1.11.26

நான் சென்ற அலுவலகப் பயணங்களில் கண்டவை - 06 பாலக்காடு:: நெல்லைத்தமிழன்

 

நான் ஜோசியத்தில் நம்பிக்கை உள்ளவன். பலரால் அதனைச் சரியாகச் சொல்லமுடியாததால், ஜோசியம் பொய் என்ற எண்ணம் பரவியிருக்கிறது. மக்கள் ஜோசியர்களை நம்புவதால், கல்லா கட்டுவதற்காக பொய்யும் புரட்டும், தெரிந்ததும் தெரியாததுமாக ஒரேயடியாக பல ஜோசியர்கள் அடித்துவிடுகிறார்கள். உங்களுக்கு நிச்சயமாக ஆண் குழந்தைதான், தவறினால் பெண் குழந்தை பிறக்கும் என்ற ரேஞ்சுக்கு எழுதுகிறார்கள்.

என் அப்பாவிற்கு மிக நம்பிக்கையான ஒரு ஜோசியர் இருந்தார். எங்கள் திருமணத்திற்காக ஜாதகப் பொருத்தங்களை உள்ளூர் ஜோசியரிடம் கேட்டுவிட்டு, பிறகு பொருந்தும் ஜாதகங்களை அவருக்கு அனுப்பி அவருடைய விளக்கங்களைக் கேட்டபிறகுதான் அடுத்த ஸ்டேஜுக்குச் செல்வார். அந்த ஜோசியர், ஒரு முறை கணிணி சம்பந்தமாக ஏதோ ஒரு உதவி, நான் கெம்ப்ளாஸ்டில் (மேட்டூர். அது இந்தியாவில் நான் முதல் முதலாக ஒரு கம்பெனியில் வேலை செய்த கதை. ஆரம்பகால வேலை, பிறகு வெளிநாடு செல்லவேண்டும் என்ற ஆசை, எப்படி வெளிநாட்டு வேலை வாய்ப்பு வந்தது, துபாய் அனுபவங்கள் என்று தனியாக எழுதவேண்டும்) வேலை பார்த்தபோது கேட்டிருந்தார். அதற்கான விளக்கங்களை அவருக்கு எழுதியிருந்தேன். அவர் என்னிடம், நீங்கள் முருகனை வணங்குங்கள், சஷ்டியில் பிறந்தவர் என்பதால், செவ்வாய் தோறும் கந்த சஷ்டி கவசம் பாராயணம் பண்ணுங்கள் என்று சொன்னார். கந்த சஷ்டி கவசம் படித்து மனனம் செய்யும் வேளை, நான் துபாயில் வேலை பார்த்தபோதுதான் வந்தது.  எதற்கும் ஒரு நேரம் வேண்டுமல்லவா?  அந்த ஜோசியர் தன்னுடைய ஒரே மகளுக்கு நல்ல வரன் பார்த்தார்.  நன்கு ஆராய்ந்து பொருத்தம்லாம் பார்த்து திருமணம் செய்துவைத்தார். மகள் ஒரு வருடத்துக்குள்ளேயே கணவனை இழந்துவிட்டார். அது அந்த ஜோசியருக்கு பேரதிர்ச்சியாகி, பிறகு ஜோசியம் பார்ப்பதையே விட்டுவிட்டார்.

சில ஜோசியர்கள், சில நேரங்களில் சொல்வது சரியாக பலிக்கும். எல்லா நேரங்களிலும் பலிக்கிறதா என்றால், அப்படி இல்லை என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.  அப்படி ஒரு ஜோசியர் எனக்குச் சொன்னதைத்தான் இந்த வாரம் பகிர நினைக்கிறேன்.

நான் வேலை பார்த்த அந்த கன்சல்டன்சி கம்பெனியிலேயே மூன்று வருடங்கள் வேலை பார்ப்பேன், என்னைப் பற்றி நீங்கள் சந்தேகப்பட வேண்டாம் என்று கம்பெனி எம்.டியிடம் சொன்னதை உங்களிடம் பகிர்ந்திருந்தேன். அது என்ன மூன்று வருடம்? கணிணி துறையில் 3-5 வருடங்கள் ஒரே கம்பெனியில் வேலை பார்ப்பது என்பது அந்த கம்பெனிக்கு, அதிலும் கன்சல்டன்சி கம்பெனிக்கு நல்லது. அப்படிப்பட்டவர்களை நம்பித்தான் பெரிய பெரிய ப்ராஜக்ட்களைக் கொடுக்கமுடியும். அனேகமாக எல்லா ப்ராஜக்ட்களும் ஆறு மாதங்களிலிருந்து ஒரு வருடம் வரை போகும். முடிந்த பிறகும் அடுத்த ஆறு மாதங்கள் நிறைய சப்போர்ட் தேவையாக இருக்கும். ப்ராஜக்ட் மேனேஜரை நம்பி இப்படி ஒரு கம்பெனியின் ப்ராஜக்டைக் கொடுத்து, அவன் ஆறு மாதங்களுக்குள் வேறு வேலை பார்த்துக்கொண்டு சென்றுவிட்டால், அது ப்ராஜக்டைக் குலைத்துவிடும்.  அதனால், நான் மூன்று வருடங்கள் என்று சொன்னதால், இவனை நம்பி பெரிய கம்பெனி ப்ராஜக்டுகள் கொடுக்கலாம் என்று கம்பெனி எம்.டிக்கு நம்பிக்கை வந்திருக்கும்.

