30.3.13

பாசிட்டிவ் செய்திகள் மார்ச் 24, 2013 முதல் மார்ச் 30, 2013 வரை


எங்கள் B+ செய்திகள்.

- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.

- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்.... 

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

1) முதியவரை காப்பாற்றிய தலைமைக் காவலர் ரவி

அமைந்தகரை போக்குவரத்து பிரிவின் தலைமைக் காவலர் ரவி (38). இவர், அதிகாலை தேனாம்பேட்டையிலுள்ள தனது வீட்டில் இருந்து வேலைக்
கு பைக்கில் புறப்பட்டார். அமைந்தகரை கூவம் பாலத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, கூவத்தை எட்டிபார்த்தபடி 20க்கும் மேற்பட்டோர் நின்றிருந்தனர்.
                                                     

இதனால், பைக்கை ஓரத்தில் நிறுத்திவிட்டு அவரும் எட்டிப் பார்த்தார். அப்போது,கூவத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், நெஞ்சு பகுதி முழுவதும் மூழ்கிய படி காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என கூக்குரலிட்டபடி கிடந்தார். பொதுமக்கள் யாரும் காப்பாற்றவில்லை. உடனே ரவி மடமடவென கூவத்துக்குள் இறங்கினார். ஆழமாக இருந்ததால் முதியவர் பக்கத்தில் செல்ல முடியவில்லை. அங்கு கிடந்த நீளமான சவுக்கு கம்பை எடுத்து, அந்த முதியரை பிடித்துக் கொள்ள சொன்னார். ஆனால் கம்பு அவருக்கு எட்டவில்லை.
 

பின்னர், ரவி தனது ஷூவில் இருந்த கயிற்றை கழற்றி கம்போடு இணைத்து, அதை பிடித்துக் கொள்ளுமாறு முதியவரிடம் கூறினார். அவரும் அப்படியே செய்ய, அதை பிடித்து இழுத்து வெளியே கொண்டு வந்து காப்பாற்றினார் ரவி. முதியவருக்கு உடல் முழுவதும் பல இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அங்குள்ள வீட்டில் தண்ணீர் வாங்கிய ரவி, முதியவரை குளிப்பாட்டிய பிறகு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு முதியவரை அனுப்பி வைத்தார். அவருக்கு இடுப்பு, கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். முதியவரை காப்பாற்றிய தலைமைக் காவலர் ரவியை, அப்பகுதி மக்கள் கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தனர். அதிகாலையில் கூவம் பாலத்தில், சாலையை கடந்தபோது கால் தவறி விழுந்து விட்டார் என தெரிய வந்தது.

2) ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் 3000க்கும் மேற்பட்ட மரங்களைத் இலாபநோக்கின்றி தன்னார்வத்துடன் நட்டு வளர்த்த சூழல் ஆர்வலர், ஏழூர் அய்யாசாமி - கோடியில் ஒருவர்.
                                                  

எலும்பு தோலுமாய் காட்சியளிக்கும் பெரியவர் திரு. அய்யாசாமி (80120-26994) 74 வயதை தாண்டிக்கொண்டிருக்கிறார். சின்ன வயதிலிருந்தே இவருடைய தந்தை மரங்களின் மேல் கொண்டிருந்த காதல் இவருக்கும் தொத்திக் கொள்கிறது. விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த இவர், ஆடு மேய்க்கும் போது, ஊர் ஓரம் இருக்கும் உபரி நீர் செல்லும் பள்ளத்தில் வேப்ப மர விதைகளை ஊன்றி, நீருற்றி கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்தது ஏறக்குறைய பத்தாயிரம் மரங்கள். திட்டம் தீட்டி சமூக விரோதிகள் கொள்ளையடித்தது போக இன்று மிஞ்சியிருப்பது சுமார் 3000 மரங்கள். சிறு செடி முதல் முப்பது, முப்பத்தைந்து வயது வரை இருக்கும் வேப்ப மரங்களை பார்க்கும் போது உடலும், மனதும் சிலிர்க்கிறது.

சுவாரசியமான தகவல், கடும் கோடையில் வீட்டிலிருந்த தண்ணீரைக் கூட எடுத்துச் சென்று செடிகளுக்கு ஊற்றியிருக்கிறார். “ஊட்டுல தண்ணியில்லைனா ஒரு நா சண்ட போடுவாங்க, இல்லன சோறு ஊத்த மாட்டாங்க, ஆனா செடி செத்துப்போச்சுன்னா என்ன பண்றதுங்க” என்ற போது, அருகில் எலும்பும் தோலுமாய் நின்ற அவரது மனைவி வெட்கத்தில் சிரிக்கிறார்.

அதிசயம், இந்த தள்ளாத வயதிலும் பெரியவர் அய்யாசாமி வீட்டில் பத்துப் பதினைந்து மரக்கன்றுகள் தயாராக இருக்கின்றது. பேசி, நெகிழ்ந்து, மனது கனத்து, நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு கிளம்பும் போது “அந்த பள்ளத்தோரம் போனிங்கனா, மரங்களைப் பார்க்கலாம்” என்று சொல்கிறார்.

கிட்டத்தட்ட மூன்று மைல் தூரம் பள்ளம் முழுதும் கனத்துக் கிடக்கிறது அழகான வேம்பு. பார்க்க பார்க்க வெயிலில் வெம்பிய உடல், மனதோடு சேர்ந்து குளிர்கிறது. அவருக்கு உதவியாக இருக்கும் திரு. விஜயகுமார் (98423-44399) நம்மோடு வந்திருந்து சுற்றிக் காட்டுகிறார்.

முதிய வயதிலும் மரங்களைப் பேணி வந்த அய்யாசாமி மார்ச் 7, 2011 அன்று காலமானார்.

 
இந்த மனிதர்களை வரும் காலத்தில் உலகம் மறக்காமல் இருக்க ஆவணப்படுத்த வேண்டும் என்ற வேட்கை மனதில் உருவாக, இதைப் பதிவு செய்திருக்கிறார்கள் 'ரிலாக்ஸ் ப்ளீஸ்' முகநூல் தளத்தில்.


