திங்கள், 14 ஆகஸ்ட், 2017

திங்கக்கிழமை 170814 : பாஸ்தா சாட் - கீதா சாம்பசிவம் ரெஸிப்பிஇப்போ இந்த மட்ரியை உபயோகித்துச் செய்த இன்னொரு உணவு!  

நாங்க மளிகைப் பொருட்கள் வாங்கும் வணிக வளாகத்தில் 1000 ரூபாய்க்குப் பொருட்கள் வாங்கினால் 150ரூ மதிப்புள்ள பொருட்கள்(மளிகைதான் வேறே என்ன!) இலவசம் எனப் பரிசு கொடுத்தார்கள். ஒரே ஒரு மாதம் மட்டும். அப்போ இரண்டாயிரம் ரூபாய்க்கு அரிசி, சிறுதானியங்கள் உட்பட வாங்கினோம். அதுக்கு இரண்டு பரிசுப் பொருட்கள் நிறைந்த பை வழங்கப்பட்டது. அவற்றில் இருந்தவை பாஸ்தா அல்லது மக்ரோனி(?) அப்பளக் கட்டுகள், காஃபி பவுடர், காம்ப்ளான் பாக்கெட், டூத் பேஸ்ட், பிரஷ், சோப், டிடெர்ஜென்ட் பார் சிறியது என அடங்கி இருந்தது. அப்பளங்கள் பொரித்துத் தான் உண்ணலாம். சிறிய அப்பளங்கள். அதைக் காலி செய்தாச்சு! சோப், டூத் பேஸ்ட், பிரஷ் ஆகியன விருந்தினர் வந்தால் தங்கும் அறையில் வைச்சாச்சு. டிடெர்ஜென்ட் பாரும் உபயோகம் ஆயிடும்.  இந்த மக்ரோனியை என்ன செய்யறது? எப்படிச் சமைப்பது எனப் புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தேன்.

அம்பேரிக்காவில் இருக்கிறச்சே மாட்டுப் பெண் சேமியா உப்புமா மாதிரிச் செய்து பாருங்க என்று சொல்வாள். அவங்க இரண்டு பேருக்கும் பாஸ்தாவைச் சமைச்சு அதற்கென இருக்கும் ஏதோ சாஸ் ஊற்றி ப்ராக்கோலி, காலிஃப்ளவர், காரட், தக்காளி வெங்காயம், சீஸ், பனீர், சீஸ் ஷீட் ஆகியவற்றைச் சேர்த்து அவனில் பேக் செய்வாள். எங்களைச் சாப்பிடச் சொல்லியும் நாங்கள் விரும்பிச் சாப்பிட்டதில்லை. அன்னிக்கு எங்க இரண்டு பேருக்கும் என உப்புமா மாதிரி ஏதானும் செய்து கொள்வோம்.  முன்னே ஒரு தரம் இப்படித் தான் பாஸ்தாவோ மக்ரோனியோ இதே போல் பரிசாக வந்திருந்து கடைசியில் அதைச் சமைக்காமல் தேதி காலாவதி ஆகிவிட்டது எனத் தூக்கிப் போட்டோம். யாராவது சாப்பிடறவங்க கிட்டேக் கொடுத்திருக்கலாம். போன நவம்பரில் மும்பை போனப்போ ஜெட் ஏர்வேஸில் பாஸ்தாவைத் தான் சமைத்துக் கொடுத்திருந்தார்கள். சாப்பிடும்படி இருந்தது. ஆகவே இம்முறை இதை எப்படியேனும் சமைத்துச் சாப்பிட்டுப் பார்த்துவிடணும்னு எண்ணம். தெரியாதுனு ஒண்ணு இருக்கலாமோ! :)

