5.9.09

அன்புள்ள ஆசிரியர்களே!

இன்று ஆசிரியர்கள் தினம். ஆசிரியர் தினம் அல்ல! என்னுடைய எல்லா ஆசிரியப் பெருமக்களையும் - ஏறு வரிசையில் நினைத்துப் பார்க்கிறேன்.
1) முதல் வகுப்பு - ஆசிரியையின் பெயர் மறந்து போய் விட்டது / தெரியவில்லை. வீட்டில் இருந்த பெரியவர்கள் "பங்காரு " டீச்சர் என்பார்கள். - ஜெ மு சாமி கடையில் வேலை பார்த்த பங்காரு நாயுடு அவர்களின் மனைவி என்பதால் - அவருக்கு அந்த பெயர் - எங்கள் வீட்டில் வைக்கப் பட்டது. 'அ' எழுத எனக்கு சொல்லி கொடுத்து, அதில் ஓரளவு வெற்றியும் கண்டவர். நிறைய பொய்கள் சொல்லுவார் - என் அழுகையை நிறுத்துவதற்காக! (அண்ணன் - இங்கே தான் இருக்கு, இப்ப வரும், அழாதே ...... etc etc.)
2) லில்லி புஷ்பம். - விவரங்கள் வேறு ஒரு வலைப் பதிவில் காண்க. http://kggouthaman.blogspot.com
3) மற்ற ஆசிரியர்கள் - தேசிய, தேர்முட்டி பள்ளிக் கூடங்களில் --- ராமகிருஷ்ணன், தண்டபாணி ஷண்முகசுந்தரம் செ. வா என்கிற சுப்ரமணியன் - ஜெகதீசன் என்று பலர் நினைவுக்கு வருகிறார்கள். வகுப்பில் பேசிக் கொண்டிருந்தேன் என்பதற்காக என்னை பலமாக அறைந்த ஜெகதீசனை - என் ஒரு பக்கக் காது கேட்காமல் போனதற்கு - முக்கியமான காரணமானவரை - மறக்கவே முடியாது.
4) ஆறு முதல் எட்டு வரை - வைத்தியநாதன், சாம்பசிவம், தண்டபாணி :: அட்டிபாயில் நஞ்சன், நுந்தால பீமன், :: லக்ஷ்மண அய்யர் , ராஜசுந்தரம் என்றெல்லாம் நினைவுக்கு வந்தாலும் - வீட்டுக்கு அழைத்து - இலவசமாக டியூஷன் சொல்லிக் கொடுத்த - எவ்வளவோ ஆங்கிலப் பாட - சொற்களை எளிதாக சொல்லிக் கொடுத்த லக்ஷ்மண அய்யர் என்றுமே நினைவில் நிற்கிறார்.
5) JTS - ராமமூர்த்தி, மகாதேவன், சுந்தரம், குமரேசன், பன்னீர்செல்வம், தேவதாஸ் -ஆகியோர் நினைவில் ... மற்றும் நண்பர்களாகப் பழகிய workshop instructors.
6) Polytechnic ச பு பாலஜகன்னாதன், ஜெ கோவிந்தராஜுலு, வாஞ்சிநாதன் (வாவ் - what a man - as a teacher!) , கணபதி, B.C என்று அழைக்கப் பட்ட சவரிமுத்து (சில பெயர்கள் பட்டப் பெயர் மட்டும் ஞாபகம் உள்ளது !) மேலும் என்ன காரணத்தினாலோ - என்னை என்றுமே வெறுத்த ராமசாமி (கெமிஸ்ட்ரி)
ஆசிரியர் வரிசையில் சேராத - உடன் பிறந்த அண்ணன்கள் - அவர்களிடம் நான் கற்றதும் பெற்றதும் ஏராளம்.
அனைவரையுமே - இந்த ஆசிரியர் நாளில் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். அவர்களைப் பொறுத்த வரையில் (அண்ணன்களைத் தவிர) நான் ஆயிரத்தில் ஒருவன் ---- அனால் எனக்கு அவர்கள் ஒவ்வொருவரும் ஆயிரத்தில் ஒருவர்.