3) போராட்டங்கள் மூலம், 25 ஆயிரம் பழங்குடியினருக்கு, அவர்களின் நிலங்களை மீட்டு தந்துள்ள, சி.கே. ஜானு: 


"நான், கேரள மாநிலம், முத்தங்கா காட்டுப் பகுதியின், பழங்குடி இனத்தை சேர்ந்தவள். வறுமையால் பள்ளிக்கு செல்லாமல், ஏழு வயதிலேயே விறகு பொறுக்கும் வேலைக்கு சென்றேன். பல வேலைகள் செய்தாலும், மூணு வேளை கஞ்சிக்கு உத்திரவாதம் இல்லை.ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், சட்டப் பாதுகாப்புடன், மரங்களை கடத்த உருவாக்கப்பட்டது தான் வனத் துறை. வனத்தை பாதுகாக்க போகிறேன் என, காலம் காலமாய் குடியிருந்த பழங்குடிகளை நிர்கதியாக விரட்டியடித்து, வனத்தை அழித்து, மரங்களை வெட்டி, வனத் துறை மூலம் கடத்துவது, இன்னும் தொடர்கிறது.கேரளாவில், ஏழைகளின் தோழன் எனும் இடதுசாரி கட்சிக்கும், முதலாளிகளின் கைப்பாவையான காங்கிரஸ் கட்சிக்கும் கொள்கை வேறுபட்டானாலும், பழங்குடி மக்களை ஏமாற்றுவதில் வேறுபடவில்லை. 1992ம் ஆண்டு பழங்குடிகளை ஒன்றிணைத்து, நாங்கள் இழந்த எங்கள் மண்ணின் மீதான உரிமையை மீட்டெடுக்க, "கோத்ரா மகா சபை'யை உருவாக்கி, பல போராட்டங்கள் செய்தேன்.எங்களின் ஒற்றுமையை சீர்குலைக்க, அனைத்து கட்சிகளும் பழங்குடியினர் பிரிவை ஆரம்பித்து, பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டனர். இதனால், அரசியல் கட்சிகள் எங்களை ஏமாற்றி, பிழைப்பு நடத்துவதை புரிந்து கொண்டேன்.

                                                                                
கடந்த, 2003ம் ஆண்டு, எங்களின் முத்தங்கா காட்டுப் பகுதியில், "இனிமேல் இதுதான் எங்கள் நிலம்' என்ற முழக்கத்தோடு போராடினேன். போலீசின் தாக்குதலால், ரத்தக் கறைகள் மட்டுமே கிடைத்தன. இறுதியாக திருவனந்தபுரத்தில் உள்ள, கேரள அரசின் தலைமை செயலகத்தை சுற்றி, 1,000 குடிசைகள் அமைத்து முற்றுகையிட்டோம்.போலீசின் கொடூர தாக்குதலை சமாளித்து, 48 நாட்கள் தொடர்ந்த போராட்டத்தால், இனி வேறு வழியில்லை என, கேரள அரசு பணிந்தது. 25 ஆயிரம் பழங்குடியினரின் இடங்களை மீட்டேன். நாங்கள் வாழும் வரையில், எங்கள் மண்ணின் மீதான உரிமையை, நிலை நாட்டினோம்.

4) வித்தியாசமாக புகைப்படங்கள் எடுக்கும் 23 வயது ஜெஸ்வின் ரெபெல்லோ பற்றி செய்தி வெளியிட்டிருக்கிறது தினமலர். கீழே அவர் எடுத்த அந்த வித்தியாசமான புகைப்பட
ங்களைப் பார்க்க வசதியும் செய்திருக்கிறது.

அவரைப் பேட்டி காணச் சென்ற நிருபர் சொல்வது : ஒரு பையில் கேமிரா சாதனங்களும், இன்னோரு பையில் விதவிதமான விளக்குகள், நிறைய மின் வயர்கள் என்று ஒரு நவீன "எலக்ட்ரீசியன்' போல உற்சாகமாக அறிமுகமானார். அதன் பிறகு அவர் தந்த நேர்முக விளக்கங்கள் பிரமாண்டமாக இருந்தது.

நல்ல திறந்தவெளி இருட்டில் இவர் கற்பனை செய்து வைத்திருக்கும் விஷயத்தை வித்தியாசமான விளக்குகளை சுழலவைத்து, ஆடவைத்து, உருவங்களின் மீது ஓடவைத்து படம் எடுக்கிறார். ஒரு படம் எடுக்க மூன்று மணி நேரமுமாகலாம், மூன்று நாட்களும் ஆகலாம்.

ஒளி ஒவியம் (லைட் பெயின்டிங்) என்றழைக்கப்படும் இது போன்ற 80 புகைப்படங்களை இவர் எடுத்து வைத்துள்ளார். உலகம் முழுவதிலும் இந்த ஒளி ஓவியத்தை மட்டுமே எடுக்கும் புகைப்படக்கலைஞர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களில் சிறந்தவர்கள் என்று 73 பேரை பட்டியலிட்டு அவர்களது புகைப்படங்களை மும்பையில் கண்காட்சியாக வைத்திருந்தனர். இந்த கண்காட்சியில் இடம் பெற்ற ஒரே இந்திய ஒளி ஓவிய படம் ஜெஸ்வினுடையது மட்டுமே.

இவரது புகைப்படங்களை பார்த்த கண்காட்சி ஏற்பாட்டாளர்கள், நேரில் வந்து, உலகம் முழுவதிலும் இருந்து வந்துள்ள பார்வையாளர்களுக்கு "டெமோ' கொடுக்கும்படி அழைத்திருந்தனர். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இவரால் போகமுடியாமல் போய்விட்டது.

                                              
 
நான் இந்த ஒளி ஓவியம் என்று சொல்லக்கூடிய புகைப்படங்களை பற்றி தற்செயலாக இணையதளத்தில் படித்ததும் பிடித்துப்போனது. இது போன்ற புகைப்படங்களை எடுப்பதில் மனது சந்தோஷப்படுகிறது. யாராலும் செய்யமுடியாததை செய்கிறேன் எனும்போது மனசு பெருமிதமும் படுகிறது. இது முழுக்க,முழுக்க எனது மனத்திருப்திக்காக மட்டுமே எடுக்கிறேன் என்கிறார் ஜெஸ்வின்.

உங்களது தொழிலுக்கு இடையூறு இல்லாமல் இந்த வித்தியாசமாக புகைப்படங்களை கண்காட்சியாக மக்களிடம் கொண்டு செல்லுங்கள் என்று கூறி வாழ்த்தினேன். வாழ்த்த விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9944252470.

