Tuesday, May 22, 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை - சுயமரியாதை - கீதா ரெங்கன்
சுயமரியாதை  “நெக்ஸ்ட் ஸ்டேஷன் ஜெஆர்2” 

பெண் குரலுடன் மின் திரையில் எழுத்துகளும் மின்னி ஓடின. தன் லக்கேஜை சரி பார்த்து எடுத்துக் கொண்டு தயரானாள் அவள். அவள் அழகை, அவள் ஒரு மேனகை என்று தொடங்கி “பின்னிய கூந்தல் கருநிற நாகம், பெண்மையின் இலக்கணம் அவளது தேகம், முழுவதும் பார்த்தால் அவள் ஒரு பைரவி” என்று முடிக்கலாம்! அவள் பைரவியேதான். நிறம் மட்டு. ஆனால், அழகி! பயணத்திற்கான காரணம் அக்கா தர்ஷினி - பெரியப்பாவின் மகள் வாங்கியிருந்த புது வீடு! ஒன்றாக வளர்ந்ததால் ஏற்பட்ட தொடரும் பாசம். இறங்குவதற்கு 7 நிமிடங்கள் இருப்பதால் 50 நிமிடங்களுக்கு முன்னானவை ஷார்ட் ரீகேப்….

ரயில் நிலையத்திலிருந்து மெட்ரோ ரயில் நிலையம் சென்று டிக்கெட் வாங்கிக் கொண்டு நடைமேடை நோக்கி பைரவி நடந்த போது அக்காவின் அழைப்பு.

“பைரூ! வந்துருவியாடி தனியா?”

“வாயுள்ள பிள்ளை பிழைக்கும். என் ராஷ்ட்ரபாஷாவை என்னனு நினைச்ச?”

“இதுக்கொன்னும் குறைச்சலில்லை. உன் குணம்தான் தெரியுமே!” என்று அக்கா சிரித்தாள். “சரி ஏதாவதுனா ஃபோன் பண்ணு.”

யாருக்கும் சிறு தொந்தரவும் தரவேண்டாமே என்பது பைரவியின் எண்ணம். ஆஃபீஸ் நேரம். மெட்ரோவில் கூட்டம்.. விதவிதமான ஃபேஷன் உடைகளில் மக்கள், கையிலிருந்த ஸ்மார்ட்ஃபோன்களைப் பத்திரமாகப் பார்த்துக் கொண்டார்கள். விலை மதிக்க முடியாத புன்னகையை மட்டும் தொலைத்திருந்தார்கள். பாவம்!

“ஏய் பைரூ பக்கிரி மாதிரி ட்ரெஸ் போட்டுட்டு வராத. இங்க எல்லாரும் அழகா ட்ரெஸ் பண்ணுவாங்க”. அக்கா சொன்னது நினைவுக்கு வர தன்னையே ஒரு முறை பார்த்துக் கொண்டாள். டாப்ஸ் நன்றாகவே இருந்தது. அருகில் இருந்த அழகான பெண்ணைப் பார்த்து விரிந்த புன்சிரிப்பொன்றை உதிர்த்தாள். அப்பெண் கஞ்சத்தனமாக உதட்டை விரித்தாள். சில ஸ்டேஷன்கள் கடந்ததும் கூட்டம் குறைந்தது. ஒருவர் பைரவியிடம் ஓர் இருக்கை காலியாக இருப்பதைக் காட்டினார்.

“மதராசி?” தோற்றத்தில் முத்திரை உள்ளது போலும்!

“ஹான் ஜி!”

“ஹிந்தி மாலும்?”

“தோடா…தோடா” என்றுவிட்டு தன்யவாத் சொன்னவளுக்குத் “த்தோடா த்தோடா” நினைவுக்கு வர சிரித்துவிட்டாள். அந்த மனிதர் ஒரு மாதிரியாகப் பார்த்தார். “தன்யவாத் ஜி” என்று மீண்டும் சொல்லி சமாளித்தாள். எப்போதோ படித்துப் பாஸான ராஷ்ட்டிரபாஷா அவள் மூளைக்குள் கொஞ்சம் வெளிச்சம் போட்டது. அட! “ராஷ்ட்ர பாஷா!” என்று சொல்லாடல் செய்து ரசித்துக் கொண்டிருந்த போது ஜிஆர்2 என்று குரல் ஒலித்திட ஸ்டேஷனில் ரயில் நின்றது.

வெளியே வந்த பைரவிக்கு சுற்றிலும் கட்டிடக்காடாய்ப் பாலைநில நாடு போலத் தெரிந்த ஊரைப் பார்த்து வியப்பு. சூரியன் சுட்டெரித்தார். சென்னையை விட மோசமான ட்ராஃபிக்! புதியதாக உருவான சிறிய ஊராம்! அத்தனையும் பணக்காரத்தனமாகவே  இருந்தது. பெண்கள் எல்லாம் மிக அழகாய் அழகுசாதனங்களின் விளம்பரமாக இருந்தார்கள்.

“மூஞ்சி எல்லாம் பளிச்சுனு இருக்கணும். நீ பௌடர் கூட போட மாட்ட” அக்கா புறப்படும் முன் எச்சரித்தது பைரவியின் நினைவில் வரவும் வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்தவள் சட்டென்று, அங்கிருந்த ஆட்டோ கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டாள். கொஞ்சம் கறுத்துப் போயிருக்கோ? ஆ…மா இல்லாட்டா ரொம்பக் கலரு!

“ஆட்டோ சாயியே? ஜி” (ஆட்டோ வேண்டுமா?)  

“ஹான் ஜி” என்று தான் போக வேண்டிய இடத்தைச் சொன்னாள்.

70 ரூபாய் கேட்ட அவரிடம், “ஆயினே மேன் தேக்னே கோ ஆப் (B)பீஸ் ருப்யா அதிரிக்த் சார்ஜ் கர்த்தே ஹேய்ன் ஜி?” (ஓ கண்ணாடியில முகம் பார்த்ததுக்கு 20 ரூ கூட கேக்கறீங்களா!) என்று சொல்லிச் சிரித்தவள், அக்கா சொல்லியிருந்த பச்சாஸ் ருப்யா என்று சொல்லித் தன்னுடைய ராஷ்ட்ரபாஷா வில் பேரம் பேசினாள். பரவாயில்லை ஆட்டோகாரருக்கு அவளது ராஷ்ட்ர பாஷா புரிந்தது. இப்படிப் பலரையும் சந்தித்திருப்பார் போலும் என்று நினைத்துக் கொண்டாள்.