மணப் பொருத்தம் - மன வருத்தம்

குடும்ப நலக் கோர்ட்டுகள் நிறைய ஏற்படுத்தப் படப் போகின்றனவாம். ஏன்? குடும்ப நல வழக்குகள் பெருகி விட்டதால்..ஏகப் பட்ட மண முறிவு வழக்குகள் வந்த வண்ணம்,உள்ளனவாம்.
பெற்றோர் ஏற்பாடு செய்யும் என்று இல்லை...காதல் திருமணங்களும் கூட தோல்வியில் முடியக் காரணம் என்ன? பிரபலமான (காதல்) திருமணங்கள் விரைவில் முறிந்து விடுவதைப் பார்க்கிறோம்.பிரபலமானவர்கள் என்பதால் அது உடனே தெரிந்து விடுகின்றது.பொதுமக்களில் எவ்வளவு தோல்விகள்? ஏன் இந்த நிலை?
பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமணத்தில் மனப் பொருத்தம் பார்க்காமல் பணப் பொருத்தம் அதிகமாகப் பார்க்கிறார்களா? அப்படி என்றால் மனதால் இணையும் காதல் திருமணங்கள் தோற்பதேன்? எதைப் பார்த்து இணைய முடிவெடுக்கிறார்கள், பிறகு எதைக் கண்டு சீக்கிரமே பிரிய முடிவெடுக்கிறார்கள்?
சொந்த பலவீனங்களை மறைத்து விட்டு பொழுது போக்காக காதலிக்கிறார்களா? திருமணத்துக்குப் பின் அந்த பலவீனங்கள் விஸ்வரூபம் எடுக்கின்றதா? ஏன் இவர்களால் விட்டுக் கொடுத்துப் போக முடிவதில்லை? இது சம்பந்தப் பட்ட இருவர் பிரச்னை என்பதைத் தவிர சமயங்களில் மாமியார், நாத்தனார் கூடப் பிரச்னை ஆவது உண்டு.
ஆனால் கூட்டுக் குடும்பம் என்பது இந்தக் காலத்தில் மறைந்து வருகிற கலாச்சாரமாகி வருகிறது.இந்த மாதிரி கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தால் தோல்விகள் பெருமளவு குறையலாம்.
இருவரும் வேலை பார்க்கும் இடங்களில் ஆதிக்க உணர்வும், உன் சம்பளம், என் சம்பளம் comparison பிரச்னையும், வீட்டுல நான் மட்டும் வேலை செய்யணுமா போன்ற பிரச்னைகள் புகைச்சலைக் கிளப்புகின்றன.
மற்றவரது பெற்றோரை தன் சொந்தக் கோபங்களுக்கு அவமதித்து துணையை சீண்டிப் பார்ப்பது,
கணவன் மேல் மனைவி, மனைவி மேல் கணவன் என்று எழும் அனாவசிய சந்தேகங்கள் போன்றவை பிரச்னை ஆகலாம்.
மேல் நாடுகளில் குறட்டை விடுவதால் கூட மண முறிவு ஏற்பட்டிருக்கிறது!
அலுவலகங்களில் எத்தனையோ சிக்கலான பிரச்னைகளை அலசி விடை காணும் மக்களால் வீட்டில் சொந்தங்களுடன் ஏற்படும் பிரச்னைகளை சமன் செய்து ஒற்றுமையாக வாழ முடியாமல் போவதேன்?
சகித்துக் கொண்டு வாழ்வதை விட தனியாகப் போவதே மேல் (Female லும்தான்!) என்று பொறுமை இன்றி ஓட வைப்பது நாகரீக வாழ்வு தந்த பொருளாதார பலமா?
குழந்தைகள் வந்த பிறகு பிரிய நேர்ந்தால் குழந்தைகளுக்கு வரும் பாதிப்பு தனிக் கதை.
பரஸ்பரப் புரிதல் இல்லாமல் போவதற்கு அவசர யுகத்தின் பரபரப்பு காரணமா? எதையும் ஆராய்ந்து பார்க்காமல் உணர்ச்சி வேகத்தில் அவசர முடிவு எடுக்க வைக்கும் Fast food கலாசாரம் காரணமா?
வேலைகளை சற்று ஒதுக்கி வைத்து விட்டு குடும்பத்துக்கு என்று தினமும் சற்று நேரம் ஒதுக்குவது, TV Serial களை மறந்து தினமும் சற்று நேரமாவது மனம் விட்டுப் பேசுவது சேர்ந்து சாப்பிடுவது என்றெல்லாம் இருந்தால் இந்தப் பிரச்னை கொஞ்சமாவது குறையுமோ?

