இந்தவாரக் 'கேட்டு வாங்கிப் போடும் கதை' பகுதியில் இடம்பெறுவது
'மனசு' தள அதிபர் பரிவை சே. குமாரின் படைப்பு.
ஆரம்ப நாள் முதலே என்னை
'அண்ணா... அண்ணா..' என்று அன்பாக விளிப்பவர். சென்னையில் ஊடகத் துறையில்
பணியாற்றி, தற்சமயம் அமீரகத்தில் வேலை பார்க்கிறார். அவர் பதிவுகள் யாவுமே
உணர்வு பூர்வமானவை. தளத்தின் பெயருக்கேற்ப மனசிலிருந்து பேசும்
தினுசிலேயே இருக்கும்.
குமாரின் தளம் மனசு.
===================================================================
வணக்கம் அண்ணா.
எனது கதையையும் தங்கள் தளத்தில் பதியக்
கேட்டமைக்கு நன்றி அண்ணா.
கல்லூரியில் படிக்கும் போது எனது
பேராசிரியர்... நான் தந்தையாக மதிக்கும் முனைவர் திரு. மு. பழனி இராகுலதாசன்
அவர்களின் உந்துதலில் எழுத ஆரம்பித்து முதல் கவிதை தாமரை இதழிலும் முதல் கதை
தினபூமி கதைபூமியிலும் வெளியானது.
ஆரம்ப காலக் கதைகள் எல்லாம் சாதாரணமாய்
எழுதிய கதைகள்தான்... அபுதாபி வந்தபின்னர் எழுதிய கதைகளே வாழ்க்கையைப் பேசும்
கதைகளாய் அமைந்தன. 'உன் கதைகளில் சோகமே நிரம்பி இருக்கிறது' என நட்புக்கள் சண்டைக்கே
வந்திருக்கிறார்கள் என்றாலும் 'உன் கதைகள் வாழ்க்கையை பேசுகின்றன' என சில நட்புக்கள்
கொடுக்கும் ஊக்கமே இப்படியான கதைக்களங்களிலேயே பெரும்பாலும் பயணிக்க வைக்கிறது.
அப்ப அப்ப ஜாலியான கதைகள் எழுதினாலும் பெரும்பாலும் சோகம் சொல்லும் கதைகளே எழுத
விருப்பம்.
கதைகளின் களமாக எங்கள் பூமியையும் கதை
மாந்தர்களாக எங்கள் மக்களையும் வைத்து சிவகங்கை பேச்சு வழக்கில் எழுதும்
நோக்கிலேயே இப்போதைய கதைகளை எழுதுகிறேன். . இதற்குப் பின்னர் சில கதைகள் தினத்தந்தியிலும் இணைய
இதழ்களிலும் வெளிவந்திருக்கின்றன. சென்ற ஆண்டு மட்டும் நாலைந்து சிறுகதைகள் இணைய
இதழ்கள் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கின்றன.
இந்தக் கதை குடும்பக் கதை. மங்கையர் சிகரம் இதழில் வந்தது.
இது குடும்பத்தில் படித்த மருமகள் வந்து மாமியாரும் அவருக்கு சாமரம் வீசும்
போது மற்ற மருமகள்கள் மனதில் சின்ன விரிசல் விதை விழுந்து அது மனசுக்குள்
வக்கிரமாய்ப் படியும். அதன் பின் அவர்கள் கூட்டணி இவளைத் தனிமைப்படுத்த
விரும்பும். இதுபோன்ற சில நிகழ்வுகளை கண் கூடாக பார்த்ததை வைத்து அபுதாபி
கொடுத்த தனிமையில் எழுதியதுதான் இந்த 'ஹரிணி'.
நன்றி அண்ணா.
=====================================================================
இனி அவர் படைப்புக்குச் செல்வோம்.
ஹரிணி
பரிவை குமார்
"அக்கா... கொஞ்ச நாளா நம்ம வூட்டுல நடக்கிற
கூத்தைப் பாத்தியா..?"
மெதுவாக ஆரம்பித்தாள் வனஜா.
"ஆமாண்டி... பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். சின்ன மருமகளை
தாங்குறதை..." இது சரோஜா.
"ஆமாக்கா... நாம எல்லா வேலையும் பார்க்கிறோம்... ஆனா அவளை தலையில தூக்கி
வச்சுக்கிட்டு ஆடுதுக.."
"அதுக்கு அவ வேலைக்குப் போறால்ல... அதுதான்..."
"பாழாப்போன படிப்பு நமக்கு வந்திருந்தா நாமளுந்தான் இன்னைக்கு
ஆபிசரு..."
