நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
ஞாயிறு, 30 ஜூன், 2013
சனி, 29 ஜூன், 2013
பாசிட்டிவ் செய்திகள் 23, ஜூன், 2013 முதல் 29, ஜூன் 2013 வரை
எங்கள் B+ செய்திகள்.
- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.
- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
1) ஆகாய தாமரைகளை, ஏரிகளின் நடுவே சென்று எளிதாக அகற்றும் மிதவை இயந்திரத்தை கண்டுபிடித்த, விவசாயி தேவராஜ்: நான், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த விவசாயி.ஈரோட்டின் வெண்டிப்பாளைய நீர்மின் நிலையத்தின் அருகில் உள்ள ஏரியில், ஆகாய தாமரைகள் அதிகம் உள்ளன.
இதை பார்த்து, அங்கு தண்ணீர் இருப்பதை அறிகுறியாகக் கொண்டு, மக்கள் குளிக்கச் செல்வர். ஆகாய தாமரைகள் உள்ள இடத்தில், மேல் பகுதியில் நீரோட்டம் குறைவாகவும், கீழ் பகுதியில் அதிகமாகவும் இருக்கும். இது தெரியாமல் குளிக்க செல்லும் பலர், ஆகாய தாமரையின் வேர்களில் சிக்கி, இறக்கும் சூழ்நிலை தொடர்ந்து ஏற்பட்டது.
கடந்த ஆண்டு மட்டும், ஒன்பது பேர் இறந்தனர். ஆகாய தாமரைகளை அழிக்க, "வேதிக்கொல்லி' மருந்துகளை பயன்படுத்தினால், நீரில் உள்ள உயிரினங்களை பாதிக்கும். "புல்டோசரை' வைத்து அகற்ற முயற்சித்தால், ஏரியின் நடுபகுதிக்கு சென்று அகற்றுவது, மிகவும் சிரமமான காரியம். அப்படியானால், இதற்கு என்ன தான் தீர்வு என, நான் சிந்திக்கும் போது உருவானதே, "கிலன் கிளீனிங் மெஷின்' என்ற, இந்த மிதவை இயந்திரம். படகு வடிவில் அமைக்கப்பட்டுள்ள, இந்த மிதவை இயந்திரத்தில், மூன்று புரொப்பலர்கள் பொருத்தப்பட்டு, டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. தண்ணீரின் மேல் உள்ள ஆகாய தாமரைகளை, பல்சக்கரம் போன்ற கருவியால் வேருடன் பிய்த்து, கண்வேயர் பெல்ட்டுகள் மூலம், 15 டன் கொள்ளள வுள்ள டேங்கில் சேகரிக்கப்பட்டு, லாரிகள் மூலம் வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பல்வேறு முயற்சி மற்றும் தோல்விக்கு பின், இயந்திரத்தில் சிறு சிறு மாற்றம் செய்து, தற்போதைய வடிவம் கிடைத்தது. காவிரி ஆற்றில், சோதனை முறையிலான வெள்ளோட்டத்தை வெற்றிகரமாக நடத்திய பின், பொதுப்பணித்துறை அமைச்சரிடம் என் கண்டுபிடிப்பை விளக்கினேன். தற்போது, தமிழக அரசின் உத்தரவை அடுத்து, வேளச்சேரி ஏரியில் முதல் கட்டமாக ஆகாய தாமரைகளை அகற்றும் பணியில், நான் கண்டுபிடித்த இயந்திரம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதை தயாரிக்க, 25 லட்சம் செலவாகியது.
2) முன்பு தினமலரில் வெளியான உதவிக் கட்டுரையைப் படித்து நல்ல உள்ளங்கள் உதவிய கதையைச் சொல்லியிருக்கிறது தினமலர். கோகுல கண்ணனின் தாயார் பெயர் கே.பிருந்தா தேவி
அன்றாடம் வயிற்றுப்பாட்டிற்கே அல்லல்பட்டாலும், தான் பெற்ற பிள்ளைகளை படிக்கவைத்து ஆளாக்க நினைக்கும் கனவுகளுடன் வளம்வரும் ஆயிரக்கணக்கான ஏழை குடும்பத்து தாய்மார்களின் பிரதிநிதி இவர்.
தற்போது சென்னை திநகர், முத்துரங்கன் சாலை, வரதராஜன் தெரு, கதவிலக்கம் 26ல் குடியிருக்கும் இவர் படிப்பதில் ஆர்வமாக இருந்தாலும் சூழ்நிலை காரணமாக சென்னையில் உள்ள ஒரு ஓட்டல் தொழிலாளிக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டவர்.
குடிசை வீட்டில் அன்புக்கு குறைவில்லாமல் குடும்பம் நடத்தியவருக்கு மூன்று குழந்தைகள், தனது குழந்தைகளை நன்கு படிக்கவைக்கவேண்டும் என்பதுதான் இவரது வாழ்நாளின் லட்சியம், ஆசை எல்லாம். இதற்காக தனது கணவரின் ஊதியம் (மாதம் 3 ஆயிரம் ரூபாய்) போதாது என்பதால் நாலைந்து வீடுகளில் வேலை செய்துவரும் சம்பாத்தியம் மூலம் பிள்ளைகளை படிக்க வைக்கிறார், பெற்றவளின் சிரமம்பார்த்து பிள்ளைகளும் நன்கு படித்துவருகின்றனர்.
இதில் மூத்தவன் கோகுல் கடந்த ஆண்டு பிளஸ் டூவில் 938 மார்க்குகள் வாங்கியிருந்தான், கவுன்சிலிங்கில் இவன் கேட்ட சென்னை குன்றத்தூர் ஸ்ரீமுத்துக்குமரன் என்ஜீனியரிங் கல்லூரியே கிடைத்துவிட்டது.
இவர் நிலையைச் சொல்லி கேட்ட உதவிக்கு வந்த உதவிகளைப் பட்டியலிட்டு விட்டு,
"இப்போது இரண்டாம் வருட படிப்பு துவங்க உள்ளது இரண்டாம் வருட படிப்பிற்கான கட்டணம் ரூபாய் ஐம்பத்து நான்காயிரத்து நானூற்று ஐம்பது ரூபாயாகும், இந்த வருடத்திற்காக நான் எனது பங்காக என்னால் முடிந்த பணத்தை கொடுத்து கணக்கை துவங்கியுள்ளேன் வாசகர்கள் தங்களால் முடிந்ததை வழங்கலாம்.மாணவன் கோகுல கண்ணனின் தாயார் கே.பிருந்தாதேவியின் வங்கி கணக்கிற்கே தங்களால் இயன்ற பணத்தை அனுப்பலாம். கே.பிருந்தாதேவி, கணக்கு எண்:1278 155 0000 94707, கரூர் வைஸ்யா பாங்க், அசோக்நகர் கிளை, சென்னை-83. வங்கியின் ஐஎப்எஸ்சி கோட் எண்: கேவிபிஎல்0001278.
பிருந்தாதேவியிடம் பேசுவதற்கான ஃபோன் எண்:9444073157. உங்களால் ஒரு ஏழை மாணவன் தானும் படித்து தன் தம்பிகளையும் படிக்கவைப்பான் என்ற நம்பிக்கை வந்துள்ளது மேலும் ,ஒரு ஏழை, எளிய தாயின் கனவும் நனவாகிக்கொண்டு இருக்கிறது. நன்றி வாசகர்களே. நன்றி!" என்கிறது தினமலர்.
3) சிறு வயதிலேயே போலியோ தாக்குதலினால் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட, ஆம்பூர் அருகே பாலூர் கிராமத்தைச் சேர்ந்த, ரவி என்ற இளைஞர் தனது காரை மாற்றுத் திறனாளிகள் இயக்கும் வகையில் வடிவமைத்திருக்கிறார்.
இரு சக்கர வாகனங்களை மட்டுமே மாற்றுத் திறனாளிகள் உபயோகிக்கும் வகையில் அமைந்து, (ஸ்கூட்டி, கூடுதல் சக்கரங்களுடன்) அனுமதியளிக்கப் பட்டிருக்கும் நிலையில், கால்களை உபயோகப் படுத்தாமல், கைகளை உபயோகப் படுத்தியே கார் ஓட்டும் வகையில், சென்னை மாதவரத்தில் இருக்கும், இது போன்று ஏற்கெனவே முயற்சி செய்திருக்கும்,சங்கர் என்பவர் உதவியோடு கோயம்புத்தூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் தனது காரை மாற்றியமைத்துள்ளாராம். பிரேக் பிடிக்கும்போது கிளட்சை வேலை செய்ய வைக்கவும், கியர் மாற்றும்போதும் கிளட்ச் தானாக வேலை செய்ய வைக்கவும், ஒரு சென்ஸார் ஆக்சிலேட்டர் உள்ள இடத்தில் வைக்கப் பட்டுள்ளதாம்.
இடது கை பக்கத்தில் ஆக்சிலேட்டர், பிரேக், கிளட்ச், கியர் எல்லாவற்றையும் இயக்கும்படி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாம். கார் லைட்டை டிம், டிப் செய்ய, மழை பெய்யும்போது வைப்ரேட்டரை இயக்க எல்லாம் வலது கை பக்கம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாம். இது மாதிரி மாறுதல் செய்யப் பட்ட வண்டிகளுக்கு வாங்க வேண்டிய அங்கீகாரத்தையும் முறையாக வாங்கியுள்ளாராம். இல்லாவிட்டால் ரோட் டேக்ஸ் கட்ட முடியாது, இன்சுரன்ஸ் வாங்க முடியாது. ஓட்டுனர் உரிமையும் வாங்கியுள்ளார்.
