நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
6.2.11
5.2.11
அமானுஷ்ய அனுபவங்கள்
இருப்பவர்களைப் பற்றிப் பேசுவதில்லை நாம். இல்லாதவர்களைப் பற்றி சிந்திக்க சில நேரம் அவசியம் வந்து விடுகிறது!
சமீபத்தில் மனைவி வழி உறவினரில் ஒரு மூத்த உறுப்பினர் மறைந்தார். மனைவிக்கு அவர் மேல் மிகுந்த ப்ரியம். கோவிலுக்கு போகும்போது இறைவன் பிரதிமை மேல் அவர் உருவம் தெரிந்ததாகச் சொன்னார்!சில வருடங்கள் முன்பு நான் வீட்டில் தனித்திருந்த சமயம். எல்லோரும் வெளியூர் சென்றிருந்தார்கள். இரவு பன்னிரண்டரை மணி இருக்கும். தூக்கத்தில் இருந்தேன். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த என் மச்சினன் ஒருவன் "கொஞ்சம் தள்ளிப் படுத்துக்கோங்க அத்திம்பேர்" என்று சொன்ன மாதிரி இருந்தது. தள்ளிப் படுத்துக் கொண்டு விழித்துக் கொண்டேன். யாரையும் காணோம். ஏதோ பிரமை என்று திரும்ப தூங்க முற்பட்டேன்.
நீங்கள் நினைப்பது சரிதான்...ஃபோன் அடிக்கத் தொடங்கியது. எடுத்தேன்.
ஏதோ ஜுரம் என்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருந்த (அதுவே எனக்குத் தெரியாது) என் மச்சினன் எதிர்பாரா விதமாக சற்றுமுன் இறந்து போனதாக தகவல் வந்தது. அப்புறம் தூங்குவதற்கு ரொம்ப நேரம் ஆனது! (காலை கிளம்பிப் போனேன்)
ஆத்மாவுக்கு ஆதியும் கிடையாது, அந்தமும் கிடையாது என்பார்கள். உடல்தான் அழிகிறது ஆத்மா கர்மபலன்களை அனுபவித்து விட்டு அடுத்த உடலில் புகுவதற்குத் தயாராகி விடுகிறதாம். இறந்தவர்கள் உயிருடன் இருப்பவர்களை தொடர்பு கொள்ள முயற்சிப்பார்கள் என்றும் சொல்வார்கள்.
முந்தின ஜென்மம் ஞாபகம் வந்த இந்த ஜன்மத்துக்காரர்கள் பழைய இடங்களைத் தேடி அலைந்ததையும் படித்திருக்கிறோம்.
வட நாட்டில் குடியானவச் சிறுவன் ஒருவன் வேற்று பாஷை பேசி வந்ததையும் அப்புறம் அர்த்தம் தெரிந்த போது தன்னுடைய தாய், தந்தை, மனைவி பல கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ள ஊரில் இருப்பதாகவும் சொல்லி வந்தானாம். அங்கே போய்ப் பார்த்த பொழுது அது உண்மை என்று தெரிந்ததோடு, அந்த வீட்டில் இருந்த வாலிபன் மாட்டு வண்டியில் வந்த போது கனரக வாகனம் மோதி இறந்ததாகவும் அப்போது பட்ட காயத்தின் வடு இந்த சிறுவனின் உடலில் பிறந்தது முதல் இருந்ததாகவும் படித்திருக்கிறேன்.
கிட்டத் தட்ட இதே போல சம்பவத்தை நேற்று டிஸ்கவரி சேனலில் கூட காட்டினார்கள். அவன் ஒரு ஸ்ரீலங்காச் சிறுவன்.
ஆத்மா விரைவில் அடுத்த சட்டை போட்டு விடும் நிலையில், அதாவது அடுத்த உடம்பில் புகுந்து விடும் என்றால் எப்படி தற்போதைய உறவினர்களைத் தொடர்பு கொள்ளும்? சில பல பிறவிகளை எடுத்த ஆத்மா தொடர்பு கொள்ள அழைத்தால் எந்த கணவன் எந்த மனைவி என்று குழம்பிப் போகாதா?
ஒரு பழைய அனுபவம்...
விடுமுறை நாள்..
அலுவலகத்தில் யாரும் இல்லை. பகல் நேரம்தான். காலை பதினோரு மணிக்குமேல் இருக்கும்.
உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருக்கும்போது முன் ஹாலில் இருந்து ஏதோ சத்தம். கதவை லேசாக அறைந்து சாத்துவது போல.. தொடர்ந்து யாரோ நடந்து வருகிறார்களோ என்று மிக லேசான சத்தம் அல்லது பிரமை.
இரண்டு மூன்று முறை அபபடி ஆனதும் எழுந்து போய் பார்த்தேன். நீண்ட ஹால். எல்லா அறைக் கதவும் மூடியிருந்தன. முன் வாசல் மூடி உட்புறம் தாழிடப் பட்டிருந்தது. பாத் ரூம் வரை சென்று உள்ளே யாரும் இருக்கிறார்களா என்றும் பார்த்து விட்டு, ஜன்னல் கதவுகள் சரியாகத் தாழிடப் பட்டிருக்கின்றனவா என்றும் சோதித்துத் திரும்பினேன். ஒரு அறையைத் தாண்டும்போது வித்யாசமான வாடை ஒன்றை நாசி உணர்ந்தது.
உட்கார்ந்து பதினைந்து நிமிடத்தில் மீண்டும் சத்தம். கதவை வேலை முடிந்து யாரோ மூடிப் பூட்டுவது போல ஆனால் தெளிவில்லாமல். நான் எனக்கு வந்த அழைப்பில் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன். யாரோ வருவது போல உணர்வு. திரும்பி ஹாலைப் பார்த்தால் யாரும் இல்லை!
தொலைபேசியில் பேசிய நண்பரிடம் சொன்னேன். சிரித்தார். சமீபத்தில் அலுவலகத்திலேயே செத்துப் போன இரண்டு அலுவலர்களின் பெயர்களைச் சொன்னார்.
பேசிக் கொண்டே மீண்டும் எழுந்து செக் செய்து திரும்பினேன்.
"யார் கூடவாவது பேசிக் கொண்டே வேலை செய்தால் இப்படி பிரமை இருக்கும்..வைத்து விட்டு வேலையைப் பார்" என்றார்.
வைத்து விட்டு வேலையைத் தொடர்ந்தேன். மறுபடி யாரோ நடமாடுவது போல, ஜன்னலில் நின்று என்னை நோக்குவது போல உணர்வு. நிமிர்ந்து பார்த்தால் யாரும் இல்லை.
வேலையைத் தொடர்ந்தாலும் ஒரு சிறு அவஸ்தை இருந்தது.
எழுந்து கதவைத் திறந்து வெளியில் வந்து சாலையை நோக்கினேன். நார்மல். எல்லோரும் அவரவர் வேலையில் ஆழ்ந்திருந்தார்கள்.... இயல்பாக. அந்த வெளிச்சமும் சுறுசுறுப்பும் பார்த்தபோது உள்ளே உணர்ந்த அனுபவம் அபத்தமாக இருக்கவே, மறுபடி அறைக்குத் திரும்பினேன்.
மீண்டும் மீண்டும் இதே அனுபவம். மறுபடி நண்பர் தொலைபேசி நிலைமையைக் கேட்க, சொன்னேன். பேசாமல் கிளம்பிச் சென்று விடு என்றார். கிளம்பி சாவியை எடுக்க முன்னறைக்கு சென்றால் என் முதுகில் மூச்சு விடும் உணர்வு. திரும்பினால் யாரும் இல்லை.
கதவைப் பூட்டி விட்டுக் கிளம்பி விட்டேன். பூட்டும்போது கூட முதுகுக்குப் பின்னால் ஒரு குறு குறு...
பிறகு தொடர்ந்த நாட்களில் பழகி விட்டது. மற்ற ஊழியர்களும் ஒரொரு சமயம் இது மாதிரி உணர்ந்திருப்பதாகச் சொன்னார்கள்.
மருத்துவமனையில் பணிபுரியும் என் சகோதரியிடம் இதைப் பகிர்ந்து கொண்ட போது பிரசவ வார்டின் அருகிலும், ஆபரேஷன் தியேட்டர் உள்ளும் சில சமயம் யாரும் இல்லாத இடத்தில் கேட்கும் அழுகுரல்கள் பற்றி சொன்னாள்.
