வியாழன், 31 மார்ச், 2011

எலெக்ட்ரானிக் சாமியார்!

                
ஆசிரியர் குழுவில் ஒருவருடைய நண்பராகிய கே டி ஆர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தொலைபேசியில் கூறிய விவரம் எங்களுக்குப் பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

'என்ன சார்! நம்ம இருப்பது இருபத்தோராம் நூற்றாண்டில். நீங்க சொல்வது எதுவும் நடைமுறை சாத்தியம் இல்லை.' என்று சொன்னோம். 

அப்படியும் அவர் எங்களை விடுவதாக இல்லை. 'நீங்க ஒருமுறை வந்து இவரைப் பார்த்து பேட்டி கண்டு - எங்கள் ப்ளாக் ல எழுதுங்க.' என்றார்.

அவர் கூறியதின் சாராம்சம் இதுதான்: எலெக்ட்ரானிக் சாமியார் என்று ஒருவர், இந்தப் பகுதியில் ரொம்பப் பிரபலம். யார் வந்து கேட்டாலும் ஓராண்டுக்குள் என்ன நடக்கப் போகின்றது என்பதைத் துல்லியமாக சொல்லிவிடுகிறார். நம் வாழ்க்கை, நண்பர்கள் பற்றி, நாட்டு நடப்பு, விளையாட்டு, விஞ்ஞானம் எதுவாக இருந்தாலும் சொல்லுகிறார். ஆனால் எதற்கும் கட்டணம் எதுவும் வசூலிப்பது இல்லை!

சக ஆசிரியர்கள், 'நமக்கு வேண்டாம் - இந்த வம்பு எல்லாம். எங்களுக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. நீ வேணா போய் அந்த சாமியாரைப் பார்த்து, பேட்டி கண்டு வந்து எங்கள் ப்ளாக் ல எழுது.' என்றார்கள்.

நண்பர் கே டி ஆரிடம், அந்த சாமியாரின் இருப்பிடம் பற்றிய தகவல்களை கேட்டு, என்னுடைய நாட் குறிப்புப் புத்தகத்தில் எழுதி வைத்துக்கொண்டேன். இது எல்லாம் நடந்தது இரண்டு வாரங்களுக்கு முன்பு.

மார்ச் இருபதாம் தேதி, ஞாயிற்றுக் கிழமை அன்று, அந்த சாமியாரின் இருப்பிடத்திற்கு ஒரு ஆட்டோ பிடித்துப் போய் சேர்ந்தேன். இதுவா அந்த அற்புத, ஆச்சரிய, இலவச, எலெக்ட்ரானிக் சாமியாரின் இருப்பிடம்! எனக்கு மிகுந்த ஆச்சரியம்.

வாசலில் பாலாஜி கேட்டரர்ஸ் என்று ஒரு போர்டு. நீண்ட தூரத்திற்கு வெற்று இடம். உள்ள்ள்ளே பின் பக்க காம்பவுண்ட் சுவரை ஒட்டி கூரை வேய்ந்து மண் சுவர்களுடன் ஒரு மிகப் பெரிய குடிசை. அந்தக் குடிசைப் பகுதியின் முகப்பில் யாரையும் காணோம்.

சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து, "சார்..." என்றேன். ஒரு நடுத்தர வயது உடையவர் இடது பக்க அறையிலிருந்து வாய் நிறைய வெற்றிலை மென்றவாறு எட்டிப் பார்த்து, 'என்ன வேண்டும்?' என்று சைகையில் கேட்டார்.

கேட்பதற்குக் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. என்றாலும், 'இங்கே எலெக்ட்ரானிக் சாமியார் .... என்று .......' என்று இழுத்தேன்.

அவர் சைகையிலேயே எதிர்ப் பக்கத்தில் (குடிசைப் பகுதியின் வலது பக்க மூலை) உள்ள கதவைக் காட்டி, உள்ளே போகும்படி சைகைக் காட்டினார்.

