நாங்கள் சில மாதங்களுக்கு முன்பு, துஷ்யந்த் ஸ்ரீதர் முன்னெடுத்துச் சென்ற ஸ்ரீலங்கா பயணத்திற்குப் பெயர் கொடுத்திருந்தோம். முன் பணமும் கொடுத்திருந்தோம். ஒருவருக்கு 75,000 ரூபாய். நாங்கள் முன்பணமாக ஒருவருக்கு 30,000 கொடுத்திருந்தோம் என்று நினைவு. மீதிப் பணத்தைத் தரும் நாளுக்கு முன்பு, பயணத்தில் கலந்துகொள்வதில்லை என்று தீர்மானித்தால் 5,000 ரூபாய் கழித்துக்கொண்டு மீதிப்பணம் தருவார்கள் என்று சொல்லியிருந்தனர். நான் கடைசி நேரத்தில் அந்தப் பயணத்துக்குச் செல்லவேண்டாம் என்று தீர்மானித்துவிட்டேன். மனைவிக்கு ஏமாற்றமாக இருந்திருக்கும் என்று தோன்றியது. அப்போது காஞ்சீபுரத்தைச் சேர்ந்த ஒரு பயண ஏற்பாட்டாளர், (தேவராஜா ஸ்வாமி டிராவல்ஸ்) வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒரு பயணம் செல்வதாக அறிவித்திருந்தார். உடனே அதற்கு முன்பணம் கட்டிவிட்டோம். அந்தப் பயணம் காஞ்சீபுரத்தில் புறப்பட்டு காஞ்சீபுரத்தில் முடியும் என்றாலும், எங்களுக்கு, பெங்களூரிலிருந்து கொல்கத்தாவிற்கு விமானப் பயணம் முன்பதிவு செய்தார்கள். மற்றவர்களுக்கு சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்கு. இந்தப் பயணம் ஏப்ரல் 14ம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 23ம் தேதி இரவு முடியும்.
இந்தப் பயண ஏற்பாட்டாளர்கள், உணவு மற்றும் பயண சௌகரியங்களில் மிகவும் கவனமாக இருப்பார்கள் என்று எனக்குத் தெரிந்த ஒருவர் பரிந்துரைத்திருந்தார். எனக்கு புது பயண ஏற்பாட்டாளர்கள் மூலமாக ஒருவருக்கு 65,000 செலவாகும் பயணத்தில் கலந்துகொள்வதா என்று மனதில் தோன்றியது. விமானப் பயணம், தங்குமிடம் நன்றாக இருக்கும் என்று சொல்கிறார்கள், மனைவிக்கோ கொஞ்சம் சௌகரியமாக இடங்களைப் பார்க்கவேண்டும் என்று ஆசை. சரி.. சென்று பார்த்துவிடுவோம் என்று நினைத்து இருவருக்கும் முன்பணம் கட்டினேன்.
இதற்கு முன்பு சென்றிருந்த யாத்திரைகளை நடத்துபவர் என்ன என்ன கொண்டு வரணும், செல்லும் இடங்களைப் பற்றிச் சுருக்கமாக விவரித்து செய்து கொள்ளவேண்டிய முன்னேற்பாடுகளைப் பற்றியெல்லாம் பகிர்ந்துகொள்வார். ஆனால் இவர்களோ எதைப்பற்றியும் சொல்லவில்லை. சுருக்கமான பயண விவரங்களை மாத்திரம் பகிர்ந்துகொண்டார்கள். முன்பணம் கட்டியதும், பெங்களூர்-கொல்கத்தா விமானச் சீட்டை அனுப்பிவிட்டனர்.
இந்தப் பயணத்தில் கொல்கத்தா, டார்ஜீலிங், கௌஹாத்தி, காங்க்டாக், ஷில்லாங், சிரபுஞ்சி போன்ற இடங்களைப் பார்ப்பதாகத் திட்டம். பயணங்களைத் தவிர்த்துவிட்டால், சுமார் 7 நாட்கள் இந்த இடங்களில் இருப்போம். இந்த இடங்கள் எதற்கும் நாங்கள் சென்றதில்லை. அதனாலும், புது பயண ஏற்பாட்டாளர் என்பதாலும் எப்படி இருக்குமோ என்ற எண்ணம் தோன்றிக் கொண்டிருந்தது.