தற்செயலாகப் பெண்ணிடம் பேசும்போது இதைக் குறித்துச் சொல்ல, காய்கள் இல்லை, இல்லைனா வெஜிடபுள் பாஸ்தா செய்யலாம்! காரட் மட்டும் தான் இருக்கு. மற்றவை சரியாக் கிடைக்கிறதில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தேனா! பொண்ணு அப்போ பாஸ்தா சாட் பண்ணிச் சாப்பிடலாமே! என்றாள். அதுக்குத் தேவையான கொண்டைக்கடலை, உ.கி. வெங்காயம், தக்காளி, கொத்துமல்லி எல்லாமும் கையில் இருந்தது. கூடவே சாட்டில் போடப் பூரி தேவைன்னா இந்த மட்ரி இருக்கவே இருக்கு. மட்ரி இல்லைனாலும் கவலைப்பட வேண்டாம். நம்ம ஊர்த் தட்டையும் நன்றாக இருக்கும். ஜவ்வரிசி வடாம் அல்லது கூழ் வடாம், அல்லது இலை வடாமும் பொரிச்சுச் சேர்க்கலாம். ஹிஹிஹி! நாங்க யாரு!
அடுத்து பாஸ்தா சாட் செய்யத் தயார் ஆனேன். பொருட்களைத் தேடணும்னு அவசியம் இல்லாமல் எல்லாம் வீட்டிலேயே இருந்தன. முக்கியமானவை பச்சைச் சட்னியும் சிவப்புச் சட்னி எனப்படும் புளிச் சட்னியும். கொத்துமல்லிக் கட்டும் பச்சை மிளகாயும் இருந்ததால் வீட்டிலேயே அரைத்து விடலாம். பேரிச்சை போட்டு இனிப்புச் சட்னி செய்யலாம் எனில் பேரிச்சை இல்லை. ஆகவே புளிச் சட்னிக்கே ஓட்டு!முதல்நாளே ஒரு கைப்பிடிக் கொண்டைக்கடலையை ஊற வைச்சாச்சு. எங்க வீட்டிலே இருந்தது கறுப்புக் கடலை தான். அதுவும் நன்றாகவே இருக்கும்.  மறு நாள் மத்தியானம் கொத்துமல்லிக் கட்டு அரைக்கட்டு எடுத்துச் சுத்தம் செய்து காம்புகளை நீக்காமல் வேரை மட்டும் நீக்கி விட்டுப் பொடியாக நறுக்கிக் கொண்டு இரண்டு டேபிள் ஸ்பூன் அள்வுக்கு எடுத்துத் தனியாக வைத்துக் கொண்டேன். (சாட்டில் மேலே தூவ) மிச்சம் இருந்ததை நான்கு பச்சை மிளகாய், உப்பு, இஞ்சி, (பெருங்காயம் தேவையானால்) சேர்த்து அரைத்தேன். ஒரு சிலர் இதிலேயே உப்புக்குப் பதிலாகக் கறுப்பு உப்புச் சேர்ப்பார்கள் நன்கு அரைத்து எடுத்து வைத்துக் கொண்டேன்.அடுத்துப் புளியைக் காலையிலேயே ஊற வைத்திருந்த்தைச் சாறு எடுத்து வடிகட்டி வைத்துக் கொண்டு எலுமிச்சை அளவு புளிக்கு ஒரு டீஸ்பூன் மிளகாய்த் தூள், அரை டீஸ்பூன் உப்புச் சேர்த்துக் கொதிக்க விட்டேன். புளி வாசனை போகக் கொதிக்கையில் இரண்டு டேபிள் ஸ்பூன் வெல்லம் சேர்த்தேன். வெல்லம் கட்டாயமாய் வேண்டும். வெல்லம் பிடிக்கிறவங்க கூடவே போட்டுக்கலாம். நன்கு கொதித்துக் கெட்டியான பிறகு கீழே இறக்கி வறுத்த ஜீரகப் பொடி ஒரு டீஸ்பூன் போட்டுக் கலந்து வைத்துக் கொண்டேன்.