29.3.13

எஸ்கலேட்டர் அனுபவம்


திருக்கடையூர் செல்ல புவனேஸ்வர்- ராமேஸ்வரம் ரயிலில் ஏற எக்மோர் சென்றோம். எந்த நடைமேடையில் ரயில் வரும் என்று பார்த்துக் கொண்டிருந்தோம். சகோதரி, சகோதரி கணவர் உடன் இருந்தனர்.
                                       
 
சகோதரி கொஞ்சம் அப்பாவி. பந்தியில் சாப்பிட உட்கார்ந்திருப்பார். அவருக்கு சாம்பார் அல்லது சட்னி வேண்டும் என்று தேவை இருக்கும். பரிமாறுபவர் சற்று தூரத்தில் வரும்போதே அவரையே வைத்த கண் வாங்காமல் பார்க்கத் தொடங்குவார். ஏற்கெனவே கையைக் குறி பார்த்து சாம்பார் வேண்டுமோ, சட்னியோ அல்லது ஸ்வீட் வேண்டுமோ, அந்த இடத்தில் ஆள் காட்டி விரலை அடையாளம் வைத்திருப்பார். பரிமாறுபவர் தாண்டிச் செல்லும்போது அவரைக் கூப்பிட எல்லாம் மாட்டார். அவரையே பார்ப்பார். அவர் திரும்பி இவரைப் பார்க்கும்போது இலையில் அடையாளம் வைத்துள்ள விரலைத் தட்டுவார். அவருக்கு எப்படி இவர் கேட்பது புரியும்? அவர் பேசாமல் சென்று விட, சகோதரி ஏமாற்றத்தில் திரும்பி என்னைப் பரிதாபமாகப் பார்ப்பார்.

                                        
 
அருகிலேயே இருந்த படிக்கட்டுகளைக் காண்பித்த என் சகோதரி "நான் எஸ்கலேட்டரில் ஏறியதே இல்லை" என்று கூறி அது எப்படி இருக்கும் என்று விசாரித்துக் கொண்டிருந்தார். அதில் ஏறும்போது எப்படி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றெல்லாம் சகோதரி கணவர் கூறிக் கொண்டிருந்தார்.

அறிவிப்புப் பலகையில் 4வது நடைமேடை
க்கு வண்டி வந்து சேரும் என்று அறிவிப்பு வரவே, நாங்கள் எப்படி அங்கு செல்வது என்று பார்த்து விட்டு, சகோதரி கணவரிடம் 'படி ஏறி அந்தப் பக்கம் சென்று விடலாம்' என்று சொன்னேன். வைகை, பல்லவன் வரும் நடைமேடையில் நாங்கள் நின்று கொண்டிருந்தோம். அக்காவை எஸ்கலேட்டரில் இந்த வயதான காலத்தில் ஏற்றி ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்பது என் கருத்து.

                                     
 
"அவள் எஸ்கலேட்டரில் ஏறியதில்லை என்கிறாள். அதிலேயே போவோம்" என்று கூறியவர் மனைவி கையிலிருந்த பையையும் தானே வாங்கிக் கொண்டு நடக்கலானார்.

"சும்மா சாதாரணமா கால் வைச்சு ஏறிடணும். குதிக்கக் கூடாது. அது பாட்டுக்க ஓடிக் கொண்டேயிருக்கும். நாம எப்பவும் சாதாரணமா நடக்கறா மாதிரி அதில் ஏறி விட வேண்டும்" என்று வழிமுறைகளை மறுபடி மறுபடி சொல்லிக் கொண்டே நடக்க, சகோதரி முகத்தில் பயத்துடன் கூடிய ஆர்வம் தெரிந்தது.

நான், 'ஆரம்பத்தில் இங்குதான் இறங்கத் தெரியாமல் இறங்கி அதிலேயே கால் மாட்டிக் கொண்டு' என்று
விபத்து நேர்ந்த சிறுமி பற்றி சொன்னேன். மாமா என்னை முறைத்தார். 

                                            
                                              
அந்த இடமும் வந்தது. எல்லோரும் கூட்டம் கூட்டமாக அதில் சென்று ஏறிக் கொண்டிருந்தார்கள். எவ்வளவு சொல்லியும். அல்லது நிறைய எச்சரிக்கைகள் சொல்லிக் குழப்பியதாலேயே அக்கா அந்த இடம் வந்ததும் தண்ணீருக்குள் இறங்குபவர் போல ஆழம் பார்க்கத் தொடங்க, கணவர் "அதான் சொன்னேன்ல" என்று அதட்டிய அதட்டலில் 'டொம்' மென்று 'உள்ளே' குதித்தார். "இப்ப நடக்கணுமா, வேண்டாமா" என்றார் பின்குறிப்பாக.

"நாங்கள் லேட் ஆச்சுன்னா அப்படியே இதிலேயே ஏறி ஓடுவோம். நீ அப்படியே நில்லு! அதுவே மேலே போகும்"


"முதல் வரி தேவையா இப்போ?" என்றேன்.

"நீ சொன்னதுக்கு இது பெரிய விஷயம் இல்லை" என்றார்.

"இறங்கும்போதும் குதிக்காமல் கேஷுவலா நடந்து தாண்டு" என்றார் மனைவியிடம்.


மறுபடியும் சகோதரி முகத்தில் தீவிரம். இறங்குமிடம் நெருங்கியது. காத்திருந்து மறுபடி குதித்து பேலன்ஸ் செய்து நின்றார். இரண்டொருவர் திரும்பிப் பார்த்து விட்டுச் சென்றனர்.

வலது பக்கம் திரும்பி 4 வது நடைமேடையை
த் தேடினோம். நாங்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட ஒருவர் திரும்பி, "அப்படியே கீழே இறங்குங்கள்" என்றார்! (ஒரு மாதிரியாகப் பார்த்ததாகத்தான் நினைவு!!)

                                       

எனக்குப் புரிந்தது. இறங்கினோம். மாமாவுக்குச் சந்தேகம். "ஸ்ரீ... இது அதே பிளாட்பாரம் மாதிரி இல்லை? நாம் அங்கேயே இறங்கி விட்டோமோ?"

"அட ஆமாம்! வாங்க"


அவர் அப்படியும் படிக்கட்டின் ஓரம் வழியாக நடந்துசென்று ஆராய்ந்து விட்டு வந்து சிரிக்கத் தொடங்கினார்.

ஆக, எழும்பூர் முதல், 4 வது நடைமேடை
க் குழப்பத்தில் எங்கள் சகோதரியின் எஸ்கலேட்டர் ஆசை தீர்ந்தது. ரொம்ப நேரம் கண்ணில் நீர் வர, சிரித்துக் கொண்டிருந்தோம்.

27.3.13

இலக்கியம்...

  
இலக்கியம் பற்றி இரு பிரபலங்களின் எழுத்துகள் இங்கே.


1)
                                                     

"ஒரு தேசத்தின், ஒரு நாகரீகத்தின், ஒரு காலத்தின் ஒரு வளர்ச்சியின்,  ஒரு வாழ்க்கையின் உரைகல் இலக்கியம்.

