- இன்றைய செய்தித் தாளை மேய்ந்து கொண்டிருந்த போது படித்த இரண்டு விஷயங்கள் கவனத்தைக் கவர்ந்தன. முதலாவது, மேட்டூரில் மாநகராட்சி சரியாக குடி நீர் சப்ளை வழங்கவில்லை என்று கோபப் பட்ட மக்கள் போராடிய பிறகு ஊழியர்கள் அடைப்பு ஏதாவது இருக்கிறதா என்று ஆராய்ந்த போது, புங்கன் மரம் குடிநீர் சப்ளை செய்யும் குழாயில் நேரடியாகப் புகுந்து நீரை உறிஞ்சியதைக்.கண்டு பிடித்தார்களாம்.. பின்னர் அந்தப் பன்னிரண்டு அடி வேரை வெட்டி எடுத்தார்களாம்.
- இரண்டு, ஓசோன் லேயரில் ஓட்டை. அதனால் புவி வெப்பம்...துருவப்ரதேசங்கள் உருகி நீர் மட்டங்கள் உயர்ந்து நிலப் பரப்பு சுருங்கி, மொத்தத்தில் புவி வெப்பமாகி.....என்று போகும் ஒரு விழிப்புணர்வுக் கட்டுரை. இதைப் பற்றி நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் முன்வைத்த கருத்துக்கள் இங்கே....
- முதலாவது புங்கன் மர விஷயம்...
- எந்த மரத்தின் வேரும் ஈரப்பதம் உள்ள இடங்களை நோக்கி நீண்டு வளர்ந்து ஈரம் உறிஞ்சும் தன்மை கொண்டது. தகுந்த தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படாவிட்டால் தென்னை மரத்தின் வேர் நீண்டு பக்கத்து வீடுகளின் கிணறுகளை நாடுவதைப் பார்த்துள்ளோம். வேப்ப மரத்தின் வேர்கள் நம் கட்டிட அஸ்திவாரத்தையே ஆட்டிப் பார்ப்பதையும் பார்த்துள்ளோம். கோவில் கோபுரங்கள் மீது பறவைகள் சாப்பிட்டு எச்சமிட்ட பழ விதைகள் காரணமாக ஆல, அரச வேம்பு மரக் கிளைகள் வளரத் தொடங்கி விரிசல் விட்டிருப்பதையும் பார்த்திருக்கிறோம்.
- மரங்களின் இயல்பு அது. அந்தக் குழாய் எப்போதோ விரிசல் விட்டிருக்க வேண்டும். கவனிக்க வேண்டிய சம்பந்தப்பட்ட 'பொறுப்பான' நபர்கள் இதை கவனிக்காமலோ சோம்பேறித்தனத்தினாலோ விட்டிருக்க வேண்டும்.
- புங்கனுக்கு ஒரு பொதுக் குணம் உண்டு. நோய்த்தொற்றுக் கிருமிகளை எதிர்த்து அழித்து நோய்களிருந்து காக்க வல்லது அது என்று சொல்வார்கள். சிலபல வருடங்களுக்கு முன்னால் உடை அணியாக் குழந்தைகள் அரையில் புங்கைக்காய் தடுப்பு (மறைப்பு) அணிந்திருப்பதை பார்த்த ஞாபகம் இருக்கும்! இன்னொரு உபயோகமும் புங்கைக்கு உண்டு என்று சொல்வார்கள்...'பேய் விரட்டும்' சக்தி இந்த மரத்துக்கு உண்டு என்பதுதான் அது... எனவே,
- அந்த கிராம மக்கள் மீது கருணை கொண்ட இந்த மரம் நோய்களை தடுக்கவும், பேய்களை விரட்டவும் மக்கள் வீடுகளில் உள்ள தண்ணீரில் கலக்க முடிவு செய்து இந்த வழியை தேர்ந்தெடுத்திருக்கலாம்....!
- இரண்டாவது, ஓசோன் மேட்டர்.
- ஓசோன் லேயர் ஓட்டை ஏன் உஷ்ணப் பிரதேசங்களை விட்டு விட்டு துருவங்களில் மட்டும் விழுகிறது? பூமியின் காந்த புலன்களுக்கும் அதற்கும் ஏதும் தொடர்பு உண்டா?
- துருவங்களில் உறைபனி என்பது பூமியுடன் புதைந்து வேரூன்றி உள்ளதா அல்லது மிதக்கிறதா?
- ஏன் இந்தக் கேள்வி என்று புரிகிறதா? மண்ணில் ஆழ்ந்துள்ளதோ, மிதக்கிறதோ, அதனது கன பரிமாணம், எடை ஆகியவை ஏற்கெனவே கடல் நீரில் ஏற்கப் பட்டுள்ளது. எனவே அது உருகிய பிறகு அது பரவ அதிகப் படியான இடம் தேவை இல்லை.