நான் ஒரு தடவை வெகேஷனுக்கு பெங்களூர் வந்திருந்தேன். அப்போது ஒரு ஜோசியரிடம் என் ஜாதகத்தைக் கொடுத்து கன்சல்ட் செய்தேன். பிறகு பஹ்ரைன் திரும்பினேன். நான் வேலை பார்த்த கம்பெனியில் (டேட்டாமாஸ்) அப்போது கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் முடிந்திருந்தது.  ஒரு நாள் கம்பெனி எம்.டி என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். அது அக்டோபர் முதல் வாரம், 1998 என்று நினைவு. அப்போது அவரிடம், நான் ஜோசியரை கன்சல்ட் செய்திருக்கிறேன். இந்தக் கம்பெனியை விட்டு இப்போது விலக மாட்டேன். ஆனால் இந்த மாதத்தில் மூன்றாம் வார முடிவில் நான் வேறு ஒரு கம்பெனியில் பணி புரிவேன், ஆனால் சம்பளம் இந்தக் கம்பெனியில்தான். புதிய கம்பெனி இந்த இடத்தைவிட்டு தூரமாக இருக்குமாம். எனக்கு ரிப்போர்டிங் பாஸும் வேறு கம்பெனியில்தானாம். வரும் ஏப்ரலில் வேலை மாறுதல் உண்டு என்று ஜோசியர் சொல்லியிருக்கிறார் என்றேன். அவர் சிரித்துக்கொண்டே கேட்டுக்கொண்டார். மூன்று வருடங்களில் என் நிறை குறைகள் அவருக்குத் தெரியும், என்னுடைய நல்லெண்ணமும் நல்ல நடத்தையும் என்னை நம்பிக்கைக்குரியவனாக ஆக்கியிருந்தது.

இது நடந்து பத்து நாள் கழிந்து ஒரு வியாழக்கிழமை, அலுவலகம் விட்டு நான் வீட்டுக்கு மதியம் வந்தேன். எங்களுக்கு வியாழன் மதியம் வரைதான் அலுவலகம். பிறகு வார இறுதி. வார முதல் நாள் சனிக்கிழமை. இப்படித்தான் அப்போது இருந்தது. சாப்பிட உட்காரும் நேரத்தில் கம்பெனி எம்.டி என்னை அவசரமாக அழைத்தார். உடனே வா, உன்னிடம் ஒன்று சொல்லவேண்டும் என்றார். அலுவலகத்துக்குச் சென்றபோது, உனக்கு ஜோசியம் சொன்னவர் எப்படி இவ்வளவு சரியாகச் சொன்னார் என்று கேட்டார். பிறகு அவரே இப்போதுதான் ஒரு பெரிய ஆயில் கம்பெனி கணிணித் துறைத் தலைவர் என்னிடம் பேசினார். அங்கு வேலை பார்க்கும் ஒருவன் விலகிவிட்டதால், நம் கம்பெனி அவர்களுக்கு Ingres தெரிந்த ஒருவரை அனுப்ப முடியுமா, அடுத்த மூன்று மாதங்களுக்குத் தேவைப்படும், அதற்குள் அந்த சாஃப்ட்வேரை ஆரக்கிளுக்கு மாற்றிவிடுவோம் என்றாராம். கம்பெனியில் எனக்கு மாத்திரமே ingresல் அனுபவம் உண்டு என்பதால் (கெம்ப்ளாஸ்ட் அனுபவம்) என்னை அனுப்ப உத்தேசித்திருக்கிறாராம்.  அதனால் சனிக்கிழமை முதல் நான் அந்த கம்பெனிக்கு ரிப்போர்ட் செய்யணும் என்றார். ஜோசியர் சொன்ன தேதிக்கும் நான் ரிப்போர்ட் செய்யும் நாளுக்கும் ஒரு தினம்தான் வேறுபாடு.

நாம் உடனே என்ன நினைப்போம்? அந்த ஜோசியரிடமே, நாளை என்ன குழம்பு சாப்பிடுவேன் என்று கேட்டுப்பார்க்க வேண்டியதுதானே இல்லை வேறு ஏதேனும் கேட்கலாமே, எல்லாம் பலிக்குமா என்போம். அப்படி நினைக்கக் கூடாது.  பின்னொரு காலத்தில் அதனைப் பற்றிச் சிந்திக்கும்போது, இறைவன், எம்.டி. மனத்தில் என் நினைவு வரணும் என்பதற்காக அவரிடம் நான் ஜோசியம் கேட்ட கதையைச் சொல்ல வைத்திருக்கிறார் என்றுதான் தோன்றியது.  ஜோசியத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. அதனால் அப்போது வந்த ஒரு சில வாய்ப்புகளை நான் கவனத்தில் கொள்ளவில்லை. எனக்கு புதிய வேலை வரும் ஏப்ரலில்தான் என்று மனதில் பதிந்துவிட்டது.

அப்படி நடந்ததா என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம். இப்போது மலம்புழா அணைக்கட்டுப் பகுதியின் படங்கள்.



விஞ்சில் அமர்ந்து செல்லும்போது அணைக்கட்டுப் பகுதி மிக அழகாக இருக்கும் (ஆனால் புகைப்படம் எடுப்பது கடினம்)

 

 

நீர் வெளியேறலை. வெளியேறும்போது எவ்வளவு அழகாக இருக்கும் தெரியுமா?

 

இந்த மாதிரி நீர்நிலைகளின் கரையில் வளரும் தாவரங்களிலிருந்து பேப்பர் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடிப்பது நல்லதா?

அணையிலிருந்து வெளியேறும் நீர் வரும் பாதை.

நந்தி தெரிகிறதா?

மிகவும் புகழ் பெற்ற யக்ஷி சிற்பம். இதனை காணயி குணிராமன் என்ற சிற்பி ஒற்றைக் கல்லில் உருவாக்கினார். 1969ல் நிறுவப்பட்ட இதன் ஐம்பதாவது வருடத்தில் கேரள அரசு அந்த ஓவியரை கௌரவித்தது. சிற்பத்தின் வெளிப்படைத் தன்மைக்காக சிலரால் குறை சொல்லப்பட்ட போதிலும், பெரும் புகழ் பெற்றது. இந்த ஓவியரே, திருவனந்தபுரம் சங்குமுகத்துறையில் ஜலகன்னிகா என்ற சிற்பத்தையும் உருவாக்கியிருக்கிறார்.