வழி முழுவதும் விண்ணைத் தொடும் பணக்காரக் குடியிருப்புகள், கட்டிடங்கள். இத்தனை பேருக்கும் எங்கிருந்து தண்ணீர் வரும் என்று சென்னையை ஒப்பிட்டு அவளது மூளை தேவையில்லாமல் கவலைப்பட்டது. இங்கு வீடுகளின் விலை கோடிக்கணக்கிலாமே! பணம் பாதாளம் வரைக்கும் பாய்கிறதோ! அக்காவின் குடியிருப்பைப் பார்த்து பிரமித்தாள்! செக்யூரிட்டியின் ஹிந்தியைப் புரிந்து கொள்ள இவளது “ராஷ்ட்ரபாஷா” அறிவு உதவவில்லை.

“ஜி! ஹிந்தி மேம் போலியே!" 

"மெய்ன் ஹிந்தி போல்தி ஹூம் ந” (ஜி! ஹிந்தியில பேசுங்க! நான் ஹிந்திதானே பேசுறேன்!!)

அவர் அக்காவை இன்டெர்காமில் தொடர்பு கொண்டு அவளிடம் கொடுக்க, “ஹேய் என்னாச்சு…..நீ உன் ஹிந்தில பொளந்து கட்டினியாக்கும்…நான் அவங்கிட்ட சொல்றேன் …நீ வா” என்று சொல்லவும், பைரவிக்கு அவர் அனுமதி கிடைத்தது. அக்காவின் ஃப்ளாட் 17 வது மாடி.

“வெல்கம்! தனியாவே மேனேஜ் பண்ணிட்டியே! பொழச்சுப்ப…” இது அத்தான்.

“ஹும் நான் “ராஷ்ட்ரபாஷா! தெரியும்ல”! செக்யூரிட்டிக்குப் புரியலை. அவர் என்னவோ பேசுறாரு…”

“ஹா ஹா அவன் பஞ்சாபி. அவன் ஹிந்தி அப்படித்தான் இருக்கும்.……உன் ராஷ்ட்ரபாஷா லாம் வேலைக்காவாது……”

“நான் சொன்னது என் ராபா வை இல்ல….”ராஷ்ட்ர பாஷா”! தேசிய மொழி! பொதுவாத்தானே இருக்கணும்.” என்று பைரவி சொன்னதும் அத்தான் தமிழ்நாட்டு ஹிந்தி அரசியலைத் தொடங்கினார்.

“அத்தான் ஹிந்தி சுந்தரிதான்!! பஹுத் சுந்தர் பாஷா ஹை! ஜயஹோ! போதுமா” என்று சொல்லிட எல்லோரும் சிரித்தார்கள்.

“அது சரி இது என்னடி 300ரூ, 400 ரூ ட்ரெஸ்ஸு? வேற ட்ரெஸ்ஸே இல்லையா? உங்கிட்ட? சரியான பக்கிரி"

“அட போக்கா நீ!….யாரும் என்னை அப்படி பாக்கல. இப்ப லிஃப்ட்ல வந்தப்ப கூட அழகான ஒரு லேடி என்னைப் பாத்து சிரிச்சாங்க…ஹாய் சொன்னாங்க” என்ற பைரவி, இது உனக்குள்ள உருவான உங்க சொசைட்டி ஸ்டேட்டஸ் எண்ணம் என்று நாவில் வந்ததை வெளியிடவில்லை.

“சரி செருப்பை உள்ள இருக்கற ஷெல்ஃப்ல கொண்டு வைச்சுரு.”

செருப்பு ஷெல்ஃப் துணி வைக்கும் ஷெல்ஃப் அளவிற்குப் பெரியதாக இருந்தது. “யக்காவ் வேண்டாத செருப்பெல்லாம் தூக்கிப் போடாம வைச்சுருக்கியா?”

“ஏய்! லூஸே! ஒவ்வொன்னும் என்ன விலை தெரியுமா? நாங்கல்லாம் ட்ரெஸ்ஸுக்கு, ஆஃபீஸுக்கு, பார்ட்டி, கல்யாணம் அப்படினு ஒவ்வொன்னுக்கும் ஏத்தாப்புல செருப்பு போட்டுக்குவோம். இங்கலாம் அதைக் கூடப் பாப்பாங்க தெரியுமா?”

எல்லாரும்னா? சாதாரண மக்களுமா? பணம் இருந்தால் இப்படித்தானோ? அக்காவுக்கே 6 ஜோடி செருப்புகளுக்கும் மேல் இருந்தன. அது தவிர நடைப்பயிற்சி ஷூ, பிற நாட்களில் அணியும் ஷூ என்று! அது அவர்கள் விருப்பம்! என்று நினைத்துக் கொண்டே பைரவி வீட்டைச் சுற்றிப் பார்த்தாள்.

வீடு பெரிதாக மிக நன்றாகவே இருந்தது. எல்லா அறைகளிலும் பால்கனி. பால்கனியிலிருந்து பார்த்தால் சுற்றிலும் வானை இடிக்கும் அளவு குடியிருப்பு கட்டிடங்கள் சிங்கப்பூர், துபாயை நினைவூட்டியது. கீழே பார்த்தால் அம்மாடியோவ்! தலை சுற்றியது. வீட்டிலிருந்த அனைத்தும் ஸ்டேட்டஸ் அடையாளமாக இருந்தது.

பைரவி குளித்துவிட்டு, சாப்பிட்டபின் ஏதாவது உதவலாம் என்றால் சமைப்பதிலிருந்து துணி உலர்த்தி மடிப்பது வரை எல்லாவற்றிற்கும் ஆள். அக்கா 4 நாட்கள் விடுப்பு எடுத்திருந்தாள்.  அக்காவின் கணவர், குழந்தைகள் என்று நன்றாக இருந்தாலும், வீட்டில் எல்லா வேலையும் தானே செய்து பழகிய பைரவிக்கு எதுவுமே செய்யாமல் இருப்பது என்னவோ போல் இருந்தது.

அக்கா கடைக்குச் சென்ற போதெல்லாம் பைரவிவையும் அழைத்துச் சென்றாள். யோசித்துத் தேவையானவற்றிற்குச் செலவு செய்யும் பைரவிக்கு அக்கா பைசா பார்க்காமல் பொருட்கள் வாங்கியது ஆச்சரியமாக இருந்தது.

பைரவிக்குச் சிறு வயதிலிருந்தே இயற்கையாகவே  எளிமை அவள் மனதில் பதிந்து போன ஒன்று எதிலும் அதீத ஆசை வைக்காதவள். இருக்கும் போது எல்லாம் அணிந்து அப்புறம் இயலாமல் போனால்? பல அனாவசியமான கேள்விகளுக்கு இடம் அளிக்காமல், எப்போதுமே பைரவி இப்படித்தான் என்ற ஒரே வரியோடு போய்விடுமே! என்று இளம்வயதிலிருந்து ஏற்ற இறக்கங்கள் நிறைந்த அவள் வாழ்க்கை தந்த அனுபவ பாடமும் காரணம்.