- அது மண்ணில் ஆழ்ந்துள்ளதாக கொள்வோம். அதனது கன பரிமாணம் காரணமாக ஏற்கெனவே கடல் நீர் கரையை மீறி வழிந்திருக்கும். சுற்று சூழ் ஆர்வலர்கள் முன்மொழிவது போல காலநிலை மாற்றத்தால்தான் அது நடக்கும் என்பது சரி அல்ல. மக்களுக்கு பழைய ஞாபகங்கள் இருக்குமானால் கடற்கரைகளில் கடந்த பல வருடங்களில் நிகழ்ந்து கொண்டிருந்த மாற்றங்களை கவனித்திருப்பார்கள். (திருவல்லிக்கேணி, ராமேஸ்வர வாசிகள் இந்த விஷயத்தில் இன்னும் நிறையப் பேச முடியும்..)
- இதை எளிதாகக் கணிக்க ஒரு கண்ணாடி குவளையை எடுத்துக் கொள்வோம். குளிர் சாதனப் பெட்டியிலிருந்து ஐஸ் கட்டிகள் எடுத்து அந்தக் குவளையில் இட்டு அதை ஒரு குச்சியால் அதை அடியிலேயே பிடித்துக் கொள்வோம். தண்ணீர் அளவை அப்போதும் ஐஸ் கரைந்த பிறகும் கவனித்துப் பார்ப்போம்
- ஆதி காலத்தில் பூமியில் நிலப் பரப்பு இப்போது இருப்பதை விட அதிகமாக இருந்து படிப்படியாகக் குறைந்து கொண்டே வருவதை கணக்கீடுகளில் அறிகிறோம். இந்த சுருங்குதலினால் பூமிக்கடியில் உள்ள 'டெக்டானிக்' தட்டுகள் இடம் மாறுவதில் ஏற்படும் அழுத்தத்தில் எரிமலைகள் தோன்றுகின்றன.
- பல்வேறு தாதுக்களை தோண்டி எடுத்து உலோகங்களை பூமியில் பயன்படுத்தும் போது அதன் ஆக்சைடுகள் அதிகமாகி பூமியில் புதைக்கப் படும்போது நிலப் பரப்பு இன்னும் அதிகமாகும் சாத்தியக் கூறுதான் அதிகம்..
- உலகம் அழிகிறது என்று வைத்துக் கொள்வோம்...எந்தெந்த காரணங்களினால் அழியக் கூடிய சாத்தியங்கள்...?
- ஒரு மகாப் பிரளயம் வந்தால் அழியும் என்றால் மேற்சொன்ன காரணங்களினால் பூமி முழுகும் சாத்தியம் குறைகிறது.
- வெப்பம் அதிகமாகும்போது காற்றில் ஈரப்பதம் உறிஞ்சப்படும் என்றால் அதிகமாகும் வெப்பத்தின் காரணமாக கடல் நீரும் ஆவியாக உறிஞ்சப் படத்தானே வேண்டும்? அப்போது அதன் அளவும் குறையுமே...
- சுற்றிக் கொண்டிருக்கும் பூமி நிற்க வேண்டும் என்றால்.........
- கட்டிடங்களையும் மனிதர்கள், மற்றும் உயிரினங்களையும் பூமி விழுங்க வேண்டும் என்றால்.....!
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
7.12.09
பூமியில் தென்றல் பொன்னாடை போடுது...
கணவன் அலைவதெல்லாம்......!
நண்பி ஜெயகுமாரி சீனாவிலிருந்து அனுப்பிய 'முன்னேற்றப்பட்ட' (அதுதாங்க...Forwarded..!) மின்னஞ்சலில் இருந்தவற்றைக் கீழே தந்திருக்கிறேன். இதெல்லாம் வெளி நாட்டில்தாங்க....நம்ம ஊர்ல எல்லாம் இப்படி யாரும் சொல்ல மாட்டாங்க... ! நீங்களும் படித்திருக்கலாம்...இல்லன்னா இங்கே...இவை நகைச்சுவைக்காக மட்டும்...! (காசு சோபனா)
- உங்கள் கணவனை ஒருவன் கடத்தி விட்டால் அவரை அவனிடமே விட்டு விடுவதுதான் உங்க சேமிப்புப் பணத்தை பாதுகாக்க சிறந்த வழி!
- திருமணத்திற்குப் பிறகு கணவனும் மனைவியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகி விடுகின்றனர். ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியாது. நாணயத்தின் இரண்டு பக்கங்கள்: மனைவி பக்கம் பூ; கணவன் பக்கம் (வழுக்கைத்) தலை!
