான் கேட்கணும். ஆனால் சொல்லுவார்கள். அம்பத்தூரில் எதிர் வீட்டு மாமாவின் தம்பி பெண்ணுக்கு அதான் புக்ககம்.
ஆர்.சூடாமணிக்கு சிறு வயதில் அம்மை போட்டியதில் கால்கள் பாதிக்கப்பட்டன என்றும், அதனால் அவர் வெளியே எங்கும் செல்ல மாட்டார் என்றும் கேள்வி. இதை நாம் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், அவர் இறந்த பிறகு, ம.மலருக்கு ஆசிரியராக இருந்த அனுராதா சேகர், "என்னைப் பார்க்க வருபவர்களில் ரெண்டு கதை எழுதி விட்டாலே, எழுத்தாளர் என்று சீட்டில் எழுதி அனுப்புவார்கள். ஆனால் சூடாமணியோ, வெறுமனே தன் பெயரை மட்டுமே எழுதி அனுப்புவார்" என்று எழுதியிருந்தார். அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. ருக்மணி பார்த்தசாரதி என்னும் எழுத்தாளர் இவருடைய சகோதரி. நுட்பமான மன உணர்வுகளை விவரிப்பதில் வல்லவர்.
க்ரேசி சொல்வதில் தப்பே இல்லை. நாமெல்லாம் ஒத்துக்கிறோம். பலர் ஒத்துக்கறதில்லை. இவர் இடம் இன்னமும் காலியாகவே இருக்கு. இதை இட்டு நிரப்ப யாருமே இல்லை. எத்தனை காசெட்டுகள் வைச்சிருந்தோம் இவரோட நாடகங்கள் அடங்கினது. இப்போ எங்கே இருக்குனே தெரியலை.
ராஜாஜியின் வியாசர் விருந்து. எத்தனை முறை படிச்சேனோ! அரசர்களுடன் பழக வேண்டிய இந்த முறை எல்லாம் எக்காலத்துக்கும் பொருந்துவன. ஆச்சரியம் என்னன்னா இன்னிக்குக் காலம்பர எழுந்துக்கும்போதே திரௌபதி நினைவு வந்தது. காரணம் நேற்றுக் கொண்டாடப்பட்ட "கர்வா சௌத்". அதை நினைத்துகொன்டிருந்த போது இப்போதெல்லாம் திரௌபதியை ஐந்து கணவர்களின் மனைவி என அவள் பிறப்பு வளர்ப்பு, ஐந்து கணவர்கள் இருப்பதில் உள்ள நியாயம் எதுவும் புரியாமல் பலரும் திரௌபதி பற்றிக் குறை கூறுகிறாப்போல் பேசுவதையும்/பேசியதையும் நினைச்சுட்டு இருந்தேன். சில மாதங்கள் முன்னர் கூட யாரோ எ.பியிலா? ஆம்னு நினைக்கிறேன். திரௌபதிக்கு எந்த மகன் யாருக்குப் பிறந்தான் எனத் தெரியாது என்பது போலச் சொல்லி இருந்தார்கள். அதுவும் அதுக்கு நான் அளித்த பதிலும் நினைவில் வந்தது. இன்னிக்கு இங்கே நீங்களும் பாரதம் சொல்லி இருக்கீங்க.
சுஜாதாவின் இந்த மதுரைக்கதையில் மதுரை எர்ஸ்கின் ஆஸ்பத்திரியும், (பெரியாஸ்பத்திரி என்போம்) அங்கே மருத்துவ சிகிச்சைக்காகப் போகும் ஓர் பெண் குழந்தையும் அதன் தாயும் பற்றி எழுதி இருப்பார். ஆஸ்பத்திரி ஊழியர்களின் அலட்சியத்தால் அந்தக் குழந்தைக்குத் தகுந்த சிகிச்சை அளிக்க முடியாமல் அலட்சியப்படுத்தி விடத் தாய் தன் குழந்தையை எடுத்துக் கொண்டு திரும்ப ஊருக்கே போவதாய் வரும் இரண்டு நாட்களுக்குள் தன் பெண் குழந்தை இறந்துஅவிடும் என்பது தெரியாமல் அப்பாவியாகப் போவாள் என வரும். அதில் தான் மதுரை பத்தி இந்த வர்ணனை. மதுரை மாறியது ஹிந்தி எதிர்ப்புக் கலவரம் நடந்த சமயத்தில். அதுவரை மதுரை ஒரு கிராமம் தான். நகரமும் கூட. நகரம் கலந்த கிராமத்து மக்கள். உண்மையாவே அப்பாவியாக இருந்தவர்கள். இப்போதைய மதுரையை நான் பார்த்தே பல ஆண்டுகள் ஆகின்றன. பார்க்கவும் விரும்பவில்லை. :(
க்ரேஸியின் இடத்தை யாராலும் பிடிக்கவே முடியாது. அந்த அளவு திறமை இனி யாருக்கும் வராது.
வொயாசர் விருந்து ஒரு எளிய புத்தகம். சுருக்கமாக மகாபாரதம் புரியும்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் என் அப்பா பணி புரிந்திருக்கிறார்.. ஆஸ்பத்திரி எனக்கு தண்ணி பட பாடு. என் அத்தையும் அங்கே நர்ஸாகவும் நர்சிங் சுப்பரின்ட்டாகவும் இருந்தார்.
நான் பெரியாஸ்பத்திரிக்கெல்லாம் போனதில்லை. ஒரே ஒரு தரம் மேலாவணி மூலவீதி வீட்டில் இருக்கும்போது பக்கத்துப் போர்ஷன் மாமிக்கு திடீர்னு அபார்ஷன். அதுக்கு அங்கே அட்மிட் பண்ணி இருந்தாங்க. அப்போ அவங்க மாமியார் (மாமாவின் அம்மா) சமைச்சுக் கொடுத்ததை எடுத்துண்டு மாமிக்கும், மாமாவுக்கும் கொடுத்துட்டு வரப் போனேன். அதைத் தாண்டித் தான் கோரிப்பாளையம் ரோடில் பள்ளிக்குப் போகணும். ஆனாலும் அங்கே இறங்கிக் கொஞ்ச தூரம் நடந்து தான் ஆஸ்பத்திரிக்குப் போகணும். போயிட்டுத் திரும்ப வந்து வேறே பஸ் பிடிச்சுப் பின்னர் பள்ளிக்குப் போவேன்.
பின்னாட்களில் 76 இல் பையர் பிறந்தப்போ அவருக்கு 40 நாட்களிலேயே திடீர்னு டபுள் நிமோனியா வரவே அங்கே வீட்டுப் பக்கம் இருந்த குழந்தைகள் மருத்துவர் பெரியாஸ்பத்திரியில் அவருடைய நண்பர்களுக்குத் தொலைபேசி என்னை அங்கே போய்க் குழந்தையை அட்மிட் பண்ணச் சொன்னார். ஆக்சிஜன் சிலின்டரெல்லாம் இருக்கும் என்பதாலும் வேறு உபகரணங்கள் தேவைப்பட்டாலும் அங்கிருக்கும் மருத்துவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்பதாலும் அங்கே போகச் சொன்னார். இரண்டு நாட்கள் இருந்தோம். அம்மா வீட்டுக்குப் போய்விட்டு வருவார். நான் குழந்தையுடன் அங்கேயே இருந்தேன்.