நான் பலமுறைகள் விமானப் பயணங்கள் மேற்கொண்டிருக்கிறேன் என்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் (200-250 இருக்கலாம்). ஆனால் மே 2018க்குப் பிறகு விமானத்தில் பயணித்ததில்லை. என்னவோ அதில் விருப்பம் இல்லை. அதனால் யாத்திரைகளுக்கு இரயில் பிரயாணத்தையே விரும்புவேன். முதலில் 3-ஏசியில் பயணம். பிறகு சமீபகாலமாக 2-ஏசியில் பயணிக்கிறோம். இருந்தாலும் மனைவிக்கு சட் என்று விமானத்தில் செல்லவேண்டும் என்பதே விருப்பம். 15 கிலோ செக்-இன், 7 கிலோ கேபின் பேக்கேஜ் என்று பயணங்களுக்குச் செல்லமுடியுமா என்பது என் சந்தேகம். எப்படியோ இந்தப் பயணத்தில் பெங்களூரிலிருந்து கொல்கத்தா மற்றும் கௌஹாத்தியிலிருந்து பெங்களூருக்கு விமானப் பயணம்தான். அதனால் பேக்கிங் வேலைகளை முடித்துவிட்டு எடையைப் பார்த்தேன். செக்-இன் பெட்டி சுமார் 12 கிலோ, கேபின் பேக்கேஜ் 7 கிலோ என இருந்தன. மனைவிக்கு இரண்டு கிலோ குறைவு. நான் கொஞ்சம் அதிகமாகவே உடைகள் எடுத்துக்கொள்வேன் (முன் ஜாக்கிரதை)
வடகிழக்குப் பகுதி என்பதால் ஸ்வெட்டர் மற்றும் குளிருக்கான உடைகளை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லியிருந்தார்கள். ஒரு சாதாரண ஸ்வெட்டரை மாத்திரம் எடுத்துக்கொண்டேன். குளிர் பிரதேசங்களுக்காக என்று வாங்கியிருந்த நல்ல கதகதப்பு உடையை எடை காரணமாகவும், குளிர் என்னை என்ன செய்துவிடும் என்ற அலட்சியம் காரணமாகவும் எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் மனைவியை, என்ன என்ன உடைகள் வேண்டுமோ அவற்றையெல்லாம் எடுத்துக்கொண்டுவிடு என்று சொல்லியிருந்தேன். இல்லையென்றால், அங்கு வந்துவிட்டு, ரொம்பக் குளிருகிறது, கதகதப்பு உடை வாங்கவேண்டும் என்று சொன்னால், அதை எங்க தேடுவது என்று எனக்குக் கோபம் வந்துவிடும். இப்படித்தான் பத்ரிநாத் பயணத்தில், மூன்றாவது முறை கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துவிடுவோம், நமக்கு ஒரு சில மணி நேரங்கள் இருக்கின்றன என்று சொன்னபோது, ரொம்ப குளிராக இருக்கிறது, உல்லன் குல்லாய் வேண்டும் என்று சொல்லிவிட்டாள். கோயிலுக்கு உடனே சென்று கியூவில் நிற்கவேண்டுமே என்ற வேகத்தில் இருந்த எனக்கு, இது என்னடா புது ரிக்வெஸ்ட் என்று தோன்றியது. கடுகடுவென்று அருகிலிருந்த கடையில் பேரம் பேசாமல் (அப்படி இருப்பது எனக்கு அறவே பிடிக்காது. எல்லாத்துக்கும் பேரம் பேசினால்தான் திருப்தி) இரண்டை வாங்கிக்கொடுத்தேன்.
