திங்கள், 31 ஆகஸ்ட், 2015

'திங்க'க்கிழமை 150831:: வெள்ளை அப்பம்.


வெள்ளை அப்பம் 

தேவையான பொருட்கள்: 
    

வெள்ளை உளுந்து : நூறு கிராம். 
பச்சை (கலர் அல்ல Raw)) அரிசி: முன்னூறு கிராம். 
  

வெள்ளை உப்பு : ஒரு கரண்டி (உத்தேச அளவு. தேவைக்கேற்ப எடுத்துக்கொள்ளவும்)  
கருப்பு மிளகு: அரை  தேக்கரண்டி. 
சீரகம்: ஒரு தேக்கரண்டி. (சீரகம் என்ன கலர் என்று அண்ணனுக்கு போன் செய்து கேட்டேன். குதிரைச்சாணி கலர் என்றார். ஹூம் இதைக் கேட்காமலேயே இருந்திருக்கலாம்!) 
பச்சை மிளகாய் : ஐந்து. 
  

இஞ்சி : பாதி கட்டை விரல் அளவு. (இஞ்சி என்ன கலர் என்று அண்ணனிடம் கேட்கவில்லை புத்தி , புத்தி!) 
பச்சைக் கறிவேப்பிலை : பதினைந்து இலைகள். 
நல்லெண்ணெய் : அரை லிட்டர் 

முதலில், உளுந்து எடுத்து, கழுவி, சுத்தமான தண்ணீரில் ஊற வைக்கவும். 
    
பச்சரிசியையும் அவ்வாறே கழுவி, சுத்தமான தண்ணீரில் வேறொரு பாத்திரத்தில் ஊற வைக்கவும். 
               
இப்போ போய் ஏதாவது தமிழ் சானலில் ஒரு முழு தமிழ்ப்படம் விளம்பரங்கள் சேர்த்துப் பார்த்து முடித்துவிட்டு (அல்லது உருப்படியாக ஏதாவது செய்யவேண்டும் என்றால் - படுத்துத் தூங்கிவிட்டு ) மூன்று மணி நேரம் கழித்து வாருங்கள். 
                
உளுந்தை, இட்லிக்கு அரைப்பது போல, கிரைண்டரில் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். அரிசியையும் அவ்வாறே நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும். 
                  
இரண்டு மாவையும் கூட்டணி சேருங்கள். உப்பு போட்டுக் கலக்கவும். 

மாவுக் கலவை கெட்டியாக இருக்கவேண்டும். 

இப்போ மிளகு, சீரகம் இரண்டையும் மேற்படி மாவில் போட்டுக் கலக்கவும். 

(சிலர் மிளகு சீரகம் போடாமலும் வெள்ளை அப்பம் செய்வார்கள்) 
    

பிறகு, பச்சை மிளகாய்களை நறுக்கவேண்டும். ஒவ்வொரு துண்டும் மூன்று முதல், ஐந்து மி மீ நீளம் இருக்கலாம். இஞ்சியை தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக  வெட்டி, இஞ்சித் துண்டுகளையும், ப மி துண்டுகளையும் மேற்படி மாவில் போட்டுக் கலக்கவும். கறிவேப்பிலையையும் சிறு துண்டுகளாக நறுக்கி, மாவோடு சேர்த்துக்கொள்ளவும். 

இப்போ மாவு தயார். 

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, பூரி செய்ய எவ்வளவு எண்ணெய் விடுவீர்களோ அந்த அளவுக்கு எண்ணெய் விடவும். 

எண்ணெய் காய்ந்ததும், ஒரு இட்லிக் கரண்டியால், (ஒரு இட்லி அளவுதான் மாவு எடுத்துக்கொள்ளவேண்டும்) மாவு எடுத்து, எண்ணெயில் ஊற்றவும்.  
    
வெள்ளையப்பம் முதலில் எண்ணையில் கீழே போய் செட்டில் ஆகும்; பிறகு மிதக்கும். ஒருபுறம் சிவக்கப் பொரிந்ததும், அதைக் கண் கரண்டியால் திருப்பிவிடவும். இரு பக்கங்களும் சிவக்கப் பொரிந்தவுடன், வெள்ளையப்பத்தை, இரண்டு கண் கரண்டிகளுக்கு இடையே வைத்து அமுக்கி, எண்ணையை  வடித்து, எடுத்துக்கொள்ளவும். 

இப்படியாகத்தானே எல்லா வெள்ளையப்பத்தையும் செய்து எடுத்துக் கொள்வீர்களாகுக! 
                 