 

அழகிய சிற்பம், ஆபாசமாகத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக புகைப்படத்தின் கோணத்தை மாற்றியிருக்கிறேன். நம்ம எங்கள் பிளாக் சென்சார் அதிகாரி கௌதமன் சாரின் கத்தரியிலிருந்து தப்பிக்குமா?

 

 

 

 

இங்க கேமரா வைத்து யாரைக் கண்காணிக்கிறார்கள்? எடுத்த கோணத்தில் பாலம் தெரியவில்லை. அணைக்கு யாராவது ஆபத்து விளைவிக்கக் கூடாது என்பதற்கு கண்காணிப்பு அவசியம் அல்லவா?

 

 

அங்கும் ஒரு காற்றாலை வைத்து மின்சார உற்பத்தி செய்கிறார்கள். எனெர்ஜி எஃபிஷியண்ட் என்று இதைத்தான் சொல்கிறார்களோ?

இன்றைய படங்கள் உங்களைக் கவர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன். அடுத்த வாரம் தொடர்வோம்.

(தொடரும்) 


=====================================================================================


மனசாட்சியம் - 30
KGY Raman 

ரவுடிகள் பெருமை

மூன்றாம் வகுப்பு படிக்கும் போது எங்கள் கிளாஸ் ரவுடியின் பெயர் சண்முகம். நல்ல விஷயங்கள் யார் கையில் இருந்தாலும் பிடுங்கிக் கொண்டு விடுவான். தின்பண்டமாய் இருந்தால் உடனே தின்று விடுவான். வகுப்பு நடந்து கொண்டிருந்தால் கூட இப்படி எல்லாம் போக்கிரித்தனம் செய்யத் தயங்கியதில்லை. 

அடுத்து,  ஆறாம் வகுப்பு வரும்போது,  முற்றிலும் வேறு மாதிரியான ரவுடி அறிமுகம் ஆனான். பெயர் தக்ஷிணாமூர்த்தி. அவன் என்று சொல்ல வேண்டுமா இல்லை அவர் என்று குறிப்பிட வேண்டுமா என்று சந்தேகம் வரும் அளவுக்கு பெரிய பையன். ஊர்ப் பணக்காரரின் ஒரே பிள்ளை. வெள்ளைக் குதிரை பூட்டிய பள  பள வண்டியில் பட்டு வேஷ்டி பட்டு ஜிப்பாவில் ராஜகுமாரன் போல் வந்து இறங்குவான். அன்றாடம் ஒரு புது நோட்டுப் புத்தகம், புது பென்சில் சகிதம் வருவான். அவை பெரும்பாலும் யாருக்கோ ஒருவருக்கு அன்றே தானமாகத் தந்து விடப்படும்.  'நன்றே செயினும் அன்றே செய்க' என்கிற கொள்கையின் விளக்கம்.  எல்லா வாத்தியார்களிடமும் அலட்சியமாக,  கிட்டத்தட்ட அவ மரியாதையாகப் பேசுவான். 

" சார்!  நீங்க சொல்றது எதுவுமே புரியலை. "

 "ஹோம் ஒர்க்கா அதையெல்லாம் யார் செய்கிறது ? " 

இதெல்லாம் அவன் பேசும் வசனங்கள். நல்ல வேளையாக வேறு போக்கிரித்தனம் எதுவும் அவன் செய்ததில்லை.  இன்றைக்கு என்ன பேசுவான் என்று ஒவ்வொரு நாளும் நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்போம். அவனுடைய தகப்பனார் அப்படி என்ன செல்வாக்கு வைத்திருந்தாரோ தெரியவில்லை,  எந்த ஆசிரியரும் அவனுடைய அடாவடிகளைச் சகித்துக் கொள்வார்களே தவிர,  கண்டித்ததே கிடையாது. இடைவேளைகளில் பட்டாணிக்கடலை, கடலை  உருண்டை, நாகப்பழம்,  சாக்லேட் என்று வித விதமாகத் தின்பண்டங்கள் வாங்கிக் கொண்டு வந்து எல்லாருக்கும் தாராளமாக வினியோகிப்பான்.  ஆறாவது வகுப்பில் சேர்ந்து ஒரு சில மாதங்களே ஆனதும் பள்ளிக்கு வருவதையே நிறுத்தி விட்டான். நாங்களும் அந்த ஊரை விட்டு வேறு ஊருக்குப் புறப்பட்டு விட்டோம். பிள்ளை பிழைத்துக் கொண்டதா என்று தெரியவில்லை.

ஏழு எட்டு வகுப்புகள் இரண்டும் ஒரு நகராட்சிப் பள்ளியில் படித்தேன். ஆச்சரியத்திலும் ஆச்சரியம் அந்த இரண்டு வகுப்புகளிலும் போக்கிரிப் பையன் என்று யாருமே இருந்ததில்லை. மாறாக ஓரே ஒரு போக்கிரி வாத்தியார் இருந்தார். நல்ல வேளையாக பெண் பிள்ளைகள் படிக்காத ஆண்கள் பள்ளி. அவரது விரசப் பேச்சுக்கள் எங்களைத் தாண்டி வெளியே போகவில்லை.

