செவ்வாய், 19 நவம்பர், 2013

சைக்கிள் வண்டி மேலே :: 04 எஸ் எல் ஆர் சி கே!


'சைக்கிள் வண்டி மேலே' (சென்ற நூற்றாண்டில் வெளியான) முந்தைய பதிவின் சுட்டி இது ! 
     
இது இறுதிப் பகுதி. 
   
என்னுடைய பெரிய அக்காவுக்கு, நான்கு குழந்தைகள். ரெண்டு பசங்க, ரெண்டு பொண்ணுங்க. அந்த நாட்களில், ரெண்டு பசங்களும் தனித்தனியா இருந்தா ரத்தினங்கள். ஒண்ணா சேர்ந்தா அராஜகக் கொழுந்துகள். இவர்கள் இருவரிடமும்தான் நான் முப்பது வருடங்களுக்கு முன்பு, வகையாக மாட்டிக் கொண்டேன். 

மதுரை சென்றிருந்த போது, பேச்சு வாக்கில் அவர்களிடம், 'எனக்கு கேரியரில் உட்கார்ந்துதான் சைக்கிள் ஓட்டத் தெரியும்; சைக்கிளில் ஏற, இறங்கத் தெரியாது, சீட்டில் உட்கார்ந்தும் சைக்கிள் விட்டதில்லை' என்று 
கூறினேன்.  
  
அவ்வளவுதான் - அவர்கள் இருவருக்கும் பயங்கரக் கோபம் வந்துவிட்டது. "மாமா - நீங்க இப்படி சொல்வது உங்களுக்கே வெட்கமாக இல்லையா? அவனவன் ஹெர்குலிஸ் கணக்கா ஹீரோ சைக்கிள் ஓட்டறான். நீங்க கேரியரில் உட்கார்ந்து ..... ஹூம். நல்ல வேளை இப்பவாவது சொன்னீங்க. கிளம்புங்க ரேஸ் கோர்ஸ் பக்கம். பத்து ரூபாய் கொடுங்க. ஒரு அவர் சைக்கிள் இப்பவே எடுத்து வந்துவிடுகிறோம். இன்றைக்கு நைட்டு தூங்கப் போகும்பொழுது நீங்க * எஸ் எல் ஆர் சி கே யாகத் தான் தூங்கப் போவீர்கள்" என்றனர்.  

ஆமாம், ஆமாம் உடனேயே கேட்டேன், 'எஸ் எல் ஆர் சி கே - என்றால் என்ன?' 'எஸ் எல் ஆர் சைக்கிள் கிங்' என்றனர். ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்தபுஸ்டியாகப் புன்னகை புரிந்துகொண்டனர். (*எஸ் எல் ஆர் சி கே என்றால் வேறு ஏதாவது சைடு மீனிங் இருக்கா?) 

நான் பர்சைத் திறந்து, பத்து ரூபாயை எடுத்து சின்னவனிடம் கொடுத்து, "டேய் - பார்த்து ஒரு சின்ன சைக்கிளா, கேரியர் இருக்கற சைக்கிளா எடுத்து வாடா" என்றேன். "அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்" என்று சொல்லி, சிட்டாகப் பறந்தான் அவன். 

நான் சைக்கிள் கனவுகளில், (சக்கரம் இல்லாத வெள்ளை இறக்கைகள் ஸ்லோ மோஷனில் ஆடுகின்ற சைக்கிள்கள்) மிதந்தவாறு, பெரியவனுடன்  ரேஸ் கோர்ஸ் பக்கம் சென்றேன். 
    
சின்னவன், பத்தே நிமிடங்களில் அய்யனார் கோவில் குதிரை உயரம் கொண்ட, கேரியர் இல்லாத தொத்தல் சைக்கிள் ஒன்றின் மீது ஆரோகணித்து வந்தான். அந்த சைக்கிளைப் பார்த்த உடனேயே எனக்கு 'சைக்கிள் ஓட்டுவேன்' என்று இருந்த  கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் 'புஸ்' ஆனது. 
   
