14.4.12

ஊசல் பெண்டுலம்


பள்ளிக்கூட நாட்களிலோ அல்லது கல்லூரி நாட்களிலோ நீங்கள், சிம்பிள் பெண்டுலம் பரிசோதனை நடத்தி இருப்பீர்கள். அல்லது உங்கள் பௌதிக ஆசிரியர் (வாஞ்சிநாதனோ அல்லது வரதராஜனோ அல்லது ராமமூர்த்தியோ) உங்களுக்கு ஊசல் பெண்டுலம் பற்றிய பரிசோதனையையும், L / T * T = K என்பதையோ நிரூபித்துக் காட்டி இருக்கலாம். ஒரு ஜி (2G இல்லை) கண்டுபிடிக்கக் கூட அந்தப் பரிசோதனையை நீங்கள் செய்திருப்பீர்கள்! 



இந்தப் பரிசோதனையில், ஊசல்களைக் கணக்கெடுக்கும் பொழுது, குண்டு, மேலே காட்டப் பட்டிருக்கின்ற, நடு நிலையான B என்னும் நிலையில் ஆரம்பித்து, மீண்டும், அதே நிலைக்கு, அதே திசையில் பயணிக்கும் நிலை வரும்பொழுது, ஒன்று என்று (B > C + C > B + B > A + A > B = 1) ஆரம்பித்து, பிறகு இதே வகையில், தொடர்ந்து கணக்கீடு செய்வார்கள். 

கணக்கீடு செய்வதற்கு, 'A'  நிலையையோ அல்லது 'C' நிலையையோ ஏன் எடுத்துக் கொள்வதில்லை? 

கணக்கீடு செய்ய 'B' யை தொடக்க / முடிவு நிலையாக வைத்துக் கொள்வதற்கும், வருடத்தின் முதல் நாளாக சித்திரை முதல் தேதியை வைத்துக் கொள்வதற்கும் ஓர் ஒற்றுமை உள்ளது. அது என்ன? 
                      

12.4.12

ஒரு சீறுகதை - பாஹே

              
கையெழுத்து மறையும் நேரம். சூழல் தெளிவாக இல்லை. மங்கலான இருட்டு.
  
'புஸ புஸ' என்று சீறல் ஓயாமல் கேட்க, மரத்தடியில் நின்ற அவர் அச்சத்துடன் சுற்றுமுற்றும் பார்த்தார். 
  
தான் நின்ற இடத்துக்கு வெகு அருகில் உயரமாக இருந்த அந்தப் புற்றில் அப்போதுதான் கண்ணில் படுகிறது.

இப்போது இன்னும் பயம். மரத்தின் கீழ் உதிர்ந்திருந்த இலைச் சருகுகள் காற்றில் எழுப்பும் சலசலப்பு ஓசை அச்சத்தைக் கூட்டுகிறது. 
  
ஓடத் தொடங்கினார். மூச்சிரைக்க இரைக்க...... சரசரவென்று பின்னாலேயே அது வேகமாகப் பாய்ச்சலில் வருவது மாதிரி பயம். 

எதிர்ப்பட்டவர் இவரை நிறுத்துகிறார். "ஏன் இப்படி ஓடறீங்க?" 

"அதோ மரத்துக்குக் கீழே நாகப் புற்று இருக்குதுங்க.... அதுலேயிருந்து 'அது' என்னைத் துரத்திகிட்டே வருது"

"பயப்பட வேண்டாங்க.... அது என் மனைவிதானே!"
   
"என்னது...! பாம்பு உங்க ஒய்ஃபா?"

"ஆமாங்க, இதுல என்ன அதிசயம்... இப்போ என்னை சரியாப் பாருங்க...!"

அவர் திடீரென கீழ்ப்பக்கமாகக் குறுகினார்..... அவர் நின்ற இடத்தில் படமெடுத்து சீறி நின்றது ஒரு நாகம். 
   
அவ்வளவுதான்.... ஒரே பாய்ச்சலில் அவர் மறுபடி ஓடத் தொடங்கினார். 

