புதன், 11 பிப்ரவரி, 2015

4. ஸ்ரீரங்கப் பயணமும் (குறு) பதிவர் சந்திப்பும் - தொடர்ச்சி
கீதா மேடம் வீட்டிலிருந்து கல்யாண மண்டபம் வந்தபோது கோவில் சென்றிருந்த குழுவும் வந்து விட்டது.  அரங்கனைப் பார்க்க முடியாத சோகத்தை எங்களின் இன்னொரு ஆசிரியர் பதிவிட்டிருந்ததைப் படித்திருப்பீர்கள்!  எந்தக் கோவில் சென்றாலும் வழியும் கூட்டம் ஒரு வகையில் சந்தோஷம்தான் என்றாலும், அதுவே நமக்கு பாதகமாக முடியும்போது கஷ்டமாக இருக்கிறது!

மதியச் சாப்பாடு தயாராக இருக்க, நேராகச் சாப்பிடச் சென்று விட்டோம்,  எப்போதும் போன்ற ஒரு கல்யாணச் சாப்பாடு.  ஆனால் கொஞ்சம் எளிமையாக!  புளியோதரை நன்றாக இருந்தது.   காவிரித் தண்ணீரின்
சுவை என்று சொல்லலாமா என்று தெரியவில்லை, சாம்பாரின் வித்தியாசமான சுவைக்குக் காரணம்!  என்ன இருந்தாலும் ரிசப்ஷன் சாப்பாட்டின் சுவை வரவில்லை.  நேற்றைய ஊறுகாய் பாக்கி இருக்கிறதா என்று கேட்டுப் பார்த்தேன். ஊஹூம்!

சாப்பிட்டு விட்டு வந்து திரு ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்கள் இல்லத்துக்குக் கிளம்பினோம். அதற்கு முன்னாலிருந்தே அவருடன் கௌதமன் தொடர்ந்த தொலைபேசி உரையாடலில் இருந்தார். ரிஷபன்ஜியைச் சந்திக்க முடியுமா என்று ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்களிடம் கேட்டபோது, அவர் வெளியூர் சென்றிருப்பது தெரிந்தது.

திருவானைக்கா சென்று மொட்டை கோபுர வாயிலில் நின்று அவருடன் மறுபடியும் அலைபேசினோம்.  அவர் வீடு மிக அருகிலிருந்திருந்தும் இங்குமங்கும் சற்று அலைந்தபிறகு, "நீங்கள் மொட்டை கோபுரம் வாசலுக்கு வாருங்கள். நானே அங்கு வருகிறேன்"  என்று சொன்னவர், அவர் வீட்டிலிருந்து நடந்தே அங்கு வந்து விட்டார்.  அவரின் ஞாயிற்றுக்கிழமைத் தூக்கத்தைக் கெடுத்த பெருமை எங்களுக்கு!  


கார்த்திகேயன் கார்டனுக்குள் நுழைந்து வண்டியை நிறுத்தி விட்டு, அவருக்காகக் காத்திருந்து, பின்னர் அவருடன் அவர் இல்லம் சென்றோம்.  அவர் தந்தை, துணைவி ஆகியோர் வீட்டிலிருந்தனர்.


அவர் தந்தை  பணி செய்த அலுவலகத்தில்தான் 'எங்கள்' ஆசிரியர் ஒருவரும் வேலை பார்த்து ஓய்வு பெற்றிருந்தார்.  எனவே இருவரும் கொஞ்ச நேரம் அந்தப் பேச்சில் ஆழ்ந்தனர்.


அப்புறம் எங்கள் எல்லோருடனும் அறிமுகம் செய்துகொண்டு ஆர் ஆர் ஆர் கொஞ்ச நேரம் கலகலப்பாக உரையாடினார்.  புன்னகை தவழும் சிரித்த முகம் அவரின் மிகப் பெரிய ப்ளஸ்.

ஆர் ஆர் ஆர் திரு ரிஷபனுக்கு அலைபேசியில் பேச ஏற்பாடு செய்து கொடுத்தார்.  அவர் குரலை மட்டும் கேட்டோம்!  அருமையான புத்தகக் கலெக்ஷன் வைத்திருக்கிறார் ஆர் ஆர் ஆர்.  அவர் வீட்டுக்குள் நுழையும்போதே அவர் வீட்டின் வாசல் எனக்கு மிகவும் பழக்கப்பட்டதாகத் தெரிந்தது.  காரணம் அவர் புத்தக வெளியீட்டின் போது எடுத்து வெளியிட்ட புகைப்படங்கள். 