"என்னடா இது? கேரியர் எங்கேடா?"

"மாமா அவர் சைக்கிளில் எல்லாம் எந்த மானமுள்ள மடையனும் கேரியர் விட்டு வைக்கமாட்டான்."

"ஏன்?" 

"அதுவா, கேரியர் இருந்தா பசங்க சிட்டுங்களை ஏத்திகிட்டு குஷாலா ரவுண்டு அடிப்பானுங்க என்று அந்த மா. மடையர்களுக்குத் தெரியும்." 

எனக்குக் குழப்பம் வந்துவிட்டது. மானமுள்ள மடையன் என்றால் யாரு? அந்த மானமுள்ள மடையர்கள் ஏன் சிட்டுக்குருவிகளுக்கு உதவி செய்யத் தயங்குகின்றனர்? நான் குழம்பித் தெளிவதற்குள், சின்னவன், "இருங்க மாமா - சைக்கிள் நல்ல கண்டிஷன்ல இருக்குதா, ஆக்சிலேரேட்டர், பிரேக், க்ளட்ச் எல்லாம் ஒழுங்கா இருக்குதான்னு ஒரு ரவுண்டு போய்ப் பார்த்துவிட்டு வருகின்றேன்" என்று சொல்லி, என் பதிலுக்குக் காத்திராமல், சைக்கிளை ஓட்டிச் சென்றுவிட்டான். 

அப்போ பின்னாடி யாரோ ஒருவர், சைக்கிளில் வந்தவாறு, "புலி .... புலி' என்று கத்த, திக்பிரமை பிடித்து, ஓடத் தயாரானேன். அவருடைய சைக்கிளில் கேரியர் இருந்தது. அதில் சிட்டுக்குருவிகள் ஏதேனும் தென்படுகின்றனவா என்று ஆவலோடு பார்த்தேன். ஒரு புளிமூட்டைதான் இருந்தது. 
      
சின்னவன் பத்து நிமிடங்கள் கழித்து பிரசன்னமானான். இப்போ பெரியவனின் டர்ன். 'நாங்க  ரெண்டு பேரும் சேர்ந்துதானே உங்களுக்கு சைக்கிள் கற்றுத் தரப் போகிறோம். சைக்கிள் என்ன கண்டிஷன்ல இருக்கு என்று நானும் நல்லாத் தெரிஞ்சிகிட்டாதான் உங்களுக்குக் கற்றுத் தர சௌகர்யமா இருக்கும்.' 

பெரியவன் ரவுண்டு அடிக்கும் பொழுது சின்னவன் என்னிடம், ஒரு கேள்வி கேட்டான். 

"மாமா உங்களுக்கு எவ்வளவு அண்ணன்கள்?" 

"நாலு."

"போன மாதம் உங்க தம்பி வந்திருந்தார். அவரிடம், 'உங்களுக்கு எவ்வளவு அண்ணன்கள்?' என்று கேட்டேன். அவர் 'ஐந்து' என்றார் தெரியுமா?"

"அப்படியா? - என்னுடைய அம்மாவுக்கு எப்பவும் ஓர வஞ்சனைதான். கோகுலாஷ்டமி பட்சணங்கள் கூட, எனக்குக் கொடுப்பதைவிட என் தம்பிக்குத்தான் அதிகம் கொடுப்பா. எனக்கு நாலு அண்ணன்கள் மட்டும் கொடுத்து, தம்பிக்கு ஐந்து அண்ணன்களைக் கொடுத்திருக்கா. அம்மாவிடம் இது பற்றிக் கேட்கிறேன்." 
    
சைக்கிளும் பெரியவனும் வந்து சேர்ந்தார்கள். சின்னவன், சைக்கிளைக் கைப்பற்றி, என்னிடம், "மாமா, சைக்கிளுக்குப் பின்னாடி வந்து நில்லுங்க."
               
"ஏன்? நீ அடுத்த ரவுண்டு விடும்பொழுது, நான் அதைப் பிடித்துக் கொண்டே ஓடி வரவேண்டுமா?"