டி.எம்.ஆர். நார்த் கேட்டில் ஆறு முதல் எட்டு வகுப்புகள். அங்கே தான் படிச்சுட்டு இருந்தேன். அப்பாவுக்கோ அதோடு படிப்புப் போதும்னு நினைப்பு. எனக்குப் படிக்கணும். ஆனால் மாமாக்களும், தாத்தாவும் அங்கே கொண்டு வைச்சுக்கறோம்னு சொன்னாங்க. அப்பாவுக்கு இஷ்டமில்லை. அப்போ எங்க தெருவிலேயே டைப்ரைடிங் இன்ஸ்டிட்யூட் வைச்சிருந்த எங்க கோபால் சார் ஓசிபிஎம்மில் செக்ரடேரியல் கோர்ஸுக்குப் பாடம் எடுத்துட்டு இருந்தார். அவங்க குடும்பமும் அம்மா/அப்பா குடும்பமும் ரொம்பப் பழக்கம். அவர் தான் நான் ஒன்பதாம் வகுப்புச் சேரணும் என்பதைத் தெரிந்து கொண்டு ஓசிபிஎம்மில் அவரே போய் என் பெயர் மற்றத் தகவல்கள் கொடுத்துட்டுப் பணத்தையும் கட்டிட்டு வீட்டுக்கு வந்து அம்மாவிடம் ரசீதைக்கொடுத்துட்டு நாளைக்குப் போய் பழைய பள்ளி டிசியைக் கொடுத்துடுங்க. அப்புறமா செக்ஷன் போடுவாங்கனு சொன்னார். மாமாக்கள், பெரியப்பா, எல்லோருமே அதை ஆதரிக்கவும் அப்பாவும் சரினு சொல்லிட்டார். பெரியப்பா பெண் அக்காவோ கான்வென்டில் அவங்க படிச்சதாலே அங்கே எனக்குப் பணம் கட்டப் போயிருந்தாங்க. அப்புறமா அதை வேண்டாம்னு சொல்லிட்டு இன்னொரு பெண்ணுக்கு வாங்கிக் கொடுத்தாங்க. இதான் நான் ஓசிபிஎம்மில் சேர்ந்த கதை. சொல்லப் போனால் வீட்டிலிருந்து நடந்து போகும் தூரத்திலேயே வடக்கு/கிழக்கு ஆவணி மூலவீதிகள் சேரும் முக்கிலே நகராட்சிப் பள்ளி இருந்தது. அம்மா அதில் தான் சேர்க்க இருந்தாங்க.
சாச்திரிஜி பற்றிய இந்த நிகழ்ச்சி குறித்துப் பல முறை படிச்சிருக்கேன். உயர்ந்த மனிதர் மனதால்.
உயர்ந்த மனிதன் படத்தின் இந்தப் பாட்டும் வாணிஸ்ரீயின் நடிப்பும் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. அப்போப் பலரும் வாணிஸ்ரீக்கு எதிர்ப்புத் தெரிவித்ததையும் பற்றிக் கேட்டிருக்கேன்/படிச்சிருக்கேன். நடிப்பு விரகத்தைக் காட்டாமல் விரசத்தையே காட்டியது. :( இதற்கு விருது கிடைச்சது என்பதே இன்னிக்குத் தான் தெரியும்.
மதுரை ரொம்ப அழகாக இருந்த ஊர். பின் கொசுவம் வைத்து புடவை கட்டிக் கொண்டு, பிச்சோடா போட்டுக் கொண்டு அதில் பூவைத்துக் கொண்டு நிற்கும் மாத்வ பெண்ணைப் போன்ற அழகு என்று லா.ச.ரா மதுரையை வர்ணித்திருப்பார்.எனக்கு மைசூர் அப்படித் தோன்றும். 2020 மார்ச்சில் ஒரு சினேகிதியின் மகள் திருமணத்திற்குச் சென்றிருந்தேன். ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப் போகிறோம் என்று ஊரை தோண்டிப் போட்டு, கந்தரகோளமாக்கியிருந்தார்கள். ஸ்மார்ட் ஆகி விட்டதா என்று அங்கு இருப்பவர்கள், அல்லது சமீபத்தில் அங்கு சென்றவர்கள் சொல்லலாம்.
ஏன் இங்கிருக்கும் எல்லோரும் வாணிஸ்ரீயை பிடிக்காது எங்கிறீர்கள்? நன்றாக நடிப்பாரே அதனாலா? பாட்டில் என் கண்ணுக்கு விரசமாக எதுவும் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அதற்கு நடன இயக்குனர் அல்லவா பொறுப்பு. உயர்ந்த மனிதனில் பாரதியும் உண்டு. சிவகுமாருக்கு ஜோடியாக. அதற்குப் பிறகு பாரதியோடு ஜோடியாக நடிக்க சிவகுமார் விரும்பவில்லையாம். "அவங்க ரொம்ப உயரம்" என்று கூறி விடுவாராம். "என் கேள்விக்கென்ன பதில்?" பாடல் கூட முதலில் சிவாஜி, வாணிஸ்ரீக்காகத்தான் போடப் பட்டதாம். பின்னர் அதை பாரதி, சிவகுமாருக்கு வைத்தார்களாம். அந்தப் படத்தில் சௌகார் ஜானகி பிரமாதமாக நடித்திருப்பார்.
Precis writing என்பது ஒரு கலை. அதில் ராஜாஜி வல்லுனர் என்பார்கள். அதனால்தான் அவரால் ராமயணத்தையும், மகாபாரதத்தையும் எளிமையாக, சுருக்கமாக குழந்தைகளுக்காக எழுத முடிந்ததோ? 'அகலாது அணுகாது தீக்காயவார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந் தொழுகுவார்' என்று வள்ளுவர் சொன்னதைத்தான் தௌம்யர் கூறியிருக்கிறாரோ?
ஆர் சூடாமணியின் ஆவேசக் கொசு பிரமாதம். சாதுவையும் சீண்டும் கொசுவுக்கு அஹிம்சாவாதி ஹிம்சாவாதியாக மாறத்தான் வேண்டும். வையவனின் புயலும் அருமை. பழைய விகடன், குமுதம் எல்லாம் படிக்க ஆசையும் ஆவலும்.
மருத்துவமனை நிகழ்வுகள் - எனக்கும் சில அனுபவங்கள் உண்டு! பெரிதாகச் சொல்லவில்லை என்றாலும் கசப்பான அனுபவங்கள்.
