செவ்வாய், 4 மே, 2010

அண்ணனோட அற்புதப் படைப்பு !

அது நான் ஐந்தாம் வகுப்பு (நாகப்பட்டினம் தேர்முட்டி ஸ்கூலில்) படித்துக்கொண்டிருந்த பொற்காலம். வீட்டிலே மின்சார உபகரணம் என்று பார்த்தால் மாலையில் ஆறு மணிக்கு போடப்பட்டு, இரவு ஒன்பது அல்லது பத்து மணிக்கு அணைக்கப்படும் பல்புகளும், அதற்குப்பின் போடப்படும் டிரான்ஸ்பார்மர் - சிறிய விளக்கும் மட்டும்தான். இந்த டிரான்ஸ்பார்மர் விளக்கும் கூட அண்ணனால் அசம்பிள் செய்யப்பட்டதுதான். சுற்றுப்புற வீடுகளில் உள்ள மக்களால், இது கூட ஒரு அதிசயமாகத்தான் பார்க்கப்பட்டது அந்த நாட்களில். 

நான் எழுத எடுத்துக்கொண்ட விஷயம் என்ன என்றால் (இது இன்னொரு அண்ணனின் மாணவர் மன்ற பேச்சுக்களின் ஆரம்ப வரிகள்.) ரேடியோ.

ரேடியோ என்றால் உங்கள் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது ஒரு கன செவ்வகப் பெட்டி, அதைச் சுற்றி அமர்ந்து கேட்கின்ற சிலர் இது போலவா? அல்லது பார்க்குகளில் (எங்க நாகை கொடிமர மேடைப் பூங்காவில் - ஆங்கிலத்தில் Flagstaff park ரேடியோ சிலோன் கேட்பதற்காகவே அப்போ எக்கச் சக்கக் கூட்டம் சேரும்) அலறுகின்ற பெரும் புனல் வடிவ ஒலி பெருக்கிகள் இதெல்லாமதானே?


இப்படி எல்லாம் நினைப்பவர்கள் - அப்போ எங்க வீட்டுக்கு வந்திருந்தா நிச்சயம் ஏமாந்து போயிருப்பீங்க.. அண்ணன் செய்த ரேடியோவுல இவைகள் எதுவுமே இருக்காது. அவரு அந்திக்கடையில ஓரணா இரண்டணா அதிக பட்சம் நாலணா கொடுத்து வாங்கிய சில பொருட்களை வைத்து அந்த ரேடியோவை அமைத்திருந்தார். அந்தப் பொருட்கள் எல்லாம் அவருடைய பாலிடெக்னிக் பாடப் புத்தகங்கள் வைக்கப்படும் ஒரு மர செல்ஃபில் அமைதியாக அமர்ந்திருக்கும். அம்மா புடவை உலர்த்த உபயோகிக்கும் கம்பியில் / கயிற்றில் தொங்குகிற மூங்கில் கம்பை சற்று உற்றுக் கவனித்தால் - அதில் ஏதோ ஒரு தாமிரக் கம்பி சுற்றப் பட்டுள்ளது என்று தெரியும். அந்தக் கம்பியை அண்ணன் ஆண்டன்னா என்றார். நாங்க எப்பவுமே அண்ணன் பேச்சுக்கு மறு பேச்சு பேசமாட்டோம். பேசினால் அண்ணனின் கண்டுபிடிப்புகளை பார்க்கக்கூட விடமாட்டார். 

கொஞ்சம் விபரம் தெரியவந்த வயதில்தான் ஆண்டன்னா என்றால் வெகுஜனங்கள் பாஷையில் ஏரியல் (இல்லே இல்லே - சலவைத்தூள் இல்லே. சர்ஃப் தவிர வேறு எதுவும் அப்போ யாருக்கும் தெரியாது.). என்று தெரிந்துகொண்டோம். இந்த ரேடியோவைப் பயன்படுத்தி வீட்டில் உள்ள பெரியவர்கள் எல்லோரும் என்னை எக்ஸ்பிளாயிட் பண்ணி வேலை வாங்கிக் கொண்டார்கள். நீ கடைக்குப் போயிட்டு வந்தால்தான் ரேடியோ கேட்கலாம், மெஷினுக்குப் போயி மாவு அரைத்து வந்தால்தான் ரேடியோ இத்யாதி, இத்யாதி.

மாலை நாலு மணி சுமாருக்கு வீட்டில் உள்ள எல்லோரும் தரையில் வட்ட வடிவமாக அமருவோம். ஒரு சிறிய பித்தளைத் தம்ளர் வடிவத்தில் இருக்கின்ற கனமான ஒரு பாத்திரத்தை மாறி மாறி ஒவ்வொருவரும் காதில் வைத்துக் கொண்டு சற்று நேரம் உற்றுக் கேட்போம். கேட்கின்ற ஒவ்வொருவர் முகத்திலும் அப்போ வந்த ஆனந்தத்தைப் பார்க்கணுமே!

