நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
25.3.12
22.3.12
டயமண்டும், டயமண்டுவும்! புதிர்க் கேள்வி.
அறிவு ஜீவிக்கு அன்று திருமண நாள்.
அவருடைய நண்பராகிய, குரோம்பேட்டைக் குறும்பன் தலைமையில், ஒரு விழாக் குழு, (ஒரு மாதத்திற்கு முன்பே) அமைக்கப் பட்டது.
விழாக் குழு, தங்களுக்கே உரிய சரச சாம தான பேத தண்ட வழிகளில், ஒரு பெரிய தொகை வசூல் செய்தார்கள்.
மாம்பலத்தில் உள்ள ஒரு பிரபல நகைக் கடைக்குச் சென்றார்கள். அறிவு ஜீவியின் மோதிர விரல் அளவை எடுத்துச் சென்றிருந்தனர். விரல் அளவுக்குத் தகுந்த வைர மோதிரம் வாங்கி, அவருக்குப் பரிசளிப்பது என்பது திட்டம்.
குரோம்பேட்டைக் குறும்பனுடன் சென்றிருந்த தில்லைநாயகம் என்பவருக்கு, அந்த நகைக் கடைக்காரர் நெருங்கிய நண்பர். ஏதோ ஒருவகையில் தூரத்து உறவினரும் கூட.
அறிவு ஜீவியின் விரல் அளவுக்குத் தகுந்த மோதிரங்களைப் பார்வையிட்ட குழு, ஒரு வைர மோதிரத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். அதை பேக் செய்வதற்கு முன்பு, கடைக்காரரிடம், கு கு ஒரு கேள்வி கேட்டார். 'சார் இது ஒரிஜினல் வைரம் தானே?'
'ஆமாம்! உங்களுக்கு அதிலென்ன சந்தேகம்?' என்று கேட்டார் கடைக்காரர்.
"எனக்கு சந்தேகம் எதுவும் இல்லை. ஆனால் யாருக்குப் பரிசளிக்கப் போகின்றோமோ, அவர் ஒரு அசகாய சூரர். வைரம் ஒரிஜினலா அல்லது போலியா என்பதை சுலபமாகக் கண்டுபிடித்து விடுவார்."
"ஹாங் - அது எப்படி? எங்களாலேயே சுலபமாகக் கண்டுபிடிக்க முடியாததை உங்க அறிவு ஜீவி கண்டுபிடிப்பார்? சற்றுப் பொறுங்கள். நான் இப்பொழுது கொண்டு வருகின்ற மோதிரக் குவியலிலிருந்து, அவர் விரல் சைசுக்கு ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். நீங்கள் ஏற்கெனவே எடுத்த மோதிரத்திற்கு மட்டும் பணம் கட்டிச் செல்லுங்கள். நீங்கள் ஏற்கெனவே எடுத்ததையும், இப்பொழுது எடுக்கப் போவதையும், அவரிடம் கொடுங்கள். அவர் ஒரிஜினல் எது என்று தேர்ந்தெடுப்பதை, அவரே வைத்துக் கொள்ளட்டும். போலி வைரம் உள்ள மோதிரத்தை, எங்களிடம் திருப்பிக் கொடுத்தால், நாங்கள் நீங்கள் கொடுத்த பணத்தில் பாதியைத் திருப்பிக் கொடுத்துவிடுகிறோம்" என்றார் கடைக்காரர்.
பிறகு குழு தேர்ந்தெடுத்த மோதிரம், எல்லாவகையிலும் முதல் மோதிரத்தைப் போலவே இருந்தது. இரண்டு மோதிரங்களையும், ஒரே பெட்டியில் போட்டு, கிஃட் பேப்பர் சுற்றிக் கொடுத்தார், கடைக்காரர்.
அதற்குப் பிறகு, அந்த வைர மோதிரங்கள் உள்ள பார்சலை, குழுவினரிடம் கொடுத்துவிட்டு, அலுவலக வேலையாகச் சென்றுவிட்டார், கு கு.
அறிவு ஜீவியை மொபைலில் கூப்பிட்டு, திருமண நாள் பரிசு பற்றிய விவரங்களை சுருக்கமாகக் கூறி விட்டு, தான் அலுவலகத்திலிருந்து இரவு வீடு திரும்பிய பிறகு வந்து சந்திப்பதாக சொல்லி விட்டுச் சென்றார்.
==============
தன வீட்டிற்கு வந்த விழாக் குழுவினரை வரவேற்று, எல்லோருக்கும் காபி கொடுத்து உபசரித்தார், அறிவு ஜீவி. விழாக் குழுவ்னருடன், நகைக் கடையில் நடந்த விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். பேசியபடி, அந்த மோதிரங்களை எடுத்து, இரண்டு கைகளிலும் கைக்கு ஒன்றாக மோதிர விரலில் அணிந்துகொண்டார்.
பேசிக் கொண்டிருந்த நேரத்தில், தன்னுடைய காபி ஆறிப் போயிருந்ததால், திருமதியிடம், சூடாக வேறு காபி கேட்டார். சூடான, ஆவி பறக்கும் காபி வந்தது. காபி டம்ப்ளரை சற்று நேரம் கைகளில் பிடித்து, அதிலிருந்து போகும் ஆவியை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த அறிவு ஜீவி, சட்டென்று காபியை அருந்தி முடித்து, தன்னுடைய இடது கையில் இருந்த வைர மோதிரத்தைக் கழற்றி, "இதோ இதுதான் போலி வைரம் உள்ள மோதிரம். இதைக் கடைக்காரரிடம் திருப்பிக் கொடுத்து, நீங்க கொடுத்த பணத்தில் பாதியைத் திருப்பி வாங்கி வாருங்கள்" என்றார்.
