Tuesday, November 26, 2013

"...அது வயதாகி வந்தாலும் காதல்..."'அப்பாவின் காசை மகன் செலவு செய்யுமளவு சுதந்திரம் மகன் காசை அப்பாவால் செலவு செய்ய முடியுமா'  என்ற ஒரு கேள்வியை சமீபத்தில் படித்தேன். 

உண்மைதான். அப்பா சட்டைப் பையில் கைவிட்டு 'அப்பா! 10 ரூபாய் எடுத்துக்கறேன்' என்று சொல்லும் சுவாதீனம், அப்பாக்களுக்கு மகன் பணத்தை எடுக்கும் உரிமையில் இருப்பதில்லைதான். மிகச் சில விதிவிலக்குகள் தவிர!

குழந்தைகளை வளர்க்கும் தந்தை அல்லது பெற்றோர் அந்த மகன் பின்னாளில் தன்னை வைத்துக் காப்பாற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலா படிக்க வைப்பதும், ஆளாக்குவதும்? எதிர்பார்ப்பு தவறாகுமா? பெற்றது உங்கள் சுகத்துக்காக, வளர்த்தது உங்கள் கடமை என்று பிள்ளைகள் போவதும் நியாயமா? இரு கருத்துகளும் உண்டு. கேட்டால் எதிர்பார்ப்பு இருக்கக் கூடா து என்பார்கள் சிலர். பாசம் என்பதெல்லாம் சும்மா என்பார்கள் சிலர்.

சமீபத்தில் இந்துவில் சொத்து பிரிப்பது எப்படி என்ற சட்ட ஆலோசனை சொல்லும் கட்டுரை வந்திருந்தது. சொத்து வாங்கும்போது இருக்கும் சூழ்நிலை பிற்காலத்தில் எப்படி இல்லாமல் போகிறது என்பதைச் சொல்லும் கட்டுரை. சொந்தச் சகோதரர்களாய் ஒரு வீட்டில் வளர்பவர்கள் திருமணத்துக்குப் பின் இருமனமாய் மாறும் விந்தையைச் சொல்லும் கட்டுரை. 

இதெல்லாம் இப்போது எதற்கு என்கிறீர்களா? 

நேற்று 'பக்பான்' என்ற ஹிந்திப் படம் தொலைக் காட்ச்சியில் பார்த்தேன். அரைமணி நேரப் படம் ஓடியிருக்கலாம். அதனால் நஷ்டமில்லை. இடை இடையே வரும் விளம்பரத் தொந்தரவுகள் இல்லாமல் பார்த்த படம்.
'பக்பான்' என்றால் தோட்டக்காரர் என்று பொருள் கொள்ளலாம். படத்தின்படி குடும்பமாகிய தோட்டத்தை உருவாக்கும் குடும்பத் தலைவர். 

 

வளர்ந்து ஆளான நான்கு மகன்களும் தந்தை தாயைப் பந்தாடும் கதை. ஏற்கெனவே நிறையப் பார்த்த கதைதான். தந்தையை ஒரு மகனும், தாயை ஒரு மகனும் வைத்துக் கொள்வதால் வெவ்வேறு இடங்களில் பிரிந்து வாழும் தம்பதியராய் அமிதாப், ஹேமாமாலினி. 