4.9.09

இது இப்படிதான்...

மரணம் என்பது கொடிய அரக்கன். எப்படி வரும் எப்போது வரும் என்று தெரியாது....ஒரு மனிதனின் கனவுகளையும் எண்ணங்களையும் 'சட்'டென முறித்துப் போகும் கொடுமையான விஷயம்.
நீண்ட நாள் நோயில் உள்ளவர் தன் மரணத்தை ஓரளவு எதிர்பார்த்திருப்பார். 'ஆஸ்துமா' போல நித்ய கண்டம் பூர்ணாயூசும் உண்டு. ஏதோ cancer வந்தது, வேற வியாதி வந்தது, வாழ்வு இவ்வளவு நாள்தான் என்பது ஒரு வகை.
'சட்'டென ஒரு விபத்தில் துர்மரணம் அடைவது, நடுத்தர வயதுக் காரர்கள், எந்த நோயும் இல்லாதவர்கள் கூட, இரவு படுத்தால் காலை எழவில்லை, ஒரு தம்ளர் தண்ணீர் கேட்டார்கள், போய்விட்டார்கள் என்றோ முடிந்து விடுகின்றது.
100 வருடங்கள் வாழ்வது எப்படி என்று தமிழ்வாணன் புத்தகம் எழுதினர். 54 வயதிலேயே மறைந்தார்.
என்னென்னவோ புத்தகங்களை இந்த வாரம், மாதம் முடித்து விட வேண்டுமென்ற எண்ணம் இருந்திருக்கும்.
பிடித்த பாடல்களின் List மனதில் ஓடி இருக்கும் - "Night படுக்கப் போகும்போது இன்றாவது அந்த கண்டசாலா பாட்டுக் கேட்கணும்..."
உற்ற நண்பனை சந்தித்து ரொம்ப நாளாச்சு... தப்பா நினைப்பானோ? இந்த ஞாயிறாவது அவன் வீடு சென்று வர வேண்டும்...
மாடில புதுசா மாத்திக் கட்டின ரூம்ல படுத்து பாட்டு கேட்டுகிட்டே புத்தகம் படிக்கணும்...
எத்தனையோ கனவுகள்...எண்ணங்கள்...திட்டங்கள்...
ஒரு நொடியில் அதனையும் எதிர்பாராமல் முறிக்கப் படும் என்று கண்டோமா என்ன? முறிக்கப் பட்ட இந்த எண்ணங்கள் எங்கே போகும்? ஆன்மா வெளியேறி வேறு லோகம் செல்கிறது. எண்ணங்கள் இங்கேயே psychon களாக அலைகின்றனவா?
ஆக நோய்வாய்ப் பட்டு இறந்தாலும், காரணமில்லாமல் அகால மரணமடைந்தாலும் மரணம் உறுதி. அதை எந்தக் காரணத்துக்குள்ளும் அடைக்க முடியாது.
சிறு வயதில் மரண செய்திகள் கேள்விப் படும்போது திகிலாய் இருக்கும். முதன்முதலாக நமக்கும் மரணம் உண்டு என்று அப்பாவிடம் கேள்வி கேட்டுத் தெரிந்து கொண்ட போது இரண்டு நாள் சாப்பிடப் பிடிக்கவில்லை! "கவலைப் படாதடா! ஒண்ணொன்னுக்கா மருந்து கண்டு பிடிச்சிண்டு இருக்கா..நாம பெரியவங்க ஆரதுக்குள்ள இதுக்கும் மருந்து கண்டு பிடிச்சிடுவாங்க..." என்று நண்பர்களுக்குள் தேற்றிக் கொண்டதுண்டு - ஏதோ பெரியவர்கள் ஆனால்தான் இறக்க வேண்டும் என்பது விதி (இது FATE இல்லை... RULE!) மாதிரி.
பெரியவர்கள் எல்லாம் போறாங்க...நமக்கு இன்னும் நாள் இருக்கிறது என்று (முட்டாள்தனமாக) தோன்றும். பிறகு... எப்போ நாமோ என்று தோன்றும்!
மரணம் என்ற இந்த எண்ணங்கள்தான் மனிதனை மரணத்துக்குப் பின் என்ன என்று என்ன வைக்கிறது. ஆர்வம்!
MJ மறையும்போது இல்லாத தாக்கம் ராஜீவ் மறையும்போதோ,YSR மறையும்போதோ வருவதேன்?
குப்பனும் சுப்பனும் தினமும் நிறைய மடிகிறார்கள். பாதிப்பதில்லை. நம் சொந்தத்தில் நடக்கும் போதுதானே அதன் தாக்கம் தெரிகிறது?
அதற்கென்ன செய்ய என்கிறீர்களா?
மரணம் ஒரு சுகமான விடுதலை! பல கஷ்டங்களில் இருந்தும் நம்மை 'சட்'டென விடுவித்து அழைத்து செல்கிறது.
நடு இரவில் சத்தம் கேட்டால் கதவைத் திறக்க பயம். திறந்து விட்டால்.... ஒன்றுமே இல்லை. மூடிய கதவுகளுக்குள் இருந்த பயம் கூட காணாமல் போய் ஒரு சுதந்திர உணர்வு தோன்றும்.
அடுத்த உலகம் பற்றி எல்லாம் நாம் செய்யும் கற்பனைகள்தானே... Proof உண்டா என்ன? உண்மையில் என்ன என்று யாருக்குத் தெரியும்?

