செவ்வாய், 8 மார்ச், 2016

கேட்டு வாங்கிப் போடும் கதை :: சொர்க்கத்தின் எல்லை நரகம்


இந்த வார 'கேட்டு வாங்கிப் போடும் கதை' பகுதியில் தேனம்மை லக்ஷ்மணனின் படைப்பு.

கதை, கவிதை, கட்டுரை, பிடித்த பாடல்கள் பகிர்வு என்று பல்சுவையிலும்  எழுதுவார். 'அன்னபட்சி, 'ங்கா', 'சாதனை அரசிகள்' 'பெண் பூக்கள்' என்று பல்வேறு நூல்கள் எழுதி உள்ளவர்.  ஊடத்துறையில் பிரபலமானவர்.  


அவரின் தளம். சும்மா.


தனது படைப்பு பற்றி தேனம்மை...

=================================================

அன்பின் ஸ்ரீராம்,

தேனம்மை எழுதிக் கொண்டது.

இத்துடன் நீங்க கேட்ட கதையை அனுப்பி இருக்கேன்.
இது குழந்தைத் தொழிலாளி பத்தின கதை என்பதால் கல்லூரிக் கட்டத்தில் எழுதினாலும் மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். ஒரு காலகட்டத்தில் அதாவது நாங்க எல்லாம் சின்னக் குழந்தைகளாக இருந்தபோது வீடுகளில் குழந்தைகளை வைத்துக் கொள்ள என்று குட்டிகள் எனப்படும் வேலைக்காரச் சிறுமிகளை வைத்திருப்பார்கள். அந்தக் குழந்தைகள் பெரும்பாலும் கிராமத்திலிருந்து உணவுக்காகவும் உறையுளுக்காகவும் மேலும் தாய் தந்தையருக்கு பணம் ஈட்டும் கருவியாகவும் இம்மாதிரி இருக்கவைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

எல்லாரும் அப்படி அல்ல என்றாலும் ஓரிரு இடங்களில் அப்படித்தான். அவர்கள் வீடுகளில் குழந்தைகளுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் இந்த மாதிரி சொன்ன வேலைகளைச் செய்யும் ( பாப்பாவைப் பாத்துக் கொள்வது, பாத்திரம் தேய்ப்பது, துணி மடிப்பது, அரைத்துக்  கொடுப்பது, கடை கண்ணிக்குப் போய் வருவது,காய் நறுக்குவது வெங்காயம் உறிப்பது, மாவாட்டுவது - பெரும்பகுதி பாப்பாவைப் பார்த்துக் கொண்டு அதன் துணிமணிகளைத் துவைப்பது ) போன்ற ஏவல் வேலைகளுக்கு வைக்கப்பட்டிருந்திருக்கின்றார்கள்.
சிலர் இல்லங்களில் பெற்றோருக்கு மாதாமாதம் சம்பளமாக ஒரு தொகை கொடுத்தபின்னும் இம்மாதிரிக் குழந்தைகளை தன் குழந்தைகள் போலவீட்டாரே படிக்க வைத்து வேலைக்குச் சேர்த்துத் திருமணமும் செய்துவைப்பதுண்டு.

ஒரிரு வீடுகளில் அவர்கள் நவீன அடிமைகள் போல நடத்தப்பட்டிருப்பதையும் பார்த்திருக்கிறேன். அதிக வேலை இல்லாவிட்டாலும் எழுவதிலிருந்து துயில்வது வரை சிறு சிறு வேலைகள் இருந்துகொண்டே இருக்கும். தோட்டத்துக்கு நீர் பாய்ச்சுவது, பூப்பறித்துத் தொடுப்பது, விருந்தினர்களுக்கு காஃபி ஜூஸ் கொடுப்பது, இன்னபிறவென்று.


