10.12.13

அலேக் அனுபவங்கள் 25:: எதிர்பாராத விடுமுறை தினம்.

                        
திங்கட்கிழமைகள் அசோக் லேலண்டு (எண்ணூர்) தொழிற்சாலைக்கு வாராந்திர விடுமுறை. 
     
சாதாரணமாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும், மற்ற மக்கள் எல்லோரும் பள்ளிக்கூடம், கல்லூரி, அலுவலகம் என்று சென்றுவிடுவார்கள். நான், வெளியூரில் இருக்கின்ற அப்பா, சகோதரர்கள் எல்லோருக்கும் கடிதங்கள் எழுத, இந்த நாளைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன். புரசவாக்கத்திலிருந்து வேப்பேரி போஸ்ட் ஆபீஸ் வரை நடந்து சென்று, கார்டு, கவர், இன்லண்டு லெட்டர் எல்லாம் வாங்கி வந்து, கை ஓயும் வரை கடிதங்கள் எழுதி, மாலை ராக்ஸி தியேட்டருக்கு எதிரே ஒரு மொபைல் போஸ்ட் வாகனம் வரும், அதிலே போஸ்ட் செய்துவிடுவேன். 
     

அப்பா நாகையிலும், புரசைவாக்கத்தில் என்னுடன் இருந்த அண்ணன் தவிர மற்றவர்கள் சோலையார், அருவங்காடு, செங்கிப்பட்டி என்று வெவ்வேறு ஊர்களில் இருந்தார்கள். அவரவர்களுக்குத் தகுந்தவாறு கடிதங்கள் எழுதுவேன். எல்லாம் எழுதி மேலும் நேரம் இருந்தால், குமுதம் 'ஆசிரியருக்கு கடிதம்' எழுதுவேன். ஏதோ ஒன்றிரண்டு கடிதங்கள் அந்தக் காலத்தில் குமுதத்தில் பிரசுரம் ஆயின! 

அது ஆண்டு 1972. டிசம்பர் மாதம். திங்கட்கிழமை. அசோக் லேலண்டுக்கு வாராந்திர விடுமுறைநாள். அசோக் லேலண்டில் அப்ரசண்டியாக சேர்ந்து ஒரு வருடம் ஆகியிருந்தது. அன்று கிறிஸ்துமஸ் நாளும் கூட. ஒவ்வொரு திங்கட்கிழமையும், என் பேட்சில் என்னுடன் இஞ்சினீரிங் அப்ரண்டிஸ் ஆக சேர்ந்த நண்பன் ராகவேந்திரன் பெரம்பூரிலிருந்து, பஸ் பிடித்து, என் வீட்டிற்கு வந்துவிடுவான். 

இருவரும் சேர்ந்து ஊர் சுற்றக் கிளம்பிவிடுவோம். அன்று அவ்வாறு எங்கே போகலாம் என்று ஆய்வு செய்தோம். நண்பன், ஜான் வெய்ன் என்னும் ஆங்கில(ப் பட) நடிகரின் விசிறி. எனக்கு ஆங்கிலப் படங்கள் அப்போ (இப்போ கூட) அவ்வளவாகப் புரியாது. காசு சுண்டிப் போட்டுப் பார்த்ததில் அவன் ஜெயித்தான். அவன் சொல்லுகின்ற படம் என்று தீர்மானமாயிற்று. 

அவன் செலெக்ட் செய்தது, மவுண்ட் ரோடில் ஜெமினி பாலம் அருகே ஒரு தியேட்டரில் ஓடிக் கொண்டிருந்த RIO LOBO என்று ஒரு படம். ஜான் வெயின் நடித்ததாம். போய்ப் பார்த்தோம். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் 'ஆஹா ஓஹோ - இந்த இடத்துல வாத்தியார் நடிப்பைப் பாரு...' என்று சொல்லிக் கொண்டே படத்தை இரசித்துப் பார்த்தான். 
     