ஓர் எழுத்தாளன் ஆத்மசுத்தியோடு எழுதுகிறானே, அது கேவலம் பிழைப்போ அல்லது ஒரு தொழிலோ அல்ல.  அது ஒரு தவம்!  நீங்கள் கதை என்று எதை நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே...  அது காலத்தின், ஒரு வாழ்க்கையின் சாஸனம்.

                                                    
அதை உங்கள் திருப்திக்காகவோ, எனது திருப்திக்காகவோ கூட நான் எழுதிக் கொள்ள முடியாது. உங்களை ஏமாற்றவோ, என்னை நான் ஏமாற்றிக்கொள்ளவோ கூட
தை நான் எழுதக் கூடாது. இலக்கியத்தில் வெற்றி என்பது உங்களது புகழ்ச்சி அல்ல; எனது அகம்பாவமும் அல்ல. உங்களை வெல்வது வெற்றியே அல்ல... சில சமயங்களில் அதுவே ஒரு வீழ்ச்சி.  இலக்கியத்தில் வெற்றி என்பது காலத்தை வெல்வது. உங்களைக் கடந்து செல்வது என் வெற்றி.  நீங்களே உங்களைக் கடந்து செல்வதற்கு உதவி செய்வது இலக்கியத்தின் வெற்றி. அதற்கு இன்னொரு பெயர் வளர்ச்சி.

........................................................................................................................................................................

......................................................................................
............................................................................................................
....................................................................................................................

இலக்கியத்தில் ஈடுபாடில்லாதவர்கள், இலக்கிய ஆசிரியர்களின் பெருமையை உணராதிருப்பது பொருட்படுத்தத் தகுந்த விஷயமல்ல. ஆனால் இல்லக்கியத்தின்மீது மாளாத காதல் கொண்டு விட்டதாக மடலூர்ந்து கொண்டிருப்பவர்கள் இந்த மொழிக்காக, இந்தக் கலாச்சாரத்துக்காக சர்வபரித்தியாகம் செய்யத் தயாராயிருப்பவர்க
ள் போல் காட்டிக் கொள்பவர்கள் கூட இலக்கியத்தின் தலைவிதியை எழுதுபவனை ஏதோ கிள்ளுக் கீரை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
                                       

 
இதையெல்லாம் வெளியில் சொல்வது அவமானம் என்று நான் கருதவில்லை. அவமானமெனினும் அதை மறைத்துப் பயனில்லை. எனவேதான் என்னோடு, எனது கருத்துகளோடு, எனது வாழ்வியல் நெறிகளோடு ஒத்துப் போகக் கூடிய, உடன்பாடு காணக்கூடிய, முகம் தெரியாத வாசகர்கள்,முகம் தெரிந்த நண்பர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் என்னைப் பாராட்டியபோதிலும் - நமது சமூகத்தின் பொது நிலையைப் பிரதிபலிக்கும் இதற்கு மாறான கருத்துகளையும் கடிதங்களையும் முதன்மைப் படுத்தி கவலையோடும் பொறுப்போடும் சிந்திப்பது எனது கடமை என்று நான் நினைக்கிறேன்."


==================================================
 
2)
                                                          

"இலக்கியம் என்பது சமூகத்தின் கண்ணாடி. அவ்வளவுதான் மாற்றி அமைக்க அது பயன்படாது.சமூகம் இலக்கியத்திவிட மிக மிகச் சிக்கல் வாய்ந்தது. மக்களுடைய பிரச்னைகள் பற்றி இலக்கியம் பேசலாம். ஒரு பிரஞ்சுப் புரட்சிக்கு இலக்கியம் தூண்டுகோலாக இருந்தது மாதிரியான நிலைமை எல்லாம் இப்ப இல்லை. இலக்கியத்துனால ஒரு மெலிதான விழிப்புணர்வைக் கொண்டு வரலாம் இலக்கியத்துனால சமூகத்தை மாற்ற முடியும் என்பது உண்மையாயிருந்தா தமிழ்நாட்டைப் போல மாறி இருக்கக் கூடிய சமூகம் வேறு எதுவும் இருக்க முடியாது.

                                                        
 
இலக்கியம் என்பது ஒரு சமூகத்தின் அடையாளக்குறி. கேரளம், மகாராஷ்டிரம், வங்காளம் இங்கேயிருந்து வர்ற இலக்கியங்களைப் பாருங்க. அந்தப் பிரதேசங்களுடைய வாழ்க்கை முறை தெரியுது.

                                                    

நம்ம சமூகத்தில் உள்ள அடக்குமுறை மாதிரி உண்டா? ஏன் அந்த மாதிரி இலக்கியங்கள் வரலே? நமக்கு ஒரு தட்டுல இலக்கியம் இருக்குது. அதுக்கு மேல் அடுக்குல அரசியல் இருக்கு. அதுக்கு மேல சினிமா இருக்குது. எல்லாத்தையும் போட்டு இங்க குழப்பிட்டாங்க.

                                               
 
சிவராம காரந்த் போன்றவர்கள் 400 பக்கம் நாவல் எழுதினா உட்கார்ந்து படிக்கிறாங்க சார்.. நம்ப ஊர்ல எங்க படிக்கிறான்?

இலக்கியத்தைப் பற்றி சரியான உணர்வு தமிழில் ஏற்படாததற்கு நம்பகிட்ட உள்ள அரசியலும் வெகுஜனப் பத்திரிகைகளும்தான் காரணம்"

25.3.13

என்ன அது?

                  
அடுத்த திங்கட்கிழமை, எங்கள் ப்ளாக் வாசகர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு வரப் போகின்றது. ஒருவேளை அதற்கு முன்பே கூட அந்த அறிவிப்பு வரலாம். 
                  
ஒவ்வொரு நாளும் எங்கள் ப்ளாக் படிப்பவர்கள் எதற்கும் தயாராக இருங்க. 
                     
க்ளூ: 5 - 1 = 4. / or 1 + 5 = 6. or simply 1 & 6.
                  
ஒரு வாரத்திற்கு ஒருமுறைதான் படிப்பவர் என்றால், அநேகமாக அந்த அறிவிப்பை தாமதமாகத்தான் பார்ப்பீர்கள். அதற்குமேல் நாங்கள் ஒன்றும் சொல்வதற்கில்லை. 
                 
நாங்கள் முன்பே எச்சரிக்கை செய்யவில்லை என்று குறைப்பட்டுக் கொள்ளாதீர்கள். 
                  