"அதுதான் பத்தாங்கிளாசை தாண்ட முடியலையே... அப்புறம் எப்படி ஆபீசராகுறது?"
"அதுக்காக அவளைவிட நாமதான் அதிகம் உழைக்கிறோம். எல்லாம் அவளைத்தானே தலையில
வச்சிக்கிட்டு ஆடுதுங்க... நம்மதுக நம்மளை கண்டுக்காதுங்க... தம்பி பொண்டாட்டிய
தாங்குதுங்க..."
"நமக்கு ஒரு காலம் வராமயா போயிடும்... அப்ப வச்சிக்கலாம்... “
“அவளும் வேலைக்குப் போறேன்னுட்டு ரொம்பத்தான் மினுக்கிறா"
"சரி விடுடி... இந்த வீட்ல நாம வேலை பார்த்தாத்தான் மதிப்பு... என்ன செய்ய
நாம பொறந்த நேரம் அப்புடி"
"என்னங்கடி... பொறந்த நேரம்... அது... இதுன்னு பேசிக்கிட்டு
இருக்கீங்க..." என்றபடி வந்தாள் அவர்களது மாமியார் மீனாட்சியம்மா.
"இல்லத்த... சும்மா பேசிக்கிட்டிருந்தோம்."
"உங்க முகம் சும்மா பேசினது மாதிரி தெரியலையே... ஒரு வாரமாவே ரெண்டு
பேருக்கும் முகம் சரியில்லையே... என்ன பிரச்சினை... பயலுக எதுவும் சத்தம்
போட்டாங்களா?"
"இல்லத்த... அதெல்லாம் ஒண்ணுமில்லை... நாங்க எப்பவும் போல இருக்கோம்."
"அப்ப ஹரிணிதான் உங்களுக்கு பிரச்சினையா?"
மாமியார் நேரடியாகக் கேட்டாள்.
"ஐய்யோ... அப்படியெல்லாம் இல்லத்த" இருவரும் ஒன்றாக சொல்ல, "எனக்கு எல்லாந் தெரியும்... அவ வேலைக்குப்
போறா... அவகிட்ட எல்லாரும் அன்பா பேசுறாங்க... அப்படின்னுதானே..?"
".........."
"அடியேய்... வனஜா நீ யாரு... என் தம்பி மக... உங்க அக்கா சரோஜா மாமாவோட அக்கா
மக... நல்லா படிச்சிருந்தும் எம் பசங்களுக்கு உங்களை கட்டியாரக் காரணம் பொண்ணு
கிடைக்காம இல்ல... நம்ம சொந்தம் விட்டுடக்கூடாதுன்னுதான்... அவ அந்நியத்துல
இருந்து வந்த பொண்ணு... நீங்க நாங்க பார்த்து வளர்த்த பொண்ணுங்க... என் மார் மேலயும்
உங்க மாமா முதுகுலயும் உங்களைச் சுமந்திருக்கோம். அவளுக்கு நாம எல்லாரும் புதுசு.
பணக்கார வீட்டுல வளர்ந்த ஒரே பொண்ணு... அப்பா செல்லம் வேற... நாளைக்கு அவ கண்ணக்
கசக்கிட்டு நின்னா யாருக்கு கேவலம்... நம்ம குடும்பத்துக்குதானே... எங்களுக்கு
நீங்க மூணு பேரும் ஒண்ணுதான்.... அவ பழகிட்டான்னா அப்புறம் எல்லார்கிட்டயும்
சகஜமாயிடுவா... போங்க போய் வேலையைப் பாருங்க..."
"ம்க்க்கும்... புது மருமகளுக்கு சப்போர்ட்... நீ வாடி நம்ம முடியாமக்
கெடந்தாலும் ஏன்னு கேக்க நாதியில்லை..."
மாதங்கள் கடந்தன...
இருவர் கூட்டணி வலுவானது. ஹரிணியிடம் அதிகம் பேசுவதுமில்லை...
அவளைக் கண்டு கொள்வதும் இல்லை.
தீபாவளிக்கு ஒரு வாரம் இருக்க அலுவலகத்தில் இருந்து வந்த
ஹரிணியின் கையில் ஏகப்பட்ட பிளாஸ்டிக் பைகள்.
ஹாலில் வந்து அமர்ந்தவள் மாமா, அத்தை, கொழுந்தன்கள், குழந்தைகள் என எல்லாருக்கும் ஒவ்வொரு
பை கொடுத்தாச்சு.
சமயலறையில் இருந்து இதை கவனித்த சரோஜாவும், வனஜாவும் குசுகுசுவென்று
பேசிக்கொண்டார்கள்.