அந்தக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தவுடன் பேராச்சரியம்! வெளி உலகத்திற்கு சற்றும் தொடர்பு இல்லாத பல உபகரணங்கள் அங்கே இருந்தன. அந்த அறையின் ஒரு மூலையில் வடக்கு, தெற்காக ஒரு ஃபெர்ரைட் கட்டில். அந்தக் கட்டில், ஒரு நீண்ட உருளைக்குள் இருந்தது. அந்த உருளைக்கு மேலே, தடித்த காப்பர் கம்பி நெருக்கமாகச் சுற்றப் பட்டிருந்தது.  அந்தக் காப்பர் கம்பியின் ஒரு முனை (வடக்குப் பக்க முனை) குடிசைப் பகுதியின் மேல் பக்கம் சென்றது. மற்ற முனை (தெற்குப் பக்க முனை) மண்ணுக்குள் செலுத்தப் பட்டிருந்தது.   

கட்டிலுக்கு வெகு அருகே ஒரு லாப் டாப் இயக்கிக் கொண்டிருந்த ஒரு தாடிக்காரர், 'வாங்க -------- (என் பெயரைச் சொல்லி). உட்காருங்க. கே டி ஆர் உங்களைப் பற்றி சொல்லியிருந்தார். திரும்பிப் போகும்பொழுது மறக்காமல் உங்கள் மனைவி சொன்ன குக்கர் காஸ்கட் - கடையிலிருந்து வாங்கிகிட்டுப் போயிடுங்க' என்றார்.
          
(இது அவர் இல்லை. ஆனால் அவர் இந்த மாதிரிதான் இருந்தார்.)

எனக்கு என் செவிகளையே நம்ப முடியவில்லை. என் மனைவி இரண்டு நாட்களுக்கு முன்பு சொன்ன காஸ்கட் - எனக்கே ஞாபகம் இல்லை இவருக்கு எப்படி இது தெரிந்தது!

அது மட்டுமா? ஆஸ்திரேலியா இந்தியா மாட்ச் என்ன ஆகும், செமி ஃபைனலில் என்னென்ன அணிகள் ஆடும், எது ஜெயிக்கும்? எல்லாமே சொன்னார். உலகக் கோப்பை வெல்லப் போவது யாரு' என்பதைக் கூட ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுத்தார். சட்ட மன்றத் தேர்தலில் எந்தக் கட்சிப் பெரும்பான்மை பெற்று யார் முதலமைச்சர் ஆவார் என்பதையும் எழுதிக் கொடுத்தார்.

சாமீ - இதை எல்லாம் எங்கள் ப்ளாக் ல வெளியிடலாமா?  உங்கள் பற்றி, உங்கள் இருப்பிடம் பற்றி, தொடர்பு விவரங்கள் எல்லாவற்றையும் வெளியிட ஆவலாக இருக்கிறோம். நீங்கள் உத்தரவு கொடுத்தால் - என்றோம்.

'கொஞ்சம் பொறுங்கள். உலகக் கோப்பை கிரிக்கட் இறுதிப் போட்டி சனிக்கிழமை, இரண்டாம் தேதி நடக்கின்றது அல்லவா? அதில் நான் எழுதிக் கொடுத்த இரண்டு அணிகள் ஆடுகின்றனவா, நான் எழுதிக் கொடுத்துள்ள அணி வெற்றி பெறுகிறதா - என்பதைப் பார்த்து, அது போலவே நடந்தால், அப்பொழுது நீங்கள் முழு விவரம் வெளியிடுங்கள். அதுவரையிலும், நான் எழுதி இருக்கின்ற குறிப்புகளை இந்தக் கவரை உடைத்து நீங்கள் கூடப் பார்க்கக் கூடாது.'