இன்றைய நவீன ஐ டி கலாச்சாரத்தில் ப்ராஜெக்ட்டுக்கு ரெடி செய்யும் மகனிடம் தான் உதவவா என்று கேட்கும் தந்தையிடம் சிரித்தவாறே மறுக்கும் மகன், அவர் காலத்தில் போட்டி இல்லை என்றும், இந்தக் காலத்தில் இருக்கும் போட்டி, வேகம் ஆகியவற்றைச் சொல்கிறான். அந்தக் காலத்திலும் தனது வேலையில் ஸ்ட்ரெஸ் இருந்தது என்னும் தந்தையிடம் மகன் சொல்வது ; "எப்படியோ வேலை செய்து, வீட்டைக் கட்டி, எங்களைப் படிக்க வைத்து நல்ல வேளையில் அமர்த்தியதன் காரணம் உங்கள் வருங்காலப் பாதுகாப்பை முன்னிட்டுதான்'' என்று சொல்லும்போது திகைத்து நின்று விடுகிறார் தந்தை.  இது மட்டுமல்ல, சாப்பாடு மேஜையில் குடும்பத் தலைவனாய் அமர்ந்த இடத்திலிருந்து மருமகள் தன்னை எழுப்பி விட்டு மகனை உட்காரவைப்பது முதல், உடைந்த மூக்குக் கண்ணாடியைச் சரி செய்ய (அதுவும் பேரன் உடைப்பதுதான்) மகனை அணுகும்போது (கொஞ்சம் நாடகத்தனமான காட்சி) மகன் அடுத்த மாதம் என்று தவணை வாங்குவது, காலை பேப்பர் வந்ததும் எடுத்துப் படிக்கும் அவரிடமிருந்து 'அவர்' பேப்பர்  கேட்கிறார், உங்களுக்கு என்ன அவசரம்? வீட்டில் சும்மாதானே இருக்கிறீர்கள்?' என்று மருமகள் அந்தப் பேப்பரைப் பிடுங்கிக் கொண்டு போவது,  இரவில் தூக்கம் வராமல் தனது அறையில் தனது கதையை பழைய டைப்ரைட்டரில் அடிக்கும் தந்தையை மருமகள் தூண்டலின் பேரில் மகன் வந்து 'இந்தக் குடும்பத்துக்காக காலையிலேயே எழுந்து, நீங்களெல்லாம் சாப்பிட சாப்பாடு செய்வது முதல் வேலை வேலை என்று மிகவும் கஷ்டப்படும் தன் மனைவிக்குத் தூக்கம் வராமல் செய்கிறீர்கள்' என்று சொல்வது வரை தந்தையின் வருத்தங்கள்... 
அந்த வீட்டில் பேரன் மட்டும் தாத்தா பக்கம். "இந்த வீட்டுக்கு மறுபடி வராதே தாத்தா" என்கிறான்.

நேரம் கெட்ட நேரத்தில் கவர்ச்சியான உடையணிந்து வெளியில் செல்லும் பேத்தியைப் பார்த்துக் கவலைப்படும் தாய் அதுபற்றித் தன் மகனிடம் சொல்ல முற்படும்போது அந்த மகன் தாங்கள் தங்கள் தந்தையால் கட்டுப்பாடாக வளர்க்கப்பட்ட கொடுமை போல தனது மகளுக்குச் செய்ய விருப்பமில்லை என்று சொல்வதோடு 6 மாதம் விருந்தினராய் வந்திருக்கிறாய்... அந்த மரியாதையைக் காப்பாற்றிக் கொள்' என்கிறான். அப்புறம் சினிமாத் தனமான ஒரு காட்சியில் அந்தப் பேத்தி மனம் திருந்துகிறாள்.

6 மாதங்கள் கழித்து தம்பதியர் வீடு மாறும் கட்டத்தில் அவர்கள் திருமணநாள் வர, அதைக் கொண்டாட நினைக்கும் நாயகன் மனைவியை ரயில்வே ஸ்டேஷனிலிருந்து வெளியே அழைத்துச் சென்று சுற்றுகிறான். ஒரு குறிப்பிட்ட நேரம் முடிந்ததும் இருவருக்கும் தாங்கள் பிரிந்து வெவ்வேறு மகன்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டிய கடமை அழுத்துகிறது. நாயகன் இனி நாம் அப்படிச் செல்ல வேண்டாம் என்கிறான். 

                     

அப்புறம் 'வாழ்க்கை' பாண்டியன் மாதிரி, 'படிக்காத மேதை' ரங்கன் மாதிரி ஒரு வளர்ப்புமகன். சல்மான்கான். உணர்ச்சிகரமான நடிப்பு என்று ஹஸ்கி வாய்சிலேயே பேசிக் கொல்கிறார்.  அவர் வந்து இவரது சொந்த மகன்கள் காட்டாத பாசத்தையும், மரியாதையையும் இருவருக்கும் காட்டுகிறார்.  

தன் காதல் மனைவி பற்றியும் தன் வாழ்க்கை பற்றியும்  'பக்பன்' என்ற பெயரில் நாயகன் டைப் செய்யும் பக்கங்கள் நண்பர்கள் மூலம் புத்தகமாக, பல பதிப்புகள் கண்டு இவர்களை அந்தப் புத்தகம் கோடீஸ்வரனாக்குவதும், பரிசு மேடையில் நாயகனின் உணர்ச்சிகரமான உரையுடனும் நிறைவு பெறுகிறது படம்.