மெயின்ரோடுக்கு வந்ததும் எதிர்ப்பட்ட கார் நிறுத்தப்பட்டு அதிலிருந்து கீழே இறங்கியவர் வியப்புடன் "அப்பா... அப்பா... உங்களைத்தான் தேடிகிட்டிருந்தேன் ... காலைல கிளம்பினீங்களாம்  .. ரொம்ப நேரமாக் காணோமேன்னு அம்மா கவலைப் படறா"

அவருக்குக் காலின் கீழ் 'புஸ' சீறல் மறுபடி. எதிரே 'மகன்' மாதிரி வந்திருப்பவன் 'அது'வாக இருக்குமோ...
   
பயம்.... பயம்.... பயம்.....

ஏன் இப்படி மறுபடி தலைதெறிக்க ஓடுகிறார் என்று அந்த நிஜ மகன் குழம்பி நிற்கிறான். 
       

11.4.12

ரசித்த கவிதைகளும் என் கவிதைகளும்.. - பாஹே

                   
கணையாழி கவிதைகள் - ஏப்ரல் 12 இதழ்.
 

நாய்களின் நன்றி
மான்களின் மானம்
காகங்களின் ஒற்றுமை
புலிகளின் வீரம்
கதைகளைக் கேட்ட மகன்
என்னை ஆழ்ந்து பார்த்தான்
"உன் குணமாக எதுவுமில்லையா?"
என்று கேட்பது போல.  (இசாக்)
  
[பின் செருகல் : நல்லவேளை, அவனுக்கு நரி ஞாபகம் வரவில்லை]

வேசியாக்கப்பட வேண்டுமென்று
நான் எந்தக் கடவுளிடமும்
மனு கொடுத்ததில்லை (தமிழச்சி)

திருடிய முத்தங்களின் இனிமை
இன்று கசக்கிறது.
இந்த அலைகளின்
ஓடிப்பிடித்து விளையாட்டு 
ஓய்வதில்லை.

பற்கள் நிரந்தரம் என்றாலும்
புன்னகை தற்காலிகம்
அழுகையும் எனக்கொரு
சுவைதான்.
தழும்புகளைத் தடவிப் பார்ப்பது கூட
வீரனுக்கு இனிதுதான்.

[பின் செருகல் : புறநானூற்றில் மட்டும்]

நடிகர்கள் ஊர்திரும்பினர்
திரை சுருட்டி வைக்கப் பட்டது. (நீலமணி)

ஆனந்த விகடன் 'சொல்வனம்' - 11-4-12
  
கூண்டுக்கிளி
உங்களிடம்
என்ன பேசிவிடப் போகிறது?
'திறந்து விடுங்கள்' என்பது தவிர.


இனி, சொந்தக் கவிதைகள் சில....

(அ) 
திரும்பிப் போய்விடலாம்
போகவேண்டிய பாதை
புரியவில்லை -
சரி, இதுவரை
வந்த பாதை எது?

(ஆ)
மீனம்பாக்கக்
குடியிருப்பில்
விமான இரைச்சலுக்கு
அலுத்துக் கொண்டால் எப்படி? 
[மிச்ச வரிகள் இப்போது நீக்கம்]

(இ)  
  
வடைக்கிழவி
நரியை
வாத்சல்யத்துடன் பார்த்தாள் -
"இந்தா நீ சாப்பிடு" -
சுட்டுக் கொடுத்த வடையை
சப்புக் கொட்டிற்று -
உப்பு அதிகமானது தெரியாமல்
காக்கா கிட்டே புதுக் கதையும் கேட்கலாமே!
  
(ஈ)
எதிரே அமர்ந்திருந்தவர்
எழுந்து போனபிறகு
கீழே அம்பாரமாகக் 
கொட்டிக் கிடக்கிறது
அவர்
எடுத்துக் கொள்ளாதவை...
[1992 இல் எழுதப் பட்ட என் மிகப் பழைய 'குப்பை'க் கவிதையிலிருந்து]

(உ)
  
கருவறை இருட்டில்
கண்ணும் தெரியாமல்
காதும் கேட்காமல்
நின்று கொண்டிருக்கின்றன
கருங்கல் சிலைகள்.

எதிரே சன்னதியில்
தரிசன பாவத்தில்
பக்த கோடிகள் -
கருப்பு பிஸினஸில்
கொடிகளும்
கன்னிகள் 'சைட்'டில்
குட்டிக்களுமாய்.

