சனி, 8 அக்டோபர், 2022

சில செய்திகள் மற்றும் நான் படிச்ச கதை (JKC)

நீர்க்காவலன் மணிகண்டனை அறிவீர்களா?

இது கொஞ்சம் பழைய கதை.  அங்கிருந்து தொடங்குகிறது.  ஏரியா கவுன்சிலருடன் சேர்ந்து தனது பகுதிக்கு குடிநீர் ஏற்பாடு செய்ததில் தொடங்குகிறது மணிகண்டனின் சேவை.  அப்போது அவருக்கு வயது 15.

பின்னர் அவர் என்னென்ன செய்தார் என்று இங்கு படித்து தெரிந்து கொள்ளலாம்

====================================================================================================================

மின்சாரமில்லா குளிரூட்டி!


இஸ்ரேலைச் சேர்ந்த 'கிரீன் கினோகோ'வின் கண்டுபிடிப்பான ஒரு குளிரூட்டிக் கருவி, பலரது கவனத்தை கவர்ந்துள்ளது. வாட்டர் கூலர், வெளிப் புற ஏ.சி., போன்றவை நிறைய மின்சாரத்தை செலவளிப்பவை.


ஆனால், கினோகோவின் பொறியாளர்கள் உருவாக்கியுள்ள 'கின்ஷோ' கருவி, திரவ நைட்ரஜனை வெளியிடுவதன் மூலம் அருகாமையில் இருக்கும் காற்றை உடனடியாக குளிர்வித்துவிடுகிறது. கின்ஷோ கருவியில் வைக்கப்பட்டுள்ள திரவ நைட்ரஜன், -196 டிகிரி சென்டிகிரேடு அளவுக்கு கடுங்குளிர்ச்சியாக இருக்கும். ஆனால், சிறிதளவு நைட்ரஜன், கின்ஷோ கருவியின் ஊதி அமைப்பு மூலம் வெளியேறியதும், அந்த திரவம் விரிவடைந்து வாயுவாக மாறும்.

அதுமட்டுமல்லாமல், நைட்ரஜன் வாயுவின் குளிர்ச்சி, -10 டிகிரி சென்டிகிரேடாக குறையும். இருந்தாலும், இந்த குளிர்ச்சியே இரண்டு மேசைகள் அளவுக்கு காற்றை சிறிது நேரம் குளிர்ச்சியாக வைத்திருக்கும்; சூழலுக்கு இணக்கமான குளிரூட்டி இது.

===================================================================================================================

நதி நீரை கழிவு நீராக்கும்' திட்டம் பல மாநிலங்களில் வெற்றிகரமாக செயல்படுகின்றன. குறிப்பாக, நல்ல நீரை, மாசு நீராக்கும் சாயக் கழிவுகளைச் சொல்லலாம். இதற்கு ஒரு தீர்வை அமெரிக்காவின், வட கரோலைனா மாநிலப் பல்கலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நீரில் கரையாத, நைட்ரஜன் செறிந்த பாலிகார்போடிமைடு என்ற பாலிமர்களை இதற்கு பயன்படுகின்றன. பாலிகார்போடிமைடினை, 20 வகையான சாயக் கழிவுகளில் கலந்து பார்த்தபோது, அவை நீரிலுள்ள சாயத்தை, பிரித்து ஈர்த்து, நீரின் மேலே, எண்ணை போல மிதந்தன. நீர் தெளிவானது.

அந்த பாலிமரில் ஒட்டியுள்ள சாயத்தை கழுவிவிட்டு, மீண்டும் பாலிமர்களை மாசு நீக்கப் பயன்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
=======================================================================================================


 

நான் படிச்ச கதை (JC)

சுடலைத் தெய்வம்

முன்னுரை 

இக்கதை ஆசிரியர் அம்பை, விருது பெற்ற அம்பை அல்ல. வேறு ஒருவர்.

கதையாசிரியர்: அம்பை வி.பாலச்சந்திரன்

கதை இச்சுட்டியில்  இல் இருந்து உருவியது. 

சுட்டி சுடலைத் தெய்வம். 

சுடலைத் தெய்வம் - அம்பை வி. பாலச்சந்திரன்

சொடலமாடன் ரொம்பத் துடிப்பான சாமியப்பா. மகாசக்தியுள்ள தெய்வம் சொடல. நாம வேண்டிக் கொண்டா அதக் குடுக்கிற சாமி சொடலதான்.’