மன்னிப்புக் கேட்கும் மகன்களிடம் தாய், 'ஒரு தாயாக என் ரத்தங்களான உங்களை நான் மன்னிப்பேன். ஆனால் என் கணவரின் கண்ணீருக்குக் காரணமான உங்களை அவரின் மனைவியாக மன்னிக்க மாட்டேன்' என்று பேசிச் செல்கிறார். 

இப்படி ஒரு படம் பார்த்ததனால்தான் மேலே எழுதியிருப்பவை...! வயதானபின்னும் கணவன் மனைவிக்குள் இருக்கும் அந்த அன்பு படத்தின் ப்ளஸ் பாயிண்ட். திருமணத்துக்குப் பின் கணவனின் பெற்றோர் தங்களுடன் இருக்கக் கூடாது என்றுதான் இந்தக் காலப் பெண்கள் விரும்புகிறார்கள். ஆண்கள் இப்படி ஒரு கண்டிஷனைப் போடுகிறார்களா என்று (நானறிந்தவரையில்) தெரியவில்லை! இதற்குத்தான் 80 களிலேயே விசு லக்ஷ்மியை வைத்து 'சம்சாரம் அது மின்சாரம்' படத்தில் ஒரு தீர்வைச் சொல்லி விட்டார் போலும்! எப்படியாயினும் வயதான காலத்தில் கடமையைக் காரணம் காட்டி கணவன் மனைவியைப் பிரித்து வைக்கக் கூடாது என்பது என் கட்சி.  அந்த வகையில் படம் நன்றாக இருந்தது!

29 comments:

sury Siva said...

பொண்ணுக்கு தன அம்மா அப்பாவை தன்னுடன் வைத்துக்கொள்ளவேண்டும் என்று கணவனுடன் சண்டை வந்தாலும் அதனால் பரவா இல்லை என்று நினைக்கும் அதே காலத்தில்,

சரி, சரி.....
பையனுக்கோ ( சாரி, பையருக்கோ) .......????!!!!


எதுக்கு வம்புலே மாட்டிக்கணும்...?

ஒரு நல்ல பாட்டு பாக்பான் லே இருக்கே...அத போடக் கூடாதோ ?
i saw this film on its release itself.

எல்லார் வீட்டிலேயும் இது போல் நடக்கத்தான் செய்கிறது.

பலர் பேசுவதில்லை.

சுப்பு தாத்தா.

திண்டுக்கல் தனபாலன் said...

ரசிக்க வைக்கும் விமர்சனம்... வாழ்த்துக்கள்... நன்றி...

rajalakshmi paramasivam said...

வயதானாலும் காதல் மாறுமா என்ன?
வயதாக ஆக காதலும் வளர்கிறதே! வயதான தம்பதியரைப் பிரிப்பது மிகப் பெரிய பாவம். அதை செய்வது யாராயிருந்தாலும் மன்னிப்பே கிடையாது தான்.

Geetha Sambasivam said...

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் படத்தை நானும் ஒரு மாசம் முன்னாடியே பார்த்தேன். பேர் பாக்பன். பக்பான் இல்லை. :)))))

Geetha Sambasivam said...

பாக் னா தோட்டம்.

Geetha Sambasivam said...

படம் யதார்த்தத்தைப் பல இடங்களில் காட்டினாலும், ஒரு சில நாடகத் தனங்கள் இருந்ததும் உண்மை தான். :(

இப்போது மட்டுமல்ல எப்போதுமே பெண்கள் தன்னுடைய பெற்றோரிடம் மட்டுமே நெருங்கிப் பழகுவாங்க. தங்கள் குழந்தைகளையும் தன் பெற்றோரிடம் மட்டுமே நம்பி ஒப்படைப்பாங்க. ஒரு சில விதி விலக்குகளும் உண்டு. பெற்ற அம்மாவையே படுத்தி எடுத்த, எடுக்கும் பெண்களும் உண்டு.

ஆனால் இந்தப் பதிவின் கருத்து வயதான தம்பதியரைப் பிரிக்கக் கூடாது என்பது. அதிலே எனக்கு முழு ஒப்புதல் உண்டு.