(ஊ)
அடுத்த நொடி எனக்குண்டா?  
அதை நானும் அறிவதுண்டா? - அது
எடுத்தென்ன கொண்டுவரும்?
இனிமையா மற்றொன்றா?

(எ)
இமயத்திலிருந்து இறங்கி
அடிவாரம் கால் பதித்தேன் -
நிமிர்ந்தால் எதிரே
நியூயார்க் எம்பயர் -
ஓரம் ஒதுங்கி நின்றதும்  
எங்கள் கிராமத்து ஓடம்போக்கி ஆறு -
தேம்ஸ் பிடிக்குமே
திரும்பினேன் மிஸிஸிபி
  
சிந்துநதியின்மிசை நிலவும்
சேர நன்னாட்டிளம் பெண்களும்

என்னாங்கடாது -
இருதுருவங்களையும் எட்டிப் பார்த்தால் 
கருணாநிதியும் ஜெயலலிதாவும்
தருமமிகு சென்னையும் -
ஓடிப் போயிடலாம் வர்றீங்களா...?
                     

10.4.12

பெண்ணென்றால் . . .

                       
நேற்று செய்திகள் பார்த்த  பொழுது, கேட்ட பொழுது, அதன் தாக்கம் கொஞ்சம் இருந்தது. 

இன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா பேப்பரில் படம் பார்த்ததும், மனம் மிகவும் துயருற்றது. 

பல ஆண்டுகள் முன்பு, சென்னையில், எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் குடியிருந்த எம் எல் சி ஒருவரின் வீட்டில், அந்த எம் எல் சி யின் மனைவி, தன்னுடைய மருமகள் இரண்டாவதும் பெண் குழந்தையாகப் பெற்றார் என்பதற்காக, அந்த மருமகளை, திரும்ப வீட்டிற்கு அழைத்துக் கொள்ளாமல் இருந்து வந்தார். 

அந்தக் கொடுமைகளை எல்லாம் ஒன்றும் இல்லாமல் செய்துவிட்டது, இந்தச் செய்தி. ஒரு குழந்தை பெண்ணாகப் பிறப்பதற்கு, ஆணின் ஜீன்ஸ் அதிக காரணம் என்று படித்திருக்கின்றேன். அப்படி இருக்க, பெண்ணாகப் பிறந்த அந்த கள்ளம் கபடமில்லாத, அழகிய பிஞ்சு முகத்தை, காயப் படுத்த எப்படி ஒரு தகப்பனுக்கு மனம் வந்தது? 

என்ன மதம், என்ன ஜாதி, படித்தவரா அல்லது படிக்காதவரா என்ற வீண் வாதங்களை ஒதுக்கி விட்டுப் பார்த்தால், இது முற்றிலும் மனிதத் தன்மை அற்ற செயல் என்பது விளங்கும். 

பெண் குழந்தைக்கு, இந்தக் காயங்களை ஏற்படுத்திய அப்பாவிற்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? 

Photo : Courtesy : The Times of India.


9.4.12

எட்டெட்டு பகுதி 13 :: ராமாமிர்தம் யார்?



எலெக்டிரானிக் சாமியார்: இங்கே பாருங்க கே வி - சும்மா வள வளன்னு கதை சொன்னா யாருக்கும் புரிய மாட்டேங்குது. நான் கேட்கின்ற கேள்விகளுக்கு சுருக்கமா பதில் சொல்லுங்க.
கே வரதராஜன்: சரி. 

எ சா : மாயாவுக்கு உதவவேண்டும் என்று நினைத்தீர்களா? 
கே வி : ஆமாம். 

எ சா: ஏன்?
கே வி : மாயாவின் நிலை பரிதாபமாக இருந்தது. ஓ ஏ தன்னிலை அறிய என்னால் முடிந்த உதவி செய்ய நினைத்தேன். மேலும் மாயா, எனக்கு அலுவலகக் குழப்பத்தை சரி செய்ய 'ராமாமிர்தம்' உதவுவார் என்று கூறியதும் ஒரு காரணம். 

எ சா: மேஜையின் முதல் இழுப்பறையில் நீல நிற பாட்டிலும், அதனுள் இரண்டு காவி கலர் மாத்திரைகளும் இருந்தனவா? 

கே வி: ஆமாம். 

எ சா: பிறகு என்ன செய்தீர்கள்? 