இரவு, வீட்டிற்கு வந்த கு கு - அறிவு ஜீவி, அணிந்திருப்பது, தங்கள் குழு முதலில் தேர்ந்தெடுத்த ஒரிஜினல் மோதிரம்தான் என்பதைப் பார்த்துத் தெரிந்துகொண்டார்.
==================
எங்கள் கேள்வி ரொம்ப சிம்பிள் : "அறிவு ஜீவி, தான் இப்போது அணிந்திருக்கும் மோதிரத்தில் உள்ள வைரம்தான் ஒரிஜினல் என்பதை எப்படித் தெரிந்துகொண்டார்?"
சரியான பதில் சொல்பவர்களுக்கு, அறிவு ஜீவி ஏதேனும் பரிசு கொடுப்பாரா என்பதை கேட்டுச் சொல்கிறோம்.
20.3.12
உலகக் குருவிகள் தினம்!
நன்றி : கூகிள் உலகக் குருவி நாள்
இன்று (மார்ச் 20 ) உலக குருவிகள் தினம்.
எங்கள் பழைய பதிவு ஒன்றில் சிட்டுக்குருவிகளுக்கான வீடு கட்டிக் கொடுப்பது எப்படி என்று பட விளக்கம் + சுட்டிகள் கொடுத்திருந்தோம்.
சென்ற வாரத்தில், விசு என்பவர் எங்களுக்கு அனுப்பியிருந்த குறுஞ்செய்தியில், 'இந்தக் கோடை காலத்தில் வெப்பம் மிகவும் அதிக அளவில் இருக்கும். பறவைகளுக்கு அருந்துவதற்கு நீரை, ஒரு தட்டில் இட்டு, அதை உங்கள் வீட்டு மாடியில், திறந்த வெளியில் வையுங்கள்.' என்று செய்தி அனுப்பி இருந்தார்.
குருவிகளுக்கு வீடு கட்டித் தரவில்லை என்றாலும், குறைந்த பட்சம் அவைகள் குடிப்பதற்கு, தண்ணீராவது தரலாம் அல்லவா?
அட! உடனே தண்ணீர்த் தட்டுடன் கிளம்பிவிட்டீர்களே! வெரி குட்! ஐ லைக் இட்!
19.3.12
ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், விராத் கோஹ்லி.... விளையாட்டு அரட்டை!
கிரிக்கெட் பற்றி எழுதி நாளாகி விட்டது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி விளையாடியதைப் பார்த்த பிறகு இருந்த கொஞ்ச நஞ்ச விருப்பமும் அற்றுப் போயிருந்தது. கிரிக்கெட்(டும்) பார்ப்பதே இல்லை. இவற்றை மீறி கிரிக்கெட்டை எட்டிப் பார்க்க வைத்தது சமீப இரண்டு நிகழ்வுகள்.
சில உறவினர்கள் வீட்டிலும் சில நண்பர்கள் வீட்டிலும் டிவி என்னும் வஸ்து பரணிலேயே இருக்கிறது. அவர்கள் வீட்டில் அடுத்தடுத்து குழந்தைகள் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு என்று பரீட்சை எழுதுவதால் கவனம் கலையக் கூடாதாம். அவர்கள் எல்லாம் அவ்வப்போது தொலை/அலைபேசியில் 'ஸ்கோர் என்ன' என்று கேட்பது வழக்கம். ரேடியோவில் நேர்முக வர்ணனை கூட கேட்க மாட்டீர்களா என்று கேட்பேன். இப்படிப் பேசினால் நீ என்ன நினைக்கிறாய், நான் என்ன நினைக்கிறேன் என்று பேசலாமே என்பார்கள்! ஸ்கோர் என்றில்லை, சில முக்கிய நிகழ்வுகளின் சமயங்களில் கூட....
திராவிட் ஓய்வை அறிவித்து விட்டு, சும்மா போகாமல், லக்ஷ்மண டெண்டுல்கர்களின் நெருக்கடிகளை அதிகரித்தார். குறிப்பாக ஒரு வரி... "இளைஞர்களுக்கு வழி விட வேண்டுமென்று..." டெண்டுல்கர் என்னும் புயலில் காணாமல் போன சில நல்ல ஆட்டக்காரர்களில் திராவிட் மற்றும் கங்குலி எல்லாம் அடக்கம்! இவர்களின் சாதனைகள் அடக்கி வாசிக்கப் பட டெண்டுல்கரின் ஜாஜ்வல்யப் பிரகாசம் ஒரு காரணம். திராவிட் ஓய்வு அறிவித்தபின் அவரைப் பற்றி எல்லா நாட்டு ஆட்டக்காரர்களும் நினைவு கூர்ந்தது, வாழ்த்தியது சந்தோஷமாக இருந்தது. கங்குலிக்கு இப்படி நடக்கவில்லை.