ஒன்பதாம் வகுப்பு ஒன்று மட்டும் ஒரு கிறிஸ்தவப் பள்ளியில் படித்தேன்.  தலைமை ஆசிரியர் ஒரு  பாதிரியார். கண்டிப்புக்குப் பெயர் போனவர். எப்போது பார்த்தாலும் பிரம்பும் கையுமாகப் பள்ளியைச் சுற்றி வந்து கொண்டிருப்பார். மாணவர்களால் மட்டுமல்ல ஆசிரியர்களால் கூட "பெரிய சாமி" என்று தான் அழைக்கப்படுவார். இந்தப் பள்ளியில் போக்கிரிப் பையன்களுக்கு இடமே இல்லை. ஆனால் ஒரு வில்லன் பியூன் இருந்தான். பையன்கள் யாராவது ஏதாவது சிறு விஷமம் செய்தால் கூட, அவர்களை இழுத்துக் கொண்டு போய்ப் பெரிய சாமி முன்னால் ஆஜர்ப் படுத்தி விடுவான். பெரிய சாமியும் தன் பிரம்பாயுதத்தை எடுத்து நான்கு திருச்சாத்து சாத்தி அனுப்புவார்.

கட்டட வேலைக்காக வந்திருந்த ஒரு கர்டர் மேல் நடந்து " டங் " என்று சத்தம் வருவதை ரசித்த போது பியூன் என்னைப் பெரிய சாமி சன்னதிக்கு அழைத்துக் கொண்டு போய் விட்டான். நடுங்கும் குரலில் வாய் குழற,  " இனிமே செய்ய மாட்டேன் சாமி " என்று நான் சொன்னதும் ஆச்சரியகரமாக, எனக்குப் பிரம்படி கிடைக்கவில்லை. இது அந்த பியூனுக்குப் பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தது. " உனக்கு சுழி நல்லா இருக்கு பொழைச்சுப் போ " என்று என்னை ஆசிர்வதித்து அனுப்பினான். 

பத்தாம் வகுப்பில் பள்ளி பூராவும் ரவுடிகள். இது வேறு ஊர் வேறு பள்ளி. சம்பந்தம் கோதண்டராமன் என்ற இரண்டு பெயர்கள் மட்டும் நினைவில் இருக்கிறது. இரண்டு பேரும் கட்சி போட்டுக் கொண்டு ஒருவர் அணியை இன்னொருவர் தாக்கியவாறு இருப்பார்கள். போர்க்காலச் செய்திகள் போல இவர்கள் அடித்துக் கொள்வது அன்றாடம் மாணவர்கள் இடையே பேசப்படும்.  கோதண்டராமன் ஒரு முறை , எதிரியை " உன்னை இரவல் செருப்பால் அடிக்கிறேன் " என்று சவால் விட்டுவிட்டு, எங்கள் வகுப்பில் இருந்த முகமது யூசுப் என்கிற பரம சாதுப் பையனின் செருப்பை கேட்டு வாங்கிப் போய் எதிரியை அடித்து விட்டுத்  திருப்பிக் கொடுத்தான். விவரம் அறிந்த யூசுப் தேம்பித் தேம்பி அழுதது எனக்கு இன்றும் நினைவு இருக்கிறது. 

பதினொன்றாம் வகுப்பு.  மீண்டும் வேறு ஸ்கூல். இதுவும் கிறிஸ்தவப் பள்ளி. இங்கும் தலைமை ஆசிரியர் ஒரு பாதிரியார். சிரித்த முகத்துடன் சாந்தமாக இருந்த இவர் பெரியசாமிக்கு நேர்மாறான கருணைத் தெய்வம். 

குலசேகரனை ரவுடி என்று சொல்ல முடியாது. எந்த தப்பும் செய்யாத அப்பாவிப் பிள்ளை. அப்போதெல்லாம் ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு மூன்று வருடங்கள் படித்து மாணவர்கள் நிதானமாக மேலே வருவார்கள். குலசேகரன் அந்த வகை. " யப்பா,  கொலே, ஹோம் ஒர்க் பண்ணினியா ? " என்று ஆசிரியர்கள் உரிமையோடு கேட்பார்கள். குலசேகரன் என்கிற பெயரை " கொலெ " என்று கூப்பிட ஒரு தைரியம் வேண்டும். குலசேகரன் ஒரு தாத்தா பேரப் பிள்ளைகளுக்கு பேசுகிற தொனியில் ஆசிரியர்களுக்கு பதில் சொல்வான். அனுபவத்தின் பெருமை.  நான் பாஸான வருடம் குலசேகரன் பாஸ் ஆனானா என்று தெரியவில்லை.

அந்த நாட்களில் ரவுடி என்ற பெயர் அவ்வளவு பிரபலம் இல்லை.  மாறாக எல்லாரும் சண்டியர் என்று குறிப்பிடப்பட்டார்கள்.  அவர்கள் தப்பு செய்திருந்தாலும் பிற மாணவர்கள் அவர்களை ஒரு ஹீரோவைப் போல்தான் பார்த்தார்கள்.   நம் சினிமாக் கதாநாயகர்கள் ரசிகர்களிடையே பெரிய ஹீரோக்களாக உலவுவதன் ஆரம்ப கட்டத்தைத் தான் நான் விவரித்திருக்கிறேன் என்று இப்போது  எனக்குத் தோன்றுகிறது.

என் இனிய ரவுடி நண்பர்களே,  நீங்கள் இன்னும் இருக்கிறீர்களா ? பள்ளிக்குப்பின் சமூகத்தில் நல்ல பெயர் எடுத்து கௌரவமாக நலமாக வாழ்வீர்கள் என்று நம்புகிறேன்.

51 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. மலம்புழாக் காட்சிகள் இனிமை. 1972 இல் போயிருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போது நான் மூன்றாம் வகுப்பு பரமக்குடியில் படித்துக்கொண்டிருந்தேன்

      நீக்கு
  3. பள்ளிகள், Bullies இதை நானும் அனுபவித்திருக்கிறேன். எலிமெண்டரி பள்ளி அளவில். மாரிமுத்து என்ற பையன். வீட்டுக்குத் திரும்பும் போது முதுகில் அறைந்து விட்டுப் போவான். 8 வயது குழந்தைகள் இருக்கும் வகுப்பில் 12 வயதுப்பையன் ஏன் படித்தான் என்று தெரியாது:) மறக்கவே முடியவில்லை அந்தப் பயத்தை.

