செவ்வாய், 9 ஜூன், 2015

அலுவலக அனுபவங்கள் - மேலிடத்து டார்ச்சர்



அமைச்சர்களின் அல்லது மேலதிகாரிகளின் தொடர் தொல்லை தாங்காமல் அரசு ஊழியர்களில் சிலர் தற்கொலைக்கு முயலும் காலம் இது.  

கிட்டத்தட்ட இதே போன்ற அனுபவம் கிடைக்கப்பெற்ற ஒரு அலுவலரின் அனுபவம் இது.  ஆனால் இப்போதல்ல,  70 களில்!

அவர் எப்படி அதை எதிர்கொண்டார் என்பதுதான் சுவாரஸ்யம்.

மாதாந்திர ரெவியூ மீட்டிங்குக்குச் சென்ற ஒரு நாளில் நிகழ்ந்த ஒரு சம்பவம்.  ஆடிட் விளக்கம் சொல்ல நானும் சென்றிருந்தேன்.

நான் என்றால் ஸ்ரீராம் இல்லை.  அவன் இதை நான் சொல்லக் கேட்டு எழுதுகிறான், அவ்வளவுதான்.  என் பெயர் தேவையில்லை.  அப்படி பெயர் முக்கியம் என்றால் வாசு என்று வைத்துக் கொள்ளுங்களேன். 

ஆய்வுக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய அதிகாரி எல்லோரையும் வழக்கம்போல காய்ச்சி எடுத்துக் கொண்டிருந்தார்.  தணிக்கைத் தடைகளில் சில விஷயங்களுக்கு, விதிகளில் இருக்கும் (பழைய) சட்டங்களை அப்படியே நேராகப் பொருத்திப் பார்த்தோம் என்றால் சரியாக வராது என்பது பாதிக்கப் படுபவர்களுக்குத் தெரியும்..  ஏன், தணிக்கை அதிகாரிகளுக்கும் தெரியும் என்றாலும் அவர்கள் வாதம் தனிவகை. அவர்கள் அதிகாரம் செய்யுமிடத்தில் இருப்பதால் அவர்கள் அதை லட்சியம் செய்வதுமில்லை. அது பெரிய கதை.  அது இங்கு வேண்டாம்!

எனவே பதில் சொல்பவர்கள் சில சமயம் விரக்தியின் உச்சத்தைத் தொட்டு வருவார்கள்.  அப்படி ஒருவர் முருகேசன்.,
அந்த மீட்டிங்கில் நானும் இருந்தேன்.  என் பங்கு நிதி சம்பந்தப் பட்டது.  எனக்கு பதில் சொல்ல வேண்டியது எதுவுமில்லை.  அப்படியே இருந்தாலும் கவலைப்படுவதும் இல்லை.  என்னைப் பார்த்து அவர்கள்தான் பயப்பட வேண்டும்.  அதற்கும் ஒரு தனிக்கதை இருக்கிறது.  அதுவும் இங்கு வேண்டாம்.  இப்போது வேண்டாம்! 

 
தணிக்கைத் தடைகள் பற்றி உரையாடல் நடந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் முருகேசனிடம் கேள்விமேல் கேள்வி விழுந்து கொண்டிருந்தது.  அவர் மேலாளர் அந்தஸ்தில் இருப்பவர்.

இரண்டு மூன்று கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டும் அவரிடமிருந்து பதில் இல்லை.  அவர் கீழே மேஜையில் ஏதோ உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தது போல இருந்தது.  அதிகாரி அருகிலிருந்தவரை விளித்து முருகேசனின் கவனத்தை "ஈர்க்க"ச் சொன்னார்!  அவர் திரும்பி முருகேசன் அப்படி என்னதான் பார்க்கிறார் என்று பார்த்தார். ஒரு கட்டெறும்பு இங்குமங்கும் ஓடிக் கொண்டிருக்க, அதை எல்லை மீறாமல் அணை கட்டி தடுத்து வைத்து பேனாவால் அதைக் குறி பார்த்துக் கொண்டிருந்தார் முருகேசன். அவர் உதடுகள் மடிந்து, கண்கள் கூர்மையாக கவனம் முழுவதும் கட்டெறும்பின் மீதே குவிந்து இருந்தது.