"சீச்சீ அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. நான் சைக்கிளை எப்படி சாய்த்து வைத்துக் கொண்டு, இடது காலால் பெடல் மிதித்து, நேரே பார்த்து, வலது காலை சைக்கிளுக்கு அந்தப் பக்கத்தில் எடுத்துப் போடுகின்றேன் என்று பார்த்துக் கொள்ளுங்கள். அதே போல நீங்களும் ஓட்டணும்."

நின்றேன். பார்த்தேன். 'ப்பூ  ... இவ்வளவுதானா. ... tan alpha = y/x கணக்கு எல்லாம் போட்டு, சைக்கிளைக் கைப்பற்றி, வலது கையால் வலது கை (ஹாண்டிலைப்) பிடித்து, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து .... இல்லை இல்லை இடது காலால் பெடல் மிதித்து, நேரே பார்த்..... அதற்குள் காரியம் மிஞ்சிப் போய்விட்டது. சைக்கிள் என் பக்கம் சாய, நான் இடது பக்கம் விழுந்து, 'சைக்கிள் வண்டி (என்) மேலே' விழ, இடது முழங்காலில் இரண்டு இன்ச்சுக்கு சிராய்ப்பு.   
               
சின்னவன், பெரியவனிடம் "அண்ணா - மாமாவை வீட்டுக்குக் கூப்பிட்டுப் போயி, நம்ம மெடிக்கல் கப் போர்டிலிருந்து 'முழங்காலோ மை சின்' எடுத்து இவருக்குப் போட்டு விடு" என்று சொல்லி, மேலும் ஒரு ரவுண்டு அடிக்கச் சென்றான். அப்பவே அவனுக்கு மெடிசின் பெயர்கள் எல்லாம் அத்துப்படி. அக்கா தவிர மொத்தக் குடும்பமே மருத்துவப் பல்கலைக் கழகக் கண்மணிகள்! 
   
மருந்து போட்டுக் கொண்டு, தத்தித் தடவி மீண்டும் வீதிக்கு வந்தேன். இப்போ பெரியவனின் டர்ன். "மாமா - சென்ற முறை நீங்க சைக்கிளை சரியா சாய்க்கலை. இப்போ பாருங்க - நான் எவ்வளவு சாய்க்கிறேன் என்று ....." நன்றாகச் சாய்த்து, பெடல் மிதித்து ..... ஏறி ஓட்டிக் காட்டினான். 
            
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாகிய நான், அந்த வேதாள சைக்கிளை அளவுக்கு மீறிச் சாய்த்து ஒரு உந்து உந்திவிட்டு,  மேலே என்ன செய்யலாம் என்று தீர்மானிப்பதற்குள், சைக்கிள் வலது பக்கமாக வேரற்ற மரம்போல விழ, இப்போ 'சைக்கிள் வண்டி மேலே' நான் விழுந்தேன், எழுந்தேன். வலது முழங்கையில் ஒன்றரை அங்குல சிராய்ப்பு! 
              
வீட்டுக்கு நானே போய் 'முழங்கையோ மைசின்' தேடி எடுத்து, முழங்கையில் அப்பிக் கொண்டேன். 
              
தெருவுக்கு நான் திரும்பி வந்த போது, இடது முழங்கால், வலது முழங்கை இரண்டும் 'விண் ..... விண் ...' சிச்சுவேஷனில் இருந்தன.   "இனி என்னால் சைக்கிள் கற்றுக் கொள்ள முடியாது. நீங்க ரெண்டு பேரும் மீதி இருக்கின்ற நேரத்தை ஆளுக்குப் பாதி நேரம் சைக்கிளை ஓட்டிவிட்டு, வீடு வந்து சேருங்கள்" என்று பெருந்தன்மையுடன் கூறி, வெற்றிகரமாக வாபஸ் ஆனேன். 
   
(* எஸ் எல் ஆர் சி கே என்றால் ஒருவேளை single leg or crooked கை என்று ஏதாவது இருக்குமோ?)       
                 

