வியாழன், 13 ஆகஸ்ட், 2015

ஏமாந்த அனுபவம் : "அதுதான் அடி வாங்கலை இல்லே விடுங்க!"அலுவலக அனுபவங்கள் போலவே ஏமாந்த அனுபவங்களுக்கும் அவ்வப்போது பிறரிடமிருந்து விஷயதானம் கிடைக்கும்.  சமீபத்தில் உறவினர் ஒருவர் துணி விற்பனையாளர் ஒருவரிடம் ஏமாந்த அனுபவம் ஒன்றைச் சொன்னார்.  அது என் பழைய அனுபவத்தை நினைவு படுத்தி விட்டது!  முன்னரே வெளியிட்ட இந்த மதுரை அனுபவத்தை மீள் பதிவாய்...


ஏமாந்த அனுபவங்களில் இன்னும் ஒன்று!

அப்போது நான் வத்திராயிருப்பு என்ற ஊரில் பணி புரிந்து கொண்டிருந்தேன் .  தினமும் மதுரையிலிருந்து காலை பஸ்ஸில் சென்று வருவது வழக்கம்.  
சுமார் ஒன்றரை மணி நேரப் பயணம் அது.                                                         Image result for madurai old bus stand images

காலை ஏழு மணிக்கு பணியில் இருக்க வேண்டும் என்பதால் காலை ஐந்து முதல் ஐந்தரைக்குள் நான் பஸ் ஏறி விடுவது வழக்கம். ஜெயவிலாஸ் பஸ் 'கூமாப்பட்டி' என்று போட்டுக் கொண்டு நிற்கும். அதில் போனால் தாமத வருகைதான்.  அதற்குமுன் கிளம்பும் பாண்டியன் பஸ் ஒன்றில் பெரும்பாலும் செல்வேன். 
"பாண்டியன் போக்குவரத்துக் கழக"மாய் இருந்த காலம்.  அதற்குப் பின்தான் எல்லாம் "அரசு போக்குவரத்துக் கழகமாயின.  வார ஓய்வு தவிர எல்லா நாளும் செல்வதால் அந்த நேர ஓட்டுனர், நடத்துனர்களுக்கு நான் ரொம்பப் பரிச்சயம். 

                                                                      
                                                                         Image result for madurai jayavilas bus images 


என்ன பயன்?

அந்த நேரங்களில் மெதுவாகத்தான் கூட்டம் நிரம்பும்.   எப்படி இருந்தாலும் முழு பஸ் நிரம்பாது.  (அப்போது) பாண்டியன் அரசுப் போக்குவரத்துக் கழகம் என்பதால் நேரத்துக்கு எப்படியும் எடுத்து விடுவார்கள். சில சமயம் அந்த ஒன்றரை மணி நேரம் புத்தகம் படித்துக் கொண்டே போவேன்.  சில சமயம் லேசான தூக்கம்.   பெரும்பாலும் 'சில்'லென்ற காலைக் காற்று முகத்தில் வீச பேருந்தில் பயணம் செய்யும்போது அதற்கிணையாக ஏதாவது எண்ணங்களோ அல்லது பஸ்ஸில் போடும் பாடல்களோ மனதை ஆக்ரமித்துக் கொள்ளும். 
 

                                                        Image result for pandiyan roadways corporation bus images
 
கட்டபொம்மன் சிலை அருகே இருந்த பஸ் நிலையம் பெரியார் நிலையம் என்று அழைக்கப் பட்டது.  இப்போது மாட்டுத் தாவணி என்ற விநோதப் பெயருடைய ஊருக்கு வெளியே உள்ள இடத்திலிருந்து பஸ்கள் கிளம்புகின்றன.  நான் செல்லும் வெளியூர்ப் பேருந்துகள் அந்த பெரியார் பேருந்து நிலையம் எதிரே இருந்தது. இப்போதும் அங்கு பஸ் நிலையம் உள்ளது. ஆனால் வெளியூர் அல்ல.  அப்போது அந்த நேரத்தில் பஸ் நிலையத்தில் டீக் கடை வியாபாரம்தான் பெரிதாக இருக்கும்.
 
                                                                      Image result for madurai bus stand shops images

ஒருநாள் பஸ் கிளம்பக் காத்துக் கொண்டிருந்தேன்.  ஓட்டுனரும் நடத்துனரும் பேசிக் கொண்டிருந்தனர்.

ஒரு நபர் என் அருகில் உள்ள நபரிடம் வந்தார்.