டெண்டுல்கரின் நூறாவது சதத்துக்குப் பின் சேனல்களிலும் செய்தித் தாள்களிலும் முகப் புத்தகம், வலைப் பதிவுகளிலும் அவரைப் பற்றி எழுதாதவர்களே இல்லை எனலாம்! நூறாவது சத டென்ஷன் முடிந்த பிறகு நேற்று அவர் டென்ஷன் ஃப்ரீயாக எப்படி விளையாடுவர் என்று பார்க்கும் ஆவல் இருந்தது. நன்றாகவே ஆடினார். அவர் தன் ஹேர் ஸ்டைலை மாற்றியிருப்பதால் ஃபீல்டிங்கில் கூட அவரை அடையாளம் கண்டு பிடிக்க நான்கு நொடிகள் அதிகம் ஆனது. ஏன் மாற்றினார்... ஏதாவது ராசியோ...!
என்னுடைய பள்ளி நாட்களில் எங்களுக்கு தலைமை ஆசிரியராய் இருந்த அமல்நாதர் (பின்னாளில் தூத்துக்குடி பிஷப் ஆனார்) பள்ளி ஆண்டு விழா அல்லது ஸ்போர்ட்ஸ் முடிந்த நாளில் அல்லது அதைவிட எங்கள் பள்ளி ஹாக்கியில் மற்ற பள்ளிகளை ஜெயிக்கும்போது (ஆட்டம் உள்ளூரிலேயே நடந்தால் அதைப் பார்க்க மதியம் கடைசி இரண்டு பீரியட் லீவ் விடுவார்... மற்ற பள்ளிகளில் நடக்கும்போது, வெளியூரில் நடக்கும்போது அங்கு சென்று ஆட்டக் காரர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் மாணவர்களின் 'ஆப்சென்ட்' பற்றி ஒன்றும் கேட்க மாட்டார்... அவரை ஏமாற்றவும் முடியாது... அவரும் ஆட்டம் பார்க்க வருவார் என்பதால் தன் பள்ளி மாணவர்கள் யார் யார் வந்திருக்கிறார்கள் என்று பார்த்து வைத்துக் கொள்வார். 99% எல்லா மாணவர்களையும் அறிவார்!) பள்ளியில் அசெம்ப்ளி ஹாலில் மாணவர்களையும் ஆசிரியர்களையும் கூடச் சொல்லி வெற்றி பற்றி அறிவித்து விட்டு மறுநாள் லீவ் என்று அறிவிக்கும் முன்னர் ஒரு வசனம் தப்பாமல் சொல்வார்... "இப்போது இல்லா விட்டால் அப்புறம் எப்போது..." இந்த ஒரு வரிக்காகத்தான் இவ்வளவு பெரிய முன்னுரை...! நேற்றைய இந்திய வெற்றி, அதுவும் பாகிஸ்தானுக்கு எதிராக, மற்றும் கோஹ்லியின் ஆட்டம் பார்த்த பிறகு இந்த வசனம்தான் நினைவுக்கு வந்தது...!
நேற்றைய வெற்றிக்கு முக்கிய கரணம் சொக்கத் தங்கம், கோஹினூர் வைரம் கோஹ்லியின் ஆட்டம்! முகமது கைஃபின் பெற்றோர் மற்றும் எல்லோரையும் போல நானும் நேற்று டெண்டுல்கர் ஆட்டமிழந்ததும் ஆட்டம் என்ன ஆகுமோ என்று நினைத்தது உண்மை. ஏனெனில் சேஸ் செய்ய வேண்டிய டார்கெட். அவ்வப்போது எட்டிப் பார்த்து விட்டு கோஹ்லி நூறு அடித்த பின் தொடர்ந்து பார்த்தேன். கண்ணில் ஒற்றிக் கொள்வது போல அவளவு நல்ல ஆட்டம்!
வழக்கம் போல வெற்றியை நெருங்கும் நேரம் அவரும் ரோஹித் சர்மாவும் அவுட் ஆக, வெற்றிக் கனியைப் பறிக்க (!) தோனி வந்து வழக்கம் போலவே ஏதோ தன்னால்தான் இந்த வெற்றி என்பது போல அடித்து விட்டு வந்தார்! ஆனால் இந்தமுறை முதல் பந்திலேயே ரன் எடுத்து விட்டார். அதுவும் வெற்றிக்குத் தேவையான நான்கு! ஆட்டம் முடிந்ததும் தங்கள் நினைவுக்காக ஸ்டம்ப்பைப் பிடுங்கி எடுத்துச் செல்லும் வழக்கம் ஆட்டக்காரர்களுக்கு உண்டு. (என்ன செய்வார்களோ... அதில் இன்ன இடத்தில் இந்த மாதிரி வெற்றி பெற்றது என்று குறிப்பு எழுதி வைத்து விடுவார்களோ...) தோனி தனக்கு மட்டும் ஒரு ஸ்டம்ப் பிடுங்கிக் கொண்டு நடக்க, கோஹ்லி உடனேயே ஓடி வந்து தனக்கு ஒரு ஸ்டம்ப் பிடுங்கிக் கொண்டார்!
நல்ல சேஸ், பாக்.குக்கு எதிராக வெற்றி, இறுதிச் சுற்றுக்கு தகுதி உறுதி என்று நினைத்தால் அடுத்த மேட்சில் வங்கதேசம் இலங்கையை ஜெயித்தால் அதுதான் இறுதிப் போட்டிக்காம்...ஏனென்றால் வங்கதேசம் இந்தியாவை ஜெயித்ததாலாம்...என்னவோ செய்து விட்டுப் போகட்டும். நேற்றைய கோஹ்லியின் ஆட்டம் ரசிக்கும்படி நன்றாக இருந்தது. அவ்வளவுதான்!