    பதிலளிநீக்கு
  4. ஆசிரியர்களுக்கு ஸ்கேல் ஆயுதம். பெரிய மிஸ் அடிக்க மாட்டார். ஒரு கணக்கு வாத்தியார் ரொம்பக் கோபக்காரர். அவர்கோவித்தால் மனப்பாடமாக வாய்ப்பாடு சொல்ல மறந்து விடும். இப்போது நல்ல வேளை அதெல்லாம் கிடையாது. எங்க பசங்க படிக்கும் காலத்திலியே கிடையாது

    பதிலளிநீக்கு
  5. திண்டுக்கல் பள்ளி கன்னிகாஸ்திரீகள் அன்பாக நடந்து கொள்வார்கள். மறக்க முடியாத பள்ளி நினைவுகளைக் கொண்டு வந்ததற்கு மிக நன்றி ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய நினைவுகளை உங்களுக்கு கொண்டு வந்தேன் என்பது தான் என்னுடைய மகிழ்ச்சி. உங்களுக்கு என் நன்றி

      நீக்கு
  6. நாளாக நாளாக கைத்தல பேசியில் பதிவுகளை
    வாசிக்க இயலவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜ் சார். விரைவில் கண் பார்வை சரியாகட்டும்

      நீக்கு
  7. அப்பா ஹெட்மாஸ்டராக இருந்த பள்ளிகளிலேயே படித்ததால் பெரும்பாலும் சண்டியர்களைச் சந்தித்ததில்லை

    தாளவாடியில் 7ம் வகுப்பு சேர்ந்தபோது ஹெட்மாஸ்டர் பையன் இன்னொரு கன்னடப் பையனிடம் கன்னடத்தில் சொல்லி வாலிபாலை என் மீது தூக்கிப்போடச் சொன்னான். நான் பனங்காட்டு நரி ஹா ஹா

    பூலாங்குறிச்சியில் ஐந்தாம் வகுப்பில் ஹெட்மாஸ்டர் பையன் வம்பு வளர்த்தபோது நல்லா கொடுத்து பிறகு என் அப்பாவிடம் வாங்கிக்கொண்டேன்

    பதிலளிநீக்கு
  8. தூய சவேரியார் பள்ளி ஹாஸ்டலில் இருந்தபோது வயதான ஆனால் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த இருவர் ஹாஸ்டல் லீடர்கள்.

    அதில் ஒருவனை எல்லோர் முன்னாலேயும் ஹாஸ்டல் பிரதர் (Brother. Father school HM) நல்லா படி இந்த சப்ஜெக்டுல பத்து மார்க் வாங்கி இருக்க எனச் சொல்லவும் அவன் நீங்க என்ன படிச்சிருக்கீங்க டிகிரி கூட இல்லை முதலில் நீங்கள் படிச்சுட்டு அடுத்தவங்களுங்கு அட்வைஸ் பண்ணுங்கன்னு சொன்னான்.

    பதிலளிநீக்கு
  9. சண்டியர்களெல்லாம் வாழ்க்கைல பெரியாளாக ஆகியிருப்பாங்க

    மாமனார், வைகோ கூட கொஞ்சம் சண்டித்தனம் லீடர் மாதிரி கிளாஸ்ல இருப்பான் ஆனா கல்லூரி வகுப்பில் பாடம் நடத்தும்போது எங்கிட்ட ஒழுங்கா நடந்துப்பான்னு சொல்வார்

    பதிலளிநீக்கு
  10. ஹாஸ்டல் சண்டியர் அனுபவம் எம் எஸ்ஸிலயும் இருந்தது. ஊட்டிக்கு பயணிக்ஙிறேன் பேருந்தில் தட்டச்சு கடினமா இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது ஊட்டிப் பயணம் சிறக்க வாழ்த்துகள் சகோதரரே. அங்கு மழை, குளிர் எப்படி உள்ளதோ.? இங்கு நேற்றிரவு கொஞ்ச நேரம் மழை பெய்தது.

      நீக்கு
    2. போன வாரம் போயிருக்கணும் மழை நிலச்சரிவுனால இந்த வாரத்துக்கு புக்கிங் மாத்தினேன். நல்ல வெயில்னு நேற்று ஊட்டி டாக்சிக்காரர் சொன்னார் போன பிறகு தான் தெரியும் கமலா ஹரிஹரன் மேடம்

      நீக்கு
    3. என்னதான் சண்டியர்கள் இருக்கட்டும், பள்ளி நாட்களை ஆசைப்படுவது மிகவும் சுவாரசியமான விஷயம் அல்லவா ? உங்கள் மறுமொழிகளுக்கு என் நன்றி.

      நீக்கு
    4. " அசை போடுவது " என்று எழுதப் போய், " ஆசைப்படுவது " என்று அச்சாகி இருக்கிறது. திருத்தி வாசித்துக் கொள்ளவும்.

      நீக்கு
  11. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. ஸ்டிரிக்ட் வாத்தியார்கள்.. அவர்கள் இல்லாமலா? பிறகுதான் எழுதணும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக இருப்பது வாத்தியார்களுக்குத் தேவைதான் . ஆனால் ஒரு கொடுங்கோலர் என்று சொல்லக்கூடிய அளவுக்கு சித்திரவதை செய்கின்ற ஆசிரியர்களையும் மிகவும் இழிவாகத் திட்டுகிற ஆசிரியர்களையும் நினைவு கூறும் போது, கொள்கையை அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்கிற சோகம் ஏற்படுகிறது.