நவராத்திரி நினைவுகள் - ஆஹா... எனக்கு பெரிதாக நவராத்திரி நினைவுகள் - அதிலும் சிறு பிராயத்தில் - இல்லை. நெய்வேலி நகரில் எங்கள் வீடு இருந்த பகுதியில் யாரும் கொலு வைத்ததாக நினைவில்லை. தில்லி சென்ற பிறகு பல வீடுகளில் கொலு சமயத்தில் சென்றிருக்கிறேன்.
ஆஹா கிரேசி!!!!!!!!!! சிரித்து சிரித்து முகம் வலிக்கிறது. இனிய காலை வணக்கம் பா.
பதிலளிநீக்குவாய்விட்டு சிரிச்சா நோய் விட்டுப்போகுமாம்... வாங்க அம்மா.. வணக்கம்.
நீக்குநாளை இந்த வேளை !! எத்தனை அருமையான பாடல். இசை , சொற்கள், சிவாஜி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!111
பதிலளிநீக்குஆமாம். செம ஸாங் இல்லே?
நீக்குவாணி ஶ்ரீ சகிக்காது. மன்னிக்கவும்.
பதிலளிநீக்குஹிஹிஹி நீங்களும் மன்னிக்கவும் எனக்கும் சகிக்காது!
நீக்குஹாஹாஹா. ஏவி எம்முக்கு வேற நடிகை கிடைக்கலையா:(
நீக்குபாரதி கூட இன்னும் அழகாகச் செய்திருப்பார்.
என்ன நிர்ப்பந்தமோ...
நீக்குஉண்மை.
நீக்குமாண்பு மிகு மனிதர் சாஸ்திரி. உருக்கமான நிகழ்வு. அவருக்கப்புறம் யாருமே அவர் போல இல்லை. இந்தச் சின்ன உருவத்தில் எத்தனை மகிமை. எளிமை. இருவருக்காகவும் கண்ணில் நீர் வருகிறது. அருமையான பதிவுமா. மிக மிக நன்றி.
பதிலளிநீக்குஎவ்வளவு உயர்ந்த உள்ளங்கள் அரசியலில் இருந்திருக்கின்றன...
நீக்குவாழ்க்கையில மிகப்பெரிய பாடத்தை இந்தநிகழ்வு எனக்கு தந்தது. வாழ்க்கையில் சில சமயங்கள் நம்மால் எதுவுமே செய்யமுடியாத தருணங்கள் வரலாம்... அவர் எவ்வளவு பெரியமனிதராக இருந்தாலும்கூட.... எனவே, வாழுங்கள் ! அர்ப்பணிப்பு உணர்வோடு வாழுங்கள் ! நமக்கு எப்போது எங்கு முடிவு என்று தெரியாது.'' உன்னதமான வார்த்தைகள். மீண்டும் நன்றி.
பதிலளிநீக்குஆமாம். உண்மை.
நீக்குசுஜாதா! சார் எங்கள் மதுரையை நாலு வரிகளில் சொல்லிவிட்டீர்கள்.''சுவர்களில் ஓரடி உயர எழுத்துக்களில் விளம்பரங்கள் விதவிதமாக ஒன்றி வாழ்ந்தன. நிஜாம் லேடி புகையிலை , ஆர்.கே.கட்பாடிகள் -எச்சரிக்கை! புரட்சி தீ! சுவிசேஷக் கூட்டங்கள் - ஹாஜி மூசா ஜவுளிக்கடை (ஜவுளிக்கடல் ) - 30 .9 -1973 அன்று கடவுளை நம்பாதவர்கள் சுமக்கப் போகும் தீச்சட்டிகள்''
பதிலளிநீக்கு67க்குப் பிறகு தான் இப்படி மாறியது. அதுவரை தேனாறு பாய்ந்த ஊர் எங்கள் மதுரை.
67 க்குப் பிறகு... ஹா.. ஹா.. ஹா... அதுவும் உண்மை!
நீக்குவியாசர் விருந்து எங்கள் சின்ன வயதில் மஹாபாரதத்தைக் கை கட்டியது. உயர்ந்த விருந்து. ஶ்ரீ ராஜாஜி எழுதி இருக்கும் அத்தனை வார்த்தைகளும் என்னாளும் எல்லோருக்கும் பயன்படும். குழந்தைகளுக்கு இரவு வேளையில் படித்துக் காண்பிப்பேன். பிற்காலத்தில் ஆங்கில வியாசர் விருந்தைப் படித்தார்கள்.
பதிலளிநீக்குஆமாம் எளிய முறையில் இருக்கும். வானதி பதிப்பகம் அதை புத்தகமாக வெளியிட்டது.
நீக்குமுக்கால் பகுதி வாசித்துவிட்டேன். கலந்த சுவை. கஷ்டப்பட்டு தயார் செய்திருக்கிறீர்கள். பாராட்டுகள்.
பதிலளிநீக்குவாங்க நெல்லை. நன்றி. நேற்றைய பதிவில்தான் நிறைய பகுதிகள் நிறைய பேர் சாய்ஸில் விட்டிருப்பார்கள் என்று தோன்றியது.
நீக்குஅரசனிடம் பணியாற்றுபவர்கள் எதெதில் ஷாக்கிரதையாக இருக்கவேண்டும் என்ற வியாச பாரதம் பகுதி அருமை.
பதிலளிநீக்கு__/\__ ராஜாஜி.
நீக்குமருத்துவமனையும் மருத்துவர்களும் நம் விதியைப் பொறுத்து அமையும் போலிருக்கிறது. மாமியார் இப்போது திட ணவுக்கு வந்து, நல்லா இருக்காங்களா?
பதிலளிநீக்குஇன்னமும் கூட திட உணவுக்கு வரவில்லை. மூன்று மாதங்களாகின்றன.
நீக்குகோவில் பெரியவரை முன்பே பார்த்து கேட்டிருக்கிறேன். மீண்டும் கேட்பதற்கு இனிமை நன்றி மா.
பதிலளிநீக்குஅப்படியா அம்மா? அவர் கொஞ்சம் அனா பினா இல்லை?!!
நீக்குஅவர் வயது அப்படிமா. இப்போது அப்படித்தான் தோன்றும். கேட்க ஆளிருந்தால்................................ பாவம்.
நீக்குமனசாட்சியம், கொலு... புன்னகையை வரவழைத்தது.
பதிலளிநீக்குபசங்களைக் கூப்பிடுமாறு ஏதேனும் விசேஷங்களை நாம் கொண்டாடுகிறோமா?
விடலைப் பசங்கள்னாலே மற்ற பெற்றோர்களுக்கு, பெண்ணைப் பெற்றவர்களுக்கு ஒரு ஜாக்கிரதை உணர்வு வந்துவிடுகிறது அல்லவா?
ஆனாலும் அப்போதைய கிளுகிளுப்பான நாட்கள்!
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா வணக்கம்
நீக்குநாளை இந்த நேரம் பார்த்து... அருமையான பாடல். தேசிய விருதா கிடைத்தது?
பதிலளிநீக்குநகரம் a disturbing piece from Sujatha.
ஆமாம். அப்படிதான் படித்த நினைவு.
நீக்கு
நலம் வாழ்க...