4 நாட்கள் ஓடிவிட்டது. ஊருக்குக் கிளம்புவதற்கு முதல் நாள், தர்ஷினி, பைரவியை ஷாப்பிங்க் அழைத்துச் சென்றாள். அது ஒரு பெரிய மால். அங்கு ஒரு கடையில் உடைகள், உடைகளுக்கேற்ற செருப்புகள், பேகுகள் என்று எல்லாமே இருந்தது.

“பைரூ உன் வாக்கிங்க் ஷூ, அப்புறம் செருப்பு ரெண்டுமே நல்லால்ல. இங்க  வா இங்க உன் சைஸுக்கு ஏத்தாப்புல பாரு. நான் நல்லதா வாங்கித் தரேன்.”

“வேண்டாங்க்கா. இதுக்கு என்ன குறைச்சல்? நல்லாத்தான் இருக்கு. எங்கிட்ட இருக்கறதே போதும்.” பைரவியின் செருப்பு நன்றாக இருப்பதாக அந்தக் கடைக்காரப் பையனே சொன்னார். அவள் அணிந்திருந்த டாப்ஸ் டிசைன் “பஹூத் அச்சா ஹை” என்றும் சொன்னார். இத்தனைக்கும் அந்த டாப்ஸ் 400ரூ தான். ஆனால், தர்ஷினி விடவில்லை. பைரவி சும்மா ஒரு செருப்பை எடுத்துப் பார்க்க விலையோ ரூ 2000. அதற்குக் குறைவாக ஒன்றுமே இல்லை. அவளுக்குத் திகைப்பு.

“ஐயே! 2000 ரூ செருப்பெல்லாம் யாரு போடுவா? உழைக்கவே உழைக்காது!!! நான் வாங்கவே மாட்டேன்.”

செருப்பு என்றாலே உழைக்கும் ரகம் தானே! விலை உயர்ந்த செருப்பு மட்டும்தான் உழைக்குமா என்ன? என்ற வார்த்தைகளை அடக்கினாள் பைரவி!

“இங்க பாரு…….பிச்சைக்காரி, வேலைக்காரி போடற மாதிரி போட்டுட்டுத் திரியாத…. இந்த ஷூ, செருப்பு உன் சைஸ் தான். ரெண்டுல எது பிடிச்சுருக்கோ சூஸ் பண்ணு.…அப்புறம் இந்த டாப்ஸ் பாரு…எவ்வளவு நல்லாருக்கு. அந்த ட்ரையல் ரூம்ல போய் போட்டுப் பாரு….”

ஷூவின் விலை. 4,000 ரூ. செருப்பின் விலை 2,999. டாப்ஸின் விலை 2000. பைரவிக்கு இது அதீதம் என்று தோன்றியது. ஆச்சரியமும் கூட. இதே போன்ற டாப்ஸ் அவளிடம் இருக்கிறது. கலர் தான் வேறு. அதே துணி ஆனால் இங்கு மூன்று மடங்கிற்கும் மேல் விலை. பைரவியின் உள்ளத்தில் என்னவெல்லாமோ எண்ணங்கள் ஓடியது.

பைரவியின் மனம் வருந்தியது. பிச்சைக்காரி, வேலைக்காரி போல என்று பேசியதால் அல்ல. அவர்களின் மீதான பார்வையை நினைத்து! அவர்களும் மனிதர்கள்தான். அப்படிப் பார்த்தால் எல்லோருமே வேலைக்காரர். ஏதோ ஒரு வகையில் பிச்சைக்காரர் தாம்! வேலைக்காரி என்று சொல்வதைக் கூட விரும்பாமல் உதவியாளர், அஸிஸ்டென்ட் வலது கை என்று சொல்பவள் பைரவி. ஒரு நாள் இந்த உதவியாளர் இல்லை என்றால் டென்ஷனாகுபவர்களையும் பார்க்கத்தான் செய்கிறாள்.

பலஜோடி செருப்புகள், எண்ணிலடங்கா உடைகள் உள்ளவர்களுக்கு, அதுவும் அடுத்த தெருவில் இருக்கும் கடைக்குக் கூட காரில் செல்பவர்களுக்கு அவை எளிதில் பழசாகாதுதான். சாதாரண மக்களுக்கு எண்ணிக்கையில் அடங்கும் உடைகளும், ஒரு ஜோடி ஷூவோ செருப்போ, அது எந்த விலையில் என்றாலும் தினமும் பயன்படுத்தினால் பழசாகித்தானே போகும். பணம் இருந்தாலும் கூட வெளியில் தெரியாமல் எளிமையாக இருப்பவர்கள் இல்லையா என்ன? ஒவ்வொருவரின் பொருளாதாரமும், சிந்தனைகளும் ஒவ்வொரு மாதிரி.

உடை, நகை என்பதெல்லாம் அவரவர் தனிப்பட்ட விருப்பம், வசதி. அதில் தவறே இல்லையே. அன்பை மட்டுமே முக்கியமாகக் கருதும் பைரவியால், இந்த ஸ்டேட்டஸ் பார்க்கும் அட்டிட்யூடைத்தான் ஏற்கமுடியவில்லை.

அக்கா உன் சிந்தனை வேற. என் சிந்தனை வேற. நீ உன்னைச் சுத்தி இருக்கறவங்க ஸ்டேட்டஸ்…..அவங்க சொல்ற கமென்டுக்காக வாழற. நான் எனக்காக வாழறேன். அன்பான மனசுனால இதை எல்லாம் புறம் தள்ள முடியும். என்று சொல்ல நினைத்ததை அக்காவின் மனம் புண்படும் என்று நினைத்த போது

“என்ன பைரூ என்ன யோசனை? விலையா? லூசே….செருப்பு சூஸ் பண்ணிட்டு அப்புறம் டாப்ஸ் போய்ப் போட்டு பாரு…”

“சாரிக்கா…அக்கா நான் டாப்ஸ் லாம் போட்டுப் பார்த்து வாங்கற பழக்கம் இல்லை. ப்ளீஸ் எனக்கு எதுவும் வேண்டாம். நான் வெளில வெயிட் பண்ணறேன்.” என்று தன் சுயமரியாதையை இழக்க விரும்பாத பைரவி அக்காவின் பதிலுக்குக் காத்திராமல் வாயிலை நோக்கி நடந்தாள்.

“இன்னும் மாறவே இல்லை. பிடிவாதக்காரி” பின்னால் அக்காவின் குரல் ஒலித்துத் தேய்ந்தது.

81 comments:

துரை செல்வராஜூ said...

வாழ்க...

துரை செல்வராஜூ said...

அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதாR/ கீதாS அனைவருக்கும் வணக்கம்...

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

துரை செல்வராஜூ said...

இன்றைய பங்களிப்பு அன்பின் கீதாR ....
நல்வாழ்த்துகள்...

துரை செல்வராஜூ said...

கீதா அவர்களது கணினி இன்னும் வீடு திரும்பவில்லையா!...

ஸ்ரீராம். said...