ஏப்ரல் 14ல் தமிழ் வருடப் பிறப்புக்கான வேலைகளை முடித்துவிட்டு, 2 மணி வாக்கில் ஒரு டாக்சியில் ஏர்போர்ட் நோக்கிச் சென்றோம். மாலை 3 மணிக்கு விமான நிலையம் அடைந்து, போர்டிங் பாஸ், லக்கேஜ் Tag, செக்யூரிட்டி செக் எல்லாம் முடித்து 4 ¼ க்கு புறப்படவேண்டிய நுழைவாயிலுக்குச் சென்றுவிட்டோம். எல்லா ஏற்பாடுகளும் மனைவியினுடையதுதான். டிஜியாத்ரா, பேக்கேஜ் டேக்-Tag, விமான நிலையத்திற்கான டாக்சி என்று எல்லாமே அவள்தான் ஏற்பாடு செய்தாள். எல்லாம் நான் பார்த்துக்கொண்டால், அவளுக்கு நல்லதல்ல, எல்லாம் அவளுக்கும் தெரிந்திருக்கவேண்டும் என்ற எண்ணத்தை முன்னிலைப்படுத்தி எல்லா வேலைகளிலிருந்தும் நான் தப்பித்துவிட்டேன். வழியில் சாப்பிடுவதற்காக மி.பொடி தடவிய இட்லி கொண்டுபோயிருந்தோம். அதையும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பே சாப்பிட்டோம். (காஞ்சீபுரத்திலிருந்து புறப்பட்டிருந்தால், எல்லாமே அவர்களுடைய ஏற்பாடு, மாலை உணவு, இரவு உணவு உட்பட)
பயண ஏற்பாட்டாளர், எனக்கு ஒரு அலைபேசி எண் கொடுத்து, அவர்களும் பெங்களூரிலிருந்து அதே விமானத்தில் வருகிறார்கள், அவர்கள் உங்களுக்கும் சேர்த்து இரவு உணவு கொண்டுவந்துவிடுவார்கள் என்று சொல்லியிருந்தார். எனக்கு, யாரிடமும் உணவு கேட்பது பிடிக்காது. இலவச உணவையும் ஏற்றுக்கொள்வதில்லை. அதனால், எங்களுடன் வருபவர் யார் என்று கேட்டுக்கொள்ளவும் இல்லை, அவர்களுக்கு போன் போடவும் இல்லை. ஆனால் கொல்கத்தாவில் இறங்கிய பிறகுதான் தெரியும், எங்களுக்கு அடுத்ததாக அவர்கள் இருவரும் உட்கார்ந்திருந்தார்கள் என்று.
பொதுவா பிரயாணங்கள் என்றாலே எனக்கு இரயில் நிலையத்துக்கோ இல்லை விமான நிலையத்துக்கோ அவர்கள் சொல்லும் நேரத்திற்கு அரை மணி முன்னால் போய்ச்சேர்ந்துவிடவேண்டும். எப்போதுமே கடைசி நேரத்தில் அவசர அவசரமாகச் சென்றால், எதையாவது மறந்துவிடுவதற்கும் தேவையில்லாத டென்ஷனை வரவழைப்பதற்கும் வழியாகும் என்பது என் எண்ணம். ஆனால் நம்ம வீட்டில்தான் நான் ஒரு தனி ரகமாச்சே. என் பசங்க எப்போதுமே கடைசி நேரத்தில்தான் கிளம்புவார்கள். மனைவியோ என்னுடன் வந்தால் நான் நினைத்தபடி டாக்சி புக் பண்ணுவது என்று எல்லாவற்றையும் செய்துவிடுவாள். இதுபோலத்தான் என் பையன் ஸ்வீடனுக்குப் படிக்கச் செல்லும்போது கொஞ்சம் தாமதமாக வீட்டிலிருந்து புறப்பட்டான். சென்ற வழியிலெல்லாம் நான் கடுகடு என்று முகத்தை வைத்துக்கொண்டிருந்தேன். டாக்சி அல்லது ஆட்டோ புக் பண்ணினால், கடைசி நேரத்தில் அவங்க கேன்சல் பண்ணிடுவாங்க. திரும்பவும் புக் பண்ணி சில பல நிமிடங்கள் வீணாகி எனக்கு டென்ஷனை வரவைக்கும். அதிலும் டாக்சி புக் பண்ணி, அவங்க பயணத்தை ஒத்துக்கிட்டு வருவதற்கு 15 நிமிடங்களாவது ஆகிவிடும். இதையெல்லாம் யோசித்து கொஞ்சம் முன்னாலேயே புக் பண்ணினால், அன்று பார்த்து உடனே வந்துவிடுவார்கள், டிராஃபிக் பிரச்சனை இருக்காது, நினைத்ததைவிட மிக முன்னதாகவே இரயில் நிலையத்துக்குச் சென்றுவிடுவோம். (அரை மணிக்குப் பதில் ஒரு மணி நேரம் முன்னதாக). அப்போ மகள் கடுகடுவென இருப்பாள். சரி சொந்தக் கதை போதும்.