எனவே எனது கல்லூரிக் காலச் சிறுகதையை குழந்தைத் தொழிலாளிகளான சிறுமிகளின் ஆசையை ( இதில் கல்வி கற்க ஆசைப்பட்ட சிறுமிகள் சிலரே ) இதில் பதிவு செய்துள்ளேன். சிறுவயதுச் சம்பவங்கள், மனித மன விநோதங்கள், கல்லூரிக் காலப் பதிவுகள், வாழ்வியல் பதிவுகள், நவீன த்ரோகங்கள், குழந்தை மேலான பாலியல் வன்முறை, குடும்பக் கட்டமைப்புக்கான விவாகம் என்னும் விஷயத்தில் எழும் ப்ரதி பேதம் எல்லாம் என் கதைகளில் இருந்தாலும் எனக்கு இது முக்கியமான கதை எனத் தோன்றியதால் அனுப்பி இருக்கிறேன். 

மேரி லாண்ட் எக்கோஸ் என்ற எங்கள் கல்லூரி ஆண்டுவிழா மலரில் வெளியானது. 1984 / 1985 இருக்கலாம்.

எங்கள் ப்லாகில் வெளியிடுவது குறித்து மகிழ்வும் அன்பும் நன்றியும்
தேனம்மைலெக்ஷ்மணன்.


இந்தச்சிறுகதை 1985 ஃபாத்திமா கல்லூரி ஆண்டுமலரில் வெளிவந்தது.
டிஸ்கி 2. :- இந்தச் சிறுகதை மார்ச் 1 - 15, 2014 அதீதத்திலும் வெளியானது.


================================================================
சொர்க்கத்தின் எல்லை நரகம் :-
=================================



தேனம்மை லக்ஷ்மணன்.


காமாட்சிக் குட்டிக்குச் சந்தோஷமாயிருந்தது. அவளின் சரோசாச்சி ஆபீஸுக்குப் போயிட்டாக. அய்ய்ய்ய். இன்னைக்கு என்ன இந்தக் குளிக்குற சோப்பையும், சீப்புப் பெட்டியையும், பவுடர் டப்பாவையும் வெளிய வச்சுட்டுப் போயிட்டாக.

அடுப்படிக்குப் போய்ச் சமயல் பண்ணின சாமான்களை எல்லாம் வெளக்க எடுத்து வச்சுப்பிட்டு, எல்லாச் சாமான்களையும் உள்ளே வெச்சுப் பூட்டிப்புட்டுத் தொவைக்குற துணி, வெளக்குற சாமான், மத்தியானம் குட்டிக்குத் திங்கக் கொளகொளத்துப் போன நேத்தைச் சோறும், சுண்டக்குழம்பும், மத்யானம் இட்டலிக்கு ஆட்ட அரிசியும், உளுந்தும் ஊற வைத்துவிட்டுப் போயிருந்தாள் சரோசாச்சி.

ஆச்சி வாசல் நடையைத் தாண்டித் தெருமுக்குக்குப் போறவரைக்கும் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த மீனாட்சிக்குட்டி வாசல் நடையில் இருந்த கட்டங்களில் ஒற்றைக்காலை மடக்கி நொண்டி விளையாட ஆரம்பித்தது. ஒரு ஆளாக எத்தனை நேரம் விளையாடுவது. துவைக்கப் போட்டிருந்த துணிகளில் விழுந்து புரண்டது. பத்துத் தடவை புரண்டதுக்கப்பறம் பார்த்தா ஏதோ மணத்துக் கிடந்தது.
துணி ஒண்ணொண்ணா எடுத்து உதறியது. ஒரு சினிமா டிக்கெட்டு விழுந்தது. பொறுக்கி வைத்துக் கொண்டது குட்டி. ஒரு ஊக்கு விழுந்தது. அதை எடுத்து ப்ளாஸ்டிக் வளைவியில் மாட்டிக் கொண்டது. படார் என்று மூடி பிரிந்து விழுந்தது ஒரு சோப்பு டப்பா. !. அதைப் பார்த்ததும் குட்டிக்கு ஆசை வந்தது குளிக்க வேண்டும் போல்.