இந்த வண்டியை வைத்து சென்னையிலிருந்து தில்லி வரை நிறுத்தாமல் ஓட்டி கின்னஸ் சாதனை செய்யவும் திட்டமிட்டுள்ளாராம். அதனால் இன்னும் பலருக்கு இதுமாதிரி வண்டி வடிவமைக்க முடியும் என்ற விழிப்புணர்வு ஏற்படும் என்ற காரணம்தான். இப்போதே ஐம்பது பேர்கள், கிட்டத்தட்ட, இவரிடம் இதுமாதிரி, அவர்கள் வண்டியை மாற்றியமைத்துக்கொள்ள, யோசனை கேட்டிருப்பதாகச் சொல்கிறார். (தினமணி-ஞாயிறு மலர்)
4) கார்த்திக் சாநே. 10ம் வகுப்பில் 500 க்கு 479. CBSE 12ம் வகுப்பில் 96 சதவீதம் மதிப்பெண்கள். ஐ ஐ டியில் பொறியியல் படிக்க ஆசைப் பட்டு, விண்ணப்பிக்க இவரது விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டது. காரணம் இவர் பார்வையில்லாத மாற்றுத் திறனாளி.
ஆனால் அவருடைய படிப்பு தங்குமிடம், உணவு, என எல்லாச் செலவுகளக்கும் ஸ்காலர்ஷிப் தந்து அவரைச் சேர்த்துக் கொண்டிருக்கிறது, அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம். டெல்லியின் மத்தியதரக் குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு இதில் தாங்கமுடியாத மகிழ்ச்சி என்கிறது ஞாயிறு தினமணிக் கதிர்.
5) கனடா விஞ்ஞானி ஒருவர், ஜெர்மன் விஞ்ஞானியுடன் இணைந்து உலகின் முதல் 3D, செயற்கை மூளையை கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளனர்.Montreal Neurological Institute at McGill University in Montreal, என்ற பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் Dr. Alan Evans என்ற விஞ்ஞானி, ஜெர்மன் விஞ்ஞானி ஒருவருடன் இணைந்து செயற்கை மூளை ஒன்றை 3D வடிவில் அமைத்துள்ளார்.
இந்த மூளை சாதாரண மனித மூளையை விட 250,000 மடங்கு அதிக நினைவுத்திறனை வைத்துக் கொள்ளும் சக்தியுடையது.65 வயது உடைய இறந்த பெண்மணியின் மூளையில் இருந்து உருவாக்கப்பட்ட இந்த செயற்கை மூளையில் 7400 சிறிய துண்டுகள் உள்ளது.
ஒவ்வொரு துண்டும் மனிதனின் முடியைவிட பாதியளவு பருமன் உடையது. எனவே இதை மைக்ரோஸ்ப் உதவியுடன் மட்டுமே பார்க்க முடியும்.80 பில்லியன் நியூரான்கள் இதில் அடங்கியுள்ளது.இந்த செயற்கை மூளையை உருவாக்க இவர்களுக்கு 10 ஆண்டுகள் ஆகியது.இந்த மூளையானது தொடர்ச்சியாக 1000 மணிநேரம் நடந்த நிகழ்வுகளை நினைவு வைத்துக்கொள்ளும் திறன் உடையது. (கூகிள் ப்ளஸ் - தமிழ்காரன் பக்கம்)
6) ஆட்டோவில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய நியாயமான 25 ரூபாய் கட்டணத்தைக் கொடுத்ததுண்டா? ஆட்டோவில் ஏறியவுடன் போக வேண்டிய இடத்தை மட்டும் கேட்டு, மீட்டரை ஆன் செய்யும் ஆட்டோ டிரைவரைப் பார்த்த அனுபவம் உண்டா? நம்மில் யாரிடம் இந்தக் கேள்விகளைக் கேட்டாலும், இதெல்லாம் நடக்கிற வேலையா என்றுதான் கடுப்புடன் பார்ப்போம். அரிதாக சிலருக்கு மட்டும் சென்னையில் இந்த அனுபவம் வாய்த்திருக்கிறது. வெகுவிரைவில் அனைவருக்கும் சாத்தியமாகப் போகிறது.
வாடகை டாக்ஸி, கார் போன்று, ‘நம்ம ஆட்டோ’ என்ற பெயரில் புதிய கம்பெனி ஒன்று சென்ற மாதம் 17-ஆம் தேதி சென்னையில் துவக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணம், எலெக்ட்ரானிக் மீட்டர், இறங்கும்போது எவ்வளவு தூரம் பயணம் செய்தீர்கள், அதற்கான கட்டணம் போன்ற விவரங்களைச் சொல்லும் அச்சிடப்பட்ட பில் என்று இந்த ஆட்டோக்களில் கிடைக்கும். கேட்கும்போதே அப்பாடா என்றிருக்கிறதா?
முதல் கட்டமாக 17 ஆட்டோக்கள்தான் சென்னையில் ஓடுகின்றன. வரும் ஜூன் மாததிற்குள் சென்னை முழுவதும் 350 நம்ம ஆட்டோ ஓட்டத் திட்டமிட்டிருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த முயற்சி, பொது மக்கள் ஆட்டோவைப் பயன்படுத்துவதில் பெரிய மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும்" என்கிறார் கம்பெனியின் நிர்வாக மேலாளர் அப்துல்லா.
நம்ம ஆட்டோ என்ற பெயரில் ஆட்டோவைப் பார்த்தவுடன் இவர்களை கடுமையாக எதிர்த்த மற்ற ஆட்டோ டிரைவர்கள், மக்களிடம் நம்ம ஆட்டோவிற்கு இருக்கும் வரவேற்பையும் நம்ம ஆட்டோ டிரைவர்களுக்கு கம்பெனி தரும் சம்பளத்தையும் பார்த்து, நாமும் நம்ம ஆட்டோ கம்பெனியில் சேர்ந்து விடலாமா என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். நம்ம ஆட்டோ டிரைவர்களைப் பார்த்தவுடன், எப்படி இவர்கள் செயல்படுகிறார்கள் என்ற விவரத்தை ஆர்வமாகக் கேட்டு எல்லோரும் பின்பற்ற வேண்டிய நல்ல விஷயமாக இருக்கிறதே என்கிறார்கள், சக ஆட்டோ டிரைவர்கள்.
எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்தப்பட்டுள்ள நம்ம ஆட்டோவில் முதல் 2 கிலோ மீட்டருக்கு குறைந்தபட்சக் கட்டணமாக 25 ரூபாய்.அதன்பின் ஒவ்வொரு கூடுதல் கி.மீ.க்கும் 10 ரூபாய் நிர்ணயித்து இருக்கிறார்கள். இந்தக் கட்டணத்தில் 2 மணி நேரத்திலேயே 650 ரூபாய் சம்பாதிக்க முடிவதாக நம்ம ஆட்டோ டிரைவர்கள் கூறுகிறார்கள். நியாயமான கட்டணத்தை நிர்ணயித்து, ஒரு நாளைக்கு 4 மணி நேரம் வேலை செய்தாலே கணிசமான லாபத்தைப் பெற முடிகிறது. இதுபோன்ற மீட்டர் பொருத்தப்பட்ட ஆட்டோக்களில், மேல்புறத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் நம்ம ஆட்டோ என்று எழுதப்பட்டு இருக்கும். பார்த்து ஏறுங்க!
தொடர்புக்கு : 044 65554040 /65552020 (முக நூல்)
7) இதுபோன்ற கண்டுபிடிப்புகள் பின்னர் வருகின்றனவா தெரியாது எந்த அளவு நடைமுறைச் சாத்தியம் என்றும் தெரியாது. எனினும் மாணவர்களின் அந்த ஊக்கம்தான் பாசிட்டிவ்!
ஆற்றைக் கடந்து செல்ல, மிதக்கும் சைக்கிளை கண்டுபிடித்துள்ள கல்லூரி மாணவன், சூர்யா: நான், வேதாரண்யம் மாவட்டத்தின், செம்போடையில் உள்ள, ஆர்.வீ., பாலிடெக்னிக் கல்லூரியில், இயந்திரவியல் இறுதிஆண்டு படிக்கிறேன். ஆற்றங்கரையில் அமைந்துள்ள, பல தமிழக கிராமங்களில், ஆற்றைக் கடந்து செல்ல போதுமான வசதிகள் இன்றி, பல கி.மீ., தூரம், சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மழைக் காலங்களில், இவர்கள் படும் துன்பங்களை விவரிக்க முடியாது. ஆற்றில், நீரோட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் கடக்க முயன்று, அடித்துச் செல்லப்பட்டவர்களும் அதிகம். இப்பிரச்னைக்குத் தீர்வு காண, நான் கண்டுபிடித்ததே, இந்த மிதவை சைக்கிள். லாரியின், "டயர் டியூபை' அரை வட்ட வடிவில் இரண்டாகப் பிரித்து, அதில் காற்று நிரப்பி, சைக்கிளின் முன் டயரில் ஒன்றும், பின் டயரில் ஒன்றுமாக இணைத்தேன். இரும்பு தகடுகளால் செய்யப்பட்ட, சிறப்பு விசிறியை, இரு புறத்திலும் இணைத்தேன். காற்று நிரப்பப்பட்ட டியூபால், சைக்கிளுக்கு மிதக்கும் தன்மை கிடைக்கும். பெடலை அழுத்தும் போது, பின் சக்கரம் சுற்ற, விசிறியும் சேர்ந்தே சுற்றப்பட்டு, முன்னோக்கி செல்கிறது. மற்ற சைக்கிள்கள் போல் இல்லாமல் சக்கரங்களில், "புஷ் பேரிங்' பொருத்தப்பட்டு உள்ள தால், பெடலை மெதுவாக அழுத்தினாலே மணிக்கு, 15 முதல், 20 கி.மீ., வேகத்தில், தண்ணீரில் செல்ல முடியும். இந்த சைக்கிளில் பயன்படுத்தப்பட்டுள்ள அனைத்து பொருட்களுமே, உள்ளூர் சந்தைகளில் எளிதில் கிடைக்கக் கூடிய, குறைந்த விலை பொருட்களே. சாலையில் ஓட்டும் சைக்கிளை, மிதக்கும் முறைக்கு மாற்ற, 1,500 ரூபாய் செலவாகிறது. மிதக்கும் அமைப்பை எளிதில் மாற்றி, "டூ இன் ஒன்' போன்று, சாதாரண சைக்கிளாகவும் பயன்படுத்தலாம். சிறு மீனவர்களால், படகு வாங்க முடியாது. எனவே, ஏரி, குளம், ஆறு போன்றவற்றில், மீன் பிடிப்பதற்கு, மிதவை சைக்கிளை படகாகப் பயன்படுத்தலாம். சைக்கிளில் இணைக்கப்படும் மொத்த எடை, 7.5 கிலோ என்பதால், சைக்கிள் தண்ணீரில் மூழ்கிவிடும், என்ற பேச்சுக்கே இடமில்லை. தொடர்புக்கு: 96888 80213. (தினமலர்)
8) பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு மத்திய பிரதேச மாநிலத்தில் கவுரவ மேயர் பதவி அளிக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு நாள் மேயராகப் போகும் அம்மாணவியின் பெயர் சுனந்தா கயர்வர். இவர் மத்திய பிரதேச மாநிலம் உக்ஜைன் மாவட்டம் நக்தா என்ற நகரைச் சேர்ந்தவர். 17 வயதான சுனந்தா பிளஸ் 2 தேர்வில் 91.8 சதவீத மதிப்பெண்கள் எடுத்து நக்தா நகரில் முதல் மாணவியாக வந்துள்ளார்.