- திருமணம் செய்துகொள்வதில் தவறில்லை. நல்ல கணவன் கிடைத்தால் நீ சந்தோஷமாக இருக்கலாம். இல்லை என்றால் வேறொருத்தியை சோகத்தில் விழாமல் மீட்டுவிட்டோம் என்று சந்தோஷப்படலாம்!
- ஆண்கள்..... பெரிய விஷயங்களுக்கு நம்மை ஈர்த்தாலும் சின்ன, அல்ப விஷயங்களில் தடுக்கி விழுபவர்களும் அவர்கள்தான்..!
- என்னால் பதிலளிக்க முடியாத பெரிய கேள்வி..."ஒரு ஆண், பெண் உதவி இல்லாமல் எதை சாதித்திருக்கிறான்?"
- வார்த்தைகளில் கேட்டால், பாராக்களில் பதில் சொல்வான் கணவன், மனைவி தவிர மற்றப் பெண்களுக்கு!
- நீண்ட வருடங்களாய் பிரியாமல் இருக்கும் ரகசியம் கேட்கிறார்கள்....வாரத்துக்கு இருமுறை நானும் கணவனும், வெளியில் எங்காவது ஹோட்டலில் சென்று சாப்பிடுகிறோம்....மெழுகுவர்த்தி வெளிச்சம், ரம்மியமான இசை, மெல்லிய பேச்சுக்கள்....அவர் சனிக்கிழமைகளில் போவார் ...நான் ஞாயிறுகளில், என் நண்பர்களுடன்!
- நம் கணக்கில் உள்ள பணத்தை e banking ஐ விட வேகமாக அவர் கணக்குக்கு Transfer செய்யும் முறைக்குத் திருமணம் என்று பெயர்!
- திருமணத்தில் இரண்டுமுறையும் தோற்றவள் நான். காதலரைத் திருமணம் செய்துகொண்டவுடன் கணவனாகிவிட்டதால் காதலனை இழந்தேன். கணவனுக்கு காதலனாக இருந்த நாட்கள் நிரந்தரமாக மறந்துபோய்விட்டது அதனால் என் வாழ்க்கையில் இரண்டாவது தோல்வி!
- திருமண வாழ்வு வெற்றி பெற இரண்டு யோசனைகள்....1) கணவர் தவறு செய்யும் ஒவ்வொரு முறையும் உங்கள் கடந்த காலத் தவறுகளை ஒவ்வொன்றாக நீங்களே மன்னித்துக்கொள்ளுங்கள்; 2) உங்கள் பக்கம் நியாயம் இருக்கும்போது நிறைய வரம் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்!
- உங்கள் கணவரின் பிறந்த நாளை நினைவு வைத்துக் கொள்ள ஒரு வழி ....... வழி என்ன! ஒரு காரணம் கூட கிடையாது!
- திருமணத்திற்கு முன் நான் என்ன செய்து கொண்டிருந்தேன் தெரியுமா? நான் நினைத்ததை எல்லாம்...!, என் கணவர் நினைக்காததை எல்லாம்!
- நானும் என் கணவரும் இருபத்திரண்டு வருடங்கள் சந்தோஷமாக இருந்தோம்....பிறகு நாங்கள் மணந்துகொண்டோம்!
- ஒரு நல்ல கணவன் என்பவர் எப்போதுமே அவர் மனைவியை மன்னித்து விடவேண்டும் ....அவள் அவரைத் திருத்தி மனிதனாகச் செய்யும்போதும் ....
- தினசரியில் நல்ல கணவன் வேண்டும் என்பதற்காக விளம்பரம் செய்தவள் மறுநாளே சில நூறு கடிதங்கள் வரப் பெற்றாள் ...எல்லாவற்றிலும் ஒரே வரி..."அப்படி நிஜமாகவே ஏதானும் இருந்தால் எங்களுக்கும் சொல்லு"
- அவள்: "என் கணவன் பக்கா ஜென்டில்மேன் ...ரொம்ப அடக்கமானவர்" இவள்: "நீ கொடுத்து வைத்தவள் ...என் கணவன் இன்னும் உயிருடன் இருக்கிறார்."
- (ஆஹா பழிக்குப் பழி! ஸ்ரீராம் - இப்ப என்ன செய்வீங்க, இப்ப என்ன செய்வீங்க!)
6.12.09
5.12.09
மனைவி அமைவதெல்லாம்...
நண்பர் மணிக்குமார் பூனாவிலிருந்து அனுப்பிய 'முன்னேற்றப்பட்ட' (அதுதாங்க...Forwarded..!) மின்னஞ்சலில் இருந்தவற்றைக் கீழே தந்திருக்கிறேன். இதெல்லாம் வெளி நாட்டில்தாங்க....நம்ம ஊர்ல எல்லாம் இப்படி யாரும் சொல்ல மாட்டாங்க... ! நீங்களும் படித்திருக்கலாம்...இல்லன்னா இங்கே...
