செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை :: பாக்கியம் - துரை செல்வராஜூ



     இந்த வாரம் செவ்வாய்க்கிழமை 'கேட்டு வாங்கிப் போடும் கதை' பகுதியில் தஞ்சையம்பதி தளத்தின் திரு துரை செல்வராஜூ அவர்களின் கதை இடம் பெறுகிறது..





     அவர் தளம் தஞ்சையம்பதி.



     சீதா ராமன் மன்னிப்புத் தொடர் அடுத்தவாரம் தொடரும்...  நண்பர் திரு துரை செல்வராஜூ அவர்களின் முன்னுரையைத் தொடர்ந்து அவர் எழுதிய கதை.




======================================================================


கதை பிறந்த கதை..


அன்பின் வழியது உயிர்நிலை - என்பது திருக்குறள்...


முகம் அறிந்து பேசுவது இனிமை..

மனம் உணர்ந்து பேசுவது இனிமையிலும் இனிமை...

நாம் குழந்தையாய்க் கிடந்தபோது வாரி அணைத்து வகிடு எடுத்து வாஞ்சையுடன்
பேசி மகிழ்ந்து பேசக் கற்றுக் கொடுத்த நம் வீட்டுப் பெரியோர்களுக்கு நாம்
என்ன கைமாறு செய்கின்றோம்  -


அவர்களது கடைசி காலத்தில்?..


அவர்களுடன் நாம் மனம் திறந்து பேசுதலே -

அவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக் கடன்...


அதனால் விளையும் மகிழ்ச்சியே அனைவரையும் வாழ்விக்கும்..


இது தான் - கதை பிறந்த கதை..


தாமிரபரணிக் கரையில் இருந்து காவிரிக் கரைக்கு வந்த ஒரு குடும்பத்தின்
உணர்வு பூர்வமான நிகழ்வுகளை இயன்றவரை முன்னிறுத்த முயன்றிருக்கின்றேன்...



சிறுகதைக்கு என எடுத்துக் கொண்ட கரு -
சற்றே நெடுங்கதைக்குள் ஆழ்த்தியது...



இளம் வயதில் கதையும் கவிதையும் கட்டுரையுமாக - அதெல்லாம் பொற்காலம்..



எனது தளத்தில் அவ்வப்போது தமிழ்ச்செல்வி - தாமரைச்செல்வி
இவர்கள் வாயிலாக சில விஷயங்கள்....


வேறு சில நீதிக்கதைகளை என்னளவில் பகிர்ந்திருக்கின்றேன்.
.

பொது வெளியில் இதுவே முதல் படைப்பு..


ஜாம்பவான்களின் மத்தியில்
சின்னஞ்சிறு அணிலாக - நானும்!..



அன்புடன்




=======================================================================



பாக்கியம்..
துரை செல்வராஜூ

***




வினை தீர்த்த விநாயகர்..

இந்தப் பிள்ளையாரைக் கொண்டு தான் -
இந்தத் தெருவுக்கு பிள்ளையார் கோயில் தெரு என்று பெயர்..

எந்த நாளும் மார்கழி மாதம் போல விடியற்காலையிலேயே
பாட்டும் பூஜையும் என்று அமர்க்களமாக இருக்கும்...

ஆனால் - இரண்டு நாட்களாக கோயில் ஆரவாரமின்றி இருக்கின்றது..

ஏன்?.. என்ன காரணமாம்!..

பிள்ளையார் கோயிலில் இருந்து மூன்றாவது வீடு... அதோ தெரிகிறதா!..

இனம் புரியாத சோகம் அப்பிக் கிடக்கிறதே.. அந்த வீடு தான்!..

நூறு வருசத்துக்கு முன்னால்
அந்த வீட்டை அரண்மனைக்காரங்க வீடு.. - என்பார்கள்...

ராஜ வம்சத்தினர் வாழ்ந்த வீடு...
வெகுகாலம் புழங்குவார் யாருமின்றிக் கிடந்தது...