சரோசாச்சி, அவள் மகன்கள் பாலு, சங்கர், அவுக வீட்டண்ணன் ( அவுக பேரு வேதாசலம்) எல்லோரும் போட்டுத் தேய்ந்து போன சோப்பு ஒன்றைக் குட்டிக்குக் குளிக்கக் கொடுப்பாள். முழு சோப்பைப் பார்த்ததும் குட்டிக்குக் குஷி பிய்த்துக் கொண்டது. சட்டை, பாவாடையைச் கழட்டிப் போட்டுப்புட்டு மூணு மணிக்கு எழுந்து ட்ரம்மில் பிடிச்சு வச்சிருந்த ( துவைக்க, விளக்க, வேண்டும் என்று ) தண்ணீரை மொண்டு ஊத்திக் கொண்டது.

சோப்புக் கட்டியை டப்பாவிலேர்ந்து எடுத்து ரெண்டு கையாலயும் பிடித்துக் கொண்டது. பெரீய்ய்ய்.. சோப்பு.. பிடித்து வயிற்றில் தேய்த்தது. தலையில் பிடித்துத் தேய்த்துத் தண்ணீரை ஊற்றியது. அவுக வீட்டண்ணன் தேய்த்தால், ’புஸ், புஸ்என்று வருமே, அதை நினைத்துக் கையில் , ‘ சொய்ங், சொய்ங்என்று தேய்த்துக் கொண்டிருக்கும்போது தலையிலேர்ந்து சோப்பு வழிந்து கண்ணில் புகுந்தது. குதி குதியென்று குதித்துப் போகணியை எடுத்து அண்டாவைத் துழாவி, டிரம்மைப் பிடித்துத் தண்ணி அத்தனையும் தலையிலும் மேலிலும் கொட்டிக் கொண்டது. கீழே இருந்த சோப்பு, தண்ணி படப்படக் கரைந்து கொண்டு இருந்தது.
வெய்யில் உச்சிக்கு வந்து விட்டது. தண்ணி கொஞ்சம் போல டிரம்மில் இருந்தது.

குட்டி துண்டை எடுத்துத் தலையில் துவட்டிக் கொண்டது. பாவாடை சட்டை போட்டுக் கொண்டதும் குதித்த குதியில் பசி வந்து விட்டது. எரிந்த கண்ணைக் கசக்கி விட்டுக் கொண்டது. அடுப்படியில் வந்து ஒண்ணொண்ணையாத் தொறந்து பார்த்தது. ‘ஆச்சி இன்னைக்குக் கசாப்புப் பொறியலை டிப்பன் பாக்சில வச்சுக்க மறந்துட்டாக போலேருக்கே’.

ஒரு கணம் அதன் மணத்தை நுகர்ந்து பார்த்துச்சு. சபலம் தாங்காமல் ஒவ்வொன்றாய்த் தின்றுவிட்டுத் தண்ணி குடித்தது.’ நாந்தானே இன்னைக்கு மசாலை அரச்சேன். எனக்கு ஒரு துண்டு கூடத் தரல்லை..!’.

அப்படியே வந்து படுத்துப் புரண்டதும் தூக்கம் வந்து விட்டது. மூணு மணிக்கு முழிப்பு வந்து விட்டது. வெய்யில் முதுகைச் சுட்டுக் கொண்டிருந்தது. எழுந்து அரிசியைக் களைகிறேன் பேர்வழி என்று தண்ணீரை அரிசியில் ஊற்றில் களையாமல் இறுத்துக் கொண்டிருந்தது. ட்ரம் தண்ணி தீர்ந்துவிட்டது. களையும்போதே பாதி அரிசி வாய்க்கும் வயித்துக்கும் போய் விட்டது.

வெளியே வைத்திருந்த கண்ணாடியில் சூரிய ஒளி பட்டுப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. குட்டிக்கு இது வேடிக்கையாயிருந்தது. அரிசியை வச்சுப்புட்டு, எழுந்து போய்க் கண்ணாடியில் முகம் பார்த்தது. பக்கத்தில் சீப்புப் பெட்டியில் ஆச்சி மூஞ்சியில் அப்பும் பசை இருந்தது. அப்பிப் பார்த்தா என்ன என்று தோன்றியது குட்டிக்கு. ‘லேட்டெ காலமிபாட்டிலைக் கையிலெடுத்துக் கவிழ்த்து முஞ்சியில், புருவத்தில், முடியில் அப்பிக் கொண்டது. ரோஸ் பவுடர் டப்பாவை எடுத்து மூஞ்சியில் பூசியது. திட்டுத் திட்டாக இரவு நேர வானின் வெள்ளை மேகமாய்ப் பவுடர் அப்பியது.