என் காதில் வைத்துக் கொண்ட பொழுது கேட்டவை இவை:

வாராயோ this is தோழி the வாராயோ voice of மணப்பந்தல் america காண வாராயோ 

மலர்களைப்போல் …--- டன் ட டன்-- தங்கை --- ட ட ட டன் – --உறங்குகிறாள் --- டா ட டா ட டன்---

சில சமயங்களில் மலேசிய வானொலி என்று கூட இரண்டு வரிகள் கேட்ட ஞாபகம். 

இது இலங்கை வானொலி வர்த்தக ஒலி பரப்பு என்பது மட்டும் அடிக்கடி ஸ்பஷ்டமாகக் காதில் கேட்கும். ஆனால், பாட்டு ஆரம்பிக்கும் பொழுது அத்தனை வேற்று மொழி வில்லன்களும் படை எடுத்து வந்து ஹோ - டிரியோ என்று கலக்குவார்கள். மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ என்று ஜமுனா ராணியைப் பாட விடாமல் அல்லது நம்மைக் கேட்கவிடாமல் ஒருத்தி மூக்காலேயே சைனா பாஷை பேசி இம்சிப்பாள்.

முதன் முதலில் இந்த ரேடியோவை காதில் வைத்துக் கேட்ட அம்மா சொன்ன வார்த்தைகள் இன்னமும் அப்படியே ஞாபகம் உள்ளது. 'இந்தக் கட்டையில போறவன் ஒருத்தன் அடிக்கடி வந்து திஸ் - ஈஸ் வாத்து அமரிக்கா என்று அடிக்கடி நடுவுல பேசாம இருந்தா எவ்வளவோ நல்லா இருக்கும்.'   

18 கருத்துகள்:

 1. மலரும் நினைவுகள் இனிமை .நாகபட்டினமா நீங்க? செடில் பாத்திருகீங்களா

  பதிலளிநீக்கு
 2. முதன் முதலில் இந்த ரேடியோவை காதில் வைத்துக் கேட்ட அம்மா சொன்ன வார்த்தைகள் இன்னமும் அப்படியே ஞாபகம் உள்ளது. 'இந்தக் கட்டையில போறவன் ஒருத்தன் அடிக்கடி வந்து திஸ் - ஈஸ் வாத்து அமரிக்கா என்று அடிக்கடி நடுவுல பேசாம இருந்தா எவ்வளவோ நல்லா இருக்கும்.'  ....... ha,ha,ha,ha...... very funny!

  பதிலளிநீக்கு
 3. பத்மா! பதிவாசிரியர், "நாகப்பட்டினம் நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலும், செடில் உற்சவமும், செடில் ஏற்றிச் சுற்றும் பூசாரியின் தலைப் பின்னலும், செடில் சுற்றும் குழந்தைகளின் அலறலும் - மறக்க முடியாதன" என்கிறார்.

  பதிலளிநீக்கு
 4. To my knowledge, the first lamp we used in the night is also the 'tranformer' light, which contains small bulb (used in torch lights).
  The transformer is step down type as this helped to give appropriate lower voltage to make the small bulb works.

  Ha.. Ha.. . We also used a 3x2x1 foot radio (vacuum tubes/valves)

  பதிலளிநீக்கு
 5. இன்னிக்கு ரேடியோ இருக்கு. ஆனா கேட்க விருப்பமில்ல. ஆனா அன்று- ஒரு வரி பாட்டு கேட்க எவ்வளவு கஷ்டம். அதுலயும் எத்தனை விருப்பம்.

  பதிலளிநீக்கு
 6. சூப்பர் ஸ்ரீராம்.... பழைய நாளுக்கு கூட்டிட்டு போய்டீங்க எல்லாரையும். கலக்கல்

  பதிலளிநீக்கு
 7. இப்பிடியெல்லாம் நீங்க ரேடியோ கேட்ட சமாச்சாரம் சொல்ல எனக்கு இதேபோல அப்பா ரேடியோ கேட்டதைச் சொன்ன ஞாபகம் வருது.இப்போ ஊடகங்களின் எண்ணிக்கை கூடிக்கிடக்கு.
  ஆனால் அதுக்கு மதிப்பு !

  பதிலளிநீக்கு
 8. இதைப் படிக்கும் போது நான் ரேடியோ அசெம்பிள் செய்த நினைவு வருகிறது. எல்லாம் முடிந்து ஸ்பீக்கரில் கடும் நிசப்தம்! எதை சரிபார்த்தாலும் சரியாகவே இருந்து கடைசியில் வெறுத்துப் போய் வால்யூம் கண்ட்ரோலை ஆஃப் செய்ய திருகியபோது ரேடியோ ஸ்பஷ்டமாக பாட ஆரம்பித்தது. வால்யூம் கண்ட்ரோல் மாற்றி அமைக்கப் பட்ட கோளாறுதான் நிசப்தத்துக்குக் காரணம்! அப்போது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி என் வாழ் நாளில் மறக்க முடியாத பிரம்மாண்ட சந்தோஷம்!