      நீக்கு
  13. கேஜிஒய் அஸர்களின் டாப்பிக் பெரும்பாலும் நம் அனுபவங்களை மீட்டெடுக்கக் கூடியதாக இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே காரணத்துக்காகத்தான் நானும் எழுத ஆரம்பித்தேன். பொழுது போக வேண்டும். அதுவும் இனிதாகப் போக வேண்டும். நான்கு நண்பர்கள் உட்கார்ந்து கொண்டு அரட்டை அடிக்கும் போது, சுபாவமாக என்ன பேசுவோம் ? எழுத்தும் அப்படிப் பேச வேண்டும் என்று தான் ஆசை. ஆனால் அது எல்லாப் பதிவுகளிலும் சரியாக அமைவதில்லை.

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    தங்களின் ஜோதிட அனுபவங்கள் குறித்த பகிர்வு சுவாரஸ்யமாக இருக்கிறது எனக்கும் ஜோதிடத்தில் நம்பிக்கை உண்டு. ஏனெனில் எங்கள் அப்பாவும் ஒரு ஜோதிடர்தான். எங்கள் வாழ்விலும் பல விஷயங்கள் ஜோதிடம் சொல்வது போல் நடந்துள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். ஜோதிடம் தொழிலாக மேற்கொண்டிருந்தாரா உங்கள் அப்பா? சிலருக்கே இந்த திறமை அல்லது வாக்குபலிதம் வாய்க்கும்

      நீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    இன்றைய மனசாட்சிய பகுதியும் நன்றாக உள்ளது. நல்ல விரிவான, விளக்கமான அனுபவங்கள் மிகுந்த எழுத்து. ஒவ்வொரு நாளும் இன்று என்ன என எதிர்பார்க்க வைக்கிறது சகோதரர் திரு. ராமன் அவர்களின் அனுபவ எழுத்துக்களுக்கு என் வாழ்த்துகள், பாராட்டுகள், என் பணிவான நன்றியும் கூட.

    நான் 6 லிருந்து பெண்கள் பள்ளியில் படித்ததினால், இந்த அனுபவங்கள் எனக்கும் புதிது. ஆனால், ஆறாவது படிக்கும் போது பள்ளி ஆசிரியை ஒருவர் எங்கள் முழு அடிஸ்கேலை வாங்கி வைத்துக் கொண்டு, எங்களையே அதனால் ஒரு செல்லத்தட்டுக்கள் வைப்பார். அது அவரின் முதுகை சொறியும் பயனையும் எப்போதும் பெறும். அதனாலேயே அவரிடம் அதைத் தர எங்களுக்குத் தயக்கம். ஆனால் அவர் ஸ்கேலை தரவில்லையென்றால் வேறு ஒரு ஸ்கேலால் அடித்து விடுவார் என்ற பயமும் உண்டு. அவரின் வகுப்பு முடிந்ததும் அந்த ஸ்கேலை மீட்டெடுப்பதில் எங்கள் கவனம் முழுவதும் இருக்கும். இல்லையென்றால் வீட்டுக்குப் போனதும், ஸ்கேல் தொலைந்து விட்டதை (சமயத்தில் என் போறாத வேளை அது இரண்டாக உடைந்து வேறு விடும்) கூறினால் வீட்டில் திட்டுக்கள் நிறைய விழும். மறுபடி அந்த ஸ்கேலை பெற நிறைய போராட வேண்டியதிருக்கும். இப்படியான பழைய அனுபவங்களை இன்றைய பதிவு மீட்டெடுத்து தந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  16. விளக்கமான பாராட்டு. மகிழ்ச்சி. நன்றி.

    பதிலளிநீக்கு
  17. முந்தைய தலைமுறை வரை பிராமணர்கள் வீட்டில் அல்லது கம்யூனிட்டியில் பெண்களை டீ (dee) போட்டு அழைப்பது சாதாரணம். பக்கத்து வீட்டுப் பெண்ணையும் எங்கடீ உன்னை ஆளைக் காணோம் என்பதுபோல் பேசுவது இயல்பு. கீர பாஷையில் எங்கட்டீ.

    தாளவாடியில் என்னுடன் படித்த பெண் ஒரு தடவை எங்கள் தமிழ் வாத்தியார் தயாநிதி, அவளை என்னடீ படிச்சாச்சா எனக் கேட்டார் (அவர் பிராமணர் அல்லர்). உடனே இவள், சார் இந்த d டீ போட்டுப் பேசறதை எங்கிட்ட வச்சுக்காதீங்கன்னு பட்னு சொல்லிட்டா

    என் கசின்கள் என்னைவிட பெரியவரோ சின்னவரோ நான் நீங்கள் என்று பேசும் வழக்கத்தை 9ம் வகுப்பிலிருந்து வைத்துக்கொண்டேன். என் தம்பி வாடி போடின்னுதான் பேசுவான். அவங்க என்னிடம் என்னடா மூணாவது மனுஷன் மாதிரி பேசற எனக் குறைப்பட்டுக் கொள்வார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரோஜா என்று என் வகுப்புத் தோழி.. உரிமையோடு " சரோஜா குட்டி, சவுக்காரக் கட்டி, கோதுமை ரொட்டி , கொண்டு வாடி சுட்டி " என்று பசங்க கவித்துவமாகக் கிண்டல் பண்ணுவோம். இதெல்லாம் பற்றி மட்டுமே சாட்சியம் சொல்லலாம் !!

      நீக்கு
  18. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  19. ஜோதிடம் நான் குழந்தைகள் திருமண சமயத்தில்பார்த்தேன்.
    எங்கள் வீட்டில், மாமியார் வீட்டில்ஜோதிடம் பார்ப்பது இல்லை. ஜாதகம் பார்க்காமல்தான் மாமியார் தன் ஐந்து மகனுக்கும் திருமணம் செய்தார்.
    உங்கள் நம்பிக்கை உங்களுக்கு அவர்கள் சொன்னது சரியாக இருந்த காரணத்தால் மெளும் பார்க்க நம்பிக்கை வந்து இருக்கும்.