அதில என்னப்பா சந்தேகம்? ஆனா ஒன்னு. சொடலைக் கோயிலுக்கு வர்றவங்க ரொம்பச் சுத்தமா வரணும். சுத்தம் இல்லாம வந்தா அது சாமிக்குத்தம். அவங்களைச் சொடல சும்மா விடமாட்டான். பொலி (பலி) வாங்கிடுவான்.’

கிராமவாசிகள் சுடலைமாடன் மகிமைகளை வாயாரப்பேசி மனமார பக்திப் பரவசமாவார்கள். பல ஊர் ஜனங்களும் சுடலைக் கோயிலுக்குப் போனால் கேட்டது கிடைக்கும் என்று திரளாய் சுடலைக் கோயிலுக்கு வருவார்கள்.

சாமியூர் கிராமத்திலிருந்து வடக்குப்புறமாக வண்டித்தடத்தில் 3 கி.மீ. தூரம் நடந்து சென்றால் பிரமாண்டமாய் எழுந்தருளி நிற்கும் சுடலைமாடன் கோயிலைக் காணலாம்.


சுடலைக் கோயிலுக்கு ஒரு ஸ்தல புராணமே உண்டு. எப்பொழுதோ நடந்த செவிவழிக்கதை ஒன்று கிராமத்தில் உலவி வந்தது. பக்கத்து ஊர் இளைஞனும் பணக்கார இளம்பெண்ணும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பினாங்களாம். இது பெத்தவங்களுக்குப் பிடிக்கல. ஊரைவிட்டு ஓடி வந்த காதல் ஜோடி சுடலைக்கோயிலில் தங்கி ராத்திரி உல்லாசமாக இருந்தாங்களாம். விடிஞ்சி பாத்தா அவங்க பொணமா கெடந்தாங்களாம். (இரவில் விஷப்பாம்பு கடித்து இறந்து இருக்கலாம்). கோயிலில் சுத்தமில்லாம இருந்த ஜோடியை சுடலை பொலி வாங்கிவிட்டதாக ஊரில் பேசிக்கொண்டார்கள். அன்றுதொட்டு சுடலை துடிப்பான சாமி என்றே ஜனங்கள் சுடலையிடம் பயபக்தியுடன் நடந்து வந்தார்கள்.

சுடலைக்கோயில் பூசாரி ரொம்ப நல்ல மனுஷர். அவரின் அகன்ற நெற்றியில் விபூதி குங்குமம் அளவோடு துலங்கும். ஆனால், பூசாரிக்கு சுடலை மீது அளவில்லாத அளவு பக்தி. காலையும் மாலையும் பூசாரி சுடலைக்குப் பயபக்தியோடு தீபாராதணை காட்டுவார். கோயிலுக்கு வரும் பக்த கோடிகளுக்குப் பிரசாதம் கொடுப்பார். பக்தர்களோ தங்களால் முடிந்ததை தீபாராதணைத் தட்டில் போடுவார்கள்.

குறைவாகத்தான் சுடலைக்கோயிலில் வரும்படி கிடைத்தது. ஆனால், பூசாரி மனநிறைவோடு சுடலைக்கோயிலுக்குப் பணிகள் செய்துவந்தார். ஒரே ஒரு குறைதான் பூசாரியைக் குடைந்தது! அதைப்பற்றி பூசாரி தன் தர்மபத்தினியிடம் குறைப்பட்டுக்கொண்டார்.

கௌரி நமக்குக் கல்யாணம் ஆகி 10 வருஷம் ஆகியும் புத்திரபாக்யம் இல்லை. இந்த வருஷமாவது ஒரு புள்ளையைப் பெத்துக்குடுக்கணும். இல்லன்னா உன்ன நா விவாகரத்து செஞ்சிட்டு வேற ஒரு பொண்ணக் கட்டிக்குவேன்என்று மிரட்டிவிட்டு பூசாரி கோயிலுக்குப் போய்விட்டார்.

அன்று இரவு, கௌரி தூக்கம் வராமல் பாயில் புரண்டாள். கணவர் விவாகரத்து செய்துவிட்டால் அவர் இல்லாமல் ஒரு வினாடிகூட உயிர்வாழ முடியாதே. புருஷன் தன்னைப் பிரியாமல் இருக்க எப்படியும் பெத்துக் கொடுக்கணும் என்று கௌரி தீர்மானித்துக் கொண்டாள்.