இதனால், சுனந்தாவை கவுரவிக்கும் பொருட்டு அவருக்கு ஒரு நாள் மேயர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நகரின் மேயர் ஷோபா யாதவ் அறிவித்துள்ளார். மேலும், மாணவ, மாணவிகளை கல்வியின் மேல் ஆர்வம் கொள்ளச் செய்யும் திட்டத்தினாலும் இக்கவுரவ மேயர் பதவி வழங்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
வரும் 28-ந்தேதி செவ்வாய்க்கிழமை பதவியேற்க இருக்கும் மாணவி சுனந்தா அன்று காலை முதல் மாலை வரை மேயர் இருக்கையில் அமர்ந்து மேயர் பணிகளை கவனிப்பாராம். அரசிடம் முறைப்படி அனுமதி பெற்றே, இந்த ஒருநாள் மேயர் திட்ட சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக மேயர் ஷோபா யாதவ் அறிவித்துள்ளார்.
25-ந்தேதி மேயர் பதவியில் அமரும் மாணவி சுனந்தா அன்றைய தினம் நகரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ரூ.40 லட்சம் செலவில் சாலை அமைக்கும் திட்டத்தில் கையெழுத்திடுகிறார்.
தந்தை தொழிற்சாலையில் பணிபுரிகிறார். தாய் அங்கன்வாடி ஊழியர். சுனந்தாவின் உடன் பிறந்தோர் மொத்தம் 4 பேர். தான் என்ஜினீயராகி குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதே நோக்கம் என்று சுனந்தா தெரிவித்தார். (தினமலர்)
-9) "கூகுள்' இணையதளம் நடத்திய, உலக அளவிலான, "அறிவியல் போட்டி 2013' ஆய்வுக் கட்டுரைப் போட்டியில், சிதம்பரம் மாணவி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
கூகுள் இணையதள நிறுவனம், மாணவர்களிடம், அறிவியல் படைப்பாற்றலை வளர்க்கும்
வகையில், உலக அளவிலான, அறிவியல் போட்டி, 2013 ஐ, நடத்தியது. இதில்,
மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டு, அதன் முடிவுகளை சுருக்கமாக எழுதி, ஆய்வு
கட்டுரையாக சமர்ப்பிக்க வேண்டும்.
இதில், 120 நாடுகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர், 1,000க்கும் மேற்பட்டோர்,
ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இதில், 13-14 வயது பிரிவில் பங்கேற்ற,
சிதம்பரம் மாணவி சாம்பவி, நுண் கிருமிகளை பயன்படுத்தி, தொழிற்சாலைக்
கழிவுகளில் இருந்து, மின்சாரம் தயாரிக்கும் உபகரணத்தை வடிவமைத்து, சிறிய
அளவில் மின்சாரம் தயாரித்து, அதன் அடிப்படையில், ஆய்வுக் கட்டுரை
சமர்ப்பித்தார்.
இந்த ஆய்வை மேம்படுத்தினால், பெரிய அளவில்
மின்சாரம் தயாரிக்க, சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும், தொழிற்சாலை கழிவுநீரை
பயன்படுத்துவதன் மூலம், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும் எனவும்,
தெரிவித்துள்ளார். கூகுள் நிறுவனம், 90 பேரின் ஆய்வு கட்டுரைகளை தேர்வு
செய்துள்ளது.
இதில், சிதம்பரம் மாணவி சாம்பவியின் கட்டுரையும்,
தேர்வு செய்யப்பட்டுள்ளது. இக்கட்டுரைகளில், அமெரிக்காவின் இயற்கை
பதிப்புக்குழு, 15 வெற்றியாளர்களை தேர்வு செய்துள்ளது. இதிலும், மாணவி
சாம்பவியின் ஆய்வுக் கட்டுரை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
உலக
அளவில், வெற்றி பெற்றுள்ள, 14 வயதுடையற மாணவி சாம்பவி, கடலூர் மாவட்டம்,
சிதம்பரத்தைச் சேர்ந்த, சம்பத் - முல்லை தம்பதியரின் மகளாவார். இவரது
தந்தை, அண்ணாமலை பல்கலையில், பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாய்,
அதே பல்கலையில், பேராசிரியராக பணிபுரிகிறார். சாம்பவி, காஞ்சிபுரம் மகரிஷி
பன்னாட்டு உறைவிடப் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார். (தினமலர்)
9) உத்தரகண்டில் சுற்றுலா மேற்கொண்ட மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 2000 பேர் கொண்ட குழு ஒன்று பெருவெள்ளத்தில் மாட்டி, பாதைகள் சிதைந்து எங்கும் செல்ல முடியாத நிலையில் மாட்டிக் கொள்ள, சுற்றுலாப் பயணிகளில் ஒருவரான ஜெயெஷ் பாண்டியா என்ற இளைஞர், சமயோசிதமாகச் செயல் பட்டு, தாங்கள் மாட்டிக் கொண்டிருக்கும் இடத்தை ஒரு வெள்ளைத் தாளில் வரைந்து, தனது அலைபேசியில் அதைப் படமெடுத்து, உத்தர்கண்ட் தலைநகர் டேராடூனில் இருந்த தனது நண்பர் ஒருவருக்கு அனுப்ப, அவர் காவல்துறை ஐ ஜி ராம்சிங் மீனாவிடம் ஜன்கில்சாட்டிப் பகுதியில் சுமார் 2,000 பேர் மாட்டிக் கொண்டிருப்பதைச் சொல்ல, அவர் தக்க நடவடிக்கைகளை உடனே எடுத்து, மீட்புக்குழுவை அனுப்பி, எல்லோரையும் காப்பாற்றினார்கள். ஜெயெஷ் பாண்டியாவின் சமயோசிதம் பாசிட்டிவ். (தினமணி)வெள்ளி, 28 ஜூன், 2013
புதன், 26 ஜூன், 2013
உள்பெட்டியிலிருந்து 62013
தத்துவம் நம்பர்........
- நிலையில்லா நம் வாழ்வில், எதையும் நிரந்தரமாக அடைய ஆசைப்படுகிறோம்!
- தற்காலிகக் காரணங்களுக்காக நிரந்தர உறவுகள் உடைவதில்லை!
- உங்கள் சந்தோஷத்தை மனம் விட்டுச் சொல்லுங்கள். உங்கள் கஷ்டத்தை உங்கள் மனதில் உள்ளவரிடம் சொல்லுங்கள்.
- கனவுக்கு முயற்சியில்லா உறக்கம் தேவை. இலக்கை அடைய உறக்கமில்லா முயற்சி தேவை.
- நீங்கள் ஒரு நல்ல சந்தோஷமான நாளைப் பெற வேண்டும் என்பதே என் விருப்பம்.
ஏனெனில் உங்கள் சந்தோஷம் உங்களைச் சேர்ந்த எல்லோரையும் சந்தோஷத்தில்
வைக்குமே...
- மனிதர்கள் நேசிக்கப்படவும், பொருள்கள் உபயோகிக்கப்படவும் படைக்கப்படும் இவ்வுலகில் அப்படியே மாற்றி நடப்பது விந்தைதானே?
- நீங்கள் ரோஜாவைப் போல மலர்ந்து மணம் பரப்ப விரும்பினால் முட்களுடன் அனுசரித்து வாழும் கலையைப் பயில வேண்டும்.
மாணவ சக்தி!
15 மதிப்பெண் கேள்வியாக வந்திருந்தது "எறும்பை எப்படிக் கொல்வது?" என்ற கேள்வி. மாணவன் எழுதினான்.
சர்க்கரையுடன்
மிளகாய்ப் பொடியைக் கலக்கவும். எறும்பு வசிக்கும் இடத்துக்கு அருகில் அதை
வைக்கவும். அதை அந்த எறும்பு சாப்பிட்டதும் தண்ணீரைத் தேடி அலையும்.