"ஸார்!... முருகேசன் ஸார்!" சத்தமாக அவர் கவனத்தைக் கலைத்தார் அந்தப் பக்கத்து நாற்காலி.

நானும் முருகேசனைப் பார்த்தேன்.  காலையிலிருந்தே அவர் வித்தியாசமாக இருந்ததாகப் பட்டது எனக்கு.

அதிகாரியைப் பார்த்து எழுந்து நின்றார் முருகேசன்.

"என்ன?" என்றார் நான்கு விரல்களை மடக்கி, கட்டை விரலை உயர்த்தி சைகையுடன்!

அதிகாரி கோப மோடின் உயர் நிலையில் மூன்று கேள்விகளையும் மறுபடி அடுக்கினார்.

"இப்படி அடுக்கினா எப்படி..  ஒண்ணொண்ணாக் கேளுங்க... அப்படிக் கேட்டாத்தானே சொல்ல முடியும்?" -  முருகேசன்.

"எத்தனை தரம்யா கேக்கறது?  தனித்தனியாக் கேட்ட போது என்ன செஞ்சுகிட்டிருந்தே?  நீ ஒண்ணொண்ணா சொல்லுய்யா... டைம் வேஸ்ட் பண்றே...எங்களை  என்ன வேலை இல்லாதவங்கன்னு நினைக்கிறியா... பதிலைச் சொல்லு" இரைந்தார் அதிகாரி.


"பதிலா?  பதிலா வேணும்?  பதில்தானே?  இதோ வர்றேன்... அங்க வந்து நானே பதிலைச் சொல்றேன்..  ஒவ்வொண்ணாச் சொல்றேன்"  நிறுத்தி, நிதானமாகச் சொன்னவர் சுற்றுமுற்றும் பார்த்தார்.  அருகில் இருந்த ரூலர் தடி போன்ற ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டார்.

"இரு! இப்போ 'போட்'ல வந்து உதைக்கிறேன் உன்ன... கேள்வியா கேட்டிருக்கே? பதிலா வேண்டும்?  இதோ வந்து உதைக்கிறேன் பாரு" என்றவர் கையிலிருந்த தடியைத் துடுப்பாக்கிக் கொண்டார்.  

"ஏலேலோ... ஐலஸா!  ஏலேலோ... ஐலஸா..." என்று பாடியபடியே 'துடுப்பால்' துழாவிக்கொண்டே மேஜை மேஜையாகக் கடந்தார்.

எல்லோரும் மிகுந்த சுவாரஸ்யத்துடன் இந்த எதிர்பாராக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  அதிகாரியும் அதிர்ந்துபோய் "என்ன இது?" என்பதுபோலப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவர் அருகில் நெருங்கிய முருகேசன் தடியால் ஓங்கி அவர் மண்டையில் ஒன்று போட, அதிகாரி திகைத்துப் பதறிப்போய் உள்ளே எழுந்து ஓட,  நொடியில் களேபரமானது இடம்.

அதிகாரிக்கு உதவிக் கொண்டிருந்த தணிக்கை உதவியாளர்  "ஏய் மிஸ்டர்!  நீங்க என்ன செய்யறீங்க, இதற்கு என்ன ஆக்ஷன் எடுப்போம் என்று தெரிந்துதான் செய்யறீங்களா?" என்று கோபத்துடன் கத்தினார்.

அடுத்த கணமே முருகேசனின் 'படகு' அவர் பக்கமாகத் திரும்ப, அவர் சப்தநாடியும் அடங்கி, அமர்ந்து, பீதியுடன் அவரைப் பார்த்தார்.