பூசாரி தம்பதி அனுதினமும் சுடலைக்கு தேங்காய், பழம் உடைத்து, சுடலைத் தெய்வமே புள்ளவரம் குடு என்று வேண்டிக் கொண்டார்கள்.

சுடலைமாடன் கொடை நெருங்க நெருங்க கிராம ஜனங்களின் வாய் அதைப்பற்றியே அசைப்போட்டது.

ஏலே ….. மாசானம் வர்ற செவ்வாய்க்கிழமை சொடலைக்குக் கொடை. பெரிய செட்டு மேளம், கேரள இளம் பொண்ணுங்க கரகாட்டம் எல்லாம் உண்டு’.

சொடல ரொம்பத் துடிப்பான சாமியாச்சே. மகாசக்தியுள்ள தெய்வம் நம்ம சொடல. சுடலைக் கொடைக்கு பணத்த தண்ணியா செலவழிப்பாங்க. ஏன்னா சொடலையிடம் கேட்டது எல்லாம் கெடைக்குதே.

சுடலைமாடன் கொடைவிழாவைக் காண பட்டித்தொட்டி பதினெட்டு ஊர்ஜனங்களும் வந்தார்கள்.

சுடலைமாடன் கோயில் கொடை தூள் கிளப்பியது. பல ஊர் ஜனங்களின் கூட்டத்தில் சுடலைக்கோயில் திணறியது. நையாண்டி மேளமும், கரகாட்டமும் போட்டிபோட்டன. வில்லுப்பாட்டும் ஒருபுறத்தில் நடந்து கொண்டிருந்தது.

கோயிலின் உள்ளே சுடலை அரிவாளை ஓங்கியபடி நிற்க ஜனங்கள் சுடலைமாடன் கழுத்து நிறைய பூமாலைகள் போட்டு தேங்காய் பழம் உடைத்தார்கள். சுடலைக்கு மாக்காப்பு, சந்தனக்காப்பு செய்து கொடையைக் கோலாகலமாகக் கொண்டாடினார்கள்.

சுடலைமாடன் கொடையின்  முக்கிய அம்சம் அருள்வாக்குக் கேட்பது. அதற்காகவே பல ஊர் மக்களும் சுடலைக் கோயிலில் கூடுவார்கள். சாமக் கொடையில்தான் சாமியாடி அருள வாக்குச் சொல்வார். அருள்வாக்கு அப்படியே பலிக்கும் என்பது ஜனங்களின் நம்பிக்கை. கோயில் கொடையில் மேளக்காரர்களும் கனஜோராக மேளம் அடிக்க, சாமியாடிகள் சாமி வந்து ஆடினார்கள். சில இளம்பெண்-களும் தலையை விரித்துப்போட்டு சாமியாட ஆரம்பித்தார்கள். கொடையைப் பார்க்க வந்த வாலிபர்களுக்கு கரகாட்டத்தைவிட இளம் பெண்கள் சாமியாடுவதுதான் கவர்ச்சியாக இருந்தது. சாமக்கொடை நெருங்கியதும் சாமியாடி ஆடி இருளைக் கிழித்துக்கொண்டு மயானக்கரைவரை ஓடிப்போய் ஆவேசமாய் பந்தலுக்குள் நுழைய ஜனங்கள் பயபக்தியுடன் கைகட்டி வாய் பொத்தி நிற்க, மேளதாளத்தில் சாமியாடி வானத்திற்கும் பூமிக்கும் குதித்தபடி ஆடினார். எவ்வளவு நேரம்தான் ஆடுவார்? சாமியாடி களைத்துச் சோர்ந்ததும் அருள்வாக்குச் சொல்ல ஆரம்பித்தார். குறி கேட்பதற்கு ஜனத்திரள் சாமியாடியிடம் நெருங்கினார்கள்.

சாமிஎன் பொஞ்சாதி ஒரு நோயாளி. அவளுக்கு நா சேவியம் பார்த்தே என் ஜென்மம் கழிஞ்சிடுமோன்னு பயமாய் இருக்கு”.

சட்டுன்னு சொல்லப்பா சாமியாடி எரிந்து விழுந்தார்”. ‘சாமி ரொம்பச் சின்ன வயசுல சிவப்பு நிறத்துல அழகான ஒரு பொண்ணு எனக்கு இரண்டாந்தாரமாகக் கிடைக்குமா?”

நா இருக்கேன் பயப்படாதே. உன் காரியம் அனுகூலமாகும்.’