ஒரு கற்பனை. இருபதாண்டுகளுக்குப் பிறகு நடக்கப் போகும் ஒரு ஆட்டம்...
சச்சின் ஒரு ஓவரின் கடைசி பந்தில் நான்கடித்து தன் நூற்றைம்பதாவது சதத்தைப் பூர்த்தி செய்ய, அரங்கமெங்கும் ஆரவாரம், பூ மழை...
அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே கோகுல் திராவிட் (ராகுல் டிராவிட்டின் மகன்) அவுட். அடுத்து ஆட வந்த ஜோகேந்தர்சிங் சானியின் (ஹி..ஹி.. தோனியின் பையன்தான்) விக்கெட்டும் சாய்க்கப் பட, கடைசி விக்கெட்டுக்கு வந்த பஹீர்கான் (சொல்லணுமா என்ன, ஜகீர்கானின் பையன்) எதிரணியின் ஹாட்ரிக் வாய்ப்பைப் பறித்து அடுத்த பந்தைத் தடுத்து விளையாடினாலும் அடுத்த பந்திலேயே ஆட்டமிழக்க இந்தியா தோல்வி அடைகிறது!
மேன் ஆஃப் தி மேட்ச் அவார்ட் வாங்கிய சச்சினிடம், வர்ணனையாளர் பேட்டி....
"நூற்றைம்பதாவது சதம் அடித்ததும் உங்களுக்கு எப்படி இருந்தது..."
"முப்பத்தேழு கிலோ குறைந்த மாதிரி இருந்தது... நான் அடித்த நூற்று நாற்பத்தொன்பது சதங்களை யாரும் மதிக்கவில்லையே என்ற குமைச்சல் இருந்தது..."
"அடுத்து என்ன..?"
"இனி கொஞ்சம் டென்ஷன் இல்லாமல் விளையாடுவேன்.."
ஊடகங்களில் விமர்சகர்களும் ரசிகர்களும்...
"அவரால் ஓட முடியாது என்பதால் நான்கு நான்காக அவர் அடித்து வருவதற்குள் நிறைய பந்துகள் வீணாகின்றன...இனியாவது அவர் ஓய்வை அறிவிக்க வேண்டும்"
"அவர் பந்துகளை வீணடிக்கிறார் என்ற குற்றச்சாட்டு தேவை இல்லாதது. அவர் வயதில் வேறு யாராவது விளையாடுவார்களா என்று யோசித்துப் பாருங்கள்..."
"அவர் மட்டும்தான் ஜெயித்துக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பது தவறு... மற்ற ஆட்டக் காரர்கள் என்ன செய்கிறார்கள்"
"அவர் இப்போது ஓய்வு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமற்றது. இப்போதும் அவரால் ஐம்பது, நூறு என்று எடுக்க முடிகிறது...அவர் டீமுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரிகிறார். இன்றைய மேட்சில் கூட அவர்தான் மேன் ஆஃப் தி மேட்ச் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.."
ஓய்வு பெற்ற முன்னாள் வீரர் காம்பிர் கூறியதாவது,
"அவர் ஓட முடியாததால் நடந்து ரன் எடுக்கிறார் என்பதால் ரன் அவுட் ஆகும்போது வாக் அவுட் ஆவதாக ஊடகங்களில் விமர்சனம் செய்வது நாகரீகமில்லாதது. அவரை ஓய்வு பெறச் சொல்லி வற்புறுத்தக் கூடாது. அவருக்குத் தான் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்று தெரியும்... இன்னமும் அவர் இடத்தை அணியில் நிரப்ப ஆளில்லை என்பதை நினைவில் வைக்க வேண்டும்"
18.3.12
16.3.12
எட்டெட்டு ப 11: மாயா கொலை.
ஆகஸ்ட் எட்டு, இரண்டாயிரத்து ஆறு.
எட்டெட்டு பகுதி மூன்று படித்தவர்களுக்கு, இது மாயா கொலை செய்யப்பட்ட நாள் என்ற விவரம் மறந்திருக்காது. பகுதி 3 சுட்டி<<<
அன்று என்ன நடந்தது என்பதை (கே வி க்கு) விவரிக்கின்றார் மாயா:
ஆகஸ்ட் எட்டாம் தேதி காலை ஆறு மணி சுமாருக்கு, இந்த அறைக்குத்தான் முதலில் வந்தேன். அப்பொழுது இந்த அறை, காலு சிங்கின் அறையாக இருந்தது. காலையில் இந்த அறையின் கதவை வந்து திறந்த காலு சிங்கின் கண்களில், என்னைப் பார்த்ததும் மிகவும் பயம் தெரிந்தது.
"மேம் சாப் - நீங்க ஏன் இப்போ இங்கே வந்தீங்க? உங்களை இங்கே பார்த்தார்களானால், அவர்கள் என்னைப் பழி தீர்த்து விடுவார்கள். தயவு செய்து என்னை அவர்களிடம் மாட்டி விட்டு விடாதீர்கள். அவர்கள் திட்டம் பற்றி உங்களுக்குத் தெரியாத மாதிரி காட்டிக் கொள்ளுங்கள்" என்றான்.