கொண்டைக்கடலையுடன் உப்புச் சேர்த்து இரண்டு உருளைக்கிழங்கையும் போட்டுக் குக்கரில் வேக வைத்துக் கொண்டேன். உருளைக்கிழங்கை நறுக்கிப் போட்டால் குழைந்து விடும் என்பதால் முழுசாகவே போட்டு வேக வைத்தேன். பின்னர் கொண்டைக்கடலையை வடிகட்டி வைத்தேன். பாஸ்தா இரண்டு பாக்கெட். எங்களுக்கு அதிகம் தான். ஆனால் ஒரு பாக்கெட் போதாது. ஆகவே வேறு வழியில்லை என்பதால் ஒரு லிட்டருக்குக் குறையாமல் நீர் ஊற்றிக் கொதிக்க வைத்துப் பாஸ்தாவைப் பிரித்துப் போட்டு உப்பு அரை டீஸ்பூனும், நெய் ஒரு டீஸ்பூனும் ஊற்றி வேக விட்டேன். வெந்த பாஸ்தாவை வடிகட்டி நன்கு அலசி வைத்துக் கொண்டேன். இடைப்பட்ட நேரத்தில் இரண்டு பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைத்தேன். தக்காளியைக் கழுவிப்பொடியாக நறுக்கிக் கொண்டேன். கடாயில் சமையல் எண்ணெய் ஊற்றிக் கொண்டு ஜீரகம், சோம்பு தாளித்து அரை டீஸ்பூன் மி.பொடி, தனியாப் பொடி, மஞ்சள் பொடி, பெருங்காயம், பச்சை மிளகாய், என வரிசையாகச் சேர்த்துக் கடாயைக் கீழே இறக்கினேன். முதலில் பாஸ்தாவை அதில் போட்டு ஒரு நிமிஷம் கலக்கி விட்டுப் பின்னர் வரிசையாகக் கொண்டைக்கடலை, உருளைக்கிழங்கு சேர்த்துக் கலந்து கொண்டேன். வரிசையாகத் தக்காளி, நறுக்கிய வெங்காயம் சேர்த்துக் கடைசியாக நறுக்கிய கொத்துமல்லியும் சேர்த்துக் கொண்டேன். நன்கு கலக்கி விட்டு உப்புப் போதுமா எனப் பார்த்துக் கொண்டேன். பாஸ்தா, கொண்டைக்கடலை ஆகியவற்றில் உப்புப் போட்டிருக்கோம். உ.கி. தான் போடலை. கூடவே தக்காளி, வெங்காயக் கலவை. அவற்றிற்கு இப்போ நாம் மேலே ஊற்றும் பச்சைச்சட்னி, இனிப்புச் சட்னியில் உள்ள உப்பு ஈடு செய்து விடும். 

தட்டில் பாஸ்தா சாட்டைப் பரிமாறி விட்டு மேலே இந்தச் சட்னி வகைகளை ஊற்றிக் கொடுக்கலாம். தேவை எனில் இரண்டு மூன்று மட்ரிகளை உடைத்துச் சேர்க்கலாம்.அன்னிக்குத் தட்டில் போட்டுட்டுப் படம் எடுக்க முடியலை. செல்லில் ஏதோ பிரச்னை. அப்புறமா வைச்சிருந்து எடுக்க நேரம் இல்லை. சாப்பாடு நேரம் தாண்டிப் போய் விட்டது. ஓமப்பொடி இருந்தாலும் தூவிக்கலாம். பாஸ்தா சாட் படம் மட்டும் இணையத்திலிருந்து! :(  மாதுளை முத்துக்கள் இருந்தாலும் சேர்க்கலாம். 

[ நானும் பாஸ்தா போட்டு விதம் விதமாக முயற்சி செய்திருக்கிறேன்.  இதுவும் வித்தியாசமாகவே இருக்கிறது.  ஸ்ரீராம் ]38 கருத்துகள்:

 1. பாஸ்தா உப்புமாவா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் செய்தது பாஸ்தா சாட்! தலைப்பை மாத்துங்க முதல்லே! :)

  பதிலளிநீக்கு
 2. பாஸ்தா வீட்டுக்கு வந்த விவரம், அதை அழகாய் செய்த விவரம் எல்லாம் அருமை.