    வேலைசெய்யும் இடத்திலும் எம்.டி நம்பி பொறுப்பான வேலையை நீங்கள் திறம்பட செய்வீர்கள் என்று உங்களிடம் கொடுத்து இருக்கிறாரே!
    நீங்களும் சிறப்பாக செய்து நல்ல பேர் எடுத்து இருப்பீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் ஜோதிடம் பார்ப்பது தவறு. பரிகாரத்துக்காக, பயன் கருதி கோயிலுக்குப் போவது தவறு. ஆனால் இது பாட்டுக்கு ஒரு புறம் போகுது

      உங்கள் மாமியாரின் செயல் சரியானது

      நீக்கு
  20. மலம்புழா அணைக்கட்டுப் பகுதியின் படங்கள்.

    நன்றாக இருக்கிறது. நந்தி சிலை தெரிகிறது.

    மிகவும் புகழ் பெற்ற யக்ஷி சிற்பம் அமைந்து இருக்கும் இடம் அழகாய் இருக்கிறது, சிலையும் நன்றாக இருக்கிறது. பச்சை பசேல் புல்வெளி அழகு. காற்றாலை படமும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் போன நேரம் காலை கூட்டமில்லாத சமயம். அதனால் எல்லாவற்றையும் ரசிக்க முடிந்தது

      நீக்கு
  21. பள்ளி பருவ நினைவுகள் அருமை.
    போக்கிரி பசங்க என்று அந்தக்காலத்தில் சொல்வார்கள். அவர்களின் போக்கிரித்தனத்தை நன்றாக சொன்னீர்கள்.
    வாத்தியாரும் போக்கிரிதனமாக அந்த காலத்தில் இருந்து இருக்கிறார்களே!

    அப்பாவுக்கு வேலை மாற்றம் ஏற்படுவதால் பள்ளீ படிப்பு வெவ்வேறு ஊர்களில் படிக்க நேரிட்டது என்று நினைக்கிறேன். எனக்கும் அப்படித்தான் நிறைய ஊர்களில் என் படிப்பு இருந்தது.

    /நம் சினிமாக் கதாநாயகர்கள் ரசிகர்களிடையே பெரிய ஹீரோக்களாக உலவுவதன் ஆரம்ப கட்டத்தைத் தான் நான் விவரித்திருக்கிறேன் என்று இப்போது எனக்குத் தோன்றுகிறது.//
    அந்தகால சினிமாக்களில் நீங்கள் சொன்னது போல பண்க்கார வீட்டு பசங்க பள்ளிக்கு வருவதும் அவர்களுடன் சில பசங்க பின்னால் சுற்றுவதும் காட்டுவார்கள்.

    பதிலளிநீக்கு
  22. நல்லா ரசிச்சுப் படிச்சீங்கன்னு தெரியுது. ரொம்ப சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
  23. வேலைத்தள பகிர்வு நன்றகக உள்ளது.

    இன்றைய ஆலப்புழா படங்கள் அனைத்தும் அருமை. நந்தி வித்தியாசமான முயற்சி. பெண் சிலை கலைக் கண்ணோட்டம்.

    மனசாட்சியம் பள்ளிக்கால நினைவுகள் நன்று.

    பதிலளிநீக்கு
  24. உங்கள் வெளிநாட்டு அனுபவங்கள் அனைத்தும் புதுமையானது. எங்க வீட்டிலேயும் எங்க மாப்பிள்ளை, சின்னம்னூர்ச் சித்தி பையர்னு வெளிநாட்டில் இம்மாதிரிக் கணினி சம்பந்தப்பட்ட வேலை தான். ஆனால் தொண்ணூறுகளின் முன் பகுதியில் சித்தி பையரும் மாப்பிள்ளை 97 இல் கல்யாணம் ஆனப்புறமும் போனார்கள். இப்படித் தான் வேலை மாறிக் கொண்டே இருப்பாங்க. எங்களுக்கெல்லாம் கவலையும் பயமுமாய் இருக்கும். எங்க மாப்பிள்ளையும் முதல்வேலை இந்தியாவில் தான். டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் சிஸ்டம்ஸ் மேனேஜராக இருந்தார். நல்ல சம்பளம். அதை விட்டுட்டுத் தான் அம்பேரிக்கா போனாங்க. எங்களுக்கெல்லாம் இஷ்டமே இல்லை. :(

    பதிலளிநீக்கு
  25. ஜோசியம் பத்தி நிறையச் சொல்லிட்டேன் முன்னாடியே. ஆகவே இன்னிக்கு எதுவும் இல்லை. உங்கள் ஜோசியரின் பெண் ஒரு வருஷத்திலேயே கணவனை இழந்தது வருத்தத்துக்கு உரியது. மலம்புழா அணைக்கட்டும் அதன் படங்களும் அருமை. யக்ஷி சிலை பற்றிக் கேள்விப் படலை. இன்னிக்குப் பார்க்க நேர்ந்தது. அணைக்கட்டைச் சுற்றி உள்ள மலைத்தொடர்களில் மேகங்கள் தவழ்வது தான் இன்னும் அழகு. நல்ல நவம்பர் மாதத்தில் ஊட்டி போகிறீர்கள். கவனமாக இருக்கவும். சுத்திப் பார்ப்பது கொஞ்சம் சிரமம் தான் எனத் தோன்றுகிறது. கடவுள் அருளால் எல்லாம் நன்றாக நடக்கும். கவலை வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  26. பள்ளி நாட்களை நினைவு கூர்ந்திருக்கும் திரு ராமன் அவர்களின் சின்ன வயசு நினைவுகள், முக்கியமாய்ப் பள்ளிக்கால நினைவுகள் எல்லாமுமே அருமை. நான் ஒண்ணாம் வகுப்பிலிருந்து ஐந்து வரை ஆண்/பெண் சேர்ந்து படிக்கும் பொன்னு ஐயங்கார்ப் பள்ளியில் படிச்சேன். ஆறவதிலிருந்து கிறித்துவப் பள்ளி. அம்பேரிக்காவின் ஏதோ ஒரு மிஷனரி எடுத்து நடத்திய பள்ளி டி.எம்.ஆரும் அதைச் சேர்ந்த ஓசிபிஎம் பள்ளியும். அங்கே எல்லாம் இப்படி ரவுடிகள் கிடையாது. ஆனால் சில பெண்கள் ரொம்பப் பெரியவங்களா இருப்பாங்க. அவங்க தனிக்குழுவாகக் கூடி உட்கார்ந்து பேசுவாங்க. அந்தப் பக்கம் போனால் விரட்டிடுவாங்க. எங்க வீட்டிலும் நாங்க யாருமே பெரியவங்க பேசும்போது அங்கே உட்காரக் கூடாதுனு சொல்லிடுவாங்க. மற்றபடி நாங்க பேசும் விஷயங்களும் கூட மறைமுகமாகக் கண்காணிக்கப்படும். அப்படி எல்லாம் எதுவும் பெரிசா நாங்களும் பேசிக் கொண்டதில்லை. அவங்க அவங்க அம்மா, அப்பாவின் கண்டிப்பு, பள்ளி ஆசிரியர்களின் கண்டிப்புனு தான் இருக்கும்.