யார் யாரோ..  அந்த பெரிய வீட்டை ஆக்ரமிக்க முயன்றனர்..
அது முடியாமல் - தலைவிரி கோலமாக ஓடிப் போனார்கள்..

அந்த வீட்டுக்குள் ஆவி நடமாட்டம்!.. - என்று...

அப்போது வந்து வீட்டை நிமிர்ந்து பார்த்தவர் தான் சுயம்புலிங்கம்..
அருகில் தர்ம பத்தினி தனபாக்கியம்...

இந்த பங்களா புடிச்சிருக்கா..ங்கிறேன்!..

நாஞ்சொல்ல என்ன இருக்கு!..

அதற்கப்புறம் ஒரு நொடி ஓய்வில்லை..
அங்கும் இங்குமாக ஓடி அலைந்தார்..
ராஜ வம்சத்தின் கடைசி இளவரசியைத் தேடிக் கண்டுபிடித்தார்..

வறுமையுற்றிருந்த அவர்கள் கேட்ட தொகைக்கு
மேலாக தாம்பூலத் தட்டில் வைத்துக் கொடுத்தார்...

அவர்களோ அதிலிருந்து ஒரு நயா பைசா கூட அதிகமாக எடுத்துக் கொள்ளவில்லை...

அடுத்த சில மாதங்களில் அந்த ராஜ மகளுக்கு -
வட நாட்டில் குல்பர்காவுக்குப் பக்கத்தில் கல்யாணம் என்றபோது -
அங்கே போய் பத்து பவுன் சங்கிலி மொய் வைத்து விட்டு வந்தார்...

எல்லாம் கடலைக் கடை அடுப்பின் அனலில் கிடந்து சம்பாதித்த காசு...

இப்படி சேர்ந்த பணத்தில் தான் ஒரு வீட்டை அனுபோக ஒத்திக்கு வாங்கினார்..
ஒரு வருஷத்துக்குள் தனபாக்கியம் பெயரில் கிரயம் ஆயிற்று..

அடுத்த ஐந்து வருஷத்துக்குள் மேலும் இரண்டு வீடுகள் சேர்ந்தன...

அந்தப் பக்கம் மாயவரம் சீர்காழி வரை..
இந்தப் பக்கம் நாகூர் காரைக்கால் வரை..
தெற்கால பட்டுக்கோட்டை பேராவூரணி வரை...

அத்தனை வியாபாரிகளும் -
சங்கு மார்க் வறுகடலை என்று, கீழவாசலில் காத்துக் கிடந்தார்கள்...

அந்த அளவுக்கு நம்பிக்கை நாணயம் கைராசி...

அந்த மூன்று வீடுகளையும் கைமாற்றி விட்டுத் தான்
இந்த பெரிய வீட்டை வாங்கினார்..

வீட்டை பழுது பார்த்து கிரகப் பிரவேசம் செய்யும் முன்பாக
பிள்ளையார் கோயிலுக்கு திருப்பணி செய்தார் - சுயம்புலிங்கம்...

அதெல்லாம் ஐம்பது வருஷத்து சம்பவங்கள்...

ஒரு மழைக் காலத்தின் விடியலில் நொடிப் பொழுதில் தாய் தந்தை உட்பட
எல்லாவற்றையும் இழந்து நின்றான் மீனாட்சி - மீனாட்சி சுந்தரம்...

மீனாட்சி - சுயம்புலிங்கத்தின் நம்பிக்கைக்கு உரியவன்..

இந்த மீனாட்சியிடம் தான் சங்கு மார்க் வறுகடலைக் கம்பெனியின் கணக்கு
வழக்கு எல்லாமே!..

இப்ப என்னலே.. செய்யிறது?.. - சுயம்புலிங்கம் வருத்தத்துடன் கேட்டார்..

ஒன்னுமே புரியலை..ங்க அண்ணாச்சி!.. - என்றான் மீனாட்சி...

நீ என்ன சொல்றே தனம்!..