படம் முடிந்து வெளியே வந்து, ஜெமினி பாலம் அருகே ஓர் ஓட்டலில்,  டிபன்  சாப்பிட சென்று அமர்ந்தோம். ரேடியோவில் எம் எஸ் கோபாலகிருஷ்ணன் + சுபபந்துவராளி இசைத்தார். திடுக்கிட்டு,என்ன விஷயம் என்று உற்றுக் கேட்டோம். 

"சென்னை மாநிலத்தின் முன்னாள் முதல்வராகவும், சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் இருந்த சி இராஜகோபாலச்சாரியார் இன்று காலமானார்' என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்" 

"ஹய்யா நாளைக்கு லீவு" என்று சந்தோஷப்பட்டான் நண்பன். எனக்கும் அப்படி ஒரு நொடி தோன்றிய பொழுதும், அவனைக் கண்டித்து, 'சேச்சே அப்படி எல்லாம் பேசக் கூடாது' என்று கூறினேன். 
              
மறுநாள், ஒரு எதிர்பார்ப்புடன், வேலைக்கு சென்றோம். ஏழரை மணிக்கு எப்பவும்போல, வேலை நேரம் ஆரம்பிக்கின்றதைக் குறிக்கும் வகையில், ஃபாக்டரி சைரன் ஒலித்தது. அப்பொழுது எனக்கு டூல் ரூம் பகுதியில் ட்ரைனிங். தொழிலாளர்கள் ஆங்காங்கே சிறு சிறு கும்பலாக நின்று பேசிக் கொண்டிருந்தனர். சர்க்குலர் ஏதாவது வருகின்றதா என்று நோட்டிஸ் போர்டு பக்கம் அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்தோம். ஒவ்வொருவரும் விடுமுறை குறித்து ஆளுக்கொரு யூகம் செய்து, நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டு இருந்தோம். 
              
எட்டே கால் மணி சுமாருக்கு லாங் சைரன். லாங் சைரன் ஒலித்தால் - 'வீட்டுக்கு பெல்' அடித்தாயிற்று என்று அர்த்தம். அரக்கப் பரக்க எல்லோரும் மெயின் கேட் வழியாக பஸ் ஸ்டாண்ட், இரயிவே ஸ்டேஷன் பக்கமாக ஓடினோம். 
              
ராஜாஜி ஹால் பக்கம் சென்று யாராவது ஒரு (இறந்த) தலைவரையாவது பார்க்கவேண்டும் என்று அவ்வப்பொழுது எனக்குத் தோன்றும். நண்பன் ராகவேந்திரன்  என்னுடன் வருகிறேன் என்று கூறியதால், நாங்கள் இருவரும் எண்ணூரிலிருந்து பஸ் பிடித்து ராஜாஜி ஹால் சென்றோம். ஏறக் குறைய ஒருமணி நேரம் கியூவில்  நின்று, மறைந்த இராஜாஜி அவர்களின் பாதங்களை மிக அருகே சென்று பார்த்து, வணங்கி வந்தோம். கால் கட்டை விரல்கள் இரண்டையும் சேர்த்துக் கட்டிப் போடப்பட்ட அந்த வாட்ட சாட்டமான கால்கள் இன்றும் ஞாபகத்தில் உள்ளன. 
                             

7.12.13

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்


1) குற்றாலம் பக்கம் உள்ள ஆய்க்குடி அமர்சேவா சங்கம்-
கழுத்திற்கு கீழுள்ள உறுப்புகள் செயல்படாத ராமகிருஷ்ணன், சங்கரராமன் போன்றோரை தலைவராகவும்,செயலாளராகவும் கொண்டு செயல்பட்டுவரும் இந்த சங்கம், உடல் ஊனமுற்றோரை முன்னேற்றும் மையமாக உள்ளது.