கீதா R - ன் கணினி இன்னும் தயாராகவில்லை. எனவே அவர் இணையத்துக்கு வர இன்னும் தாமதமாகும் என்று தெரிகிறது.

துரை செல்வராஜூ said...

சுயமரியாதை கம்பீரம்....

துரை செல்வராஜூ said...

வெறும் பகட்டுக்காக பொருளை அழித்தவர்கள் உள்ளனர்...

ஆடம்பரத்தினால் அழிந்தவர்களும் ஏராளம்...

சிறப்பான கதை... வாழ்க நலம்...

ஸ்ரீராம். said...

// சுயமரியாதை கம்பீரம்.... //

ஆம். அவரவர் சுயகௌரவம்.

Geetha Sambasivam said...

இதைப் பலரிடம் பார்த்திருக்கேன். எனக்குத் தெரிந்த ஒருத்தர் அப்பா வீடு சுமார் தான். ஆனால் புக்ககத்திலும், மற்ற உறவு, நட்புகளோடும் தான் என்னமோ பணக்கார வீட்டில் பிறந்து வளர்ந்தாப்போல் சொல்லிப்பார். இத்தனைக்கும் அவர் எனக்கு நெருங்கிய உறவு என்பதால் அவர் பிறந்த வீட்டின் நிலை நன்றாகத் தெரியும். போலி கௌரவத்துக்காக இப்படியும் சொல்லிக்கிறவங்க இருக்காங்க! அதே சமயம் "சர்வர் சுந்தரம்" போல் பழசை மறக்காதவங்களும் இருக்காங்க!

Geetha Sambasivam said...

இப்போக் கொஞ்ச நாளாக காஃபி ஆத்தவே நேரம் ஆயிடுது! நான் எழுந்தால் அவர் எழுந்துக்க லேட்! அவர் எழுந்தால் நான் எழுந்துக்க லேட்! :)

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வழக்கமான நடையை விட சற்று வித்தியாசமான நகைச்சுவை கலந்த சுவாரசிய நடை.பணம் வந்ததும் மனமும் மாறுகிறது. ஆடம்பரம்தான் உயர்நிலை என்ற மனப்பான்மையை உருவாக்குகிறது.ஆனால் எத்துனை உயர்வு வந்தபோதும் ஒருசிலர் எளிமையைக் கைவிடுவதில்லை. ஏ.சி இருந்தும் அதனை விரும்பாமல் சாதரன் அறையில் உறங்குபவர்களும் உண்டு. சிறப்பான கதை பாராட்டுகள் கீதா மேடம்

வல்லிசிம்ஹன் said...

நகைச்சுவையுடன் ஆரம்பித்த கதை, சுய மரியாதையுடன் முடிந்திருக்கிறது.
இந்த மாதிரி எழுத்து கீதாவுக்கே வரும்.
எழுத்துரு மட்டும் பிங்க் கலரில் சரியாக அமையலையோ.

எனக்கும் இது போல உறவினர்கள் உண்டு.
நல்லவர்களாகவே இருப்பார்கள்.
வார்த்தைகள் பயன் படுத்தும் விதம் ரசிக்க முடியாது. வெகு அழகாகச் சொல்ல வந்ததைச் சொல்லி மந்தில் குடியேறிய பைரு வுக்கு வாழ்த்துகள்.
கீதாவுக்கும் தான்,.
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

ஸ்ரீராம். said...

வல்லிம்மா... இந்தக் கலர் பரவாயில்லையா?!!

ஏகாந்தன் Aekaanthan ! said...

@கீதா சாம்பசிவம்: .. நான் எழுந்தால் அவர் எழுந்துக்க லேட்! அவர் எழுந்தால் நான் எழுந்துக்க லேட்! :)//

அலட்சிய தம்பதி ..!

Geetha Sambasivam said...

//அலட்சிய தம்பதி ..!// @ஏகாந்தன் சார், ஹெஹெஹெஹெ, எல்லாத்திலேயும் இப்படித் தான்! :))))))

Geetha Sambasivam said...

எ.பி.க்குத் தான் முகநூல் வழியாச் சுத்திட்டு வரேன்னு நினைச்சா இப்போ வெங்கட்டின் பதிவுகள்! போகவே முடியலை! முகநூல் வழியாப் போய்ப் பார்க்கிறேன்.

KILLERGEE Devakottai said...

பைரவியின் குணம் நான் சிறுவயது முதலே கற்பனையில் எதிர்பார்த்த தேவதையைப் போலவே நூறு சதவீதம் ஒத்து வருகிறது...

வேலைக்காரி, பிச்சைக்காரி என்ற வார்த்தையை படிக்கும்போது என் மனதுக்கு என்ன தோன்றியதோ...

அதையே அடுத்த பாராவில் பைரவியும் நினைத்ததை படித்ததும் என் மனம் சிலிர்த்தது உண்மை.

நல்லதொரு படைப்பு வாழ்த்துகள்.

Thulasidharan V Thillaiakathu said...

நன்றி துரை செல்வராஜு அண்ணா...நாளைதான் கணினி வீடு வ்ரும்...இப்ப மொபைலில் இருந்து...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

எல்லோருக்கும் வணவ்க்கம்

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஆம் ஸ்ரீராம் நாளைத்தான் வரும்....மொபைல் வேறு ஹேங் ஆகிறது....விரிவான பதில் இல்லைனாலும் சுருக்கமா கொடுக்கறேன்....ஸ்ரீராம்..

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

மிக்க நன்றி துரை அண்ணா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஆமாம் ..உங்கள் கருத்து ...

மிக்க நன்றி. துரை செல்வராஜு அண்ணா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஆமாம்ல...ஸ்ரீராம்...நன்றி ஸ்ரீராம்...கதை வெளியிட்டமைக்கு..

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஆம் கீதாக்கா....இதில் பைரவி சர்வர் சுந்தரம் தான்...

மிக்க நனri.கீதாக்கா

கீ5tha

Thulasidharan V Thillaiakathu said...

ஹாஹாஹா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...
This comment has been removed by the author.
Thulasidharan V Thillaiakathu said...

மிக்க நன்றி முரளிதரன் சகோ கருத்திற்கும், பாரட்டிற்கும்

கீதா

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

சகோதரி கீதா ரெங்கன் அவர்களின் படைப்பில் உருவான கதை மிகவும் அருமை.

மனிதர்கள் தன்னுடைய சுபாவங்களை பிறரிடம் திணிக்கும் போதும், இல்லை.. அவர்களும் நம்மை போலவே இருக்க வேண்டுமென்பதற்காக, உரிமையாகவே
சொன்னாலும், நாம் சொல்லும் சில வார்த்தைகள் அவர்களை கஸ்டப்படுத்துமே என எண்ணியும் பார்ப்பதில்லை... இவர்களும் ஒரு சுயநல கூட்டத்தில் உருவானவர்கள் தான்.