இன்னொரு நண்பர் அவர் பங்குக்கு உதகை அலுவலகத்தில் வேலைபார்த்தபோது இரவில் தங்கி வேலை பார்த்த ஒரு சந்தர்ப்பத்தில் வந்த அனுபவம் சொன்னார்.
பற்பல வருடங்களுக்கு முன்னால் செத்துப் போன எட்டாம் ஹென்றி அந்த அரண்மனையில் வேலை பார்த்த காவலாளிகளை தீ விபத்து ஏற்படாமல் அரூபமாய் எச்சரித்த சம்பவத்தை டிஸ்கவரியில் காட்டினார்கள். செக்யூரிட்டி அறையைப் படமெடுக்கும் கேமிரா ஒரு தொப்பி அணிந்த நிழலுருவத்தின் நடமாட்டத்தைப் படமெடுத்திருப்பதைக் காட்டினார்கள்.
இத்தனை வருடங்களாக அவர் மறுபிறவி எடுக்காமல் இருக்கிறாரா? சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ போகாமல் இருக்கிறாரா? டவுட்டு#
(எங்கள் கமெண்ட்: இதை, 'அப்படியே பப்ளிஷ் செய்யலாமா அல்லது திருத்தங்கள் ஏதாவது செய்யலாமா' என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், வாசலில் ஒரு சிறு குழந்தை 'பப்பளிக்கா' என்று சொல்லியது காதில் விழுந்தது. எனவே - அப்படியே பப்ளிஷ் செய்ய முடிவெடுத்து, இதோ ......)
2.2.11
கேள்வி நேரம் : ஒரு நிமிடம்
மொத்த நேரம் : 60 வினாடிகள்.
அ) தமிழ் மாதங்களில், எந்த மாதத்தில் இருபத்தெட்டு நாட்கள்?
ஆ) லால்பஹதூர் சாஸ்திரி காலமாவதற்கு முன்பு யார் பிரதம மந்திரி?
இ) If you take away 3 numbers of cakes from a pack containing a long dozen, what will be left behind ?
(ஒரு 'லாங் டசன்' பாக் செய்யப்பட்ட கேக்குகளிலிருந்து, மூன்றை எடுத்துவிட்டால் மீதம் எவ்வளவு கேக்குகள் இருக்கும்?)
ஈ) தமிழில் எவ்வளவு ஓரெழுத்து வார்த்தைகள் உள்ளன?
உ) கொன்னக்கோல் வித்வான் வாசிக்கும் வாத்தியத்தின் பெயர் என்ன?
31.1.11
நேர் செய்திகளும், கோணல் கமெண்டுகளும் + புதிர்க்கதை
* பள்ளியில் முதலுதவி பயிற்சி முகாம்.
! முதலுதவி? ஆசிரியர்களுக்கா அல்லது மாணவர்களுக்கா?
* திருப்பதியில் நேபாள அதிபர் தரிசனம்.
! திருப்பதிக்கு வந்து, யாருக்கு தரிசனம் கொடுத்தார் அவர்?
* டிரைவர் குடித்தால் காட்டிக் கொடுக்கும் புதிய கார்.
! அடுத்தது என்ன? டிரைவர் குடித்தால் பங்கு கேட்கும் புதிய கார்?
* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நெஸ்டர் ஜோடி சாம்பியன்.
! அதிர்ச்சி தோல்வி அடைந்தவர்கள் யார்?
* புதுடில்லியில் பிப்., 1ம் தேதி முதல்வர்கள் மாநாடு.
! நிகழ்கால முதல்வர்களுடன், வருங்கால முதல்வர்களும், மாஜி முதல்வர்களும் பங்கேற்பார்களா? (அப்போதான் அது 'மா'நாடு. இல்லையேல் வெறும் நாடு!)
* திருப்பூரில் வெளிநாட்டு வேலை மோசடி.
! அங்கே மட்டும்தானா? எல்லா ஊரிலும் வெளிநாட்டு வேலை மோசடி இருக்குமே!
* ஐகோர்ட்டில் தீ விபத்து.
! வக்கீல்கள் சூடாக வாதம் பண்ணியிருப்பார்கள் போலிருக்கு!
* வாழைப்பழத்தின் விலை 60 சதவீதம் உயர்வு.
! விலை எவ்வளவு ஏறினாலும், வழுக்கி, கீழே விழாமல் போய்விடுமா? என்கிறார், வா ப ரசிகர் ஒருவர்.