     

பச்சைக் கமெண்ட்: (இதில் அரிசி, உப்பு தவிர வேறு எதுவும் வெள்ளை கிடையாது. அதையும், சிவக்கப் பொறித்து எடுக்கிறோம்! அப்புறம் ஏனப்பா வெள்ளை அப்பம் என்று பெயர்? ) 
                 ========================================================   
ஏழு  நாள் தொடர்கதை ::  वह कौन है?


நீண்டு நிமிர்ந்திருந்த அந்தத் தெருவின் கடைசியில் - அல்லது முதலில் என்றும் சொல்லலாம்.  அது நீங்கள் எந்தத் திசையிலிருந்து பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது - அவன் உதயமானான். 
மதியம் இரண்டரை மணி இருக்கலாம்.  பாதி வீடுகளில் அலுவலகத்துச் சென்றிருக்கக் கூடியவர்களைத் தவிர்த்து வீட்டிலிருப்பவர்கள் மதிய உணவை முடித்து தொலைக்காட்சியின் அழுகைத் தொடர்களிலோ, அல்லது நித்திரையின் வசப்படும் நேரமாகவோ இருக்கலாம்.  
                                                                                                                                              நாளை.....

30 கருத்துகள்:

 1. படம் குழிப் பணியாரத்திற்கானதோ?!
  எங்கள் வீட்டிலும் வெள்ளை அப்பம் பிடித்தமான ஒன்று

  வோ டாகியா ஹை க்யா??!!

  பதிலளிநீக்கு
 2. //சிலர் மிளகு சீரகம் போடாமலும் வெள்ளை அப்பம் செய்வார்கள்) //

  சொல்றதுக்கு இருந்தேன். நான் போடமாட்டேன்னு! நீங்களே சொல்லிட்டீங்க! நம்ம ரங்க்ஸுக்கு ரொம்பப் பிடிச்சது. பொண்ணு வந்தப்போக் கூடப் பண்ணினேன். அப்பு விரும்பிச் சாப்பிட்டது. :)

  பதிலளிநீக்கு
 3. //http://geetha-sambasivam.blogspot.in/2013/07/blog-post_1279.html//

  என்னோட செய்முறைக்கான சுட்டி இங்கே. எல்லாம் ஒரு விளம்பரந்தேன்!

  பதிலளிநீக்கு
 4. தொடர்கதை ஆரம்பம் சூப்பர் எனில் அதை ஆரம்பித்திருக்கும் விதம்! ஹிஹிஹி! தொடருங்க!