கே வி: காலையில் எழுந்து, அலுவலகம் செல்லத் தயார் ஆனவுடன், அந்த நீல நிற பாட்டிலை எடுத்துக் கொண்டு, மேஜை இழுப்பறையை முன்னிருந்தபடியே பூட்டி வைத்துவிட்டேன்.  

எ சா: அந்த அறையை உங்களுக்குக் கொடுத்த முதியவர் வந்தாரா? 
கே வி: இல்லை. நான் அங்கிருக்கும் வரை அவர் திரும்பி வரவில்லை. அவர் கூறி இருந்தபடி, அறையைப் பூட்டி, சாவியை காலு சிங்கிடம் கொடுத்து விடுவது என்று முடிவெடுத்தேன். 

எ சா: பிறகு நீங்க என்ன செஞ்சீங்க? 
கே வி: நான் என்னுடைய பெட்டியை எடுத்துக் கொண்டு, ஒரு கையில் ஒரு காவி கலர் மாத்திரையை தயாராக எடுத்து வைத்துக் கொண்டு, அறையைப் பூட்டி, காலு சிங்கின் வருகைக்காகக் காத்திருந்தேன். 

எ சா: பிறகு என்ன நடந்தது? 
கே வி: காலை ஏழு ஐம்பத்தைந்து மணிக்கு, மாயா கூறியிருந்தபடியே, காலு சிங் ஒரு டிரேயில் கோக்க கோலா, ஆரஞ்சு ஜூஸ் இருக்கின்ற தம்ளர்களை வைத்து எடுத்து வந்தான். டிரேயை எதிர் அறைக் கதவிற்கு அருகே, கைப்பிடிச்சுவரில் வைத்து விட்டு, அந்த அறையின் அழைப்பு மணியை அழுத்தச் சென்றான். 

எ சா: அப்புறம்?
கே வி: நான் என் கையில் இருந்த மாத்திரையை, கோக்க கோலா இருக்கின்ற கிளாசில் போட்டுவிட்டு, காலு சிங் அழைப்பு மணியை அழுத்துவதற்குள், சென்று, அவனை மெதுவே பெயர் சொல்லி அழைத்தேன். அவன் திடுக்கிட்டுத் திரும்பி, என்னைப் பார்த்ததும் குழப்பம் நீங்கியவனாக, 'என்ன சாப்?' என்றான். 

எ சா: நீங்க என்ன சொன்னீங்க? 
கே வி: நான் நிறைய அபிநயங்களுடன், எனக்குத் தெரிந்த அரைகுறை இந்தியில். 'ஆபீசுக்கு நேரமாகிவிட்டது. நான் கிளம்புகின்றேன். பெரியவர் வந்தால் என் நன்றியைத் தெரிவித்துவிடு. இதோ அவருடைய ரூம் சாவி. உன்னிடம் கொடுக்கச் சொன்னார்.' என்று சொல்லி சாவியை அவனிடம் கொடுத்து, என் பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். 

எ சா: ஆபீஸ் சென்றதும் ராமாமிர்தத்தைப் பார்த்தீர்களா? 
கே வி: இல்லை.

எ சா: ஏன்?
கே வி: எங்கள் ஆபீசில் ராமாமிர்தம் என்று யாரும் இல்லை. 

எ சா: அடக் கடவுளே! மாயாவின் ஆவி உங்களை ஏமாற்றிவிட்டதா? 
கே வி: அதுவும் இல்லை. 

எ சா: அப்படி என்றால்? 
கே வி: நான் ஆபீஸ் சென்றதும், தலை முதல் கால் வரை உள்ள எல்லா ஊழியர்களையும் என்னுடைய ஆடிட் அறைக்கு வரவழைத்தேன். கணக்கில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களையும், ஸ்டாக் விவரங்கள் சரி இல்லாததையும், அதனால் பேரிங் கம்பெனிக்கு லட்சக் கணக்கில் ஏற்பட்டிருக்கும் நஷ்டத்தையும் எடுத்துக் கூறி, இதை சரி செய்ய, குற்றவாளியைக் கண்டுபிடிக்க, எல்லோருடைய உதவியும் எனக்குத் தேவை என்று சொன்னேன். எல்லோரும் ஒத்துழைப்பு கொடுக்க சம்மதித்தார்கள். 
  