இதுதான் முன் அறிவிப்பு. 
    
கருத்துரையில் யாராவது சரியாக யூகிக்கிறார்களா என்று பார்ப்போம். 
              

23.3.13

பாசிட்டிவ் செய்திகள் மார்ச் 17, 2013 முதல் மார்ச் 23, 2013 வரை.



எங்கள் B+ செய்திகள்.

- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.

- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்.... 


===============================================================  
1) "சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல; உறுதியான மனம் இருந்தால் போதும்' என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளார், பார்வை குன்றிய, கால்கள் செயலிழந்த இளைஞர் ஒருவர். தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் நடத்திய பி.ஏ., தேர்வில் முதல் ரேங்க் பெற்று, தங்கப்பதக்கம் வென்றுள்ளார், இந்த மாற்றுத்திறனாளி இளைஞர்.

 
                                          
பல்லடம் அருகேயுள்ள சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி - மல்லிகா தம்பதியர். இவர்களின் ஒரே மகன் சங்கர் சுப்ரமணியம், 26. பிறவியிலேயே 90 சதவீத பார்வை குறைபாடு உடையவர்; இரண்டு கால்களுக்கும் வளர்ச்சியில்லாமல், நடக்க முடியாது. 

பெற்றோர் உதவியின்றி நடமாட முடியாது. பார்வை குறைபாடு காரணமாக, உருவங்கள் நிழல்களாக தான் தெரியும்; வண்ண வேறுபாடுகளை முழுமையாக அறிய முடியாது. கண்ணொளி இல்லாவிட்டாலும், காதொலியை ஆழமாக மனதில் பதிய வைக்கும் அபார திறன் ஒன்று மட்டுமே, தெய்வம் தந்த வரம்; எந்த விஷயத்தையும் எளிதில் மறந்துவிடாத, நுட்பமான ஞாபக சக்தி உண்டு. அதைவிட மேலாக, சாதிக்க வேண்டும் என்ற திடமான உறுதி மனதில் உண்டு. இதுவே, சங்கர் சுப்ரமணியத்தை சாதனையாளராக மாற்றி வருகிறது. 

முழுமையாக பார்வை குறைபாடு இருப்போர், "பிரெய்லி' முறையில் படிக்க முடியும்; ஆனால், சங்கர் சுப்ரமணியத்துக்கு 10 சதவீத பார்வை இருக்கிறது; எனினும், பாட புத்தகங்களை படிக்க முடியாது; பிறரை வாசிக்கச் சொல்லி தான், இவரால் படிக்க முடியும். பாடங்களை மனம் பாடம் செய்து, "ஸ்கிரைப்' ஆசிரியர் உதவியுடன், தேர்வு எழுதி வருகிறார்.கணுவாய் ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளியில் படித்து, 10ம் வகுப்பு தேர்வில் 62 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்தார். பாட புத்தகத்தை புரட்டாமல், பள்ளியில் ஆசிரியர்கள் சொல்லித் தந்த பாடங்களை மனதில் பதிய வைத்தே, இவர் தேர்வில் சாதித்து காட்டியுள்ளார். 

தற்போது, சென்னை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பி.ஏ., பொருளாதாரம் பட்டப்படிப்பில், முதல் ரேங்க் வாங்கி, தங்கப்பதக்கம் வென்றுள்ளார். பல்கலையில் நடந்த விழாவில், கவர்னர் ரோசைய்யா தங்கப்பதக்கம் வழங்கி, சாதனை மாணவர் சங்கர் சுப்ரமணியத்தை கவுரவித்துள்ளார். இவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி, பல்லடம் அருகேயுள்ள காற்றாலையில் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். தாய், தந்தையின் தளராத ஊக்கமும், அரவணைப்பும், சிறப்பாசிரியர்களின் பயிற்சியும் சங்கர்சுப்ரமணியத்தை, படிப்பின் சாதனை படிகளில் ஏற வைத்துள்ளது.

"பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெறுவதே, எனது அடுத்த லட்சியம்,'' என்கிறார், சங்கர் சுப்ரமணியம்.அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி, தாய் மல்லிகா கூறியதாவது: பிறவியிலேயே கால்கள் ஊனம், கண் பார்வை குறைவுடன் பிறந்ததால், குழந்தையை வளர்ப்பதும், படிக்க வைப்பதும் சிரமம் என கருதினோம். எனினும், அர்ப்பணிப்புடன் வளர்த்து வந்தோம். இன்று, அந்த குழந்தை சாதனை இளைஞனாக மாறி எங்களுக்கு பெருமை சேர்த்துள்ளான். முதலில், பள்ளியில் சேர்க்க மிகவும் சிரமப்பட்டோம்; பல பள்ளிகளிலும் அட்மிஷன் கிடைக்கவில்லை. கணுவாய் ஹோலிகிராஸ் பள்ளியில், சேர்த்துக் கொண்டனர். அங்குள்ள ஆசிரியர்களின் ஊக்குவிப்பு, சிறப்பு ஆசிரியர்கள் ரகுபதி ஐயர், பத்மநாபன் ஆகியோரின் பயிற்சி ஆகியவை, எங்கள் மகனின் திறமையை வெளியே கொண்டு வர மிகவும் உதவியது.
 

சங்கர் சுப்ரமணியத்துக்கு இசையிலும் ஆர்வம் உண்டு. கோவை அரசு இசைக்கல்லூரியில் குரலிசை பிரிவில் படிக்க "அட்மிஷன்' கிடைத்தது. பார்வை குறைபாடு மற்றும் கால் ஊனம் உள்ள மாற்றுத்திறனாளி என்பதை கருத்தில் கொண்டு, வாரம் இரு முறை மட்டும் வகுப்புக்கு வர தனிப்பட்ட சலுகை அளிக்கப்பட்டது. ஆனால், சுல்தான்பேட்டையில் இருந்து கோவைக்கு காரில் வர வேண்டும் என்றால், தினமும் 1,000 ரூபாய் செலவாகும் என்பதால், பயிற்சியில் பங்கேற்க முடியவில்லை. எங்கள் மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அரசு வேலை அளித்து உதவ வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.



2) தனது கண்டுபிடிப்பின் மூலம் விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த திரு பி. டேவிட் ராஜா பியூலா. இவர் நெல்லை மாவட்டம் கடையத்தில் தோட்டக்கலை உதவி இயக்குநராக பணியாற்றுகிறார். 

                                                     .
நெல்லை மாவட்டத்தின் பிரதான தொழில் விவசாயம்தான். அதுவும் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் பகுதியான கடையம் போன்ற பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் மல்லிகை, கத்தரிக்காய் போன்ற பயிர்களை பயிரிடுவது வழக்கம்..