இவை நகைச்சுவைக்காக மட்டும்...!
- உங்கள் மனைவியை ஒருவன் கடத்தி விட்டால் அவளை அவனிடமே விட்டு விடுவதுதான் அவனைப் பழிவாங்குவதற்கு சிறந்த வழி!
- திருமணத்திற்குப் பிறகு கணவனும் மனைவியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகி விடுகின்றனர். ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியாது...ஆனால் சேர்ந்துதான் வாழ்கிறார்கள்!
- திருமணம் செய்துகொள்வதில் தவறில்லை. நல்ல மனைவி கிடைத்தால் நீ சந்தோஷமாக இருக்கலாம். இல்லை என்றால் தத்துவ வாதி ஆகி விடலாம்!
- பெண்கள்..... பெரிய விஷயங்களுக்கு நம்மை ஈர்த்தாலும் அதை சாதிக்க விடாமல் தடுப்பவர்களும் அவர்கள்தான்..!
- என்னால் பதிலளிக்க முடியாத பெரிய கேள்வி..."ஒரு பெண் எதை விரும்புகிறாள்?"
- வார்த்தைகளில் பேசினால் பாராக்களில் பதில் சொல்வாள் மனைவி..!
- நீண்ட வருடங்களாய் பிரியாமல் இருக்கும் ரகசியம் கேட்கிறார்கள்....வாரத்துக்கு இருமுறை நானும் மனைவியும் வெளியில் எங்காவது ஹோட்டலில் சென்று சாப்பிடுகிறோம்....மெழுகுவர்த்தி வெளிச்சம், ரம்மியமான இசை, மெல்லிய பேச்சுக்கள்....அவள் சனிக்கிழமைகளில் போவாள்...நான் ஞாயிறுகளில்...!
- நம் கணக்கில் உள்ள பணத்தை e banking ஐ விட வேகமாக Transfer செய்யும் முறைக்குத் திருமணம் என்று பெயர்!
- திருமணத்தில் இரண்டுமுறையும் தோற்றவன் நான். ஒருத்தி என்னை விட்டு விட்டு சென்று விட்டாள்...இன்னொருத்தி போக மாட்டேன் என்கிறாள்..!
- திருமண வாழ்வு வெற்றி பெற இரண்டு யோசனைகள்....1) நீங்கள் தவறு செய்யும்போது ஒத்துக் கொண்டு விடுங்கள். 2) உங்கள் பக்கம் நியாயம் இருக்கும்போது மெளனமாக இருந்து விடுங்கள்!
- உங்கள் மனைவியின் பிறந்த நாளை நினைவு வைத்துக் கொள்ள ஒரு வழி அதை மறந்து விடுவதுதான்...
- திருமணத்திற்கு முன் நான் என்ன செய்து கொண்டிருந்தேன் தெரியுமா? நான் நினைத்ததை எல்லாம்...!
- நானும் என் மனைவியும் இருபத்திரண்டு வருடங்கள் சந்தோஷமாக இருந்தோம்....பிறகு நாங்கள் சந்தித்தோம்!
- ஒரு நல்ல மனைவி என்பவள் எப்போதுமே அவள் கணவனை மன்னித்து விடுவாள்....அவள் தவறு செய்யும்போது...
- தினசரியில் மனைவி வேண்டும் என்பதற்காக விளம்பரம் செய்தவன் மறுநாளே சில நூறு கடிதங்கள் வரப் பெற்றான்...எல்லாவற்றிலும் ஒரே வரி..."என்னுடையதை எடுத்துக் கொள்"
- அவன் : "என் மனைவி தேவதை..." இவன் : "நீ கொடுத்து வைத்தவன்...என் மனைவி இன்னும் உயிருடன் இருக்கிறாள்..."
4.12.09
இசையில் மயங்கியே, துன்புறும் அனானியே !
மார்கழி என்றாலே - அதிகாலை வேளையில், எங்கள் ஊர் சட்டையப்பர் கோவில் ராமமடத்தில் கை தாளம் போட்டு, குழுவினரோடு பஜனைப் பாடல்கள் பாடியது ஞாபகம் வருது. அட, அவ்வளவு ஞானமா என்று அதிசயிக்காதீர்கள் - 'கூட்டத்துல கோவிந்தா ' தான் போடுவேன்! ஒரு குறிப்பிட்ட பாடல் வரும்பொழுது ஆர்வம் அதிகமாகும். (பொங்கல் வரும் நேரம் இது....!) பெரும் குரலில் பாடி, பிறகு, வைத்தா கையால் சுடச் சுட ஓருருண்டை பொங்கல் பெற்று, வலது உள்ளங்கையைச் சுட்டுக்கொண்டு, அந்த சூடான உருண்டையை, இடது கைக்கு மாற்றி, இடது உள்ளங்கையையும் சுட்டுக்கொண்டு, பிறகு நேரே வாய்க்குள் போட்டு, நாவையும் சுட்டுக்கொண்ட, சூடான, சுவையான நாட்கள் ஞாபகம் வருகின்றன.