தண்ணீர்த் தொட்டி அருகே அதை விடவும். அது குடிக்கப் போகும்போது அதை அந்தத்
தண்ணீர்த் தொட்டிக்குள் தள்ளி விட்டு விடவும். நனைந்த எறும்பு தன்னைக் காய
வைத்துக் கொள்ள நெருப்பின் அருகே செல்லும்போது அதை நெருப்புக்குள் தள்ளி
விட்டு விடவும். உள்ளே ஒரு வெடிகுண்டையும் போடவும். காயம் பட்ட எறும்பை
ஆஸ்பத்திரியில் சேர்க்கவும். அங்கு சிகிச்சையில் இருக்கும் எறும்பின்
'ஆக்சிஜன் மாஸ்க்'கைக் கழற்றி விட்டு விடவும். எறும்பு செத்து விடும்.
(மாணவர்களுடன் விளையாடாதீர்கள்! நாங்கள் 15 மதிப்பெண்ணுக்கும் எறும்பைக் கொல்வோம்)
என்ன கஷ்டம்டா சாமி!
அன்பைச் சொல்லிவிட ஒரு நொடி போதும்; ஆனால் அதை நிரூபிக்க ஒரு ஆயுள் வேண்டும்!
பொய்தானே....!
மனசுக்கு ரொம்பப் பிடித்தவர்களிடமிருந்து மெசேஜ் / மெயில் வந்தால் அதை அவர்கள் குரலிலேயே நம் மனம் வாசிக்கும்!!
அடச்சே.... ரொம்பப் பழைய ஜோக்குங்க....!
ஒரு ப்ரெஷர் குக்கர் 15 வது மாடியிலிருந்து விழுந்தும் ஒன்றும் ஆகவில்லை. ஏன் தெரியுமா? அது பட்டர்ஃப்ளை குக்கர்.
அப்படியே அசத்திடுவோம்ல.....
யாராவது என்னை 'உங்கள் வாழ்வில் உங்களுக்கு மிக முக்கியமானவர் யார்?' என்று
கேட்டால் 'யார் என்னை அடுத்தவர்களுக்காகத் தவிர்க்காமல் இருக்கிறாரோ
அவர்தான்' என்று சொல்வேன்!
ஏற்கெனவே சொல்லியாச்சோ...
ஆழமான அன்பு வைத்திருப்பவர்களால்தான் அதிகமான வலியும் ஏற்படுகிறது.
கவித...கவித..
1) காற்றுக்கும்
மாணவனுக்கும் ஒரே குணம்!
படிக்கப்படாமலேயே
புத்தகத்தின் பக்கங்கள்
புரள்கின்றன...
2) இரண்டு மிருகங்கள்
எப்போதும்
மனதில்
ஒன்றுக்கொன்று
முட்டிக் கொண்டே இருக்கின்றன.
நல்லது ஒன்று, தீயது ஒன்று!
எது ஜெயிக்கும்?
எதற்கு நாம்
உண(ர்)வூட்டி வளர்க்கிறோமோ
அதுதான்!
மழலை இன்பம்
அம்மா : "கண்ணா... அப்பாவைக் கூப்பிடு"
குழந்தை : "அப்பா...இங்கே வாடா"
அம்மா : "கண்ணா... அப்பாவை மரியாதையாக் கூப்பிடணும்"
குழந்தை : "அப்பா... இங்கே மரியாதையா வாடா..."
தத்துபித்துவம்
உங்களையே நீங்கள் அணைத்துக் கொள்ள முடியுமா? உங்கள் தோளில் நீங்களே சாய்ந்து அழ முடியுமா? வாழ்க்கை என்பது ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு வாழ்வதுதான்!
நாம் நமது தோற்றத்தைப் பற்றி மிகவும் கவலைப் படுகிறோம். உண்மை என்னவென்றால் நம்மைப் பிடிக்காதவர்களுக்கும் அது தேவை இல்லை. நம்மைப் பிடித்தவர்களுக்கும் அது தேவை இல்லை!
திங்கள், 24 ஜூன், 2013
அலேக் அனுபவங்கள் 21 :: சின்ன காம்பஸ், பெரிய காம்பஸ்!
அசோக் லேலண்டில், ஆராய்ச்சி & அபிவிருத்திப் பிரிவில், ஒரு வரைவு மனிதனாக (டிராப்ட்ஸ்மேன்) பணியாற்றிய காலம். ('உனக்கு டிராப்ட்ஸ்மேன் என்கிற பதம் சரியில்லை. உனக்கு டிராப்ட்ஸ்பாய் என்பதுதான் சரியான டெசிக்னேஷன் என்று என்னை என் நண்பன் வி. பாஸ்கர் அடிக்கடி கிண்டல் செய்வதுண்டு!)
பக்கத்து வரைவு மேசை/ வரைவுப் பலகையில் பணியாற்றியவர் பெயர் சி.வி. தயாளன். அந்தக் காலத்து ஆர்மி வண்டியில், (4X4 Model) பயன்படுத்தப் பட்ட பல பாகங்களை படம் வரைந்து அதற்கான விவரங்களை அட்டவணை (specifications) இட்டவர் அவர். அந்த வண்டியின் முன் அச்சு பாகங்கள் எல்லாமே அவருக்கு அத்துப்படி.
அவர் பல வருடங்களாக அசோக் லேலண்டில் பணியாற்றி வருபவர் என்பதால், பல்வேறு டிப்பார்ட்மெண்ட் நண்பர்கள் அவரைத் தேடி வருவதுண்டு. சில சமயங்களில், அவரைத் தேடி வருபவர்கள், அவரின் வேலைக்கு இடையூறாக ஏதேனும் பேசிக் கொண்டிருப்பார்கள். அந்த நேரத்தில், அவர்களை, தவிர்க்க இயலாது திண்டாடுவார், அவர்.
நான் அப்பொழுது பணியாற்றிக் கொண்டிருந்தது, மெட்ரிகேஷன், சஜஷன் ஸ்கீம், ஸ்டான்டார்டைசேஷன் - என்று பல தலைப்புகளில். சஜஷன் ஸ்கீம் சம்பந்தமாக, என்னைக் காணவும் பல வெளி டிபார்ட்மெண்ட் ஆட்கள் வருவார்கள். என்னுடைய வேலையிலும் வருகின்ற விசிட்டர்களால் தாமதம் ஏற்படும்.
வெளியாட்கள் தொந்தரவுகளைத் தவிர்க்க நாங்கள் இருவரும் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டோம்.
தவிர்க்கப்பட வேண்டிய இம்சை அரசர்கள், எங்கள் வரைவு மேஜைக்கு அருகில் வந்து, வேலையை செய்யவிடாமல் போர் அடித்துக் கொண்டிருந்தால், யாருக்கு இம்சையோ, அவர், எங்களில் மற்றவரிடம், "சின்ன காம்பஸ் கொடு" என்று கேட்கவேண்டும். உதாரணத்திற்கு, அவர் இம்சை அரசனால் பாதிக்கப் பட்டு, திணறிக் கொண்டிருந்தால், அவர் என்னிடம் வந்து, சத்தமாக, "கௌதமன், சின்னக் காம்பஸ் கொடு" என்று கேட்க வேண்டும். நான் உடனடியாக அதை அவருக்குக் கொடுத்து விட்டு, சற்று நேரம் கழித்து, கொஞ்சம் வெளியே உலா போவது போல - அல்லது தொலைபேசி மேஜை அருகே சென்று, தொலைபேசியை எடுத்து, சற்று நேரம் கேட்டுவிட்டு (கேட்பது போல நடித்து) "தயாளன் - போன் கால் ஃபார் யூ" என்று கத்தி சொல்லி, அகன்று விடுவேன். அவர் உடனே ஓடி வந்து போனில் சற்று நேரம் கேட்பது போல நடித்து, "இதோ வருகிறேன் சார்!" என்று பய பக்தியுடன் சொல்லி போனை வைத்துவிட்டு, அவருடைய பாஸ் இருக்கும் அறைப் பக்கம் பார்த்து வேகமாக நடப்பார். நன்றாக நடிப்பார்.
வந்திருக்கும் இம்சை, சாதாரணமாக இந்தக் கட்டத்திலேயே வாபஸ் ஆகி வெளியே சென்றுவிடுவார்கள்.
அப்படியும் அசையாமல் அவர் மேஜைக்கு அருகே இம்சை நின்று கொண்டிருந்தால், நான், அந்த இம்சையிடம், "அவரு பாஸ் கூப்பிட்டிருக்காரு. பாஸ் ரொம்பக் கோபமா இருக்காரு. அது அவரு குரலிலேயே தெரியுது. அவர் திட்டு வாங்கிகிட்டு திரும்ப வரும்போது நீங்க இங்கே இருக்காதீங்க. அனேகமா பாஸ் அவர் கூட சேர்ந்து இங்கே வந்து, படப் பலகையில் இருக்கின்ற படம் குறித்து விவாதிப்பார்கள். இந்த சமயத்தில், நீஙகள் இங்கே இருந்தால், உங்க நண்பருக்கு மிகவும் இக்கட்டான நிலைமை ஏற்படும். ஆகவே சீக்கிரமாக சென்றுவிடுங்கள். பிறகு வந்து பாருங்கள்" என்று சொல்லி அனுப்பிவிடுவேன்.
நான் தயாளனிடம் 'சின்ன காம்பஸ்' கேட்டாலும் இந்த நாடகங்கள் அரங்கேறும்; நான் இம்சையிலிருந்து காப்பாற்றப் படுவேன்!
இப்படியாக எங்கள் நடிப்புத் திறமையைக் காட்டி நாங்கள் ஒருவரையொருவர் காப்பாற்றி வந்த நாட்களில் ஒருநாள் ......
