Tuesday, June 16, 2015

நூறு ரூபாயும், தாத்தாவும், பிண்டத் தைலமும்!


எப்போதுமே பையில் பணம் கொஞ்சமிருக்கும்.  சுமாராக எவ்வளவு கைவசம் வைத்திருக்கிறோம் என்று ஒரு ஐடியாவும் இருக்கும்.                               Image result for money in shirt pocket images            Image result for money in shirt pocket images


அதை நம்பி, சமீபத்தில் கடைத்தெருவில் வந்து பையில் கை விட்டுப் பார்த்தால் சில பத்து ரூபாய்கள் மட்டுமே இருந்தன.  அதிர்ச்சியாய் இருந்தது.  எங்காவது விழுந்திருக்குமா என்றும் யோசனை.  ஏ டி எம் கார்டும் கொண்டு வரவில்லை. 

 

வெட்டியாய்த் திரும்பி வீடு வந்தேன். ஏதோ, அதற்காவது பையில் காசு இருந்ததே என்ற நிம்மதியோடு!  கிளம்புமுன் பார்த்துக் கொண்டு கிளம்பியிருக்கலாம்தான்.  ஆனால் இதற்காக என்று கிளம்பவில்லையே... எங்கோ வந்து, கடைக்குச் சென்று...
 

வீட்டில் கேட்டால் முதலில் யாரும் எனக்குத் தெரியாது, உனக்குத் தெரியாது என்று சொல்லி விட்டார்கள்.  ஆனால் அப்புறம் ஒவ்வொருவராக நான் ஒரே ஒரு தரம் மட்டும் ஐம்பது எடுத்தேன், நூறு எடுத்தேன், ஐநூறு எடுத்தேன் என்று சொல்ல, எரிச்சல்தான் வந்தது!
 

வீட்டில் இந்த விசாரணையின்போது கூட இருந்த விசுவேஸ்வரன் (மாமா) தனது அப்பா - என் தாத்தா  - பற்றி  இதே போன்றதொரு சம்பவத்தைச் சொன்னார்.


                                                                                     Image result for grand father clip art images


தாத்தாவுக்கு பஜ்ஜி, போண்டா போன்ற சிறு தீனிகள் மீது கொள்ளைப் பிரியம்!  போஜனப்பிரியர்.  ரசிகர்.  இவர் வேலை பார்க்கும் ஊருக்கு தாத்தா வந்திருந்த சமயம்...
 

"விசு... என்கிட்டே ஒரு நூறு ரூபாய் செலவுக்குக் கொடுத்து வை.  நான் முடிந்தவரை அதைச் செலவு செய்யாமல் வைத்திருக்கிறேன்" என்றாராம்.
 

தாத்தாவின் பஜ்ஜி, போண்டா ஆசை தெரிந்திருந்த மாமா அவரிடம் நூறு ரூபாய்க் கொடுத்து வைத்திருக்கிறார்.
 

அப்புறம் அவ்வப்போது, அல்லது ஒவ்வொரு நாளும் தாத்தா வீட்டிலிருக்கும் குழந்தைகளை அழைப்பார். 
 

"டேய்... விசு சட்டைப்பையிலிருந்து காசு எடுத்துக் கொண்டுபோய் முனைக்கடைலேருந்து வடை வாங்கி வாடா..."


                Image result for bajji, bonda images            Image result for bajji, bonda vadai images


"டேய்... விசு சட்டைப் பையிலிருந்து காசு எடுத்துப்போய் பகோடாவும், அல்வாவும் 100 கிராம் வாங்கி வாடா..."
 

கடைசியில் விசுவிடம் சொல்வாராம், "பார்! நீ கொடுத்த 100 ரூபாயைச் செலவு செய்யாமல் அப்படியே வைத்திருக்கிறேன்"
 

எப்படிச் செலவாகும்? 
 

அதே கதைதான் எனக்கும் வீட்டில் நடந்திருந்திருக்கிறது!

 
தாத்தா பற்றி சொல்ல நிறையவே சுவாரஸ்யமான விஷயங்கள் உண்டு.  உதாரணத்துக்கு ஒன்று.


ஒரு சமயம் தாத்தாவிடம் என் நண்பர் கொடுத்த 'பிண்டத்தைலம்' என்ற ஒன்றைக் கொடுத்து கால், கை வலி இருந்தால் இந்த எண்ணெயை கொஞ்சம் கற்பூரம் கலந்து இலேசாக சூடு செய்து காலில் தடவி உருவி விடுங்கள்.  வலிக்குக் கேட்கும்" என்று சொல்லி விட்டு வந்தேன்.