பதிலளிநீக்குநலமே விளைக நலமே நாடுவோம்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
நீக்குவியாசர் விருந்து சக்ரவர்த்தி திருமகன் இவையெல்லாம் சிறு வயதில் படித்தது...
பதிலளிநீக்குஆமாம். அப்போது இது, வாரியார் விருந்து எல்லாம் படித்துப் பழக்கம்.
நீக்குஇப்போது நீதி நூல்களே காணப்படவில்லை..
பதிலளிநீக்குஆமாம். பாதி கதைகள் பச்சை கதைகளாக இருக்கின்றன!
நீக்கு//இதயத்துக்கான மாத்திரைகளை ஒவ்வொன்றாய் கொடுத்து டெஸ்ட் செய்து கொண்டிருந்தார்.//
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது போல வேறு மருத்துவமனை போக சொல்லாமல் அவரே சரி செய்து விடலாம் என்று பார்த்து இருக்கிறார் போல.
இன்றைய ஆஸ்பத்திரி அனுபவங்கள் கொஞ்சம் பயத்தை கொடுக்கிறது.
ஆமாம். அவரை பாராட்டுவதை, கண்டிப்பதா என்று புரியாத நிலை.
நீக்குநாளை இந்த நேரம் பார்த்து... அருமையான பாடல்
பதிலளிநீக்குஎனக்கும் பிடித்த பாடல்.
நீக்குமாமியார் உடல் தேறி இருக்கும் என்று நம்புகிறேன். மருத்துவமனை அனுபவம் திகிலாக இருக்கிறது. உங்கள் மனமும் பாசின் மனமும் என்ன பாடு பட்டிருக்கும்:(
பதிலளிநீக்குஇன்னமும் முழு நார்மல் வரவில்லை அம்மா. சங்கடமான நாட்கள்.
நீக்குநேரமாகி விட்டது கடவுள் கிருபையில் காலை பார்க்கிறேன்மா. மன்னிக்கவும்.
பதிலளிநீக்குசரிம்மா. நல்லிரவு.
நீக்குநவராத்திரி சுவாரசியங்கள் அருமை.
பதிலளிநீக்குநவராத்திரி காலம் மிக அருமையான காலம் தான்.
பாடலை கேட்டவருக்கு எழுதி கொடுத்து அவரிடம் நல்ல பேர் வாங்கிய
பழைய நினைவுகள் பகிர்வு
அப்போது இப்போதைய காலத்தை விட சுவாரஸ்யமாய் இருந்திருக்கும்.
நீக்குஆர் . சூடாமணி அவர்கள் கவிதை மிக அருமை.வைவன் கவிதையும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்கு.1988 தீபம் இதழில் வந்த கவிதைகள்
நீக்குஒரு சுவாரஸ்யமான காட்சித் துணுக்கு அருமை.
பதிலளிநீக்குகட்டி அணைத்து அன்பை சொல்கிறது பார்க்க பரவசம். அவரும் பயப்படாமல் அமர்ந்து இருக்கிறார். அவரின் அன்பை சொல்கிறது காட்சி.
ஆமாம். நெகிழ்ச்சியாக இருந்தது. AI இல்லை என்றும் தெரிந்தது.
நீக்குஆவுடையார் கோவில் பற்றி சொல்லும் பெரியவர் அருமை.நல்ல விளக்கமாய் சொல்கிறார், நிறைய ஆதங்கம் இருக்கிறது அதையும் இடை இடையே சொல்லி வருகிறார்.
பதிலளிநீக்குபொறுமையாக கோயில் வரலாறு சொல்வதை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது. அவரும் அதை தான் சொல்கிறார் அவசர படாதே ! என்று.
ஹா.. ஹா.. ஹா.. சென்று கோவிலைப் பார்க்கும் ஆவல் வருகிறது.
நீக்குமருந்து மாத்திரை - சரி...
பதிலளிநீக்குசிகிச்சைக்காக
மருத்துவ மனையில்
அனுமதிக்கப்படும் சூழ்நிலை
மட்டும் வேண்டாம் அபிராமி...
நம் கையில் என்ன இருக்கிறது.... நாராயணா...
நீக்கு//எஸ் ரா பகிர்ந்து கொள்ளும் இந்த வாசிப்பனுபவம் சுவாரஸ்யமாக இருந்ததா என்று சொல்லுங்கள். //
பதிலளிநீக்குசுவாரஸ்யமாக இருந்தது. தபால்பெட்டியை பற்றிசொன்னதை ரசித்தேன். எவ்வளவு விஷயங்களை தன்னுள் அடக்கி கொண்டு மெளனமாய் இருக்கிறது!
ஆமாம் அக்கா.. சொல்வதில் அவரது ரசனையும் தெரிகிறது பாருங்கள். அவர் எழுத்துகள் நான் ரொம்ப ரசிப்பேன்.
நீக்குநேற்று காட்சித்துணுக்குகள் பார்த்தீர்களா?
//நேற்று காட்சித்துணுக்குகள் பார்த்தீர்களா?//
நீக்குபார்த்தேன் ஸ்ரீராம்.
__/\__
நீக்குகிரேசி தியான அனுபவம் சிரிப்பு.
பதிலளிநீக்குராஜ சேவை ராஜாஜி அவர்களின் வியாசர் விருந்து பகிர்வு அருமை.சுஜாதாவின் எழுத்து - மதுரை பற்றி - நகரம் கதை பகிர்வு, மற்றும்
கோரா கேள்வி தளத்தில் படித்த பகிர்வு நெகிழ்வு. மேஜரின் வருத்தமும், பிரதமர் சாஸ்திரி அவர்களின் கண்ணீரும் மனதை நெகிழவைத்தது.
சாஸ்திரியைப் பற்றி பகிர வேறொன்று எடுத்து வைத்திருக்கிறேன். இரண்டு வாரங்களாக பகிராமல் ஒத்திப்போட்டு வருகிறேன்!
நீக்குகிரேசி சொல்லி இருக்கும் அவர் நண்பர் ரவி கேஜிஜிக்கும் நண்பர்.
நீக்குஓ !அப்படியா ? சென்னை நட்பா?
நீக்குஇருக்கலாம். அல்லது நாகையிலிருந்தே நட்பாக இருக்கலாம். அவர்தான் .சொல்ல வேண்டும்.
நீக்குஉயர்ந்த மனிதன் படத்தில் P. சுசீலா பாடல் அடிக்கடி கேட்ட பாடல். அருமையான பாடல், கேட்டேன்.
பதிலளிநீக்குநல்ல பாடல். ரசித்திருப்பீர்கள்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா. வணக்கம். இணைந்து பிராத்திப்போம்.
நீக்குவனவாசம், மனவாசம் எனத் தன் கதையை இரண்டு பகுதிகளாக கண்ணதாசன் எழுதியதைப்போல், தமிழ்நாட்டின் கதை 67-க்கு முன், 67-க்குப் பின் என இரு பாகங்களாக சரியாக, நேர்மையாக எழுதப்பட்டு வெளிவந்தால் நலமாக இருக்கும்!