நாகையிலிருந்து சென்னை வந்ததும், மார்கழி அனுபவம் வேறுவிதம் ஆகிவிட்டது. புரசை வாழ் ரிக்ஷாக்கார அண்ணாச்சிகள் - அய்யப்ப பூஜை / பஜனைப் பாடல்கள் உரத்த குரலில் காலையில் பாட ஆரம்பிப்பார்கள். அவர்கள் சரணம் சொல்லுவது கேட்க வித்தியாசமாக இருக்கும். ஆனால் என்ன, அவர்களின் பாடல்களைக் கேட்கலாம், பார்க்கக்கூடாது! ஏன்? ஒரு நாள் அலுவலகப் பேருந்து வருவதற்கு கொஞ்சம் முன்னதாகவே வீட்டைவிட்டுக் கிளம்பிவிட்டேன். எனவே சென்னை மார்கழி எப்படியிருக்கிறது என்று கொஞ்சம் அருகிலே சென்று விசாரித்து வரலாம் என்று - பஜனைப் பாட்டு ஆரிஜின் பார்த்து நடந்தேன். அங்கே போய்ப் பார்த்தால், 'கடவுளே, கடவுளே,' என்று திரும்பத் திரும்பச் சொல்லவேண்டிய நிலைமை - ஒரு சாமி ஃபுல் இன்ப்லூயன்சில், 'சாமியே ஏஏஎ ......ய' என்று இழுக்க - அவருக்கு முன்னே மூன்று பீடிப் புகை சாமிகள், 'சரணம் ஐயப்ப' என்று சுருக்கமாக அவரைக் கட் செய்து சொல்லிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஒரு மைக் செட், லவுட் ஸ்பீக்கர்! ஒரே ஒரு ஆரஞ்சுக் கலர் வேட்டி சாமி மட்டும் - அங்கே ஒரு ஐயப்பன் படத்திற்கு மலர் அலங்காரம் செய்துகொண்டிருந்தார்.
மார்கழியில் நம்ப ஊருல இருந்திருந்தா எப்பிடி இருந்திருக்கும் என்று ஒரு சோகம் மனதைக் கவ்விற்று. அப்போ ஊரிலேருந்து வந்த என் அப்பா, 'என்னடா இவ்வளவு அசடாப் போயிட்டியே, இந்த மார்கழி சீசன்லே மெட்ராஸ்ல இருக்கறத்துக்குக் கொடுத்து வெச்சிருக்கணும்.' என்றார். 'என்ன விஷயம் அப்பா?' என்று கேட்டேன். நீ இன்றைக்குச் சாயந்திரம் - ஆபீஸ்லேயிருந்து வரும்பொழுது, நேரே நுங்கம்பாக்கம் சித்தப்பா வீட்டுக்கு வந்துடு; நானும் என் தம்பி சேஷுவும், உன்னை மியூசிக் அகாடமிக்குக் கூப்பிட்டுக்கொண்டு போகிறோம் என்றார். மறுநாள் கிருஸ்துமஸ் லீவு, எனவே அன்று கம்பெனியில் ஒன்னரை மணிக்கே 'வீட்டுக்கு பெல்' அடிச்சுட்டாங்க. நுங்கம்பாக்கம் போயிட்டு, அப்பாவுடனும், சித்தப்பாவுடனும், அகாடமி அறிமுகம் செய்துகொண்டேன். கச்சேரிகள், கேண்டீன் இரண்டுமே சூப்பராக இருந்தது. சித்தப்பா நாங்க மாலையில் திரும்பி வரும்பொழுது, நடந்தே வரும்படிக் கூறி, மயிலாப்பூரைச் சுற்றிக் காட்டினார் - அங்கே மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் அருகே, ஒரு வீட்டு அருகே சென்று வீட்டு வாசலில் இருக்கும் பெயர்ப்பலகையைப் படிக்கச் சொன்னார். படித்தேன், மதுரை மணி ஐயர். பிறகு நுங்கம்பாக்கம் ஹைரோடில் (கதீட்ரல் சாலை?)- ஒரு வீட்டு வாசலில் இருந்த பெயர்ப் பலகையை - கணேசன் என்று படித்தேன். ஜெமினி கணேசன் என்றார் சித்தப்பா. அடுத்த ஆண்டு(2010), அந்த சேஷு சித்தப்பாவின் நூற்றாண்டு.