  பதிலளிநீக்கு
 3. நல்லாத்தான் இருக்கும் போல....

  பதிலளிநீக்கு
 4. நானும் நினைத்தேன் கீதா சாட் என்று போட்டு இருக்கிறார்களே ! தலைப்பு இப்படி இருக்கே என்று.

  //மாட்டுப் பெண் சேமியா உப்புமா மாதிரிச் செய்து பாருங்க என்று சொல்வாள்.//
  இப்படி நீங்கள் சொன்னதை தலைப்பாக்கி விட்டார்களா?

  பதிலளிநீக்கு
 5. லேபிளில் மாற்றவில்லை ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 6. //பாஸ்தாவைச் சமைச்சு அதற்கென இருக்கும் ஏதோ சாஸ் ஊற்றி ப்ராக்கோலி, காலிஃப்ளவர், காரட், தக்காளி வெங்காயம், சீஸ், பனீர், சீஸ் ஷீட் ஆகியவற்றைச் சேர்த்து அவனில் பேக்

  செய்து பார்க்கிறேன்.. படிக்கிறப்பவே ருசிக்குதே? உங்களுக்கு பிடிக்கலியா? ஏன்? சீஸ் கலந்ததாலோ? சாஸ் கலந்ததாலா?
  பாஸதா உப்மா ஹி மட்டி பார்ட் தோவும் டீக் ஹை மகர் ரொம்ப சிரமம் ஹை

  பதிலளிநீக்கு
 7. பாஸ்தா சாப்பிட்டதில்லை...வீட்டிலும் செய்யும் பழக்கம் இல்லை....

  கீதா: பாஸ்தா பல வகைகளில் ஃப்ரென்ச் மெக்சிக்கன் ரெசிப்பி என்று செய்ததுண்டு....சாட்டும் வித விதமாக...நம்ம ஊர் தட்டை, மிக்சர், தேங்குழல், முள்ளு முறுக்கு, கை முறுக்குக் கூடப் போட்டுச் செய்ததுண்டு. பெல்/சிப்பி வடிவத்தில் இருக்கும் மேக்ரோனி இருக்கும் இல்லையா அதை வறுத்துப் போட்டோ இல்லை வேக வைத்தோ சாட் செய்தத்ண்டு..பாஸ்தா சாட்...சிலது இணையத்தில் ரெசிப்பி எடுத்துக் கொண்டு கொஞ்சம் நம்ம கைவண்ணத்தையும் காட்டி ஹிஹிஹி...

  நீங்கள் இங்கு கொடுத்திருக்கும் முறையில் செய்ததில்லை...சோம்பு எல்லாம் தாளித்திருக்கீங்களே...தாளிதம் செய்து செய்ததில்லை....செய்து பார்த்துடணும்....மைதா என்பதால் எப்போதேனும் தான்...

  உங்கள் ரெசிப்பி யும்மி!!!! நாக்குல நீர் ..ஹிஹிஹி

  பதிலளிநீக்கு
 8. நன்றி கோமதி அரசு! ஶ்ரீராம் எல்லோரையும் கவர வேண்டி உப்புமா எனப் போட்டிருக்கார். நான் தான் ஓரு ம.ம. ஆச்சே! அது புரியாமல்............... ஹிஹிஹி!

  பதிலளிநீக்கு
 9. கில்லர்ஜி, நம்ம ரங்க்ஸுக்குப் பிடிச்சது! எனக்கு என்னமோ பேல்பூரி சாப்பிடற ருசி இதில் வரலை! :)

  பதிலளிநீக்கு
 10. வாங்க அப்பாதுரை மட்டி 2 ஆம் பகுதி தான். செய்து பாருங்க! அங்கே தான் வித விதமாகப் பாஸ்தா, பாஸ்தா சாஸ் எல்லாமும் கிடைக்குமே! சிரமம் எல்லாம் இல்லை. உ.கி. கொ.க. வேக வைக்கணும். அதான்! சட்னி அரைக்கணும்.

