நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
26.11.26
உன் கூந்தல் வாசம் கண்டு என் நெஞ்சும் கூத்தாட
ஒரு நாள்... (போனவாரம் பாதியில் விட்டதன் தொடர்ச்சி.. சம்பவம் நினைவிருக்கிறதல்லவா?)
ஒருநாள் அவர் வரவில்லை. எங்கிருந்தோ போன் செய்து லீவு சொன்னாரா அல்லது அப்படி ஒன்றும் சொல்லவில்லையா என்று நினைவில்லை. ஏதோ வரவில்லை என்று விட்டு விட்டோம். மூன்றாம் நாள் அவர் மனைவியிடமிருந்து போன் வந்தது. "அவர் ஆபீஸுக்கு வந்து கொண்டிருக்கிறாரா?" என்று. நான்காவது நாள் மறுபடி மனைவி துணையுடன் வந்தார்.
மூன்று நாட்களாக இந்த அலுவலகத்தை மன்னார் அண்ட் கம்பெனியாக மாற்றியிருந்திருக்கிறார். எங்கோ அலைந்து விட்டு சரியான நேரத்துக்கு வீடும் சேர்ந்திருக்கிறார். எப்படியோ ஏதோ ஒரு சந்தேகம் வர மனைவி கண்டு பிடித்து விட்டார். மறுபடியும் அவரை ரூட் பழகுவதற்கு இரண்டு மூன்று நாள் வந்து விட்டுச் சென்று அழைத்துச் சென்றார். எந்த சம்பவமும் நடக்காதது போல மனைவியின் பின்னால் புன்னகையுடன் வந்தார் அவர்.
"சொல்லியிருக்கலாம்ல?" என்று ஆதங்கப்பட்டார் அவர் மனைவி. "முன்னாடியே சொன்னேன்ல?"
"நான் சொல்லாமல் ஒரு நாள் அவர் வரவில்லை என்றால் கூட தயவு செய்து எனக்கு போன் செய்து சொல்லி விடுங்கள்" என்று மறுபடி பொதுவில் கோரிக்கை வைத்து விட்டு பின் ஒவ்வொருவரையும் தனித்தனியே சந்தித்தும் கோரிக்கை வைத்து அவர் நம்பரை எங்கள் போனில் ஏற்றிக் கொள்ளும்வரை உடனிருந்தார். ஆனால் அப்புறம் அது மாதிரி சம்பவம் நடைபெறவில்லை.
அவர் ஓய்வு பெறும் நாளும் நெருங்கியது. ஆபீஸில் சுப்பரின்டென்டென்ட் வழக்கமான நடைமுறையில் முன்கூட்டியே செய்ய வேண்டிய முஸ்தீபுகளை செய்து கொண்டு வந்தார். எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ரிட்டயர்மெண்ட் பேப்பர்களை நிரப்ப நன்றாக ஒத்துழைத்தார். ஆபீசுக்கு கொஞ்சம் "முன்பண"மும் கொடுத்தார்!
க்ளைமேக்ஸில்தானே ட்விஸ்ட் வரும்? வந்தது! ஓய்வு பெரும் நாளன்று நாங்கள் அனைவரும் தவறாது அவருக்கு விடைத்தாரா அலுவலகம் வந்து விட்ட்டோம். விடைபெறவேண்டிய அவரைக் காணோம். அவர் மனைவியை தொடர்பு கொள்ள முடியவில்லை. போன் போகவில்லை. ஆபீஸ் பதறிப்போனது. இதுமாதிரி இதுவரை நடந்தததில்லை.
ஓய்வு பெறுபவர்கள் ஆவலுடன் காத்திருக்க, அவரை ரிட்டையர் செய்யக் கூடாது என்று கடைசி நேரத்தில் ஆணை வந்து அவர்களை நோகடிக்கும். அதைதான் பார்த்திருந்தோம்.
இது புதுசு.
மூன்று மணி போல அவர் மனைவியும் வந்து நிலைமை அறிந்து அதிர்ந்து போனார்.
"என்ன ஸார் இது.. இவ்வளவு பேர் இருக்கீங்க? எனக்கு ஒரு போன் செய்யக் கூடாதா?"
ஆபீஸ் மொத்தமும் அவர்மேல் பாய்ந்தது.
"எத்தனை தரம் பண்றது மேடம்.. உங்க போன் அவுட் ஆப் ரீச்சலயே இருக்கு.. இன்று ரிட்டையர் ஆகிற நாள்தானே.. ஒருநாள் நீங்களும் காலைலயே அவர் கூட வந்திருக்கலாம்ல?"