அப்போ சித்தப்பா அறிமுகம் செஞ்சி வெச்ச அகாடமியை, அந்த நாள் தொடங்கி, ஒவ்வொரு சீசனுக்கும், தொடர்ந்து - சீசனில் ஒரு நாளைக்காவது, சென்று தரிசித்து, அங்கு உள்ள வித்வான் படங்களை, நான் / என் உறவினர்கள் பிறந்த ஆண்டில் யார் சங்கீத கலாநிதி விருது பெற்றவர், என்றெல்லாம் சிந்தித்தபடி பார்த்து, அங்குள்ள ஸ்டால்களை ஆசைதீரப் பார்வையிடுவேன். (பார்வை ஒன்றே போதுமே, பர்சை தொட மாட்டேனே!) பகல் நேரக் கச்சேரிகளை (அதாவது பதினைந்து, மூன்று கச்சேரிகளை - ஆமாமுங்க - ஒ சி ) கேட்டு, மூன்றாம் பாட்டில், சீட்டில் தூங்கி, ஐந்தாம் பாட்டில் எழுந்து - அடுத்த சீட்டில் உள்ள அண்ணன் ராமனை, பாகவதர் பாடுவது என்ன ராகம் என்று கேட்டால், அவர் உறக்கத்திலிருந்து கண் விழித்து, பசுபதிப்ரியா என்று சொல்லி மீண்டும் கண் அயருவார்.
அப்பா, சித்தப்பா காலம் எல்லாம் போயிடிச்சு. இப்போ அவர்களுடைய பையன்கள் சிலர்தான் விடாப்பிடியாக சென்னை இசைவிழாக் கச்சேரிகள் நேரில் சென்று, கேட்டு வருகிறோம். (தியாகு - இந்த சீசனுக்கு எனக்கும் சேர்த்து ஓ சி பாஸ் கெடச்சுடும்தானே?) அடுத்த தலைமுறைக்கு, இந்த அளவுக்கு, அதாவது சபாக்கள் தேடிப்போய் கேட்கும் அளவுக்கு, இசையில் ஆர்வம் இருக்குமா என்று இன்னும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. (விதிவிலக்குகள் உண்டு - பிரம்பை எடுத்துக்கொண்டு பின்னூட்டமிட வராதீர்கள் - சு, ச போன்றோர்)
3.12.09
நாமிருக்கும் நாடு .. நம'தொன்பது' அறிவோம்!
இதைப் பெருமை என்றும் எண்ணிக் கொள்ளலாம். ஆனால் இந்தியா போன்ற சாத்வீகமான நாட்டுக்கு இது, நிச்சயம் தொப்பியில் மேலும் ஒரு இறகுதான்.
1) இந்தியா எந்த ஒரு நாட்டையும் ஆக்ரமிக்க முயற்சித்ததே இல்லை என்பது இந்தியாவின் பெருமையாக சொல்லப் பட்டுள்ளது.ஆனால் இதை பெருமையாக நிச்சயம் சொல்லலாம்.
2) பூஜ்யம்,செஸ், அல்ஜீப்ரா, கால்குலஸ், முதலானவை இந்தியாவிலிருந்தே வந்தன.

அப்புறம், இது எல்லோருக்கும் தெரிஞ்சதுதான்! ஆனாலும் இங்க இன்னொருதரம் சொல்றதுல தப்பில்ல!
3) உலகிஇது எல்லாம் இந்தியா பத்தி பொது விவரங்க தெரிஞ்சதுதான்; எங்க அம்மா ரொம்ப நல்லவங்கன்னு திருப்பித் திருப்பி சொல்றது இல்லையா? இந்தப் பேரைக் காப்பாத்திக்க நம்ம பிரதமர், ஜனாதிபதி எல்லாம் ரொம்பப் பாடு படறாங்க..."ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க.." மாதிரி.
4) உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு. உலகின் ஆறாவது பெரிய நாடு. மிகப் பழமை வாய்ந்த நாகரீகங்களில் ஒன்று.
சரியா வேலை பார்க்கறாங்களா, ரயில்கள் தாமதமின்றி நேரங்களைக் கடைப் பிடிக்கின்றதா'ன்னுல்லாம் 'அ'னா 'பி'னா கேள்விகள் கேட்காம இதைப் படிச்சா பெருமைதான்.
5) உலகின் மிகப்பெரிய Employer Indian Railways. ஒரு மில்லியனுக்கு மேல் வேலை பார்க்கிறார்கள்.