  பதிலளிநீக்கு
 11. பாஸ்தா நாங்களும் முதல்லே ஜெட் ஏர்வேஸில் கொடுத்ததைச் சாப்பிட்டது தான்! அது காய்கறிகள் போட்டிருந்தது. இங்கே சாட் ஆகச் செய்தோம்.

  தில்லையகத்து/கீதா, இது அரிசி பாஸ்தா. மைதா இல்லை. என்றாலும் அவ்வப்போது மைதா சேர்ப்பதை எங்களால் தடுக்க முடியவில்லை. இப்போல்லாம் ரவாதோசைக்கு கோதுமை மாவு, உளுத்த மாவு சேர்த்துத் தான் வார்க்கிறேன். ஆனாலும் சிலவற்றிற்கு பைன்டிங்காக மைதா தேவைப்படும்! அரைக்கிலோ வாங்கினால் 2,3 மாசத்துக்கு வரும்!

  பதிலளிநீக்கு
 12. பாஸ்தா சாட் அருமை..
  கடலை தவிர்த்து பனீர் சேர்த்து சற்றே வேறுவிதமாக செய்வது என் வழக்கம்..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 13. கீதா சாம்பசிவம் மேடம் - எனக்குச் சுத்தமாகப் பிடிக்காத ஆனால், பசங்களுக்கும், ஹஸ்பண்டுக்கும் பிடித்தது பாஸ்தா. சிறிய வயதில் குழல் குழலாக விற்கும் சிப்ஸ் கடைகளில் விரும்பி சாப்பிடுவேன். துபாய் போன புதிதில் பாஸ்தாவை, பொரித்தால் குழல் சிப்ஸ் வரும் என நினைத்து (அதுவரை பாஸ்தா என்று ஒன்று கேள்விப்பட்டதேயில்லை, 1993ல், கல்யாணத்துக்கு முன்) எண்ணெயைக் காயவைத்து இதைப்போட்டால் பொரியாமல் உள்ளேயே கிடந்தது. அதற்கப்புறம் முழுப் பாக்கெட்டையும் தூரப்போட்டேன். என் பெண்ணுக்கு பாஸ்தா ரொம்ப இஷ்டம். பாஸ்தால சாட்டா? நான் வரலை இந்த விளையாட்டுக்கு. ஒருவேளை என் ஹஸ்பண்ட் படித்துப்பார்த்து செய்துபார்க்க வாய்ப்பு இருக்கிறது. அவள் செய்து feedback கொடுத்தால் பகிர்ந்துகொள்கிறேன்.

  சீடை, அதிரசம் போன்று எத்தனையோ பாரம்பர்யச் சமையல் இருக்கிறதே, இதுதான் சாக்கு என்று படத்துடன் செய்முறை எழுதுவீர்கள் என்று பார்த்தேன். இனிப் பொறுப்பதில்லை. உங்கள் தளத்திலிருந்து ஒரு செய்முறையை எடுத்து ஒரு மாறுதலுடன் படங்களுடன் அனுப்பிவிடவேண்டியதுதான்.

  பதிலளிநீக்கு
 14. மைதாவா.. வழுவழுவென்று இருக்குமே அதுவா நானில்லை இந்த ரெசிப்பிக்கு

  பதிலளிநீக்கு
 15. துரை செல்வராஜு, உங்கள் செய்முறையையும் பகிரவும். நன்றி.

  பதிலளிநீக்கு
 16. ம்ம்ம்ம், நெ.த. பாரம்பரிய பக்ஷணச் செய்முறையும் படங்களோடு கைவசம் இருக்குத் தான்! இது ஶ்ரீராமுக்கு முன்னரே அனுப்பினது! பேசாம நீங்கக் கடைசியாச் சொன்னதைச் செய்யுங்க.

  அப்புறமா இது அரிசி பாஸ்தா! கவரிலேயே போட்டிருந்தாங்க! ஆகவே ஒருவேளை இது பொரியுமோ என்னவோ!