  பதிலளிநீக்கு
 5. (சீரகம் என்ன கலர் என்று அண்ணனுக்கு போன் செய்து கேட்டேன். குதிரைச்சாணி கலர் என்றார்//
  (சீரகம் என்ன கலர் என்று அண்ணனுக்கு போன் செய்து கேட்டேன். குதிரைச்சாணி கலர் என்றார்//
  அவசர அவசரமாக எதிர்த்த கடையிலே சீரகம் வாங்க போனேன். எங்கள் வீட்டிலே சீரகம் பொடியாகத் தான் இருந்தது. ஒரு ஸ்பூன் சீரகப் பொடி ஒரு ஸ்பூன் சீரக த்திற்கு மேலாக இருக்கும் என்று தொன்றியாதால் அடுத்து விதி என்னைப் பார்த்து சிரிக்கிறது.
  கடைக்காரன் கொடுத்த சீரகம் குதிரைச் சாணி கலர் இருக்குமே ..நீ கொடுத்தது அப்படி இல்லயே என்றேன். அவன் என்னை ஒரு தினுசா பார்த்துவிட்டு,
  ஆம்பளக் குதிரையா, பொம்பளக் குதிரை சாணம் வெவ்வேறு கலர் லே இருக்கும். தெரியுமா என்கிறான்.
  வெளிர் க்ரே கலர் லேந்து டார்க் கலர் க்ரே வரைக்கும் நார்மலா இருக்கும். அதற்கு போடற கொள்ளு என்ன கலரோ அதைப் பொறுத்தது. எதற்கும், நீங்கள் குதிரை ஒன்றைப் பார்த்து விட்டு , அந்த சாணத்தைப் பார்த்து விட்டு சீரகம் வாங்குங்கள். என்றேன்.
  அதுவும் சரிதான். குதிரை எங்கே பார்க்கலாம் என்றேன். அப்பறம் தான் எனக்கே தோன்றியது. கிண்டி ரேஸ் கிளப்பில் பார்க்கலாம் என்று தோன்றியது. உடனே வடபழனி பஸ் ஸ்டாண்ட் சென்று 80 பஸ் ரூட்டில் சென்று கொண்டு இருந்த பொது,  ஜாபர்கான் பேட் அருகே ஒரு குதிரையை பார்த்து உடனே அங்கு இரங்கினேன்.  நான் வந்த விஷயத்தை சொன்ன உடன் அவன் அதுக்காத்தான்யா டாக்டரைப் பார்க்க வந்தேன். அப்ப தான் கவனிச்சேன். அது வெடிரினரி டாக்டர் டிஸ்பென்சரி.  என்ன ப்ராப்ளம் என்றேன்.  குதிரை வயிறு சரியா இல்லேன்னு சீரக கஷாயம் கொடுத்தேங்க. அதுலேந்து ஒரே டயரியா வா இருக்குது என்றான்.  சீரகம் வாயுத் தொந்தரவுக்கு. சீரணம் சமனப்படுத்தும். ஆனா நீ சொல்றது வராதே.. என்றேன்.  நீங்க சொல்றது சரிதாங்க...சீரக கஷாயம் குடிக்கணும்லே. அதுக்காக, எதிர்த்த கடைலே  வெள்ளை அப்பம் அஞ்சு வாங்கித் தந்தேங்க ....  ஒரே ஓட்டமாக திரும்ப ஓடி வந்ததில் மூச்சு இறைக்கிறது.  சுப்பு தாத்தா.  அவசர அவசரமாக எதிர்த்த கடையிலே சீரகம் வாங்க போனேன். எங்கள் வீட்டிலே சீரகம் பொடியாகத் தான் இருந்தது. ஒரு ஸ்பூன் சீரகப் பொடி ஒரு ஸ்பூன் சீரக த்திற்கு மேலாக இருக்கும் என்று தொன்றியாதால் அடுத்து விதி என்னைப் பார்த்து சிரிக்கிறது.
  கடைக்காரன் கொடுத்த சீரகம் குதிரைச் சாணி கலர் இருக்குமே ..நீ கொடுத்தது அப்படி இல்லயே என்றேன். அவன் என்னை ஒரு தினுசா பார்த்துவிட்டு,
  ஆம்பளக் குதிரையா, பொம்பளக் குதிரை சாணம் வெவ்வேறு கலர் லே இருக்கும். தெரியுமா என்கிறான்.
  வெளிர் க்ரே கலர் லேந்து டார்க் கலர் க்ரே வரைக்கும் நார்மலா இருக்கும். அதற்கு போடற கொள்ளு என்ன கலரோ அதைப் பொறுத்தது. எதற்கும், நீங்கள் குதிரை ஒன்றைப் பார்த்து விட்டு , அந்த சாணத்தைப் பார்த்து விட்டு சீரகம் வாங்குங்கள். என்றேன்.
  அதுவும் சரிதான். குதிரை எங்கே பார்க்கலாம் என்றேன். அப்பறம் தான் எனக்கே தோன்றியது. கிண்டி ரேஸ் கிளப்பில் பார்க்கலாம் என்று தோன்றியது. உடனே வடபழனி பஸ் ஸ்டாண்ட் சென்று 80 பஸ் ரூட்டில் சென்று கொண்டு இருந்த பொது,  ஜாபர்கான் பேட் அருகே ஒரு குதிரையை பார்த்து உடனே அங்கு இரங்கினேன்.  நான் வந்த விஷயத்தை சொன்ன உடன் அவன் அதுக்காத்தான்யா டாக்டரைப் பார்க்க வந்தேன். அப்ப தான் கவனிச்சேன். அது வெடிரினரி டாக்டர் டிஸ்பென்சரி.  என்ன ப்ராப்ளம் என்றேன்.  குதிரை வயிறு சரியா இல்லேன்னு சீரக கஷாயம் கொடுத்தேங்க. அதுலேந்து ஒரே டயரியா வா இருக்குது என்றான்.  சீரகம் வாயுத் தொந்தரவுக்கு. சீரணம் சமனப்படுத்தும். ஆனா நீ சொல்றது வராதே.. என்றேன்.  நீங்க சொல்றது சரிதாங்க...சீரக கஷாயம் குடிக்கணும்லே. அதுக்காக, எதிர்த்த கடைலே  வெள்ளை அப்பம் அஞ்சு வாங்கித் தந்தேங்க ....  ஒரே ஓட்டமாக திரும்ப ஓடி வந்ததில் மூச்சு இறைக்கிறது.  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 6. வெள்ளை அப்பம் குறிப்பு அருமை! அந்த பச்சை மிளகாய் படம் அத்தனை அழகாயிருக்கிறது! ஆனால் வெள்ளை அப்பம் சுட்ட பின்னாலும் வெள்ளையாகத்தான் இருக்கும்!