அப்படி நடந்தா, என் சொந்த சிலவில் உனக்கு கொடை கொடுக்கேன் சாமிஎன்று நிலக்கிழார் தனது நரைத்த மீசையைத் திருகியபடி வேண்டிக்கொண்டார். பக்தர் கூட்டம் சாமியாடியிடம் அலைமோத பூசாரி தம்பதி முண்டித்தள்ளியபடி சாமியாடி முன்வந்தார்கள்.

சாமி …. ரொம்ப வருஷமா எங்களுக்குப்புள்ள இல்ல. இந்த வருஷமாவது புத்திரப் பாக்கியம் கிடைக்குமா?’ பூசாரி கை தொழுதபடி கேட்டார்.

பூசாரி இந்த வருஷம் கண்டிப்பா உம்ம பொஞ்சாதிக்கு குழந்தையைக் கொடுப்பேன்.’ சாமியாடி அருள்வாக்குச் சொன்னதும் பூசாரி தம்பதியினர் பூரித்துப் போனார்கள். ‘எங்களுக்கு நீ புள்ளவரம் கொடுத்தா உனக்கு கெடா வெட்டிப் படப்பு சோறு போடுறோம்பூசாரி தம்பதி வேண்டிக்கொண்டார்கள்.

இப்படியே பல பக்தர்கள் சாமியாடியிடம் அருள்வாக்குக் கேட்டபடி நின்றார்கள்.

அன்று, கௌரி குடத்தை இடுப்பில் சுமந்தபடி கிணற்றுக்குப் போனாள். தலை லேசாகச் சுற்றியது. இரண்டு எட்டு நடந்திருப்பாள். கண்கள் இருட்டிக்கொண்டுவர கௌரி மயக்கமாய்ச் சாய்ந்தாள். அக்கம்பக்கம் நின்ற பெண்கள் பதறியபடி கௌரியைத் தூக்கிக்கொண்டு பூசாரி வீட்டில் கொணடு போய்ச் சேர்த்தார்கள். பூசாரிக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. மருத்துவச்சியைக் கூட்டிவந்தார். மருத்துவச்சி கௌரியின் நாடி பார்த்துவிட்டு பூசாரி அய்யாஉம்ம பொஞ்சாதி கர்ப்பமாய் இருக்காஎன்று மருத்துவச்சி சொல்லவும் பூசாரி மகிழ்ச்சியில் துள்ளினார்.

சொடலைத் தெய்வமே எல்லாம் உன் மகிமை பூசாரி பக்திப் பரவசமானார்.

பூசாரி தம்பதி கேட்டபடியே பிள்ளை வரம் சுடலை கொடுத்து விட்டான் என்ற பக்தியில் கெடா வெட்டி படப்புச் சோறு போட நினைத்தார்கள். பணத்திற்கு வழி? பூசாரி தனக்குத் தெரிந்த இடங்களில் கேட்டுப் பார்த்தார். ஏமாற்றமே மிஞ்சியது. பூசாரி சோர்வில் சுருண்டு போய் வீடு திரும்பும்போது ஸ்பீக்கர் கட்டிய ஜீப் அவர் முன்னே விளம்பரத்தை அறிவித்தபடி வந்தது. நமது ஊரில் குடும்பநல அறுவைச் சிகிச்சை முகாம் நடைபெறும். அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளும் நபருக்கு ரூ. 5000/—–_ (அய்யாயிரம்) சன்மானம் வழங்கப்படும் என்ற செய்தி செந்தேனாய் பூசாரி காதில் பாய்ந்தது. பூசாரி உற்சாகமானார். முதல் ஆளாக பூசாரி முகாமில் நுழைந்தார்.

மறுநாள் சுடலைக்கோயில் உள்ளே பூசாரி மனைவி கௌரி செத்துக்கிடப்பதாகச் செய்தி பரவ, ஊர்ஜனங்கள் பதறியபடி கோயிலுக்கு ஓடினார்கள். தெய்வக்குத்தம் செய்திருப்பாள். அதான் சொடலைப் பொலி வாங்கிட்டான் என்று ஊர்க்காரர்கள் பேசிக்கொண்டார்கள்.

பிரேதமாய் கௌரி கிடப்பதைக் கண்ட ஊர்ஜனங்கள் கண்கலங்கினார்கள். ஊர்க்காரர்கள் பூசாரிக்காகக் காத்து நின்றார்கள். சிறிது நேரத்தில் பூசாரியின் முகம் சோகம் அப்பி வேர்க்க விறுவிறுக்க வந்தார்.