அடுத்துக் குட்டியின் கண்ணில் பட்டது கண்மைடப்பா. டப்பாவைத் திறந்து மையைக் கையில் வழித்தெடுத்துக் கன்னம் தாவாங்கட்டை, மூக்கு எல்லாம் தீற்றியபின் கண்ணில் போட்டுக் கொண்டது.

ஆகா.. தலையைச் சீவுணுமே  எண்ணை அபிஷேகம் செய்து முடியை நுனிவரை பின்னியது. ஆச்சி தலையில் வைத்துக் கொள்ளும் சலங்கை வைத்த எலாஸ்டிக் கயிறு இருந்தது. அதை எடுத்து எலிவால் நுனியில் பின்னி விட்டது.

கண்ணாடியை வைத்துக் கொண்டு இப்படியும் அப்படியும் அழகு பார்த்தது. நாக்கை நீட்டிப் பார்த்தது. கண் எரிந்தது, குளிக்கும்போது சோப்புப் பட்டதால், கண்ணைக் கசக்கி விட்டுக் கொண்டது. கண்ணைச் சுற்றிலும் கருவச்சம் போட்டது போல மை. கண்ணாடியை வைத்துக் கொண்டு டான்ஸ் ஆடியது. கண்ணாடி கீழே விழுந்து சில்லுச் சில்லாக உடைந்தது. குட்டி பயந்துபோய்விட்டது. 

வாசக் கதவைத் தட்டுற சத்தம் கேட்டுச்சு. வெய்யில் தாழ்ந்துவிட்டது. குட்டி போய்க் கதவைத் தொறந்தா.. சரோசாச்சி.. பாலு.. சங்கர்.. ? ஆச்சி பார்த்தா. ஒடைஞ்ச கண்ணாடித் துண்டு, துவைக்காத உருப்படிகள், விளக்காத சாமான்கள், அரிசியும் , உளுந்தும் அப்பிடி அப்பிடியே. தண்ணி இல்லாத டிரம், முடி பிசிறு பிசிறாய் அப்பி இருக்கும் சோப்பு, தோண்டப்பட்ட பவுடர் டப்பா, மை அப்பிக் கிடக்கும் ஸ்பான்ச், வெத்துக் கசாப்புச் சட்டி, குட்டி சடை நுனியின் குஞ்சலம், குட்டியின் அலங்காரம்..

பாய்ந்தாள்…. குட்டியின் தலையில் நறுக்கென்று நல்லா ஒழக்கு ரத்தம் வர்றாப்பலக் கொட்டினாள். குஞ்சலம் போய் மூலையில் விழுந்தது. தொடையைத் திருகி முதுகில் சாத்துப்படி வைத்தாள். மடேர், மடேரென்று, சும்மா ஒண்ணா, ரெண்டா, வரிசையா அடி. குட்டி ஸ்பிரிங்க் மாதிரி மூலையில் போய் விழுந்தது. பயத்துல பாவாடைல ஒண்ணுக்குப் போய்விட்டது. மூக்கில் சளி. பாவாடைய எடுத்துத் தொடைச்சுக்கிட்டுது. குட்டி கத்தலை. ஆர்ப்பாட்டம் பண்ணலை. ஒரு நாள் சந்தோஷத்தை நெனைச்சுக்கிட்டுது. சோப்பும், மையும் பட்டுக் கண் எரிஞ்சது. குட்டி மனசுல கண்ணீர் வழிஞ்சுது.
...

54 கருத்துகள்:

  1. கதை பாதியில் முடிந்து விட்டதோ? இதன் எதிர்விளைவுகளைச் சொல்லலியா? அல்லது நம் ஊகத்துக்கு விட்டு விட்டாரா? வாழ்த்துகள் தேனம்மை.