  பாஸிடிவ் செய்திகளுக்காக உங்களுக்கு இங்கே ஒரு இணைப்பு:

  http://jobscompetitions.ning.com/forum/topics/real-heroes-award-cnn-india

  பதிலளிநீக்கு
 7. இதைக் குழிப்பணியாரம் என்றும் சொல்வார்கள்

  பதிலளிநீக்கு
 8. ஆம், இதே செய்முறையில் நானும் குழிப்பணியாரமாக செய்து விடுவேன்.

  ஏழுநாள் தொடர்கதையில்.. உதயமானவன் மனிதன்தானா.. என இப்போதே சஸ்பென்ஸை சந்தேகிக்க ஆரம்பித்து விட்டேன். தொடரவும்:).

  பதிலளிநீக்கு
 9. இதில் உள்ள பச்சைமிளகாய் எண்ணெயில் வெடிக்காதா?
  ஆனாலும் அப்பம் ரொம்ப காரம்,,

  பதிலளிநீக்கு
 10. @mageswari balachandran, பச்சை மிளகாயை நீள வாக்கில் இரண்டாகக் கீறி உள்ளே உள்ள விதைகளை நரம்போடு எடுத்துட்டுப் பொடிப் பொடியா நறுக்கிச் சேர்த்தால் காரம் தெரியாது. வடமாநிலங்களில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை எண்ணெயில் வதக்குவாங்க. அதிலும் காரம் தெரியாது என்பார்கள். ஆனால் எனக்கு என்னமோ காரமா இருக்கும் னு தோணும். :)

  பதிலளிநீக்கு
 11. எண்ணையைக் குடிக்கும்!ஆனாலும் ருசிதான்!

  பதிலளிநீக்கு
 12. இதே வெள்ளை அப்பம்தான் எங்கள் வீட்டிலும். நாங்கள் சீரகம் சேர்ப்பது இல்லை. மிளகு கூட எப்போதாவது. மற்றவை அப்படியே....

  அது சரி கேட்க வேண்டும் என்று கேட்க வந்த கேள்வியை நீங்களே கேட்டுவிட்டீர்கள். அதான் ஏன் வெள்ளை அப்பம்? கோல்டன் கலரில் அல்லவா இருக்கும்!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 13. ஏதோ சஸ்பென்ஸ் போல கதை ஆரம்பம் சொல்லுது...தொடர்கின்றோம்...

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
 14. அரிசிக்கு நீங்கள் போட்டிருக்கும் படத்தை பார்க்கும் போது வெள்ளைக்காரன் தலைமுடி போல தோன்றுகிறது! எளிமையான செய்முறை விளக்கம்! ஏழுநாள் தொடர்கதை தூள் கிளப்புகிறது! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 15. மதுரை கோபு ஐயங்கார் கடையிலே மத்தியானமாப் போடுவாங்க வெள்ளை அப்பம். வெள்ளையாகத் தான் இருக்கும். மேலே மொறு மொறு! உள்ளே கூடு கூடாக வரும். என் அம்மா பண்ணுவதும் அப்படித் தான் இருக்கும். கொஞ்ச நஞ்சம் எனக்கும் அப்படி வரும்! ஒரு முறை வெள்ளையப்பம் பண்ணிப் படத்தோடு போடுகிறேன். :) காராவடை தான் மேலே படத்தில் உள்ளது போல் சிவந்து காணப்படும்.

  பதிலளிநீக்கு
 16. தளிர் சுரேஷ், படத்தில் இருப்பது பாசுமதி அரிசினு நினைக்கிறேன். :)

  பதிலளிநீக்கு
 17. அது என்ன 1,50.831? அத்தனாவது பதிவா? அல்லது அத்தனை பேர் படிப்பாங்களா?

  பதிலளிநீக்கு
 18. பச்சைக் கறிவேப்பிலை பதினாலு இலைகள் மட்டுமே இருந்தால் என்ன செய்ய?

  பதிலளிநீக்கு
 19. அந்த பச்சை மிளகாயை பார்த்ததும் பயம் வந்துவிட்டது

  பதிலளிநீக்கு
 20. அந்த பச்சை மிளகாயை பார்த்ததும் பயம் வந்துவிட்டது

  பதிலளிநீக்கு
 21. வெள்ளையப்பம் செய் ஆசைதான் ஆனால் பதம் பிழைத்தால் அதனை என்ன செய்வது என்றுதான் ஜோசிக்கின்றேன்))) அருமையான பகிர்வு. கதை நாளை வருமா??