2) இது தொடுவதாலோ, பேசிப் பழகுவதாலோ பரவாது. அறிமுகமில்லா நபரை தொட்டுப் பேசி, கொஞ்சி மகிழும் இந்த சமூகம், அந்த நபர் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிந்தால் ஒதுக்குகிறது. ஆனால், இயல்பாக பேசிப் பழகினால் போதும், நோயாளி கூட நோயை மறந்துவிடுவர். உண்மையிலேயே, எய்ட்ஸ் நோய்க்கு கண்டுபிடிக்கப்பட்ட மருந்து இதுதான் என்கிறார் மர்ஜுக் பேகம்.





  இவரும், இவரது கணவர் ரியாஸும்இணைந்து மெர்சி என்ற பெயரில், கோவையில் எச்.ஐ.வி. பாதித்த குழந்தைகளுக்கான மையத்தை நடத்தி வருகின்றனர்.

3) கர்நாடகாவின் வடக்கு எல்லையில், அமைந்திருக்கின்றது குல்பர்கா. அங்கே சூரிய சக்தி உதவி கொண்டு. மாம்பழம், கொய்யாப்பழம், கரும்பு யாவும் விளைகின்றன! 


எப்படி? 

விவசாயியின் பெயர் தத்தாத்ரேயா கொல்லூர். இவருக்கு சொந்தமான வயல் இருபத்தைந்து ஏக்கர்கள்.  குல்பர்காவில், டேவல் கங்காபூர் என்னும் இடத்தில், இவருடைய பழத்தோட்டம் உள்ளது. இவர் இருபத்தொன்று சோலார் பி வி பானல்கள் (flexible photovoltaic panels) தோட்டம் அருகே நிறுவியுள்ளார். மொத்த செலவு ஆறு லட்சம் ரூபாய்கள். இந்த அமைப்பினால், இவருக்கு, காலை எட்டு மணி முதல் மாலை நான்கு மணி வரையிலும், தடை இல்லா மின்சாரம் கிடைக்கின்றது. இந்த மின்சாரம், அவருடைய பழத் தோட்டங்களுக்கும், விவசாய நிலங்களுக்கும், நீர்ப்பாசனம் செய்ய, பம்பு செட்டுகளை இயக்கப் பயன்படுகின்றது. 


மேக மூட்டமான நாட்களில் மட்டும், சூரிய சக்தி கிடைக்காது. அந்த நாட்களில் அவர், குல்பர்கா எலெக்ட்ரிக் சப்ளை கம்பெனி அளிக்கின்ற மின்சாரத்தை உபயோகிக்கின்றார். இவர் பயன்படுத்தும் சோலார் பானல்கள் இருபத்தைந்து வருட உத்திரவாதத்துடன் நிறுவப்பட்டவை. அவ்வப்பொழுது தூசி அகற்றி, சுத்தம் செய்தால் போதும்.
 (தி ஹிந்து, ஆங்கில நாளேடு. பெங்களுரு. 03-12-2013) 
                   
4) கடத்தல்காரர்களிடமிருந்து 11 குழந்தைகளைக் காப்பாற்ற தான் அவர்கள் கூட வருவதாகக் கூறி, துப்பாக்கியுடன் இருந்த அந்த நபர் அசந்த நேரம் தப்பி வந்த 14 வயது குஞ்சன் சர்மா. பள்ளியிலிருந்து வேனில் திரும்பிக் கொண்டிருந்த அந்தக் குழந்தைகள் கடத்தப்படுவதைத் தவிர்க்க வேனின் டிரைவர் டி எஸ்டேட்டின் நடுவே புத்திசாலித்தனமாக வேனை நிறுத்தி வைத்த செயலும் பாராட்டப் பட்டிருக்கிறது.


3.12.13

அடை தின்ன என்ன தடை?

             
"என்ன ராகவா? என்ன தேடிகிட்டிருக்கே?" என்று கேட்டுகொண்டே உள்ளே வந்தான் ராஜு.
     