பதிலளிநீக்குநெல்லை ஜெபமணியிடம் சொல்லிப் பார்க்கலாம். வன மன, இரண்டும் என்னிடம் இருந்தன. இப்போது இல்லை. யாரோ லவட்டிக் கொண்டு போய்விட்டார்கள்.
நீக்குஎன்னாது? நெல்லை ஜெபமணியா? ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ அவர் இன்னுமா இருக்கார்? அல்லது அவர் மகன் மோகன்ராஜ்னு ஒருத்தர் முகநூலில் எழுதுகிறார். அவரைச் சொல்றீங்களா?
நீக்குச்ச்சும்மா நெல்லை ஜெபமணி பெயர்தான் சொன்னேன்! நினைவிருக்கான்னு பார்த்தேன்!
நீக்குபயங்கர ஜமாளிப்ஸ். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நீக்குஅட நெசம்மாத்தான்.
நீக்குமருத்துவமனைகளில் பொதுவாக இத்தகைய நிகழ்வுகளே இடம் பெறுகின்றன. இதில் எந்த மருத்துவமனையும் விதி விலக்கு இல்லையோனு நினைக்கிறேன். மாமாவைத் திருச்சியில் ந்யூரோ ஒன் மருத்துவமனையில் சேர்த்ததை என் மைத்துனரும் சரி, எங்க பையரும் சரி விரும்பவே இல்லை. ஆனால் இது மாமாவே யூ ட்யூபை எல்லாம் பார்த்துட்டுத் தேர்ந்தெடுத்திருந்தார். பையருக்கு மருத்துவமனையை மாத்தணும், காவேரி அல்லது அப்போலோ போகணும் அல்லது வெல்லூர் சிஎம்சிக்குப் போகணும்னு ஆசை. முயற்சி செய்தார். காவேரியில் நியூரோ மருத்துவர்கள் விசிடிங் தான். அதுவும் நாம் கேட்டால் தான் வரவழைப்பார்கள். அப்போலோவிலும் அப்படியே. அதோடு அங்கெல்லாம் உடனே அறை கிடைக்காது. கொஞ்ச நாட்களாவது வெயிடிங்க் ஹாலில் இருக்கும் படுக்கைகளில் தான் பொது நோயாளி போலப் படுக்கணும். கூட வரும் நபர்கள் ரிசப்ஷனிலோ அல்லது எங்கு காலி நாற்காலி கிடைக்குமோ அங்கே இந்த வெயிடிங் ஹால் பக்கமாய் உட்கார்ந்துக்கணும். மேலும் காவேரியில் ஆட்டோக்கள், சொந்தக் கார்கள் உள்ளே வர முடியாது. வெளியே சாலையிலேயே இறங்கிக் கொண்டு அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டருக்கும் மேலே உள்ளே நடந்து வரணும். அதோடு தனி அறையும் இல்லை. பகிர்ந்துக்கணும் 2 அல்லது 3 பேருடன். தனி அறை வாங்கினாலும் வேறே யாரேனும் விஐபிக்கள் வந்தால் உடனே நாம் அறையைக் காலி செய்து கொடுக்கணும்.
பதிலளிநீக்குஅப்பல்லோ, காவேரியிலேயே விசிட்டிங் டாக்டர்ஸ்தானா? அடக்கடவுளே... படுக்கை நிலவரம் கலவரம் என்றால் அட்டெண்டர் நிலை இன்னும் பரிதாபம் போலவே.....
நீக்குஆமாம், நியூரோவுக்கு விசிடிங் மருத்துவர்கள் தான். முன்னாடியே சொல்லி வைச்சு அப்பாயின்ட்மென்ட் வாங்கணும். அப்படி வாங்கினாலும் கூப்பிடக் குறைந்தது 2 மணி நேரத்துக்கு மேல் ஆகிடும். எங்களுக்குக் காலை பத்தேமுக்காலுக்கு நேரம். ஒன்பதரைக்கே வரச் சொன்னாங்க. ஆனால் அங்கும் இங்கும் அலைக்கழிச்சுட்டுப் பின் கூப்பிடும்போது மதியம் ஒன்றரை. ஆம்புலன்ஸ் வேறே வெளி ஆம்புலன்ஸ் கூடாது. அவங்க ஆம்புலன்ஸ் தான். நாங்க கிளம்பறச்சே அது வெளியே போயிருந்ததால் இன்னொரு ஆம்புலன்ஸில் வேறே யாரோ போனதால் காத்திருக்க நேர்ந்தது.
நீக்குநியூரோ நோயாளிகளுக்கு நியூரோ மருத்துவர்கள் விசிடிங் தான் என்று படிக்கவும். திருத்தும்போது எப்படியோ வார்த்தைகள், வாக்கியங்கள் விடுபடுகின்றன.:(
நீக்குராமச்சந்திராவில் ஒரு ப்ளஸ் என்னவென்றால் எல்லா மருத்துவர்களும் அவைலபிள். எல்லா உபகரணங்களும் அவைலபிள்
நீக்குநவராத்திரி சுவாரசியங்கள் ரொம்பவே சுவாரசியம் தான். உண்மையில் இப்படித் தான் நடக்கும். எங்க வீட்டிலும் கொலு உண்டு. பெரியப்பாக்கள் வீட்டிலும் உண்டு. தாத்தா வீட்டில் கொலுவெல்லாம் வைத்தால் தாக்குப் பிடிக்க முடியாது. ஆனால் நாங்க விமரிசையாகவே கொண்டாடி இருக்கோம். தினமும் இரவு எட்டுமணிக்கெல்லாம் கோவில் கோவிலாகக் கொலு அலங்காரம் பார்க்கப் போயிடுவோம். ராத்திரி பதினோரு மணி ஆயிடும். காலை எழுந்து பள்ளிக்கும் போயிருக்கோம். என்ன ஒரு பிரச்னைன்னா இந்த விடலைப் பசங்க சில பேர் தங்களுக்குள் குழு சேர்த்துக்கொண்டு வீடுகளுக்கு வந்து "மாமி, சுண்டல்"னு கத்துவாங்க. உடனே கொடுத்துட்டால் போச்சு. இல்லைனாக் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணுவதோடு சில சமயங்கள் மெயின் ப்யூஸைப் பிடுங்கிடுவாங்க. அதான் ஒரு பிரச்னை. அநேகமாக எல்லார் வீடுகளிலும் பத்து நாட்களில் ஒரு நாள் கட்டாயமாய் இப்படி நடக்கும்.
பதிலளிநீக்குநான் என் சின்ன வயதில் கொலுவே பார்த்ததில்லை. எங்கள் பக்கத்து வீடுகளிலும் யாரும் வைக்கவில்லை. இத்தனைக்கும் அழகான பெண்கள் நிறைந்த தெரு அது.