    பதிலளிநீக்கு
  2. என்னாச்சு???!!! அப்படியே நிற்கிறது? தலையைச் சீவிய பிறகு? வீட்டார்/சரோசாச்சி வந்துவிட்டாரா? எங்கள் யூகத்திற்கா? கதை அருமையாகத் தொடர்ந்தது...முடிவு??!!! வாழ்த்துகள் சகோ தேனம்மை...

    பதிலளிநீக்கு
  3. பெண்கள் தினத்திற்கு ஏற்ற கதை!!!

    பதிலளிநீக்கு
  4. அருமையான கதை நகர்வு அழகு நன்றி நண்பரே சகோ தேனம்மை அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. #‘ஆகா.. தலையைச் சீவுணுமே#
    சிக்கல் ,கதையில் இல்லை போலிருக்கே :)

    பதிலளிநீக்கு
  6. #‘ஆகா.. தலையைச் சீவுணுமே#
    சிக்கல் ,கதையில் இல்லை போலிருக்கே :)

    பதிலளிநீக்கு
  7. /’ நாந்தானே இன்னைக்கு மசாலை அரச்சேன். எனக்கு ஒரு துண்டு கூடத் தரல்லை..!’./ நெகிழ்வு. நல்ல கதை தேனம்மை. வாழ்த்துகள்! முன்னரே வாசித்திருக்கிறேன். அதீதத்தில் 2011-14 படைப்புகள் வரிசையில் உங்கள் படைப்புகளை மீண்டும் வலையேற்ற வேண்டியுள்ளது.

    @ ஸ்ரீராம்,

    கதை முழுமையாகப் பதியப்படவில்லையே. நீங்கள் சரிசெய்யும் வரை மீதிக் கதையை வாசகர்கள் இங்கே வாசிக்கலாம்: http://honeylaksh.blogspot.in/2014/03/blog-post_31.html

    பதிலளிநீக்கு
  8. சரி செய்து விட்டேன்.

    நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  9. அருமையாக நகர்கிறது கதை.
    நன்றி சகோஸ்:)

    பதிலளிநீக்கு
  10. அந்தச் சின்னஞ்சிறு சிறுமியின் ஆசைகள் மிக அழகாகவும் இயல்பாகவும் இந்தக் கதையில் சித்தரிக்கப்பட்டுள்ளன.

    //குட்டி கத்தலை. ஆர்ப்பாட்டம் பண்ணலை. ஒரு நாள் சந்தோஷத்தை நெனைச்சுக்கிட்டுது.//

    :) சூப்பர். அதுதான் அதன் குழந்தைத்தனம் !

    //சோப்பும், மையும் பட்டுக் கண் எரிஞ்சது. குட்டி மனசுல கண்ணீர் வழிஞ்சுது.//

    குட்டி மனசுல மட்டுமல்ல. இதனைப் படித்து முடித்த எங்கள் மனசிலும்தான்.

    கற்பனையோ, உண்மையோ, சம்பவத்தை மிக அருமையாக எழுத்தில் வடித்துள்ள எழுத்தாளருக்கு மனம் திறந்த பாராட்டுகள்.

    படிக்க வாய்ப்பு அளித்துள்ள ‘எங்கள் ப்ளாக்’குக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  11. நல்ல கதை தேனக்கா. பகிர்விற்கு நன்றி ஸ்ரீராம்.
    இதுபோன்ற அனுபவம் எனக்கு உண்டு..வீட்டு வேலை செய்பவரின் மகளைப் படிக்க வைக்க நினைத்து முயற்சி செய்து தோற்றுப் போன அனுபவம்.

    இதைப் போன்ற என்னுடைய கதை ஒன்று,
    http://thaenmaduratamil.blogspot.com/2013/04/irandu-kaigal-thattinaal-dhaan.html

    பதிலளிநீக்கு
  12. கதை எழுதியவருக்கும் காமாட்சிக்குட்டி அஃறிணைப் பொருள்தானோ. ஆனால் அதுவும் சுவை கூட்டுகிறது வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. அழகான கரு. அருமையான நடை. வாழ்த்துக்கள் தேனம்மை.