அவர் போனை எடுத்துப் பார்த்தார். அது பேட்டரி சார்ஜ் இல்லாமல் செத்துப் போயிருந்தது...
"வந்திருக்கலாம்தான்.. எங்கள் ஆபீஸ்லயும் ஒரு வேலை.. தவிர்க்க முடியலை.. இப்படி ஆகும்னு நினைச்சே பார்க்கலை. என்ன செய்யறதுன்னே தெரியலையே.. எங்கேன்னு தேட.." கையைப் பிசைந்தவாறு தவித்தார்.
எங்கள் லேண்ட்லைன் போனிலிருந்து வீட்டுக்கு போன் செய்து யாரிடமோ பேசினார். தினசரி அவர் பஸ் ஏறும் இடத்துக்கு சென்று விசாரிக்கச் சொன்னார்.
ஆபீஸ் தவிப்புடன் காத்திருந்தது. அவர் மனைவி டென்ஷனின் உச்சத்திலிருந்தார். நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.
அஸிஸ்டண்ட் ஒருவர் கிளம்பி வடக்கு நோக்கிப் போனார். பியூன் கிளம்பி மேற்கு நோக்கிப் பறந்தார். இன்னொரு அஸிஸ்டண்ட் தெற்கு நோக்கிப் போனார். எங்கே என்று தேட.. ஐந்து மணிக்குள் அவர் கையில் ஓய்வு ஆணை விடுவிப்பாணையை கொடுக்க வேண்டும். இல்லா விட்டால் இவர்களுக்கு மெமோ வரும். ஏனெனில் அட்டெண்டன்ஸில் அன்று அவர் கையெழுத்து இல்லை.
மணி மூன்றானது. நான்காவது. நால்வரையும் ஆனது. எல்லோரும் வாசலையே பார்த்துக் காத்திருந்தோம்.
ஒரு வழியாக மணி ஐந்தையும் தாண்டியது. ஐந்தரையும் ஆனது. ஆபீஸ் ஆட்களின் முகத்தில் ஈயாடவில்லை. அவர் மனைவி முகத்தில் திடீர் பிரகாசம். சட்டென எழுந்து சென்று வீட்டுக்கு போன் செய்தார். "பிரகாஷ்.. மாமா வந்து இறங்கும் பஸ் ஸ்டாப்புக்கு போ.. அவர் வந்தால் உடனே இங்கே அழைத்துக்கொண்டு வா.. ஆட்டோவில் வா.. இல்லை இல்லை உன் பைக்ல வா..ஆனா பத்திரம்"
அண்ணன் ஆபீஸ் விடும் நேரம் சரியாக வீடு சென்றவரை கப்பென பிடித்து அழைத்து வந்தார் அவர் மச்சினர்! புன்னகையுடன் கையசைத்தவாறே உள்ளே வந்தார் அவர்.
"ஸாரி.. மறந்துட்டேன்.." சிரிப்புடன் சொன்னவரை என்ன செய்ய..
மறக்கிற விஷயமா இது! ஐந்து மணி ஆனதும் வீட்டுக்கு சிட்டாய்ப் பறக்கும் ஊழியர்கள் அன்று ஏழு வரை இருந்தனர்! ஒரு வழியாய் ஆறே முக்காலுக்கு அவரை ஐந்து மணிக்கு ரிலீவ் செய்ததாக கையெழுத்து வாங்கி விடுவித்தார்.
"ஒருவேளை அவர் அன்னிக்கி வரலைன்னா என்ன செய்திருப்பீங்க...? ரெண்டு நாள் கழிச்சு வந்திருந்தா?"
அஸிஸ்டன்டிடம் கேட்டேன்.
"அது ஒன்றும் பிரச்னை இல்லை ஸ்ரீ.... நம்ம ரெஜிஸ்டர்... நம்ம ஆபீஸ்... வெளிலேருந்து அதற்குள் ஆடிட் வராம .இருந்தா சரி" என்று புன்னகைத்தார் அவர்.
கண்ணதாசன் பற்றிய நீங்காத நினைவொன்றைக் கூறுங்களேன்!
கோகலே மண்டபத்தில் ஒரு முறை பேசுகிற போது, "கண்ணதாசன் ஜனாதிபதி மாதிரிச் சம்பளம் வாங்குகிறார்; இந்தியா மாதிரிக் கடன் வாங்குகிறார்" என்று சொன்னேன். அதை அவர் வெகுவாக ரசித்தார். அவரைப் பற்றிய நீங்காத எத்தனையோ நினைவுகளில் இது நிலைத்தது.