3.9.09

ஆந்திர முதல்வர் தேடல்

என்னவோ இந்தியா அணுகுண்டு செய்யத் தெரிந்த நாடு, நிலவுக்கு கால் டாக்ஸி அனுப்பி வைத்தது என்றெல்லாம் பெருமை பேசிக்கொண்டு திரியும் நமக்கு ஒரு எருமை ஹெலிகாப்டர் காணாமல் போய் அதைக்கண்டு பிடிக்க முடியாமல் திணறுவது ஒரு பாடமாக இருக்கிறது. ஐயாயிரம் பேர்கள், நூற்றுக்கணக்கான விமானங்கள் தேடுகின்றன தேடிக்கொண்டே இருக்கின்றன.
ஆந்திர முதல்வருக்கு என்ன ஆகி இருக்கும்?  கடத்தல், விபத்து எதுவானாலும் கொடுமைதான். விபத்தாக இருந்தால் தெரிந்திருக்கும் என்று வேறு சொல்கிறார்கள். அட கடவுளே!
முன் அறிவிப்பு இன்றி கிராம நிர்வாகத்தை சோதிக்க வேண்டும் என்று திட்டமிட்டு இப்படிப் போவது அவரது வழக்கமாம். நல்ல எண்ணத்துடன் செயல் பட்ட திறனாளர் நலமாக வர வேண்டுவோம்.

2.9.09

எனது எருமைச் சந்தேகங்கள்!

