திங்கள், 10 மே, 2010

வாசகர்களுக்குப் புதிர்

எல்லோரும் கலந்து கொள்கிற வகையில் ஒரு புதிர்ப் போட்டி வைத்தால் என்ன என்று எங்கள் கோண புத்திக்கு திடீர் என்று தோன்றியது. நாம எல்லோரும் சிறிய வயதில் விளையாடிய ஒரு வெகுஜன விளையாட்டு, 'சினிமாப் பெயர்' என்பது.  இதை விளையாட, சிறப்பு திறமைகள் எதுவும் தேவை இல்லை. சுவரில் போஸ்டர் பார்க்கும் பழக்கமும், கொஞ்சம் ஞாபக சக்தியும் இருந்தால் அது போதும்.

சினிமாப் பெயர் என்கிற இந்த சீரிய விளையாட்டு, தஞ்சாவூர் ஜில்லா பகுதியில் மிகவும் பிரசித்தம். இந்த விளையாட்டில் இரண்டு வகைகள் உண்டு. 

ஒன்று : ஒரு குழுவாக, வட்ட வடிவ வியூகத்தில் எல்லோரும் அமர்ந்துகொண்டு, ஒருவர் சினிமாப் பெயரின் முதல் எழுத்தைக் கூறுவார். அடுத்தவர், அடுத்த எழுத்து. - இவ்வாறு கூறிக் கொண்டு வருவார்கள். இதில் அடுத்த எழுத்தைத் தவறாக உச்சரிப்பவர்களுக்கு (அதாவது இதயகமலம் என்கிற பெயரில் இ ... த......ய ....   என்று மூன்று பேர் கூறிய பிறகு அடுத்த எழுத்து க் என்று சொல்லுபவர்களுக்கு) அல்லது தெரியாமல் முழிப்பவருக்கு 'ஆங்கிலக் கழுதை'யின் முதல் எழுத்தாகிய 'D' பரிசாக அளிக்கப்படும்.  குழுவில் யார் முதலில் D O N K E Y ஆகிய எல்லா எழுத்துகளையும் பெற்று மூக்கு வெள்ளை ஆகிறதோ அவருக்கு, குழுவினர் ஏதேனும் தண்டனை அளிப்பது உண்டு. இந்த தண்டனை குறைந்தபட்சம் ஒரு சலாம் அதிக பட்சம் (பாக்கெட் மணி இருக்கும் பையனாக இருந்தால்) குழுவில் உள்ளவர்களுக்கு கடலை மிட்டாய் ('டேய் அட்லீஸ்ட் ஒரு ஆரஞ்சுசொளை மிட்டாயாவது வாங்கிக் கொடுடா') வாங்கி கொடுத்தல் என்பது போல இருக்கும். முதல் வகை விளையாட்டில் விளையாடுபவர்கள் பெரும்பாலும் சம வயதினராகவும், தரையில் அமர்ந்து விளையாடுபவர்கள் ஆகவும் இருப்பார்கள். சில குழுக்களில், சினிமா பெயர் கடைசி எழுத்தை உச்சரிப்பவருக்குக் கூட கழுதையின் எழுத்துக்கள் அளிக்கப்படும். உதாரணமாக, முதல் எழுத்தைச் சொல்லுபவர், 'சு' என்றவுடன் அடுத்தவர் 'றா' என்றுவிட்டால் - அவருக்கு கழுதையின் ஆறு எழுத்துகளில் ஒரு எழுத்து கிடைத்துவிடும். எனவே அவர் 'சு' என்ற எழுத்துக்கு அடுத்த எழுத்தாக 'ம' என்று சொல்லிவிடுவார். (ஹி ஹி இந்தப் பெயர்கள் எல்லாம் நீங்க ஈசியாக் கண்டுபிடிச்சுடுவீங்க)

இரண்டாம் வகை ஆட்டம் - எல்லா வயதினரும் ஆடுவார்கள். வட்டமாக எல்லாம் உட்காரவேண்டிய அவசியம் இல்லை. குழவி முதல் கிழவி வரை, பால்மணம் மாறாதவர் முதல் பல்செட் அணிபவர் வரை எல்லோரும் ஆடலாம். முதலில் ஆரம்பிப்பவர், சினிமாப் பெயரின் முதல் எழுத்தையும், கடைசி எழுத்தையும் கூறுவார். அதற்கு சரியான விடை அளிப்பவர், மற்றவர்களுக்கு புதிர் போடலாம். இது நல்ல டைம் பாஸ். இந்த விளையாட்டில் தண்டனைகள் எதுவும் கிடையாது. நாகப்பட்டினம் தேசிய ஆரம்பப் பாடசாலையில், இரண்டாம் வகுப்பு படித்த நாட்களில், வகுப்பில் லில்லிபுஷ்பம் டீச்சர் இல்லாத நேரத்தில், எனக்கு எதிரே பலகையில் உட்கார்ந்திருந்த லட்சுமி, மங்களம், நீலாயதாக்ஷி மூவரும் இந்த விளையாட்டைத்தான் சீரியசாக ஆடிக் கொண்டு இருந்தார்கள் என்று ஞாபகம். 

