திங்கள், 13 ஜூலை, 2015

'திங்க'க்கிழமை 150713 :: தே சா


நல்ல பச்சரிசி இப்போ கிலோ ஐம்பது ரூபாய் முதல் எழுபது ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது. (இன்னும் ஐம்பது வருடங்கள் கழித்து, அதாகப்பட்டது கி பி இரண்டாயிரத்து அறுபத்தைந்தில் இந்தப்பதிவை கூகிள் மூலம் தேடி யாராவது படித்தால், 'அட! அரிசி இவ்வளவு விலை குறைவாக அந்தக்காலத்தில் கிடைத்திருக்கின்றதா!' என்று அதிசயப்படுவார்கள்!) 
    

பச்சரிசி இருநூறு கிராம் எடுத்துக்குங்க. 
    
நல்ல தண்ணீரில் கழுவி (அரிசி கழுவுவது என்றால், ஓரிருமுறையாவது தண்ணீர்விட்டு, கலக்கி, தண்ணீர் கலங்கல்  எதுவுமின்றி  ஆகும்வரைக் கழுவுவதாம். ) அறுநூறு அல்லது எழுநூறு மி லி தண்ணீர் இட்டு, பிரஷர் குக்கரில் வைத்து, சாதம் வடித்துக்கொள்ளவும். 

ஒரு பெரிய தேங்காயின் ஒரு மூடியை மட்டும் எடுத்து, தேங்காயைத் துருவி எடுத்துக்கொள்ளவும். எடுத்துகிட்டீங்களா? (தேங்காய் துருவுவதற்கு, இதுவரையில் நல்ல மெஷின் எதுவும் அமையவில்லை. வாங்கிய மெஷின் எதுவுமே ஆறு மாதத்திற்கு மேலே உருப்படியாக வேலை செய்யவில்லை. திருவண்ணாமலை பக்கம் வாங்கிய அருவாமணையின் (ஸ்பெல்லிங் சரியா?) ஆதிசேஷத் தலைப்பகுதிதான் இப்பவும் தேங்காய்த் துருவ வாகாக உள்ளது!) 
  

    

ஒரு வாணலியை அடுப்பில் வையுங்க. ஒரு கரண்டி நல்லெண்ணெய் விடுங்க. எண்ணெய் காய்ந்ததும், ஒரு டீஸ்பூன் கடுகு அதில் போடுங்க. கடுகு வெடித்ததும், மூன்று மிளகாய் வற்றலைக் கிள்ளிப் போட்டு, ஒரு டீஸ்பூன் வெ  உளுத்தம்பருப்பைப் போட்டு, ஒரு மேசைக்கரண்டி கடலைப்பருப்பு, ஐம்பது கிராம் நிலக்கடலை, (துட்டு அதிகமா இருக்கறவங்க நிலக்கடலைக்கு பதில் முந்திரிப் பருப்பு போடலாம்!) துருவி வைத்த தேங்காய், சுண்டைக்காய் அளவு பெருங்காயம், இருபது கறிவேப்பிலை, எல்லாவற்றையும் போட்டு, வாட்டவும். தேங்காய்த் துருவல் பொன்னிறமாக வறுபட்டதும், சாதத்தில் கொட்டிக் கரண்டியால் கிளறவும். தேவைக்கேற்ப உப்புப் பொடியைச் சேர்த்துக் கிளறவும். 
           
இதுதான் தே சா. சமைத்துச் சுவைத்துப் பாருங்கள். 
     

26 கருத்துகள்:

  1. தேங்காய்த் துருவியே தனியாக் கிடைக்குதே. அப்புறமாப் படம் எடுத்து என்னோட பதிவில் போடறேன். அரிவாள் மணையில் தேங்காய் துருவினால் ஆட ஆரம்பிக்கும். டாஸ்மாக் தமிழரை விட மோசமாய் ஆடும். :)

    பதிலளிநீக்கு
  2. //ஒரு கரண்டி நல்லெண்ணெய் விடுங்க.//

    ம்ஹூம், இங்கேயே மாறுபடறேனே. அதானே, மாற்றுக் கருத்துச் சொல்லலைனா அப்புறமா நாம யாரு? :) கலந்த சாதங்களிலே எலுமிச்சை, புளிசாதத்துக்கு நல்லெண்ணெய் ஓகே. ஆனால் இந்தத் தேங்காய்ச் சாதத்துக்கு மட்டும் தே.எண்ணெய் தான் ஓகே. அதிலே தாளிங்க. சாதம் கலந்ததும் மேலாக ஒரு ஸ்பூன் நெய் விட்டு, அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கலந்து பத்து நிமிஷம் வைச்சுட்டுச் சாப்பிட்டுப் பாருங்க. சுவை அள்ளும்.