இப்போ இங்க வேற எதுனாச்சும் விக்கலாமான்னு யோசிக்கிறாங்க- மதிப்பிழந்து போச்சே..ஆனாலும்...
6) உலகிலேயே அதிக தபால் நிலையங்கள் உள்ள நாடு.
ம..ஹூம்...பணம் வாங்கி வாங்கி போட்டுக்கறோமே அந்தப் பை இல்லீங்க! இது வேற....,
7) இந்தியாவின் புதாயனா ஆறாம் நூற்றாண்டிலேயே "Pi" யின் மதிப்பீட்டைக் கண்டறிந்தார். ('பை'யின் தொடரும் எண்கள் - இன்றும் தொடர்கின்றன - முடிவில்லாமல்)
ஏதாவது சொன்னா பெருமாள் கோச்சுக்குவார். ஆனா அவர் என்ன பண்ணுவார், மனுஷங்கதானே அங்கயும் நம்மளை 'உச்சு' கொட்ட வைக்கறது...
8) பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட திருப்பதி கோவில் உலகின் மிகப் பெரிய புண்ணியஸ்தலமாக அறியப்படுகிறது. வேறெந்தப் புண்ணிய ஸ்தலங்களையும் விடப் பெரியது!
நல்லதொரு நாடு - நடமாடாத பல்கலைக்கழகம்!
9) கி மு 700 இல் தக்ஷிலாவில் கட்டப்பட்டது உலகின் முதல் பல்கலைக் கழகம். 10,500 மாணவர்களுடன் 60 பாட வகைகளில் பாடங்கள் எடுக்கப்பட்டன. உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் மாணவர்கள் கல்வி கற்க வந்தனர்.
நாலாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நாலந்தா பல்கலைக்கழகம் பழங்கால இந்தியாவின் கல்விச் சாதனைகளில் ஒன்று.
9) கி மு 700 இல் தக்ஷிலாவில் கட்டப்பட்டது உலகின் முதல் பல்கலைக் கழகம். 10,500 மாணவர்களுடன் 60 பாட வகைகளில் பாடங்கள் எடுக்கப்பட்டன. உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் மாணவர்கள் கல்வி கற்க வந்தனர்.
நாலாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நாலந்தா பல்கலைக்கழகம் பழங்கால இந்தியாவின் கல்விச் சாதனைகளில் ஒன்று.
1.12.09
டெண்டுக் கொட்டாயும் காந்தி படமும்...!
மாயாஜால் ஐநாக்ஸ் என்று புதுப் புது வசதிகளுடன் இப்போது சினிமாத் தியேட்டர்கள்...இப்போதெல்லாம் தியேட்டரில் படுக்கை வசதி கூட உண்டாம்...துக்ளக்கில் அபிராமி ராமநாதன் சொல்லி இருக்கிறார்.
ஆரம்பக் காலங்களில் சாதாரண சினிமாத் தியேட்டர்களுடன் டூரிங் டாக்கீஸ் உண்டு. அப்போதெல்லாம் அங்குதான் படம் நிறையப் பார்ப்பது வழக்கம் குறைந்த கட்டணங்கள்...அது மாதிரி ஒன்று தஞ்சாவூரில் ராஜேந்திரா என்று இருந்தது. ஞானம், யாகப்பா, ராஜா கலை அரங்கம் போன்ற திரை அரங்குகளில் டிக்கெட் விலை மூன்று ரூபாய், நான்கு ரூபாய் இருந்தால் இங்கு ஒரு ரூபாய்க்கு முதல் வகுப்பே கிடைக்கும். அதைவிட முப்பத்தைந்து பைசாவுக்கு தரை டிக்கெட். தரை என்பது மணல். முதல் வகுப்பை விட மணல் தரை டிக்கெட்தான் எங்களுக்கு விருப்பம்.
ஐந்தரை மணி சுமாருக்கு ஒலி பெருக்கியில் பாடல்கள் போடத் தொடங்குவார்கள். மெடிக்கல் காலேஜ் மெய்ன் ரோடில் தியேட்டர். உள்ளே குடியிருப்பு வரையும் ஹாஸ்டல் வரையும் பாடல்கள் கேட்கும். (மெடிக்கல் காலேஜ் ஆண்கள் ஹாஸ்டல் பெயர் பாரடைஸ்..! ) மக்கள் 'கொட்டாய்' ஞாபகம் வந்து உஷாராகி வேலைகளை வேகமாக முடிக்கத் தொடங்குவார்கள். "முருகா என்றழைக்கவா" பாடல் தொடங்கி விட்டது என்றால் டிக்கெட் தரத் தொடங்கி விட்டார்கள் என்று அர்த்தம். மக்கள் ஓட்டமும் நடையுமாக 'கொட்டாய்'யை நெருங்குவார்கள். இடைவேளைகளில் ரங்கராட்டினம், சபதம் போன்ற புத்தம்புதிய படங்களிருந்து பாட்டுப் போடுவார்கள்..!