இந்தப் பயணத்தைத்தான் நான் சில வாரங்கள் உங்களுடன் படங்களுடன் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.
கோயில் மற்றும் வரலாற்று நினைவுச் சின்னங்கள் போல எதுவும் எழுதும் எண்ணம் இல்லை. ஞாயிறு பட உலா என்ற தலைப்புக்கு ஏற்ற மாதிரிதான் இந்தத் தொடர் செல்லும்.

முதல் படம் எங்கள் வளாகம். இந்தப் பூவைப் பார்த்திருக்கிறீர்களா? இதுபற்றி
ஒரு முறை பகிர்ந்துகொள்ளணும் என்று நினைத்திருக்கிறேன். அடுத்த படம், விமானநிலையம்
செல்லும் வழியில் இருக்கும் சிலை.

பெங்களூர் விமான நிலையம் புதிதாக இருப்பதால் மிக அழகாக இருக்கும். விமான நிலையத்தின் படங்கள் பல எடுத்திருக்கிறேன் (இதற்கு முன்பு, கிளம்பிய மகன், மகள் மருமகனை வழிஅனுப்ப, அவர்களை வரவேற்க என்று பல தடவைகள் சென்றிருந்திருக்கிறேன்). அவற்றை வேறொரு சந்தர்ப்பத்தில் பகிர்கிறேன்.

விமான நிலையத்தின் உள்ளே, விமானத்திற்குக் காத்திருந்தபோது அங்கு எடுத்த படங்கள்.
யாரோ எப்போவோ சொல்லிவிட்டார்கள். குழலூதும் கண்ணனின் படமோ சிலையோ வீட்டில் இருந்தால் நம்மிடம் இருக்கும் செல்வத்தை ஊதியே போக்கிவிடும் என்று. இதெல்லாம் மூடநம்பிக்கைகள் என்று நமக்கு நன்றாகத் தெரிந்திருந்தாலும், மனதின் ஓரத்தில் இது பதிந்துவிட்டதால், நான் குழல் ஊதும் கண்ணனின் படமோ இல்லை சிலையோ வாங்குவதில்லை. என் மகள் எனக்கு பிரியமாக (நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க) வரைந்துகொடுத்த கிருஷ்ணர்தான் என் ஆதர்ச தெய்வம், திருப்பதி வெங்கடாசலபதிக்கு அடுத்து.

அங்கிருந்த கடையில் ராதா கிருஷ்ணன் மற்றும் திருப்பதி பாலாஜி சிலைகள் விற்பனைக்கு வைத்திருந்தார்கள். அழகாக இருந்தன. இந்த பாலாஜி சிலைக்கும், திருப்பதி பாலாஜி மூலவருக்கும் உங்களுக்குச் சட் என்று தோன்றும் வித்தியாசம் என்ன?

விமானத்தில் அமர்ந்தபிறகு எப்போதும்போல ஒரு புகைப்படம் எடுத்தேன்.

கொல்கத்தா விமானநிலைத்துக்கு மாலை 7:45க்கு வந்துசேர்ந்துவிட்டோம். எங்கள் பெட்டியை கலெக்ட் செய்துகொண்டோம். சென்னையிலிருந்து வருபவர்களின் விமானம் 8:15க்கு மேல்தான் வந்தது. அவர்களும் பெட்டிகளை கலெக்ட் செய்துகொண்ட பிறகு எல்லோரும் சேர்ந்து விமான நிலையத்தின் வெளியில் வந்தோம். அப்போதுதான் பயண ஏற்பாட்டாளரை முதன் முதலில் நேரில் பார்த்தேன். இரவு உணவு வேண்டுமா, நான் கொண்டுவந்திருக்கிறேன் என்று சொன்னார். நாங்கள் சாப்பிட்டுவிட்டோம், வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.

கொல்கத்தா என்றாலே நம் நினைவுக்கு வருபவள் காளி அல்லவா? விமான நிலையத்தில் இருந்த சிற்பம்.