இராஜராஜேஸ்வரி said...

அருமையான விமர்சனம்...

Ramani S said...

படத்தைப் பார்த்துத்தான் ஆகவேண்டும்
என தங்கள் விமர்சனத்தைப் படித்ததும் தோன்றுகிறது
நடு நிலையான விமர்சனம் மனம் கவர்ந்தது
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இரு பக்கமும் தவறுகள் உண்டென்றாலும் பெரியவர்கள் விட்டுக் கொடுக்க வேண்டிய கட்டாயம் தற்போதைய குடும்ப சூழல்களில் உள்ளது. விமர்சனம் நன்று

s suresh said...

நல்லதொரு விமர்சனம்! நல்லதொரு அறிவுரை! நன்றி!

ராமலக்ஷ்மி said...

நடைமுறை வாழ்வோடு படத்தை அலசியிருக்கும் விதம் நன்று. திரைப்படங்களில் வளர்ப்புமகன்கள் கிடைத்து விடுகிறார்கள். நிஜத்தில்?

நல்ல பகிர்வு.

ஸ்கூல் பையன் said...

படத்தின் கதை பல இடங்களில் நடக்கும் சம்பவங்களே... இருந்தாலும் பார்க்கும்போது மனம் கனக்கும்... பார்க்கிறேன்... நன்றி...

ஸாதிகா said...
This comment has been removed by the author.
ஸாதிகா said...

உங்கள் பதிவின் வரிகளையும் திரைப்படக்கதை சுருக்கத்தையும் வாசிக்கும் பொழுது கண்கள் தளும்பியது என்னவோ உண்மைதான்.

// டைப் செய்யும் பக்கங்கள் நண்பர்கள் மூலம் புத்தகமாக, பல பதிப்புகள் கண்டு இவர்களை அந்தப் புத்தகம் கோடீஸ்வரனாக்குவதும், பரிசு மேடையில் நாயகனின் உணர்ச்சிகரமான உரையுடனும் நிறைவு பெறுகிறது படம்.// இது படங்களில்,கற்பனை புனைவுகளில் மட்டும்தானே நடக்கும் சம்பவமாக உள்ளது.:(

நூற்றில் ஓரிருவர் நல்ல மக(கா)ன் களாக ஆங்காங்கே இருப்பதையும் காண நேரிடும் பொழுது சற்றேனும் நெஞ்சம் நிறைவாகிறது..

பகிர்வுக்கு நன்றி சார்.

மனோ சாமிநாதன் said...

பல வருடங்களுக்கு முன் வந்த தரமான படம். பார்த்தபோது மனதை நெகிழ்வடைய வைத்தது.

வாழ்க்கையில் நடப்பதைத்தானே படமாய் எடுக்கிறார்கள்? இப்போதும் சச்சரவுகள் இன்றி, சுமுகமாய் தங்களின் பிரிவை சகித்துக்கொண்டு அம்மா அமெரிக்காவில் போய் தங்கி ஒரு மகனுக்கு குடும்பத்தில் உதவுவதும் அப்பா இன்னொரு மகனின் இல்லம் சென்று அவர்களுக்கு உதவியாக இருப்பதும் நடக்கத்தான் செய்கிறது.
' நம்மை விட்டால் வேறு யார் இந்த உதவிகளைச் செய்ய முடியும்?' என்ற எண்ணம் பெரியவர்களுக்கும் இருக்கிறது. பாதிக்கப்படும் உடல் நலம், அப்போது ஆதரவாய்ப் பார்த்துக்கொள்ள‌ தன் துணையில்லாத தனிமை என்று பல பெற்றோர்கள் வயதான காலத்தில் மனதள‌வில் கஷ்ட‌ப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களின் மன உணர்வுகளையும் ஓய்வைத்தேடும் மன நிலையையும் புரிந்து கொள்ளாமல் குழந்தைகளுக்கும் வீட்டிற்கும் சமையலுக்கும் அவர்களை பாதுகாப்பாய் வைத்து விட்டு பொருளீட்ட அலுவலத்திற்கு மனைவியுடன் செல்லும் சுயநலமான பிள்ளைகள் ஆயிரக்கணக்கில் இருக்கத்தான் செய்கிறார்கள்!!