அவர் தோட்டத்தைச் சுற்றிக் காட்டினார்.  ரசனையாக, பார்த்துப் பார்த்து ஆர்வத்துடன் தோட்டத்தைப் பராமரிக்கிறார் என்று தெரிந்தது.  அவர் எழுதிய புத்தகம் ஒன்று எங்கள் ஆசிரியர் குழுவுக்குப் பரிசளித்தார் - ஆளுக்கொன்று.  எனக்குத் தரவில்லை.  எனக்குத்தான் முன்னரே குரியரில் அனுப்பி விட்டிருந்தாரே...!


அவர் தோட்டத்தில் அரை நெல்லிக்காயும் இருந்தது, முழு நெல்லி மரமும் இருந்தது.  கீழே உதிர்ந்திருந்த ஒன்றிரண்டு நெல்லியைப் பொறுக்கியபோது, "ஸார்... அதெல்லாம் ஏன் எடுத்துகிட்டு?  நான் தரேன் உங்களுக்கு உள்ளேயிருந்து" என்று அவர் சொன்னபோது இப்படி ஆளுக்கொரு பை நெல்லியை எங்களுக்கு வழங்குவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லைதான்.   ஔவைக்கு அவர் நண்பர் அதியமான் தந்தது ஒரு நெல்லிக்கனிதான்.   எங்கள் நண்பர் எங்களுக்குத் தந்ததோ எண்ணிலடங்கா நெல்லிக்காய்கள்.   நன்றி ஸார்.   இதோ,  நேற்று வரை எங்கள் வீட்டில் நெல்லி ஊறுகாய்ப் போட்டு உபயோகித்து, நேற்றுதான் தீர்த்தோம்.


திரு ஆரண்யநிவாஸ் தோட்டத்தில் ஆராய்ச்சி எல்லாம் செய்திருக்கிறார் போல.  இங்கே பாருங்கள் ஒரு மரத்தில் இரு வகைக் கனிகள்!


வைகோ அவர்களுடனும் ஆர் ஆர் ஆர் தொலைபேசி, எங்களிடம் நெல்லிக்காய் அவருக்கும் கொடுத்தனுப்புவதைப் பற்றிச் சொன்னார்.  நாங்கள் (ஆசிரியர் குழு) மட்டும் இவர் வீட்டுக்கு வந்திருக்க, மற்ற உறவினர்கள் வண்டியில் காத்திருந்ததாலும்,  சீக்கிரம் சென்னைக்குத் திரும்ப வேண்டிய நிர்ப்பந்தத்தாலும் (எங்களில் ஒருவரின் உறவினர் அன்றிரவு கோவைக்கு ரயிலேறுகிறார் என்ற நிலையில் இவர் சீக்கிரம் வீடு திரும்ப வேண்டியிருந்தது)   ஆளுக்கொரு பை நெல்லிக்காயுடன் புறப்பட்டோம்!

29 கருத்துகள்:

 1. ஆஹா! பெரிய நெல்லிக்காய் அருமையா ஊறுகாய் போடலாமே!

  சுவாரசியமான சந்திப்பு..

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  ஐயா.

  நிகழ்வு சிறப்பாக நடைபெற்றமைக்கு வாழ்த்துக்கள் த.ம 1
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு

 3. இந்த வகை சந்திப்புகள் தொடரட்டும்,,,,,

  பதிலளிநீக்கு
 4. //ஔவைக்கு அவர் நண்பர் பாரி தந்தது//

  ஒளவைக்கு அதியமான் தந்த (விட்டமின் C )

  பதிலளிநீக்கு
 5. நெல்லிக்காய் ஊறுகாய் பற்றிய பதிவு எப்போது...?

  பதிலளிநீக்கு
 6. நெல்லிக்காய்யின்னு சொல்லும் போதே ஏக்கம் தான். ஊரில் இருந்து வரும் போதே...அங்கேயே நெல்லிக்காய் ஊறுகாய் போட்டு எடுத்து வந்து இருக்கிறோம். அதை அவ்வப்போது சப்பிட்டு மகிழ்கிறோம். பதிவர் சந்திப்புக்கள் தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 7. ஆரண்ய நிவாஸ் வாசலில் நிற்கும் புத்தம் புதிய காரைத்தவிர மற்ற எல்லாமே நான் ஏற்கனவே பார்த்து ரஸித்தவைகள் மட்டுமே.