எப்போதுமே பயணங்களில், 30-40 பேர்களுக்கு மேல் கலந்துகொள்வார்கள். பேருந்தில் ஏறி இடம் பிடிக்கவும், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு இடம் பிடிக்கவும் அனைவரும் முயல்வார்கள். பேருந்து பயணம் அரை மணி நேரம்தான் இருந்தாலும், இந்த மாதிரி இடம் பிடிப்பது எனக்குப் பிடிக்காது. நான் பொதுவாகச் செல்லும் யாத்திரையை நடத்துபவர், யாரையும் பேருந்தில் ஏறவே விடமாட்டார். அவர் கூப்பிடக் கூப்பிட இரண்டிரண்டு பேராக வந்து அவர் குறிப்பிடும் இடத்தில் உட்கார்வார்கள். இதற்கு நேரமாகும் என்றாலும் இதனால், சிலர் முண்டியடித்து இடத்தைப் பிடித்துக்கொண்டார்கள் என்ற பிரச்சனை எழாது. அவரும், முதலில் பணம் கட்டியவர்களுக்கு முதலில் இடம் என்ற பாணியில் இடத்தை ஒதுக்குவார். நெடிய பயணங்களில் (9-10 நாட்கள் யாத்திரை), ஒவ்வொரு 200 கிமீட்டர் பயணத்திற்கும், நாம் உட்கார்ந்திருந்த சீட்டிலிருந்து அதற்கு பின்னால் உள்ள சீட்டிற்கு மாறவேண்டும். அப்படிச் செய்வதால் சிலர் மாத்திரம் பின்பக்கமுள்ள சீட்டுகளில் உட்கார்ந்து கஷ்டப்படுவது நடக்காது.
ஆனால் இந்தப் பயணத்தில் விமானநிலையத்துக்கு ஒரு பேருந்து வந்தது. அதன் டிக்கியில் எங்கள் லக்கேஜுகளை வைத்துவிட்டு பேருந்துக்குள் வந்தால், எல்லோரும், இரண்டு மூன்று சீட்டுகளைப் பிடித்துக்கொண்டு விட்டனர். நாங்கள் இருவரும் உள்ளே பார்த்தால், ஒரு சீட்டும் காலியாக இருப்பதுபோல இல்லை. ‘அவர் வரார், இவர் வர்றார்’ என்று இடத்தை விட்டுக் கொடுக்கவில்லை. கொஞ்சம் கடுப்பான நாங்கள் கீழே இறங்கிவிட்டோம். பிறகு யாத்திரையை நடத்துபவர், பேருந்தில் இருப்பவர்களைவிட 10 சீட் அதிகமாகவே இருக்கிறது என்று சொல்லி அவர் உள்ளே வந்ததும், கொஞ்சம் ஒழுங்கு ஏற்பட்டு சீட்டுகள் காலியாக இருந்தன (ஒருவர் இன்னொரு இரண்டு பேருக்கும், அந்த இரண்டு பேர் இவருக்கும் என்று வெவ்வேறு இடங்களில் சீட்டைப் பிடித்துவைத்துக் கொண்டதால் ஏற்பட்ட குழப்பம் இது). தங்குமிடத்துக்குத்தான் போகப்போகிறோம், அதனால் கிடைத்த இடங்களில் உட்கார்ந்துகொள்ளுங்கள் என்றார். இது ஒன்றுதான் நான் இந்த யாத்திரையில் பார்த்த முதல் பிரச்சனை. நாங்கள் ஏகப்பட்ட யாத்திரைகள் சென்றிருக்கிறோம் என்பதால் என்ன செய்யவேண்டும் என்பது உடனே எங்களுக்குப் புரிந்துவிட்டது. இனிமேல், நான் லக்கேஜை வண்டிக்கு எடுத்துச் செல்வது, ஏற்றுவதைப் பார்த்துக்கொள்வேன், மனைவி பேருந்தில் முதல் 4 சீட்டுகளுக்குள் எங்களிருவருக்கும் இடம் பிடிப்பது என்று நிச்சயத்துக்கொண்டோம். முதல் தடவை நிகழ்ந்தது தவிர மற்ற எல்லா நேரங்களிலும் எல்லோரும் ரொம்பவே புரிதலுடன் இருந்தோம்.
