திங்கள், 21 மார்ச், 2011

ஜே கே 14 மகிழ்ச்சி

    
எந்த ஒன்றின்  வாயிலாகவும் மகிழ்ச்சியைப் பெற முடியுமா?

நாம் மகிழ்ச்சியை பலவாறாகவும் தேடுகிறோம்.  உறவுகளின் மூலமாக, எண்ணங்களால், கருத்துக்களால் இப்படி எவ்வளவோ.  இப்படிச் செய்வதால், பொருள்கள், கருத்துக்கள், உறவுகள் மிகுந்த முக்கியத்துவம் பெற்று விடுகின்றன -- மகிழ்ச்சி அல்ல.  நாம் எதோ ஒன்றை பயன்படுத்தி மகிழ்ச்சி அடைய முனைந்தால், அந்தப் பொருள் மகிழ்ச்சியைக் காட்டிலும் முக்கியத்துவம் பெற்று விடுகிறது.  இப்படிச் சொல்லும் போது, பிரச்னை ரொம்பவும் எளிதாகி விட்டது போல் தோன்றுகிறது.
     
உண்மையும் அதுதான்.  நாம் சொத்துக்கள், குடும்பம், புகழ் இவற்றில் மகிழ்ச்சியை சம்பாதித்துக் கொள்ள முற்படுகிறோம்.  பிற்பாடு சொத்து, குடும்பம், பெயர், கருத்துக்கள்  இவை யாவும்  மகிழ்ச்சியைக் காட்டிலும் முக்கியமானதாகி விடுகின்றன.  மகிழ்ச்சியை  ஒரு சாதனத்தின் வாயிலாக கொண்டுவர முனைகிறோம்.  பின் அந்த சாதனம் அந்த லட்சியத்தையே அழித்து விடுகிறது.  மனம் அல்லது கரங்கள் சிருஷ்டித்த எதனாலும் மகிழ்ச்சியை அடைந்து விட முடியுமா?  பொருள்களும், உறவுகளும், சித்தாந்தங்களும் சாதாரணமாகவே முக்கியத்துவம் இல்லாதவை. நீடித்து இருப்பவை அல்ல. அவை எப்போதும் (இறுதியில்) மகிழ்ச்சியை நாசம் செய்து விடும்.  பொருள்கள் நிரந்தரமானவை அல்ல - தேய்ந்து அழிந்து போகக் கூடியவை.

உறவுகளோ பூசல்களுக்கும் சச்சரவுகளுக்கும் உட்பட்டவை; மரணம் வேறு  குறுக்கிடக் காத்திருக்கும்.  கருத்துக்களும் சித்தாந்தங்களும் மாறிக்கொண்டே இருப்பவை.  நிலைத்து நிற்கக்கூடியவை அல்ல.  நாம் இவற்றை பயன்படுத்தி மகிழ்ச்சியை அடைய முயல்கிறோமே   தவிர அவை அநித்தியமானவை என்று உணர்வதில்லை.  எனவே துயரம் நமது நிரந்தரத்துணையாகி விடுகிறது. அதை தவிர்த்தல் பெரிய பிரச்னை ஆகி விடுகிறது.
      
மகிழ்ச்சி, அதாவது ஆனந்தத்தின் உண்மையான பொருளை கைக்கொள்ள வேண்டுமானால், தன்னைப் பற்றிய சுய அறிவு (self knowledge) எனும் நதிப் பிரவாகத்தை கவனிக்க வேண்டும்,    ஆராய  வேண்டும்.  சுயம் அல்லது அகம் பற்றிய அறிவு என்பது ஒரு இறுதி லட்சியம் அல்ல.  ஒரு நதியின் பிரவாகத்துக்கு அடிப்படை மூலம்  என்று ஒன்று இருக்கிறதா?  ஆரம்பம் முதல் முடிவு வரை நீரின்  ஒவ்வொரு துளியும் நதிதான்.  ஏதோ  ஒன்றின் மூலத்தைக் கண்டுகொண்டால் மகிழ்சசியைப் பெறுவோம்  என்று எண்ணுவது  தவறான கற்பனை.  சுய அறிவு எனும் நதியில் நீங்கள் திளைக்கும்போது மகிழ்ச்சி அங்கே தானே பிரசன்னமாக  இருக்கும்.  
                            
                            

5 கருத்துகள்:

 1. நல்ல கருத்து.
  அவசியமானதை வெகு சுலபமாக தொலைத்து விடுகிறோம் - தொலைத்தது தெரியாமலே!

  பதிலளிநீக்கு
 2. நீங்கள் சொல்லும் நிலைக்கு வர
  மனம் ஒரு பக்குவ நிலைக்கு வரவேண்டும்.அதற்குக் காலம் எடுக்கும்!

  பதிலளிநீக்கு
 3. நதியின் ஒவ்வொரு துளியும் நதியே... உண்மையே... ;-))

  பதிலளிநீக்கு
 4. மிகவும் அருமை! நம்மை நாமே உணர்ந்து கொண்டால் நம் மகிழ்ச்சி நம் கையில்தான். நம்மை நாம் பிறரிடத்தில் காண விழையும்போதுதான் பிரச்சினையே ஆரம்பம். எதுவுமே சொல்வது எளிது. பயில்வதுதான் கடினம்.

  பதிலளிநீக்கு
 5. எதையுமே எளிதா எடுத்துகனும்னுட்டு தான் நினைக்கிறோம்... ஆனால் மூளைக்கு தெரியறது மனசுக்கு தெரியாது மனசுக்கு தெரியறது மூளைக்கு புரியாது 

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!