நீக்குhehehehehe
நீக்குஆர்.சூடாமணி நல்ல எழுத்தாளர். மாற்றுத் திறனாளி என்பார்கள். தன் சொத்தை எல்லாம் ஏதோ ஒரு ஆசிரமத்துக்கு எழுதி வைத்தார். தினசரிகளில் பெரிய தலைப்புக்களுடன் செய்தியாக வந்திருந்தது. அப்பா ரொம்பப் பெரிய இடம் என்பார்கள். இவர் காலத்து எழுத்தாளர்கள் அநுத்தமா, ராஜம் கிருஷ்ணன், ஜோதிர்லதா கிரிஜா, லக்ஷ்மி ராஜரத்தினம், லக்ஷ்மி, பிரேமா நந்தகுமார் ஆகியோரைப் போல் இவரும் புகழ் பெற்றார். இவருடைய மனதுக்கினியவள் கலைமகளில் நாராயணசாமி ஐயர் பரிசு பெற்றது.
பதிலளிநீக்குமிருகங்களின் அன்பு பற்றிய ரீல்ஸை நிறையப் பார்ப்பதால் இதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. உண்மையான அன்புடன் அவைகள் பழகுகின்றன.
நா.பா.வின் இந்த "மணிவண்ணன்" என்னும் புனைப்பெயர் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் என்னமோ சென்னை வந்து தான் சித்தப்பா வீட்டில் அவரைப் பார்க்க நேர்ந்ததே தவிர, அப்பா நா.பா. சேதுபதி பள்ளியில் தமிழ் ஆசிரியர் வேலை பார்த்தப்போவே பேசிப் பழகி இருக்கார்.
ஆவுடையார் கோயில் மர்மம் பத்தி இனித் தான் கேட்கணும். ஆனால் சொல்லுவார்கள். அம்பத்தூரில் எதிர் வீட்டு மாமாவின் தம்பி பெண்ணுக்கு அதான் புக்ககம்.
எஸ்.ராவை இனித் தான் கேட்கணும்.
ஆர் சூடாமணி மாற்றுத்திறனாளி என்பது செய்தி எனக்கு. சொத்து விவரங்கள் கேள்விப்பட்டிருக்கேன். அதை நிர்வகித்தவர்களில் சந்துரு மனைவி பாரதியும் உண்டு.
நீக்குநாபா சேதுபதி பள்ளியிலும் வேலை பார்த்தாரா? வத்ராப்ப்பில் வேலை பார்த்தார் என்று படித்திருக்கிறேன்.
ஆ கோ எஸ்ரா எல்லாம் கேட்டுட்டு சொல்லுங்க...
ஆர்.சூடாமணிக்கு சிறு வயதில் அம்மை போட்டியதில் கால்கள் பாதிக்கப்பட்டன என்றும், அதனால் அவர் வெளியே எங்கும் செல்ல மாட்டார் என்றும் கேள்வி. இதை நாம் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், அவர் இறந்த பிறகு, ம.மலருக்கு ஆசிரியராக இருந்த அனுராதா சேகர், "என்னைப் பார்க்க வருபவர்களில் ரெண்டு கதை எழுதி விட்டாலே, எழுத்தாளர் என்று சீட்டில் எழுதி அனுப்புவார்கள். ஆனால் சூடாமணியோ, வெறுமனே தன் பெயரை மட்டுமே எழுதி அனுப்புவார்" என்று எழுதியிருந்தார். அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. ருக்மணி பார்த்தசாரதி என்னும் எழுத்தாளர் இவருடைய சகோதரி. நுட்பமான மன உணர்வுகளை விவரிப்பதில் வல்லவர்.
நீக்குஓ.. புதிய செய்திகள்.. அதாவது எனக்கு புதிய செய்திகள்...
நீக்குக்ரேசி சொல்வதில் தப்பே இல்லை. நாமெல்லாம் ஒத்துக்கிறோம். பலர் ஒத்துக்கறதில்லை. இவர் இடம் இன்னமும் காலியாகவே இருக்கு. இதை இட்டு நிரப்ப யாருமே இல்லை. எத்தனை காசெட்டுகள் வைச்சிருந்தோம் இவரோட நாடகங்கள் அடங்கினது. இப்போ எங்கே இருக்குனே தெரியலை.
பதிலளிநீக்குராஜாஜியின் வியாசர் விருந்து. எத்தனை முறை படிச்சேனோ! அரசர்களுடன் பழக வேண்டிய இந்த முறை எல்லாம் எக்காலத்துக்கும் பொருந்துவன. ஆச்சரியம் என்னன்னா இன்னிக்குக் காலம்பர எழுந்துக்கும்போதே திரௌபதி நினைவு வந்தது. காரணம் நேற்றுக் கொண்டாடப்பட்ட "கர்வா சௌத்". அதை நினைத்துகொன்டிருந்த போது இப்போதெல்லாம் திரௌபதியை ஐந்து கணவர்களின் மனைவி என அவள் பிறப்பு வளர்ப்பு, ஐந்து கணவர்கள் இருப்பதில் உள்ள நியாயம் எதுவும் புரியாமல் பலரும் திரௌபதி பற்றிக் குறை கூறுகிறாப்போல் பேசுவதையும்/பேசியதையும் நினைச்சுட்டு இருந்தேன். சில மாதங்கள் முன்னர் கூட யாரோ எ.பியிலா? ஆம்னு நினைக்கிறேன். திரௌபதிக்கு எந்த மகன் யாருக்குப் பிறந்தான் எனத் தெரியாது என்பது போலச் சொல்லி இருந்தார்கள். அதுவும் அதுக்கு நான் அளித்த பதிலும் நினைவில் வந்தது. இன்னிக்கு இங்கே நீங்களும் பாரதம் சொல்லி இருக்கீங்க.
சுஜாதாவின் இந்த மதுரைக்கதையில் மதுரை எர்ஸ்கின் ஆஸ்பத்திரியும், (பெரியாஸ்பத்திரி என்போம்) அங்கே மருத்துவ சிகிச்சைக்காகப் போகும் ஓர் பெண் குழந்தையும் அதன் தாயும் பற்றி எழுதி இருப்பார். ஆஸ்பத்திரி ஊழியர்களின் அலட்சியத்தால் அந்தக் குழந்தைக்குத் தகுந்த சிகிச்சை அளிக்க முடியாமல் அலட்சியப்படுத்தி விடத் தாய் தன் குழந்தையை எடுத்துக் கொண்டு திரும்ப ஊருக்கே போவதாய் வரும் இரண்டு நாட்களுக்குள் தன் பெண் குழந்தை இறந்துஅவிடும் என்பது தெரியாமல் அப்பாவியாகப் போவாள் என வரும். அதில் தான் மதுரை பத்தி இந்த வர்ணனை. மதுரை மாறியது ஹிந்தி எதிர்ப்புக் கலவரம் நடந்த சமயத்தில். அதுவரை மதுரை ஒரு கிராமம் தான். நகரமும் கூட. நகரம் கலந்த கிராமத்து மக்கள். உண்மையாவே அப்பாவியாக இருந்தவர்கள். இப்போதைய மதுரையை நான் பார்த்தே பல ஆண்டுகள் ஆகின்றன. பார்க்கவும் விரும்பவில்லை. :(
க்ரேஸியின் இடத்தை யாராலும் பிடிக்கவே முடியாது. அந்த அளவு திறமை இனி யாருக்கும் வராது.