இரவு 9:45க்கு ஹோட்டல் Saad சாத் ஐ அடைந்தோம். உடனே இரண்டிரண்டு பேராக சேர்ந்து தங்கும்படியான அறை ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டது. பேருந்திலிருந்து எங்கள் லக்கேஜ், அவரவர் அறைக்குக் கொண்டுவந்து கொடுத்தார்கள். பிறகு எங்களை உணவு உண்ணும் இடத்திற்கு வரச்சொல்லி, ஒவ்வொருவருக்கும் ஒரு தட்டும், தம்ளரும் பையில் போட்டுக் கொடுத்தார்கள். இதனைத்தான் இந்தப் பயணம் முழுவதும் உபயோகிப்போம். இரவு 10 மணி ஆகிவிட்டதால் எல்லோருக்கும் வாழைப்பழம் மற்றும் பாதாம் பால் கொடுத்தார்கள்.
பொதுவாக பயணங்களின்போது, செரிமானம் குறைவாகவே இருக்கும். காரணம் வேளை தவறிச் சாப்பிடுவது, கொஞ்சம், நேரம் கழித்து உறங்குவது ஆனால் காலையில் சீக்கிரம் எழுந்துகொள்ள வேண்டியிருப்பது போன்ற காரணங்களால். அதுவும் வடநாட்டுப் பிரயாணங்களின்போது காய்கறிகளைச் சேர்த்துக்கொள்வதும் குறைவு. அதனால் நான் பிரயாணத்தின்போது வாழைப்பழம் வாங்குவது உண்டு. மனைவிக்கு பயண ஏற்பாட்டாளர்கள் பாதாம் பால் மற்றும் வாழைப்பழம் கொடுத்ததில் மிக்க மகிழ்ச்சி
இரவு உடனே படுத்துக்கொண்டுவிட்டோம். காலை 6 மணிக்கு தயாராகி வந்துவிட வேண்டும் என்றும், லக்கேஜ்களுடன் கொல்கத்தாவைச் சுற்றிப்பார்க்கச் சென்றுவிட்டு மாலை கொல்கத்தா இரயில் நிலையத்திலிருந்து சிலிகுரி (நியூ ஜபல்பூர்) புறப்பட்டுச் செல்லவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள்.

எங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த ஏசி அறை.
நான் 4 மணிக்கு எழுந்து என்னுடைய நடைப்பயிற்சியை முடித்து, பிறகு இருவரும் 6 ½ மணிக்கு உணவு உண்ணும் இடத்திற்குச் சென்றுவிட்டோம். லக்கேஜை கீழே கொண்டுவந்துவிட்டோம்.
காலை உணவாக கேசரி, வடை, பொங்கல் மற்றும் ரவா கிச்சிடி சட்னி சாம்பாருடன் செய்திருந்தார்கள். அத்துடன் காபி மற்றும் ஆளுக்கு ஒரு தண்ணீர் பாட்டில். சிலர் சிறிய ப்ளாஸ்கில் காபியை வாங்கிக்கொண்டார்கள். எங்களிருவருக்கும் காபி, டீ சாப்பிடும் வழக்கம் இல்லை என்பதால் பிரயாணங்களில் எங்களுக்கு காலையில் தயாராக கூடுதலாக அரைமணி நேரம் கிடைக்கும். அதுவும்தவிர எப்படா காபி தருவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்காது. பயண ஏற்பாட்டாளர், வடை அல்லது பொங்கல் போன்றவை, சிறிய பாக்சில் வேணும்னா எடுத்துக்கோங்க, இடையில் பசித்தால் சாப்பிட்டுக்கலாம் என்றார் (சிலருக்கு டயபடீஸ் இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடு). இவையெல்லாம் எங்களுக்கு புதிது.
காலை 7 ½ க்கு இரண்டு சிறிய ஏசி பேருந்துகள் வந்தன. லக்கேஜுகளை ஏற்றிய பிறகு நாங்கள் பேருந்தில் ஏறிக்கொள்ள கொல்கத்தாவில் காணவேண்டிய இடங்களை நோக்கிப் பயணமானோம்.

இந்தப் பயணக் குழுவின் முதல் சாப்பாடு என்பதால் படம் எடுத்துக்கொண்டேன். இந்த யாத்திரைக் குழு, இந்தியாவில் நடத்தும் யாத்திரைகளுக்கு சமைப்பவர்களை உடன் கொண்டுவந்து விடுவார்கள். பரிமாறும் அளவிலும் சிக்கனமாக இருக்க மாட்டார்கள். நட்புடன் பழகுவார்கள்.
