புதன், 27 நவம்பர், 2013

அலுவலக அனுபவங்கள் - ராசுஅந்த அலுவலகத்தில் ராம்சுந்தர் இடைநிலை அதிகாரி. நண்பர்களுக்குச் செல்லமாக ராசு!

அனாவசியக் கத்தல்கள், கடுகடுப்புகள் இல்லாத கலகலப்பான மனிதர். எதையும் ஒரு சிறு நகைச்சுவைப் பேச்சின் மூலம் எளிதாக்கி விடுவார்! பழகுவதற்கு இனியவர். 

மாதிரிக்கு...

"டாக்டர் என்னைத் தண்ணியடிக்கலாம்னு சொல்லிட்டார் விசு...தெரியுமா"

"என்ன ஸார்.. மாத்திச் சொல்றீங்க?"

"எனக்கு 'லோ பிபி' இருக்குன்னு உங்களுக்கு தெரியும்ல?"

"ஆமாம்..."

"நேத்து டாக்டர் கிட்டப் போனேன். 'டாக்டர் இதோ இம்மக்கூண்டு அடிச்சேன்..(கையை அளவு காட்டுகிறார்)... லைட்டா எகிறிடுச்சு...இப்போப் பாருங்க என்னோட பிபி நார்மல்னேன்"


"ம்ம்...."

"அதுக்கு என்னன்றீங்கன்னார் டாக்டர். இதோ இவ்வளவு அடிச்சா பிபி நார்மல் ஆயிடுது இல்லே... அப்புறம் என்ன இதானே மருந்துன்னேன். 'அது தப்பான பழக்கம் இல்ல'ன்னு கேட்டார் டாக்டர். உடம்பையே கெடுத்துடும்னார். நான்தான் ரொம்ப நாளா அடிக்கறேனே...ஒண்ணும் ஆகலையேன்னேன். இல்லைங்க...இது(வயிற்றைத் தொட்டுக் காட்டுகிறார்) இது (பக்கவாட்டில் தொட்டுக் காட்டுகிறார்) எல்லாம் கெட்டுப்போகும்'னார் டாக்டர். காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமா போயிடும் எல்லா பார்ட்சும்னார்."

"ம்..."

"தினம் இவ்ளோதான் அடிப்பேன். இதோ பாருங்க பாட்டில்ல குறையவே குறையாதுன்னேன். சரின்னுட்டார்"

அவர் சரி என்று சொல்லும்வரை இவர் அவரை விட்டிருக்க மாட்டார். ஆளை விட்டால் போதும் என்று ஆகியிருக்கும் டாக்டருக்கு! அதுதான் ராம்சுந்தர்.

யாரோ ஒரு நண்பர் ஒரு வெளிநாட்டு விஸ்கி ஒன்றைக் கொடுத்து விட்டுப் போக, அவர் உடல்நிலை அறிந்த நட்பும் உறவும் அவரைக் கட்டுப் படுத்தினார்கள். 

"ஒருநாளைக்கு இவ்வளவுக்கு மேல குறையாது, பார்த்துக்குங்க" என்று பாட்டிலில் அளவு காண்பித்தார். ஒரு 1.5 லிட்டர் குளிர்பானம் வாங்கிக் கொண்டார். மூன்று நான்கு நாட்கள் நாள் கழித்து ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் குறையவே இல்லையே என்று பார்த்து 'அலுத்து விட்டதா? நல்லாயில்லையா?' என்று கேட்டபோதுதான் உண்மை தெரிந்தது. அதில் இருந்தது வெறும் குளிர்பானம்தான். முதல் நாளே விஸ்கியை முடித்து விட்டார்! எடுக்க, எடுக்க அதில் இந்தக் குளிர்பானத்தை ஊற்றி வைத்திருந்திருக்கிறார்!


ஒருமுறை அலுவலகத்தில் ஒரு குடை கண்டுபிடித்து எடுக்கப்பட்டது. ஒரு வாரம் யாராவது கிளெயிம் செய்கிறார்களா என்று வைத்திருந்து பார்த்தபின் (பொதுமக்கள் வந்து செல்லும் அலுவலகம் அது) ஏலம் விடுவது என்று தீர்மானிக்கப் பட்டது! ஏலம் என்றால் அலுவலகத்துக்குள்தான்! 'சொந்த' செலவுகளுக்குத்தான்!

இதற்கு அனுமதிபெற ராம்சுந்தரிடம் சென்றார்கள். உடனே ஓகே சொல்லி விட்டார்.


