Tuesday, October 22, 2013

எலி வேட்டைமறுபடியும் எலியின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. எப்படித்தான் உள்ளே வருகின்றனவோ..

கடையிலிருந்து எலி கேக் வாங்கி வைத்தோம். அதைத் துளிக்கூடத் தொடவில்லை சமர்த்து எலிகள். எலிகள்? ஆம்... பன்மையில்தான் சொல்ல வேண்டும். இரண்டு மூன்று சைஸ்களில் பார்த்த ஞாபகம். 


கர்ப்பமான எலி ஒன்று முதலில் உட்புகுந்திருக்க வேண்டும். பிரசவம் எங்கள் வீட்டினுள் நடந்திருக்க வேண்டும். (என்ன ஒரு கண்டுபிடிப்பு!)
                                     
கூகிள் கொடுக்கும் படங்களில் பழைய மாடல் பொறியின் படம் கிடைக்கவில்லை. இப்போது இருக்கும் மாடல்கள் போலும் இவை.


முன்பு L ஷேப்பில் ஒரு பொறி இருக்கும். அதில் மாட்டும் எலி முதுகில் செம அடி வாங்கி மாட்டியிருக்கும். அதை மாட்டும்போதே சாம்பிள் அடி நானும் வாங்கியிருக்கிறேன்!
                                            


அப்புறம் இந்தக் கூண்டு.  நடுவில் எலிகள் தொந்தரவு இல்லாத காரணத்தால் எங்கே வைத்தோம் என்றே மறந்திருந்த எலிப்பொறியைத் தேடி எடுத்தோம். தூசியைத் துடைத்து செட் செய்தோம். மறுபடி வைத்து விட்டுக் காத்திருந்தோம்.


பக்கத்து வீட்டு வாண்டை விட்டு மசால்வடை வாங்கி வரச் செய்தோம். இரண்டு வடை வாங்கி வந்து தந்தான் பொடியன்.


மேஜை மேல் வைத்திருந்த வடையிலிருந்து அரை வடையை மட்டும்  பிய்த்து எடுத்துக் கம்பியில் சொருகி கதவைக் கம்பியில் மாட்டினேன். பின்னால் இருக்கும் கம்பிகளின் இடைவெளியில் அட்டை சொருகி அடைத்தேன். முன் அனுபவம்! பொடி எலிகளாயிருப்பதால் நக்கல் சிரிப்புடன் பின் கம்பி வழியே துள்ளிக் குதித்து ஓடிவிடும்.


பகல் வேளையிலேயே குழந்தைகள் விளையாடுவதுபோல குறுக்கும் நெடுக்குமாக எலி(கள்) ஓடிக் கொண்டிருந்ததால் பகலிலேயே வைத்து விட்டோம்.

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி என்று பாடிக் கொண்டே (மனதுக்குள்தான்) மற்ற வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தோம். 


'டப்' என்ற சத்தம். துள்ளி அருகில் ஓடினோம். உள்ளே மாட்டியிருந்தது. உறுதிப் படுத்திக் கொள்ள உள்ளே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பின்னால் இருக்கும் அட்டையைக் கிழித்துக் கொண்டு குதித்து வெளியே ஓடியது குட்டி எலி!
வெறுத்துப் போனோம். பொறியை எடுத்து மறுபடி தயார் செய்து, பின்னால் அது வெளியேற முடியாமல் கெட்டியான அட்டையை வைத்து மறுபடி மற்ற வேலைகளைப் பார்த்துக் கொண்டே காத்திருந்தோம்.

சத்தத்தையே காணோம். அவ்வப்போது சென்று எலி ஏதாவது உள்ளே மாட்டிக் கொண்டிருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தோம். ஊ..ஹூம்!
                               
                                                   
மிச்சம் வைத்த ஒன்றரை வடையை  உள்ளே எடுத்து வைத்து அப்புறம் உபயோகிக்க பத்திரப்படுத்தலாம் என்று வைத்திருந்த இடத்தைத் தேடினேன். எங்கே வைத்தேன்... இங்கேதானே வைத்திருந்தேன்... ஃபிரிஜ் மேலேயா...? ஆ...!  மேஜை மேலே...