ஆனால் அவர்களின் பிரச்சினை பயிர்களைத் தாக்கும் பூச்சிகள்..குறிப்பாக மல்லிகையை பாதிக்கும் வெள்ளை ஈக்கள் மற்றும் கத்தரியைத் தாக்கும் கத்தரி தாய் அந்து பூச்சி.. இந்த இரண்டையும் ஒழிக்கும் கருவி உண்மையில் அப்பகுதி விவசாயிகளுக்கு ஒரு வரம்தான். இதைத்தாண்டி இந்தக் கருவி ஒளி தரும் விளக்காகவும் பயன்படுகிறது. 

மேலும், கொசுக்களையும் ஒழிக்கிறது. இந்தப் புதிய கருவியினால் கடையம் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் பூச்சிக்கொல்லிக்காக பயன்படுத்திய செலவும் கணிசமாக குறைந்துள்ளதோடு பணி நேரமும் மிச்சமாகியுள்ளது. பொதுவாக இந்தப் பகுதி விவசாயிகள் 7 நாட்களுக்கு ஒரு முறை பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தனர். அந்தச் சமயத்தில் தான் டேவிட் தனது கண்டு பிடிப்பான ‘டேவிட்டின் சூரிய ஒளி விளக்குப் பொறி’யை விவசாயிகள் மத்தியில் அறிமுகப்படுத்தினார். 

முதலில் 1 ஏக்கர் நிலத்தில் இரண்டு கருவிகள் பொருத்தப்பட்டன. மேலும் அந்தப் பகுதியைச் சேர்ந்த 35 விவசாயிகளுக்கு இந்தக் கருவி கொடுக்கப்பட்டது. இந்தக் கருவி தொடக்கத்தில் 3 தாய் அந்துப் பூச்சிகளை பிடித்த நிலையில் படிப்படியாக 500 அந்துப் பூச்சிகளைப் பிடிக்கத் தொடங்கியது. இதனால் 7 நாட்களுக்கு ஒரு முறை பூச்சிக் கொல்லி மருந்து தெளித்த விவசாயிகள் அதை 15 நாட்களுக்கு ஒரு முறையாக மாற்றினர். 

இதனால் விவசாயிகளின் செலவும் பாதியாகக் குறைந்தது. ஒரு ஏக்கர் மல்லிகை தோட்டத்திற்கான பூச்சிக்கொல்லி மருந்து செலவு ரூபாய் 24,000 த்தில் இருந்து ரூ. 12,000 ஆகவும், ஒரு ஏக்கர் கத்தரித் தோட்டத்திற்கான செலவு ரூபாய் 10,000 ல் இருந்து ரூபாய் 5000 ம் ஆகவும் குறைந்துள்ளது. இந்த கருவியின் விலை ரூபாய் 8000 மட்டுமே. இரண்டு ‘டேவிட்டின் சூரிய ஒளி விளக்குப் பொறி’யை வாங்கும் கத்தரி விவசாயிகளுக்கு 3 மாதத்தில் ரூபாய் 5000 மிச்சமாகும். 

இதே போல் மல்லிகை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு ரூபாய் 12,000 மிச்சமாகும். பொருளாதார லாபங்கள் மட்டுமின்றி இந்த கருவியைப் பயன்படுத்துவதால் பூச்சிக்கொல்லி மருந்து உபயோகத்தை கட்டுப்படுத்த முடியும். இது நமது சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும். 

இதைத்தாண்டி இந்த கருவியை நாம் வீடுகளிலும் பயன்படுத்த முடியும் என்பது மற்றொமொரு சிறப்பு. வீடுகளில் இந்த கருவியை பயன்படுத்துவதன் மூலம் கொசுக்களை நாம் கட்டுப்படுத்த முடியும். 

இதனால் நமது ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் என்பதும் கூடுதல் மகிழ்ச்சிதான். இப்படி பல்வேறு வகைகளிலும் பயனளிக்கக் கூடிய இந்த கருவியை வாங்க விரும்புபவர்கள் கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

திரு பி டேவிட் ராஜா பியூலா உதவி இயக்குனர், தோட்டக்கலைத் துறை,
கடையம்,
திருநெல்வேலி மாவட்டம்,,
தமிழ்நாடு.
மின்னஞ்சல் microeconomicsdavid@yahoo.co.in
அலைபேசி - 9486285704


3) கர்ப்பப்பை புற்றுநோய் தீர்க்கும் ஆன்டிவைரஸ் சித்தா மருந்து


                           
பெண்களின் கர்ப்பப்பை புற்றுநோய்க்கு சித்தா முறையில் ‘ஆன்டி வைரஸ்’ மருந்து கண்டறிந்து தமிழக அரசின் மருந்து கட்டுப்பாடு மைய அனுமதி பெற்றுள்ளார் சூரியா பாரத் மருத்துவமனையின் சித்த, அலோபதி டாக்டர் எஸ்.எஸ்.மணிகண்டன். இதுபற்றி அவர் மேலும் கூறுவதாவது:
நாட்டில் நடக்கும் பல குற்றங்களுக்கு காரணம் மது. போதை வெறியில் இருப்பவர்களால்தான் பல கொடூர செயல்கள் நடக்கின்றன. கஞ்சா, அபின், பிரவுன்சுகர், புகையிலை பழக்கங்களும் இதுபோன்றதே. இவை சமூகத்தை மட்டுமின்றி உடல்நலத்தையும் பாதிக்கின்றன. பான்பராக், புகையிலை பழக்கத்தால் வாய் புற்றுநோய் வரவும் வாய்ப்பு உள்ளது. உடலில் நீர் பற்றாக்குறை, மயக்கம், ஆக்சிஜனை சுவாசிக்க முடியாமல் போவது போன்ற பல பாதிப்புகளும் அடுத்தடுத்து ஏற்படக்கூடும்.

மதுவில் இருக்கும் எத்தனால் என்ற வேதிப்பொருள்தான் இத்தனை பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. மதுபோதையில் இருந்து இளைஞர்களை விடுவித்து அவர்களை நல்வழிப்படுத்தினால் மட்டுமே இத்தகைய பாதிப்புகளை போக்க முடியும்.

போதை பழக்கம் உள்ளவர்களை அதில் இருந்து மீட்பதற்காக, நான் தனிப்பட்ட முறையில் ஆராய்ச்சி செய்து ஆரோக்கியம் தரும் புகையிலையை உருவாக்கியுள்ளேன். இதில் நிக்கோடின் இருக்காது. இந்த புகையிலை ஆரோக்கியம் தரக்கூடியது.