"இல்ல முருகேசன் ஸார்.. இப்போ சொல்லலைன்னா அடுத்த வாரம் பதில் தர்றேன்னு ஸார் கிட்ட சொல்லியிருக்கலாமேன்னு சொன்னேன்"

"ஆக்ஷனாடா?  எடு ஆக்ஷன்! நான் பார்க்காத ஆக்ஷனா?" என்ற முருகேசன் 'உதவி' கையிலிருந்த ஃபைல் நாடாவைப் பிரித்தவர் அதிலிருந்த பேப்பர்களைக் கற்றையாகக் கைப்பற்றினார்.  அசாத்திய வலுவுடன் அதை இரண்டு மூன்று பாகங்களாக்கிக்கொண்டு இரண்டு இரண்டாகக் கிழித்தார். மேஜை மேல் ஏறி நின்றவர், மேலே சுற்றிக் கொண்டிருந்த மின் விசிறியின் கீழாக அதைப் பிடித்தார்.

அந்த ஹால் முழுவதும் கிழிந்த பேப்பர்கள் பறந்தன.

ஒளிந்திருந்த தணிக்கை அதிகாரி அங்கிருந்து லேசாக எட்டிப் பார்த்து "என்ன ஸார் பார்த்துகிட்டு நிக்கறீங்க எல்லோரும்... அவரைப் பிடிங்க ஸார்!" என்று கத்தினார்.  மறுபடி காணாமல் போனார்!

அப்புறம் எல்லோரும் சேர்ந்து, முருகேசனை மெல்லப் பிடித்து அமர்த்தி, ஆசுவாசப் படுத்தி மருத்துவமனையில் சேர்த்தனர்.  சில நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்து வந்தார் முருகேசன்.

அப்புறம் இதுபோன்ற மீட்டிங்குகளில் இது பற்றிய பல கிண்டல் பேச்சுகள் நிறைய இடம்பெற்றன.  "எங்க, முருகேசன் கிட்ட கேட்கச் சொல்லுங்க பார்ப்போம்" என்பார்கள். 

முருகேசனிடம் " ஸார்.. உண்மையைச் சொல்லுங்க.. வேணும்னுதானே செய்தீங்க?  தெரிஞ்சேதானே அப்படிச் செய்தீங்க?' என்று பாதி விளையாட்டாகவும், பாதி சீரியஸாகவும் கேட்டுப் பார்த்தார்கள்.  அவர் பாவமாக விழிப்பார்.

 

அவர் மைத்துனர் உள்ளூரில் பெரிய போலீஸ் அதிகாரி என்பதாலும், அவர் மாமனாரின் இன்னொரு சம்பந்தி வழியில் இவர்களின் உயர் அலுவலகத்தில் செல்வாக்கு இருந்ததாலும் முருகேசன் மேல் நடவடிக்கை எதுவும் இல்லாமல் தப்பித்ததும், கிழிக்கப் பட்ட ஃபைல்கள் மறுபடியும் உருவாக்கப்பட்டதும் தனிக்கதை.

21 கருத்துகள்:

  1. ஆக மொத்தத்தில் மொத்தின முருகேசன் அவர்களிடம் உண்மையை "வாங்க" முடியவில்லை...!

    பதிலளிநீக்கு
  2. DD, சென்னைப்பித்தன் ஸார்..

    இருவருக்கும் பதில் :

    "ஆம்"

    பதிலளிநீக்கு
  3. இது ஒரு வித மன அழுத்தமே ..அதிக வேலை பளு ,மேலதிகாரிகளால் ஏற்படும் அழுத்தம் சிலருக்கு இப்படி நடக்கும் ..அந்த எறும்பு தப்பித்தது !

    பதிலளிநீக்கு
  4. ஸ்ரீராம் சார் உண்மைய சொல்லுங்க, நீங்க வாசுவா இல்ல முருகேசனா :-)

    பதிலளிநீக்கு
  5. தணிக்கைக் கேள்விகளுக்குத் தப்ப இதுவும் ஒரு வழியா..?

    பதிலளிநீக்கு
  6. வேலை செய்ய விடாம அவன் சொல்வதை செய், இவன் சொல்வதை செய்யுன்னு அதிகாரம் பண்ணி காரம் சாதிப்பவர்கள் மத்தியில் தான் வேலை செய்வவர்கள் செய்ய வேன்டி இருக்கு....மனதின் சுமை....வெளிவரத்தானே செய்யும் ஏதாவது ஒரு விதத்தில்..