**************************
மூதுரை:
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
அப்பாதுரை: (முன்னுரை)
** " -- -- " பற்றி எழுதியிருந்ததைப் படித்தேன். எனக்கு அவர் எழுதிய பல சிறுகதைகள் பிடிக்கும். உங்களுக்கு மறுப்பில்லையென்றால் அவரது இரண்டு கதைகளைச் சுருக்க்க்கி எபி வாசகருடன் பகிர அனுப்புகிறேன். முதலில் ஒரு கதை; பிடித்தால் சொல்லுங்கள்; அடுத்தது அனுப்புகிறேன்....
எங்களுரை:
** இந்த இடத்தில் வாசகர்களுக்கு ஒரு கேள்வி: அப்பாதுரை சார் எழுதியிருப்பது, எந்த எழுத்தாளர் பற்றி? சரியாகக் கண்டுபிடிப்பவர்களுக்கு, பாயிண்டுகள் கொடுக்க, அப்பாதுரை சார் ரெடியாம். தெரிஞ்சவங்க சொல்லி, பாயிண்டு தட்டிக்குங்க.
இப்ப கதையைப் படியுங்க.
இப்படியா ஒரு சின்னப் பெண்ணை பயமுறுத்துவாய்?
பார்வதி அம்மாள் வாசலில் தன் மகள் ஜெயா வந்து கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் முகம் மலர வாசல் பக்கம் வந்தாள்.
"என்னடி அதிசயமா, நீ மட்டும் தனியா வந்திருக்கே?"
"உள்ளே வாயேம்மா. எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்"
"ரமேஷ் கல்யாணத்துக்குப் புடவை வாங்கப் போகலாம்னு நினைச்சேன்"
"ஏம்மா, என் தம்பி கல்யாணத்துக்கு புடவை வாங்க என்னைக் கூப்பிட்டிருந்தா நான் வந்திருக்க மாட்டேனா?"
"அதுக்கில்லையடியம்மா! உனக்கோ கல்யாணம் ஆகி ஆறு மாசம் தான் ஆறது. கல்யாணத்துக்குன்னு இப்பவே கூப்பிட்டா உங்க வீட்டிலே என்ன நெனைச்சுப்பாளோன்னு பயமா இருந்தது!"
"பயம் என்ன பயம்? இவர்களுக்கெல்லாம் பயந்து பயந்து தான் நாமெல்லாம் இப்படிக் குட்டிச்சுவராப் போறோம்!"
"அது சரி, என்ன பொட்டியெல்லாம் கொண்டு வந்துட்டே? கல்யாணத்துக்கு இன்னும் பதினஞ்சு நாள் இருக்கே?"
"நான் கல்யாணத்துக்கு வரலம்மா!"
"என்னடி இது திடீர்னு?"
"ஆமாம், எங்க மாமியார் எப்பப் பார்த்தாலும் தொண தொணன்னு ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்கார். எது பண்ணினாலும் குத்தம். விடியக் காலம்பற எழுந்து அத்தனை வேலையும் சாப்பாட்டுக் கடையும் ஆகி ஒரு பன்னிரண்டு மணிக்குப் போய் அக்கடானு படுத்துக்கலாம்னா, பகல்ல தூங்கினா தரித்திரமாம்! தெருவில இருக்கிற அத்தனை பேர் வீட்டையும் நாக்குல நரம்பில்லாம அலசுவா, நான் தூங்கினால் மட்டும் தப்பு. இவரோட எங்கியாவது சினிமாவுக்குப் போனா, "ஏண்டா, உனக்கு சினிமாவே பிடிக்காதே? இப்ப என்ன ஆம்படையாளோட வாரா வாரம் சினிமா?'னு எல்லார் முன்னாலேயும் கேட்பா. அவரோ பயந்தாங்குளி. அம்மாவைப் பத்தி ஏதாவது சொன்னா மூக்குக்கு மேலே கோபம் வந்துடும். நாலு நாள் பேச மாட்டார். அந்த மாதிரி சண்டை வந்தது. உன் வீட்டுக்குக் கிளம்பிப் போன்னு சொன்னார். வந்துட்டேன்."
"ஐயையோ! இப்ப உங்க அப்பா வந்து கேள்விப்பட்டார்னா அப்படியே இடிஞ்சு போயிடுவாரே?"