வலம்புரி ஜான், 'தாய்', 8-11-1981
கவர்ந்த பாடல்
கண்ணதாசன் கவிதைகளில் உங்களை மிகவும் கவர்ந்த பாடல் எதுவென்று சொல்ல முடியுமா?
கற்கண்டில் எந்தப் பக்கம் இனிக்கிறதென்று சொல்ல முடியுமா? இருப்பினும் ஒரு பாடல்... பண்டித நேரு அவர்கள் மறைந்த போது, ராஜாஜி ஹாலில் நடைபெற்ற கூட்டத்தில் கவிஞர் பாடினார்;
"போதிமரத்துப் புத்தன் போய்விட்டான் என்றிருந்தோம்
பாதிவழி போன அவன் பண்டிதராய்த் திரும்பி வந்தான்!
ஆதி மகன் ஏசுபிரான் அடங்கிவிட்டான் என்றிருந்தோம்
தாவி அவன் பாரதத்தில் ஜவஹர்லால் ஆகிவந்தான்!"
கண்ணதாசன் மீண்டும் எப்படி வரப் போகிறார் என்று காத்திருக்கிறது தமிழகம்.
மணியன், 'இதயம் பேசுகிறது', 8-11-1981
சவுக்குதாசன் வீரம்
'மன்னிக்க வேணுமையா', என்று முடிந்த சுரபியின் கவிதை மனத்தை உருக்கினாலும், 'சவுக்கை எடுப்போம்' என்று முடிந்த கண்ணதாசனின் பாடல் எழுச்சியைத் தந்து, நமக்குத் தேவையான ஆட்சியையும் அறிவுறுத்துகிறது.
'குமுதம்', 2-9-1965
யாருக்கு முதலிடம்
திரைப்படங்களில் முதலிடம், முக்கிய இடம் கவிஞருக்கா அல்லது இசை அமைப்பாளருக்கா என்ற சர்ச்சை எழுந்தபோது, கவிஞருக்குத்தான் முதலிடம் என்ற தனிப் பெருமையை, அந்தஸ்தைப் பெற்றுத் தந்தவர் கவியரசர் கண்ணதாசன்.
நேசமணி, 'கல்கண்டு', 25-6-1987
எல்லாம் போலிகளே!
கவிஞர் கண்ணதாசனுக்குப் பிறகு இப்போது படவுலகில் யாருமே கவிஞர்கள் இல்லை. இப்போது கவிஞன் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் போலிகளே. கவிஞன் என்பவனின் எண்ணம், சிந்தனை, பேச்சு எல்லாமே கவிதையாகத் தானிருக்கும். எனக்குத் தெரிந்து கவிஞர் கண்ணதாசனுக்குத்தான் இவை அமைந்திருந்தன.
ஒரு பாதை வகுத்துக் கொடுத்து அவை நகர்வதை கண்காணிக்கிறது வானம்
வானைத்தேடி மேகம் வருகிறதா
இல்லை
மேகங்களை வானம்தான்
அழைக்கிறதா
ஏதோ எப்படியோ
இணைந்துதான் இருக்கின்றன
இரண்டும்
வானின் ஏதோ ஒரு மூலையில் சொட்டு நீலம் வைத்தான் கடவுள் உறிஞ்சி அதை முழுதும் இழுத்துக் கொண்ட வானம் அடர்நீலத்தை மாற்றி ஆகாய நீலம் என்ற ஒன்றை தனக்கான அடையாளமாக உருவாக்கிக் கொண்டது
அம்மன் கோவில் கிழக்காலே படத்திலிருந்து சென்ற வாரத் தொடர்ச்சியாக இன்னுமொரு பாடல். "சின்ன மணிக்குயிலே.. மெல்ல வரும் மயிலே..". இது கீரவாணி ராகத்தின் அடிப்படையில் அமைந்தததாம். பாடல் கங்கை அமரன். இசை இளையராஜா. காட்சியில் விஜயகாந்த், ராதா அண்ட் கோ.