"கௌதமன், அர்ஜண்டா சின்ன காம்பஸ் கொடு" என்று பரபரத்தார், தயாளன். அவருடைய மேஜை அருகே யாரும் இல்லை. 'சரி மனிதர் உண்மையிலேயே கேட்கிறார்' என்று நினைத்து, நான் அவரிடம் சின்ன காம்பஸ் கொடுத்துவிட்டு, என் வேலையில் ஆழ்ந்துவிட்டேன்.
சற்று நேரம் கழித்து, மீண்டும் தயாளன். "கௌதமன், பெரிய காம்பஸ் கொடு." கொடுத்தேன்.
சற்று நேரம் கழித்து மீண்டும் அவர். என்னருகே வந்து, "கௌதமன் சின்ன காம்பஸ் கொடு." நான் உடனே "அது உங்களிடம்தானே இருக்கு?" என்று சொன்னேன். அவர், "ஆமாம், ஆமாம். என் 'கிட்டே'தான் இருக்கு. போர்டு கிட்டே வா - ஒரு சந்தேகம்" என்றார்.
சென்று பார்த்தால், வழக்கமாக மேஜை அருகே நின்று போரடிக்கின்ற இம்சை ஒன்று, தயாளனின் டிராயிங் போர்டு பக்கத்தில் ஒரு ஸ்டூலில் அமர்ந்துகொண்டு இருந்தார். அப்போதான் எனக்கு தயாளன் ஏன் இவ்வளவு பதட்டப்பட்டார் என்று தெரிந்தது. அவரை இம்சையிலிருந்து விடுவிக்க எண்ணி, தொலைபேசிகள் இருக்கின்ற மேஜையருகே சென்றேன். நான் அந்த மேஜையருகே சென்றபோது, சரியாக உள்(தொலை)பேசி அடிக்க ஆரம்பித்தது. எடுத்து, "ஹலோ?" என்றேன்.
மறுமுனையில் பேசியவர், தயாளனின் பாஸ். "ஹலோ தயாளனை உடனே வந்து என்னை பார்க்கச் சொல்லு." என்றார், வைத்துவிட்டார்.
நான் உடனே உரத்த குரலில், "தயாளன், கபீர் கால்ஸ் யூ" என்று சொல்லி, என்னுடைய இடத்திற்கு வந்துவிட்டேன். 'அப்பா - இன்று ஒரு நாளாவது உண்மையை உரைத்தோமே!' என்று மனதில் ஒரு திருப்தியும் வந்தது. நான் சொல்வதற்காகவே காத்திருந்தது போல தயாளன் அவசரம் அவசரமாக ஓடினார்.
வந்து உட்கார்ந்திருந்த இம்சை நபரும் ஒருவாறு நிலைமையுணர்ந்து இடத்தை விட்டு அகன்றார்.
பத்து நிமிடங்கள் கழித்து, அங்கே வேகமாக வந்தார் கபீர். "கௌதமன், தயாளன் எங்கே? அவரை என் ரூமுக்கு வரவேண்டும் என்று சொன்னேனே - அவரிடம் சொல்லவில்லையா?" என்று கேட்டார்.
நான் 'பெப்பேப்பே ' என்று விழித்தேன்.
அப்போதான் - உள்பேசியில் நிஜமாகவே ஒரு கால் வந்தது என்பதை தயாளன் கவனிக்கவில்லை என்று தெரிந்துகொண்டேன். வழக்கம்போல அவரை இம்சையிலிருந்து விடுவிக்க நான் சொன்ன பொய்தான் அது என்று நினைத்து, கபீர் ரூம் பக்கம் செல்லாமல் டிப்பார்ட்மெண்டுக்கு வெளியே ஒரு மரத்தடியில் நின்று கொண்டிருக்கிறார் என்பது புரிந்தது.
கபீரிடம், 'சொன்னேன் சார். அவர் வயிறு சரியில்லை. அர்ஜெண்டா டாய்லட் போய்விட்டு வந்துவிடுகிறேன் என்று சொன்னார் சார். இதோ வந்துவிடுவார் சார்!" என்றேன். பேசிக் கொண்டே வெளியே தூரத்தில் மரத்தடியில் நின்று கொண்டிருக்கும் தயாளனை கண்ணாடி ஜன்னல் வழியாகப் பார்த்தேன்.
என் பார்வை போன திக்கில் பார்த்த கபீர், மரத்தடியில் நின்று கொண்டிருக்கும் தயாளனைப் பார்த்ததும், என் பக்கம் திரும்பி, "டிப்பார்ட்மெண்டில் டாய்லட் இல்லையா? அவரு ஏன் மரத்தடிக்கெல்லாம் போயி அசிங்கம் செய்கிறார்?" என்று கேட்டு, சிரித்தவாறு சென்றுவிட்டார்!
ஞாயிறு, 23 ஜூன், 2013
சனி, 22 ஜூன், 2013
பாசிட்டிவ் செய்திகள், ஜூன் 16,2013 முதல் 22 ஜூன், 2013 வரை.
எங்கள் B+ செய்திகள்.
- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.
- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
1) கொஞ்சம் பழைய செய்தி!
தமிழுக்கு தொண்டாற்றிய ஜப்பானியர்!
தமிழ் மொழிக்கு தொண்டு செய்ததற்காக, பிரதமரிடமிருந்து பத்மஸ்ரீ விருது பெற்ற, தமிழறிஞர் நொபுரூ கராஷிமா: நான், ஜப்பான் நாட்டை சேர்ந்தவன். தமிழகத்தின் பல பெற்றோர், தங்கள் குழந்தைகளை
இங்கிலிஷ் மீடியத்தில் படிக்க வைக்க, பல லட்சங்களை செலவிடுகின்றனர். ஆனால்
நான், தமிழ் மொழி மீதான ஆர்வத்தால், ஜப்பானிலிருந்து பல ஆயிரம் மைல்
தூரத்தை கடந்து, தமிழகம் வந்தேன். தமிழ் மொழியை கற்று, புலமை பெற்றேன்.
நான், வரலாற்றை ஆய்வு செய்யும் அறிஞர் என்பதால், தமிழக கல்வெட்டுகளையும்,
தமிழினத்தின் வரலாறு தொடர்பான நூல்களையும் படித்து, தென்னக வரலாற்றை
அறிந்து கொண்டேன். தமிழக கல்வெட்டுகள் தொடர்பாக நான் ஆராய்ந்தவற்றை,
10க்கும் மேற்பட்ட நூல்களாக வெளியிட்டுள்ளேன். இவை, கல்வெட்டு தொடர்பான
ஆராய்ச்சிகளுக்கு உதவியாக உள்ளன.
தமிழ் பற்றிய ஆராய்ச்சி முடிந்ததும்,
மீண்டும் ஜப்பான் சென்று, டோக்கியோ பல்கலை கழகத்தில், தெற்காசிய வரலாற்று
பேராசிரியராக பணியாற்றினேன். டாய்ஷோ பல்கலை கழகத்தில், இந்தியவியல்
துறையின் பேராசிரியராக பணியாற்றிய போது, என்னை போன்று பல ஆராய்ச்சி
மாணவர்களை
உருவாக்கினேன். நான், "சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின்'
தலைவராக பணியாற்றும் காலத்தில், 1995ல், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது,
தஞ்சையில் நடைபெற்ற, "எட்டாவது உலக தமிழ் மாநாட்டை' வெற்றிகரமாக
நடத்தினேன்.
தமிழுக்கு தொண்டு செய்ததற்காக, கடந்த ஏப்., 5ம் தேதி, "பத்மஸ்ரீ' விருது வழங்கி, பாராட்ட அழைத்தபோது,
என் உடல் நிலை சரியில்லை. அதனால், பிரதமர் மன்மோகன் சிங், ஜப்பானிய பயணமாக
சமீபத்தில் வந்த போது, என்னிடம் விருது வழங்கினார். சக்கர நாற்காலியில்
நான் அழைத்து வரப்பட்ட போது, பிரதமருக்கு வணக்கம் சொல்லி பேச ஆரம்பித்த
நான், இறுதியாக, "நன்றி' சொல்லி தமிழராக நடந்து கொண்டேன்.
2) உடலுக்கோ, மனதிற்கோ ஒரு சின்ன வலி ஏற்பட்டாலே,என்ன
வாழ்க்கை இது?, பேசாம நிம்மதியா போய்ச் சேர்ந்துரலாமா?, என்ற விரக்தியான
மனநிலைக்கு தள்ளப்படும் மனிதர்கள் நிறைந்த இந்த உலகத்தில், ஒரு பத்து வயது
பார்வையற்ற சிறுவன், எனக்கு பார்வை இல்லைங்றது ஒரு பெரிய விஷயமே இல்லீங்க
என்று சொல்லியபடி அடுத்தடுத்த சாதனையை தொடர்வதை பார்க்கும் போது இவன்தான்
நம்பிக்கை நாயகன் என்று யாருக்கும் சொல்லத் தோன்றும்.
அந்த சிறுவனின் பெயர் சபரி வெங்கட்
கோவை
பெரிய நாயக்கன் பாளையத்தில் அந்த சிறுவன் வசிக்கும் சின்ன வாடகை வீட்டை
அடையும் முன், சிறுவனைப் பற்றிய ஆரம்ப வரலாறை கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
கோவை-
பாலக்காடு எல்லைப் பகுதியில் உள்ள வடகாடு என்ற இடத்தில் விவசாயம்
பார்த்துக் கொண்டிருந்த சீனிவாஸ்- நீலவேணி தம்பதிக்கு திருமணம் முடிந்து 12
வருடம் கழித்து பிறந்த ஒரே மகன் சபரி வெங்கட்.
பிறந்த போதே பார்வைக் குறைபாடுடன் பிறந்தான்.