"நான் போய் மாடி ரூம்ல இருக்கேன். நீ அப்பாகிட்ட எல்லாத்தையும் சொன்ன பிறகு என்னைக் கூப்பிடு" என்று ஜெயா மாடிக்குக் போய்விட்டாள்.
ராமநாதன் உள்ளே வந்து முகம் அலம்பிக் கொண்டு கூடத்தில் உட்கார்ந்தார், பார்வதி அம்மாள் காபி கொண்டு வந்து அவர் முன்னால் வைத்தாள். பெண் வந்திருக்கிற விவரத்தை சொல்லி விட்டு, ஜெயாவைக் கூப்பிட்டாள்.
*******************
மறு நாள் காலை ராமநாதன் மாப்பிள்ளையைப் பார்க்கக் கிளம்பிப் போனார். மாப்பிள்ளையின் ஆபீஸில் பியூன் வந்து அவர் கூப்பிடுவதாக அழைத்துப் போனான். தனியாக ஏ.ஸி அறை. டை கட்டிக் கொண்டு இருந்தான். டெலிபோனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தவன் இவரைப் பார்த்தவுடன் ரிஸீவரைக் கையால் மறைத்துக் கொண்டு அவரை உட்காரச் சொல்லிவிட்டு தொடர்ந்தான். அறை விசாலமாக இருந்தது. சுவரில் ஒரு புரியாத ஓவியம் மாட்டியிருந்தது. உட்காரும் ஆசனம் சொகுசாக இருந்தது. டேபிளுக்குப் பக்கத்தில் அவனும் ஜெயாவும் எடுத்துக் கொண்ட ஒரு சின்ன போட்டோ. பேச்சை முடித்துக் கொண்டு டெலிபோனை வைத்தான்.
மறு நாள் காலை ராமநாதன் மாப்பிள்ளையைப் பார்க்கக் கிளம்பிப் போனார். மாப்பிள்ளையின் ஆபீஸில் பியூன் வந்து அவர் கூப்பிடுவதாக அழைத்துப் போனான். தனியாக ஏ.ஸி அறை. டை கட்டிக் கொண்டு இருந்தான். டெலிபோனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தவன் இவரைப் பார்த்தவுடன் ரிஸீவரைக் கையால் மறைத்துக் கொண்டு அவரை உட்காரச் சொல்லிவிட்டு தொடர்ந்தான். அறை விசாலமாக இருந்தது. சுவரில் ஒரு புரியாத ஓவியம் மாட்டியிருந்தது. உட்காரும் ஆசனம் சொகுசாக இருந்தது. டேபிளுக்குப் பக்கத்தில் அவனும் ஜெயாவும் எடுத்துக் கொண்ட ஒரு சின்ன போட்டோ. பேச்சை முடித்துக் கொண்டு டெலிபோனை வைத்தான்."சொல்லுங்கோ!" என்றான்.
"ஒன்றுமில்லை. உங்களைப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்"
"பரவாயில்லை, சொல்லுங்கோ!"
"ஜெயா சொன்னா - உங்களுக்கும் ஜெயாவுக்கும் ஏதோ மனஸ்தாபமாம்.."
"ம்.."
"அவ சின்னக் குழந்தை. அவளுக்கு ஒண்ணும் தெரியாது. ஏதாவது தப்பு பண்ணியிருந்தா நீங்க அதைப் பொருட்படுத்தக் கூடாது"
"அதெல்லாம் இல்லை. அவ ரொம்ப சண்டை போடறா. நான் இவளுக்குப் பரிஞ்சு ஒரு வார்த்தை பேசினா அம்மா உடைஞ்சு போயிடுவா. அவளுக்குச் சொன்னா புரிய மாட்டேங்குது. நல்ல வேளை, நீங்க நேரா இங்கே வந்தீங்க. அவ கோவிச்சுண்டு போயிருக்கானு எங்க வீட்ல யாருக்கும் தெரியாது. கல்யாணத்துக்காக அம்மாவுக்கு ஒத்தாசையாக் காரியம் பண்ணப் போகிறாள்னு சொல்லித்தான் அம்மாகிட்டே பர்மிஷன் வாங்கினேன். நீங்க ஒண்ணும் கவலைப் படாதீங்க!"
"எனக்கு இப்பத்தான் நிம்மதியா இருக்கு மாப்பிள்ளை!". மன நிறைவுடன் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினார் ராமநாதன்.