"சார்! நான் வெளியூரு...நேத்து நைட் மதுரை வந்தேன். ஒரு விசேஷத்துக்கு துணிமணி, சாமான்செட்டு எடுக்க வந்தோம். காசு அதுலேயே செலவு ஆய்டிச்சி...ஊர் திரும்ப காசு வேணும். அதனாலதான் இதை விற்கிறேன்..." என்று ஒரு துணி Bit டை நீட்டினார்.

இதில் ஏதோ ஏமாற்று இருக்கும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். எனவே நான் சற்று தள்ளி நின்று கொண்டேன்.

"நல்ல பிட் சார், வாங்கிக்குங்க...வேற யார்ட்டயாவது காட்டினால் அள்ளிக்குவாங்க...என் தேவைக்குதான்..." என்று அவர் என் பக்கத்து நபரை நொழப்பிக் கொண்டிருந்தார்.

அவர் முதலில் மறுத்தார். சரி, விவரமான ஆள்தான் என்று நினைத்துக் கொண்டேன். அப்புறம் இவர் வற்புறுத்தல் அதிகமானது. அவர் மெல்ல தன் கையில் திணிக்கப் பட்ட அந்த பார்சலை கையில் பிடித்தார்.

'ஆஹா...சிக்கினாண்டா'  என்று எண்ணிக் கொண்டேன். அவர் என் முகத்தைப் பார்த்தால், 'வேண்டாம்' என்பது போல் தலை அசைத்துக் காப்பாற்றலாம் என்பது என் எண்ணம்.  அவர் என்னை, என் முகத்தை கவனிப்பதாயில்லை.

சற்று நேரம் பொறுத்து 'விற்பனையாளர்' விலகிச் செல்ல, இவர் என் அருகே வந்து நின்றார்.

அவரைப் பார்த்து 'தப்பித்தாய்' என்பது போல ஒரு ஸ்மைல் அடித்தேன். விதியும் சிரித்தது.

"வாங்கி இருக்கலாம்... விட்டு விட்டேன்..ச்சே.."என்றார்.

"இல்லைங்க... வாங்காம இருந்ததுதான் நல்லது" என்றேன்.

"ஏன்" - அவர்.

"இதில் எல்லாம் ஏமாற்று வேலை இருக்கு... துணி மட்டமாய் இருக்கும் அல்லது அளவு குறைச்சலாய் இருக்கும்.." என்றேன்...

"இல்லை, துணி நல்ல துணிதான்...பார்த்தேனே..." என்றார்.

நடத்துனரும் ஓட்டுனரும் என்னை / எங்களைப் பார்த்துக் கொண்டே பஸ் முன்னால் சென்று டிக்கெட் போட ஆரம்பித்தார்.

"விட்டு விட்டேனே " என்று மீண்டும் புலம்பியவர் அவரைத் தேட ஆரம்பித்தார். அடுத்த பஸ் அருகில் வேறொரு ஆளை மடக்கிக் கொண்டிருந்த மேற்படி விற்பனையாளர் இவர் முகக் குறிப்பை பார்த்து மீண்டும் இவர் அருகில் வந்தார்.

"கடைசியா என்ன விலை சொல்றேப்பா?" என்றார் என் அருகு.

 "கடைசி விலை நூற்றைம்பது ரூபாய்"என்றார் வெளியூர்.

இப்போது நிகழ்ச்சியில் எதிர்பாராத் திருப்பம்!

'சக பயணி' என்னிடம், "சார்! நூற்றைம்பது ரூபாய்தான்... வாங்கிக்குங்க...நல்ல Stuff.. " என்றார்! 


                                                                    Image result for passengers inside a old PRC bus images

நான் அதிர்ந்து, "வேண்டாம்...நான் கேட்கவே இல்லையே.." என்றேன்.

"இல்லை சார், நல்ல துணிதான், எப்படி சொல்கிறேன் என்றால் நானே டெய்லர்தான்..தைரியமா (!) வாங்கிக்குங்க" என்று சொல்ல, நான், "அட, நான் உங்களையே வாங்க வேண்டாம்னு சொல்றேன்.. என்னைப் போய்...எனக்கு வேணாங்க..." என்றேன்.

இந்த எதிர்பாராத் திருப்பத்தை யூகிக்க முடியாததால் அதிர்ச்சியில் என்னிடம் பேச்சில் தயக்கம் தலை காட்டி இருக்க வேண்டும்.

இது வரை மௌனமாய் இருந்த 'விற்பனையாளர்' இப்போது வாய் திறந்தார்..