அதன் பிறகு, நான் எல்லோரையும் பார்த்து, "ராமாமிர்தம் யார்?" என்று கேட்டேன். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. நான் மீண்டும் உரக்கக் கேட்டேன். உங்களில் யாருக்காவது 'ராமாமிர்தம்' என்று யாரையாவது தெரியுமா? சொல்லுங்கள் என்றேன். அறை முழுவதும் ஒரு கடின அமைதி. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அப்பொழுது, அந்த ஆபீசின் தேநீர் அளிக்கும் ஊழியர் ஒருவர் உள்ளே வந்து, எல்லோருக்கும் தேநீர் உள்ள கோப்பைகளை கொடுத்துக் கொண்டே சென்றார். உடனே அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டில் இருக்கும் டி பி அகர்வால் என்பவர், "ராமாமிர்தம் ஈஸ் ஹமாரா தூத் வாலா" என்றார்.  அறையில் இருந்த எல்லோரும், மிகவும் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டனர். சிலர் முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டு, புன்னகை புரிந்தனர். 

(தொடரும்) 
                   

7.4.12

T N சேஷகோபாலன், கர்ணன், விவேக், ரத்தக்காட்டேரி...வெட்டி அரட்டை.



'அவர்' பார்ப்பதற்கு மிக எளிமையாக இருப்பாராம். கதர் சட்டை, சாதாரண வேஷ்டி என்று. ஆனால் அவர் மிருதங்கத்தை மிகப் பிரமாதமாக வைத்துக் கொள்வாராம். அதற்கு அவ்வப்போது புத்தம் புது ஜிகினா உறைகள் வாங்கிப் போடுவாராம். பார்த்து பார்த்து போஷிப்பாராம். அதற்கு செலவு செய்யத் தயங்க மாட்டாராம். ஒரு முறை திருவையாறில் அவர் வருவதற்கு முன் அவரின் இரண்டு மிருதங்கங்களைப் பையோடு தோளில் சுமந்து வந்து மேடையில் ஒருவர் வைத்தாராம். அதற்கே அந்த இடமே அதிருமளவு கிளாப்ஸாம் . இத்தனைக்கும் 'அவர்' இனிமேல்தான் வரவேண்டும்! நேரில் கண்ட இவருக்கு புல்லரித்துப் போனதாம். 

'அவர்'..பாலக்காட்டு மணி.


கல்யாணி ராகத்தில் அமைந்த ஒரே ஒரு சோகப் பாடல் "துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே.."

இரண்டையும் சொன்னது மதுரை டி என் சேஷகோபாலன். ஜெயா டிவி மனதோடு மனோ நிகழ்ச்சியில். (கொஞ்ச நாள் முன்பு)



அவர் நடித்த (ஒரே) படமான 'தோடி ராகம்' பற்றியும் பேசினார். அதிலிருந்து போட்டுக் காட்டிய ஒரு பாடல் கேட்க நன்றாக இருந்தது.

உடனே நினைவுக்கு வரும் இன்னொரு தகவல் முகாரியில் அமைந்த ஒரே பழைய காதல் பாடல்! (இதற்கான விடையை பின்னூட்டத்துக்கு வாய்ப்பாக வைத்து விடுகிறேன்)

======================================

ஒரு பொதுவான தகவல்...

நான் எந்த ப்ளாக் படித்தாலும் அங்கு தமிழ்மணம், இன்டலி, தமிழ் 10, யுடான்ஸ் உட்பட (அங்கு இணைத்திருக்கும் ) என்னால் போட முடியக் கூடிய எல்லா வோட்டும் போட்டு விடுவது வழக்கம். தவற விடுவது இல்லை! சும்மா ஒரு தகவலுக்கு...

=====================================

சென்ற வாரம் படித்த இரண்டு செய்திகள். ஒன்று சுவாரஸ்யம், இன்னொன்று 'கடுப்பேத்தறார் மை லார்ட்" டைப்! படித்து விட்டு எது எந்த டைப் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!

1) வடநாட்டில் (ஊர் பெயர் மறந்து விட்டதால் பொதுவாகப் போடுகிறேன்...படித்துக் கொஞ்ச நாட்களாகி விட்டது...ஹி...ஹி....) ஒரு டாக்டர் தம்பதி வெளிநாடு செல்லும்போது தன் வீட்டில் வேலை செய்யும் (செய்த?) சிறுமியை வீட்டுக்குள் வைத்துப் பூட்டி விட்டு சென்று விட்டார்களாம். 