பூசாரி உம்ம சம்சாரம் சுத்தம் இல்லாம வந்ததால் சுடலை பொலி வாங்கிட்டான்நாட்டாமை சொல்லவும் பூசாரி கோயில் உள்புறம் சென்று மனைவியைப் பார்த்தார். கௌரி விழி பிதுங்கி வாய் கோணியபடி பிரேதமாய்க் கிடந்தாள். அதைக்கண்ட பூசாரி உடனே திரும்பி நாட்டாமையை நெருங்கினார்.

நாட்டாமைஇந்தாங்க கோயில் சாவி. இனிமேல் இங்க பூசாரியா இருக்க விரும்பல. சாவிக்கொத்தை நாட்டாமையிடம் நீட்டினார்’. ஆனால், நாட்டாமை சாவியை வாங்கவில்லை.

பூசாரி நீர் எவ்வளவு பெரிய பக்திமான். சுடலை உம் சம்சாரத்தைப் பொலி வாங்கிட்டான்னு கோயிலை விட்டுப் போறது சரியாப்படல

சுடலை சக்திவாய்ந்த தெய்வம்னு நம்பியிருந்தேன். அந்த நம்பிக்கை நாசமாயிட்டுபூசாரி நிதானமாகச் சொன்னார்.

யோவ் பூசாரி சொடலை சாமியிடம் வேண்டிக்கொண்ட காரியங்கள் அனுகூலமாகுதே. அவ்வளவு ஏன்? உமக்கு சாமி சொன்ன அருள்வாக்குப்படியே உம்ம சம்சாரம் கர்ப்பமானா.’

நானும் அப்படித்தான் நம்பினேன். வேண்டிக்கிட்டபடியே நமக்குப் புத்திர பாக்கியம் சுடலை கொடுத்துட்டார்ன்னு, ரொம்ப சந்தோஷப்பட்டேன். வேண்டிக்கிட்டபடி கிடாவெட்டி படப்பு சோறு போட விரும்பினேன். குடும்பநல அறுவைச் சிகிச்சை செய்தால் ரூ. 5000/_ (அய்யாயிரம்) கிடைக்கும்னு கேள்விப்பட்டு அங்க போனேன். டாக்டர்ங்க என்ன சோதிச்சு உமக்குப் புள்ளையே பொறக்காது. உன் ரத்தத்தில் உயிரணுக்கள் இல்லன்னு சொன்னாங்க. அப்பத்தான் கௌரி பேரில் எனக்கு சந்தேகம் வந்தது. சுடலை கோயிலுக்கு அவளை வரச்சொன்னேன். அவளும் வந்தாள் எனக்குப் புள்ள குடுக்க முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டாரு. உன் கர்ப்பத்துக்கு யார் காரணம்? என்று கேட்டேன். பிள்ளை இல்லைன்னு நான் பிரிஞ்சிடக்கூடாதுன்னு சோரம் போனதாகச் சொன்னா. எனக்குப் பயங்கர ஆத்திரம். அப்படியே கௌரி கழுத்த நெறிச்சுக் கொன்னு கோயில்ல போட்டுட்டு வெளியே போயிட்டேன். சொடலை பொலி வாங்கிட்டதாக ஊராரை நம்ப வைச்சேன். நீங்களும் சுடலை மகிமை ன்னு நம்பிட்டீங்க.’

ஒரு குடும்பப் பொண்ணு கெட்டுப் போகவும் , எறும்புக்குக்கூடத் தீங்கு செய்யாத நான் கொலைகாரனா ஆகவும் சொடலைதானே காரணம். இப்பச் சொல்லுங்க. இந்த சொடலைக் கோயில் நமக்குத் தேவையா?’’

கிராம ஜனங்கள் யோசிக்க ஆரம்பித்தார்கள்.

- அக்டோபர் 2010

கதை ஆய்வு. 

இக்கதையைப் படித்தபோது உண்மையில் கீதா ரங்கன் (மன்னிக்க வேண்டுகிறேன்) அவர்களுடைய நினைப்பு தான் வந்தது. அவருடைய சொற்பிரயோகம், நடை என்றபடி  கதை செல்கிறது. அக்காரணத்தால் தான் இக்கதையை சனிக் கிழமை பதிவுக்குத்  தேர்ந்தெடுத்தேன். 