நீக்குவொயாசர் விருந்து ஒரு எளிய புத்தகம். சுருக்கமாக மகாபாரதம் புரியும்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் என் அப்பா பணி புரிந்திருக்கிறார்.. ஆஸ்பத்திரி எனக்கு தண்ணி பட பாடு. என் அத்தையும் அங்கே நர்ஸாகவும் நர்சிங் சுப்பரின்ட்டாகவும் இருந்தார்.
நான் பெரியாஸ்பத்திரிக்கெல்லாம் போனதில்லை. ஒரே ஒரு தரம் மேலாவணி மூலவீதி வீட்டில் இருக்கும்போது பக்கத்துப் போர்ஷன் மாமிக்கு திடீர்னு அபார்ஷன். அதுக்கு அங்கே அட்மிட் பண்ணி இருந்தாங்க. அப்போ அவங்க மாமியார் (மாமாவின் அம்மா) சமைச்சுக் கொடுத்ததை எடுத்துண்டு மாமிக்கும், மாமாவுக்கும் கொடுத்துட்டு வரப் போனேன். அதைத் தாண்டித் தான் கோரிப்பாளையம் ரோடில் பள்ளிக்குப் போகணும். ஆனாலும் அங்கே இறங்கிக் கொஞ்ச தூரம் நடந்து தான் ஆஸ்பத்திரிக்குப் போகணும். போயிட்டுத் திரும்ப வந்து வேறே பஸ் பிடிச்சுப் பின்னர் பள்ளிக்குப் போவேன்.
நீக்குபின்னாட்களில் 76 இல் பையர் பிறந்தப்போ அவருக்கு 40 நாட்களிலேயே திடீர்னு டபுள் நிமோனியா வரவே அங்கே வீட்டுப் பக்கம் இருந்த குழந்தைகள் மருத்துவர் பெரியாஸ்பத்திரியில் அவருடைய நண்பர்களுக்குத் தொலைபேசி என்னை அங்கே போய்க் குழந்தையை அட்மிட் பண்ணச் சொன்னார். ஆக்சிஜன் சிலின்டரெல்லாம் இருக்கும் என்பதாலும் வேறு உபகரணங்கள் தேவைப்பட்டாலும் அங்கிருக்கும் மருத்துவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்பதாலும் அங்கே போகச் சொன்னார். இரண்டு நாட்கள் இருந்தோம். அம்மா வீட்டுக்குப் போய்விட்டு வருவார். நான் குழந்தையுடன் அங்கேயே இருந்தேன்.
ஆமாம்,, நீங்கள் OCPM இல்லையா? ஏன் வைகைக்கு அந்தப் பக்கமே மங்கையர்க்கரசி உட்பட பள்ளிகள் இருந்தனவே... அதில் சேரவில்லை?
நீக்குபீடியாட்ரிக் வார்டு நான் பார்க்கும்போது கேஷுவாலிட்டி உள்ள கேட் பக்கமாகச் சென்று திரும்பி நேராகச் சென்றால் வரும்!
டி.எம்.ஆர். நார்த் கேட்டில் ஆறு முதல் எட்டு வகுப்புகள். அங்கே தான் படிச்சுட்டு இருந்தேன். அப்பாவுக்கோ அதோடு படிப்புப் போதும்னு நினைப்பு. எனக்குப் படிக்கணும். ஆனால் மாமாக்களும், தாத்தாவும் அங்கே கொண்டு வைச்சுக்கறோம்னு சொன்னாங்க. அப்பாவுக்கு இஷ்டமில்லை. அப்போ எங்க தெருவிலேயே டைப்ரைடிங் இன்ஸ்டிட்யூட் வைச்சிருந்த எங்க கோபால் சார் ஓசிபிஎம்மில் செக்ரடேரியல் கோர்ஸுக்குப் பாடம் எடுத்துட்டு இருந்தார். அவங்க குடும்பமும் அம்மா/அப்பா குடும்பமும் ரொம்பப் பழக்கம். அவர் தான் நான் ஒன்பதாம் வகுப்புச் சேரணும் என்பதைத் தெரிந்து கொண்டு ஓசிபிஎம்மில் அவரே போய் என் பெயர் மற்றத் தகவல்கள் கொடுத்துட்டுப் பணத்தையும் கட்டிட்டு வீட்டுக்கு வந்து அம்மாவிடம் ரசீதைக்கொடுத்துட்டு நாளைக்குப் போய் பழைய பள்ளி டிசியைக் கொடுத்துடுங்க. அப்புறமா செக்ஷன் போடுவாங்கனு சொன்னார். மாமாக்கள், பெரியப்பா, எல்லோருமே அதை ஆதரிக்கவும் அப்பாவும் சரினு சொல்லிட்டார். பெரியப்பா பெண் அக்காவோ கான்வென்டில் அவங்க படிச்சதாலே அங்கே எனக்குப் பணம் கட்டப் போயிருந்தாங்க. அப்புறமா அதை வேண்டாம்னு சொல்லிட்டு இன்னொரு பெண்ணுக்கு வாங்கிக் கொடுத்தாங்க. இதான் நான் ஓசிபிஎம்மில் சேர்ந்த கதை. சொல்லப் போனால் வீட்டிலிருந்து நடந்து போகும் தூரத்திலேயே வடக்கு/கிழக்கு ஆவணி மூலவீதிகள் சேரும் முக்கிலே நகராட்சிப் பள்ளி இருந்தது. அம்மா அதில் தான் சேர்க்க இருந்தாங்க.
நீக்குவிளக்கமா விளக்கிட்டீங்க... என் தங்கையும் பாஸும் கூட அதே ஸ்கூல்தான்!
நீக்குசாச்திரிஜி பற்றிய இந்த நிகழ்ச்சி குறித்துப் பல முறை படிச்சிருக்கேன். உயர்ந்த மனிதர் மனதால்.
பதிலளிநீக்குஉயர்ந்த மனிதன் படத்தின் இந்தப் பாட்டும் வாணிஸ்ரீயின் நடிப்பும் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. அப்போப் பலரும் வாணிஸ்ரீக்கு எதிர்ப்புத் தெரிவித்ததையும் பற்றிக் கேட்டிருக்கேன்/படிச்சிருக்கேன். நடிப்பு விரகத்தைக் காட்டாமல் விரசத்தையே காட்டியது. :( இதற்கு விருது கிடைச்சது என்பதே இன்னிக்குத் தான் தெரியும்.
// விரகத்தைக் காட்டாமல் விரசத்தையே காட்டியது. //
நீக்குஹா.. ஹா.. ஹா.. சூப்பர்.
// இதற்கு விருது கிடைச்சது என்பதே இன்னிக்குத் தான் தெரியும். //
அட அப்பவே கொடுத்துட்டாங்க..!!
:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
நீக்குஅவங்க ஊர்ப்படங்களில் இந்த வெட்டி ஒட்டி நடிப்பதுதான் வழக்கம். சுசீலாவுக்குக் கிடைத்த பெருமை.நல்ல பாட்டு. அக நானூற்றுப் பாடல் என்று அப்போது பிரபலம்.
நீக்குகீதாவின் கருத்து சூப்பர்.
நீக்குகிரேசி சொன்னது சிரிப்பாக இருந்தது.
பதிலளிநீக்குவியாசர் விருந்துபடிக்கும் காலத்தில் படித்திருக்கிறோம்.
ஆஸ்பத்திரி அனுபவங்கள் திக்...திக் ...தான்.
வாங்க மாதேவி. நன்றி.
நீக்குஇன்றைய கதம்பம் சுவை!.
பதிலளிநீக்குகவிதைகள் ஓஹோ ரகம்.
எஸ்.ரா.வின் பேச்சு சுவாரஸ்யம். தான் படித்து ரசித்ததை ரசிக்கும்படி சொல்வது எல்லோருக்கும் சாத்தியம் இல்லை.
ஆஹா தன்யனானேன். கஷ்டப்பட்டதற்கு இப்படியான கமெண்ட்ஸ் சந்தோஷம் தருகின்றன.
நீக்குமதுரை ரொம்ப அழகாக இருந்த ஊர். பின் கொசுவம் வைத்து புடவை கட்டிக் கொண்டு, பிச்சோடா போட்டுக் கொண்டு அதில் பூவைத்துக் கொண்டு நிற்கும் மாத்வ பெண்ணைப் போன்ற அழகு என்று லா.ச.ரா மதுரையை வர்ணித்திருப்பார்.எனக்கு மைசூர் அப்படித் தோன்றும். 2020 மார்ச்சில் ஒரு சினேகிதியின் மகள் திருமணத்திற்குச் சென்றிருந்தேன். ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப் போகிறோம் என்று ஊரை தோண்டிப் போட்டு, கந்தரகோளமாக்கியிருந்தார்கள். ஸ்மார்ட் ஆகி விட்டதா என்று அங்கு இருப்பவர்கள், அல்லது சமீபத்தில் அங்கு சென்றவர்கள் சொல்லலாம்.
பதிலளிநீக்குநான் போனதே இல்லை என்பதால் எனக்குத் தெரியாது. மதுரையைப் பார்த்தே பத்து வருடங்கள் ஆகின்றன.
நீக்கு'நகரம்' சுஜாதாவின் signature கதை எனலாம்.
பதிலளிநீக்குyessu..
நீக்குஏன் இங்கிருக்கும் எல்லோரும் வாணிஸ்ரீயை பிடிக்காது எங்கிறீர்கள்? நன்றாக நடிப்பாரே அதனாலா?
பதிலளிநீக்குபாட்டில் என் கண்ணுக்கு விரசமாக எதுவும் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அதற்கு நடன இயக்குனர் அல்லவா பொறுப்பு.
உயர்ந்த மனிதனில் பாரதியும் உண்டு. சிவகுமாருக்கு ஜோடியாக. அதற்குப் பிறகு பாரதியோடு ஜோடியாக நடிக்க சிவகுமார் விரும்பவில்லையாம். "அவங்க ரொம்ப உயரம்" என்று கூறி விடுவாராம்.
"என் கேள்விக்கென்ன பதில்?" பாடல் கூட முதலில் சிவாஜி, வாணிஸ்ரீக்காகத்தான் போடப் பட்டதாம். பின்னர் அதை பாரதி, சிவகுமாருக்கு வைத்தார்களாம்.
அந்தப் படத்தில் சௌகார் ஜானகி பிரமாதமாக நடித்திருப்பார்.
அது தெரியவில்லை. ஆனால் வாணிஸ்ரீ ஏனோ என்னை எல்லாம் ரொம்பக் கவரவில்லை. ஆனால் வசந்தமாளிகை உட்பட பெரிய படங்களில் நடித்திருக்கிறார்.
நீக்குPrecis writing என்பது ஒரு கலை. அதில் ராஜாஜி வல்லுனர் என்பார்கள். அதனால்தான் அவரால் ராமயணத்தையும், மகாபாரதத்தையும் எளிமையாக, சுருக்கமாக குழந்தைகளுக்காக எழுத முடிந்ததோ?
பதிலளிநீக்கு'அகலாது அணுகாது தீக்காயவார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந் தொழுகுவார்'
என்று வள்ளுவர் சொன்னதைத்தான் தௌம்யர் கூறியிருக்கிறாரோ?
You too expert in precis writing. Just look my comments. All are stories. And You? Explain things briefly and clearly. _/\_
நீக்குI admire you very much.
நீக்குபானு அக்கா சொன்னதையும் ஆதரிக்கிறேன். கீதா அக்கா சொல்லி இருப்பதையும் ஆதரிக்கிறேன்.
நீக்குலால் பகதூர் சாஸ்திரி, அப்துல் கலாம் போன்றவர்கள் உருவத்தால் சிரியவர்கள், பண்பால் உயர்ந்தவர்கள்.
பதிலளிநீக்குyessu... yessu
நீக்குஆண்டன் செகாவ்+ எஸ்.ராமகிருஷ்ணன் சூப்பர். நிதர்சனக் காதல்.
பதிலளிநீக்குஆஹா.. கேட்டுட்டீங்களாம்மா... ரசனை... இல்லை?
நீக்குyessu.
நீக்குஆர் சூடாமணியின் ஆவேசக் கொசு பிரமாதம். சாதுவையும் சீண்டும் கொசுவுக்கு அஹிம்சாவாதி ஹிம்சாவாதியாக மாறத்தான் வேண்டும். வையவனின் புயலும் அருமை. பழைய விகடன், குமுதம் எல்லாம் படிக்க ஆசையும் ஆவலும்.
பதிலளிநீக்குசுவாரஸ்யமாகத்தான் இருக்கும். ஆனால் இது தீபம் இதழில் வந்தது அம்மா.
நீக்குமருத்துவமனை நிகழ்வுகள் - எனக்கும் சில அனுபவங்கள் உண்டு! பெரிதாகச் சொல்லவில்லை என்றாலும் கசப்பான அனுபவங்கள்.
பதிலளிநீக்குநவராத்திரி நினைவுகள் - ஆஹா... எனக்கு பெரிதாக நவராத்திரி நினைவுகள் - அதிலும் சிறு பிராயத்தில் - இல்லை. நெய்வேலி நகரில் எங்கள் வீடு இருந்த பகுதியில் யாரும் கொலு வைத்ததாக நினைவில்லை. தில்லி சென்ற பிறகு பல வீடுகளில் கொலு சமயத்தில் சென்றிருக்கிறேன்.
மற்ற பகுதிகளும் நன்று.
அதேதான். என் இளமைப்பருவத்திலும் கொலு நினைவுகளுக்கு வழியில்லை! நன்றி வெங்கட்.
நீக்கு