ஏலம் ஆரம்பித்தது.10 ரூபாயிலிருந்து ஏலம் தொடங்கியது.  யார் என்ன கேட்டாலும் அதன்கூட ஒரு ரூபாய் ஏற்றி ராம்சுந்தர் கேட்டு கலகலப்பாக்கிக் கொண்டிருந்தார். 35 ரூபாயில் ஏலம் நிற்க, திடீரென ராம்சுந்தர் "50 ரூபாய்" என்றார். அதற்கு மேல் ஏலம் யாரும் கேட்காததால் குடை அவரிடமே தரப்பட்டது.

அதைக் கையில் வாங்கிய ராம்சுந்தர்,"அடப்பாவி. என் குடைதாண்டா... நான்தான் மறந்து விட்டிருக்கிறேன். இப்போதான் ஞாபகம் வருது" என்றார். ஆனால் பணம் தராமல் இல்லை. அதையும் கொடுத்து விட்டார். அதுதான் ரா.சு! 
படங்கள் நன்றி இணையம்.

14 கருத்துகள்:

 1. உடம்பு இப்போ எப்படி இருக்கார்? இருக்கார் இல்லையா? என்னதான் படிச்சாலும் இந்தக் குடிப்பழக்கம் வந்துட்டால் மனுஷன் மாறித்தான் போயிடறான். :(

  பதிலளிநீக்கு
 2. @Geetha Sambasivam

  கேட்டீங்களே ஒரு கேள்வி... ! இருக்கார். நல்லபடி இருக்கார். :)))

  @ இராஜராஜேஸ்வரி

  உடனடி வருகைக்கு நன்றி RR மேடம்.

  பதிலளிநீக்கு
 3. // குளிர்பானத்தை ஊற்றி வைத்திருந்திருக்கிறார் // என்னவொரு கில்லாடி...! வளமுடன் வாழ்க....!

  பதிலளிநீக்கு
 4. அற்புதமான கேரக்டரா இருக்கிறரே
  அதுவும் குடை விஷயம் பிரமாதம்
  வீட்டுக்கார அம்மாதான் பாவம்

  பதிலளிநீக்கு

 5. அதைக் கையில் வாங்கிய ராம்சுந்தர்,"அடப்பாவி. என் குடைதாண்டா... நான்தான் மறந்து விட்டிருக்கிறேன். இப்போதான் ஞாபகம் வருது" என்றார்//ரசித்து வசித்தேன்.

  பதிலளிநீக்கு
 6. அலுவலக அனுபவங்கள் நன்றாக இருக்கிறது.
  நல்ல நண்பர் தன் உடல் நலத்தையும் பார்த்துக் கொண்டால், குடும்பமும், நட்பு வட்டமும் மகிழும்.

  பதிலளிநீக்கு
 7. SUPER ஒரு சுவரசியமான கதை மாதிரி இருக்கிறது. ராம் சுந்தர் வித்தியாசமான மனிதர்தான்

  பதிலளிநீக்கு
 8. //உடனடி வருகைக்கு நன்றி RR மேடம்.//

  ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் உடனே வந்து பின்னூட்ட மொய் வைச்சிருக்கேன். எனக்குப் பரிசு கொடுக்காமல் அநியாயம் இது! :))))))))

  பதிலளிநீக்கு
 9. ராசு பழகுவதற்கு வித்தியாசமான மனிதராக இருக்காரே! குடிப்பழக்கம் தான் உறுத்துகிறது....:(((

  இன்று தான் எங்கள் குடியிருப்பில் உள்ள ஒரு சிறுவன், குடிப்பழக்கத்தால் தன் தந்தையை இழந்து தவிக்கிறான்...:(((

  பதிலளிநீக்கு
 10. குடிப் பழக்கம் .. உணர்ந்து திருந்தினால்தான் உண்டு.

  மனிதர் குடைக்குப் பணமும் கொடுத்து விட்டாரே:)!

  பதிலளிநீக்கு
 11. கைப்பம்ப்பில் தண்ணீர் அடிப்பதைக் கூட தண்ணி அடிக்க என்று சொல்வதுண்டு. அது பற்றி ஒருகாலத்தில் ஆனந்தவிகடனில்
  வெளிவந்த ஜோக்கொன்று நினைவுக்கு வந்தது.

  கூடவே எனது பழைய கவிதை ஒன்றும். வேறொரு சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன். அப்பாஜி மிகவும் சிலாகிப்பார். :))

  பதிலளிநீக்கு
 12. ராசு எனக்கு வேறொருவரை நினைவில் கொண்டு வந்தார்...... :)

  சிலருக்கு தண்ணி அடிக்காமல் முடியாது! :(

  குடை அவரோடது தான்! அட தன் குடையை ஏலத்தில் எடுத்தது ரசித்தேன்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!