வீட்டுக்குத் திரும்பிய போது, ஹாலில் ரமேஷும் ஜெயாவும் பேசிக் கொண்டிருப்பது கேட்டது. செருப்பைக் கழற்றி விட்டு வாசற் பக்கம் இருந்த அறையிலேயே சிறிது இளைப்பார உட்கார்ந்தார். பெண்ணும் பிள்ளையும் பேசுவது இப்போது தெளிவாகக் கேட்டது.
"பொண்ணு நல்லா இருக்காளோ?"
"ம்.. இருக்கா"
"என்ன கலர்?"
"..."
"சொல்லுடா, ஏண்டா வெட்கப்படறே?"
"எலும்பிச்சம்பழக் கலர்"
"ரமேஷ்! நான் ஒண்ணு சொல்வேன், கேக்கணும். அவ கல்யாணமாகி இங்கே வந்தப்புறம் நீ அவளைக் கண் கலங்காமப் பாத்துக்கணும்"
"சரி"
"சரின்னு சொன்னா மட்டும் போதாது. உறுதியா இருக்கணும்"
"ம்"
"ஏன்னா, உனக்கு இந்த வீட்டுல அம்மா அப்பா எல்லோரும் இருக்கா. ஆனா அவளுக்கு இந்த வீட்டுல எல்லாமே நீ தான். உன்னை மட்டும் தான் நம்பி அவ இங்கே வரப் போறா. ஒரு வேளை அம்மாவுக்கும் அவளுக்கும் ஏதாவது வாக்கு வாதம் வந்துதுனா கூட, நீ தான் உடனே நடுவுல புகுந்து சமரசம் பண்ணி வைக்கணும். அதுக்குன்னு நீ அவ பக்கமே பேசணும்னு அவசியம் இல்லை, புரிஞ்சுதா?"
"ம்"
"பிராமிஸ்?"
கல்யாண மண்டபத்தின் வாசலில் ராமநாதன் காத்திருந்தார். மாப்பிள்ளையும் அவர் உறவினர்களும் இறங்குவதைப் பார்த்த பிறகு தான் மனதுக்கு நிம்மதியாயிற்று.
ஜெயா அவர்களை உள்ளே அழைத்துப் போய் விழுந்து விழுந்து உபசாரம் பண்ணுவதைப் பார்த்துத் தனக்குள் சிரித்துக் கொண்டார். முகூர்த்தம் முடிந்து இலை போட்டவுடன் மாமியாரையும் கணவனையும் உட்கார வைத்து இவளே அவர்களுக்குப் பரிமாறுவதைப் பார்த்த போது, "இந்தப் பெண் ஜென்மமே இப்படித்தான்!" என்று தன்னையும் அறியாமல் சொல்லிவிட்டு, தன்னை யாரவது கவனிக்கிறார்களா என்று நாக்கைக் கடித்துக் கொண்டார்.
கல்யாணம் முடிந்து மறு நாள் பிள்ளையையும் மருமகளையும் வீட்டுக்கு அழைத்து வரும் வரை ஜெயாவும் மாப்பிள்ளையும் கூடவே வந்திருந்து விடை பெற்றுக் கொண்டு புறப்பட்ட போது அவருக்குக் கொஞ்சம் தொண்டையைக் கூட அடைத்து விட்டது.
மாலையில் மனைவியுடன் கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்து விட்டு, மாடியில் ஈஸிசேரைப் போட்டுக் கொண்டு சுந்தர காண்டத்தை விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தார். கீழே பார்வதியின் குரல் அதிகமாகக் கேட்கவே இறங்கிப் போனார். ஹாலில் பார்வதிக்கு முன்னால் மருமகள் தலையைக் குனிந்து கொண்டு நிற்பது தெரிந்தது. ரமேஷ் வீட்டில் இல்லை.
"சமையல் பண்றதுக்கு முன்னால என்ன பண்ணனும்னு என்னைக் கேட்டுக்க மாட்டியோ? நான் எங்கே வெளியூருக்கா போயிட்டேன்? இங்க இருக்கற கோவிலுக்குப் போய் அர்ச்ச்னை பண்ணிட்டு வந்துடறேன்னு சொல்லிட்டுத்தானே போனேன்? அதுக்குள்ள என்ன அவசரம்? இந்த வீட்டிலே வெங்காய சாம்பார் பண்ணவே மாட்டோம். எங்க மாமியார் மாமனார் காலத்துல இருந்தே நாங்க வெங்காயத்தை ஒதுக்கியாச்சு. வீட்டுக்குள்ள வெங்காய வாசனையே கூடாது" என்றாள் மாமியார்.