இதுபோல, பெண்களுக்கான கர்ப்பப்பை புற்றுநோய்க்கும் சித்தா முறையில் ‘ஆன்டி வைரஸ் மருந்து’ கண்டுபிடித்து அதற்கு தமிழக அரசின் மருந்து கட்டுப்பாடு மையத்தின் அனுமதி பெற்றுள்ளேன். ரத்த கட்டிகள், டெர்மாய்டு சிஸ்ட், பெல்விக் இன்பிளமேஷன் நோய்கள் ஆகியவற்றை ஆபரேஷன் இல்லாமலே இந்த மருந்து மூலம் குணமாக்கலாம்.
 
4) ஏதோ ஒரு விஷயம் அவரவர் உள்ளத்தினுள் ஒடிக்கொண்டே இருக்கும், அந்த விஷயத்தை யாராவது தூண்டிவிட்டால் போதும், பிறகு அவர் சுடர்விட்டு பிரகாசிப்பார்.

அப்படி பிரகாசித்துக்கொண்டு இருப்பவர்தான் ரேகா விஜயசங்கர்.
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தட்சிணசித்திரா கலைக்கூடத்தின் நூலராகவும், உதவியாளராகவும் உள்ளே சென்ற ரேகாவிற்கு புகைப்படக்கலையின் மீது ஒரு கண்.
இதைப்புரிந்து கொண்ட கலைக்கூட நிர்வாகத்தினர் கொடுத்த ஒத்துழைப்பு, செய்திட்ட உதவிகள் காரணமாக மள,மளவென வளர்ந்த ரேகா இப்போது கலைக்கூடத்தின் ஆஸ்தான புகைப்படக்கலைஞராவார்.

கலைக்கூடத்தின் சார்பில் வெளிவரும் அனைத்து புத்தகங்கள்,மற்றும் வழிகாட்டிகளில் இவரது புகைப்படங்களே அலங்கரிக்கின்றன.


இது போக மழை, அய்யனார், ஆடிப்பெருக்கு, கூடை, முகங்கள் என்று பல்வேறு தலைப்புகளில் இவரது தனி நபர் புகைப்படக் கண்காட்சிகள் நடந்துள்ளது.


மேலும் சென்னையில் "ஆர்ட் சென்னை' நிறுவனம் நடத்திய புகைப்பட போட்டியில் கலந்து கொண்டு ஆயிரம் பேரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். இவரது பரிசு பெற்ற அந்த புகைப்படம் இப்போதும் வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்தின் முகப்பில் பிரம்மாண்டமாய் அலங்கரித்துக் கொண்டு இருப்பதை அந்த பக்கம் போனால் பார்க்கலாம்.


இதோ இப்போது "வேஷம்' என்ற தலைப்பில் தட்சிணசித்ராவில் புகைப்பட கண்காட்சியினை நடத்தி வருகிறார், கடந்த வாரம் துவங்கிய இந்த கண்காட்சி வருகின்ற 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.


தட்சிணசித்ராவில் நடன நிகழ்ச்சி நடத்த வந்த கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநில கலைஞர்கள் தங்களது நடனத்தின் பொருட்டு முகத்தில் போட்டுக்கொண்ட வேஷங்களை மட்டும் தொகுத்து புகைப்படக் கண்காட்சியாக வைத்துள்ளார்.


இந்த கண்காட்சியினை நாட்டின் தொன்மை மற்றும் சரித்திரம் தொடர்பான விஷயங்களை அழகாக ஆங்கிலத்தில் புத்தகமாக்கி வரும் எழுத்தாளர் சித்ராமாதவன் துவக்கிவைத்தார், ஓ
வியர் கீதா ஒருங்கிணைத்துள்ளார்.

அரங்கத்தில் ஐந்து பேர் இருந்தாலும் சரி, ஐயாயிரம் பேர் இருந்தாலும் சரி, சமரசமே செய்துகொள்ளாமல் ஆடும் கலைஞர்களின் அர்ப்பணிப்பை அருகே இருந்து பார்த்து வியந்திருக்கிறேன். அவர்கள் முகங்களில் மட்டும்தான் வேஷம் அகங்களில் கொஞ்சமும் கிடையாது, மிகவும் வெள்ளந்தியான மனிதர்கள், மக்களை மகிழ்விக்கும் கலைக்காக தங்களை அவர்கள் அதிகப்படியாக வருத்திக் கொள்கிறார்கள், அதனை என் பார்வையில் வெளிப்படுத்தும் சின்ன முயற்சியே இந்த புகைப்படக் கண்காட்சி என்று கூறி முடித்தார் ரேகா விஜயசசங்கர்.
(இந்தச் செய்தி படிக்கும்போது யார் நினைவுக்கு வருகிறார்கள்?) 

22.3.13

இப்படி எல்லாம் நடக்குமா? ஏகாம்பரம் ஜாக்கிரதை!

             
              
அமவுண்ட் என்ன? எங்கே, யார் கொண்டுபோய் கொடுக்கணும்? போலீசுக்குப் போகலாமா? எலெக்டிரானிக் சாமியாரிடம் சொல்லலாமா? என்று மனம் அவசரம் அவசரமாக, சாய்ஸ் இல்லாத வினாத்தாள் தயாரிக்கத் தொடங்கியது.  பரீட்சை எழுத வேண்டிய ஆளும் நாந்தான். 
             


கூகிள் ஏகாம்பரம் என்னிடம் ஸ்ரீராமின் நம்பர் கேட்டபொழுது நான் கொடுத்திருக்கக் கூடாது. லேட் திங்கிங். இப்போ என்ன செய்யலாம்? அப்படியே விட்டுவிடலாமா? (பல்லாவரம் பாழடைந்த பங்களா, இப்போ ஸ்ரீராம் இருக்கின்ற வீட்டைவிட நன்றாகத்தானே இருக்கிறது?) 
                 
இரு இரு - இப்போ தேவை கிளியர் திங்கிங். தியானம் பண்ணலாமா? ஐயோ ஏதோ தீப்பற்றி எரிந்தபோது யாரோ ஒருவன் வீணை வாசித்தானாமே? சீச்சீ அது வீணை இல்லேடா. ஆமாம் ரொம்ப முக்கியம். அவன் வீணை வாசிக்கட்டும் அல்லது முகர்சிங் வாசிக்கட்டும். இப்போ நீ என்ன செய்யப் போறே?  
               

அந்த சமயத்தில் அலைபேசியில், அறிமுகமில்லாத ஒரு எண்ணிலிருந்து  அழைப்பு. 
                  