பார்வைக்
குறைபாட்டிற்கு சிகிச்சை பெறவும், அவனுக்கான கல்வியை தேடவும் வேண்டி,
விவசாயம் பார்த்த பூமியை வந்த விலைக்கு விற்று விட்டு கோவை பெரிய நாயக்கன்
பாளையத்திற்கு மாறிவந்தனர்.
பார்வைக் குறைபாடு சிகிச்சைக்காக பலரையும்
பார்த்ததில் கையிலிருந்த பணம்தான் பெருமளவில் குறைந்ததே தவிர பலனேதும்
இல்லை முழுமையாக பார்வை இழந்தவனானான் சபரி வெங்கட்.
பெரிய நாயக்கன்
பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ண வித்யாலய பள்ளியில் சேர்கப்பட்டபின் ஒரு
மாற்றமாக சபரி அபரிமிதமான ஆற்றலுடன் படிக்க ஆரம்பித்தான்.
அங்குள்ள
பார்வையுள்ள மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து பார்வை இல்லாத சபரியும்
படித்தான், தற்போது ஆறாம் வகுப்பு படித்து வருகிறான், எப்போதும் முதல்
ஐந்து ரேங்கில் வந்துகொண்டு இருக்கிறான்.
கூடுதலாக புத்தகம் படிக்க
வேண்டும் என்பதற்காக பள்ளிவிட்டு வந்ததும், மாலையில் இரண்டு மணி நேரம்
பிரெய்லி முறையில் படிக்க எழுத கற்றுக்கொண்டு இருக்கிறான்.
இதெல்லாம்
சராசரியாக பார்வை உள்ள,பார்வை இல்லாத மாணவர்கள் யாருமே செய்யக்
கூடியதுதான், ஆனால் யாரும் செய்யாததை செய்யும்போதுதான் அவர்கள்
வித்தியாசப்படுகிறார்கள்.
ராமகிருஷ்ணா வித்யாலயம் என்பதாலோ என்னவோ
சுவாமி விவேகானந்தர் பற்றி நிறைய படித்து, கேள்விப்பட்டு அவரது
கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, சின்ன வயது விவேகானந்தராக தன்னை
மாற்றிக்கொண்டு விட்டான்.
அவரைப் போலவே உடை, தலைப்பாகை அணிந்து அவரது
புகழ் பெற்ற அமெரிக்காவின் சிகாகோ பேச்சை இவன் தன் மழலைக்குரலில் பேசுவதை
கேட்பவர்கள் யாராக இருந்தாலும் எழுந்து நின்று கைதட்டாமல்
இருக்கமாட்டார்கள்.
விவேகானந்தர் விழாவினை முன்னிட்டு நடைபெற்ற பேச்சு
போட்டியில் முதல் இடத்தை பிடித்த சபரிக்கு முதல்வர் கையால் பதக்கம்
அணிவித்து பாராட்டும் கிடைத்துள்ளது.
அப்போது நடந்த சம்பவம்
சுவராசியமானது, தனது சுருங்கிய வலது கண்ணும், அதற்கு தொடர்பில்லாமல்
விரிந்து கிடக்கும் இடது கண்ணும் பார்ப்பவர் முகத்தை கோணச் செய்துவிடக்
கூடாதே என்பதற்காக பேருக்கு ஓரு கண்ணாடி அணிந்திருப்பான்.
இந்த
தோற்றத்தில் இருந்த சபரியை முதல்வர் முதலில் கண்டுகொள்ளவில்லை, பின்னர்
அவனைப் பற்றி கேள்விப்பட்ட பிறகுதான் அட..இப்படி ஒரு சிறுவனா என வியந்தார்.
பின்னர் விருது வாங்க வந்த போது உச்சி முகர்ந்து பாராட்டினார்.
கோவையில்
ஒரு விழாவில் சபரியின் பேச்சை கேட்ட விழா அமைப்பினர், "உனக்கு என்ன
வேண்டும் சொல் கட்டாயம் செய்கிறோம்'' என்றனர். பணம், பொருள், மருத்துவம்
என்று எதைக் கேட்டிருந்தாலும் செய்திருப்பார்கள், ஆனால் சபரி கேட்டதோ
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை சந்தித்து பேச ஏற்பாடு செய்ய வேண்டும்
என்பதுதான்.
சபரியின் ஆசை, அப்துல் கலாமிடம் தெரிவிக்கப்பட்டது,அவர்
அடுத்தமுறை கோவை வரும்போது முதலாவதாக சந்தித்தது சபரியைத்தான்..சில நிமிடம்
சபரியிடம் சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்துவிட்டு, சபரி என்னுடைய கோவைத்தோழன்
என்று எல்லோரிடமும் சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டார்.
இன்னொரு
விழாவில் இந்த பத்து வயது சிறுவன் என்ன பேசிவிடப்போகிறான் என்று
இருந்தவர்கள், இவன் பேசி முடித்ததும் நாங்கள் கட்டாயம் ஒரு வார்த்தையாவது
சபரியிடம் பேசவேண்டும் என்று மைக்கை கேட்டு வாங்கியவர்கள் பலர், அவர்களில்
ஒருவர், "ஆமாம் சபரி, உன் முன் கடவுள் தோன்றி, ஒரே ஓரு வரம் தருகிறேன்
என்றால் என்ன வரம் கேட்பாய்'' என்று கேட்டிருக்கிறார்.
எனக்கு பார்வை
கிடைக்கவேண்டும் என்றுதான் பதில் சொல்வான் என எல்லோரும் நினைத்துக்
கொண்டிருக்க, "நாடு நல்லாயிருக்கணும்' என்ற வரம் கேட்பேன் என்றதும்
"என்னப்பா இப்படி சொல்றே', நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன், உனக்கு
பார்வை வேண்டும் என்று கேட்கமாட்டாயா'? என்றதும், "பார்வை இல்லாதது எல்லாம்
எனக்கு ஒரு பிரச்னையே இல்லை, எளிதில் சமாளித்து விடுவேன், நாடு
நல்லாயிருக்கணும், நாட்டில் உள்ள நல்லவங்க நல்லாயிருக்கணும் அதான்
முக்கியம்'' என்று திரும்பவும், தெளிவாக கூறியதும் மீண்டும் அரங்கில்
எழுந்த கரவொலி அடங்க ரொம்ப நேரமாயிற்று.
சுவாமி விவேகானந்தரைப் போல
உடையணிந்து கம்பீரமாக அவரது கருத்துக்களை பேசும் போது கேட்டுக்கொண்டே
இருக்கவேண்டும் போல தோன்றும்., ஒரு விஷயத்தை ஒரு முறை கேட்டாலே போதும்
அழகாக கற்றுக்கொள்கிறான். வீட்டில் நிழலுக்கு ஒதுங்கிய ஒரு பாட்டி
சொல்லிக் கொடுத்த பகவத்கீதையின் ஸ்லோகத்தை அச்சுப்பிசகாமல் அப்படியே
சொல்கிறான். பாட்டுப் பாடுவது என்றால் மிகவும் பிரியம் முறைப்படி சங்கீதம்
கற்றுக் கொள்ளவில்லை ஆனால் சபரி பாடி கேட்டால்... கேட்டுக்கொண்டே
இருக்கலாம்.
திருமுருகன் பூண்டியில் உள்ள விவேகானந்தா சேவாலய
செந்தில்நாதன்தான் தற்போது சபரியின் பேச்சுத்திறமையை பலரும் கேட்கவேண்டும்
என்ற ஆர்வமுடன்,அவனை பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று வருகிறார். இது போல
அவிநாசிக்கு அழைத்து வந்த போது அங்குள்ள தினமலர் நிருபர் மகேஷ் சபரியை
பார்த்துவிட்டு, அவனது பேச்சை கேட்டுவிட்டு என்னிடம் தொடர்புகொண்டு,
சபரிபற்றி நமது நிஜக்கதை பகுதியில் வெளியிடுங்கள் என்று சபரி பற்றி
எழுதுவதற்கு வழி அமைத்துக்கொடுத்தார்.
.சுவாமி விவேகானந்தர் வாழ்ந்தது
குறுகிய காலமாக இருக்கலாம் ஆனால் தனது கருத்துக்களால், நம்மிடம்
வாழப்போவதும், இனிவரும் இளைய சமுதாயத்தின் மனங்களை ஆளப்போவதும், பல
காலத்திற்கு இனி அவர்தான். நாலணா கையில் இல்லாததால் கன்னியாகுமரியில்
படகில் பயணிக்க இயலாமல் நீந்திச்சென்று பாறையின் மீது தியானம் செய்தவர்,
சில நாளில் பத்தாயிரம் மைல் கடந்து சென்று அமெரிக்கா மக்களை திரும்பி
பார்க்கவும், விரும்பி ஏற்கவும் செய்யும் வல்லமை கொண்டிருந்தார் என்றால்,
அவரிடம் குடியிருந்த அந்த மகா சக்தி எது? சொல்லட்டுமா? என்று சபரியின்
மழலை மாறாத கணீர் குரலை முழுதாகக் கேட்க நேரில் அழையுங்கள்,கொஞ்சமாய் கேட்க
போனில் அழையுங்கள்... சபரியின் அப்பா சீனிவாஸ்தான் போனில் பேசுவார்,
அவரிடமும், சபரியின் தாயார் நீலவேணியிடமும் முதலில் இந்த
தெய்வீகக்குழந்தையை பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சொல்லுங்கள், பின்னர்
அவர்களே சபரியின் படிப்பு, பள்ளிக்கு இடையூறு இல்லாத நேரத்தில் பேசுவதற்கு
ஏற்பாடு செய்வார்கள். தொடர்புக்கு: 9942146558.
3) கோடியிலும் கிடைக்காத மன திருப்தி!
