12.3.11

எ ப ப வி 01

        
எ ப ப வி - என்றால், எப்பவோ படிச்ச பயனுள்ள விஷயம்.

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, அண்ணனுடைய புத்தக அலமாரியை நோட்டம் விட்டு, ஒரு மெல்லிய புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.

அதிலிருந்த ஒரு இரண்டு பக்க விஷயம், என் நினைவில் அப்படியே (பச்சக் என்று?) ஒட்டிக்கொண்டது!

'தெய்வந்தன்னை நம்பி தினம் வணங்கினால், ஆ எவ்வித இன்னலையும் நாம் வென்றுவிட முடிந்திடுமாம், வெற்றி நிச்சயமே!'

இதில் என்ன இருக்கிறது என்று கேட்கின்றீர்களா? இது ஒரு mnemonic வாக்கியம். அதாவது வேறு ஒன்றை நினைவிற்கொள்ள ஏற்படுத்தப்பட்ட வாக்கியம்.

இந்தப் பன்னிரண்டு வார்த்தை வாக்கியத்தைக் கவனித்து , ஒவ்வொரு வார்த்தையிலும் எவ்வளவு எழுத்துகள் உள்ளன என்று எண்ணிப் பார்த்தால், 7  3    3   6    1   4    6    2    5    7    3      5    என்ற எண்களை நினைவிற்குக் கொண்டு வரலாம். இவை ஜனவரி தொடங்கி டிசம்பர் வரை, ஒவ்வொரு மாதத்திற்கும், அந்த மாதத்திற்குரிய எண்.

இந்த எண்களால் என்ன பயன்?
     
இவைகளை வைத்துக்கொண்டு, எந்த வருடம், எந்த மாதம், எந்த தேதிக்கும் கிழமை கண்டு பிடிக்கலாம்.  
      
எப்படி?
உதாரணத்திற்கு ஆகஸ்ட் பதினைந்து, 1947 என்ன கிழமை என்று கண்டுபிடிப்போம்.

a) முதலில் வருடத்தை எழுதிக்கொள்ளுங்கள் :    1947

b) பிறகு, வருடத்தை நான்கால் வகுத்து வருகின்ற ஈவுத் தொகை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். மீதியை மறந்துவிடுங்கள். 1947/4 = 486.75 = 486.

c) பிறகு தேதி = 15.

d) அடுத்தது மேலே கூறியுள்ள ஃபார்முலா பார்த்து, ஆகஸ்ட் மாதத்திற்கான எண் பார்க்க வேண்டும். 7 3 3 6 1 4 6 2 5 7 3 5 - இதில் எட்டாவது எண் = 2.

அடுத்து, மேலே கண்டுள்ள a b c d நான்கு எண்களையும் கூட்டிக் கொள்ளுங்கள். அதாவது, 1947 + 486 + 15 + 2 = 2450.

அடுத்து, இந்த 2450 ஐ ஏழால் வகுக்க வேண்டும். மீதி வருகின்ற எண் எது என்று பார்த்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
    
2450 / 7 = 350, மீதி = 0.

மீதி 0 வந்தால் அன்று வெள்ளிக்கிழமை.
மீதி 1 வந்தால் அன்று சனிக்கிழமை.
மீதி 2 வந்தால் அன்று ஞாயிற்றுக்கிழமை.
மீதி 3 வந்தால் அன்று திங்கட்கிழமை
மீதி 4 வந்தால் அன்று செவ்வாய்க்கிழமை
மீதி 5 வந்தால் அன்று புதன்கிழமை
மீதி 6 வந்தால் அன்று வியாழக்கிழமை.

உதாரணம் எண் இரண்டு:

இன்றைய தேதி.  12-03-2011.
2011 + 502 + 12 + 3 (இது ஃபார்முலாவில் மார்ச் மாதத்திற்கான எண்) = 2528
2528/7= ஈவு 361, மீதி = 1. மீதி ஒன்று வருவதால் சனிக்கிழமை.

உங்கள் பிறந்த தேதி ஞாபகம் இருந்தால், என்ன கிழமை என்று கணக்கிட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

(பெப்ரவரி முப்பதாம் தேதிக்கு, ஏப்ரல் முப்பத்தொன்றாம் தேதிக்கெல்லாம் என்ன கிழமை என்று  கண்டு பிடிக்கின்ற அதிபுத்திசாலிகள்,  அதை அவர்களே பார்த்துப் பார்த்துப் பரவசமடையவும்!)
        
