கிட்டத் தட்ட ஐன்ஸ்டீன் ஜாடையில் இருந்தார் அந்த டாக்டர்!
"எனக்குக் கனவுக்கும் நடப்புக்கும் குழப்பம் ஏற்படுகின்றது. உதாரணமாக ஒரு கடையில் சென்று பச்சைவாழைப் பழம் என்ன விலை என்று கேட்டேன். எட்டு பைசா என்றார் கடைக்காரர். நான் பத்து பைசா கொடுத்து ஒரு பழம் வாங்கிக் கொண்டேன். கடைக்காரர் மீதி இரண்டு பைசா கொடுத்தார். அது முதன்முறையாக இந்திய அரசாங்கம் வெளியிட்ட பழைய இரண்டு பைசா. பழத்தைச் சாப்பிட்டுவிட்டு, பைசாவை பர்சில் போட்டுக் கொண்டு கிளம்பினேன்."
வீட்டை நோக்கி வருகின்ற வழியில், எதிரே வருகின்றான், என்னுடைய இள வயது நண்பன், மெய்யப்பன். "என்னடா எப்பிடியிருக்கே? எங்கே போயிட்டு வரே?"
"சும்மா வாக்கிங் போனேன். பழம் வாங்கி சாப்பிட்டுவிட்டு வந்தேன். நீ எங்கே இந்தப் பக்கம்?"
"நானும்தான் வாக்கிங் வந்தேன்!"
"இப்போ எங்கே இருக்கே?"
"துபாயில்".
இது நான் கண்ட கனவு.
இது கனவு என்பதை, மறுநாள் நான் பர்சில் சில்லறை தேடும்பொழுது அந்த இரண்டு பைசா ஞாபகம் வந்தது. அட! ஐம்பது பைசாவுக்குக் கீழே இருக்கின்ற நாணயங்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு இவ்வளவு நாட்கள் கழித்து இப்படி ஒரு கனவா? மெய்யப்பனை நான் சந்தித்தது முப்பத்திரண்டு வருடங்களுக்கு முன்பு. அதையும் நான் மறுநாள்தான் உணர்ந்தேனா?
அடிக்கடி வருகின்ற இயல்பான கனவு ஒன்று. மலைப்பிரதேசத்தில் வேகமாக ஓடி, கால்கள் இரண்டையும் மடக்கி மேலே ஒரு லிப்ட். அவ்வளவுதான் - புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து இலேசாகி பறக்கின்றேன். இஷ்டம் போல எல்லா இடத்திற்கும் பறந்து, ரொம்ப ஜாலியாகச் சுற்றுகின்றேன். மறுநாள் காலை கீழே போன் மணி அடிக்கும் ஓசை கேட்டு, வேகமாக அங்கே பறந்து செல்லலாம் என்று நினைக்கும் பொழுது, எனக்குப் பறக்கத் தெரியாது என்கிற உண்மை கவ்வி சோகம் கொள்கின்றேன்.
முன்பு எப்பொழுதாவது நிகழ்ந்த இந்த நிகழ்வுகள், இப்பொழுதெல்லாம் அடிக்கடி நிகழ்ந்து, குழப்பத்தின் எல்லைக்கே சென்று விடுகின்றேன். ஏன் எனக்கு வாழ்வில் இவ்வளவு குழப்பம்.?
டாக்டர் பொறுமையாக நான் சொன்னதைக் கேட்டுக் கொண்டே இருந்தார். இதெல்லாம் இயல்பான விஷயம்தான் என்பது போல முகபாவம்.
"உங்கள் கிளினிக்கை எவ்வளவோ தேடிக் கண்டுபிடித்தேன் டாக்டர். அடிக்கடி இந்த வழியே இரவு நேரங்களில் கிராஸ் செய்து போயிருக்கின்றேன். அப்பொழுதெல்லாம் இங்கே கிளினிக் இருக்கின்றது என்பதே தெரியாது. ஒரே இருட்டாக இருக்கும். இன்றுதான் இங்கே விளக்கு எரிந்துகொண்டிருந்தது. கிளினிக் என்று தெரிந்தவுடன், உள்ளே நம்பிக்கையுடன் வந்துவிட்டேன்."
"ஓ? அப்படியா! என்னுடைய கிளினிக்குக்கு சில வருடங்களாக யாரும் வருவதில்லை."
"சரி டாக்டர். என்னுடைய வியாதிக்கு மருந்து எதுவும் உண்டா? முதலில், இது ஒரு வியாதியா?"