நான் காலு சிங்கிடம், "காலு - கவலைப் படாதே. உன்னை எந்தச் சந்தர்ப்பத்திலும் காட்டிக் கொடுக்கமாட்டேன். நானே அவர்களிடம், சென்ற வாரம் இங்கு வந்திருந்த போது, இங்கு இன்று வருவேன் என்று சொல்லி இருந்தேன். நீ எட்டு மணிக்கு அவர்களுக்கு டிரிங்க்ஸ் கொண்டு வந்து கொடுத்தவுடன், உனக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி விட்டு, லீவு வாங்கிக் கொண்டு, உன் உறவினர் வீடு இங்கே இருப்பதாகச் சொன்னாயே, அங்கு சென்று விடு. இந்த அறையைப் பூட்டி வைப்பது உண்டா?"
"இல்லை மேடம். இந்த அறையில் பூட்டி வைப்பதற்கு ஒன்றும் கிடையாது. இதோ இந்த டேபிள், தண்ணீர் கூஜா, டம்ளர், என்னுடைய தகரப் பெட்டி, என்னுடைய உடைகள். மற்றும் எஜமானுக்கு வேண்டிய டிரிங்க்ஸ், மாத்திரைகள் இருக்கின்ற இந்த ஃபிரிட்ஜ். அவ்வளவுதான். ஏன் கேட்கின்றீர்கள்?"
"இந்த டேபிள் டிராயர்களுக்கு சாவி உண்டா?"
"உண்டு மேடம். மேல் டிராயரின் சாவி கீழே உள்ள இரண்டாம் டிராயரில் உள்ளது. நீங்கள் இங்கே எதையாவது வைக்க வேண்டுமா?"
"ஆமாம்."
"அப்படியானால், இரண்டாவது டிராயரில் உள்ள சாவியால் முதல் டிராயரைத் திறந்து, அங்கு பாதுகாப்பாக நீங்கள் வைக்கவேண்டியதை வைத்து, அந்த டிராயரைப் பூட்டி, இரண்டாவது டிராயரில், சாவியைப் போட்டு வைத்து விடுங்கள்."
நான் கொண்டு சென்றிருந்த மாத்திரை பாட்டிலை, ஒரு மாத்திரையை மட்டும் எடுத்துக் கொண்ட பின், மீதி இரண்டு மாத்திரைகளுடன், இந்த டேபிளின் முதல் டிராயரில் வைத்து, அதை பூட்டி, சாவியை அவசரமாக இரண்டாம் டிராயரில் போட்டு, அதை மூடி விட்டுக் கிளம்பினேன். நான் எதை உள்ளே வைத்தேன் என்பதைக் கூட காலு சிங் கவனிக்கவில்லை. தண்ணீர் டம்ளரைக் கழுவுவதற்கு அதை எடுத்துக் கொண்டு, வாஷ் பேசின் பக்கம் சென்றுவிட்டான்.
ஓ ஏ வின் அறைக் கதவின் அழைப்பு மணியை ஒலித்த போது, ஓ ஏ வே வந்து கதவைத் திறந்தார். என்னைப் பார்த்ததும், "அட மீண்டும் நீயா! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்" என்றார்.
"என்ன முடிவு எடுத்திருக்கின்றீர்கள்?"
"எந்த விஷயத்தில்?"
"என்னுடைய வாழ்க்கைப் பிரச்னையில்தான்."
"உன்னுடைய பிரச்னைக்கு, நாங்கள் என்ன முடிவு எடுப்பது? நீதானே எடுக்க வேண்டும்!"
அறைக்குள் நுழைந்தவாறு சுற்று முற்றும் நோட்டமிட்டேன். பிங்கி இன்னமும் தூங்கிக் கொண்டிருந்தாள். கட்டிலில் அவளுக்குப் பக்கத்தில், ஓ ஏ படுத்திருந்த தடயங்களும் தெரிந்தன.
"என்ன சொன்னீர்கள்? என்னுடைய பிரச்னைக்கு நான் முடிவு எடுக்க வேண்டுமா? பிரச்னையே - இதோ இந்தப் பிசாசுதானே! இதை அப்படியே வெட்டிப் போட்டுட்டேன்னா பிரச்னையே இருக்காதே" என்றேன் காட்டமாக.
என்னுடைய கூச்சலைக் கேட்டு கண் விழித்தாள் அந்த மேனா மினுக்கி.
எழுந்தவுடன் கலவரமாகி, பாத் ரூமுக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாள், அவள்.
அதன் பிறகு ஒரு மணி நேரத்திற்கு, ஓ ஏ விடம், கெஞ்சி, மிஞ்சி, என்னென்னவோ பாயிண்டுகள் சொல்லி, பிங்கியுடனான அவருடைய உறவை மறந்துவிட வேண்டும் என்று மன்றாடிக் கொண்டிருந்தேன்.
அவர் எதற்கும் பிடி கொடுத்துப் பேசவில்லை.
அந்த நேரத்தில், காலு சிங் ஒரு டிரேயில் கோக்க கோலா, ஆரஞ்சு ஜூஸ் எடுத்துக் கொண்டு வந்தான். என்னை அங்கே முதன் முறையாகப் பார்ப்பவனைப் போல முக பாவத்துடன், "மேடம் உங்களுக்கு என்ன கொண்டு வரட்டும்?" என்று கேட்டான்.
"எனக்கு ஒன்றும் வேண்டாம் காலு. நான் பிறந்த நாளுக்காக, நம் வீட்டுக்கு அருகே இருக்கின்ற கோயிலுக்குப் போய் அர்ச்சனை செய்ய வேண்டும். அதற்குப் பிறகே எதுவும் அருந்துவேன்."