சமீபத்தில், www.crazymohan.com வலைப் பதிவை மேய்ந்து கொண்டிருந்தேன். என்னுடைய 'சு'தந்தி'ர' தின நண்பன் கைவண்ணம் வெகுவாகக் கவர்ந்தது. பாட்டும் படமும் அவனுக்குக் கை வந்த கலை. நிற்க. கிரேசி மோகனின் - பழைய (சாவி இதழில் வந்த) கதையைப் படித்த பொழுது எனக்கு ஒரு சந்தேகம் வந்தது.
அது என்ன என்றால் - வீட்டில் வளர்க்கப்படும் பசு விற்கு பெரும்பாலானவர்கள், "லட்சுமி / லக்ஷ்மி " என்று நாமகரணம் செய்திருப்பார்கள் - நிறைய லட்சுமி இருந்தால் - என்ன அல்லது என்னென்ன பெயர்கள்? - முதல் சந்தேகம்.
எருமை மாடுகளுக்கு என்ன பெயர் வைப்பார்கள்? (பிறந்த கன்றுக் குட்டியை - கொண்டு போய் அரசியல் தலைவர்களிடம் கொடுத்து - பெயர் வைக்கச் சொன்னால் - அவர்கள் எதிர்க் கட்சிப் பிரபலங்களின் பெயர்களை வை(த்)தாலும்! - வைப்பார்கள் ;-)
இந்த சந்தேகத்தை, என்னைத் தவிர பல எருமை மாடுகளை - சிறு வயது முதலே வளர்த்து / மேய்த்து வந்த என் மனைவியிடம் கேட்டேன். அவள் கூறியது - வேடிக்கையாக இருந்தது. அவர்கள் வீட்டில் இருந்த எல்லா கறவை மாடுகளுக்கும் "காமாட்சி" என்று பெயராம்; கறவை மாடுகளின் கணவன் அல்லது மகன்கள் எல்லோருக்கும் "வெங்கட்டா" என்று பெயராம்!
கமல்ஹாசன் படம் ஒன்றில் நாய்க்குப் பெயர் சுப்பிரமணி - என்று வந்ததால் - வெறுப்படைந்த அந்த பெயர் கொண்டவரின் பிள்ளைச் செல்வங்கள் - பழிக்குப் பழியாக - அவர் வீட்டு நாய்க்கு என்ன பெயர் வைத்தார்கள் என்று நான் இங்கே எழுதப் போவதில்லை!

1.9.09

குழந்தைகள் படும் பாடு

உங்களில் எத்தனை பேர் சூப்பர் சிங்கர் ரசிகர்களோ எனக்குத் தெரியாது. நானும் தொடர்ந்து பார்க்காத ஆள்தான். எப்போதோ ஒருமுறை பார்த்த போது ஏற்பட்ட உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள ஆசை.
சின்னப் பையன்களுக்கு பாரதியார் முண்டாசு, பொய் மீசை, கலர் ஜிப்பா, பஞ்சகச்சம் (ரெடி மேட) என்று கண்ணை உறுத்தும் கலர்களில் உடை. சின்னப் பெண்கள் பற்றியோ சொல்லவே வேண்டாம். நூடுல்ஸ் அல்லது strapless வெள்ளை கவுன் ஓவராக மேக் அப என்று ஒரு மினி த்ரிஷா மாதிரி தயார் செய்து கொண்டு வருகிறார்கள்.
இந்த மழலைப் பட்டாளம் பாட எடுத்துக் கொள்ளும் அயிட்டங்கள் சில சமயம் திடுக்கிட வைக்கும்.  அது என்ன மாதிரி செலக் ஷன்    என்று நான் சொல்ல வேண்டாம் நீங்களே ஊகித்துக் கொள்ளலாம். 
ஜெயித்துவிட்ட பாடகர் ஐஸ்வர்யா ராய் பிரசித்தி படுத்திய பாணியில் கண்ணீர் ததும்ப திகைக்க வேண்டும். ஆண் பிள்ளைகள் துள்ளித்துள்ளிக் குதிக்க வேண்டும்.  யா என்று பலமாகக் கூவினால் சிலாக்கியம். 
தோற்றுப் போனால் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு வெல்லம் சாப்பிட்ட மாதிரி. அழும் போட்டியாளர், கலங்கும் அப்பா அல்லது அம்மா, இவர்களை சோகமான இசைப் பின்னணியோடு அசைந்தாடுவதாகக் காட்டலாம். 
யாரும் சோகம் காட்டவில்லை என்றால் நடுவர்களை விட்டு அவர்களை சீண்டி அழ வைக்க முயற்சிக்கலாம்.  முடியாத பட்சத்தில் நடுவர்களே கோபித்துக் கொண்டு வெளி நடப்புச் செய்யலாம். எப்படியோ காண்பவர்களை கட்டிப் போட வேண்டும் என்பது தான் முக்கியம்.
காதல் விரகம் தொனிக்கும் பாடல்களில் feel இல்லை என்று நடுவர்கள் கமன்ட் சொல்லலாம்.
இதெல்லாம் யார் சொல்லியும் நிற்கப் போவதில்லை. என்றாலும் வயிற்றெரிச்சல் சொன்னாலாவது சற்று தீவிரம் குறையலாம் என்ற எண்ணத்தில் கொட்டி இருக்கிறேன்.