நாஞ்சொல்ல என்ன இருக்கு!..
செல்லக்கிளி..ய புடிச்சி மீனாட்சி கையில கொடுத்துடுங்க!..
அப்படியே கடைச் சாவியையும் கொடுத்துடுங்க!..
மீனாட்சி செல்லக்கிளி.. பேர் பொருத்தமா இருக்கு இல்லே!..

என்ன நீ சொல்றது!..

கண்டதைத் தான் சொல்றேன்!.. கூப்பிட்டு கேளுங்களேன்..
கண்ணால பேசிக்கிற கதை எல்லாம் வெளியே வரும்!..

அப்படியா?.. என்னய்யா!.. மீனாட்சி... என்ன இதெல்லாம்?...

அண்ணாச்சி.. தப்பு செஞ்சிட்டமோ..ன்னு பயமா இருக்கு!..

பயம் எதுக்கு!.. இனிமே நான் அண்ணாச்சி இல்லே... மாமன்.. தாய் மாமன்!..
துக்கம் கழிஞ்ச ஆறாவது மாசம்.. பழவூர்..ல வெச்சி முகூர்த்தம்!...

அப்படியே மீனாட்சியும் செல்லக்கிளியும்
பெற்றவர்கள் காலில் விழுந்து கும்பிட்டார்கள்...

காலம் நல்லபடியாக ஓடிற்று..

மீனாட்சி செல்லக்கிளி தம்பதியரின் இனிய இல்லறத்தில் சுகந்தி பிறந்தாள்..
அதன்பின் தேடக் கிடைக்காத திரவியம் ஆயிற்று வாழ்க்கை...

வியாபாரத்தில் விறு.. விறு.. - என, நல்ல முன்னேற்றம்..

தேரிக் காட்டில் இருந்த குல சாமி கோயிலை எடுத்துக் கட்டினார்...

பேத்தி.. மேல அவ்வளவு உயிர்..

பொழுது விடிஞ்சதும் சுகந்தி முகத்தைப் பார்க்காமல்
ஒரு வாய் தண்ணீர் குடிக்க மாட்டார்...

ராப்பொழுது ஆனதும் தாத்தா மீசையைப் பிடித்து
இழுத்து விட்டுத் தான் சுகந்தியும் தூங்கப் போவாள் ...

பிள்ளையார் கோயிலுக்கு நான்காவது கும்பாபிஷேகம் செய்து வைத்த நான்காம்
நாள் வழக்கம் போல சங்கடஹர சதுர்த்தி பூஜை..

தீர்த்தம் திருநீறு பிரசாதம் அன்னதானம் எல்லாம் கொடுத்து விட்டு,
வீட்டுக்கு வந்து கருங்கல் திண்ணையில் சாய்ந்தவர் தான்!..

நேராகப் பிள்ளையாரிடம் போய்ச் சேர்ந்து விட்டார்...

சுயம்புலிங்க அண்ணாச்சியின் வெற்றிகளுக்குப் பின்னால் இருந்த தனபாக்கியம்
அதற்குப் பிறகு தான் பரிபூரணமாக வெளிப்பட்டாள்...

கடலை உருண்டை, எள் உருண்டை, வறுகடலை, உப்புக்கடலை, பட்டாணி, அதிரசம்,
அவல், சோளம், சீனி மிட்டாய் இவற்றோடு

சந்திரகலா, சூர்யகலா, அசோகா, பூந்தி, லட்டு எனும் இனிப்புகளும் சேர்ந்தன..

இவை மட்டுமல்லாமல் - நன்னாரி சர்பத், தாழம்பூ சர்பத், ரோஜா சர்பத், பால்
சர்பத், பன்னீர் சர்பத் - என்று பட்டியல் நீண்டது..

இதற்கிடையில் கோயில்பட்டி, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், தூத்துக்குடி,
திருநெல்வேலி - இங்கிருந்தெல்லாம் இனிப்பு வகைகள் அணிவகுத்தன..

கடைத் தெருவில் மட்டும் அந்த வருடம் ஒன்றுக்கு நான்காக கடைகள்...

