Wednesday, March 23, 2011

நாழிகை வட்டில்

                         
பல நாட்களுக்கு முன், 'ஆவிகளுடன் பேசுதல்' குறித்து ஒரு பதிவு போட்டிருந்த நினைவு. அண்மையில், அதில் தொடர்புடைய நண்பர் என்னைக் காண வந்தார். அப்போது பொறுக்க முடியாமல் நான் கேட்ட கேள்வி: "பல ஆண்டுகளுக்கு முன்பு ப்லாஞ்செட் பலகை மூலமாக ஆவிகளிடம் பேசிய பிரமிப்பூட்டும் தகவல்கள் பல சொன்னீர்களே! அவை அப்பட்டமான உண்மையா அல்லது கற்பனை கலந்த அரைகுறை உண்மையா?" என்று கேட்டேன். அவர், முன்பே 'அவை யாவும் முழு உண்மையே' என்று உறுதி செய்திருந்தும் கூட, என்னை அப்படிக் கேட்க வைத்தது அந்த தகவல்கள் பலவும் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவையாக எனக்குத் தோன்றியதுதான்.
  
மீண்டும அவற்றை உறுதி செய்த நண்பர் "எனக்கே இதில் அதிக நம்பிக்கை கிடையாது. லேசான க்யூரியாசிட்டி மட்டும் தான் இருந்தது. என்னை திடுக்கிட வைத்த நிகழ்ச்சியைச் சொல்கிறேன் கேளுங்கள் " என்று சொல்லித் தொடர்ந்தார்.
        
"நான் அப்போது சேலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். பிரம்மச்சாரி வாழ்க்கை. என் ரூம் மேட்டுடன் இருந்துவந்தேன். ஒரு நாள் கதவு திறந்திருந்த நிலையில் நான் வெளியில் இருந்த குளியலறைக்குச் சென்று திரும்பிய போது என் ரிஸ்ட் வாச்சும் நண்பருடைய செருப்பும் ஒரு சேர திருடு போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். என்ன செய்வது?
             
அந்த வாரம் நான் சொந்த ஊருக்குத் திரும்பியபோது என் வீட்டில் என் அப்பாவும் நண்பர்களும் ப்லாஞ்செட் பலகை முன் உட்கார்ந்திருந்தார்கள். நானும் சென்று உட்கார்ந்துகொண்டு, 'இப்போது என் மனதில் என்ன நினைத்திருக்கிறேன் என்று சொல்ல முடியுமா?' என்று கேள்வி கேட்டுவிட்டு, பதிலுக்கு  எதிர்பார்ப்பும் அவநம்பிக்கையுமாக காத்திருந்தேன்.
    
"நாழிகை வட்டிலைப் பற்றி கேட்கிறாயா" என்று பதில் வந்தது. நாழிகை வட்டில் என்றால் என்ன என்றே தெரியாத எனக்கு அது ரிஸ்ட் வாச்சுக்கு செந்தமிழ்ப் பெயர் என்று தமிழறிந்த நண்பர்கள் சொன்னார்கள்.

ஆச்சரியம் அடைந்த நான் தொடர்ந்து " ஆம். அது கிடைக்குமா?" என்று என் அடுத்த கேள்வியை முன் வைத்தேன்.

" பதினைந்து நாளில் கிடைக்கும் " என்று பதில் வந்தது.

அவநம்பிக்கையுடன் ஊர் திரும்பிய எனக்கு மேலும் ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. "உங்கள் கடிகாரம் கிடைத்து விட்டது. போலீஸ் ஸ்டேஷன் சென்று அடையாளம் காட்டி பெற்றுக் கொள்ளுங்கள்" என்று மின்சார வாரியத்தில் பணி புரிந்து வந்த ஒரு பொறியாளர் கடிதம் எழுதியிருந்தார். சென்று என் வாட்சை மீட்டு வந்தது தனிக்கதை. நண்பரின் செருப்பு கிடைக்க வில்லை!
                           
இதைக் கேட்ட எனக்கும் வியப்பு தாங்கவில்லை.
               
அவர் மேலும் சொன்னது.
   
நாம் யாரை அழைக்கிறோமோ அவர் பாணியிலேயே பதில் வரும். சில சமயம் "நீங்கள் அழைத்த நபர் இந்த (ஆவி) உலகத்தில் இல்லை" என்றும் பதில் கிடைக்கும். சில சமயம் போக்கிரித் தனமான பதில்களும் வருவதுண்டு. (இடையில் புகுந்து குறும்பு செய்யும் ஆவிகளின் சேட்டைகள் போலும்.)
         
நண்பர்களே உங்கள் நம்பிக்கை எப்படி? அனுபவம் எப்படி? சொல்லுங்கள் கேட்கிறோம்.
                            

11 comments:

அப்பாதுரை said...

ரொம்போ டேஞ்சரான பாதைங்க..

Madhavan Srinivasagopalan said...

ஆவி கண்டிப்பா இருக்குது.. நம்புங்க..
நா அதப் பத்தி என்னோட இந்தப் பதிவுல சொல்லி இருக்கேன்..

விஜய் said...

ஒய்ஜா போர்ட் தவிர குரலிலுள்ள எக்டோபிலாசத்தை யூஸ் செய்யும் மீடியங்களை நானறிவேன்.

விஜய்

ஹேமா said...

நாழிகை வட்டில்.நல்லதொரு தமிழ்ச்சொல் !

HVL said...

நானும் முயற்சி செய்திருக்கேன்.டென்த்ல அது சொன்னத விட அஞ்சு மார்க் அதிகம் எடுத்தேன். அதனால கொஞ்சம்(மா) நம்பறேன்.

HVL said...

அனுபவம் கொஞ்சம் பெரிசா போனதால ஒரு பதிவா போட்டுட்டேன்!

அமைதிச்சாரல் said...

'நாழிகைவட்டில்'...

தமிழ் தெரிஞ்ச ஆவியா இருக்குமோ :-))

middleclassmadhavi said...

:-))

எங்கள் said...

HVL - டின்னர் வித் ஆவி பதிவு ரொம்ப த்ரில்லிங் ஆக இருக்கு. வாழ்த்துகள்!

Muralinairobi said...

During my school days, I had tried. I saw the glass moving & the candle inside was lit. It gave some answers but nothing was correct....but the whole exercise was interesting.

அப்பாவி தங்கமணி said...

//இதைக் கேட்ட எனக்கும் வியப்பு தாங்கவில்லை//
எனக்கும் தான்... :)

எனக்கு இந்த மாதிரி டாபிக் யோசிச்சாலே அன்னைக்கி தூக்கம் கோவிந்தாதான்... அதனால நான் யோசிக்கறதே இல்ல...

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!