அங்கிதா கேள்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அங்கிதா கேள்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28.1.11

பலசரக்கு


நண்பருக்கு ஃபோன் செய்து, 'பையன் கல்யாணம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?' என்று கேட்டேன்.  "பை திறக்கட்டும் என்றிருக்கிறேன் " என்றார்.  எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. வரதட்சணை அது இது என்றெல்லாம் எதிர்பாராதவர் என்பதால், " என்ன ?" என்று கேட்டேன்.
   
"அதான் சொன்னேனே, தை பிறக்கட்டும்னு ..."  என்றவுடன் தான் நான் முதல் முறை சரியாகக் கேட்டுக் கொள்ளவில்லை என்று தோன்றியது!

*****

"அக்கா என்ன பால்கனி பூரா ஒரேயடியாக அரை குறையாக துவைத்து உலர்த்தி இருக்கீங்க ?" என்று கேட்டபடியே உள்ளே நுழைந்த அங்கிதாவை சற்று வியப்புடன் பார்த்தேன்.  துணி துவைத்ததும் நிஜம் தான், அதை பால்கனியில் காயப் போட்டதும் உண்மைதான்.  ஆனால் அரை குறையாகத் துவைத்தேன் என்று சொல்ல இவளுக்கு என்ன ஆதாரம் கிடைத்தது என்று ஒரு கேள்விக்குறியுடன் அவளைப் பார்க்க "இடக்கரடக்கல் அக்கா" என்றாள்.  பால்கனி வரை போன பின்னர் தான் அவள் சொன்னது எனக்குப் புரிந்தது.
வரிசையாக உள்ளாடைகள் = அரைக்கு உறை சரிதானே .

*****
   
எனக்கு பொருந்துகிறது..........? உங்களுக்கு..............?
              
இப்படிக் கேட்டு எனக்கு ஒரு "நீங்கள் எப்படிப் பட்டவர் " எனப் பிறந்த நாள் அடிப்படையில் ஒரு 'ரைட் அப்' வந்திருந்தது. .
                   
எல்லாருக்கும் பொதுவான பல செய்திகளை பெரும்பாலும் புகழ்ச்சியாகவும் கொஞ்சம் தாளிப்பாக சற்றே நெகடிவ் ஆன செய்திகளையும் போட்டால் எல்லா பலனும் எல்லாருக்கும் பொருந்தும்.
    
என் நண்பர் அழகிரிசாமி (ஐம்பத்தி ஆறு இரண்டு பேர் மூன்று பேர் நாலு பேர் ஆட்டம் கண்டுபிடித்த மேதை!) ரேகை பார்க்கிறேன் என்று உங்கள் கையைப் பிடித்து ஆங்காங்கே கோடு போட்டு ஆகாசத்தைப் பார்த்து தீவிர யோசனை செய்த பிறகு " உங்களுடைய முப்பது வயதில் பெரிய தப்பு செஞ்சு இருக்கீங்க " என்று பலன் சொல்வார். அல்லது " ஒரு தகாத காதல் வசப்பட்டு இருந்தீங்க " என்பது போல ஒரு யூகம் வரும். இதை நீங்கள் மறுத்தால் பக்கத்தில் இருக்கும் யாரும் நம்பப் போவதில்லை.!!    
          
இதைச் சொல்லும் போது இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். மீண்டும் உங்கள் கையைப் பிடித்துக் கொண்டு கோடுகள் போட்டவாறு " பத்துக்குள் ஒரு நம்பர் ஒரு துண்டுப் பேப்பரில் எழுதுங்க " என்று சொல்வார். பிறகு அவர் ஒரு நம்பரை வேறு பேப்பரில் எழுதிக் காட்டுவார். பத்துக்கு ஒன்பது தடவைகள், இரண்டும் ஒத்திருக்கும். அபூர்வமாக அது சரியாக வராத சமயம் " நீங்கள் மைன்ட் ரெசிஸ்ட் பண்ணிட்டீங்க " என்பார். ஒருகால் அதுவும் சரிதானோ என்னவோ!
        
நீங்கள் பிரமித்த ஜோசியம், வரும் பொருள் உரைத்தல், முன்னுணர்வு போன்றவை எல்லாருக்கும் சுவாரசியமாக இருக்கும். அவற்றை பகிர்ந்து கொள்ளலாமே.   

(பல ஆசிரியர்களின் சரக்கும் சேர்ந்த கலவைப் பதிவு)