மணலில் லேசாகக் குழி பறித்து, ஓரமாக மேடாக்கி அதில் அமர்ந்து அல்லது சாய்ந்து மாட்டுக்கார வேலன், இரு துருவம் என்று பார்த்த படங்கள் நினைவுக்கு வருகின்றன. 'பெரிய' தியேட்டர்களுக்கும் டூரிங் கொட்டாயக்கும் வித்யாசம் காட்சி நேரம்தான். 'பெரிய' தியேட்டர்களில் மதியம் இரண்டு மணிக்கு மேட்னி காட்சி உண்டு. இங்கு வெளிச்சம் காரணமாக அது கிடையாது. மற்றபடி ஆறு மணிக்கு முதல் காட்சி, பத்து அல்லது பதினொரு மணிக்கு இரண்டாம் ஆட்டம் எல்லாம் பொது. சில 'பெரிய' தியேட்டர்களில் காலை பத்து மணிக் காட்சி உண்டு...அது பெரும்பாலும் ஆங்கிலப் படங்களாக இருக்கும். அதுவும் பெரும்பாலும் லாரல் ஹார்டி படங்களாக இருக்கும். இது கூட அப்போது புதிதாக ஆரம்பித்த அருள் தியேட்டர் காரர்கள் தொடங்கி வைத்ததாக ஞாபகம்...! உடனடி ரிலீஸ் படங்களை ராஜா கலை அரங்கம் கிருஷ்ணா போன்ற திரை அரங்குகளில் பார்த்து விட்டு வரும்போது வழிநெடுகும் டீக் கடைகளில் அந்த படப் பாடல் ரெகார்ட்களைப் போட்டு இன்புறுவார்கள்!
பிறகு மதுரை வந்தவுடன் கல்லூரி நாட்களில் வெவ்வேறு தியேட்டர்களில் படம் பார்த்தது உண்டு...சினிப்ரியா பின்னர் மினிப்ரியா, சுகப்பிரியா என்று கூட சேர்த்துக் கொண்டது. அமிதாப் படங்கள் அங்கும் தங்கம் தியேட்டரிலும் பார்த்ததுண்டு..ஆசியாவின் மிகப் பெரிய தியேட்டர் தங்கம். அது ஹவுஸ் புல் ஆகும்! 007 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் தி ஸ்பை ஹூ லவ்ட் மீ, பார் யுவர் ஐஸ் ஒன்லி போன்ற படங்கள் அங்கு...
காந்தி படம் வந்த புதிது...சினிப்ரியாவில் திரையிட்டார்கள். தேசபக்தியுடன் படம் பார்க்கக் கிளம்பினோம். பயங்கரமான கூட்டம். (நம்புங்கள்...நிஜம்) திருப்பதி க்யூ போல வளைந்து வளைந்து நீளமான பாதையில் சென்று டிக்கெட் வாங்க வேண்டும். உண்மையில் படம் பார்க்கக் கூட்டமா, அல்லது வாங்கி ப்ளாக்கில் விற்கக் கூட்டமா, அல்லது மினியிலும், சுகத்திலும் டிக்கெட் கிடைக்காதவர்கள் பொழுது போக்க வந்தார்களோ...அடிதடி. தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டத்தை சமாளிக்க (அடி)ஆட்களை நிறுத்தி இருந்தார்கள். கட்டுக்கடங்காமல் போன கூட்டத்தை சமாளிக்க அந்த ஆட்கள் திடீரென கையில் வைத்திருந்த உருண்டையான சவுக்குக் கட்டையால் நின்றவர்கள் காலில் விளாசத் தொடங்கினார்களே பார்க்க வேண்டும்...ஓரமாக நின்றிருந்த என் காலிலும் ஒரு அடி விழ, சமாளிக்க முடியாமல் உட்கார்ந்து விட்டேன். அந்த அஹிம்சாவாதியின் படத்தை அப்புறம் அந்தத் தியேட்டரில் அல்ல, எந்தத் தியேட்டரிலும் பார்க்கவில்லை. பின்னர் டிவியில் பார்த்ததுதான்.
இப்போது பதினைந்து வருடங்களாக தியேட்டர் பக்கமே போவதில்லை...திருட்டு VCD வருவதற்கு முன்பே பழக்கம் நின்று போய் விட்டது! சத்தம் ஒத்துக் கொள்வதில்லை, படம் பார்ப்பதில் சுவாரஸ்யமும் இல்லை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




