24.11.26

சிறுகதை :: பாச்சு காணாமல் போன கதை - ஸ்ரீராம்

முன் குறிப்பு  : சென்ற வார மகா பெரிய சிறுகதை ஒன்றைப் படித்து களைத்துப் போயிருப்பீர்கள்.  எனவே இந்த வாரம் எளிமையாய், சின்னதாய் ஒன்று.

தீபாவளி அன்று ஆரண்யநிவாஸ் அவர்கள் வாட்ஸாப் க்ரூப்பில் வித்யா என்கிற பெண்மணி, சுஸ்ரீ என்கிற எழுத்தாளரை விளித்து,  'தீபாவளிக்கு கதை எதுவும் கிடையாதா' என்று கேட்டிருக்க, அவர்தான் எழுதணுமா என்ன, நாம் ஒன்று எழுதினால் என்ன என்று உடனடியாக ஒரு தீபாவளி கதை எழுதி அங்கு சேர்த்தேன்.  யாரோ ஒருவர் மட்டும் கட்டை விரலையும் நடுவிரலையும் இணைத்திருந்தார்.

இதில் பர்வதம் என்பது எழுத்தாளர் சுஸ்ரீயின் ஆஸ்தான நாயகி.  நான் எடுத்துக் கொண்டேன்!

====================================================================

பாச்சு காணாமல் போன கதை

சிறுகதை : ஸ்ரீராம்

பல வருடங்களுக்கு முந்தைய கதை இது.

நீளமான ஒரு செவ்வக இடத்தில் சதுரம் சதுரமாக பெட்டியை அடுக்கி வைத்தாற்போல அந்த ஸ்டோர்ஸில் ஆறு வீடுகள் அடுத்தடுத்து.

ஆறு வீட்டுக்காரர்களும் ஒற்றுமையாக ஒரு வீடு போல பழகி வந்த ஒரு ஸ்டோர் அது.

சண்டையும் சமாதானமுமாய் ஆறு குடும்பங்கள் அங்கு...  அடித்துக் கொள்வார்கள், சேர்ந்து கொள்வார்கள். 

ஒரு துக்கம் என்றால் சேர்ந்து அனுஷ்டிப்பார்கள்.  பண்டிகை என்றால் சேர்ந்து கொண்டாடுவார்கள்.

ஒரு தீபாவளியன்று.....  காலை ஐந்தரை மணி இருக்கும்.

மூன்றாவது வீட்டு முகுந்து மாமா வேகமாக வாசலை நோக்கி சென்றவர் முத்தத்தில் துவைக்கும் கல் அருகே இருந்த எண்ணெய் கலந்த தண்ணீர் பிசுபிசுப்பில் வழுக்கி விழுந்தார்.

"என்ன ஆச்சு" என்று எல்லோரும் பதறிய போது, வேகமாக எழுந்து "ஐயோ.. சரவெடி நனைஞ்சுடும்" என்று பதறியபடி அதை கையில் எடுத்து பிடித்துக் கொண்டு மீண்டும் வாசலை நோக்கி விரைந்தார்.  பதறிப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் சிரிப்புடன் விலகினார்கள்.  குளிப்பதற்கு முன்னால் ஒரு சரம் வைப்பது அவர்கள் கடைபிடித்த ஒரு வேடிக்கையான சம்பிரதாயம்.

தீபாவளி தினம் என்பதால் அப்போதே ஆறு வீடும் அல்லகல்லோலப்பட்டு கொண்டிருந்தது.    ஒவ்வொரு  வீட்டில் இருந்தும் வந்து முகுந்து மாமா வழுக்கி விழுந்த அந்த இடத்தில் குழந்தைகளை உட்கார வைத்து, எண்ணெய் தேய்த்தேன் என்று பேர்பண்ணி,  குளிப்பாட்டி தானும் கங்கா ஸ்நானம் செய்தேன் என்று பெயர் செய்து வீட்டிற்கு சென்று புத்தாடை புனைந்து பட்டாசு வெடித்து கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.  அந்த பிசுபிசுப்புதான் வழுக்கி விட்டது.