  பதிலளிநீக்கு
 22. எண்ணையில்லாமல் வெள்ளையப்பம் (அல்லது குழிப்பணியாரம்) செய்வதற்கு வழியில்லையா?

  பதிலளிநீக்கு
 23. வெள்ளையப்பம் பதமெல்லாம் பிழையாகாது தனிமரம். :)

  நெல்லைத் தமிழன், அப்படி ஒண்ணும் எண்ணெய் குடிக்காது. வேணுமானால் நான் ஸ்டிக் குழி ஆப்பச் சட்டியிலே பண்ணச் சொல்லிச் சாப்பிடுங்க. :)

  பதிலளிநீக்கு
 24. கொஞ்சம் பண்றதுன்னா எந்த க்ரைண்டரல் போடுவது? அரிசி பருப்பை ஒன்றாகவே போட்டு மிக்ஸியில் நன்றாக அரைத்துப் பண்ணினாலும் நன்றாக வரும். தோசைமாவு கெட்டியாயாக அறைத்ததிலும் செய்யலாம். அப்பக்காரலில் செய்தால் எண்ணெய் அவ்வளவாக இழுக்காது. நேர்முகமாக வாணலியில் எண்ணெய் வைக்கும்போது அப்பம் குதித்து கும்மாளமிட்டு எண்ணெயைக் குடிப்பதுடன் சிவந்த நிறத்தையும் கொடுக்கும். எண்ணெயைப் பிழிவது அதிரஸத்தில் மட்டுமே. அப்பத்தில் எண்ணெயை அழுத்திப் பிழிந்தால் ஷேப் வேறுமாதிரி ஆகி வரட்டென்ற தோற்றம் உண்டாகும். மாவு ஸரியான பதத்தில் நீர்க்க இல்லாமல் இருந்தால் கெடுவதற்கு ஒன்றுமே இல்லை. மிளகு,பச்சைமிளகாய் அவரவர்கள் விருப்பம்தான். அப்பக்காரல் என்ற அப்பக்குழிகள் கொண்ட வாணலி முன்பெல்லாம் தமிழ்நாட்டில் கிடையாது. கேரளவரவுதான் அது. மிகவும் ஸௌகரியமானது. உங்களின் அப்பத்திற்கு ஏக டிமாண்ட். அருமை. துளி தேங்காயும் அரைக்கும்போதே போட்டும் பாருங்கள். அது ஒரு தனிருசியாக இருக்கும். அன்புடன்

  பதிலளிநீக்கு
 25. வெள்ளைஅப்பனின் வெற்றி பின்னூட்டங்களில் கூத்தாடுகிறது.

  சுப்பு அண்ணா குதிரைகளைத் தேடீ
  அலைந்திருக்க வேண்டாம் இந்த வெய்யிலில்.

  நாங்கள் பச்சை மிளகாய் சேர்க்க மாட்டோம்.

  பார்த்து மகிழ்ந்தேன். சாப்பிட பயம். எண்ணெயில் குதிக்கிறதே.>}}}}}

  பதிலளிநீக்கு
 26. சனி, ஞாயிறு களில் ஸ்பெஷல் டிபனாக எங்கள் வீட்டில் இந்த வெள்ளையப்பம் அல்லது குழிப் பணியாரம் செய்யப்படும். அரிசி, உ. பருப்பு இரண்டையும் ஒன்றாகவே நனைத்து, மிக்சியில் அரைத்து செய்வோம். அப்பக்காரலில் செய்வோம். இதனால் ஒரே சமயத்தில் 7 அப்பம் ரெடியாகிவிடும். சீரகம், மிளகு போடுவதில்லை. என் மாட்டுப்பெண் இதில் வெங்காயம் வதக்கிப் போடுவாள். இஞ்சியை துருவிப் போட்டு விடுவோம். வாயில் அகப்படாது என்பதனால். இத்தனை சிவக்காது. ஓரளவுக்கு வெளுப்பாகவே இருக்கும். சரி இதற்குத் தொட்டுக் கொள்ள என்ன? அடுத்த திங்க கிழமை வரை காத்திருக்கணுமா? எங்கள் வீட்டில் தேங்காய் சட்னி.

  பதிலளிநீக்கு
 27. காரைக்குடிப் பக்கம் வெள்ளைப் பணியாரம்னு இதைச் சொல்வாங்க. இதுக்குத் தனியா ஊற வைச்சு அரைச்சே செய்வாங்க. வெங்காயச் சட்னி தான் இதுக்கு ஏத்த துணைனு என்னோட அபிப்பிராயம்! :)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!