    பதிலளிநீக்கு
  14. தேனம்மையின் எழுத்து.ஆச்சிகளையும் சிறுமிகளையும் கண்முன் கொண்டு வந்து விட்டது.
    அழகான வடிவான நடை. கொடுமை எப்போது நிற்கும். நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  15. இப்போவும் சில குழந்தைகள் இருக்கின்றனர் தான். என் மனதில் "குட்டி"திரைப்படம் நினைவில் வந்தது. அதில் வீட்டில் இருக்கும் பாட்டியான எம்.என்.ராஜமும், பாட்டியின் பேரனும் குட்டியைப் பாடாய்ப் படுத்துவார்கள். :( முடிவு மனதை உலுக்கும்.

    பதிலளிநீக்கு
  16. கேட்டு வாங்கிப் போடத்தக்க
    அருமையான கதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  17. துரியோதனன் ஜெயித்திருந்தால்...!

    அருமை...

    பதிலளிநீக்கு
  18. நன்றி கீதா மேடம். கதை பாதிதான் பிரசுரமாகி இருந்தது. ராமலக்ஷ்மி சுட்டிக் காட்டியதும் சரி செய்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
  19. தமிழ்மண வாக்கு, கருத்து இரண்டுக்கும் நன்றி சகோதரி உமையாள் காயத்ரி.

    பதிலளிநீக்கு
  20. ரசித்துப் பாராட்டியதற்கு நன்றி வைகோ ஸார்.

    பதிலளிநீக்கு
  21. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  22. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி ஜெஸ்வந்தி.

    பதிலளிநீக்கு
  23. மீள் வருகைக்கு நன்றி கீதா மேடம்.

    பதிலளிநீக்கு
  24. நன்றி நண்பர் மீரா. செல்வக்குமார். (கமெண்ட் பதிவு மாறி விழுந்திருக்கிறது!)

    பதிலளிநீக்கு
  25. //நாந்தானே இன்னைக்கு மசாலை அரச்சேன். எனக்கு ஒரு துண்டு கூடத் தரல்லை..!’.//
    சே :( மனசு வலிக்குது ..பாவம் அக்குழந்தை .
    கதை என்று கடக்க முடியவில்லை நிறைய இடங்களில் நடப்பது ..அந்தக்குழந்தைகாமாட்சியின் சந்தோஷம் கண நொடிதானோ பாவம் ..
    அந்த சரோசாச்சியின் கையை உடைக்கணும் என்று தோணுது

    பதிலளிநீக்கு
  26. //குட்டி கத்தலை. ஆர்ப்பாட்டம் பண்ணலை. ஒரு நாள் சந்தோஷத்தை நெனைச்சுக்கிட்டுது. சோப்பும், மையும் பட்டுக் கண் எரிஞ்சது. குட்டி மனசுல கண்ணீர் வழிஞ்சுது.//

    கதை முழுசா முடிஞ்ச உணார்வு தோன்றணும்; அவ்வளவு தானே?
    :

    குட்டி கத்தலை.ஆர்ப்பாட்டம் பண்ணலை. சோப்பும் மையும் பட்டதாலே கண் எரிஞ்சது. குட்டி மனசுலே கண்ணீர் வழிஞ்சது.. ஒரு நாள் பட்ட சந்தோஷத்தை நெனைச்சுக்கிட்டுது.. அந்த வினாடியே குட்டி மனசிலே சந்தோஷம் நெறைஞ்சது.

    இதான் நரகத்தின் எல்லை சொர்க்கம்!

    பதிலளிநீக்கு
  27. நல்ல கதை...
    வாழ்த்துக்கள் அக்கா...
    வாழ்த்துக்கள் ஸ்ரீராம் அண்ணா...

    பதிலளிநீக்கு
  28. ஏதோ எதிர்த்த வீட்டில் நடந்டடுபோல ஒரு கோபம் வரது. இப்பவும் குட்டி பெண்களை ஆட்டுவிப்பவர்களும் இருக்கிரார்கள். பாவம் காமாட்சி.