பிறகு, காலு சிங் ஓ ஏ விடம் தனக்கு உடல் நிலை சரி இல்லை என்றும், தன்னுடைய உறவினர் வீட்டுக்குச் சென்று, அதற்குப் பக்கத்தில் உள்ள குடும்ப டாக்டரைப் பார்க்கச் செல்ல வேண்டும் என்றும் கூறி, ஓ ஏ வின் சம்மதம் பெற்று, சென்றுவிட்டான்.
ஓ ஏ, தன்னுடைய கோக்க கோலா கிளாசில், ஒரு ஆஸ்பிரினைப் போட்ட சமயம், பிங்கி பாத் ரூமிலிருந்து வெளியே வந்தாள். நான், ஓ ஏ விடம், "சற்றுப் பொறுங்கள். உங்களை தன்னிலை அறிய வைக்க, இதோ இதுவும் உங்களுக்குத் தேவை." என்று சொல்லியபடி, என் கைப்பையில் வைத்திருந்த காவிக் கலர் மாத்திரையைக் கையில் எடுத்துக் கொண்டு வேகமாக அவரை நோக்கிச் சென்றேன்.
ஆனால் - என்ன துரதிருஷ்டம்! தரை விரிப்பில் ஓரத்தில், மேல் நோக்கி வளைந்திருந்த முனை தடுக்கிக் கீழே குப்புற விழுந்தேன். அப்பொழுது கையில் தயாராக வைத்திருந்த காவிக் கலர் மாத்திரை, கை நழுவிக் கீழே விழுந்து உருண்டு எங்கோ சென்று மறைந்துவிட்டது. தரை விரிப்பும் காவிக் கலரில் இருந்ததால், அதை உடனே கண்டுபிடிக்க முடியவில்லை.
நான் உடனே சமாளித்து எழுந்து, ஓ ஏ விடம், "என் வாழ்க்கையில், எனக்கு ஒரு கடைசி சந்தர்ப்பம் கொடுங்கள். நான் சில நொடிகளில், இங்கே திரும்பி வருகின்றேன். அது வரை அந்தக் கோக்க கோலாவை குடிக்காதீர்கள்." என்று சொல்லி, இந்த அறைக்கு ஓடி வந்தேன்.
இந்த மேஜையின் இரண்டாவது டிராயரை அவசரமாகத் திறந்து பார்த்தால், அங்கு முதல் டிராயரின் சாவி எங்கும் காணப் படவில்லை. அவசரம் அவசரமாக, சுற்று முற்றும் தேடினேன். பிறகு பைத்தியம் பிடித்தது போல, முதல் டிராயரை பலங்கொண்ட மட்டும் இழுத்துப் பார்த்தேன். அது திறக்கவில்லை.
அறைக்குள் யாரோ நுழைந்தது போல இருந்தது. யாரென்று திரும்பிப் பார்க்க எத்தனிப்பதற்குள் என் கழுத்தையும் வாயையும், பின்னாலிலிருந்து முதலில் இரண்டு கைகளும் பிறகு நான்கு கைகளும் அழுத்திப் பொத்தி ....
சிறிய போராட்டத்திற்குப் பிறகு நான் நினைவிழந்தேன்.
பிறகு எனக்கு நினைவு திரும்பியதாக நான் நினைத்த பொழுது, காற்றில் மிதந்து கொண்டு இருப்பது போல ஓர் உணர்வு. வலியே இல்லை. ஆனால்.... இது என்ன - என்னுடைய உடலை ஓ ஏ வும், பிங்கியும் ஒரு சாக்குப் பையில் போட்டு, தூக்கிக் கொண்டு லிப்ட் பக்கமாகச் செல்கின்றார்களே!
நானும் மிதந்து கொண்டே அவர்களைப் பின் தொடர்ந்தேன். அவர்கள் காரில் பின் சீட்டில் என் உடலை ஏற்றினார்கள். பிறகு என் வீட்டை நோக்கி கார் சென்றது.
ஓ ஏ, பிங்கி - இருவருமே மிகவும் சோகமாக இருந்தார்கள். வீட்டுக்கு அருகே செல்லும் பொழுது, ஓ ஏ மெல்லிய குரலில், "பிங்கி நாம் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டோமோ?" என்று கேட்டார்.
பிங்கி அதற்கு உணர்ச்சியற்ற குரலில், "அக்காதான் அவசரப்பட்டுட்டாங்க" என்றாள்.
அதற்குப் பின் என்னுடைய வீட்டில் போடப்பட்ட நாடகங்களையும், காட்சி அமைப்புகளையும், நான் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் கரடியாகக் கத்தினால் கூட, என் குரல் எனக்கே கேட்கவில்லை. பிங்கியின் முகத்தை என்னுடைய கை நகங்களால் கீறிக் கிழிக்கக் கூட முயன்றேன். ஆனால் என்னால் ஒரு உலர்ந்த இலையைக் கூட அசைக்க முடியவில்லை.
(தொடரும்)
15.3.12
அமானுஷ்ய அனுபவங்கள் 02
இரண்டு தெரு தள்ளியிருந்தவர்கள் அன்று ஒரு நாள் சாதாரணமாகக் கேட்டார்கள்...
"உங்க தெருவில் இருக்கற வேப்ப மரத்துல பூஜை செய்துக்கலாமா? எங்க பேரனுக்கு நாளை முடியிறக்கணும்..."