2) ஆம்பூர் பக்கம் ரத்தக்காட்டேரி நடமாட்டமாம். இரவு நேரங்களில் வீட்டிலுள்ள பொருட்கள் அந்தரத்தில் பறக்க ஆரம்பிக்க, காற்று பலமாக வீச, வெளியே ஓடிவந்து பார்த்தால் நிறைய வீடுகளில் இது போலவே நடந்திருப்பது தெரிய வந்ததாம். அந்த ஊர் ஆஸ்தான மந்திரவாதியின் ஆலோசனைப்படி 'இன்று போய் நாளை வா...' என்று தமிழில் பாடி, ச்சே, எழுதி திரிசூலம் படம் போட்டிருக்கிறார்களாம்..

உள்ளே உறங்கிக் கொண்டிருந்த ரத்தக் காட்டேரியை எங்கள் ப்ளாக் பதிவு தட்டி எழுப்பி விட்டு விட்டதோ....! மூன்றாம் சுழியிலும் உலவப் போயிருக்கிறதே....!

===================================

சமீப காலத்தில் அடிக்கடி முணுமுணுக்கும் வரிகள்....  
"முத்தமிட்ட இதழே பாலாக,
முன்னிடை மெலிந்து நூலாக,
கட்டி வைத்த கூந்தல் அலையாக,
கன்னங்கள் இரண்டும் விலையாக..."

======================================

யாரிடமும் சொல்லாமல் (யார் கிட்ட சொல்றது??!!) உள்ளேயே நடத்திய மௌனப் போராட்டத்துக்கு இறுதியில் வெற்றி!

சமீப கால சந்தோஷங்களில் ஒன்றாக கூகிள் பின்னூட்டங்களைத் தொடரும் வசதியைத் திருப்பி அளித்திருப்பது! எனக்கும் கீதா மேடத்துக்கும்தான் ரொம்ப சந்தோஷம் என்று நினைக்கிறேன்!! 

நன்றி கூகிள்...!

===============================


டிஜிட்டலில் வெளியான கர்ணன் திரைப் படம் தமிழ்நாடு முழுக்க அரங்கு நிறை காட்சிகளாக ஓடுகிறதாம். நல்ல செய்தி! இது பற்றியும், அந்தப் படத்தின் பாடல்கள் பற்றியு ஒரு விரிவான அலசலாகவும் திரு நெல்லை கண்ணனின் புதல்வர், 'மூங்கில் மூச்சு', மற்றும் 'அம்மன் சன்னதி' புகழ்,   குஞ்சுவின் நண்பர் (!) சுகா தன் வேணுவனம் வலைத் தளத்தில் எந்தெந்தப் பாடல்கள் என்னென்ன ராகம் என்று சொல்லி அவற்றைக் கேட்கப் பாடல்களுக்குச் சுட்டியுடன் எழுதியிருக்கும் பதிவு வெகு சுவாரஸ்யம்.  சுகாவின் எழுத்துகளுக்கு இருக்கும் சுவையைக் கேட்கவும் வேண்டுமோ...'சுகா'னுபவம்!

==============================


பொதுவாக விவேக் நகைச் சுவைகளை அதிகம் ரசிப்பதில்லை.  ஜெயா டிவி ஆட்டோகிராஃபில் விவேக்குடன் உரையாடினார் நிகழ்ச்சியை அளிக்கும் சுகாசினி. விவேக் பற்றி அறியாத தகவல்கள் சில அறிந்து கொள்ள முடிந்தது. அவரது நட்பு பற்றி, மனிதம் பற்றி, சிறுவயது சேட்டைகள், திறமைகள் பற்றி.... .  இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாடகர் மனோ கர்ணனில் கிருஷ்ணராக நடித்த என் டி ராமராவ், 'க்ளோசப்' ஷாட்களில் முகத்தை வைத்துக் கொள்ளும், அல்லது முகத்தில் செய்யும் சேஷ்டைகளைப் பார்த்த போது தத்ரூபமாக இருந்தது. சிரிப்பும் வந்தது!


படங்களுக்கு நன்றி கூகிள்.