"சரி விடு குரு...வேற ஆள் பார்க்கலாம்..." என்றவர் என்னைப் பார்த்து, "சார், வயசுப் பிள்ளையா இருக்கீங்க...உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? நீங்க வாங்கலைன்னா வுடுங்க...அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணி எங்க பொழைப்பை ஏன் கெடுக்கறீங்க..." என்று 'அன்புடன்' தோளில் அணைத்து "வாங்க டீ சாப்பிடலாம்" என்று எதிர்க் கடையை காட்டினார்.

நான் "வேண்டாம்" என்றேன்.

"பயப்படாதீங்க...வேற ஒண்ணும் பண்ண மாட்டோம்..சின்ன வயசு உங்களுக்குப் புரியலை...நாம எல்லாம் தோஸ்துதான்...கண்டக்டர், டிரைவர்லாம் இருக்காங்க..  பயப்படாம வாங்க..  தினமும் உங்களைப் பார்க்கறோமே...  ஒண்ணும் பண்ண மாட்டோம்..  ஆனா ஒண்ணு, இனிமே இப்படிப் பண்ணாதீங்க..." என்றார்.  

அவர்களுடன் ஐந்தடி தூரத்தில் இருந்த டீக் கடைக்கு சென்று அவர்களுடன் டீ அருந்தினோம். நான் காசு எடுத்தும் என்னைக் கொடுக்க விடவில்லை அவர்கள்! 
 
                                                                   Image result for madurai bus stand shops images

அவர்கள் விலகிச் சென்ற பின்னர் வாடிக்கை நடத்துனரிடம் வந்து "உங்களுக்குத் தெரியுமில்லே...சொல்லி இருக்கலாம் இல்லே..." என்றேன் ஆதங்கத்துடன்.

அவர், "அதான் ஒண்ணும் பண்ணலையே.. விடுங்க...  நீங்க இப்போ போய்டுவீங்க...  நாங்க தினமும் ஏழெட்டு ட்ரிப் அடிக்கணும் இல்லே...  தவிர, விபரீதம் ஆனா வந்திருப்போம்..இதெல்லாம் சாதாரணம் சார்..." என்றார்.

எங்க மதுரைக்காரய்ங்க எப்பவுமே நியாயமானவய்ங்கதேன்.  இல்லே...?
 
 
 
 
 
 
இது ஒரு மீள்பதிவு.
 
 
 
 
படங்கள்  :  நன்றி இணையம்.

47 கருத்துகள்:

 1. ஆகா
  கூட்டனி போட்டுதான் ஏமாற்றுகிறார்கள்
  நாம்தான் எச்சரிக்கையாகஇருக்க வேண்டியிருக்கிறது
  நன்றி நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை. கூட்டணி சேர்ந்துதான் ஏமாற்றுகிறார்கள். நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

   நீக்கு
 2. தப்பிச்சீங்க. எனக்கும் இதே போல ஒன்று நடந்த அனுபவம் உண்டு. விற்க வந்த ஆளின் முகத்தையே பார்க்காமலே வேணாம் என்று சொல்லிவிட்டு விரைவு நடை எடுத்தேன்.பிறகுதான் தெரிந்தது அவர்களுடன் பேச்சு கொடுத்தாலே ஒரு வழி பண்ணிவிடுவார்கள் என்று.

  பதிலளிநீக்கு
 3. அந்த முகம் உங்களுக்கு இன்னும் ஞாபகம் இருக்கா? அப்படி இருந்தா அந்த முகம் இன்றைய தலைவர்கள் முகத்தில் யாருடைய முகம் போல இருக்கிறது ? எதுக்கு கேட்கிறேன்னா அவங்க நிச்சயம் அரசியல் தலைங்களாகத்தான் வளர்ந்து இருப்பார்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியாச் சொன்னீங்க 'அவர்கள் உண்மைகள்'. நன்றி, வருகைக்கம், வாக்குக்கும்.

   நீக்கு
 4. இப்படியொரு விநோத அனுபவமா? அடிக்குப் பதில் ஒரு டீ! இத்தோடு போச்சே...

  பதிலளிநீக்கு
 5. முன்பு பம்பாயில் துணி வாங்கி ஏமாந்த அனுபவம் பற்றிஎழுதி இருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 6. பரவாயில்லை ஸ்ரீராம்,,,,,,
  நல்ல பகிர்வு,

  பதிலளிநீக்கு
 7. என்ன சார்..அவங்க துணியில ஏமாத்தினாங்கனா, நீங்க பதிவுல ஏமாத்திவிட்டீங்க. அவ்வளவு சீக்கிரமா ஒரு பதிவை மறந்துருவோம்னு நினைச்சு, மீள் பதிவு போடுகிறீர்களே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆ! நெல்லைத்தமிழன்... நீங்க அப்போப் படிச்சீங்களா? ஆனா நானே மீள்பதிவுன்னு சொல்லியிருக்கேனே... இப்பக் கூடப் பாருங்க... நிறையப் படிக்காதவங்க (முன்னாலேயே இந்தப் பதிவை ) இருக்காங்க...