  புத்தக வெளியீடு நடைபெற்ற அன்று இந்தக்கார் மட்டும் அங்கு இல்லை.

  ஒருவேளை மிகவும் லாபகரமான முதல் புத்தக வெளியீட்டினால் சமீபத்தில் இந்தக்காரை அவர் வாங்கியிருப்பாரோ என்ற சந்தேகமும் எனக்கு வருகிறது :)

  மொட்டை கோபுரம் வரை அவர் நடந்தே வந்தார் எனவும் சொல்லியுள்ளீர்கள்.

  ஒருவேளை ’எங்கள் ப்ளாக்’ பதிவர்களாகிய தாங்கள் வந்து இறங்கிய காராக அது இருக்குமோ எனவும் மற்றொரு சந்தேகம் உள்ளது.

  என் மண்டை வெடித்து விடுவதற்குள் என் சந்தேகத்தை தீர்த்து வைக்கவும்.

  அன்புடன் VGK

  பதிலளிநீக்கு
 8. 02.08.2014 அன்று நான் ஆரண்ய நிவாஸுக்குச் சென்றிருந்தேன்.

  அதைப்பற்றிய பதிவு இதோ:

  http://gopu1949.blogspot.in/2014/08/blog-post.html

  இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே இங்கு கொடுத்துள்ளேன்.

  VGK

  பதிலளிநீக்கு
 9. மதில் மீது மயில் வந்து நிற்கிறதே! தோட்டம் மிக அழகு என்பதற்கு மயில் சாட்சி போல.

  வீட்டு நெல்லிக்காய், அதுவும் அன்போடு கொடுக்கப்பட்ட நெல்லிகனி அதில் சுவை அதிகமாய் இருக்கும்.
  பதிவர் சந்திப்பு இனிமை.

  பதிலளிநீக்கு
 10. அவரது தோட்டம் ரொம்பவே அழகு. ஓரிரு முறை சென்றதுண்டு. கடந்த சில பயணங்களாகவே அங்கே செல்ல இயலாத நிலை!

  அடுத்த முறை அரிநெல்லிக்காய் சாப்பிடவாவது அங்கே போக வேண்டும்! :)

  பதிலளிநீக்கு
 11. அனைவருக்கும் நன்றி!
  வை.கோ. சார்....
  இந்த கார் புதியதாய் வாங்கியுள்ளேன்.
  உங்களது கணிப்பு சரியே...
  ஆரண்ய நிவாஸ் சிறுகதை தொகுப்பு விற்ற முன்னூறு ரூபாயும் இந்த
  கார் வாங்க பயன்பட்டது என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்...
  அசாத்ய துணிச்சலுடன் என் சிறுகதை தொகுதி நான்கு காப்பியை ஆதிகுடி
  காபி கிளப் சென்று வாங்கிய திரு இளங்கோ சாருக்கு மனமார்ந்த நன்றி
  கூறுவதில் கடமை பட்டிருக்கிறேன்!
  தங்களின் சந்தேகம் தீர்ந்ததா, வை கோ சார்!

  பதிலளிநீக்கு

 12. என்னிடம் வந்திருந்தால் நான் அதை விற்பனைக்கு தந்திருக்க மாட்டேன் என்பதை அறிந்து கொண்டு தஞ்சாவூர் நந்தி பதிப்பகம் சென்று..அங்கு கிடைக்காமல் ...திருச்சியில் என் மைத்துனர் கடைக்கு சென்று அதை மதுரை பதிவர் மா நாட்டில் நண்பர்களுக்கு பரிசளித்த அவர் நண்பர் இளங்கோவின் பண்பு உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைக்கிறது....

  பதிலளிநீக்கு
 13. அது போல் நான் பார்க்க விரும்பிய திரு கெளதமன் சார் என்னுடன் தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டது மகிழ்ச்சி...
  அதை விட மகிழ்ச்சி திரு SRI RAM சாரும் அவருடன் வந்தது...
  அவர் அன்பு கூர்ந்து அவர் ஃபேமிலியுடன் சென்னையில் சந்தித்தது மறக்க முடியாத ஒன்று!
  நம்பினால் நம்புங்கள்...
  அன்று முழுவதும் சிறகடித்து விண்வெளியில் பறந்து கொண்டிருந்தேன் நான்!