27 கருத்துகள்:

  1. வீர தீர பிரதாபங்கள் ரசிக்கவைக்கின்றன..!

    பதிலளிநீக்கு
  2. என்னுடைய அம்மாவுக்கு எப்பவும் ஓர வஞ்சனைதான். கோகுலாஷ்டமி பட்சணங்கள் கூட, எனக்குக் கொடுப்பதைவிட என் தம்பிக்குத்தான் அதிகம் கொடுப்பா. எனக்கு நாலு அண்ணன்கள் மட்டும் கொடுத்து, தம்பிக்கு ஐந்து அண்ணன்களைக் கொடுத்திருக்கா. அம்மாவிடம் இது பற்றிக் கேட்கிறேன்." //

    நினைத்து நினைத்து
    சிரிக்கவைத்தது ..!

    பதிலளிநீக்கு
  3. ஹா... ஹா....

    ரசித்துப் படித்து சிரிக்க வைத்தது அண்ணா.

    பதிலளிநீக்கு
  4. வீரப்பிரதாபங்களையும்
    இறுதியாக வந்த பெருந்தன்மையையும்
    மிகவும் ரசித்தேன்.சுவாரஸ்யமான பகிர்வு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. ஹஹஹா.. சிரித்துக்கொண்டே படித்தேன்.. ப்ளீஸ் முகநூலில் பகிருங்களேன்.. நான் சில பகுதிகளை மிஸ் பண்ணிடறேன்.

    பதிலளிநீக்கு
  6. அப்படியா? - என்னுடைய அம்மாவுக்கு எப்பவும் ஓர வஞ்சனைதான். கோகுலாஷ்டமி பட்சணங்கள் கூட, எனக்குக் கொடுப்பதைவிட என் தம்பிக்குத்தான் அதிகம் கொடுப்பா. எனக்கு நாலு அண்ணன்கள் மட்டும் கொடுத்து, தம்பிக்கு ஐந்து அண்ணன்களைக் கொடுத்திருக்கா. அம்மாவிடம் இது பற்றிக் கேட்கிறேன்." //

    அதி புத்திசாலி! :))))

    பதிலளிநீக்கு
  7. சைகிள் ஓட்டுவீங்களா இல்லையா?

    பதிலளிநீக்கு
  8. சைக்கிள் ஓட்ட வரும், .......... ஆனா .......... வரா.....து!

    பதிலளிநீக்கு
  9. awesome description. எனக்கும் தட்டித்தட்டி சைக்கிளில் ஏறத் தெரியாது.. :)

    நீங்க விழுந்ததையும் முழங்காலோ மைசின் / முழங்கையோ மைசினையும் தேய்ச்சுண்டது மஹா ரசனை! சூப்பர்!

    பதிலளிநீக்கு
  10. சைக்கிள் சாகசங்கள் அருமை. தொடர்ந்து ஓட்டுங்கள் :)

    பதிலளிநீக்கு
  11. இப்போது கார் ஓட்டுகிறீர்களா?ஸைக்கிள் ஸவாரி மகவும் ஹாஸ்யமாக இருந்தது. மனதுக்குள்ளே சிரிச்சிண்டு கமென்ட் கொடுக்கிறேன். நல்ல பதவு. ஹாஸ்யரஸம். அன்புடன்

    பதிலளிநீக்கு
  12. //என்னுடைய அம்மாவுக்கு எப்பவும் ஓர வஞ்சனைதான். கோகுலாஷ்டமி பட்சணங்கள் கூட, எனக்குக் கொடுப்பதைவிட என் தம்பிக்குத்தான் அதிகம் கொடுப்பா. எனக்கு நாலு அண்ணன்கள் மட்டும் கொடுத்து, தம்பிக்கு ஐந்து அண்ணன்களைக் கொடுத்திருக்கா. அம்மாவிடம் இது பற்றிக் கேட்கிறேன்//

    இது செம :-))

    சுவாரஸ்யமான சவாரி.