குற்றம் காண்பதில் நக்கீரன் நான் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். இந்தக்கதையில் நான் கண்ட சில முரண்பாடுகளை விவரிக்கிறேன்.

 

1.     கதையில் பூசாரி மனைவி கௌரி என்பதைத் தவிர வேறு யார் பெயரும் இல்லை. மற்றவர்கள் பெயர்களை குறிப்பிடாதது ஒரு குறை.

 

2. கதை ஆசிரியருக்கு கொஞ்சம் வித்யாசமான கரு கிடைத்தது. அதுவே பெருமாள் முருகனின்மாதொரு பாகன்நாவலின் கரு.. (மாதொருபாகன் வெளியான அதே வருடத்தில் தான் இக்கதையும்  எழுதப்பட்டுள்ளது). அக்கருவை சிறுகதையாக்க வேண்டி முயற்சி செய்துள்ளார். கதை பலமுறை திருத்தப்பட்டு கடைசியில் தற்போதைய வடிவம் பெற்றுள்ளது. பல சம்பவங்களையும் நிஜமாக்க காரணங்கள் தேடி கண்டு பிடித்திருக்கிறார். அதில் ஒன்று கீழே

ஊரைவிட்டு ஓடி வந்த காதல் ஜோடி சுடலைக் கோயிலில் தங்கி ராத்திரி உல்லாசமாக இருந்தாங்களாம். விடிஞ்சி பாத்தா அவங்க பொணமா கெடந்தாங்களாம் “  இங்ஙனம்  கதையின் முடிவில் வரும் பூசாரி மனைவியின் இறப்பை கட்டியம் கூறுகிறார் ஆசிரியர்.

ஆனால்  கோவிலின் சாவி எப்போதும் பூசாரி கையில்.  அப்படி இருக்கும் போது காதல் ஜோடி எவ்வாறு கோவிலில் நுழைந்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. மேலும் இறந்தவர்களை முதலில் கண்டது ஊர்ஜனங்கள். பூட்டியிருக்கும் கதவு வழி எப்படி பார்த்தார்கள்?

         (இதே போன்று குற்றம் புரிந்தவரை  தண்டிக்கும் கருப்பண்ண சாமியின் கதைவிடாது கருப்பு” (மர்ம தேசம்) தலைப்பில் (தொலைத்  தொடராகவும் வந்த) ஒரு கதையை  இந்திரா சௌந்திரராஜன் எழுதியுள்ளார். அக்கதையில் தண்டிக்கப்படுபவர்கள்  யாவரும் கோயிலுக்கு வெளியே தான் தண்டிக்கப்படுகின்றனர். கோயிலுக்கு உள்ளே இல்லை. இவ்வாறு தான் professional writer க்கும்  Amateur writer க்கும் உள்ள வித்தியாசம் புலப்படுகிறது`. )

3.  பத்து வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக விவாகரத்து செய்வேன் என்று பூசாரி மனைவியிடம் கூறுவதாக கதையில் உள்ளது. சாதாரணமாகஇரண்டாவது கல்யாணம்  செய்து கொள்வேன்என்று  மட்டுமே சொல்வது தான் சரியாக இருக்கும்.

மனைவியின் கர்ப்பம்  அறிந்த உடனே குடும்பக் கட்டுப்பாடு  அறுவை சிகிச்சைக்கு  பூசாரி செல்வதும் சரியாக தோன்றவில்லை..  சாதாரணமாக குழந்தை பிறந்த  பின்னரே அறுவை செய்துகொள்வார்கள்.

இரத்த பரிசோதனை அறுவை சிகிச்சைக்கு முன்பு செய்வது உண்டு. ஆனால் அதன் மூலம் விந்தணுக் குறைவு என்பதை காண முடியாது.

4. பூசாரி ஏன் மனைவியை  கோவிலுக்கு கொண்டு சென்று கொல்ல வேண்டும்?

5. கௌரி கோவிலில் இறந்து கிடந்ததை  எப்படி ஊரார் முடிய  கதவு வழியே கண்டனர்.

6. //“ஒரு குடும்பப் பொண்ணு கெட்டுப் போகவும் , எறும்புக்குக்கூடத் தீங்கு செய்யாத நான் கொலைகாரனா ஆகவும் சொடலைதானே காரணம். இப்பச் சொல்லுங்க. இந்த சொடலைக் கோயில் நமக்குத் தேவையா?’’//

//கிராம ஜனங்கள் யோசிக்க ஆரம்பித்தார்கள். //

 இந்தக் கருத்து சரியில்லை, அனாவசியம் என்று  எனக்குத் தோன்றுகிறது.