"ஓ... அதுக்கென்ன.... இதில் என்ன இருக்கிறது...? தாராளமாய்க் கும்பிட்டுக் கொள்ளுங்கள்...!" மனைவி சாதாரணமாய்ச் சொல்லி விட்டு வீடு வந்து என்னிடமும் சொன்னாள்.
"நான் கூட ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வேப்ப மரத்துக்குக் கோலம் போட்டு பூ வைத்து பூஜை செய்யறேனே.... அவங்களும் கேக்கறாங்க.. சரின்னுட்டேன்"
இதுல என்ன இருக்கு என்பது போல நானும் பட்டுக் கொள்ளாமல் மையமாக மண்டையாட்டி விட்டு என் வேலையைப் பார்க்கச் சென்று விட்டேன்.
அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. மாலை ஆறுமணி போல வெளியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் தண்ணீர் குடிக்க உள்ளே வரும்போது பரபரப்புத் தகவல் சொன்னார்கள்...
"அடுத்த தெருக்காரங்க வந்து அந்த வேப்ப மரத்தடியில் சேவலை வெட்டறாங்க..."
"எந்த மரம்டா... நம்ம மரமா?" நம்ம மரமா என்று என் மனைவி கேட்டது. 'தான் பூஜை செய்யும் மரமா' என்ற பொருளில்.
"இல்லம்மா... கொஞ்சம் தளளி இருக்கற இன்னொரு மரம்..."
என்னைப் பார்த்தாள் மனைவி. "அவங்க கும்பிடற முறையா இருக்கும்" என்றேன்..
அப்புறம் இருட்டியதும் மொட்டை மாடியியில் அமர்ந்திருந்தோம். அந்த வீட்டுப் பெண்கள் நான்கைந்து பேர்கள் கூடை, மரம், விளக்குமாறு, சிறு வாளியில் தண்ணீர் என்று வந்தார்கள். சுவாரஸ்யம் கூடியது.
மரத்தடியைப் பெருக்கிச் சுத்தம் செய்தார்கள். தண்ணீர் தெளித்தார்கள். வயதான பெண்மணி ஒருவர் மரத்தடியில் ஈர மண்ணில் ஒரு சதுர வடிவில் வீடு கட்டுவது போல லேசான குழியுடன் கட்டம் கட்டினார். அப்புறம் உள்ளே ஒரு சதுரம். வெளிச் சதுரத்துக்கு வெளியில் செல்வது போல ஒரு வாசல். அந்த லேசான குழியில் காய்ந்த மண்ணால் நிரப்பி இன்னொரு பெண் அந்தக் கட்டங்களுக்கு ஒரு தோற்றத்தை உருவாக்கினார். சதுரங்களின் நடுவில் எல்லாம் மேடு உண்டாக்கி இன்னும் நிறமாக மண்ணடுக்கி ரத்தக் கலர்ப் பூவை அதில் வைத்தார்கள். உள் சதுரம், வெளிச் சதுரம் ரெண்டும் சேர்த்து பதினோரு மேடுகள். அதனை பதினோரு வீடுகள் என்றனர்.
அப்புறம் வெட்டிய சேவலின் தலையை கொண்டு வந்தனர். புதிருடனும் குழப்பத்துடனும் பார்த்துக் கொண்டிருந்த எங்களை அங்கு அப்போதுதான் வந்து மேற்பார்வையிட்ட அவர்கள் வீட்டு ஆண்கள், எங்களை உள்ளே போகச் சொல்லி விட்டு அவர்களும் அங்கிருந்து அகன்றனர்.
கொஞ்ச நேரத்தில் என் மனைவியின் தம்பியும் அவன் மனைவியும் வந்து சென்றனர். அவர்களும் "அக்கா... அங்க ஏதோ நடக்குது... சேவல் தலையை வெட்டி வச்சிருக்காங்க.." என்று சொல்லிச் சென்றனர்.
மறுநாள் எங்கள் ஏரியா புயலடித்தது. சுற்றி இருந்த மற்ற வீட்டுக் காரர்கள் இதை எப்படி நாங்கள் அனுமதித்தோம் என்று ஆவேசப் பட்டனர். 'கேட்டுக் கொண்டுதான் செய்தார்கள்' என்றாள் மனைவி. . 'பேரனுக்கு முடியிறக்க என்று கேட்டும் எப்படி அனுமதித்தீர்கள்' என்று ஒரே கேள்வி மயம்.எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
அப்புறம் எல்லோரும் சொல்லியதிலிருந்து தெரிந்து கொண்டது.
அது ரத்தக் காட்டேரி பூஜையாம். முனீஸ்வரர் பூஜை என்பது சற்று தேவலாம் ரகமாம். இது மிக மோசமான காவல் தெய்வமாம். பெண்கள்தான் செய்வார்களாம். ஆண்கள் யாரும் இருக்கக் கூடாதாம். குறிப்பாக வீட்டின் மூத்த மகனுக்கு ஆகாதாம். ஊருக்கு வெளியே, ஆள் நடமாட்டமில்லாத இடத்தில்தான் - குறிப்பாக ஆற்றங்கரையோரம்தான் - இந்த பூஜை செய்வார்களாம். மிக முக்கியமாக சேவல் வெட்டுவதையும், அதன் தலையை வைத்து பூஜை செய்வதையும் யாரும் வெளியாட்கள், குறிப்பாக ஆண்கள் பார்க்கக் கூடாதாம்.