"ஒரு மாத்திரை பாட்டில்" என்று சொன்ன ராகவன் தேடுதலில் மும்முரம் ஆனான்.  ராஜு " ஒரு மாத்திரைக்கு ஒரு பாட்டிலா?  அவ்வளவு பெரிய மாத்திரை எதுக்கு ? " என்று விளையாட்டாய் கேட்டான். 
                
மிகவும் கோபமான ராகவன், "உனக்கு என்ன தெரியும் என் கஷ்டம் ?" நேற்று ராத்திரியிலிருந்து நான் படும் அவஸ்தை எனக்கல்லவா தெரியும்? "
                 
"ஏன்? அப்படி என்ன கஷ்டம் உனக்கு ?" என்றான் ராஜு.
                
"வயிற்றில் சங்கடம்" என்று இரண்டு வார்த்தையில் பதிலளித்த ராகவனிடம் மேலும் கேட்டு, அவன் முந்தியநாள் இரவு அடை சாப்பிட்டதையும், அதிலிருந்து வயிறு உப்புசமாகி அவன் கஷ்டப் படுவதையும் தெரிந்து கொண்டான் ராஜு. "சென்ற வாரம் எங்கள் வீட்டுக்கு வந்த பொழுது என் கூட சேர்ந்து அடை சாப்பிட்டாய்தானே?  அன்றிரவோ, மறு நாளோ உனக்கு ஒரு கஷ்டமும் இல்லையே ?" என வினவினான்.  
        
"ஆமாம் ராஜு. விமலா மாதிரி இவளுக்குப் பண்ணத் தெரியவில்லை   கொஞ்சம் சொல்லிக் கொடுக்கச் சொல்லேன்." 

அடுத்த ஞாயிறு ராஜு வீட்டில் அடை செய்வது எப்படி என்று விமலா சொல்லிக் கொடுக்க, ராகவன் மனைவி உமா கற்றுக் கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
                 
ஞாயிறும் வந்தது.  அடை டெமான்ஸ்டிரேஷனுக்கு விமலா ரெடி .  உமாவும் ஒரு சின்ன நோட் புத்தகம் பேனாவுடன் எதற்கும் இருக்கட்டும் என்றொரு பென்சில் இவற்றுடன் தான் எதையாவது மிஸ் செய்து விட்டால் என்ன செய்வது என்று தன் ஸ்மார்ட் போனையும் சார்ஜில் போட்டு எடுத்து வந்திருந்தாள் .
            
தங்கவேலு சொல்லச் சொல்ல, 'அதான் எனக்குத் தெரியுமே' என்று சொல்லும் சரோஜா பூரி செய்த மாதிரி, விமலா சொல்வதை, ரெகார்டரில் பதிவு பண்ணிக் கொண்டே நோட்டுப் புத்தகத்திலும் எழுதிய உமா, அடை சாப்பிட நால்வரும் உட்காரும்வரை, விமலா அடை செய்கின்ற முறை, தான் செய்யும் முறைகளிலிருந்து சற்றும் மாறு படவில்லை என்பதை ஒவ்வொரு கட்டத்திலும் சொல்ல மறக்கவில்லை.
    
வழக்கம் போல வெல்லம், வெண்ணெய் இத்யாதி தொட்டுக் கொண்டு அனைவருமே கொஞ்சம் அதிகமாகவே சாப்பிட்டு எழுந்தனர்.  வீட்டுக்கு வந்த பின் இவருக்கு ஏன் இன்னும் வயிறு வலிக்கவில்லை என்ற மாதிரி பார்க்கிறாளோ என்று சந்தேகம் கொண்ட ராகவன்  "எனக்கு இன்று ஒரு சங்கடமும் இல்லை" என்றான்.  கூடவே, "உனக்குத்தான் விமலா மாதிரி அடை செய்யத் தெரியவில்லை" என்றதும் உமா விழுந்து விழுந்து சிரிக்க, ராகவன் இவள் சாப்பிட்ட உணவில் ஏதேனும் கலந்து விட்டதோ என்று யோசிக்க ஆரம்பித்தான்.
    