    பதிலளிநீக்கு
  7. என்னமோ வலைப்பக்கம் புதுசா முகம் காட்டுதே! ம்ம்ம்ம்ம்! தப்பிச்சுக்கறதுக்காக வேணும்னு பண்ணி இருப்பாரோ?

    பதிலளிநீக்கு
  8. கமென்ட் கொடுத்ததும் சரியாயிடுச்சே! :)))))))

    பதிலளிநீக்கு

  9. அடடே இப்படியும் தப்பிக்கலாமோ.....

    பதிலளிநீக்கு
  10. - ஆம் ஏஞ்சலின். நடுவில் எறும்பு பற்றியும் சிந்தித்திருக்கிறீர்களே...

    - நன்றி பழனி கந்தசாமி ஸார்.

    - சீனு... நீங்கதானா? எவ்ளோ நாளாச்சு! நான் இதில் பிள்ளையார்!

    - தப்ப வழி என்று அவர் செய்யவில்லை ஜி எம் பி ஸார். நிஜமாகவே அவருக்கு அப்படி ஆகி விட்டிருந்தது.

    - கீதா மேடம்.. //என்னமோ வலைப்பக்கம் புதுசா முகம் காட்டுதே! ம்ம்ம்ம்ம்!// புரியலையே..

    அவர் வேணும்னு பண்ணலை.அப்படி ஆயிடுச்சு!

    - இல்லை கில்லர்ஜி,, அவர் தப்பிக்கும் முகத்தான் அப்படிச் செய்யவில்லை!

    பதிலளிநீக்கு
  11. டார்ச்சரின் உச்சகட்டம் .....சில நாட்கள் முன் ,மதுரை பஸ் நிலையத்தில் ,மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்துக் கொண்டு அரசு டிரைவர் ,மேலாளர் கட்டி பிடித்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றது !

    பதிலளிநீக்கு
  12. அதற்கப்புறம் எல்லா வேலைச் சுமைகளிலிருந்தும் தப்பித்தார..?

    பதிலளிநீக்கு
  13. அன்புடையீர்! வணக்கம்!
    இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (11/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    வலைச்சர இணைப்பு:
    http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    பதிலளிநீக்கு
  14. இன்று வரையிலும் விடுபடாத புதிரா இது?

    பதிலளிநீக்கு
  15. கலக்கிட்டே முருகேஷா! என்று சொல்லத் தோன்றுகிறது! ஹாஹாஹா! என்று சிரித்தாலும் பரிதாபமும் உடன் தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு
  16. இது நிச்சயமாக மன அழுத்தம். அனுபவம் உண்டு....இப்போதும்......இது Schizophrenia எனப்படும் மன அழுத்தத்தின் ஒரு வகை....நல்ல காலம் அதற்கு அடுத்தக் கட்டமான அந்நியன் லெவலுக்குப் போகவில்லை அல்லவா? போயிருந்தால் அந்த அதிகாரி பிழைத்திருக்கமாட்டார்......எறும்புக்கு ஆயுசு கெட்டி போலும்.....

    பதிலளிநீக்கு
  17. நான் என்றால் ஸ்ரீராம் இல்லை. அவன் இதை நான் சொல்லக் கேட்டு எழுதுகிறான், அவ்வளவுதான். என் பெயர் தேவையில்லை. அப்படி பெயர் முக்கியம் என்றால் வாசு என்று வைத்துக் கொள்ளுங்களேன்.// குழப்புதே..அஹஹஹ்

    பதிலளிநீக்கு
  18. மன அழுத்தம் எல்லையை மீறும் போது இப்படி ஆகக்கூடும். சமயத்தில் தணிக்கை அதிகாரியாக வருபவர்கள் செய்யும் ஆர்ப்பாட்டத்தையும் அலம்பலையும் நினைக்கும் போது நமக்கே எரிச்சலாகத் தான் வரும். மொத்து வாங்கிய அதிகாரியை நினைக்கும்போது சிரிப்பும் வருகிறது; பாவமாயும் இருக்கிறது. சுவையான சம்பவத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. பித்தன் சொன்னது போல இருக்குமோ!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!