    எட்டாம் வகுப்பில் வஸந்தா என்னும் ஆசிரியை ஒருவர் அந்த வருஷம் தான் ஆசிரியப் படிப்பு முடிச்சுட்டுப் புதுசா வேலைக்குச் சேர்ந்திருந்தாங்க. எங்க வகுப்புக்கு அவங்க வகுப்பாசிரியை. ஒரு தரம் ஏதோ வாராந்திரப் பரிக்ஷையில் என்னோட மார்க் குறைஞ்சிருந்ததுனு கோவத்தில் அவங்க ஸ்கேலால் அடிச்சப்போ எனக்குக் கை விரல்களில் அது ரொம்பவே பலமாகப் பட்டு புசுபுசுனு வீங்கிக் கொண்டு விட்டது. வலக்கையை மடக்கவோ நீட்டவோ முடியலை. டீச்சர் பயந்து அழ வகுப்பிலிருந்து டிஸ்பென்சரிக்குப் போய் மருந்தெல்லாம் போட்டும் சரியாகாமல் இன்னொரு பெண்ணுடன் வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. பின் பள்ளி அருகேயே இருந்த மதுரை முனிசிபல் மருத்துவமனை மருத்துவரிடம் காட்டிக்கையில் கட்டுப் போட்டுக் கொள்ளும்படி ஆச்சு. ஒரு பத்து நாட்களுக்குச் சாப்பிட முடியலை. அந்த டீச்சர் ரொம்பவே பயந்து கொண்டு அந்தப் பள்ளியை விட்டே போயிட்டார்னு சொன்னாங்க. :))))))

    பதிலளிநீக்கு
  27. மனசாட்சியம் சுவாரசியமாகச் செல்கிறது. அதில் கடைசியாக இப்போதைய கதாநாயகர்களின் ஹீரோயிசத்தைக் குறிப்பிட்டுச் சொல்லி இருப்பது ரசிக்க வைத்தது. உண்மையும் அது தானே!

    பதிலளிநீக்கு
  28. //  நன்கு ஆராய்ந்து பொருத்தம்லாம் பார்த்து திருமணம் செய்துவைத்தார். மகள் ஒரு வருடத்துக்குள்ளேயே கணவனை இழந்துவிட்டார். அது அந்த ஜோசியருக்கு பேரதிர்ச்சியாகி, பிறகு ஜோசியம் பார்ப்பதையே விட்டுவிட்டார். //

    ஒரு சிறுகதைக்கான கரு!  சமீபத்தில் எங்கள் உறவில் ஒரு துர்மரணம்.  நன்றாக எல்லோருக்கும் ஜோசியம் சொல்வார்.  தனக்கு இப்படி நேரும் என்று அறியாமலிருந்தாரா, அறிந்தும் சொல்லாமலிருந்தாரா தெரியாது.  ஒருவேளை மற்றவர்களுக்காக பலன்தான் தெரியுமோ என்னவோ..

    பதிலளிநீக்கு
  29. // சில ஜோசியர்கள், சில நேரங்களில் சொல்வது சரியாக பலிக்கும். //

    வாக்கு காலம் என்று சொல்வார்கள்

    பதிலளிநீக்கு
  30. என்னுடன் வேலை பார்த்த நண்பர் வீட்டில் ஒரு சம்பவம்.  அவர்கள் மகனுக்கு பெண்பார்த்து முடிவு செய்தபோது ஜோசியர்  அந்தப் பெண் வேண்டாம் என்றார்.  இவர்கள் பிடிவாதமாக அந்தப் பெண்ணையே திருமணம் செய்தார்கள்.  இப்படி நடக்கும் என்று தெரியும் என்று சொல்லி அவர் சில யோசனைகள் சொன்னார்.  அதுவும் நடக்கவில்லை.  பின்னர் கருத்து வேறுபாடு எழுந்து பிரிய நினைத்தபோது நடந்த சம்பவங்கள், விவாகரத்து கிடைக்கும் மாதம், நாள் இன்னும் சில விஷயங்கள் எல்லாம் துல்லியமாக அவர் சொல்லி இருந்தார்.  உடனே நாங்களும் எங்கள் பிரச்னைக்கு அவரிடம் சென்றோம்.

    எங்களுக்கு அவர் சொன்னது எதுவம் சரியாக நடக்கவில்லை!

    பதிலளிநீக்கு
  31. // சிற்பத்தின் வெளிப்படைத் தன்மைக்காக //

    :)))

    பதிலளிநீக்கு
  32. அன்பின் நெல்லை அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி...

    பதிலளிநீக்கு

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!