தன் உயிரைப் பணயம் வைத்து அதிசயக் கண்டுபிடிப்பைச் செய்த நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி! - ச. நாகராஜன்
அறிவியல் உலகில் தன் உயிரைப் பணயம் வைத்து முக்கியமான கண்டுபிடிப்பை ஒரு விஞ்ஞானி செய்தார் என்றால் அது அதிசயமாக இருக்கிறதல்லவா? அப்படிச் செய்தவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பேரி ஜேம்ஸ் மார்ஷல் (Barry James Marshall) என்ற விஞ்ஞானி ஆவார். (பிறப்பு 30-9-1951 இப்போது வயது 75)
ஆஸ்திரேலியாவில் கல்கோர்லி என்ற இடத்தில் பிறந்த பேரி மார்ஷல் மருத்துவப் படிப்பில் வெற்றி பெற்று, அறுவை சிகிச்சையிலும் தேர்ந்தார். அட்ரியன் என்ற பெண்மணியை மணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகனும் மூன்று மகள்களும் உள்ளனர்.
1979ம் ஆண்டு அவர் ராயல் பெர்த் மருத்துவமனையில் ரிஜிஸ்ட்ரார் பதவியில் நியமிக்கப்பட்டார். அங்கு கேஸ்ட்ரிடிஸ் (Gastritis) எனப்படும் இரைப்பை வீக்கம் பற்றிய ஆய்வில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. இரைப்பையில் உள்ள பாக்டீரியாக்களினால் தான் வீக்கம் உண்டாகிறது என்பதை அவர் கண்டறிந்தார். ஆனால் அனைவரும் இதை நம்ப மறுத்தனர். வயிற்றில் ஏற்படும் புற்றுநோய்க்கான காரணம் அதிக அழுத்தமும், காரவகை உணவுகளுமே காரணம் என்று அனைவரும் நம்பினர். தனது கண்டுபிடிப்பை ஒரு ஆய்வு பேப்பராக அவர் எழுதினார். அதை இரைப்பை சம்பந்தமான ஆய்வு நடத்தும் ஆஸ்திரேலிய சங்கத்திற்கு அனுப்பினார். கடைசி பத்து சதவிகித பேப்பரில் ஒன்றாக அனைவரும் அதை கீழே தள்ளினர். இது மார்ஷலுக்கு பெருத்த அவமானமாக ஆகிவிட்டது.
உடனே ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தார் அவர். ஆய்வுக்காக உள்ள ஒரு சின்னத் தட்டில் பாக்டீரியாக்களை நிரப்பி அதை அப்படியே அவர் விழுங்கினார். தான் சொன்னது சரிதான் என்பதை நிரூபிக்க அவருக்கு வேறு வழி தெரியவில்லை. தன் உயிரைப் பணயம் வைத்து அவர் அப்படிச் செய்தார்.
அல்சர் எனப்படும் புண் வயிற்றில் உருவாக சில வருடங்கள் ஆகலாம் என்று நினைத்திருந்த மார்ஷலுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது. மூன்றே நாட்களில் அந்த நோய்க்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தன. எட்டே நாட்களில் இரைப்பை வீக்கம் ஏற்பட்டு விட்டது. பதினான்காவது நாளில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நோய்க்கான சிகிச்சையைப் பெற ஆரம்பித்தார்.
அனைவருக்கும் அவர் சொன்னது உண்மை தான் என்பது புரிய ஆரம்பித்தது. வயிற்றில் ஏற்படும் கான்ஸருக்கு (புற்றுநோய்க்கு) காரணம் இது தான் என்பதை நிதர்சனமாக தன் உயிரைப் பணயம் வைத்து அவர் நிரூபித்தது அனைவரையும் பிரமிக்க வைத்தது. மருத்துவத்திற்கான நோபல் பரிசை 2005ம் ஆண்டில் அவர் பெற்றார். 2007ம் ஆண்டில் மார்ஷல் சென்டர் என்ற ஆய்வு மையத்திற்கு அவர் இணை இயக்குநராக நியமிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். இன்னும் ஏராளமான விருதுகள் அவரைத் தேடி வந்தன. அனைவரும் ஒதுக்கிய போதும் தான் கண்டுபிடித்த உண்மையை உலக நன்மைக்காக தன் உயிரைப் பணயம் வைத்து நிரூபித்த மார்ஷல் அறிவியல் உலகில் ஒரு அபூர்வமான மனிதர் அல்லவா!
பின்குறிப்பு : சென்ற வாரத்துக்கு முந்தைய வாரம் கீதா அக்கா விடுத்த வேண்டுகோளை ஏற்று வியாழனை முடிந்தவரை சுருக்கமாகக் கொடுத்திருக்கிறேன். முடிந்தால் நாளை வெள்ளியும் சுருக்கமாகக் கொடுக்க முயற்சிக்கிறேன். வல்லிம்மாவும் ரொம்ப நீளம்னு அபிப்ராயப்பட்டாங்க...- ஸ்ரீராம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!