முதலில் பேளூர் இராமகிருஷ்ணா மடம் செல்வதாகத் திட்டம்.

வழியில் பார்த்த அழகிய பூங்கா

வழியில் இந்தியாவின் பெரிய கிரிக்கெட் மைதானமான ஈடன் கார்டனைக் கடந்து சென்றது பேருந்து (நினைவுக்கு வருகிறதா, தோற்கவேண்டிய போட்டியில் வி.வி.எஸ்.லக்ஷ்மண் மற்றும் திராவிட் சூப்பராக விளையாடி ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்த மேட்ச்?)

இதுதான் புகழ்பெற்ற ஹௌரா பாலம். தாங்கு தூண்கள் இல்லாமல் தொங்குகின்ற அமைப்பில் கட்டப்பட்டிருப்பது. இது ஹூக்ளி ஆற்றின் மேல் இருக்கிறது. உங்களுக்கு சூர்யா வடிவேலு நடித்த ஆதவன் திரைப்படம் நினைவுக்கு வருகிறதா?

பேளூர் இராமகிருஷ்ணா மடத்திற்கு எதிர்ப்புறம் இருந்த இடத்தில் பேருந்தை நிறுத்தினார்கள்.
காலை 8 மணிக்கு பேளூர் இராமகிருஷ்ணா மடம் இருந்த பகுதியை அடைந்தோம். அதைப்பற்றி அடுத்த வாரம் தொடருவோம்.
குறிப்பு:
படங்கள் குறைவாக இருக்கிறதே என்று நினைக்கவேண்டாம். அந்த அந்த இடங்கள் வரும்போது நிறைய
படங்கள் வரும் ஆனால் கதைகள் வராது. முதல் வாரத்தில் எழுத விஷயம் இருந்ததால் இந்த இழுவை.
(தொடரும்)
காலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் ஜீவி சார். அதிசய முதல் வருகை
நீக்குஅட! கறுப்பு -- சிவப்பு காம்பினேஷன் (!) உடையில் கலக்கல்! ஜோராக இருக்கிறது!
பதிலளிநீக்குஅப்போதெல்லாம் எடை குறைய ஆரம்பித்திருந்தேன். அதனால் அதுவரை போட்டுக்கொள்ள முடியாத உடைகளை உபயோகப்படுத்தும் வாய்ப்பு வந்தது.
நீக்குஎன்னுடைய வார்ட்ரோபில் 2XLலிருந்து L வரை எல்லா நிறத்திலும் ஒவ்வொரு அளவிற்கும் உடை வைத்திருக்க வேண்டியிருக்கு.
அனைவருக்கும் இனிய காலை வணக்கம். எல்லோரும் வளமாக இருக்கப் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குவாங்க வல்லிம்மா... இனிய காலை வணக்கம்.
நீக்குபெங்களூரில் இருக்கும் வளாகமா? பிர்மாண்டம் தான். யார் கன்ஸ்ட்ரக்ஷன்?
பதிலளிநீக்குஎத்தனாவது.ஃப்ளோர்? ..
திரு நெல்லைத்தமிழனின் பயணம் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவர் மனைவிக்கு அன்பு விசாரணைகள். ஏயப்பா என்ன ஒரு முஸ்தீபுடா:))) பயணங்கள் போது விமானமோ ரயிலோ முந்திச் சென்று விடவேண்டும். எத்தனையோ தொந்தரவுகளை இதனால் சமாளிக்கலாம்.
பதிலளிநீக்குகாப்பி டீ சாப்பிட மாட்டீர்களா? அதிசயப் பிறவிகள் தான். நான் எல்லாம் 4 மணிக்குப் பிம்மாலையில் எழுந்திருப்பதே காஃபி சாப்பிடத்தான்.:)))
பதிலளிநீக்குதிருமலா பாலாஜியும் இவரும் ஒரே மாதிரி இல்லை. மாலைகளைக் காணோம். திருமார்பில் , முக மண்டலத்தில் லக்ஷ்ணங்கள் வேறு மாதிரி இருக்கின்றன.