  பதிலளிநீக்கு
 14. //நம்பினால் நம்புங்கள்...
  அன்று முழுவதும் சிறகடித்து விண்வெளியில் பறந்து கொண்டிருந்தேன் நான்!//
  உண்மைதான்! நான் அன்று முழுவதும் அந்த ஊரில்தான் இருந்தேன். பெரிய நிழல் ஒன்று நான் இருந்த வீட்டை சுற்றிச் சுற்றி வந்ததைப் பார்க்கமுடிந்தது. அக்கம்பக்கத்து வீடுகளில் வடாம் இட்டிருந்தவர்கள் எல்லோரும் கம்பு எடுத்துக்கொண்டு மொட்டைமாடிக்கு ஓடினார்கள்!

  பதிலளிநீக்கு
 15. ஆ....எனக்கு அரை காய்ச்சலான வடாம் பிடிக்கும் என்று தெரிந்து விட்டதா, எல்லாருக்கும்!

  பதிலளிநீக்கு
 16. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
  //அனைவருக்கும் நன்றி!
  வை.கோ. சார்....
  இந்த கார் புதியதாய் வாங்கியுள்ளேன்.
  உங்களது கணிப்பு சரியே...//

  மனம் நிறைந்த அன்பான இனிய நல்வாழ்த்துகள். தங்களின் உண்மையான செல்லப் பெயர்கொண்ட, தங்களுடன் சேர்ந்து பணிபுரியும் என் கைக்குழந்தையும் இப்போ சமீபத்தில் சென்ற மாதம் ஜனவரியில் புத்தம்புதிய கார் [AUTO GEAR] ஒன்று வாங்கியுள்ளது. உங்களுக்குத்தெரியாத விஷயமா ? எதற்கும் ஓர் மரியாதைக்காக இங்கு அதனைத் தகவலாகக் கொடுத்துள்ளேன்.

  //ஆரண்ய நிவாஸ் சிறுகதை தொகுப்பு விற்ற முன்னூறு ரூபாயும் இந்த கார் வாங்க பயன்பட்டது என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்...//

  ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! எனக்குத் தெரியாதா ஸ்வாமி !

  //அசாத்ய துணிச்சலுடன் என் சிறுகதை தொகுதி நான்கு காப்பியை ஆதிகுடி காபி கிளப் சென்று வாங்கிய திரு இளங்கோ சாருக்கு மனமார்ந்த நன்றி கூறுவதில் கடமை பட்டிருக்கிறேன்!//

  இலவசமாகவே அன்பளிப்பாகத் தங்களிடமிருந்து வாங்கித்தருகிறேன் என்று நான் முட்டிக்கொண்டும் அவர் கேட்கவில்லை. அவரின் பிடிவாத கொள்கையினை மதித்து அவரை ஆதிகுடி காஃபி கிளப்புக்கு அனுப்பி வைத்ததே நான் தான், ஸ்வாமி.

  //தங்களின் சந்தேகம் தீர்ந்ததா, வை கோ சார்!//

  தீர்ந்தது ஸ்வாமி; இது தெரியாததால் நேற்று இரவு முழுவதும் நான் தூங்கவே இல்லை. அதிகாலை 3 மணிக்கு தூங்க ஆரம்பித்து, வழக்கம்போல் இப்போ 12 மணிக்கு எழுந்துள்ளேன். I AM THE ONLY MAN IN THIS ENTIRE WORLD, FULLY ENJOYING MY RETIRED LIFE. :)

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு
 17. இங்கேயும் நெல்லிக்காய் ஊறுகாய் வைச்சிருக்கேன். ஆனால் ஆரண்யநிவாஸ் நெல்லிக்காய் இல்லை! :( போனால் போகட்டும், மாவடுவுக்கும், மாங்காய்க்கும் இப்போதே முன் பதிவு செய்துக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 18. திருச்சியிலே அதுவும் ஶ்ரீரங்கத்திலே கல்யாணச் சாப்பாடு நல்லா இருக்குனு சொன்ன ஒரே ஆள் நீங்கதான்! :)))கல்யாணச் சாப்பாடு மெனு சொல்லவே இல்லையே! இப்போல்லாம் கல்யாணத்தன்னிக்கே புளியோதரையும் போடறாங்க! இது கொஞ்சம் புதுசு! முன்னெல்லாம் மறுநாள் தான் கட்டுச் சாதத்தோடு புளியோதரை கிடைக்கும். :))))