சிறப்பம்சங்கள். 

கதைப் போக்கு தடங்கல் இல்லாமல் சீராகச்  செல்கிறது. துவக்கம், முடிவு ஆகியவை பொருந்துகின்றன. சில வரப்போகும் நிகழ்வுகளை முன் கூட்டியே கதையில் தெரிவிக்கிறார். ஆகவே முடிவையும்  ஓரளவு ஊகிக்க முடிகிறது. 

கதையின் முடிச்சைக் காப்பாற்றி கடைசி வரை கொண்டு சென்று, அவிழ்த்ததில், விறுவிறுப்பு குறையாமல் கதையைப்  பகிர்வதில், வெற்றி பெற்றுள்ளார் ஆசிரியர். 

 

18 கருத்துகள்:

  1. இன்று வரை நேரமாகும். நான்கு நாட்களாக வெளியூரில்

    பதிலளிநீக்கு
  2. கதையில் மட்டுமல்ல முடிவிலும் குளறுபடியாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. மணிகண்டன் - பிரமிக்க வைக்கிறார். நொய்யல் ஆறு படு கேவலமாக இருக்கிறது. ஒவ்வொரு முறை கோயம்புத்தூர் சென்னைக்கும் இடையில் பயணிக்கும் போதும் இந்த ஆற்றைக் கண்டு மனம் வெதும்பும். அதன் மேல் பச்சைக்கலரில் ஏதோ ரசாயனம் படர்ந்து பார்க்கவே அருவருப்பாக இருக்கும். மனம் வேதனை அடையும். அதற்கு மணிகண்டனால் விடிவுகாலம் பிறந்தால் மிகவும் நல்ல விஷயம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. கினோகா நல்ல விஷயம். அது போன்று நதி நீர் சுத்தமாக்கப்பட்டால் அதை விட நல்ல செயல் எதுவும் இருக்காது.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. நான் படிச்ச கதை - முடிவு சொதப்பல்.

    நாம் நினைப்பதை, வேண்டுவதை கடவுள் நிறைவேற்றாவிட்டால் மனம் கடவுள் இல்லை என்று சொல்லும் மன நிலையைப் பலர் அடைவதைப் பார்த்திருக்கிறேன். எனக்குமே கூட மனம் பக்குவம் அடையாத ஒரு வயதில் ரொம்பச் சிறிய வயதில் இப்படியான எண்ணம் வந்தது. அதன் பின் இதைப் பற்றிய மனப்பக்குவம் அதாவது நாம் வேண்டுவதற்கும் நமக்கு நடப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற பக்குவம்
    எனவே பக்குவமற்ற மனநிலை உடைய பூசாரிக்கு நம்பிக்கை போவது ஆச்சரியமல்ல.

    ஆனால் அவர் அதை மக்களிடம் புகுத்துவது சரியல்ல. மக்கள் யோசிக்கத் தொடங்கினார்கள் என்பதும் கதைக்குத் தேவையற்ற ஒன்று.

    கதையின் கரு அருமையான கரு. ஆனால் ஏனோ என்னவோ இது இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா.. கீதா ரங்கன் ஸ்வாமி ஆஸ்ரமம் எங்கு இருக்கிறது?

      நீக்கு
    2. வணக்கம் அனைவருக்கும்.
      சகோதரி கீதாரெங்கன் சொல்வதையே நானும் ஆமோதிக்கிறேன். நமக்கென்று உள்ளதை நாம் பிறக்கும் போதே நம் விதி நிர்ணயித்துதான் அனுப்புகிறது. இடையில் நம் வேண்டுதல்கள், நம்பிக்கைகள் என நம் மன சமாதானத்திற்காகத்தான் என்ற ஒரு ஆர்வத்தில் செயல்படுத்துகிறோம். /செயல்படுகிறோம். . மற்றபடி நடப்பவை நடந்து கொண்டேதான் உள்ளது. இதில் எந்த மாற்றமுமில்லை என்பதை உணர்ந்தால் அந்த பக்குவம் ஒரளவு வந்து விடும். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. ஆஹா.. கீதா ரங்கன் ஸ்வாமி ஆஸ்ரமம் எங்கு இருக்கிறது?/

      ஹாஹாஹாஹா நெல்லை....பப்ளிக்கா சொல்லிட்டீங்களே....என்னை இப்படி ஃபேமஸ் ஆக்கிவிட்டிட்டீங்களே...நாளைக்கே எங்க வீட்டு வாசல்ல பெரிய க்யூ நின்னுடப் போகுது!!! இது பூர்வீகப் பெயர். அப்படியே எனக்கு ஒரு பெயரும் சூட்டிடுங்க...உங்களை முதல் சிஷ்யகோடியா ஏற்றுக் கொண்டாச்சு!!!!!