"அக்கா... பாத்தியா சம்பாதிக்கிற திமிரு எல்லாருக்கும் டிரஸ் வாங்கியாந்து
கொடுத்து ஐஸ் வைக்கிறா..."
"ஆமா... திமிர் பிடிச்சவ... நமக்கு எதுவும் கொடுத்தா வாங்கக் கூடாது. அவ கொடுத்துதான்
நாம புதுத்துணி போடணுமா...? நம்ம ஆத்தா அப்பன் என்ன
ஒண்ணுமில்லாமயா இருக்காங்க... இல்ல நம்ம புருஷங்கதான் ஒண்ணுமில்லாதவங்களா...?"
"ஆமா... கொடுத்தா மூஞ்சியில அடிச்ச மாதிரி வேண்டாண்ணு சொல்லிரணும்...
அப்பதான் அவளுக்கு உறைக்கும்."
"அக்காள்லாம் எங்க அத்தை..?" என ஹரிணி இவள்களைக் கேட்கவும் பேச்சை
நிறுத்தி நடப்பதை கவனித்தனர்.
"அவளுக எங்க இருக்கப் போறாளுங்க... ராத்திரிக்கு சாப்பாடு தயார்
பண்ணுவாளுங்க..."
"பாவம்... அவங்களுக்குத்தான் வேலை அதிகம்..."
"அக்கா... நம்ம மேல ரொம்ப கரிசனம் பாரு... அடுப்படிக்குள்ள வந்து நமக்கு
உதவப் போறா... அக்கரையா கேக்கிறாளாம்...?"
"ஆமாம்மா... எந்திரிச்சதுல இருந்து படுக்கிற வரைக்கும் அவளுக்க்கு
ஓய்வில்லை... கூப்பிட வாம்மா..."
"இல்லை அத்தை... சும்மாதான் கேட்டேன்... அதுபோல அவங்களுக்கு எதுவும் நான் வாங்கலை"
"அதானே பார்த்தேன்... வனஜா... பாத்தியா நாம வாங்க மாட்டோம்ன்னு தெரியும்.
அதான்..."
"எல்லாருக்கும் வாங்கியிருக்கே... அவளுகளை மட்டும் விட்டுட்டியே..?"
மீனாட்சியம்மா வருத்தம் தோய்ந்த குரலில் கேட்டாள்.
"இல்லை அத்தை... எல்லாருக்கும் டிரஸ் வாங்குறதா அவருகிட்ட கேட்டேன்.
அவருக்கும் சந்தோஷம். நல்லா வாங்கு... அண்ணிகளுக்கு நல்லதா வாங்கு... அவங்க ரெண்டு
பேரும் எங்க அம்மா மாதிரின்னு சொன்னாரு... எல்லாருக்கும் வாங்கிட்டேன்... ஆனா
அவங்களுக்கு நான் வாங்கி கொடுத்து கட்டச் சொல்றதைவிட அவங்களையே கூட்டிக்கிட்டுப்
போயி அவங்களுக்குப் பிடிச்சதா எடுத்துக்கிட்டா எல்லாருக்கும் சந்தோஷம்தானே...
அதான் வாங்கலை... தப்பா அத்தே..."
"இல்லம்மா... நீ செஞ்சதுதான் சரி..."
"அக்கா...." வனஜா
"என்னடி இது... நல்லவளா தெரியுறா?"
"அப்புறம் அத்தை... நான் அக்கா தங்கச்சி கூட பொறக்கலை. அவங்களை என்னோட
சொந்த அக்காக்களாத்தான் நினைக்கிறேன். முதல் வருஷத் தீபாவளிக்கு அப்பா ஊருக்கு
வரணுமின்னு சொன்னார். மாமா, அத்தை, அத்தான்கள்,
அக்காக்கள், குட்டிஸ்ன்னு பெரிய குடும்பத்துல
எல்லார் கூடவும் சந்தோஷமாக தீபாவளி கொண்டாடணும்பா... அதனால நீங்களும் அம்மாவும்
இங்க வந்துடுங்கன்னு சொல்லி நான் மறுத்துட்டேன்..." ஹாலில் ஹரிணி பேசிக்
கொண்டே போக,
"வனஜா... அவ நல்லவதாண்டி... நாமதான் தப்பா நினைச்சிட்டோம்...
படிச்சிருந்தாத்தானே அறிவுக்கு எட்டும்... சே... அவ நம்ம மேல எவ்வளவு பாசமா
இருக்கா..."
"ஆமா... அக்கா... " என்றாள் சரோஜா.
"அத்தே... ஹரிணியை முகம் அலம்பிட்டு வரச்சொல்லுங்க...
சூடா காபி இருக்கு" என்று சொன்ன சரோஜா காபி கலக்க ரெடியானாள்.