    பதிலளிநீக்கு
  13. // Kamatchi said...
    இப்போது கார் ஓட்டுகிறீர்களா?//
    கார் டிரைவிங் லைசென்ஸ் பத்து வருடங்களுக்கு முன்பே வாங்கிவிட்டேன். எப்படியும் இன்னும் சில வருடங்களுக்குள் கார் டிரைவிங் கற்றுக் கொண்டுவிடுவேன்!

    பதிலளிநீக்கு
  14. அட அடா...... என்ன ஒரு பெருந்தன்மை சார் உங்களுக்கு.....

    கட்டுரை முழுவதுமே சிரிக்க வைத்தது.....

    இப்படிக்கு குரங்கு பெடல் போடாது நேராக சீட்டில் உட்கார்ந்து சைக்கிள் ஓட்டியவன்! :)

    பதிலளிநீக்கு
  15. ஹாஹா, அந்த அருமை மருமகன்கள் இருவரும் ஶ்ரீராமும் அவர் அண்ணாவுமா? இன்னிக்கு முகநூலில் இதன் சுட்டியைப் பார்த்துட்டு மறுபடி படிச்சேன். ஹிஹிஹி, நல்லாவே இருந்தது.

    அதுசரி, ரகசியமா எனக்கு மட்டும் சொல்லுங்க,

    இப்போவானும் சைகிள் ஓட்டுவீங்களா, இல்லையா??????? :))))

    பதிலளிநீக்கு
  16. பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு சைக்கிள் ஓட்டியது உண்டு. இப்போ திரும்பவும் ஓட்டிப் பார்க்க ஆசை இருக்கிறது. சைக்கிள் இல்லை.

    பதிலளிநீக்கு
  17. சாவியின் சிறுகதை மாதிரி ஆனந்தகரமாக இருக்கு சைக்கிள் ஓட்டின கதை.அழகு.

    பதிலளிநீக்கு
  18. சாவியின் சிறுகதை மாதிரி ஆனந்தகரமாக இருக்கு சைக்கிள் ஓட்டின கதை.அழகு.

    பதிலளிநீக்கு
  19. ஹா ஹா ஹா ஹையோ படிச்சதும் கிகைச்சிட்டேன்ன்ன் என்னாதூஊஊஊஊஉ கெள அண்ணனுக்கு சைக்கிள் ஓட்ட வராதோ? ஹா ஹா ஹா.. ரொம்ப அழகாக் கதை சொல்லிட்டீங்க.. உங்கட அக்காவின் மகன்களும் நகைச்சுவையில் குறைந்தவர்கள் இல்லை...:).. இதில ஒருவர் ஸ்ரீராம் இல்லயோ?:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். இரகசியம்; யார் கிட்டயும் சொல்லிடாதீங்கோ!

      நீக்கு
  20. //அந்த நாட்களில், ரெண்டு பசங்களும் தனித்தனியா இருந்தா ரத்தினங்கள். ஒண்ணா சேர்ந்தா அராஜகக் கொழுந்துகள். இவர்கள் இருவரிடமும்தான் நான் முப்பது வருடங்களுக்கு முன்பு, வகையாக மாட்டிக் கொண்டேன். //

    நல்லவே மாட்டிக் கொண்டு விட்டீர்கள்.

    //சின்னவன், பெரியவனிடம் "அண்ணா - மாமாவை வீட்டுக்குக் கூப்பிட்டுப் போயி, நம்ம மெடிக்கல் கப் போர்டிலிருந்து 'முழங்காலோ மை சின்' எடுத்து இவருக்குப் போட்டு விடு" என்று சொல்லி, மேலும் ஒரு ரவுண்டு அடிக்கச் சென்றான். அப்பவே அவனுக்கு மெடிசின் பெயர்கள் எல்லாம் அத்துப்படி. அக்கா தவிர மொத்தக் குடும்பமே மருத்துவப் பல்கலைக் கழகக் கண்மணிகள்! //

    முழங்காலோ மை சி, முழங்கை மைசின் நன்கு நகைச்சுவையாக எழுத வருகிறது உங்களுக்கு.




    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!