எனக்கோ என் மனைவிக்கோ இதில் பயம் ஏதுமில்லை. 'எந்த தெய்வமும் கெடுதல் செய்யாது. கெடுதல் செய்தால் அது தெய்வமில்லை' என்றேன் மனைவியிடம்!. என் மகன்களும் பயப்படவில்லை. ஆனால் மற்றவர்கள் ரகம் ரகமாக பயந்து, பீதி வசப்பட்டனர்! உச்சி வெயிலில் அந்த இடத்தை, மகனோ, மகளோ, வீட்டுக்கு மூத்த குழந்தை தாண்டக் கூடாது என்றனர். செய்தவர்களை எப்படி இங்கு நீங்கள் பூஜை செய்யலாம் என்று கேளுங்கள் என்றனர். சரியா தவறா என்று அவர்களையே கேளுங்கள் என்றனர்.
மனைவி கேட்டாள். அந்த வீட்டு மாமியார் பயம் ஒன்றுமில்லை என்றார். அவர்கள் வீட்டு மருமகள் தனியாய் வந்து கொஞ்சம் ரிஸ்க்தான் என்றார்!
இரண்டு வீடுகளில் அவர்கள் வீட்டிற்கு வந்த ஒரு சாவுச் செய்திக்கும், இன்னொரு வீட்டில் அவர்கள் குடும்பத் தலைவர் மயிரிழையில் ஒரு விபத்திலிருந்து தப்பியதற்கும் இதைக் காரணமாகச் சொல்லி டென்ஷன் ஆனார்கள்!
இதற்கிடையில் இந்தப் பின் கதையெல்லாம் தெரியாத நிலையிலேயே என் மனைவியின் தம்பி திடீர் என்று காய்ச்சலில் விழுந்தான். 'சேவல் தலை' என்று அவன் உளறியதாக சித்தி தொலைபேசியில் சொன்னபோது மட்டும் சற்றே பயம் வந்தது. நம் வீடு பரவாயில்லை. அவர்கள் இதெல்லாம் தெரிந்தால் என்ன சொல்வார்களோ என்ற மனைவிக்குக் கவலை வந்தது.
பக்கத்து வீட்டுக் காரர்கள் சொன்ன இன்னொரு விஷயமும் நடந்தது. எங்கிருந்தோ ஒரு கருப்பு நாய் வரும் என்றார்கள். அன்று மாலை - பூஜை நடந்த மறு நாள் மாலை - ஒரு கருப்பு நாய் அங்கு படுத்து இருந்தது! முதல் நாள் இரவிலிருந்தே அது அங்கு இருப்பதாக மகனின் நண்பர்கள் பயமூட்டினார்கள்.துரத்தினாலும் முறைக்கிறதே தவிர போக மாட்டேனென்கிறது என்றார்கள். நான் தாண்டிச் சென்றபோது மர மறைவிலிருந்து எழுந்து வெளியில் வந்து என்னைப் பார்த்தபடி நின்று விட்டு மறுபடி பின்னால் சென்று படுத்துக் கொண்டது. நான் அதுவரையிலும் அந்த நாயை இந்த ஏரியாவில் பார்த்ததில்லை!
கொலையுதிர்காலத்தில் வசந்த் கேட்கும் 'என்ன சார் காட்டேரி விடறீங்க' வசனம் நினைவுக்கு வந்தது!
அன்று இரவு எதிர்பாராமல் வந்த மழை வேறு அந்த இடத்தை ஈரமாக்கி விபரீதத் தோற்றம் கொடுத்தது.
இதையும் அந்த பூஜையை செய்தவர்கள் வீட்டுப் பக்கம் போனபோது மனைவி அவர்கள் வீட்டில் சொன்னதும் அவர்கள் வீட்டின் மூத்த ஆண் கோபப் பட்டார். 'இந்த பூஜை பற்றியெல்லாம் எங்களுக்குத் தெரியாதே.. சொல்லியிருக்கலாமே' என்றதும் சட்டென வெளியேறி பூஜை நடந்த இடம் வந்தவர் பூஜை நடந்த இடத்தைக் கலைத்துப் போட்டார்.
அப்புறமும் அருகிலிருந்தவர்கள் விடவில்லை. கலைத்ததுதான் இன்னமும் தவறு என்றார்கள்.
எங்கள் வெளி நண்பர்கள் இரண்டு மாதிரியும் பேசினார்கள். இந்த பூஜை வெளியிடங்களில்தான் செய்வார்கள் என்றாலும் உங்கள் தெருவுக்கே இது இனி காவல் தெய்வம், பயமில்லாமல் இருங்கள் என்றார் என் நண்பர். என் மனைவியின் தோழியோ 'அவர் தவறாகச் சொல்கிறார்...இது கடும் பின் விளைவுகளை ஏற்படுத்தும்' என்றார்!
எது எப்படியோ, அந்த இடம் கலைக்கப் பட்ட சில மணி நேரங்களுக்குப் பின் அந்த கருப்பு நாய் கண்ணில் படவில்லை.
தம்பி காரணமில்லாக் காய்ச்சலிலிருந்து ஒரு வாரத்தில் விடுபட்டான்.
ஒரு வாரத் திகில், சிரிப்பு கலந்த பயம் போன்ற அனுபவங்களுக்குப் பிறகு....
தற்போது எல்லாம் சுபம்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



