நேற்று இந்தியா செமி ஃபைனலில் ஜெயித்ததும், அவர் கொடுத்த அரை இறுதி கிரிக்கட் - இரண்டாம் போட்டி - கவரை உடைத்து, அவர் எழுதியிருந்தது அப்படியே நூற்றுக்கு நூறு சரியாக இருந்ததைப் பார்த்து எங்கள் எல்லோருக்கும் பேராச்சரியம்!

இப்போ இறுதிப் போட்டி நாளுக்காக நாங்கள் மிகவும் ஆவலாக காத்திருக்கின்றோம். அதுவும் சரியாக இருந்துவிட்டால், சாமியாரின் படம், இருப்பிடம், முழு விவரங்கள் உடனே வெளியிடுவதாக உள்ளோம்.
                                    

16 கருத்துகள்:

  1. அந்த பதிவை வாசித்து விட்டு கருத்து சொல்லட்டுமா?

    பதிலளிநீக்கு
  2. இதென்னங்க- கிரிக்கெட் போட்டியை விட இந்த பதிவை ஆர்வமடைய வைச்சிட்டிங்க. எனக்கு உலக கோப்பைய விட ஆட்சி கோப்பைய யார் கைப்பற்றுவார்கள் என்பது தான் முக்கியம்.

    பதிலளிநீக்கு
  3. ஏப்ரல் பூல் பண்ணப் போறிங்களான்னு ஒரு சந்தேகம் இப்ப திடீர்ன்னு வந்து இருக்கு

    பதிலளிநீக்கு
  4. எப்பிடின்னாலும் நாமதான்ன்னு சொல்லிக்கிறேன் பொதுவா !

    பதிலளிநீக்கு
  5. அவர் கொடுத்த இரண்டு கவர்களில் எழுதி இருப்பது எனக்குத் தெரியும்... அதுவா.

    1) Cricket World Cup Final : எந்த டீமு நெறையா/அதிகமா ரன்கள் அடிக்கறாங்களோ அவங்கதான் ஜெயிப்பாங்க..

    2)TN Assembly Elections : எந்த கட்சிக்கு அதிக எம்.எல்.எ ஆதரவு இருக்குதோ அவங்கதான் ஆட்சி அமைப்பாங்க..

    நாங்கலாம் பொறந்தப்பவே புத்திசாலியாக்கும்.. ஆமா..

    பதிலளிநீக்கு
  6. ம்ம்.. என்னாது.. புதுசா இருக்கு.. ?
    கமேன்ட்லாம் .. மாடரேஷன் பண்ணுறீங்க.. !!

    பதிலளிநீக்கு
  7. எலெக்ட்ரானிக் பிரசன்னமா ?

    இன்ட்ரஸ்டிங்

    விஜய்

    பதிலளிநீக்கு
  8. dubukku dubaakoor ! appdinnu naan sollamaaten ! aanaal solluven ! ithu PITHALAATTAM, any way alivarisai irunthaal saathiyame !

    பதிலளிநீக்கு
  9. முடி தாடி டச்சப் செஞ்சாலும் செஞ்சீங்க, போட்டோல என்னை மாதிரியே இருக்காரே?

    பதிலளிநீக்கு
  10. பூநம் பான்டே பத்தி என்ன சொல்றாரு எ.சாமியார்?

    பதிலளிநீக்கு
  11. ஹெல்லொ எங்கள் ப்ளாக் ஏப்ரில் ஒண்ணா இன்னிக்கு. சரி சரி.

    பதிலளிநீக்கு
  12. makalai April fool seiurathuku evolo kasta pada vendi iruku :).... nan yemara matein, naan matein....

    பதிலளிநீக்கு
  13. என் பின்னூட்டம் எங்க போச்சு?
    ஏப்ரில் ஒண்ணுன்னு சொல்லக் கூடாதா.

    பதிலளிநீக்கு
  14. என்னங்க இது! காதுல பூ சுத்தறதுக்கும் ஒரு அளவு வேண்டாம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!