பைரவியைப்போல் அந்த இடத்தை விட்டு அகலும் போது, தன் பின்னாடியே மற்றொரு கமெண்ட்ஸ் தனக்காக வரும் என்பதையும் எதிர்பார்த்தபடி, அகன்று விடுவதற்கும் துணிவு வேண்டும்.

சுய மரியாதை.. நல்லதொரு படைப்பு..
அருமையான கதையை உருவாக்கிய சகோதரி கீதா ரெங்கன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

அதை பகிர்ந்தளித்த தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Thulasidharan V Thillaiakathu said...

மிக்க நன்றி வல்லிம்மா...கருத்துக்கும் பாராட்டிற்கும்....

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கீதாக்கா.. பாராசூட் மறக்காம எடுத்துட்டு போங்க... ஹாஹாஹ்

கீதா

Bhanumathy Venkateswaran said...

அக்கா மனதையும் புண் படுத்தாமல், அதே நேரம் தன் சுய கௌரவத்தையும் விட்டுக் கொடுக்காத பைரவி பாத்திர படைப்பு அருமை! பாராட்டுகள்!

நெ.த. said...

கதை இன்னும் படிக்கலை. இது ஆஜர் பட்டியல்தான். இன்று நேரம் கிடைக்காது. நெட்டும் எப்போதும் டிஸ்கனெக்ட் ஆகும்.

படித்துவிட்டு எழுதுகிறேன் இன்னும் இரண்டு நாட்களில் கீதா ரங்கன்.

G.M Balasubramaniam said...

சொல்ல நினைத்ததை மனம்புண்படாமல் சொல்லலாமே வலை உலகப்பிரதிநிதியாக இருக்கிறாளே பைரவி

ஏகாந்தன் Aekaanthan ! said...

@ கீதா: ...நாளைதான் கணினி வீடு வ்ரும்...இப்ப மொபைலில் இருந்து...//

இப்படிச் சொல்லிக்கொண்டு, உங்கள் பெயரையே ஆல்ஃபா-ந்யூமரிக் டிசைனில் போட முயற்சிக்கிறீர்கள் என்று புரிந்தது இதைப் பார்த்தவுடன் : கீ5tha

பெரிய்ய கலாக்கார்-தான் நீங்கள்!

Bhanumathy Venkateswaran said...

//விதவிதமான ஃபேஷன் உடைகளில் மக்கள், கையிலிருந்த ஸ்மார்ட்ஃபோன்களைப் பத்திரமாகப் பார்த்துக் கொண்டார்கள். விலை மதிக்க முடியாத புன்னகையை மட்டும் தொலைத்திருந்தார்கள். பாவம்// பெரு நகரங்களில் மக்கள் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறார்கள்.

நீங்கள் எழுதியிருந்ததில் மற்றொரு விஷயமும் என்னை கவர்ந்தது. வீட்டு வேலைகளில் நமக்கு உதவி செய்பவர்களை வேலைக்காரி என்று குறிப்பிடுவது எனக்கு பிடிக்காது. "நம்மால் முடியவில்லை என்று வேலைக்காரர்களை வைத்துக் கொள்கிறோம், அவர்களையும் மனிதர்களாக மதிக்க வேண்டும்"என்பார் என் அம்மா.

Thulasidharan V Thillaiakathu said...

மிக்க நன்றி கில்லர்ஜி...நீங்க எதிர்பார்த்த டயலாக்கை பைரவியும் நினைத்திருக்கா ளே..!!!!

ஜி...உங்க பதிவுக்கு நாளை வருகிறேன்...மொபைல் வேறு அவ்வப்போது ஹேங் ஆகுது...ஒகேயா....

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

மிக்க நன்றி கமலா சகோ. விரிவான கருத்திற்கும் பாராட்டிற்கும். எனக்குத்தான் வழக்கம் போல விரிவான கருத்து அடிக்க முடியவில்லை....

Thulasidharan V Thillaiakathu said...

மிக்க நன்றி பானுக்கா பாத்திர படைப்பைப்பாராட்டியமைக்கு....

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

பரவால்ல நெல்லை.தம்பி..ஹாஹாஹா..மெதுவா படிச்சு ட்டு சொல்லுங்க ...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஹாஹாஹா..மிக்க நன்றி ஜிஎம்பி சார் கருத்திற்கு..

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஹாஹாஹா. ஏகாந்தன் அண்ணா..இப்பத்தான் கவனிச்சேன்....alpha நியூயுமெரிக்கை...பின்னே ஞான் ஒரு கலாகாரினு பறையண்டே.... ஹாஹாஹா.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

பானுக்கா மீண்டும் உங்களைக் கவர்ந்த விஷயத்தைச் சொல்லிக் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி..

கீதா

கோமதி அரசு said...

//கையிலிருந்த ஸ்மார்ட்ஃபோன்களைப் பத்திரமாகப் பார்த்துக் கொண்டார்கள். விலை மதிக்க முடியாத புன்னகையை மட்டும் தொலைத்திருந்தார்கள். பாவம்!//

நன்றாக சொன்னீர்கள். இங்கு எங்கள் குடியிருப்பில் இருப்பவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். சிரிப்பை தொலைத்தவர்களாய்.
எதிர் வருபவர்களைப் பார்த்து புன்னகை சிந்தும் என்முகம் அவர்கள் சிரிக்க மறுத்து நகர்ந்து போகிறார்கள்.

கோமதி அரசு said...

//பைரவியின் மனம் வருந்தியது. பிச்சைக்காரி, வேலைக்காரி போல என்று பேசியதால் அல்ல. அவர்களின் மீதான பார்வையை நினைத்து! அவர்களும் மனிதர்கள்தான். அப்படிப் பார்த்தால் எல்லோருமே வேலைக்காரர். ஏதோ ஒரு வகையில் பிச்சைக்காரர் தாம்! வேலைக்காரி என்று சொல்வதைக் கூட விரும்பாமல் உதவியாளர், அஸிஸ்டென்ட் வலது கை என்று சொல்பவள் பைரவி. ஒரு நாள் இந்த உதவியாளர் இல்லை என்றால் டென்ஷனாகுபவர்களையும் பார்க்கத்தான் செய்கிறாள்.//

நானும் அப்படித்தான் , அப்படி சொல்பவர்களை பார்த்தாலும் மனம் வருந்தும்.

//சுயமரியாதையை இழக்க விரும்பாத பைரவி அக்காவின் பதிலுக்குக் காத்திராமல் வாயிலை நோக்கி நடந்தாள்.//
அருமை.
கதை மிக அருமை. வாழ்வில் ஆடம்பரம் எதற்கு? தேவைக்கு அதிகமாய் வைத்து இருப்பவன் அடுத்தவர் உடமையை திருடுவதற்கு சமம் என்பார்கள்.

நெ.த. said...