மனநலம் பாதிக்கப்பட்டு,
சாலையோரங்களில் சுற்றி திரிபவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும், வெங்கடேஷ்:
நான், சென்னை திரு வான்மியூரைச் சேர்ந்தவன். 10ம் வகுப்பு வரை மட்டுமே
படித்திருக்கி றேன். கூரியர் டெலிவரி, மருத்துவமனையில் வார்டு பாய், கம்பி
கட்டுவது என, நான் பார்க்காத வேலையே இல்லை. இருந்தாலும், கிடைக்கிற ஓய்வு
நேரங்களில், நூலகத்திற்கு செல்லும் பழக்கம் இருந்தது.
புத்தர், நபிகள்
நாயகம், வள்ளலார் போன்றோரின், புத்தகங்களை படித்த போது, அன்பு ஒன்றை
மட்டுமே அவர்கள் வலியுறுத்தி இருந்தனர். இக்கருத்துக்கள், என் மனதில்
அப்படியே ஆழமாக பதிந்தன. 1995ல், திருவான்மியூர் பகுதியில், அரை
நிர்வாணமாக, ஒரு வட மாநில பெண் சுற்றி திரிந்தார். மற்றவர்கள் வேடிக்கை
பார்க்க, நான் முன்வந்து அவரை காப்பகத்தில் சேர்த்து வீடு திரும்பிய போது,
எனக்கு ஏற்பட்ட மனதிருப்தி, கோடி ரூபாய் கிடைத்தாலும் வராது. அடுத்த
உயிர்கள் மீது அன்பு செலுத்திய போது, உருவான அற்புதமான அனுபவத்தை அன்று
தான், உணர்ந்தேன். இந்த அனுபவத்திற்கு பின், குழந்தைகள், பெண்கள், முதியோர்
என, சாலையோரங்களில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிந்த,
1,000த்திற்கும் மேற்பட்டவர்களை, அரசு மற்றும் தனியார் காப்பகங்கள் மற்றும்
மருத்துவமனைகளில் சேர்த்திருக்கிறேன். அவர்களுக்கு தெரிந்த மொழியிலேயே
பக்குவமாக பேசி, குளிப்பாட்டி, தலை முடியை வாரிவிட்டு, ஆடைகளை அணிவித்து,
சாப்பிட வைத்த பின்னரே அங்கு சேர்ப்பேன்.
சேர்த்த பின்னும், அவர்கள் எப்படி
இருக்கின்றனர் என, தொடர்ந்து பார்த்து வருகிறேன். மற்றவர்களுடன் இணைந்து,
ஒரு தொண்டு நிறுவனமாகவோ, தனியார் அமைப்பாகவோ இல்லாமல், தனியொரு மனிதனாகவே
கடந்த, 18 ஆண்டுகளாக, இச்சேவையை செய்து வருகிறேன். இச்சேவையை செய்யும்
போது, ஒரு சில நேரங்களில், வீடு திரும்ப ரொம்ப நேரம் ஆகும்; இருந்தாலும்,
என் மனைவி சலித்துக் கொள்ளாமல், என்னை ஊக்கப்படுத்துவாள்.
தொடர்புக்கு: 93801 85561
4) ஆழ்துளைக் கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்கும் நவீன இயந்திரம் ஒன்றை
சுமார் 7 லட்சம் செலவு செய்து பல்வர் டிரயல் அண்ட் எரர்ஸுக்குப் பிகு
குறைகளை நீக்கி, சிறந்த முறையில் தயாரித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர்,
தீயணைப்புத் துறை அதிகாரிகள் முன்பு டெமோ காட்டி அப்ப்ரூவல்
வாங்கியிருக்கிறார் நாமக்கல் மாவட்டம், உத்தகிடிக் காவல் ஊராட்சி,
வெட்டுக்காடு கிராமம், அருந்ததியர் காலனியைச் சேர்ந்த 29 வயது முதுநிலைப்
பட்டதாரி இளைஞர் வெங்கடேஷ்.
இந்த இயந்திரத்தில் ஆழ் துளைக் கிணற்றில் நிலையை அறிந்துகொள்ள
அகச்சிவப்புக் கதிர்களுடன் கூடிய கண்காணிப்புக் கேமிரா
பொருத்தப்பட்டுள்ளது. இருள் சூழ்ந்த குழிக்குள் சிக்கிய குழந்தையை
துல்லியமாகக் காண கேமிராவைச் சுற்றி விளக்குகள் அமைக்கப் பட்டுள்ளன.
தொழில்நுட்பக் கோளாறால் அந்த விளக்குகள் எரியாவிடில், கேமிராவில் உள்ள
சென்சார் மூலம் ஒளி உண்டாக்கப் பட்டு கருப்பு வெள்ளை விடியோவாக குழந்தையைக்
காண முடியும். தவிர, குழிக்குள் மாட்டியிருக்கும் குழந்தையுடன் பேசவும்,
குழந்தை பேசுவதை மேலிருந்து கேட்கவும் முடியும். குழந்தைக்கு சீரான
ஆக்சிஜன் கிடைக்கவும் ஏற்பாடுகள் இருக்கின்றன. இதன்மூலம் குழந்தை உயிருடன்
இருப்பதைத் தெரிந்து கொள்வதுடன் குழந்தையை இறுகப் பிடித்து மேலே கொண்டுவர 3
அங்குலம் முதல் 5 அடி வரை விரிவடையும் தன்மையுள்ள இடுக்கியும் அமைக்கப்
பட்டுள்ளது.
அவ்வாறு குழந்தையை மேலே இழுக்கும்போது பக்கவாட்டுச் சுவரிலிருந்து மண்
குழந்தையின் சுவாசக் குழாய்க்குள் செல்வதைத் தடுக்க பாதுகாப்புக் கவசமும்
ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதனால் உடலில் சிறு சிராய்ப்புக் காயங்கள் கூட
இல்லாமல் குழந்தையை வெளியில் எடுக்க முடியும். இந்த நவீன இயந்திரத்தைத்
தயாரிக்க 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரை செலவாகுமாம். இந்த இயதிரத்தில்
சிறு சிறு மாற்றங்கள் செய்து ஆழ்துளைக் கிணறுகளில் சிக்கும் மின்
மோட்டார்கள், நிலக்கரி மற்றும் தங்கச் சுரங்கங்களில் சிக்குபவர்கள்,
திறந்தவெளிக் கிணற்றில் விழும் விலங்குகள் என்று ம் காப்பாற்ற முடியுமாம்.
மிக மிக ஏழைக் குடும்பத்தில் பிறந்த வெங்கடேஷ் எம் எஸ் சி இயற்பியல்
படித்துள்ளார். இந்த இயந்திரத்தைக் கண்டு பிடிக்க வேண்டி தான் பார்த்துவந்த
வேலையைக் கூட ராஜினாமா செய்து விட்டு கடந்த 5 ஆண்டுகாலமாகப் போராடி இதைத்
தயாரித்திருக்கிறாராம்.
5) விளக்கம் படத்திலேயே.
வெள்ளி, 21 ஜூன், 2013
வெள்ளிக்கிழமை வீடியோ 130621 - நெஞ்சுக்கு நீதி
ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்! திருக்கடையூர் கோவிலையும் பார்க்கலாம். பாட்டையும் கேட்டு ரசிக்கலாம்.
"சக்தி ஓம் சக்தி ஓம்...சக்தி ஓம்...!"
புதன், 19 ஜூன், 2013
முதியோர் கொடுமை, மகேந்திர பர்வதம், கல்யாணப் பெண்களின் கண்டிஷன்கள் - வெட்டி அரட்டை
செய்தித்தாள்கள் 'ஹெல்பேஜ் இந்தியா' என்கிற தன்னார்வத் தொண்டு அமைப்பின் கணக்கெடுப்பை வெளியிட்டிருக்கின்றன.
தற்போது இந்தியாவில் உள்ள முதியவர்களின் எண்ணிக்கை 10 கோடியாம். இந்திய அளவில் எடுத்த கணக்கெடுப்பில் முதியவர்களைத் துன்புறுத்துவதில் மருமகள்களுக்கு முதலிடமாம்! 39 சதவிகிதம். இரண்டாமிடத்தில் மகன்கள். பெரிய வித்தியாசமில்லை. 38 சதவிகிதம்! நாடு முழுவதுமான கணக்கெடுப்பில் 23 சதவிகித முதியவர்கள் துன்புறுத்தப் படுகின்றனராம்.
இந்த வகையில், தேசிய அளவில் முதலிடத்தைப் பெறுவது நம்ம மதுரையாம்! 63 சதவிகிதம் முதியவர்கள் இங்கு உறவுகளால் துன்புறுத்தப் படுவதாகக் கணக்கெடுத்திருக்கிறார்களாம். அடுத்த இடம் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில்! 60 சதவிகிதம்.
பெருநகரங்களில் (அப்பாதுரைக்குப் பிடித்த) ஹைதராபாத் முதலிடம் பெறுகிறது.
இப்போதெல்லாம் மாமனார், மாமியார் கொடுமை ரொம்ப, ரொம்பக் குறைந்து விட்டதோ!
இந்தச் செய்தி தினமணியில் படித்தேன். மற்ற செய்தித் தாள்களில் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. ஒருவேளை முன்னரேயும் வந்திருக்கலாம்.
கம்போடியாவில் 1,200 ஆண்டுகள் பழமையான 'மகேந்திர பர்வதம் நகரம் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறதாம்.