                             Image result for pinda thailam images                           Image result for pinda thailam images


அடுத்த வாரம் சென்று பார்த்தபோது பாட்டிலில் பாதி காலியாயிருந்தது. 
 

"என்ன தாத்தா...  கால் வலி பரவாயில்லையா?"
 

"என்னடா இது! கால்வலி குறையவே இல்லை..  நானும் தினமும் நீ சொன்ன மாதிரி இந்த மருந்தை ஒரு மூடி குடிக்கிறேன்" என்றாரே பார்க்க வேண்டும்.
 

அதிர்ந்துபோய், 'கடவுளே.. நல்லவேளை வேறு ஒன்றும் விபரீதமாகவில்லை' என்று நினைத்து, அவரிடம் அதை உபயோகிக்கும் முறையை விளக்கினேன்.  அவருக்கே சிரிப்பு வந்து விட்டது.
 

எதற்கு வம்பு என்று தைலத்தை நான் தூக்கி வந்து விட்டேன்.

21 comments:

பழனி. கந்தசாமி said...

நல்ல வேளை, தாத்தாவிற்கு ஒன்றும் ஆகவில்லையே?

G.M Balasubramaniam said...

ஒரு தடவை நண்பரின் தந்தை எங்களுடன் ஓரிரு நாட்கள் இருக்க வந்தார் நண்பன் ஒரு பாட்டிலில் தேங்காய் எண்ணை வைத்திருந்தான் அவனது தந்தை கவனிக்காமல் அதை லெமன் ஜூஸ் என்று எண்ணிக் குடித்துவிட்டு மெல்லவும்முடியாமல் குடிக்கவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் தவித்தது தமாஷ்.

திண்டுக்கல் தனபாலன் said...

மூத்தவர்களிடம் சிறிது விவரமாக சொல்ல வேண்டும்...!

தி.தமிழ் இளங்கோ said...

உங்கள் தாத்தா சரியான அப்புசாமி தாத்தாவாக இருப்பார் போலிருக்கிறது.

த.ம.3

மனோ சாமிநாதன் said...

பிண்டத்தைலம் நானும் உபயோகித்திருக்கிறேன். அதைக்குடித்த உங்கள் தாத்தாவிற்கு வயிறு எப்படி ஒன்றும் ஆகாமல் இருந்தது?

KILLERGEE Devakottai said...


தாத்தா பிழைத்து விட்டார்
தமிழ் மணம் 4

Bagawanjee KA said...

பிண்ட தைலம் உண்ட தைலமாகி விட்டதோ :)

துளசி கோபால் said...

அட ராமா!!!!!!!!!!!

பஜ்ஜி படம் சூப்பர்!!!!

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களின் தாத்தா ஆரோக்கியமானவர்தான்
தைலம் குடித்தும் ஒன்றும் ஆகவில்லை அல்லவா?
தம +1

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

சட்டப் பயில இருந்து காசு எடுத்தா சொல்லுங்க என்று அப்பா சொல்லியிருந்தது நினைவு வருகிறது.
நல்ல வேலை தைலம் ஒன்றும் செய்யவில்லை..
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்

‘தளிர்’ சுரேஷ் said...

நல்ல வேளை! தாத்தாவைக் கொன்ற பாவத்திற்கு நீங்கள் ஆளாகவில்லை! ஹாஹாஹா! நகைச்சுவையாக இருந்தாலும் எத்தனை விபரீதம்?!

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே.

பிண்ட தைலம் உடம்பு வலியை போக்கும், நானும் பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால் வயிற்றுக்குள் போனால் ஜீரணம் பாதித்து வேறு ஏதாவது விளைவுகளை ஏற்படுத்தும். நல்லவேளை! தங்கள் தாத்தாவிற்கு ஒன்றும் ஆகாமல் இறைவன் காப்பாற்றியிருக்கிறார்.
பெரியவர்களிடம் ஒன்றுக்கு பலமுறை மருந்தை உபயோகிக்கும் முறையை சொல்ல வேண்டும். வயதினால் அவர்களுக்கு ஞாபக மறதி ஏற்படுவது சகஜமல்லவா!.இதை ஒரு அனுபவ பாடமாக அனைவரிடமும் பகிர்ந்து கொண்ட தங்களுக்கு நன்றிகள்.

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.

ஜீவி said...