    பதிலளிநீக்கு
  3. மிவற்றலுக்குப் பதிலாகப் ப.மி. போடலாம்.(அதானே! எல்லாத்தையும் மாத்த வேண்டாமா?) தேங்காய் மூடி நிறையக் கிடைக்கும் சமயங்களில் தாளித்துக் கொட்டலில் (மிளகாய் சேர்க்காமல்)தேங்காயைத் துருவிச் சேர்த்து நன்கு வறுத்து எடுத்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் சமயம், மிளகாய், கருகப்பிலை தாளித்து வறுத்த துருவலைக் கலந்து ரெடிமேட் தேங்காய் சாதம் செய்யலாம். அல்லது தோசை மி.பொடி திடீர்னு தீர்ந்துடுச்சுனு வைங்க. மிவற்றலை நன்கு வறுத்துக் கொண்டு, கொஞ்சம் வறுத்த எள், வறுத்த உபருப்போடு இந்தத் துருவலையும் போட்டுத் தேங்காய் மி.பொடியும் செய்து தொட்டுக்கலாம். சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். சாய்ஸ் இஸ் யுவர்ஸ்! :)

    பதிலளிநீக்கு
  4. காலங்கார்த்தாலே போட்டீங்களே! ராத்திரின்னா ஒத்துக்கறதில்லை! வயிறு இப்போத் தான் சரியாகிட்டு வருது! :)

    பதிலளிநீக்கு
  5. //தேங்காய் மூடி நிறையக் கிடைக்கும் சமயங்களில் தாளித்துக் கொட்டலில் (மிளகாய் சேர்க்காமல்)தேங்காயைத் துருவிச் சேர்த்து நன்கு வறுத்து எடுத்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் சமயம், மிளகாய், கருகப்பிலை தாளித்து வறுத்த துருவலைக் கலந்து ரெடிமேட் தேங்காய் சாதம் செய்யலாம். //

    இதைக் குளிர்சாதனப் பெட்டியில் ஃப்ரீசரில் வைக்கணும். தே.சா. அல்லது தே.மி.பொ தயார் செய்ய அரை மணி முன்னர் வெளியே எடுத்து வைக்கவும்.

    பதிலளிநீக்கு
  6. தே.சா....

    நல்லாவே இருக்கும். சில சமயங்களில் செய்வதுண்டு! வரமிளகாய்க்கு பதில் பச்சை மிளகாய்!

    த.ம. 2

    பதிலளிநீக்கு
  7. தேங்காய் பக்கமே போகக்கூடாது என்பதால் Reject - எனக்கு மற்றும்...!

    பதிலளிநீக்கு
  8. தேங்காய் சாதம் அருமை. கீதா மாமி சொன்னதுதான் சரி. நல்லெண்ணெய், தேங்காய் சாதத்தை இளிக்க வைத்துவிடும். தேங்காய் எண்ணையே சரி. (காரலா இருந்ததுனா, சாப்பிடச் சகிக்காது). வேர்க்கடலையை விட, முந்திரி நன்றாக இருக்கும். நிறையபேர் தேங்காய் கெடுதல் என்று நினைக்கிறார்கள். தேங்காய் உடம்புக்கு ரொம்ப நல்லது. ஆனால், மற்ற கொழுப்பு உணவுடன், தேங்காயையும் சேர்த்தால் ஜாஸ்தி ஆகிவிடும் என்று மருத்துவர்கள் தேங்காய்க்குத் தடா போடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  9. எப்போது சாப்பிட ...?காலை உணவாகவா. மதியத்துக்கா, இல்லை பயணத்தின் போதா. ?பிக்னிக் போகும்போது எடுத்துப்போகும் வழக்கமுண்டு, .