கொளுத்தும் வெயில் நேரத்தில் - வந்து நிற்பார்கள்..
கலெக்டர் ஆபீக்கு ஐம்பது சர்பத்..
முனிசிபாலிட்டிக்கு நாற்பது சர்பத் - ஏக நேரத்தில் கடை களைகட்டியது...

காதுகளில் பாம்படங்கள் இப்படியும் அப்படியுமாக ஆட -
ஆச்சி தனபாக்கியம் கடை நடத்தும் அழகே அழகு...

அங்கும் இங்குமாக சில்லறை நாணயங்களைத் தேடிச் சேர்த்து அண்டாவில் போட்டு
வைத்திருப்பார்...

கடைக்கு வருபவர்களிடம் தயங்காமல் சொல்லுவார்..

இப்போ இல்லை..ன்னா என்ன!.. நாளைக்கு இந்தப் பக்கம் வர்றப்ப கொடுங்க!..
இந்த சில்லறைக் காசா மனுசன வாழ வைக்குது?.. அன்பு.. ஐயா.. அன்பு!..

நெற்றி மணக்க திருநீறு..
வாய் மணக்க புன்சிரிப்பு..

ஒரு காலத்தில் ஆச்சியின் கழுத்தில் - அட்டிகை, ரெட்டைவடம், மாங்காய் மாலை
- இவையெல்லாம்...

இப்போது பத்து பவுன் சங்கிலியோடு இரண்டு துளசி மாலை மட்டும் தான்...

அந்த புலி நகச் சங்கிலி கூட ஐயா கழுத்தில் இருந்தது...
அதனால் கழற்றுவதற்கு மனம் இல்லை...

உழைத்து மேனி கறுத்திருக்கும்!.. - என்று பழைய பாடல்...
ஆனால், ஆச்சி பொன்னிறமாக சிவந்த உடம்பு..

ரெண்டு கைகளிலும் நடு விரலில் இருந்து முழங்கை வரை
சங்கிலிக் கோலம் பச்சை குத்தியிருப்பார்கள்..

ஏழு வயதில் குற்றாலத்துக்குப் போனபோது
இலஞ்சி கோயிலில் வைத்து -

மாமயில் வேலவன் வாரான்டி - மங்கை
வள்ளிமயில் தங்கக் கைபிடிக்க...
வள்ளிமயில் என்ன சொல்வாளோ - வந்த
வேலவனை அவள் வெல்வாளோ!..

- என்று பாட்டுப் பாடிக் கொண்டே வனக்குறத்திகள் பச்சை குத்தியதாக நினைவு...

சங்கிலிக் கோலமிட்ட கைகளால் ஆச்சி செய்த - தான தர்மங்கள் ஏராளம்..

அந்த தர்மங்கள் தான் இரண்டு நாட்களாக ஆச்சியின் தலைமாட்டில் காத்துக்
கிடக்கின்றன...

டாக்டர் வந்து பார்த்து விட்டு சொன்னார்..
வேண்டியவர்களுக்குச் சொல்லி விடுங்கள்... மருந்து மாத்திரை இதெல்லாம்
வேண்டாம்!.. - என்று..

இதனால் தான் பிள்ளையார் கோயிலும் ஆரவாரமின்றி இருக்கிறது..

ஊர் முறை உறவு முறை எல்லாம் கூடி விட்டார்கள்...

மூனு தலைமுறையப் பார்த்தவங்க.. நல்லபடியா எல்லாம் செஞ்சிடனும்!...

குலதெய்வ கோயில்..ல சத்திரம் கட்டிப் போட்டுருக்காங்க..ளே!..

கடையில வேலை செய்ற பசங்களுக்கு கல்யாணம் காட்சி..ன்னா
பட்டு வேட்டி சேலை எல்லாம் ஆச்சியோட சீர்வரிசை தான்!..