                                           
மேஜை மேல் வைக்கப் பட்டிருந்த பொட்டலம் கிழிக்கப் பட்டிருந்தது. உள்ளேயிருந்த ஒன்றரை வடைகளில் மிச்சச் சிதறல்கள் வடை இழுத்துச் செல்லப் பட்ட வழியைக் காட்டிக் கொண்டிருந்தன. எலிப்பொறிக்கு நேரெதிர் திசை!

                                              
எலி பிடித்து வாழ்வோரே வாழ்வார் - மற்றோரெல்லாம்
கிலி பிடித்துப்போவார்! - எலிக்குறள்!

பின் பயமுறுத்தல் :
'எங்களி'ன் முந்தைய எலிப் பதிவுகள் 
மீண்டும் வாழ்வேன் 

============================================================

இன்று காலை செய்தித் தாளில் படித்த இந்தச் செய்தி இந்தப் பதிவுக்குப் பொருத்தமாக இருப்பதால் காலையே இங்கு இணைக்க முயற்சி செய்தேன். அப்போது நாளிதழின் இணையப் பக்கத்தில் இது வெளியாகவில்லை. இப்போது பார்த்தால் கிடைக்கிறது. எனவே பதிவிலும் இதை இணைத்திருக்கிறேன்!
பின்னூட்டத்திலும் சேர்க்கிறேன்!

"அச்சச்சோ... தப்புப் பண்ணிட்டேனே..." மனிதர்களைப் போலவே சிந்திக்கும் எலிகள்!

16 comments:

இராஜராஜேஸ்வரி said...

எலி பிடித்து வாழ்வோரே வாழ்வார் - மற்றோரெல்லாம்
கிலி பிடித்துப்போவார்! - எலிக்குறள்!

எலியோடு போராடி எலிக்குற(ர)ள் தந்து
வலிமையாய் சிரிக்கவைத்த பகிர்வுகள்.
பொலிவான பாராட்டுக்கள்..!

வெங்கட் நாகராஜ் said...

எலிக்குறள் எத்தனை அதிகாரம்.... ?

கஷ்டமான அனுபவம் தான் இந்த எலிகளோடு....

ரசித்தேன் என எழுத ஆசை தான் - ஆனால் நீங்கள் வேதனைப் படுவதை ரசிக்கக் கூடாதே... :)

திண்டுக்கல் தனபாலன் said...

இங்கும் வீட்டில் ஒரு மாதமாக இந்த தொல்லை தான்... மாட்ட மாட்டேங்கிது...!

அட... குறள்...! வாழ்த்துக்கள்...

கோவை நேரம் said...

எலி....கிலி...

வல்லிசிம்ஹன் said...

மழை வந்தால் தவளை,எலி சகஜம்.

சிரித்துச் சமாளியுங்கள்.நாயர்கடை வடைதான் ஏற்றது:)

சீனு said...

ஹா ஹா ஹா எங்கள் ஸ்ரீராம் சார் எலி வேட்டைக்குக் கிளம்பிவிட்டார் பராக் பராக் பராக்

ADHI VENKAT said...

இந்த எலி இருந்தாலே நிம்மதியாகவே இருக்க முடியாது. எங்கள் வீட்டிலும் தில்லியில் இந்த அனுபவங்கள் நிறைய உண்டு....

கீழ்வீட்டு தெலுங்குக்காரர் ஒரு ரப்பர் பேட் போல் ஒன்றை வைப்பார். அதில் எலி ஒட்டிக் கொண்டு விடும். நகர முடியாது...அவர் அதிலிருந்து எலியை பிய்த்து தூர போய் விடுவார். நாம் அப்படியே பேடோடு வீசி விடலாம். விலையும் ஜாஸ்தி இல்லை என்று நினைக்கிறேன். எங்களுக்கு அதன் பிறகு தான் மாடியில் எலித்தொல்லை இல்லாமல் இருந்தோம்....:)

எலிக்குறள் பிரமாதம்..

Ranjani Narayanan said...

குட்டி எலிகள் உங்களைப் பார்த்து நக்கலாக சிரிப்பதை கற்பனை செய்து பார்த்து வாய்விட்டு சிரித்தேன்.
இங்கு வீட்டில் எலிகள் இல்லை. ஆனால் இரவு தெருக்களில் பெரிய பெரிய பெருச்சாளிகள் பார்த்திருக்கிறேன்.