    பதிலளிநீக்கு
  10. டிடி, நிறையப் பேர் இப்படித் தான் தவறாகத் தேங்காயே சேர்ப்பதில்லை. இது குறித்த ஓர் விழிப்புணர்வுப் பதிவு கூட அனைவருக்கும் அனுப்பிக் கொண்டிருந்தேன். பச்சைத் தேங்காய் உடலுக்கு ரொம்ப நல்லது. கொப்பரை தான் ஆகாது. தேங்காய் எண்ணெயும் நான் உபயோகித்து வருகிறேன். ஒன்றும் பண்ணாது. நல்லெண்ணெயும் தேங்காய் எண்ணெயும் தான் உடலுக்குத்தீங்கு விளைவிக்காத எண்ணெய். மற்ற சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களை எல்லாம் பயன்படுத்துவதில்லை வீட்டிலும் இன்று எண்ணெய் வைத்து அப்பளமோ, வடாம் வற்றல் பொரித்தாலோ மற்ற ஏதேனும் பண்ணினாலோ கொஞ்சமாய் வைத்துப் பொரித்துக் கொண்டு மறுநாளே அந்த எண்ணெயைச் செலவு செய்துடுவேன். முன் கூட்டியே அதற்கேற்ற சமையல் திட்டம் போட்டுக்கணும். அப்படி முடியலைனால் அந்த எண்ணெயைப் பயன்படுத்துவது இல்லை.

    பதிலளிநீக்கு
  11. தேங்காய் சாதம்...தேங்காய் எண்ணை + கொஞ்சம் நெய் வாசனைக்கு...தான் சேர்த்தால் செம மணமா இருக்குமே. எலுமிச்சை, எள்ளோரை, புளியோதரைக்குத்தான் நல்லெண்ணை....

    இப்ப மட்டும் நாம 1935 கதைய கேக்கும் போது, அத விடுங்க நம்மளே நம்ம பழைய வீட்டுக் கணக்கு நோட்டை எடுத்துப் பார்த்தோம்னா...அட 1970, 80 ல இவ்வளவுதானா அரிசி விலை அப்படிம்போம்...அப்ப 2065ல அவங்களும் அப்படித்தானே சொல்லுவாங்க....நாம இப்ப சொல்றதுதான் நினைவுக்கு வந்தது...

    அப்புறம் உங்க "ஆதிசேஷத் தேங்காய் துருவியை ரசித்தேன்..." ஹஹ்... ஆமாம் அனா தேங்காய் துருவி என்று மரத்தினால் ஆனது கிடைக்கின்றதே...அது ரொம்ப சுலபம்..இதுவும் ஆதி சேஷன் தலைதான்....என்ன நீண்டுகிட்டு இருக்கும்....நீங்க என்ன செய்யறீங்கன்றத உத்துப்பாக்கறது போல (காக்கா மாதிரி!!!)

    ரொம்ப பிடிக்கும்...ஆனா, எனக்குக் கொழுப்பு இல்லைனாலும் கொழுப்புனு சொல்லி 144 போட்டுடறான் என் பையன்....ரொம்ப மோசம்....ஆனாலும் நாங்க விட்டுருவமா...பச்சைத் தேங்கா கொழுப்பு இல்லைனு (அப்படிச் சொல்லிக்கிட்டு) வறுக்காம அப்படியே போட்டு சாப்டுருவம்ல....இதுவும் நல்லாருக்கும்...கேரளா ஸ்டைல்...

    கீதா

    பதிலளிநீக்கு
  12. நெல்லைத் தமிழன் சொல்லி இருப்பது சரியே. தேங்காய் உடலுக்கு ரொம்ப நல்லது. இயற்கை உணவில் தேங்காய் முக்கிய இடம் வகிக்கிறது. வேர்க்கடலையும் பச்சை வேர்க்கடலை உடலுக்கு ரொம்ப நல்லது.

    பதிலளிநீக்கு
  13. பச்சைத் தேங்காய்ச் சாதம் பற்றி துளசிதரன்/கீதா எழுதி இருப்பதால், எப்படிச் செய்யணும்னா தாளிதம் செய்தவற்றை எடுத்துக் கொண்டு தேங்காயைத் துருவி வறுக்காமல் சாதத்தில் நேரடியாகப் போட்டுவிட்டு, உப்பு, சர்க்கரை(என் வழக்கப்படி) சேர்த்து அதன் மேல் தாளிதத்தைக் கொட்டிக் கிளறிடணும். இதைத் தட்டில் சாதத்தைப் போட்டுக் கொண்டும் திடீர்னு நினைச்சுட்டுச் செய்து சாப்பிட்டுக்கலாம். :))) எங்க வீட்டில் இதான் வழக்கம். தட்டில் சாதம் போட்டபின்னர் எங்க வீட்டில் சிலருக்குப் பச்சைத் தேங்காய்ச் சாதம் வேணும்னு தோணும். உடனேயே தேங்காய் உடைத்துத் துருவி மேற்சொன்னபடி செய்து தருவோம். :)