"ஹலோ, குப்புசாமி ஹியர். "
               
"மாமா நான் ஸ்ரீராம் பேசறேன். "
                   
"ஹலோ ஸ்ரீராம்! எங்கே இருக்கே? எப்பிடி இருக்கே? உன்னுடைய மொபைல் எங்கே? பல்லாவரம் பங்களா சௌகரியமா இருக்கா? ஏதேனும் சாப்பிட்டியா?"  
               
"மாமா! என்ன ஆச்சு உங்களுக்கு?"  
                   
"எனக்கு ஒன்றும் ஆகலை! உன்னைக் கடத்திய ஏகாம்பரம் எவ்வளவு பணம் கேட்கிறார்? எங்கே கொண்டு வந்து கொடுக்கணுமாம்? பழைய நோட்டா, அல்லது புது நோட்டா? "
                    
"மாமா - ஒரேடியா குழம்பிப் போயிருக்கீங்க / குழப்புறீங்க ! என்னை யாரும் கடத்தவில்லை. "
                
"அப்போ பணம் வேண்டாமா?" 
               
"பணம் நீங்க கொடுத்தா வாங்கிக்கறேன். உங்களைப் போன்ற (கஞ்சக் கருமி?) ஆட்களிடம் பணம் வாங்கினால், நிறைய பெருகும் என்று சொல்வார்கள்! "
                 
"ஸ்ரீராம் மேலும் குழப்பாம, இன்று காலையிலிருந்து நடந்தவைகளைக் கூறு. "   
*********   ************** 
               
இன்று ஆடிட் என்பதால், வீட்டை விட்டு, சீக்கிரமாகவே கிளம்பி அலுவலகம் சென்றேன். இன்றைய ஆடிட்டுக்காக நேற்று வரை தினமும் அலுவலகத்தில் நானும், எனது நண்பன் ஸ்ரீகாந்தும் இரவு பகல் பாராமல் எல்லா கோப்புகளையும் தயார் செய்தோம்.அப்பொழுதெல்லாம் மானேஜரும் எங்க கூடவே இருந்தார்.  இன்று அலுவலகம் வந்ததும், தலைமை அலுவலகத்திலிருந்து தகவல் வந்தது. ஆடிட்  அடுத்த வாரத்திற்கு ஒத்திப் போடப்பட்டது. இதைக் கேள்விப்பட்டவுடன், எங்கள் மூவருக்கும் ஒரே சந்தோஷம். மானேஜரிடம், நானும் ஸ்ரீகாந்தும் இன்று ஒருநாள் லீவு கேட்டோம். அலுவலகத்திற்காக ஆடிட்டிற்காக நாங்கள் நிறைய நேரம் ஏற்கெனவே செலவழித்திருந்ததால் அவர், 'ஒ கே என்ஜாய்' என்று சொல்லி அனுப்பிவிட்டார். 
          
அப்போதான் ஏர்பெல் ஏகாம்பரம் என்று ஒருவர் அலைபேசியில் அழைத்தார். அவர், உங்களிடம் ஏற்கெனவே பேசி, உங்களுடைய அலைபேசியை டூ ஜி யிலிருந்து த்ரீ ஜி யாக மாற்றிவிட்டதாகவும், இப்போ உங்க அலைபேசியில் எல்லாம் மும்மடங்கு வேகமாகவும், கிளியராகவும் வருவதாக நீங்க மகிழ்ச்சியாகத் தெரிவித்ததாகவும் கூறினார். நீங்கதான், அவருக்கு என்னுடைய அலைபேசி என்னைக் கொடுத்ததாகவும் கூறினார். 'அதே போல என்னுடைய அலைபேசியையும் டூ ஜி யிலிருந்து த்ரீ ஜியாக மாற்றலாமா?' என்று கேட்டார். 
             

நான் சந்தோஷ மூடில் இருந்ததாலும், நீங்க ரெகமண்ட் பண்ணின ஆள் என்பதாலும், சரி என்று ஒப்புக் கொண்டேன். அவர் உடனே, உங்க செல் ஃபோனை குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் சுவிட்ச் ஆஃப் செய்து வைத்துவிடுங்கள். செல்ஃபோனுக்கு / செல்ஃ போனிலிருந்து அழைப்பு எதுவும் இரண்டு மணி நேரங்களுக்கு இல்லாமல் இருப்பது நல்லது என்றார். 

செல் ஃபோனை சுவிட்ச் ஆப் செய்ய விரல் வைத்த போது உங்களிடமிருந்து கால் வந்தது. நீங்க 'ஏகாம்பரம் போன் செய்தாரா, என்ன செய்யலாம்'என்று கேட்டவுடனேயே 'அவர் சொல்வதுபோலவே செய்துவிடப் போகின்றேன்' என்று சொல்லி, செல்ஃபோனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டேன். அதுமட்டும் இல்லை. சுவிட்ச் ஆப் செய்த செல்ஃபோனை அலுவலக மேஜை டிராயரிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டேன். 
               

நானும் ஸ்ரீகாந்தும் சினிமா பார்க்க வந்தோம். இப்போ இண்டர்வல். வெளியே வந்ததும், இங்கே உள்ள கடையிலிருந்து, வீட்டுக்கு ஃபோன் செய்து, ஆடிட் ஒத்திப் போடப்பட்டது முதல், சினிமா பார்க்க வந்த விவரங்கள் வரையிலும் சொன்னேன். 
                

அப்போதான், கூகிள் ஏகாம்பரம் பற்றி உங்களிடம் பேசவேண்டும் என்று நீங்கள் கேட்டுக் கொண்டது தெரிந்தது. யாரு கூகிள் ஏகாம்பரம்? 
               
"அடக் கடவுளே! நடந்து கொண்டிருக்கும் அமளி துமளி எதுவுமே உனக்குத் தெரியாதா! சரி, எல்லா விவரமும் திருக்கடையூர் வரும்பொழுது சொல்கின்றேன். இப்போ நீ செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். உடனே மதுரைக்கு போன் செய்து, "ஏற்காடு ஏகாம்பரம் கேட்கின்ற பணம் எதுவும் கொடுக்காதீர்கள்; நான் பத்திரமாக இருக்கின்றேன்.' என்று சொல்லிவிடு"
          
(இனிமேல் இதில் தொடர ஏதாவது இருக்கின்றதா? ஏகாம்பரம் பற்றி துப்பறிய எ சா & கா சோ துப்பறியும் நிறுவனத்திடம் சொல்வோமா,  வேண்டாமா?)