எப்பவோ படிச்ச பயனுள்ள விஷயம் ஏதாவது உங்களுக்கு ஞாபகம் இருந்தால், பின்னூட்டமாகப் பதியுங்கள்; அல்லது engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். நன்றி.

             

10.3.11

பெயர்க்காரணம்

Gopi Ramamoorthy said...

தொடர்ப்பதிவிட அழைத்துள்ளேன்


நாங்க கொஞ்சம் வலைப் பயணம் செய்து, சில பதிவுகளைப் படித்துப் பார்த்தோம். பெயர்க்காரணம் என்ற தலைப்பில் சிலர் அவர்களுடைய இயற்பெயர் காரணம் எழுதியிருந்தார்கள். சிலர் அவர்களுடைய வலைப்பூ பெயர்க்காரணத்தை எழுதி இருந்தார்கள்.

ஆசிரியர்கள் பெயர்க்காரணம் பற்றி எழுதலாமா என்று கேட்டவுடன் ஐந்தில் மூன்று ஆசிரியர்கள் வேண்டாம் என்று கூறிவிட்டார்கள்.  எங்கள் கூட்டணியின் பெரும்பான்மை முடிவிற்கேற்ப கூட்டணி தர்மத்தைக் கருத்திற்கொண்டு, நாங்க வலைப்பூ பெயர்க்கான காரணத்தையே எழுதிவிடலாம் என்று முடிவு செய்தோம்.

தரக் குழுக்கள் (Quality Circles) பற்றி பெரும்பாலான வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும். தெரிந்திருக்காவிட்டாலும், கூகிள் அடித்துப் பார்த்துத் தெரிந்து கொள்ளுகின்ற வாசகர்கள் எங்கள் ப்ளாக் ரசிகர் மன்றத்தில் அதிகம். வலை உலகில் நாங்கள் உருவாக்கிய தரக்குழு எங்கள் ஆசிரியர் குழு.
    
Team work என்பது எல்லா இடத்திலும் வெற்றி பெறுகின்ற சமாச்சாரம். தனிநபர் யத்தனங்களை விட ஒரு குழுவாக செயல் படுதல் பல வகைகளில் முன்னேற்றத்தை விரைவில் காண வழி வகுக்கும். இதை மனதில் கொண்டுதான், எங்கள் வலைப் பக்கத்திற்கு, எங்கள் Blog என்று பெயர் இட்டோம்.

ENGAL ஐந்தெழுத்து,
எங்கள் ஆசிரியர்கள் ஐவர்.
Engal Blog என்பதை சுருக்கமாக EB என்று சொன்னால் சந்தோசப் படுவார் ஓர் ஆசிரியர். Engal என்பதில் உள்ள Eng  என்ற எழுத்துக்களைப் பார்த்தே சந்தோசப் படுவார்கள் மேலும் இருவர். ENGAL என்பதில் உள்ள AL என்ற எழுத்துகளைப் பார்த்து சந்தோசப் படுவார் ஒருவர். இவர்கள் எல்லோரும் சந்தோசப் படுவதைப் பார்த்தே சந்தோசப் படுவார் மற்றொருவர்.  
      
ஒருவருடைய கருத்து, அதை மற்றவருடைய எழுத்தாக்கம், இன்னொருவரின் பட இணைப்பு, இன்னொரு ஆசிரியரின் உதவியால் வலையேற்றப் படுதல் - இப்படி அடிக்கடி நடக்கும் எங்கள் ப்ளாகில்.

எங்கள் ப்ளாக் ஆசிரியர் குழுவில் இருக்கின்ற ஐவரில் இருவர், அவர்கள் பெயர்களில் ஏற்கெனவே வலைப் பதிவுகள் வைத்திருக்கின்றார்கள். அந்தப் பதிவுகளில், யாராவது அழைத்தால், அவர்கள் தங்கள் வலைப்பதிவு அல்லது அவர்களுடைய பெயர்க் காரணத்தை ஒரு பதிவாகப் போடுவார்கள் என்று நினைக்கின்றோம். (ஆனா ஆடிக்கு ஒரு தடவை; அமாவாசைக்கு ஒரு தடவை பதிவு போடுகின்ற அந்த சோம்பேறிகளை நாங்க தொடர் பதிவுக்கு அழைப்பதாக இல்லை!)  