    பதிலளிநீக்கு
  14. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  15. எள் சாதத்துக்கு நல்லெண்ணெய் தான் சூப்பர்! தொட்டுக்க மோர்க்குழம்பு அல்லது டாங்கர் பச்சடி! வெள்ளரிக்காய்த் தயிர்ப்பச்சடியும் ஓகே! :)

    பதிலளிநீக்கு
  16. இந்த அறுவாள்/அருவா ...அறுப்பதற்கு (திருநெல்வேலி அறுவாள்தான்!!!) அறுவாள் என்றும்...காய்களை அரிவதற்கு அரிவாள்மனை என்றும்...

    ---கீதா

    பதிலளிநீக்கு
  17. ஆயுர்வேத மருத்துவத்தில் தேங்காய், தேங்காய் எண்ணெய், நெய் ஆகியன முக்கிய இடம் வகிக்கும்.

    பதிலளிநீக்கு
  18. தேங்காய் சாதம் சூப்பர்,
    தேங்காய் எண்ணெய் தான் உகந்தது,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  19. கீதா மாமி எண்ணை பத்தி நான் சொல்ல நினைச்சத நீங்க சொல்லிட்டீங்க....அதே அதே...எல்லாரும் தப்புத் தப்பா எண்ணை பத்திச் சொல்லிக், கற்பனை பண்ணிக்கிட்டு....ரொம்பவே என்னவோ கொலைக் குற்றவாளியப்பாக்கறா மாதிரி பாக்கறாங்க....நான் எங்கள் வீட்டில் தேங்காய் எண்ணை சேர்ப்பதுண்டு...அது வேண்டப்படும் பதார்த்தங்களுக்கு...அதே போல நெய் கூட அவ்வப்போது...என் பையன் சும்மானாலும் மிரட்டுவான் ஆனா அவன் சொல்லுவது "அளவுக்கு மிஞ்சினாத்தானே அமிர்தமும் நஞ்சு" அதனால அளவா யூஸ் பண்ணிக்கலாம்...என்பான்...

    பதிலளிநீக்கு
  20. சிம்பிளா சொல்லிட்டீங்க! சூப்பரான ரெசிபியை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  21. மற்றவர்கள் சொல்வதற்கு பாக்கி வைக்காமல் கீதா அவர்களே எல்லாவற்றையும் சொல்லி விட்டார்கள். ஒரு உளுந்து அப்பளாத்தைப் பொரித்து சிறியதாக நொறுக்கி கலந்தசாதத்தில் கலப்பதுண்டு. அதுவும் பெருங்காய,உளுத்தம் பருப்பு மணம்தானே கொடுக்கும். சொல்வது புரிகிறது. தேங்காய் அதிக ருசியில்லாது இருந்து விட்டால் சர்க்கரை ஸரிகட்டிவிடும். ஆமாம் கிரைண்டரில் தேங்காய் துருவுவதற்கும் ஒரு உபகரணம் உண்டே. அது நன்றாகத்தானே இருக்கிறது. ஒரு துளியாவது தேங்காய் சேர்த்தால்தான் கூட்டுகள் ருசி. யாருக்குத் தெரிகிரது.. அன்புடன். ருசியான தேங்காய்சாதம்

    பதிலளிநீக்கு
  22. தேங்காய் சாதம் செய்து சாப்பிட தூண்டுது...

    பதிலளிநீக்கு
  23. கீதா சொல்லாத ஒன்றை நான் சொல்லவேண்டும் என்று அவசரம் அவசரமாக எல்லாப் பின்னூட்டங்களையும் படித்துக் கொண்டே வந்தால், அதை காமாஷிமா சொல்லிவிட்டார் (அப்பளம் பொறித்து தே.சா வில் கலந்தால்)!
    என் பிள்ளைக்கு பள்ளிப் பருவத்தில் தினமும் இதுதான் மதிய சாப்பாடு! செய்து செய்து அலுத்துப் போன உணவு இது என்று கூட சொல்லுவேன். இப்போது அதிகம் செய்வதில்லை.
    தே. சா உண்மையில் ஜோர் தான்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!