  பதிலளிநீக்கு
 9. //அம்மா சொன்ன வார்த்தைகள் இன்னமும் அப்படியே ஞாபகம் உள்ளது. 'இந்தக் கட்டையில போறவன் ஒருத்தன் அடிக்கடி வந்து திஸ் - ஈஸ் வாத்து அமரிக்கா என்று அடிக்கடி நடுவுல பேசாம இருந்தா எவ்வளவோ நல்லா இருக்கும்.' //

  superrrrrrrrrr..sriram..
  sema flash back..
  very funny.. :D :D

  பதிலளிநீக்கு
 10. சுவாரசியமான பதிவு! இது போன்ற இனிமையான நினைவுகள்தான் வாழ்கையின் பொக்கிஷங்கள்.

  எங்க வீட்டிலேயும் இது மாதிரி ஒரு ரேடியோ ரொம்ப வருஷம் இருந்துது. போக போக அது படுத்தின பாடு, படு சுவாரசியம். Tune பண்ண திருப்பினா சிவப்பு கலர்ல ஒண்ணு போட்ட மாதிரி இருந்த அந்த முள் நகரவே நகராது. பத்து தடவ விடாம சுத்தினாதான் கொஞ்சூண்டு நகரும். சில நேரம் ஒரே ஸ்டேஷன்ல நீங்க எழுதி இருக்கா மாதிரி பல
  குரல்கள் கேட்கும். விவித்பாரதிலேந்து சிலோனுக்கு போறதுக்குள்ள விடிஞ்சுரும். ஆனா நானும் என் அண்ணாவும் இதுக்கெல்லாம் துளி கூட அசந்து போகாம, உன்னை விட்டேனா பாருன்னு அந்த ரேடியோவை உண்டு இல்லைன்னு பண்ணி பாட்டு கேட்டோம். ஒரு நாள் இதுக்கு மேல அந்த ரேடியோவை ஒண்ணுமே பண்ண முடியாதுன்னு நிலைமை வந்தப்பறம் எங்க அப்பாவை அரிச்சு பிடுங்கி ட்ரான்சிஸ்டர் வாங்கினா, அது கொஞ்ச நாளிலேயே தலைல தட்டினாதான் பாடுவேன் ஒரே அடம். அதை இங்க தட்டி, அங்க தட்டின்னு, தட்டி குடுத்தே ரொம்ப நாள் பாட்டு கேட்டோம். அப்பறம் அதை மொட்டை மாடிக்கு கூட்டிண்டு போனா சமத்தா பாடும் தெரிஞ்சுண்டு பாட்டு கேக்கறதுக்காக அதையும் பண்ணினோம். அந்த நாட்களை எல்லாம் இப்ப நெனச்சாலும் எவ்வளவு சந்தோஷமா இருக்கு. இதெல்லாம் வாழ்க்கைல வாழ்ந்த நாட்கள்!

  பதிலளிநீக்கு
 11. ////////வாராயோ this is தோழி the வாராயோ voice of மணப்பந்தல் america காண வாராயோ
  மலர்களைப்போல் …--- டன் ட டன்-- தங்கை --- ட ட ட டன் – --உறங்குகிறாள் --- டா ட டா ட டன்---/////////


  மிகவும் ரசிக்கும் வகையில் அமைந்தது உங்களின் இந்த பதிவு பகிர்வுக்கு நன்றி !

  பதிலளிநீக்கு
 12. ////////வாராயோ this is தோழி the வாராயோ voice of மணப்பந்தல் america காண வாராயோ
  மலர்களைப்போல் …--- டன் ட டன்-- தங்கை --- ட ட ட டன் – --உறங்குகிறாள் --- டா ட டா ட டன்---/////////

  ஒஹோ இது தான் ரீ மிக்ஸ் ஒ ....

  பதிலளிநீக்கு
 13. push button grundig radioவின் பின்பக்க அட்டையை எடுத்து கரப்பான்களையும் சிலந்திகளையும் விரட்டிய பழைய நினைவுகளை அசை போட வைக்கிறது. good post.

  பதிலளிநீக்கு
 14. ///நான் எழுத எடுத்துக்கொண்ட விஷயம் என்ன என்றால் ...///

  ha ha.. so true.

  பதிலளிநீக்கு
 15. இனிமையான மலரும் நினைவுகள்.....

  பல விஷயங்களை கண்டுபிடித்திருக்கிறாரே......

  அந்த ரேடியோ - அசத்தல்.... :)

  பதிலளிநீக்கு
 16. இனிமையான மலரும் நினைவுகள்.....

  பல விஷயங்களை கண்டுபிடித்திருக்கிறாரே......

  அந்த ரேடியோ - அசத்தல்.... :)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!