பதிலளிநீக்குபடங்கள் அருமை. இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன். தங்கள் பயணம் இனிதாக அமைந்தது என்றும் நம்புகிறேன். உங்கள் மனைவியாவது குளிருக்கான உடைகளை எடுத்துக் கொண்டது மகிழ்ச்சி:))
பதிலளிநீக்குகங்கை உற்பத்தியாகும் இடத்திலிருந்து கடலில் கலக்கும் கங்காசாகர் வரை என் று தென்னிந்திய ரயில்வேயில் ஒரு சுற்றுலா திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த பயணத்தில் நாங்களும் கல்கத்தாவில் இதே மாதிரி ஒரு இரவு லாட்ஜில் தங்கி காலையில் நகரத்தைச் சுற்றிப் பார்த்த நினைவு மீண்டது.
பதிலளிநீக்குஇந்த ஹெளரா பாலம் மரியாதைக்குரிய தாகூரின் நினைவாக 'ரவீந்திர சேது' என்று பெயர் பெற்றது. ஆனால் ஏனோ அந்தப் பெயர் புழக்கத்தில் இல்லாமலேயே இருக்கிறது.
பதிலளிநீக்குதுஷ்யந் ஸ்ரீதர் ஏற்பாடு செய்த பயணத்துக்கு கட்டிய முன்பணம் திருப்பிக் கொடுத்தார்களா? இல்லை அந்த வழக்கம்லாம் எங்களுக்கு இல்லை. எங்கள் கண்டிஷபி லிஸ்ட்டிலேயே அதைச் சொல்லி இருக்கிறோமே என்று சொல்லி விட்டு விட்டார்களா!!
பதிலளிநீக்குஒன்றிரண்டு தரம் பிளாஸ்கில் காபியை ஊற்றி விட்டால் அப்புறம் அந்த பிளாஸ்க்கிலிருந்து அந்த வாசனையை அகற்றுவது ரொம்பச் சிரமம். தண்ணீர் எடுத்துக் கொள்ள முடியாது. இதற்காக காபிக்கென்றே ஒரு பிளாஸ்கை ஒதுக்க வேண்டும். அதில் காபி வாங்கினால் கூட பழைய காபியின் வாசனையே இதிலும் அடிக்கிறதோ என்று பிரமை இருக்கும்!!
பதிலளிநீக்கு// நினைவுக்கு வருகிறதா, தோற்கவேண்டிய போட்டியில் வி.வி.எஸ்.லக்ஷ்மண் மற்றும் திராவிட் //
பதிலளிநீக்குவினோத் காம்ப்ளியின் அழுகையும் நினைவுக்கு வருகிறது! அதை மறக்க முடியுமா!
அந்தக் காலம்..............அந்தத் திரில்
நீக்கு// கடுகடுவென்று //
பதிலளிநீக்குரொம்ப தப்பு ப்ரோ.... அவங்களையும் கன்சிடர் பண்ணனும்!
நான் சொல்ல வந்தேன். நீங்க முந்திவிட்டீர்கள் ஶ்ரீராம்.
நீக்கு// என்ற எண்ணத்தை முன்னிலைப்படுத்தி எல்லா வேலைகளிலிருந்தும் நான் தப்பித்துவிட்டேன் //
பதிலளிநீக்குபிரில்லியண்ட் ப்ரோ...!!!!
// இறங்கிய பிறகுதான் தெரியும், எங்களுக்கு அடுத்ததாக அவர்கள் இருவரும் உட்கார்ந்திருந்தார்கள் என்று. //
பதிலளிநீக்குநல்லா நினச்சு பாருங்க.. அவங்கதான் அவங்கன்னு தெரியாமல் பொதுவா பயண ஏற்பாட்டாளர்களை குறை சொல்லியோ திட்டிகிட்டோ ஏதாவது பேசினீங்களான்னு!
:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
நீக்குஎனக்கும் கூட சொன்ன நேரத்துக்கு கரெக்ட்டா கிளம்பனும், சொன்ன நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில இருக்கணும்ங்கற எண்ணம்லாம் பலமா உண்டு. எங்கள் வீட்டிலும் இது சம்பந்தமா பிரச்னை வரும் தான்.
பதிலளிநீக்குAthe Athe
பதிலளிநீக்குநீல வண்ண பாக் எடுத்திருக்கணும். ஆட்சேபிக்கறேன்.
பதிலளிநீக்குநீங்க ரொம்ப டிமாண்டிங்.
பதிலளிநீக்கு