"உங்களுக்கு வந்திருக்கின்ற வியாதி 'சோம்னாம் ரியலிசம்' என்று பெயர். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஒரு மருத்துவ நூலில் இது பற்றி இரண்டு பக்க வியாக்கியானம் சென்ற வாரம்தான் படித்தேன். நீங்கள் சொன்னதை சுருக்கமாக சொன்னால், கனவில் வந்த பல நிகழ்வுகளை உண்மை என்றே நினைக்கின்றீர்கள். கனவு நிலைக்கும், நினைவு நிலைக்கும் அடிக்கடி குழப்பம் வருகின்றது. இதுவே இன்னும் கொஞ்சம் முற்றினால், அநேகமாக மனநோய் நிலைமைக்குப் போய்விடும். ஆனால், இதை சரி செய்ய மருந்து உள்ளது."
டாக்டர் சிறிய ஃபிரிட்ஜ் ஒன்றைத் திறந்து, ஒரு இன்ஜெக்ஷன் பாட்டிலை எடுத்தார். அதைக் கண்களுக்கு அருகே வைத்துப் படித்துப் பார்த்தார். திருப்தியுடன் தலையை ஆட்டிக்கொண்டார். இன்ஜெக்ஷன் (டிஸ்போசபிள்) சிரிஞ்சை எடுத்து, பாட்டிலிலிருந்து மருந்தை ஏற்றிக் கொண்டு அருகே வந்து, இடது கையில், இன்ஜெக்ஷன் போட்டார்.
வலிக்கவே இல்லை! விழித்துக் கொண்டேன்.
காலையில் இன்னும் சரியாக எழுந்தரிக்கவில்லை. கிழவி முனுமுனுக்க துவங்கிவிட்டாள் .
பதிலளிநீக்குஎன்னங்க...இனிக்காச்சும் சீனிவாசன் டாக்டரை பாத்துட்டு வாங்க...
எதுக்கு இப்படி ஒவ்வொரு நாளும் எந்திருச்சோன உடனே கத்தறே?
நானா கத்தறேன்...? நீங்க தான் ஒவ்வொரு நாளும் தூக்கத்திலே கத்துருகீக..
அப்படியா ? என்றேன். ஆச்சரியத்துடன். தூக்கத்தில் எப்பவாவது கனவு கண்டு சத்தம் போடுவது வழக்கம். ஆனால் இப்பொழுது ஒரு பத்து வருசமாக இல்லை.
ஆமாங்க .. யாருங்க...அது ஸ்ரீராம் ? இஞ்சக்ஷன் போடாதீக..வலிக்குது அப்படின்னு சத்தமா சொனீங்க.... நான்
முழிச்சுட்டு பார்த்தேன். ராத்திரி மணி 3.
சுப்பு தாத்தா. Please read :
http://www.medpagetoday.com/PrimaryCare/SleepDisorders/42365?xid=nl_mpt_guptaguide_2013-10-18&utm_source=guptaguide&utm_medium=email&utm_content=mpt&utm_campaign=10|18|2013&userid=717227&eun=g5878848d10r&email=meenasury@gmail.com&mu_id=5878848
அட, இதுவும் கனவா....
பதிலளிநீக்குஇதையும் படியுங்கள்..
http://schoolpaiyan2012.blogspot.com/2013/09/blog-post_9.html
அட டாக்டர் ஊசி போட்டதும் கனவா......
பதிலளிநீக்குசுப்பு தாத்தா சொன்ன மாதிரி சில பேருக்கு தூக்கத்திலே பேசும் பழக்கம் இருக்கு :) கேட்டால் சிரிப்பு தான்!
அட!.. டாக்டர் கிட்ட போனதும் கனவா :-))
பதிலளிநீக்குஎல்லாமே கனவா...!!
பதிலளிநீக்குஉலகே மாயம்.வாழ்வே மாயம். நிலையேது நாம் காணும் கனவே மாயம்;)
பதிலளிநீக்குமிக நல்ல பதிவு. இந்தப் பின்னூட்டத்தைக்கூட தூக்கத்தில் தான் எழுதுகிறேன்.!
கனவு மிக அருமை.
பதிலளிநீக்குதூக்கத்திலே இன்னமும் கத்தறேன்னு நம்ம ரங்க்ஸ் சொல்லறார். ஆனால் என்ன கனவு கண்டேன் என்பதெல்லாமோ, எதுக்குக் கத்தினேன் என்பதோ மறுநாளோ அல்லது உடனே எழுப்பிக் கேட்டாலோ புரிவதில்லை. எப்போதேனும் சில கனவுகள் அரைகுறையாகத் தான் நினைவில் வரும்.
பதிலளிநீக்குஅநேகமாய் கனவுகளுக்கும் வாழ்க்கை நிகழ்ச்சிகளுக்கும் சம்பந்தமில்லாமலேயே இருக்கும் என்னைப் பொறுத்த வரை. :))))
நானா இருந்தால் தூக்கத்திலே கூட இஞ்செக்ஷன் வலிக்குதுனு கத்தி இருப்பேனோ?? ஆமாம்னு நினைக்கிறேன்.
பதிலளிநீக்கு