    பதிலளிநீக்கு
  29. கோவையில் இருந்த போது பக்கத்து வீட்டில் இது போல் குட்டி பெண் வேலைப்பார்ப்பதை பார்த்து இருக்கிறேன். நல்ல உடை கூட வாங்கி தரமாட்டார்கள்.
    நேரில் பார்ப்பது போல் எழுதி இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  30. அஹா ! இது எப்போ ஸ்ரீராம். இனித்தான் வரப்போகுதுன்னு நினைச்சுட்டு இருக்கேன். ! நன்றி நன்றி நன்றி அனைவருக்கும். !!!!!!!!!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  31. நன்றி கீதா மேம்

    நன்றி துளசி சகோ. இதுக்கு எல்லாம் தீர்வு நாம் கொடுக்க முடியாது. சமூகமாத்தான் திருந்தணும் என்று விட்டு விட்டேன் சகோ & கீத்ஸ்

    நன்றி கில்லர்ஜி

    நன்றி பகவான் ஜி

    பெண்கள் தினத்தில் வெளியிட்டமைக்காக நன்றி ஸ்ரீராம் !

    பதிலளிநீக்கு
  32. நன்றி ராமலெக்ஷ்மி :) அதீதத்திலும் வந்துள்ளது :)

    நன்றி உமையாள் ஓட்டுப் போட்டமைக்கும் நன்றி. இதுக்குத்தான் பத்து ஓட்டு. அடேயப்பா. நான் ஓட்டுப் போட்டதும் இல்ல. எனக்கு ஓட்டு அதிகம் கிடைச்சதுமில்ல :)

    நன்றி விஜிகே சார்

    நன்றி வெங்கட் சகோ

    பதிலளிநீக்கு
  33. நன்றி ஜெயக்குமார் சகோ . ஓட்டுப் போட்டமைக்கும் நன்றி

    நன்றி க்ரேஸ். :)

    நன்றி பாலா சார். அது கதையின் போக்கு. பிள்ளைகள் வயதில் குறைந்தவர்களை அவன் அவள் என்பதை விட அது என்று சொல்லும்போது நெருக்கமாக உணர்வதால் வந்த வார்த்தைப் பிரயோகம். அஃறிணை என நினைத்துப் பதிவு செய்யவில்லை.

    நன்றி ஜெஸ்வந்தி

    நன்றி வல்லிம்மா. இது 30 வருஷத்துக்கு முன்னாடிம்மா. இப்ப எல்லாம் இல்ல

    பதிலளிநீக்கு
  34. நன்றி கீதா மேம். நான் இன்னும் குட்டி படம் பார்க்கலை.

    நன்றி ரமணி சார்

    நன்றி அஜய் சுனில்கர் ஜோசப்

    நன்றி இராமானுசம் ஐயா

    நன்றி மீரா !

    பதிலளிநீக்கு
  35. நன்றி ஏஞ்சல் . ஐயோ கையை உடைக்கிறதா. :) திருந்தி இருப்பாங்க விட்ருவோம். :)

    கதையை எடிட் செய்து முடிவு போட்டமைக்கு நன்றி ஜி வி சார் :)

    நன்றி குமார் சகோ

    நன்றி காமாட்சி மேம்

    நன்றி கோமதி மேம்.

    மிக்க நன்றி ஸ்ரீராம் !!!!!!!!

    பதிலளிநீக்கு
  36. தேன்
    கதை அருமை.
    நடக்கும்போது அருகில் இருந்து பார்த்த ஒரு உணர்வு.
    //குட்டி கத்தலை. ஆர்ப்பாட்டம் பண்ணலை. ஒரு நாள் சந்தோஷத்தை நெனைச்சுக்கிட்டுது. சோப்பும், மையும் பட்டுக் கண் எரிஞ்சது. குட்டி மனசுல கண்ணீர் வழிஞ்சுது.//

    ஆனால் அந்தக் குட்டி என் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டாள்.

    ஒரு சிறு பெண்ணின் ஏக்கத்தை அருமையாக வெளீயிட்டுள்ளீர்கள்.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!