சே. குமார் said...

அழகான விமர்சனம்...
அருமை.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதோர் படம் பற்றிய விமர்சனம். சில இடங்கள் சினிமாத்தனமாக இருந்தாலும்.... நல்ல படம்.

கீத மஞ்சரி said...

இதைப்போலவே எனக்குத் தெரிந்த ஒரு பெண் ஆஸ்திரேலியாவில்... திருமணமாகி விவாகரத்தும் ஆகிவிட்டது. ஒரு பெண்குழந்தை. அந்தக் குழந்தையை வளர்க்க அந்தப் பெண்ணின் அப்பாவும் அம்மாவும் முறை போட்டுக்கொண்டு சென்னையிலிருந்து வருடம் ஒருவராக விசா வாங்கிக்கொண்டு வந்து இருந்து செல்கின்றனர். (பெண்ணின் அழைப்பின் பேரில்) பேத்திக்கு இப்போது ஆறு வயதாகிறது. இன்னமும் இந்தப்பழக்கம் மாறவில்லை. வயதான அந்த அம்மாவைப் பார்த்துப் பேசும்போது கணவரைப் பிரிந்திருக்கும் ஏக்கம் அவரது பேச்சில் பிரதிபலிக்கும். என்னையறியாமலேயே கண் கசிந்துவிடும்.

பாக்பன் திரைப்பட விமர்சனம் அருமை. கூடுமானவரை முதுமையில் தம்பதியரைப் பிரித்துவைக்காமல் ஒருவருக்கொருவர் ஆறுதலாய் அருகருகே இருக்கவைப்பதே நல்லது.

கோமதி அரசு said...

வயதான காலத்தில் கடமையைக் காரணம் காட்டி கணவன் மனைவியைப் பிரித்து வைக்கக் கூடாது என்பது என் கட்சி. அந்த வகையில் படம் நன்றாக இருந்தது!//
என் கருத்தும் அது தான்.
படவிமர்சனம் நன்றாக இருக்கிறது.

ஸ்ரீராம். said...


சுப்பு தாத்தா... சலீ சலி சொல்கிறீர்களா, அல்லது அந்த மெலடியா? நான் இதற்கு சம்பந்தமில்லாமல் தலைப்பின் வரிகளைக் கொண்ட பாடலைப் பதிவேற்றினேன். இல்லை, பதிவேற்ற கடும் முயற்சி செய்தேன். ஏனோ அந்தப் பாடல் பதிவில் வரவில்லை.

DD... நன்றி.

rakalakshmi paramasivam... நன்றி.

கீதா மேடம் நன்றி. ஓகே பாக்பன்! கவாஸ்கர், காவஸ்கர் சொல்றதில்லையா... அது போலத்தான்! :))

RR மேடம்.. நன்றி.

ரமணி ஸார்.. நன்றி.

நன்றி TNM. விட்டுக் கொடுக்கும் பெரியவர்களைப் பிரிக்காமல் இருந்தால் சரி! :)))
நன்றி 'தளிர்' சுரேஷ்.

நல்ல கேள்வி. நன்றி ராமலக்ஷ்மி.

நன்றி ஸ்பை.

நன்றி ஸாதிகா மேடம்.

நன்றி மனோ சாமிநாதன் மேடம். நீங்கள் சொல்வதுபோல் அப்படியும் சிலர் இருக்கிறார்கள்.

நன்றி சே. குமார்.

நன்றி வெங்கட்.

நன்றி கீதமஞ்சரி. நீங்கள் சொல்லியிருக்கும் சம்பவம் மனதை இன்னும் கஷ்டப் படுத்துகிறது.

நன்றி கோமதி அரசு மேடம்.

ஹுஸைனம்மா said...

பதிவைவிட, ஆஸ்திரேலியக் கதை பரிதாபமாக இருக்கிறது. இதுக்கு, அந்தக் குழந்தையை இந்தியா அனுப்பி பெற்றோர்களிடம் வளரச் செய்யலாமே!!

வயதான பெற்றோர்கள்....Vs பிள்ளைகள்...
நிறையச் சொல்லலாம்.. மதிக்காத பிள்ளைகளும் உண்டு; வளையாத பெற்றோர்களும் உண்டு உலகில்!!