என்னுடைய அண்ணன் அலுவலகத்தில் (ஆமாம் ஆமாம் - அரசாங்க அலுவலகம்தான் - வேறு விபரங்கள் கேட்காதீர்கள்) ஒரு முறை இந்த முதல் எழுத்து & கடைசி எழுத்து விளையாட்டு (மதிய உணவு இடைவேளை நேரத்தில் என்று சேர்த்துவிடுகிறேன் - பாவம்) விளையாடிக் கொண்டிருக்கையில், ஒருவர் போட்ட புதிரை விடுவிக்க முடியாமல், எல்லோரும் திணறிப் போய்விட்டார்களாம். அவர் கேட்ட கேள்வி : 'மூ' என்ற எழுத்தில் ஆரம்பித்து 'சி' என்ற எழுத்தில் முடியும் தமிழ்ப் படம் எது? நீங்களும் யோசித்து வையுங்கள். பதிவின் கடைசியில் விடை கூறுகின்றேன்.

சரி சரி - இப்போ வாசகர்களுக்கான ஐந்து கேள்விகள் :
(எல்லாம் தமிழ்ப் படங்கள்தான். முதல் எழுத்தும் கடைசி எழுத்தும் கொடுக்கப்பட்டுள்ளன. சில கேள்விகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சரியான விடைகளும் இருக்கலாம்.)

1)  ம .................கி.
2)  ப ------------யா 
3)  த .................பி 
4)  ஓ ................தி 
5)  ஸ்..................ர் 

மூ ...............சி கண்டுபிடித்துவிட்டீர்களா? அண்ணனின் நண்பர்கள் எல்லோரும் தெரியவில்லை என்று சொல்லிவிட்டு, 'வானத்தைப் பார்த்து கொக்கரக்கோ', 'தொட்டித் தண்ணியை கலக்கிக் குடிச்சேன்' என்றெல்லாம் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்த பின், அந்தக் கேள்வி கேட்ட நண்பர் ரொம்பப் பெருமையாக - 'ஹா! உங்க யாருக்குமே பதில் தெரியாத கேள்வி கேட்டேன் பாத்தீங்களா?' என்று கேட்டுவிட்டு சொன்னார். 
அது "மூன்று முடிச்சி" - இதை கேட்ட நண்பர்கள் எல்லோரும் அவர் முதுகில் அன்று வைத்த தர்ம அடி இன்றளவுக்கு அவருக்கு நினைவில் இருக்கும்!  

உபரிக் கேள்வி - இந்தப் பதிவில் உள்ள மூன்றாவது படம் யாருடைய படம்?   

12 கருத்துகள்:

  1. மர்மயோகி
    பட்டிக்காட்டு பொன்னையா
    தம்பி தங்க கம்பி
    ஓர் நதி
    ஸ்டார்

    மூணாவது படம் எம்.ஜி.ஆர்

    மேலும் சினிமா புதிர்களுக்கு என் ப்ளாக் வாங்க..

    பதிலளிநீக்கு
  2. படத்தில பாடகர் ஸ்ரீநிவாஸ் அவர்கள்.

    படம் யோசிக்கணும்.
    நேரம் குறைவாயிருக்கு.

    பதிலளிநீக்கு
  3. //...அல்லது தெரியாமல் முழிப்பவருக்கு //

    முழிப்பவர் "வாட் பிளீஸ்?" என கேட்க வேண்டும்.

    எழுத்து 'தீ'ல ஆரம்பிச்சு 'தீ'யில் முடியும் தமிழ்ப் படம் என்ன ?

    பதிலளிநீக்கு
  4. //'தீ'ல ஆரம்பிச்சு 'தீ'யில் முடியும் தமிழ்ப் படம் என்ன ?//

    விடை: "தீ" எப்பூடி :))

    பதிலளிநீக்கு
  5. //'தீ'ல ஆரம்பிச்சு 'தீ'யில் முடியும் தமிழ்ப் படம் என்ன ?//

    விடை: "தீ" எப்பூடி :))

    ...ha,ha,ha....

    ..கலகல விளையாட்டுதான், போங்க......

    பதிலளிநீக்கு
  6. "மூ"...."சி"
    மூன்று சாட்சி. சரியா.

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா11 மே, 2010 அன்று 1:17 AM

    நல்ல பொழுது போக்கான விளையாட்டு. நாங்கள் சிறு வயதில் அலுக்க அலுக்க விளையாடுவோம்

    ஹாஜா மொஹைதீன்
    சவுதி அரேபியா

    பதிலளிநீக்கு
  8. ஓர் நதி, மூன்று சாட்சி என்கிற பெயர்களில் தமிழ் சினிமாப் படங்கள் வந்துள்ளனவா? வாசகர்கள் விவரம் அளித்தால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  9. கேட்கப்பட்டுள்ள ஐந்து கேள்விகளுக்கு இன்னும் நிறைய சரியான பதில்கள் உளளன.
    ரமேஷ் ரொம்ப நல்லவன் மட்டும் அல்ல, வல்லவனும் கூட.
    எம் ஜி யார் என்பது சரி. என்ன படம் என்று தெரியுமா?

    பதிலளிநீக்கு
  10. மர்மயோகி
    பலே பாண்டியா
    ஓடும் நதி

    பதிலளிநீக்கு
  11. மர்மயோகி
    பலே பாண்டியா
    ஓடும் நதி

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!