  பதிலளிநீக்கு
 19. ஸ்ரீரங்கத்தில் இருக்கும் பதிவர்களை பார்த்துவிட்டீர்கள். எப்போது பெங்களூரு வரப்போகிறீர்கள்? ஆரண்ய நிவாஸ் பார்க்கவே (புகைப்படத்தில்) அழகாக இருக்கே. நேரில் ரொம்பவும் அழகாக இருக்கும் போலிருக்கு. வந்தால் எனக்கும் நெல்லிக்காய் கிடைக்குமா?

  @கீதா எங்கள் வீட்டுக் கல்யாணங்களில் எப்பவும் கல்யாணத்தன்று புளியோதரை உண்டே. அடுத்த நாளும் கட்டுசாதத்தோடும் இருக்கும்.

  பதிலளிநீக்கு
 20. வெங்கட் அருநெல்லிக்காய்...
  கீதா மேடத்திற்கு மாவடு....
  ரஞ்சனி மேடத்திற்கு நெல்லிக்காய்....
  லிஸ்ட் ரெடி!
  வடுக்களை ஆசிர்வாதம் பண்ண ஏப்ரல், மே ஆகும்....
  நெல்லி...அருநெல்லி ..
  இப்பவே ரெடி....

  பதிலளிநீக்கு
 21. டி என் முரளிதரன், ராம்வி, ரூபன், ராமலக்ஷ்மி, கில்லர்ஜி, ஜீவி ஸார் (நன்றி, உடனே திருத்தி விட்டேன்), DD, உமையாள் காயத்ரி, வைகோ ஸார் ( ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்களே பதில் சொல்லி விட்டார். ஹிஹிஹி...) கோமதி அரசு மேடம், வெங்கட் நாகராஜ், ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி, கே ஜி ஜி, கீதா மேடம், ரஞ்சனி மேடம், பரிவை சே. குமார்,

  அனைவருக்கும் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 22. //@கீதா எங்கள் வீட்டுக் கல்யாணங்களில் எப்பவும் கல்யாணத்தன்று புளியோதரை உண்டே. அடுத்த நாளும் கட்டுசாதத்தோடும் இருக்கும்.//

  உண்மை ரஞ்சனி, ஆனால் எங்களைப் போன்ற ஸ்மார்த்தர்கள் கல்யாணத்தில் கல்யாணத்தன்று புளியோதரை, தயிர்வடை, காராசேவு எல்லாம் போடுவதில்லை. இப்போதெல்லாம் அவையும் இடம் பெறுகின்றன. :))) நம்மளை மாதிரி சா.ரா.க்களுக்கு ஓகே தான். :)

  பதிலளிநீக்கு
 23. @ஆ.நி.ரா.சா, மாவடுவுக்கும் மட்டும் உத்தரவாதமா? மாங்காய்க்கு இல்லையா? :)))))

  வடுக்கள் மார்ச் கடைசியிலிருந்து வர ஆரம்பிக்கும். :))))

  பதிலளிநீக்கு
 24. மாங்காயும் தருகிறேன், மேடம்....
  சாதம் பிசைந்து சாப்பிட சூப்பராக இருக்கும்!...
  ஹி..ஹி...நானும் ஒரு சா.ரா. தான்!

  பதிலளிநீக்கு
 25. ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி சாரின் வீடும், தோட்டமும் ஜோரா இருக்கும். எங்களுக்கும் சுற்றிச் சுற்றி காண்பித்தார்... மாடி வரை...

  சார் எனக்கும் மாவடு வேண்டும்...:)

  பதிலளிநீக்கு
 26. சுவையான பதிவு. ரசித்து படித்தேன். ஆரண்யநிவாஸ் சென்று வந்த பதிவர்கள் ஒன்று நெல்லி புராணம் பாடுகிறார்கள். அல்லது மாவடு புராணம் பாடுகிறார்கள். எனக்கும் ஒரு புராணம் பாட ஆசை. ஆரண்யநிவாஸ் சென்று வர வேண்டும்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!