  பதிலளிநீக்கு
 17. ஜிஎம்பி சார், இது மைதா இல்லை! அரிசி பாஸ்தா! ரவையில், கோதுமையில் கூட இருக்குனு பொண்ணு சொன்னா!

  பதிலளிநீக்கு
 18. டிடி, நாங்களும் மெனக்கெட்டு வாங்கிச் சமைப்பதில்லை. சும்மாக் கிடைச்சதே, பயன்படுத்திப் பார்க்கலாமேனு தான்! :)

  பதிலளிநீக்கு
 19. திருமிகு கீதா சாம்பசிவம் அவர்களுக்கு நன்றி..
  அடுத்த வாரத்திற்குப் பிறகு பதிவில் வழங்குகின்றேன்..

  பதிலளிநீக்கு
 20. புதுசு !இன்றுதான அறிந்தேன் த ம 8

  பதிலளிநீக்கு
 21. ராஜி, இளைஞர்கள், இளம்பெண்கள் விரும்புவார்கள். ஆகவே செய்து சாப்பிட்டுப் பாருங்கள்.

  பதிலளிநீக்கு
 22. நன்றி துரை.செல்வராஜு, உங்கள் பதிவின் சுட்டியைக் கொடுங்கள். அல்லது ஶ்ரீராமுக்கே அனுப்பினால் "திங்க"ற கிழமைக்குப் பார்த்துக்கலாம்! உங்க வசதிப்படி! :)

  பதிலளிநீக்கு
 23. நன்றி புலவர் அவர்களே,

  நன்றி விஜய்!

  பதிலளிநீக்கு
 24. வித்தியாசமான சாட்...பாஸ்தா சாட்...

  பதிலளிநீக்கு
 25. பார்க்க பார்க்க சாப்பிட தோணுது

  பதிலளிநீக்கு
 26. எனக்கு சாட் செய்யவும் ,சாப்பிடவும் பிடிக்காது :/

  பதிலளிநீக்கு
 27. பாஸ்தாவில் க்ரேவி சேர்த்து சாப்பிடுவதுண்டு. சாட் முயற்சி செய்ய வேண்டும்.

  பதிலளிநீக்கு
 28. பாஸ்தா சாட் பிரமாதம். கொண்டைக்கடலை ஒத்துக் கொள்வதில்லை. பரபவாயில்லை. மற்ற அமர்க்களமான துணைகளை வைத்து ஜமாய்க்கலாம்... இங்கே ப்ரௌன் ரைஸ் பாஸ்தா கிடைக்கிறது. செய்து பார்க்கிறேன்.ஒரு மாறுதல் கிடைக்கும்.நன்றி கீதா.

  பதிலளிநீக்கு
 29. நன்றி அனுராதா பிரேம்குமார்

  நன்றி அசோகன் குப்புசாமி

  பதிலளிநீக்கு
 30. நன்றி பகவான் ஜி! :)

  நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன், என்னோட பதிவுகளுக்கு வருவதே இல்லைனு நினைவில் வைச்சுக்கோங்க! தொலைபேசியில் சொன்னதைப் பதில் கருத்தாக் கொடுங்கனு கேட்டுக்கறேன். :)

  பதிலளிநீக்கு
 31. நன்றி வல்லி சிம்ஹன், அங்கே அம்பேரிக்காவில் பெண், பிள்ளை இருவர் வீட்டிலும் அரிசி பாஸ்தா தான் வாங்கறாங்க! :) இங்கே கிடைத்ததும் தற்செயலாக அரிசி பாஸ்தா!

  பதிலளிநீக்கு
 32. வீட்டுல பசங்களுக்கு புடிச்சது...! சுதந்திர தின வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
 33. நமக்கு சமையல் சுட்டுப்போட்டாலும் வராது,
  சரி படங்களை பார்த்தாவது ருசியேற்றிக்கொள்வோம்....

  பதிலளிநீக்கு
 34. ஏர் ஓட்டும் வயலினிலே தார் ஓட்டும் காலமடா... http://ajaisunilkarjoseph.blogspot.com/2017/08/blog-post.html

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!