தில்லையகத்து கீதா ரங்கன் - இப்போது கதையைப் படித்துவிட்டேன். (இதுவரை நெட் டிஸ்கனெக்ட் ஆகலை).

இரண்டும் வெவ்வேறு பார்வை. இரண்டு பார்வைகளும் ஒட்டாது. அதற்குத் தகுந்த காரணங்களும் இருக்கு.

நாம, ஆடம்பரம் எதுக்கு என்று சொல்லிவிட்டுப் போய்விட முடிவதில்லை. சமூகத்தோடு (இப்போது சமூகம் என்பது நம் குடியிருப்பு வளாகம், அல்லது நம் பில்டிங், அல்லது நம்மைச் சுற்றியுள்ளவர்கள் என்று சுருங்கிவிட்டது) ஒத்துவாழ வேண்டி உள்ளது.

எனக்கு தனிப்பட்ட முறையில் ஆடம்பரம் தேவையில்லை. ஆனால் நான் மனைவி, குழந்தைகளுக்கான ஸ்டேட்டஸை மெயிண்டெயின் செய்யவேண்டி இருக்கிறது. இதைப்பற்றி விரிவாக எழுதலாம். (ஆபீசுல என் அறிவுக்குத்தான் பதவி சம்பளம். அதுக்காக டை, பிளேசர், பள பளா ஷூ என்று வேஷமில்லாமல் இருக்கமுடியுமா? அல்லது, சீனியர் அதிகாரியாக இருக்கும்போது நோக்கியா சாதாரண மொபைலை உபயோகப்படுத்தமுடியுமா? இதுதான் சமூகத்திற்கும்)

இரண்டு வெவ்வேறு பாதையாக இருந்தாலும், எக்காரணம் கொண்டும், அடுத்த பாதையைக் குறையாக எண்ணுவது தவறு. அவரவர் பாதை அவரவருக்கு. அது தங்களைப் பாதிக்காதவரை சரிதான்.

மற்றபடி வித்தியாசமான களம். மனசுல 'பைரவியை' உங்கள் கேரக்டருடன் பொருத்திப்பார்க்க முடிந்தது. (இதுவரை உங்களைப் பார்த்ததில்லையானாலும், நீங்கள் இப்படிப்பட்ட கேரக்டராக இருக்கலாம் என்று உங்கள் இடுகைகளைப் படித்து அனுமானிப்பதுதான்)

Thulasidharan V Thillaiakathu said...

ஆம் கோமதிக்கா....மிக்க நன்றிக்கா கருத்திற்கு

கீதா

athira said...

ஆஆஆவ்வ்வ்வ் இண்டைக்குக் கீதாஸ் ஸ்ரோறியோ?:).. அதென்ன ஜே ஆர் 2...:) அப்பூடி ஒரு ஸ்டேஷன் இருக்கோ?:).

ஆஹா இருவரை மட்டும் வைத்தே அழகிய சம்பாசனைகளோடு ஒரு குட்டிக் கதை. கீதாவால குட்டிக் கதை எல்லாம் எழுத முடியாதே?:).. இது எப்பூடி ஆச்சு? எல்லாத்துக்கும் காரணம் அந்தக் கணணி ப்பிரெண்ட்:) படுத்திய பாட்டில டக்குப் பக்கென முடிச்சிட்டாபோல கதையை... ரொம்ப அழகான கற்பனைகள் கீதா.

athira said...

//நெ.த. said...
கதை இன்னும் படிக்கலை. இது ஆஜர் பட்டியல்தான்.

படித்துவிட்டு எழுதுகிறேன் இன்னும் இரண்டு நாட்களில் கீதா ரங்கன்.///


///நெ.த. said...
தில்லையகத்து கீதா ரங்கன் - இப்போது கதையைப் படித்துவிட்டேன்.///

ஆவ்வ்வ்வ் அதுக்குள் ரெண்டு நாள் ஆச்சோ?:) இவர் என்ன தேவலோகத்திலயா இருக்கிறார்ர்:) அங்குதான் நேரம் எல்லாம் இப்பூடி மாறுமாமே:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:)) இன்று எனக்கு ராசி சரியில்லை:)) புதன் கிழமையிலிருந்துதான் ஓஹோ எண்டிருக்குமாம்ம்:)) என ஸ்ரீவில்லிப்புத்தூர் சாத்திரியார் மெசேஜ் போட்டிருக்கிறார்:).

athira said...

///“பின்னிய கூந்தல் கருநிற நாகம், பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்,///

அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தத:). நண்பனே நண்பனே நண்பியேஏஏஏஏஏஏ:)) ஹா ஹா ஹா இது என் கொப்பி வலதாக்கும் கர்ர்ர்ர்ர்ர்:))....

கீதாவால இன்று கண்டநிண்டபடி ஓடமுடியாதாக்கும்:)) பிக்கோஸ்ஸ்ஸ்ஸ் ஃபிர்ண்ட்டு ஹொச்பிட்டலால இன்னும் வரேல்லை எல்லோ:)) ச்சோஓஓஓஒ நல்லா புகுந்து விளையாடிட்டு ஓடிடலாம்ம்ம்:)) கேட்கப் பார்க்க எதிர்க்க என் செக் கூட இங்கின இல்லை.. ஓஓஓஒ லலலாஆஆஆஆஆஆஆஆ:))

athira said...

///“வாயுள்ள பிள்ளை பிழைக்கும். என் ராஷ்ட்ரபாஷாவை என்னனு நினைச்ச?”//

என்னாது வாயில்லாமலும் பிள்ளை இருக்கோ:)) ஹா ஹா ஹா..

athira said...

//“மூஞ்சி எல்லாம் பளிச்சுனு இருக்கணும். நீ பௌடர் கூட போட மாட்ட” அக்கா புறப்படும் முன் எச்சரித்தது பைரவியின் நினைவில் வரவும் //

இக் கொள்கைதான் எனக்கும் பிடிப்பதில்லை.. அதாவது வெளிநாடுகளில் இருக்கும் பல நம்மவர்களிலும் இப்படி ஒரு தப்பான கண்ணோட்டம் இருக்கிறது.. அதாவது தாழ்வு மனப்பான்மை... ஏதோ நாம் மிகக் குறைந்தவர்கள்போலவும் வெள்ளையர்கள் என்னமோ தேவலோக மக்கள்போலவும் எண்ணுவார்கள்...

நாம் நாமாக இருப்பதுதான் எப்பவும் அழகு என எண்ணோனும்.. உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியாது.. அதுக்காக ஊர்க்குருவி ஒன்றும் பருந்தை விடக் குறைந்தது எனவும் அர்த்தம் எடுக்கக்கூடாது.

athira said...