   நன்றி.

   நீக்கு
 8. ஏமாற்றுவதற்க்கு அறிவு வேண்டும் அவர்களிடம் இருந்திருக்கிறது...

  பதிலளிநீக்கு
 9. பதில்கள்
  1. இதில் கூட்டணி சேராமல் எதில் சேர்வார்கள்!!! நன்றி பழனி.கந்தசாமி ஸார்.

   நீக்கு
 10. அட! எப்படியெல்லாம் ஏமாத்தறாங்க! கூடவே மிரட்டலும்!

  பதிலளிநீக்கு
 11. இவர்களெல்லாம் எப்படியும் வாழலாம் ரக ஆசாமிகள்...!!! நாம்தான் உஷாராக இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 12. நல்லவேளை, எங்கே நீங்கள் மாட்டிக் கொண்டு விடுவீர்களோ என்று கொஞ்சம் பயமாக இருந்தது. அப்புறம் ஸ்ரீராமா. கொக்கா? என்று புரிந்தது.
  அவரவர்கள் எப்படித் தப்பிப்பது என்று பார்க்கிறார்கள். இன்னொருவர் மாட்டிக் கொண்டால் வேடிக்கை பார்ப்பார்கள் போலிருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.....ஹா...ஹா... அப்போ எல்லாம் அசட்டுத் துணிச்சல் ஜாஸ்தி ரஞ்ஜனி மேடம். நன்றி.

   நீக்கு
 13. அனைவரும் ஜாக்கிரதையாய் இருங்க ,மதுரைக்கு வரும் போது:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்பவும் மதுரைல இந்த மாதிரி கோஷ்டி இருக்காங்களா பகவான்ஜி?

   நீக்கு
 14. அடிக்கு சற்றும் குறைந்ததல்லவே இது போன்ற அடாவடிகள்.

  பதிலளிநீக்கு
 15. அட! ....ஏமாத்துறதுல கூட்டாளி வேறயா...அவரும் கஸ்டமர் போல ....செம டெக்னிக்...நீங்கள் ஏமாறாமல் இருந்தீர்களே...டீயோடு போச்சு....

  கீதா: இதே போன்று மதுரையில் என் தந்தைக்கு அனுபவம் உண்டு...செமையா ஏமாந்தாரு...

  பதிலளிநீக்கு
 16. நாங்கல்லாம் துணிக்கடையில் தான் ஏமாறுவோம். இப்படி எல்லாம் ஏமாறுவோமா என்ன? எங்களை யார்னு நினைச்சீங்க?

  பதிலளிநீக்கு
 17. விதண்டாவாதிகள் இந்தவரை ஒரு டீகொடுத்து உபசரித்தார்களா வார்னிங்கா. துஷடரைக் கண்டால் தூர விலகுவதுதான் ஸரி. அன்புடன்

  பதிலளிநீக்கு
 18. வணக்கம் சகோதரரே.

  முழுவதும் படித்தேன். நல்லவேளை வேறு ஏதும் அசம்பாவிதம் நடக்காமல் தப்பித்தீர்கள். ஆனால் ஒன்று., இந்த மாதிரி சமயங்களில் நாம் எவ்வளவோ ஜாக்கிரதையாக இருந்தாலும், நம் நேரம் நமக்கெதிராக நடப்பதற்கு வழி வகுத்து விடுகிறது. வேறு என்ன சொல்ல.? கடவுள்தான் காப்பாற்றினார்.

  என் தாமத வருகைகளுக்கு வருந்துகிறேன்.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 19. ஏமாறுவது போல் நடித்த சக பயணி கூட்டாளியா? நல்ல திருப்பம் தான். எப்படியோ ஏமாறாமல் தப்பித்தீர்கள்! மறக்க முடியாத அனுபவம் தான்.

  பதிலளிநீக்கு
 20. எத்தனை எத்தனை விதமாய் ஏமாற்றுகிறார்கள்.... நல்ல வேளை தப்பித்தீர்களே!

  பதிலளிநீக்கு
 21. படித்த நினைவு இருக்கிறது. ஏமாற்றுவது ஒரு கலை என பதிவர் நடனசபாபதி அவர்கள் கூறுவது உண்மைதான் போலும்

  பதிலளிநீக்கு
 22. முன்னாடி கமென்டி இருக்கேனோ? இப்போக் காணோமே என்னோட கமென்டை!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!