மொலு மொலு மொலு வென்று ஓடிக்கொண்டிருந்த ஜனங்களுக்கிடையே யார் என்ன செய்கிறார்கள் என்று புரியாத நிலை.  காலை ஐந்தரை மணி. மங்கலான புகை படிந்த வெளிச்சம்!  ஒவ்வொரு வீட்டில் இருந்தும் பட்சணங்கள் கைமாறிக் கொண்டிருந்தன.  தீபாவளி மருந்து விநியோகம் செய்யப்பட்டு கொண்டிருந்தது.  கூடவே பட்சணங்களும்.

"ஆறு வீட்டு தீபாவளி மருந்து..  நமக்கு தீபாவளி மருந்து சாப்பிட்டே வயித்தால போகப்போறது பாரு"

நேரம் ஓடியது. 

ஒரு வழியாக இட்லியும் பஜ்ஜியும் சாப்பிட தயாரான போது தான் மீனா தன் பிள்ளை பாச்சுவை தேடத் தொடங்கினாள்.  எங்கு தேடினாலும் கிடைக்கவில்லை.  விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் இடையே அவன் இல்லை. ஸ்டோர் முழுவதும் 'பாச்சுவை காணும் பாச்சுவை காணும்' என்று செய்தி பரவியது.

பாச்சு இரண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தை.  உடனே எல்லோரும் பதறிப் போய்  தங்கள் தங்கள் வாண்டுகளை சிறகுக்குள் சேர்க்க தேடியதில்,  நான்காம் வீட்டில் இருக்கும் ஒன்றாம் வகுப்பு படிக்கும் பர்வதத்தையும் காணவில்லை என்று தெரிந்தது.  பதட்டம் அதிகமாகியது.   இரண்டு தாய்களும் அழுகைக்கு தயாரானார்கள்.. 

பக்கத்துக்கு ஸ்டோர், எதிர்த்த ஸ்டோர் என்று எல்லா இடமும் தேடினார்கள்.  சோர்ந்தார்கள்.  கவலைப்பட்டார்கள்.

ஐந்தாம் வீட்டு வத்சலாவின் கணவன் பாஸ்கரைப் பார்க்க வரும் அவன் நண்பன் கைலாசம் பதட்டமாக ஓடி வந்தார். "சேதி தெரியுமா? பக்கத்து தெருவில் சின்னதாக வைத்திருந்த பட்டாசு கடை பற்றி கொண்டு எரிகிறது.  ஒரே களேபரம்!" என்றார் பரபரப்புடன்..

சீனு மாமா "டேய்" என்று பெரிய எழுத்தில் அலறினார். "பாச்சு அங்க தாண்டா கேப்பு வாங்க போவதாக சொல்லிக் கொண்டிருந்தான்.  நான்தான் காசு கொடுத்தேன்.  இப்ப தாண்டா ஞாபகம் வர்றது"

சீனு மாமாவின் மேல் கிளர்ந்தெழுந்த கோபத்தைக் காட்ட நேரமில்லாமல் எல்லோரும் பதட்டமாக உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அங்கு ஓடினார்கள்.  அங்கு இருந்த புகை சூழலில் ஒன்றும் புரியவில்லை. யார் மாட்டிக் கொண்டார்கள், யாருக்கு காயம் என்று தெரியவில்லை.  இரண்டு போலீஸ்காரர்கள் நின்று தடுத்துக் கொண்டிருந்தார்கள்.  உள்ளூர் ஆட்களும் மக்களைக் கட்டுப்படுத்தி உதவிக் கொண்டிருந்தனர். யாரோ "சீக்கிரம் ஃபயர் சர்வீஸுக்கு சொல்லுங்கப்பா" என்று சத்தமாக சொல்ல, "ஏற்கனவே சொல்லியாச்சுப்பா..  வந்துண்டிருக்கா" என்று இன்னொரு குரலும் கேட்டது.  யாரையும் பக்கத்திலேயே நெருங்க விடவில்லை.  தொடர்ந்த 'புஸ்ஸ்ஸ்' சத்தத்துக்கு நடுவே நினைத்து நினைத்து சடார் படாரென்று வெடித்துக் கொண்டிருந்தது.  திடீரென ஒரு ராக்கெட் சீறிப்பாய்ந்து அங்கு இருப்பவர்களை ஓடவைத்தது.