///“அட போக்கா நீ!….யாரும் என்னை அப்படி பாக்கல. இப்ப லிஃப்ட்ல வந்தப்ப கூட அழகான ஒரு லேடி என்னைப் பாத்து சிரிச்சாங்க…ஹாய் சொன்னாங்க” என்ற பைரவி, இது உனக்குள்ள உருவான உங்க சொசைட்டி ஸ்டேட்டஸ் எண்ணம் என்று நாவில் வந்ததை வெளியிடவில்லை.///

இதேதான் இதில் பைரவியின் எண்ணம் கரெக்ட்.. அந்த அக்காவில்தான் தப்பு இருக்கு... அந்த அக்கா தன் உர் மக்களை அப்படிச் சொல்லச் சொல்ல பைரவியின் மனதிலும் ஒரு தப்பான எண்ணம் உருவாகிவிட்டது... அதாவது பணக்காரர்கள் எல்லோரும் சிரிப்பதில்லை.. அழகாக ஆடை அணிந்திருக்கிறார்கள் ஆனால் புன்னகையைக் குறைத்திட்டினம் எனும் தப்புக் கணக்கு தானாக உருவாகியிருக்கு...

உண்மையில் அப்படி இல்லை... பணக்க்காரர்களிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள்... ஏழைகளிலும் பிடுங்குவோர் இருக்கிறார்கள்.

athira said...

//“இங்க பாரு…….பிச்சைக்காரி, வேலைக்காரி போடற மாதிரி போட்டுட்டுத் திரியாத…. இந்த ஷூ, செருப்பு உன் சைஸ் தான். ரெண்டுல எது பிடிச்சுருக்கோ சூஸ் பண்ணு.…அப்புறம் இந்த டாப்ஸ் பாரு…எவ்வளவு நல்லாருக்கு. அந்த ட்ரையல் ரூம்ல போய் போட்டுப் பாரு….”//

இந்த விசயத்தில நான் கொஞ்சம் ஒத்துப் போகிறேன் அக்காவோடு.... காரணம்... சில இடங்களுக்குப் போனால்.. அந்த ஊருக்கேற்ப கொஞ்சமாவது நம்மை மாற்ற வேண்டும்... அதுக்காக நாம் பட்டிக்காடு என அர்த்தம் கிடையாது... ஊரோடு ஒத்துப் போவது...

உதாரணம் நம் நாட்டு வெயில் வேர்வைக்கு பவுடர் பாவிப்பது வழக்கம்... இங்கு குளிர்ப்பிரதேசம் என்பதால் கிறீம் தான் தோலைக் காயவிடாமல்.. வெடிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும்.. ஆனா நம் சில பெண்கள் இங்கும் பவுடர் அள்ளிப் பூசிக்கொண்டு வருவதைப் பார்த்திருக்கிறேன்ன்.. அது வெள்ளை அப்பி விட்டதைப்போல இருக்கும். என் ஸ்டைலை மாத்தவே மாட்டேன்ன்.. ஊரில் தலையை இப்படித்தான் கிளிப் போட்டுப் பினினேன்ன் இங்கும் அப்படியேதான் இருப்பேன் என்பதுபோல நடப்போரும் இருக்கினம்.... இதில் அந்தஸ்து குறைவோ அல்லது பிச்சைக்கார தோற்றமோ கிடையாது ஆனா ஊரொடு ஒத்துவராமல் ஒரு வித்தியாசமானதாக இருக்கும்.

ஜிம் போனால் ஜிம் உடைகள்தானே போட வேண்டும்.. அதேபோல சுவிமிங் எனில் அந்த உடைதானே போட வேண்டும்.... ஆனா நம் நாட்டுக் ஹோட்டலில்[கொழும்பில்] ஒரு பூலில் ஒரு பெண் ஸ்கேட் அண்ட் பிளவுஸ் உடன் இறங்கி விட்டார் .. அங்கு நின்றவர் ஓடிவந்து அப்படி இறங்கக்கூடாது உடை மாற்றி வாருங்கள் என்றார்.. அப்பெண் முறைத்தபடி வெளியேறினார்.

வெளிநாட்டில் சன் கிளாஸ்ஸ் போடும் நம்மவரையும் லிப்ஸ்ரிக் பூசும் நம்மவரையும் நம்மவர்கள் ஒரு கேலியாகப் பார்ப்பதுண்டு... ஆனா அது எதற்காக அணிகிறார்கள்.. அது அணிய வேண்டியதன் கட்டாயம் என்ன எனப் புரிந்து கொள்ளாமல் ஸ்டைலுக்காகப் போடுகிறார்கள் என எண்ணுவோரே அதிகம்.

athira said...

///“சாரிக்கா…அக்கா நான் டாப்ஸ் லாம் போட்டுப் பார்த்து வாங்கற பழக்கம் இல்லை. ப்ளீஸ் எனக்கு எதுவும் வேண்டாம். நான் வெளில வெயிட் பண்ணறேன்.” என்று தன் சுயமரியாதையை இழக்க விரும்பாத பைரவி அக்காவின் பதிலுக்குக் காத்திராமல் வாயிலை நோக்கி நடந்தாள்.//

எனக்கென்னமோ பைரவி ஊருக்குப் புதுசு என்பதால் இப்படிச் சிந்திக்கிறா என்றே நினைக்கிறேன்ன்.. கொஞ்சக் காலம் அவ்வூரிலேயே தங்கி விட்டால்.. அப்பழக்கம் தானெ வந்துவிடும்.

காமாட்சி said...

சுயமரியாதை பைரவி அழகாக ஆலாபனையுடன் அருமை. தங்கை பைரவி இடத்தில் சற்று சிரமப்பட்டு முன்னுக்கு வந்த ஒரு மாமியார், நல்ல வசதியுடன் தற்கால எண்ணங்களுடன் வாழ்க்கை நடத்தும் பிள்ளை மருமகள், இப்படி அவர்களை எண்ணினால் ஏராளமான குடும்பங்கள் கண் முன் வருகின்றன. அனுபவிக்கத் தெரியாதவர்கள் என்ற முத்திரை. ஊதாரித்தனமான சிலவுகள் செய்தே பழக்கப்படாதவர்கள் மனதிற்குள் மருகுவார்கள் . அவ்வளவுதான்.கற்பனை நடைமுறையை விளக்குகிறது. ஆஹா. அன்புடன்

Thulasidharan V Thillaiakathu said...

மிக்க நன்றி கோமதிக்கா...கருத்திற்கு

ஆடம்பரம் என்பதையும் விட பார்வையைத்தான் குறிப்பிட நினைத்தது!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கண்டிப்பாக நெல்லை இரண்டும் வேறு...கதையில் இருக்கே அவரவர் விருப்பம், வாழ்வுமுறை..எதுவும் தவறில்லை...எனவதும் சொல்லியிருக்கு...சொல்ல நினைத்தது உறவாகவே இருந்தாலும்...வார்த்தைகளும் பார்வையும் தவறாக இருக்கக வேண்டாமே என்பதுதான்...