அப்போ இந்தத் தொடர் பதிவுக்கு யாரை அழைக்கின்றோம்? இந்தப் பதிவிற்குப் பின்னூட்டம் இடுகின்ற, இதுவரையிலும் பெயர்க்காரணம் பதிவு எழுதாத, முதல் பத்துப் பதிவர்களை, தொடர் பதிவிட அன்புடன் அழைக்கின்றோம்.
      

4.3.11

படப் புதிர்

   
இது என்ன?

கற்பனைக் குதிரையை கடிவாளம் இல்லாமல் ஓட்டி
எங்கள் ஓவியர் என்ன நினைத்து இதை தீட்டி
இருக்கிறார் என்று கருத்து பதியுங்கள்.



2.3.11

மாமி கடை

                  
உறவினர் அழைத்ததால், அவர் வீட்டிற்கு, சிறு விருந்து உண்ண சென்றிருந்தேன்.  முதலில் சர்க்கரைப்பொங்கல், அதன் பின் புளியோதரை,  வடாம், வற்றல என்று ஒரே ஹோம் லிங்க்ஸ் சமாச்சாரங்கள் படை எடுத்து வந்து, தட்டில் விழுந்து, வாயில் போட்டவுடன் சுவையாகக் கரைந்தன.

அரிசி அப்பளம், ஜவ்வரிசி வடாம் போன்ற சைடு டிஷ் சமாச்சாரங்களுக்கு நான் நிரந்தர ரசிகன். நண்பர் வீட்டில் இலையிடப்பட்ட பொரிக்கப்பட்ட அரிசி அப்பளம், இலேசாக, 0.25 mm / 0.5 mm திக்னஸ் உள்ள அரிசி அப்பளம், மிகவும் சுவையாக இருந்தது.

"வீட்டிலே செய்ததா?" என்று கேட்டேன்.

"ஆமாம்."

"அட! எப்படி செய்தீர்கள்?"

"ஹி ஹி நாங்க செய்யலை! ஆனா மாமி கடையில, அப்படித்தான் சொன்னாங்க!"

"என்ன? மாமி கடையா! எங்கே இருக்கு?"

"மாம்பலத்தில்."

"விவரமா சொல்லுங்க. அப்பளம் நன்றாக இருக்கின்றது. நான் காத்மாண்டு போகும்பொழுது பத்து பாக்கெட் வாங்கி போகணும்."

"இப்போ நீங்க சாப்பிட்ட ஹோம் லிங்க்ஸ் பொருட்கள் எல்லாமே மாமி கடையில் வாங்கியதுதான்."

"மாம்பலத்தில் மாமி கடை எங்கே இருக்கு?"

"ஸ்டேஷன் பக்கத்திலேயே. டி நகர் பக்கம் இறங்கி, ரங்கநாதன் தெருவில் அஞ்சு ஸ்டெப்ஸ் நடந்து, வலது பக்கம் திரும்பி நடந்தால், இடது பக்கத்தில் வரும் மாமி கடை. தெரியாவிட்டால் - 'மாமி கடை எங்கே?' என்று சின்னக் குழந்தையைக் கேட்டாக் கூட சொல்லிடும்!"

* * * * * *
உறவினர் சொன்னதைக் கேட்டு, உறுதிப் படுத்திக்காமல் வந்துவிட்டது அசட்டுத் தனமோ என்று அதற்குப் பிறகு தோன்றியது. அவர் சொன்ன அடையாளங்கள் வழியே நடந்து பார்த்தால் அங்கே ஒரு எலெக்ட்ரிக் டிரான்ஸ்பார்மர் என்னை மௌனமாகப் பார்த்தபடி நின்றிருந்தது. அதற்குப் பின்னே ஏதோ கட்டடம் உருவாகிக் கொண்டிருந்தது.