ஏலே.. அதுமட்டுமா.. ஏழைப் பசங்களுக்கு நோட்டு புத்தகம்
சிவகாசியில இருந்து வரழைச்சு கொடுக்காங்க..ளே!..

அங்கேயும் இங்கேயுமாகப் பேசிக் கொண்டார்கள்...

பெரியவர்கள் சிலர் மாடியில் சீட்டுக் கச்சேரி வைத்திருக்க
கீழே கூடத்தில் உறவுக்காரப் பெண்கள் குழுமியிருந்தனர்...

உள்ளறையில் கட்டிலில் - ஆச்சி தனபாக்கியம்...

நூலிழையாய் மூச்சு ஓடிக்கொண்டிருந்தது..

உறவுக்காரப் பெண்ணொருத்தி பனையோலை விசிறியால்
விசிறிக் கொண்டிருந்தாள்...

பெண்கள் தலையைக் கவிழ்த்தபடி வருவதும் போவதுமாக!..

வீட்டின் பின்புறம் எல்லாருக்குமாக சமையல் ஆகிக் கொண்டிருந்தது...

சுகந்திக்கு சொல்லி விட்டாங்களா... மா!..

சொல்லி விடுறதுக்கெல்லாம் இது என்ன உங்க காலமா?.. அது என்னாது?..
வாட்சாப்பு....ங்கறாங்களே!.. அதுல சேதி அனுப்பியிருக்காங்களாம்!...

இப்போ பாக்கியத்துக்கு என்ன வயசு இருக்கும்!...

அது இருக்கும் எழுவத்தைஞ்சுக்கு மேல...

வெள்ளரிப் பழம் மாதிரி நலுங்காம நழுவிடணும்... மனசுக்குள்ள ஆசைய பூட்டி
வெச்சிருந்தா - நெஞ்சுக்குழி துடிச்சிக்கிட்டு இருக்க வேண்டியது தான்...

அத்தாச்சி.. நாம என்ன பட்டனத்தாரா?.. போடா.. சரிதான்...ன்னு போறதுக்கு!...

சடங்காகி வீட்டுக்குள்ள உக்கார்றதில இருந்து சக்கரம் சுத்த
ஆரம்பிக்குது!.. நல்ல புருஷன், நல்ல புள்ளைங்க.. அதுங்களுக்கு படிப்பு,
வேலை, கல்யாணம், பேரன், பேத்தி!..

அத்தாச்சி.. நல்லாப் பேசுறீயளே!..

அது வரைக்கும் சரிதான்.. அப்புறம் பேத்தி பெரியவளாகணும்.. அவளுக்கு
கல்யாணம் ஆகணும்.. புள்ள பொறக்கணும்.... ஆசைக்கு அளவு தான் ஏது?..
அனுமார் வால் மாதிரி!..

இதெல்லாம் எங்கே அத்தாச்சி கத்துக்கிட்டீக?...

மதனி.. மனசுக்குள்ள என்ன ஆசை கிடந்து அல்லாடிக்கிட்டு இருக்கோ?...

அது தெரிஞ்சாத் தான் அம்புட்டையும் சரி செஞ்சிடலாமே!..

நான் பார்க்கிற நாள்..ல இருந்து அந்த மேனிக்குத் தான் இருக்காங்க..
மதனி!.. அந்தக் காலத்து மனுஷி...ல்ல!...

ஒத்தை ஆளா நின்னு போராடி ஜெயிச்சவங்க உங்க அத்தை!..

இலஞ்சியம்!.. அந்த மாமா பட்டதெல்லாம் கொஞ்சமா?.. அவங்களயும் சும்மா
சொல்லக் கூடாது.. மகராசன்!..

செல்லக்கிளி!.. கொஞ்ச நேரம் உக்காரம்மா.. எவ்வளவு நேரத்துக்குத் தான்
நீயும் ஓடியாடிக்கிட்டு இருப்பே!..

இருக்கட்டும் அத்தாச்சி... வந்தவங்கள கவனிக்கலை..ன்னா உங்க கொழுந்தன்
கோவிச்சுக்குவாங்க!..