"அவர் கூடச் சாப்பிட மாட்டாராம்மா?" என்றாள் மருமகள்.
"அவர் கூடன்னா, அவன் என்ன ஸ்பெஷலா?"
"இல்லைம்மா, தெரியாமப் பண்ணிட்டேன்"
ராமநாதன் ஹாலுக்கு வந்தார். "பார்வதி, என்ன விஷயம்?"
"பாருங்கோ, இவள் பாட்டுக்கு வெங்காய சாம்பார் பண்ணிட்டாள். என்னைக் கேட்டு விட்டுப் பண்ண மாட்டாளோ?"
"சரி, இப்ப ஏன் அதுக்காகக் கத்தறே? அவளுக்கு எப்படித் தெரியும்? இன்னிக்கு உனக்கும் எனக்கும் வெறும் ரசமும் மோரும் போறும். புரியறதா? இதை இத்தோடு நிறுத்திக்க. இன்னொரு தடவை இப்படி சண்டை வந்தால் எனக்கு கோபம் வரும். நீ இலையைப் போடும்மா. இப்ப நானும் இவளும் சாப்பிடறோம். அப்புறம் ரமேஷ் வந்ததும் நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா ஒக்காந்து சாப்பிடுங்கள். எல்லோரும் சாப்பிட்டு முடிக்கிற வரையில் இவள் பட்டினியோட காத்துண்டிருக்க வேண்டாம். அதெல்லாம் போன தலை முறையோட போகட்டும்!".
**********
எங்கள் கமெண்ட்: அப்பாதுரை சார் நீங்க சொன்ன வழியை அப்படியே பின்பற்றி வெளியிட்டுவிட்டோம். பரிசு / பாராட்டு யாராவது கொடுத்தால் எங்களுக்கு. வேறு ஏதேனும் கிடைத்தால் ..... அது உங்களுக்கு!
30.1.11
28.1.11
பலசரக்கு
நண்பருக்கு ஃபோன் செய்து, 'பையன் கல்யாணம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?' என்று கேட்டேன். "பை திறக்கட்டும் என்றிருக்கிறேன் " என்றார். எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. வரதட்சணை அது இது என்றெல்லாம் எதிர்பாராதவர் என்பதால், " என்ன ?" என்று கேட்டேன்.
"அதான் சொன்னேனே, தை பிறக்கட்டும்னு ..." என்றவுடன் தான் நான் முதல் முறை சரியாகக் கேட்டுக் கொள்ளவில்லை என்று தோன்றியது!
*****
"அக்கா என்ன பால்கனி பூரா ஒரேயடியாக அரை குறையாக துவைத்து உலர்த்தி இருக்கீங்க ?" என்று கேட்டபடியே உள்ளே நுழைந்த அங்கிதாவை சற்று வியப்புடன் பார்த்தேன். துணி துவைத்ததும் நிஜம் தான், அதை பால்கனியில் காயப் போட்டதும் உண்மைதான். ஆனால் அரை குறையாகத் துவைத்தேன் என்று சொல்ல இவளுக்கு என்ன ஆதாரம் கிடைத்தது என்று ஒரு கேள்விக்குறியுடன் அவளைப் பார்க்க "இடக்கரடக்கல் அக்கா" என்றாள். பால்கனி வரை போன பின்னர் தான் அவள் சொன்னது எனக்குப் புரிந்தது.
வரிசையாக உள்ளாடைகள் = அரைக்கு உறை சரிதானே .
*****
எனக்கு பொருந்துகிறது..........? உங்களுக்கு..............?
இப்படிக் கேட்டு எனக்கு ஒரு "நீங்கள் எப்படிப் பட்டவர் " எனப் பிறந்த நாள் அடிப்படையில் ஒரு 'ரைட் அப்' வந்திருந்தது. .
எல்லாருக்கும் பொதுவான பல செய்திகளை பெரும்பாலும் புகழ்ச்சியாகவும் கொஞ்சம் தாளிப்பாக சற்றே நெகடிவ் ஆன செய்திகளையும் போட்டால் எல்லா பலனும் எல்லாருக்கும் பொருந்தும்.