லண்டனைச் சேர்ந்த தொல்லியல் வளர்ச்சி அறக்கட்டளை இயக்குனர் ஜீன் பாப்டிஸ்ட் செவான்ஸ் தலைமையில் சர்வதேச நிபுணர்கள் குழு கம்போடியாவில் ஆய்வில் ஈடுபட்டதாம். இந்தக் குழுவினர் உலகிலேயே மிகப் பெரிய ஹிந்து கோவில் வளாகம் அமைந்துள்ள கம்போடியாவின் அன்கோவார்ட் அருகே 40 கி.மீ தொலைவில் உள்ள நாம்குலேன் மலைப்பகுதியில் தீவிர ஆராய்ச்சி நடத்தினர் அங்கு புதைக்கப் பட்ட கன்னி வெடிகள், காட்டாறு, சதுப்பு நிலங்கள் காரணமாக முழு அளவிலான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட முடியாத நிலையில் அந்த மலை மீது ஹெலிகாப்டரில் பறந்தபடி லிட்டார் எனப்படும் தொழில்நுட்பம் மூலம் லேசர் கதிர்களை அப்பகுதி மீது பாய்ச்சி, நாம்குலேன் மலை மீது மகேந்திர பர்வதம் என்ற வரலாற்று இடைக்கால நகரம் இருந்ததைக் கண்டு பிடித்தனர்
1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்த நகரத்தைச் சேர்ந்தவர்கள் கி பி 802 இல் அன்கோவார் பேரரசை நிறுவியுள்ளனர். அதன் தலைநகராக மகேந்திர பர்வதம் விளங்கியதாகத் தெரிகிறது.
ஜீன் பாப்டிஸ்ட் கூறுகையில், "தொன்மையான நூல்களின்படி, புகழ்பெற்ற வீரனும் மன்னனுமான இரண்டாம் ஜெவர்மமனுக்கு மலை மீது அமைந்த தலைநர் இருந்ததாகத் தெரிய வருகிறது. அதுதான் இந்த மகேந்திர பர்வதம். இப்போது நூதன ஆய்வின் மூலம் அந்த நகரில் சாலைகளும் கால்வாய்களும் இருந்ததைக் கண்டறிந்துள்ளோம்" என்றாராம். "இந்த நகர் குறித்த தகவல்கள் மூலம் இன்றைய சமூகத்துக்கு முக்கியமான விஷயங்கள் கிடைக்கலாம். மலை மீது அமைந்த நகரில் காடுகள் அழிப்பு, மற்றும் நீர் நிர்வாகத்தை அதிகம் சார்ந்திருந்தது போன்றவற்றால் இந்த நாகரீகம் அழிந்திருக்கலாம் என்று அபிப்ராயப்படுகின்றனர்.
இந்த நகரில் இதற்கு முன் அடையாளம் காணப்படாத 30 கோவில்களும் இருந்துள்ளது லேசர் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளதாம். இது தொடர்பான விவரங்கள் அமெரிக்க தேசிய அறிவியல் நிறுவனத்தின் பத்திரிகையில் வெளியிடப் பட உள்ளனவாம்.
(கஷ்டப்பட்டு சுருக்கி சுருக்கி டைப் அடித்தபின் பார்த்தால் முகநூலில் முழுவதும் படத்துடன் வந்திருக்கிறது!)
==============================
ரூபாய் மதிப்பு சரிவால் கணினி வகைகளும் அதனைச் சார்ந்த பொருட்களும், அலைபேசி வகைகளும் இந்த மாத இறுதியில் 10 சதவிகித அளவு விலையேற உள்ளதாம். இவற்றை வாங்கும் எண்ணமுள்ளவர்கள் அதற்குள் வாங்கி விடுங்கள் என்கிறது தினகரன் செய்தி ஒன்று!
==============================
விகடன், கல்கி இரு பத்திரிகைகளிலும் மாப்பிள்ளைப் பையன்கள் கல்யாணச்சந்தையில் பெண் கிடைக்காமல் அல்லாடுவதைக் கட்டுரையாக்கியிருக்கிறார்கள். இப்போதெல்லாம் (மணப்) பெண்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறதாம், பெரிதாக இருக்கிறதாம். மாப்பிள்ளையின் பெற்றோர்கள் கூட வசிக்கக் கூடாது, வேண்டுமானால் குழந்தை பிறந்தபிறகு உதவிக்கு வேண்டும் நேரத்தில் வரலாம், மாப்பிள்ளைக்கு சொந்த வீடு, பேங்க்கில் குறிப்பிடத்தக்க அளவு பேலன்ஸ், வெளிநாடு போகும் வாய்ப்பு எல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புவதாக மேட்ரிமோனியல் நடத்துபவர்கள் கூறியிருக்கிறார்கள். ஆண்களுக்குச் சமமான பெண்களின் ரேஷியோவும் குறைவாகத்தான் இருக்கிறதாம்.
பாவம் பையன்கள்!!
திங்கள், 17 ஜூன், 2013
திரைப்பாடல் புதிர்
கீழே உள்ள வரிகள் அந்தந்தப் பாடலின் இடையே வரும் வரிகள்தான்.
'அருஞ்சொற்பொருளி'ல் ( ! )இருக்கும் அந்த வரிகளை மீட்டெடுப்பதோடு, அந்தப்
பாடலின் ஆரம்ப வரிகளையும் சொல்ல வேண்டும்!
முடிந்தவரை பாடல் புரியக்கூடிய அளவில், சரியாகக் கொடுத்திருக்கிறேன்.
ஈசிதான். புதிய பாடல்கள் எதுவுமில்லை.
'ஜூட்'டா....
1) இவனைக் கூப்பிட்டா அவன் வர்றான், அவனைக் கூப்பிட்டா இவன் வர்றான் எவன்
நமக்கு உதவுவான்னு கிருஷ்ணனையும், கந்தவேளையும் சந்தேகப் படறாளாம் பொண்ணு!
எழுதறதுல்லாம் தப்பாக ஆறது விதியான்னும் சந்தேகம்! ஆரம்பிக்கறதை முடிக்கவும்
தெரியலை!
2) வேண்டி, வேண்டி உங்களை வேண்டச் சொல்லிக் கேட்டும் நீங்கள் வேண்டவில்லை
என்றால் என்னை நம்பாமல் இருந்தால் துளியாவது நஷ்டம் எனக்கு உண்டா ஐயா? நான்
பார்த்ததைத்தானே சொல்கிறேன்? உங்கள் விஷயம்தான் ஐயா...
3) முதிர்ச்சியை இன்னும் எட்டவே எட்டாத அந்த முகத்தின் பிரகாசம், எப்படி
உரையாடுவது என்ற கலை, மென்மையான நடை இவற்றையெல்லாம் காணோமே என்று கவலைப்
படுகிறேன்... அமைதியாக நீ தூங்குகிறாயே....
4) அண்ணிக்கி லவ்வு 'டிராப்' 'ட்ராப்'பா சொட்டற கண்ணோட நீ என்னிய லுக்கு
விட்டியே... சொம்மா சொகமாத்தான் இருந்திச்சி போ.. ஒன்னோட கண்ணுலயும்
கையிலயும் விழுந்துட்டேன். பார்த்தது போதும்மா! நீ கேட்டது வேணுமா வேணாமா?
5) "தாவணி போட்ட உன்னைத் தொடும்போது இதயம் தண்ணி அடிச்சாப்போல ஆயிடுதுமே... "
"வேற பார்வை பாக்காத மச்சான்...ஆறா வேர்க்குது..புடைவையத் தொடறத்துக்கு முன்னாடி கழுத்துல மாலைய போட்டு மாறன் சொன்னதைச் சொல்லு..."
6) நிலவு போல மூஞ்சி! சிவப்பா வாயி! வெள்ளைப் பூ போல சிரிப்போட மகன்.. தளர் நடைல மனசு குளிர்றா மாதிரி உம்மா கொடுப்பான் அவன்.
7) வேகமா விரல்களால, கண்ணால பேசி , 'வீணை உடம்பை' வாசிச்சேன்னா பூமிக்கு
அந்த வானம் வந்தது மாதிரியும் ஆறு ஒண்ணு இதயத்துள்ள பாஞ்சு ஓடற மாதிரி புது
அனுபவம்தான்!
8) கவலைங்கற கடனை என் வாழ்க்கைல கொடுத்துருக்கற கடன்காரக் கடவுள்!
கவலையெல்லாம் சரியாப் போனாத்தான் கடன் அடையும். சொல்லப்போனா வறிய மக்கள்
ஜீவிதத்துல தண்ணியடிச்சுட்டு விளையாடற மாதிரி ஆடறான் கடவுள்.
9) நீலமா தெரியும் அந்த மேகம் போலத்தான் நானும் காதல்ங்கற ஆகாசத்துல
பறக்கறேன். தண்ணியில பூ தத்தளிப்பது போல இதயம் மயங்கறேன். மீனே
ஜாடையாவாவது பேசேன். மலர் மேனியைப் பார்த்ததும் மன்மதனின் கணை
பாய்ந்து சூடாகும் என்னைத் தணிவிக்கும் ஜில்லுனு இருக்கும் ஓடத் தண்ணி
நீதான் வா....!
10) வளர்ந்த பொண்ணு, கொழந்த மனசு ரெண்டும் ஒண்ணாயிருக்கற அதிசயம்
நீதான்பா...ஆனால் உன் எண்ணங்கள் மட்டும் தீயைப் போல சுடும் பாவம்தான் என்ன?
சூரியன் உதிக்காம இருக்காது. அதுக்காகத்தான் நானும் காத்திருக்கிறேன்!
** ஹி ஹி ! படங்களுக்கும் கேள்விக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தப்பித் தவறி ஏதாவது சம்பந்தம் இருந்தால் அது தற்செயலாக நிகழ்ந்ததாகக் கொள்க!
* இந்தப் பதிவுக்குப் பின்னூட்டங்கள் மட்டறுக்கப் (என்ன வார்த்தைடா இது!) படுகின்றன! கிர்ர்ர் மேடம் பல பதிவுகளில் விடுத்த வேண்டுகோளை மதித்து.