பற்றியெரியும் கடையைப் பார்த்த காட்சியின் பயங்கரத்தில் ஏதேதோ கற்பனைகள் ஓட,  மீனா மயங்கி விழுந்தாள். பர்வதத்தின் தாய் சக்கு என்கிற சகுந்தலா இடிந்து போய் உட்கார்ந்தாள்.  வாயிலிருந்து வார்த்தை வராமல் திண்டாடினாள்.  தொண்டை வறண்டது.  வாயைத் திறந்து திறந்து மூடினாள். மனதுக்குள் வந்த குட்டி பர்வதத்தின் பட்டுப்பாவாடைத் தோற்றம் கண்களில் நீராய் சுரந்தது.

மீனா எவ்வளவு நேரம் மயங்கி கிடந்தாளோ...

அவளை யாரோ முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினார்கள்.  "மீனா! எழுந்திரு!  அதோ பார்..  பாச்சு வரான் பாரு"  என்னும் குரல் காதருகில் கேட்டு பரபரப்புடன் எழுந்தாள்.

"கூடவே பர்வதமும்தான் வர்றா...."

சற்று தூரத்தில் பாச்சு பர்வதத்துடன் அடுத்த தெருப் பக்கமிருந்து நிதான நடை தளர்நடை போட்டு நடந்து வந்து கொண்டிருந்தான். பக்கத்தில் நடந்து வந்து கொண்டிருந்த பர்வதத்திடம் பேசிக்கொண்டே வந்தவன் அம்மாவைப் பார்த்து அருகில் ஓடி வந்தான்.  "அம்மா அம்மா இந்த பர்வதம் இல்லே...." என்று ஏதோ சொல்லத் தொடங்கினான்.  மீனாவும் அதற்குள் அருகில் ஓடிப்போய் அவன் முதுகில் ஒன்று வைத்து "எங்கடா போனே கடன்காரா?"  என்று அழுகையுடன் கேட்டாள்.

பாச்சு என்கிற பார்த்தசாரதி பெரிதாக அழத் தொடங்கினான். 

பர்வதம் மழலை குரலில் ராகத்துடன் சேதி சொன்னாள். 

"ஆண்ட்டி...   ஆண்ட்டி...  பாச்சு கேப்பு வாங்க வந்தான் தானே?  எனக்குத் தெரியும்...  நான் பார்த்தேன்...  நாந்தான் அவன் கிட்ட  'இங்க வாடா,  என் பிரண்ட் வீட்ல கேப்பு  இருக்கு.. காசு கொடுத்து வாங்க வேண்டாம்' னு நான்தான்...   நான்தான் அவனை என் பிரண்டு வீட்டுக்கு அழைச்சுட்டு போனேன்"


அவளை அப்படியே எடுத்து மார்போடு அணைத்து கட்டிக் கொண்டாள் மீனா.  அதற்குள் சக்குவும் அருகில் வந்து பாச்சுவின் தலையைத் தடவி சமாதானம் செய்து, பர்வதத்தை கட்டி முத்தம் கொடுத்தாள்.

=======================================================================================

சன்னியாசி ஆகப்போறேன்.. 

--- ஜீவி ---


ஆசைப்பட்ட
எதுன்னாலும்
மனைவியிடம்
கேட்டுத் தான் 
எனக்குப் பழக்கம்.


"சன்னியாசி ஆகப்போறேன்.. கமண்டலம் வாங்கித்தா.." என்றேன், அவளிடம்.

"போயும் போயும் கமண்டலத்தைக் கூடத் துறக்க முடியாத சன்னியாசி என்ன சன்னியாசி?" என்றாள்.

'அட! அர்த்தமுள்ள கேள்வி தான்.   இது இத்தனை நாள் எனக்குத் தோன்றாமல் இருந்ததே!' என்று நினைத்துக் கொண்டேன்.

அடுத்த வினாடி அவளே, "வாங்கித்தறேன்.. அதை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?" என்றாள்.

"நீ தான் சொல்லேன்.. சன்னியாசிகள் கமண்டலத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வார்களாம்?" என்று அவள் கேள்வியை அவளுக்கே திருப்பினேன்.

"வாசலில் நின்று என்ன?உள்ளே வாருங்கள்..  சொல்கிறேன்.."  என்றாள்.

முன்னால் அவள் 
பின்னால் நான். 
உள் கூடம் தாண்டியதும் திரும்பி...

அவள் புன்னகைத்தால்
என்றைக்குமே எனக்கு 'ஜிவ்'வென்று இருக்கும்.
இன்றைக்கும் தான்.

கமண்டலாவது ஒண்ணாவது? ஆயுசுக்கும் வேண்டாம்ப்பா...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!