பாசம் இருந்தாலும், வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளோடு வசிப்பதென்பது பெற்றோருக்கு இயலாத விஷயம். பிள்ளைகளால் அவர்களோடு இந்தியா வந்து இருப்பதும் முடியாத சூழலில்... ஹூம்ம்.... இருதரப்பிலுமே நியாயமான சூழலில் யர் பக்கம் தீர்ப்புச் சொல்வது?

ஜீவி said...

இந்தி தெரியாத எனக்கு தாங்கள் கதை சொன்ன விதம் மிகவும் பிடித்திருந்தது.

ஸ்ரீராம். said...

நன்றி ஹுசைனம்மா... கஷ்டமான சூழல்தான். ஆனால் அதில் இதுபோல பெற்றோர்களைக் கறிவேப்பிலையாகப் பயன் படுத்திக் கொள்வோரைப் பார்த்தால்தான் கஷ்டமாக இருக்கிறது.

நன்றி ஜீவி ஸார்.. ஹிந்தி தெரியாதா உங்களுக்கு? எனக்கு மட்டும் தெரியுமாக்கும்? படம் பார்த்து குத்து மதிப்பா புரிந்து கொள்வதுதான்!

Kamatchi said...

எப்படி யார் எதை விட்டுக் கொடுத்தாலும் ஸரி, வயதான காலத்தில்
அந்தப் பிள்ளைகளோடுதான் இருக்க வேண்டி நியாயமும் இருக்கிறது.
பெற்றவர்கள் அனுஸரித்துப் போவதுதான் வழி. மனக்குமுரல்கள் பெற்றவர்களுக்கு கடவுள் கொடுத்தவரம்.
பிள்ளைகளுக்குப் பாசம் இருக்கலாம்.
அவர்கள் குடும்பம் நிம்மதி வேண்டி,அவர்களும் இவர்கள் மாதிரி ஆகி விடுகிரார்கள்
ஸைன்ஸ் முன்னேறி விட்டது.
ஆயுள் அதிகமாகி விட்டது.
படம் பார்த்து நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்.
பலவற்றைப் பார்த்து நான் எழுதுகிறேன்.
இது நீண்ட தொடர்கதை. அன்புடன்

திண்டுக்கல் தனபாலன் said...

Visit : http://shadiqah.blogspot.in/2013/11/blog-post_27.html

ஸ்ரீராம். said...

வணக்கம் காமாட்சி அம்மா... நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

//படம் பார்த்து நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்.
பலவற்றைப் பார்த்து நான் எழுதுகிறேன்.//

உண்மை.

//பெற்றவர்கள் அனுஸரித்துப் போவதுதான் வழி. மனக்குமுரல்கள் பெற்றவர்களுக்கு கடவுள் கொடுத்தவரம்.//

இதைத்தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதாவது அப்படி மனக்குமுறல்களோடு காலத்தைத் தள்ளுவது கஷ்டத்தை ஏற்படுத்துகிறது.

ஸ்ரீராம். said...

Thanks DD

Kamatchi said...

கஷ்டமானாலும் காலம் தள்ள பெற்ற உறவுகள் அவசியம். எங்கு போனாலும்
ஏதாவது ஒரு முறையில் கஷ்டங்கள்
தொடரும். என்ன சொல்வது. பற்றற்ற
ஒருநிலை வருமா? காசுபணம் இருந்தாலும் போதாது. எவ்வளவோ சுகமான குடும்பங்களும் இருக்கிறது.
இது விமோசனமான தீர்மானமில்லை.
ஸாதாரணமான விமரிசன பின்னூட்டமாக இது போகட்டும்.
அன்யோன்யம்,அபிமானம், இவையிருந்தால்ப் போதும். அவ்வளவுதான்.

அமைதிச்சாரல் said...

அழகான படத்துக்கு அருமையான விமர்சனம்.

பிள்ளைங்க கிட்ட போய் இருக்க வேண்டாம்ன்னுட்டு இவங்க இருந்த பழைய வீட்டுக்கு வரும்போது அவங்க வளர்த்த நாய்கள் ஓடி வந்து மேல விழுந்து புரளும். அந்த சீன் எனக்கு ரொம்பப் பிடிச்சது :-)

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!