மிக நன்றி நெல்லை. கருத்துக்கு

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஹாஹாஹாஹா..கணினி போறதுக்கும்ம் முன்னாடி...எழுதியது..அதிரா....ஜெ ஆர் 2 கற்பனைத்தான்...மாற்றி..சொல்லப்பட்ட ஒன்று...

சின்னதாவும் எழுத்துவோம்ல...ஹிஹிஹி

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஆம் அதிரா ஓட முடிஈஈஈஈஈல்ல....நாளை வருகிறாள் தோழி....

ஆமாம் என்னால் உங்களை ஊட்ட முடில...ஹூம்...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஹாஹாஹா...வாயுள்ள பிள்ளை அதிரா...னு சொல்லாமல்லோ...ஹாஹாஹா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

எஸ் நாம் நாமாகதான்... இது எல்லாவர்றிற்கும் பொருந்தும்.

மிக்க நன்றி அதிரா...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அதிரா...இதில் பணக்காரர் புன்னகை குறைத்திட்டனர் அல்ல...அந்த அர்த்தம் அல்ல...மக்கள் பொதுவாக இயந்திரத்தனம் ஆகி விட்டனர்...பைரவிக்கு அந்த எண்ணம் இல்லை....அக்காவின் பார்வையைத்தான் நினைக்கிறாள்...அக்காவை Tஹவராகவும் எண்ணவில்லை

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஆம்..ஸ்விம்மின் பூல் அந்த ட்ரெஸ் தான்...போடணும், உடற்பயிற்சி, ஸ்போர்ட்ஸ் . அந்த ட்ரெஸ் தாN...உங்க கருத்து கிகவும் சரி யதார்த்தம்....

ஆனால்...அதுவல்ல இங்கு...

அதிரா இதிலும் பைரவி நினைக்க்கிறாளே...ட்ரெஸ்ஸோ...வேறு எதுவோ அல்ல அது அவரவர் விருப்பம், வாழ்க்கை....பார்வை மட்டும்தான்....யாரையும்..அப்படிப் பார்க்காமல்..கீழாகப் பார்க்காமல்..என்பதைத்தான்...ஒரு வேளை அதை நான் இன்னும் சரியாக சொல்லியிருக்கலாமோ...

கடைசி பாரா கருத்தும் சரியே... அது ஸ்டைல் அல்ல...

கீதா

Asokan Kuppusamy said...

ஸ்மார்ட்ஃபோன்களைப் பத்திரமாகப் பார்த்துக் கொண்டார்கள். விலை மதிக்க முடியாத புன்னகையை மட்டும் தொலைத்திருந்தார்கள். பாவம்! அருமையான வரிகள் பாராட்டுகள்

Thulasidharan V Thillaiakathu said...

அதிரா பைரவி இதையும் விட உயர் சர்க்கிளில் பழகிய கேரக்டர்..... பைரவி.யின் கேரக்டர்.நீங்கள் முதலில் சொல்லியது...நாம் நாமாக இருப்பது...ஒரு சில விஷயங்கள் ஒருவரால் ஒரு லிமிட்டுக்கு மேல் செல்ல முடியாத போது... அவர்களை நாம் அந்த அக்கா கேரக்டர் சொல்லுவது போல்
சொல்ல முடியாதில்லையா....

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அதிரா உங்க கருத்துகள் செம நோட் பண்ணிருக்கேன்....வேறு கதைக்கும் யூஸ் பண்ணிக்கலாமே...ஹிஹிஹி.ராயல்டி அந்த பச்சை கல் நெக்லஸ்.....

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

மிக்க நன்றி காமாட்சிமா. ஒவொருவர் வாழ்க்கையும் ஒவ்வொரு மாதிரிதான்...நம் மனம் நன்றாக இருக்க வேண்டும்...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

மிக்க நன்றி அசோகன் குப்பு சாமி சகோ கருத்திற்கும் பாராட்டிற்கும்

கீதா

ஏகாந்தன் Aekaanthan ! said...

சின்னக் கதைக்குள் பைரவியின் பாத்திரத்தை அழுத்தமாக வரைந்திருக்கிறீர்கள்.

வாசகர்களை ஆரம்பத்திலேயே கொஞ்சம் பயமுறுத்தி வைக்கவேண்டும் என்பதற்காகத்தான் மையப்பாத்திரத்துக்கு பைரவி என்கிற பெயரோ !

ரிஷபன் said...

அவரவர் சுபாவத்தை அழகாய்ப் படம் பிடித்திருக்கிறீர்கள் எழுத்தில்

Thulasidharan V Thillaiakathu said...

மிக்க நன்றி ஏகாந்தன் அண்ணா...முதல் வரி கருத்திற்கு....இரண்டாவது ..ஹாஹாஹா....

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஆஹா.ரிஷபன் அண்ணா வாங்க...உங்களின் கருத்துக்கு மிக்க மிக்க நன்றி..உங்களின்கருத்தை விமர்சனத்தை.நான் ஆவலுடன் எதிர்பார்ப்பது உண்டு...என் எழுத்தை மெருகேற்றி க்கொள்ள... உங்களின் கருத்து கண்டு கிக்க மகிழ்ச்சி... அண்ணா...

கீதா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

கதையை ரசித்தேன். கதாசிரியருக்கும், பகிர்ந்த உங்களுக்கும் நன்றி.

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த படைப்பு
சிந்திப்போம் தொடருவோம்

Ramani S said...

படித்து முடிக்க மனம் நிறைவடைந்த உணர்வு.இயல்பாகச் சொல்லிச் சென்றவிதம் அருமை வாழ்த்துக்களுடன்

Anuradha Premkumar said...

நல்லா இருக்கு கீதாக்கா..

வித்தியாசமான கோணமும்..அதற்கான அலசல் களும் ன்னு


சிறு கதை...சிறப்பான கதை..

எனக்கும் நேத்து eb ஓபன் ஆகலை..

Thulasidharan V Thillaiakathu said...

கதையை ரசித்தேன். கதாசிரியருக்கும், பகிர்ந்த உங்களுக்கும் நன்றி.//

மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கல் ஐயா தங்களின் கருத்திற்கு

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

சிறந்த படைப்பு//

மிக்க நன்றி யாழ்பாவாணன் தங்களின் கருத்திற்கு

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

படித்து முடிக்க மனம் நிறைவடைந்த உணர்வு.இயல்பாகச் சொல்லிச் சென்றவிதம் அருமை வாழ்த்துக்களுடன்//

மிக்க நன்றி ரமணி சகோ தங்களின் கருத்திற்கு

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

நல்லா இருக்கு கீதாக்கா..

வித்தியாசமான கோணமும்..அதற்கான அலசல் களும் ன்னு


சிறு கதை...சிறப்பான கதை..//

மிக்க நன்றி அனு உங்க கருத்திற்கு

கீதா

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!