உமா " எனக்குத் தெரியும். உங்களுக்கு ஒரு சங்கடமும் வராது என்று " என்றாள் .   
              
"ன், மஞ்சத் துணியில் ஒரு ரூபாய் முடிந்து வைத்து விட்டு ராஜு வீட்டுக்கு வந்தாயா என்ன ?"  என்று கேட்டான் ராகவன். 
   
"அதெல்லாம் இல்லை.  இந்த போட்டோ எல்லாம் பாருங்க" என்று சொல்லி, அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது எடுத்த போட்டோக்களைக் காட்டினாள்.   அப்பொழுதும் ராகவனுக்கு என்ன பார்க்க வேண்டும் என்று தெரியாமல் "என்ன? நாம் 3 பேரும் அடை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.  நடுவில் தட்டில் அடை அடுக்கி வச்சிருக்கு.  தட்டில் வெண்ணெய் வெல்லம் இவற்றுடன், கூட்டா அல்லது குருமாவா என்று அடையாளம் தெரியாத சமாச்சாரமும் இருக்கு. அதுனாலெதான் வயிற்று பிரச்சனைகள் எதுவும் வரவில்லை என்கிறாயா?" என்றான்.

"அதெல்லாம் இல்லை. இன்னும் கொஞ்சம் கூர்ந்து பாருங்கள்." 

இன்னும் கொஞ்சம் முயன்று பார்த்த ராகவன் " ஊம் ஹூம் ஐ கிவ் அப் " எனக் கையை விரித்து விட்டு நகர, உமா சப்தமாகச் சிரித்தாள்.  "விமலாக்கா அடைக்கு உபயோகிக்கும் எண்ணெய் சற்றுக் குறைவு....." என்று சொல்ல ஆரம்பித்தவளை "அதுனாலே எனக்கு வயிற்று வலி வரலையாக்கும்? என்று இடைவெட்டின ராகவனைப் பார்த்து "அது இல்லீங்க ...இந்த போட்டோவை சரியாகப் பாருங்க.  ஒரு அடையின் முதலில் ஹீட்  ஆன பக்கத்தையும் இரண்டாம் பக்கத்தையும் பாருங்கள்.  முதல் பக்கம் தீய்ந்த மாதிரி இல்லை ? "
               
"ஆமா அதுக்கு என்ன வந்தது இப்போ?"  என சற்று எரிச்சலுடன் ராகவன் கேட்க, "அதாங்க உங்க மருந்து.  யூனிபார்மா ஒரு பக்கம் முழுக்க தடவி இருக்கு.  உங் யூனிகெம் மாத்திரையில் உள்ளே கரிப்பொடி  இருக்கும்.  விமலாக்கா அடையில் மேல தடவி இருக்கு! அவ்வளவுதான்" என, ராகவனும் புரிந்து கொண்டு சிரித்தான்.
             
என்ன நண்பர்களே சற்றுக் கறுவலாக அடை  தின்று பார்க்க வேண்டும் போலிருக்கா ?
               

1.12.13

ஞாயிறு 230: ஒற்றையடிப் பாதை!

           
                           
கவிதைகள் எழுதுவோர் எழுதலாம்! 
   
குறிப்பு: இது, திருவாரூர் பக்கத்தில் உள்ள, கல்யாணமஹாதேவி கிராமத்தில், பாண்டவ ஆற்றின் கரை. இந்த பூமியில், இந்த இடத்தில், என்னுடைய அப்பா, தாத்தா, கொள்ளுத் தாத்தா, எள்ளுத் தாத்தா எல்லோரும் கால் பதித்து நடந்திருப்பார்கள். அவர்களுடைய ஆசீர்வாதத்தை, பிறந்த நாளில் வாங்குவதற்காக இந்தப் படம், இன்று, இங்கு பதியப்பட்டது. 
அன்புடன், 
கௌதமன்.