தண்ணீர்+ நல்லெண்ணை+ மஞ்ஜிட்டா (மஞ்சட்டி)+ நன்னாரி -- இவற்றை காய்ச்சி ஒரு பக்குவத்தில் இறக்கி எடுத்துக் கொண்டு (இதுவரை சரி: இதற்கு மேல் தான் வம்பான சமாச்சாரம் வருகிறது) அளவாக தேன்மெழுகு (BEES WAX) அத்துடன் பொடித்த வெள்ளை குங்கிலியம் கலந்து வடிகட்டி வரும் எண்ணைக் கலவை தான் பிண்டத் தைலம்.

தாத்தா அந்தக் காலத்து உடம்பு. ஒரு மூடி அளவே உள்ளுக்கு எடுத்துக் கொண்டதால் உறுதியான உடம்பு வலு உள்ளுக்குத் தள்ளியதை வெளிக்குத் தள்ளி சமாளித்து விட்டது போலிருக்கு.

நாராயணத் தைலத்தில் தேன்மெழுகு+குங்கிலியம் கலப்பில்லை. அதனால் பிண்டத் தைலம் அளவுக்கு வழவழப்பு அற்றது.

சென்னை பித்தன் said...

ரூபாயைச் செலவழிக்காமல் வைத்திருக்க வழி கண்ட தாத்தா,பிண்டத் தைலத்தில் கோட்டை விட்டு விட்டார்!

புலவர் இராமாநுசம் said...

தாத்தாவின் உயிர் கெட்டி!

mageswari balachandran said...

சரியாக சொல்ல வேண்டியது தானே, பதிவு அருமை, பஜ்ஜி சூப்பர், நன்றி.

geethasmbsvm6 said...

நாராயணத் தைலம் தேய்ச்சுண்டாலும் பிண்டத் தைலம் தேய்ச்சுண்டாலும் ஶ்ரீராம் கொடுத்த ஸ்ப்ரேயரால் ஸ்ப்ரே பண்ணிண்டாலும் குறையாத வலி எனக்கு! :))))

geethasmbsvm6 said...

இதைப் படிச்சதும் என் அம்மாவோட பாட்டி தைலம்மாள் நினைவில் வருகிறார். அவர் இப்படித் தான் மதுரை கிருஷ்ணராய அக்ரஹாரத்திலே இருக்கும்போது நாங்கல்லாம் லீவுக்குப் போகும்போது ஓரணா கொடுத்து பக்ஷணம் வாங்கி வரச் சொல்லுவார். நாங்க அரையணாவுக்கு வாங்குவோம். இன்னொரு அரையணாவுக்கு அதே பக்ஷணத்தை வாங்கி நாங்க எங்க கடைசிச் சித்தியோடப் பிரிச்சு எடுத்துப்போம். அரையணாவுக்கு இதான் பக்ஷணம் கொடுத்தாங்கனு பாட்டி கிட்டே சொல்லுவோம். பாட்டிக்குத் தெரியாமல் இருக்குமா? ஆனாலும் குழந்தைகள் தானேனு எங்களையே தினமும் பக்ஷணம் வாங்க அனுப்புவாங்க. :))))

ராமலக்ஷ்மி said...

பாவம் தாத்தா. நல்லவேளை. எதுவும் விபரீதமாகவில்லை.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சுவாரசியமான தாத்தா

Thulasidharan V Thillaiakathu said...

ஹஹஹஹ் நல்ல தாத்தா...என்னைப் போல இருந்திருக்காரே.......

எங்கள் சிறு வயதில், வீட்டில் மாமா ஏதேனும் ரஸ்னா ஜூஸ் (தண்ணீர் கலந்து குடிக்க வேண்டிய கெட்டியாக சிரப்) வைத்திருப்பார்கள். நான் அதிலிருந்து எடுத்து தண்ணீர் கலந்து குடித்துவிட்டு, பாட்டிலை நிரப்ப தண்ணீர் கலந்து வைத்துவிடுவேன். இப்படி பாட்டில் ஃபுல்லாக இருக்கும்.....ஆனால் குடித்தால்தானே தெரியும் ரொம்பவே டைல்யூட்டட் என்று.....மாமா வந்தவுடன் பாட்டி எல்லா குழந்தைகளுக்கும் அதை எடுத்து தண்ணீர் கலப்பார்......எல்லோரும் குடித்துவிட்டு....இஞ்சி தின்ன குரங்கு போல இருப்பார்கள்...கத்துவாரிகள்....அப்புறம் என்ன விசாரணை நடக்கும்....நான் ரொம்ப நல்ல பிள்ளையாக்கும்.....

தாத்தா சப்பிட்ட பஜ்ஜி வடை எல்லாம் கன ஜோராக இருக்கு.....இங்கு ஜொள்ஸ்....


---கீதா

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!