கோவை ஆவி said...

எலி பவர்புல்லா மட்டுமில்ல புத்திசாலியாவும் இருக்கு!

ஸ்ரீராம். said...


இன்று காலை செய்தித் தாளில் படித்த இந்தச் செய்தி இந்தப் பதிவுக்குப் பொருத்தமாக இருப்பதால் காலையே இங்கு இணைக்க முயற்சி செய்தேன். அப்போது நாளிதழின் இணையப் பக்கத்தில் இது வெளியாகவில்லை. இப்போது பார்த்தால் கிடைக்கிறது. எனவே பதிவிலும் இதை இணைத்திருக்கிறேன்!
பின்னூட்டத்திலும் சேர்க்கிறேன்!

"அச்சச்சோ... தப்புப் பண்ணிட்டேனே..." மனிதர்களைப் போலவே சிந்திக்கும் எலிகள்!

கோமதி அரசு said...

எலி பிடித்து வாழ்வோரே வாழ்வார் - மற்றோரெல்லாம்
கிலி பிடித்துப்போவார்! - எலிக்குறள்!//

எலிக் குறள் அருமை.

கடையில் எலிமேட் விற்கிறார்கள் .அதை எலி வரும் இடத்தில் மசால் வடையை மேட் மேல் போட்டு வைத்தால் வடையை தின்ன வரும் எலி அதில் ஒட்டிக் கொள்ளும். அப்புறம் வெளியில் கொண்டு விட்டு விடலாம். பக்கத்து வீட்டு மாமா அட்டையிலிருந்து சாக்கில் தள்ளி போட்டு கொல்வார்.
எங்களுக்கு அந்த மனம் இல்லாதக் காரணத்தால் தூரத்தில் கொண்டு விட்டு விடுவோம்.

rajalakshmi paramasivam said...

நீங்கள் எலி வேட்டையாடியது நல்ல நகைச்சுவை பதிவு. அதுவும் ஒன்னரை மசால் வடையை தேடிக் கஷ்டப்பட்டு கொண்டிருந்ததைப் பார்த்து எலியே வந்து
உங்களிடம் சொல்லத் துடித்திருக்கும் என்று தோன்றியது.
வாய் விட்டு சிரித்தேன்.துன்பம் வந்தால் மட்டுமில்லை எலி வந்தாலும் நகைக்கலாம் என்று சொல்லாமல் சொல்லி விட்டீர்கள்.

ராமலக்ஷ்மி said...

அத்தனை எளிதல்ல எலி பிடித்தல் + ஒழித்தல்:)!

T.N.MURALIDHARAN said...

சமயத்தில் எலிகளின் அட்டகாசம் ஓவராகத்தன் இருக்கும். கம்ப்யூடர் ஒயரை கடித்து துண்டுகளாகி விட்டது. பழைய மாட எலிப்பொறிஇல ஒரே ஒரு எலி மட்டும் மாட்டிக் கொண்டது. எடுத்துக் கொண்டு போய் ரொம்ப தூரத்தில் குடியிருப்பு இல்லாத பகுதியில் விட்டு விட்டோம்.
புலி பிடிப்பதை விட சுவாரசியமாக இருக்கிறது.

s suresh said...

இந்த எலித்தொல்லை தாங்க முடியலை சார்! எங்க வீட்டிலும் எலிகள் அட்டகாசம் அதிகம்தான்!

Geetha Sambasivam said...

தூரத்தில் கொண்டு விட்ட எலிகள் எல்லாம் நமக்கு முன்னாடி வீட்டுக்கு வந்த அனுபவங்கள் எல்லாம் உண்டாக்கும். எலிக்கு மட்டுமா? நாய், பூனை எல்லாத்துக்கும் நம்ம அம்பத்தூர் வீட்டில் தான் பிரசவம் பார்த்திருக்கேன்.:))) டாம் அன்ட் ஜெரி மாதிரி விளையாட்டெல்லாம் விளையாடி இருக்கோமே! என்னமோ புதுசு மாதிரி கதை சொல்ல வரீங்க? :))))))))

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!