      ...யாரோ சொன்னாங்க மஹாலக்ஷ்மி உங்க வீட்டுக்கதவைத் தட்டும் நாள் அருகில்னு!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
  6. கதை பேத்தல்! :( மற்ற நல்ல செய்திகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. ஜெசிகே அண்ணா எதற்கு மன்னிப்பு எல்லாம்? உங்கள் கருத்தை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். நான் தவறாக எடுத்துக் கொள்ள எல்லாம் மாட்டேன்.

    என் கதைகளில் இப்படி ஒரு சொதப்பலான முடிவு கொடுத்த நினைவு இல்லை. பெரும்பாலும் முடிவு வாசிப்பவர்களின் யூகத்தில் விடுவதாகத்தான் இருக்கும்.

    1. கதையில் பெயர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை.கதை புரிந்தால் போதுமே அண்ணா..பெயர்களே இல்லாமல் கூடக் கதை எழுத முடியுமே

    2. கேள்விகள் நல்ல கேள்விகள்

    3. குழந்தை இல்லை என்றால் விவாகரத்து எல்லாம் சகஜம் தானே....ரெண்டாவது கல்யாணம் என்பதும் வழக்கம்தான் என்றாலும் விவாகரத்து என்பது வித்தியாசமாகத் தெரியவில்லை. ஆனால் யாரிடம் குறை என்பது தெரிந்து கொள்ளாமல் என்பதுதான்...ஆனால் கிராமங்களில் அப்படித் தெரிந்து கொள்வது என்பது கொஞ்சம் அபூர்வம்தான்...இப்போதும் கூட.

    4. சரியான கேள்வி. எனக்கும் தோன்றியது.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. கதையில் பல கருத்து முரண்கள் இருப்பது உண்மையே.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. இன்றைய கதையை அவரவர் கோணத்தில் ரசிக்கலாம். இருப்பினும் கோவிலில் தினமும் இறைவனுடன் பேசி சங்கமித்து உலா வருபவர் குழந்தைக்காக தம் மனைவியை விவாகரத்து செய்து விடுவதாய் சொல்வது சற்று முரண்பாடாக உள்ளது.

    /புருஷன் தன்னைப் பிரியாமல் இருக்க எப்படியும் பெத்துக் கொடுக்கணும் என்று கௌரி தீர்மானித்துக் கொண்டாள்./

    இந்த வாசகமே ஏதோ தப்பான முடிவுக்கு அவள் செல்லப்போகிறாள் என்பதை லேசாக புரிய வைக்கிறது. இடையில் வேறேதோ பிரச்சனைகள். இறைவன் மேலுள்ள நம்பிக்கைகள் மாறுபடும் போது மனித மனம் விபரீதமான முடிவை ஏற்படுத்தி அதை சந்தித்து விடும் வக்கிர புத்தியை அந்த விதி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு விடும். அதுதான் நிதர்சனம்.

    கதை பற்றி சகோதரர் ஜெயகுமார் சந்திரசேகர் அவர்களின் எண்ணங்களும் சரியே.. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. கதையை அலசி கருத்துரை சொன்னவர்கள் யாவருக்கும் நன்றி. இத்தகைய ஆரோக்கியமான விவாதங்கள் தான் இப்பகுதியை தொடர வைக்கின்றது. நன்றி வணக்கம்.

       Jayakumar

    பதிலளிநீக்கு
  11. மணிகண்டன் அவர்களை பாராட்டவேண்டும்.
    அவரின் தொண்டு சிறப்பானது.
    கண்டுபிடிப்புகளும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  12. கதை படிச்சுத் தலை சுத்துது:).. சும்மாவே கெளரி விரதத்தால ஹெட் சுத்திங்:)) இப்போ இதுவும் சேர்ந்து ஹா ஹா ஹா.. கதாசிரியரின் உரையாடலை ரசித்தேன்.. சொடலை, பொலி..:))..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!