என் நண்பர் அழகிரிசாமி (ஐம்பத்தி ஆறு இரண்டு பேர் மூன்று பேர் நாலு பேர் ஆட்டம் கண்டுபிடித்த மேதை!) ரேகை பார்க்கிறேன் என்று உங்கள் கையைப் பிடித்து ஆங்காங்கே கோடு போட்டு ஆகாசத்தைப் பார்த்து தீவிர யோசனை செய்த பிறகு " உங்களுடைய முப்பது வயதில் பெரிய தப்பு செஞ்சு இருக்கீங்க " என்று பலன் சொல்வார். அல்லது " ஒரு தகாத காதல் வசப்பட்டு இருந்தீங்க " என்பது போல ஒரு யூகம் வரும். இதை நீங்கள் மறுத்தால் பக்கத்தில் இருக்கும் யாரும் நம்பப் போவதில்லை.!!
இதைச் சொல்லும் போது இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். மீண்டும் உங்கள் கையைப் பிடித்துக் கொண்டு கோடுகள் போட்டவாறு " பத்துக்குள் ஒரு நம்பர் ஒரு துண்டுப் பேப்பரில் எழுதுங்க " என்று சொல்வார். பிறகு அவர் ஒரு நம்பரை வேறு பேப்பரில் எழுதிக் காட்டுவார். பத்துக்கு ஒன்பது தடவைகள், இரண்டும் ஒத்திருக்கும். அபூர்வமாக அது சரியாக வராத சமயம் " நீங்கள் மைன்ட் ரெசிஸ்ட் பண்ணிட்டீங்க " என்பார். ஒருகால் அதுவும் சரிதானோ என்னவோ!
நீங்கள் பிரமித்த ஜோசியம், வரும் பொருள் உரைத்தல், முன்னுணர்வு போன்றவை எல்லாருக்கும் சுவாரசியமாக இருக்கும். அவற்றை பகிர்ந்து கொள்ளலாமே.
(பல ஆசிரியர்களின் சரக்கும் சேர்ந்த கலவைப் பதிவு)
27.1.11
உள் பெட்டியிலிருந்து ..2011 01
எதிர் எதிரே...
1) பொறுமை கடலினும் பெரிது.. (All good things come to those who wait)
காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை! (Time and tide wait for none)
பேசிக் கொண்டிருப்பதை விட செயல்படுவது நல்லது. (Action speak louder than words)
3) பல கைகள் சேர்ந்தால் வேலை எளிது. Many hands make the work lighter
பலர் சேர்ந்து சமைக்க, பாழாகும் பண்டம். Too many cooks spoil the broth!
ஒரே வாய்ப்பு...இயற்கையாக நடி... இரண்டு வாக்கியங்களிலும் என்ன முரண்!
கிரிக்கெட் ஒரு ஃபிராடு கேம்தானே...!
** நோ பால் னு சொல்வாங்க... ஆனா கைல பால் வச்சிருப்பாங்க...!
**ஓவர்னு சொல்வாங்க...ஆனா திருப்பித் திருப்பிப் போட்டுகிட்டே இருப்பாங்க..
** பதினோரு பேர் விளையாடற ஆட்டத்துல ஆல் அவுட்னு சொல்வாங்க, ஆனா பத்து பேர்தான் அவுட் ஆகியிருப்பாங்க..
** ஒரு ஓவருக்கு ஆறு பாலும்பாங்க...ஆனால் ஒரே ஒரு பால்தான் வச்சிருப்பாங்க..!
** ஒரு பேட்ஸ்மேன் அவுட்டுன்னா அம்பையர் ஒரு கையைத் தூக்குவார்...சரி, ரெண்டு கையையும் தூக்கறாரே, ரெண்டு பேட்ஸ்மேனும் வெளியே போயிடுவாங்கன்னு பார்த்தா 'ஆறு ரன்னுடா'ங்கறாங்க...!
'ஷா' சொன்னது சரிதான் போல..!
மூன்று கட்டளைகள்...
(அ) சந்தோஷமா இருக்கும்போது சத்தியம் பண்ணாதீங்க...!
(ஆ) சோகமா வருத்தமா இருக்கும்போது பதில் சொல்லாதீங்க...!
(இ) கோவமா இருக்கும்போது எந்த முடிவும் எடுக்காதீங்க..!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