சரி, சின்னக் குழந்தையிடம் கேட்டால் கூட சொல்லிவிடும் என்றாரே என்பது ஞாபகம் வந்தது. ரங்கநாதன் தெருவில், (அதனுடைய) அம்மா தோளில் சாய்ந்து அரை உறக்கத்தில் இருந்த ஒரு இரண்டு வயதுக் குழந்தையிடம், 'மாமி கடை எங்கே இருக்கின்றது?' என்று கேட்டேன். அது, சற்று யோசித்துவிட்டு, 'மாமி பஜ்ஜி போட்டா' என்றது.
 
மாமி பஜ்ஜி போட்டா(ள்)? / பஜ்ஜி போ(ய்)ட்டா? / பஜ்ஜி போண்டா? / மாமி பஜ்ஜி, (நீ) போடா?  இந்தத் தேவை இல்லாத குழப்பங்கள் வேறு இப்போ சேர்ந்துகொண்டது!

ஸ்டேஷனை ஒட்டியே இருந்த ஒரு ஆப்பிள் வண்டிக்காரரை அணுகி, 'சார், இங்கே மாமி கடை எங்கே இருக்கு?' என்று கேட்டேன்.
            
'ஏன் என் கிட்ட ஆப்பிள் வாங்க மாட்டீங்களா?'

'அவங்க கிட்ட வடாம் வற்றல வாங்கவேண்டும், அதுக்குத்தான் கேட்கிறேன்!' 

'உங்களுக்கு மாமி முக்கியமா - இல்லே வடாம் முக்கியமா?'

'வடாம்தான்'

'அப்பிடீன்னா - இதோ ரங்கநாதன் தெருவிலேயே, "........ ....." கடை இருக்கே, அங்கே போயி வடாம் வற்றல எல்லாம் வாங்கிக்குங்க.' 

அந்தக் கடையில் சில சமயங்களில் வாங்கியது உண்டு. சில சமயங்களில், சில பொருட்கள் மட்டும் நன்றாக இருக்கும். ஆனால் அப்பள வகைகள் ஒன்றும் அவ்வளவு சுகம் கிடையாது. இதை எல்லாம் ஆப்பிள்காரருக்கு சொல்லி விரிவுரை ஆற்ற நேரம் இல்லாததால், மீண்டும் அந்த ஸ்டேஷனை ஒட்டிய வீதியில், டிரான்ஸ்பார்மர் தாண்டி, உலா சென்றேன்.
   
உறவினரை அலைபேசியில் அழைத்து, பட்ட அல்லல்களைக் கூறி, அதன் பிறகுதான், அந்தக் கடை நான் நினைத்தது போல அருகிலேயே இருக்காது, இன்னும் சற்று உள்ளே போகவேண்டும் என்று தெரிந்துகொண்டேன்.
   
ஒரு சிறிய ஹோம் லிங்க்ஸ் கடை, பிறகு பட்டாணிக் கடை, இலைக் கடை அதற்குப் பிறகு இருந்தது அந்த மாமி கடை.
    


மாமி கடையைக் கண்டுபிடித்துவிட்ட சந்தோஷத்தில், அரிசி அப்பளம், உளுந்து அப்பளம், நார்த்தங்காய், புளியோதரைப் பொடி என்று ஏகத்திற்கு வாங்கி, பிறகு கடையைக் கண்டுபிடிக்க, நான் பட்ட பாட்டைச் சொன்னேன். மாமி கடை பற்றி, ப்ளாக் எழுதப்போகும் விவரத்தையும் கூறினேன். மாமி சந்தோஷமாக, ஒரு சிறிய பேப்பரில், ஆங்கிலத்தில் இந்த விவரங்களை எழுதித் தந்தார்.

Dealing in household items like butter, ghee, appalam, vaththal, vadaam, pickles.

KANCHI KAMAKSHI HOMELINKS,
S.BHUVANESHWARI
SHOPNO 6,UMA COMPLEX,
NEW NO 36, OLD NO 1,NATESAN ST,
T NAGAR,
CHENNAI,600017
PHONE: 24354799

ஹோம் லிங்க்ஸ் பொருட்களில் ஆர்வம உடையவர்கள், மாம்பலம் பக்கம் சென்றால், இங்கே ஒருமுறை வாங்கி, சாப்பிட்டுப் பார்த்து, எங்கள் சாய்ஸ் சரியா இல்லையா என்று, எங்களுக்கு மெயில் அனுப்புங்கள்.