இப்ப என்ன விருந்துக்கா வந்திருக்கோம்!.. சித்தோட உக்காரு செல்லக்கிளி!..

அக்கா!.. உங்ககிட்ட சேதி ஒன்னு கேக்கணுமாம்.. அதுக்காகத் தான்!..

செல்லக்கிளி.. சுகந்தியும் தான் சடங்காகி நாலஞ்சு வருசம் இருக்குமே!..
வீட்டுல வெச்சிருக்கிறது எதுக்கு... காலாகாலத்துல கல்யாணம் காட்சி...ன்னா
அப்பத்தாவும் பார்த்துட்டுப் போகுமில்ல!..

அத்தாச்சி.. அவதான் இன்னும் படிக்கணும்..ங்கறாளே!...

ஏங்... கல்யாணம் கட்டிக்கிட்டு படிக்கிறது தானே.. ஆரு வேணாங்கறாக?..

அதற்குள்ளாக - அங்கேயிருந்த அலைபேசி கிணுகிணுத்தது...

சித்தி!.. உங்களுக்குத் தான்!..

நான்.. செல்லக்கிளி.. என்ன.. வந்துட்டியா!.. சுகந்தி வந்துட்டாளாம்!..
இப்போ எங்கே...டா இருக்கே?.. சரி.. சரி.. சரி!..

அத்தாச்சி.. சுகந்தி வந்துட்டாளாம்.. புது பஸ்டாண்டு..ல இருந்து..
ஆட்டோ..ல வர்றாளாம்!.. என்னங்க.. என்னங்க.. உங்களத்.. தானே!..

ம்ம்.. கேட்டுக்கிட்டுதான் இருக்கேன்... ஒரு சேதி... சுகந்தி வந்ததும்
யாரும் அழுதுடாதீங்க!.. அவ தாங்க மாட்டா!.. - மீனாட்சி சொல்லி வைத்தார்..

ஆகட்டும்...யா!..

சற்றைக்கெல்லாம் - வாசலில் ஆட்டோ...
மெல்ல வெளிப்பட்டாள் - சுகந்தி..

வாசலில் இருந்த பெரியவர்கள் -
இவ தான் மீனாட்சியோட மகளா!.. - என்று வியப்புடன் பார்த்தார்கள்..

கூடியிருந்த அவர்களுக்கு கைகூப்பி வணக்கம் சொன்னாள்..

மீனாட்சி நல்லாத்தான் பொண்ணை வளர்த்திருக்கான்!.. - பெரியவர்களுக்கு
உள்ளூர மகிழ்ச்சி...

எப்பேர்ப்பட்ட வம்சமடா!.. மகாராணி மாதிரி!... ஆத்தா பத்ரகாளி கூட நின்னு
காப்பாத்துவா..ல்ல!.. - பெரிய பூசாரியார் மாடசாமி மனசார வாழ்த்தினார்..

அவர்களைக் கடந்ததும் துள்ளிக் குதித்து படிகளில் ஏறி வீட்டுக்குள்
நுழைந்தாள் - சுகந்தி..

எவ்வளவுதான் முயன்றும் பெண்களின் இயல்பான சுபாவம் போகவில்லை...

ஓ!.. - என, அழுகையொலி பீறிட்டுக் கிளம்பியது...

அதிர்ந்தாள்.. சுகந்தி..

என்னம்மா!.. என்ன ஆச்சு?.. உடம்பு சரியில்லை..ன்னு தானே சொன்னீங்க!..
அனுப்பி வெச்சிட்டீங்களா?...

பதறாதடி தங்கம்... உங்க ஆச்சிக்கு ஒன்னும் ஆகலை... ரெண்டு நாளா நிதானம்
இல்லாம படுத்த படுக்கையாயிட்டா... வயசான ஜீவன்.. டாக்டரு.. வந்து
பார்த்துட்டு.. ஒன்னுஞ் சொல்லாம போய்ட்டாராம்!...

விறுவிறு என்று - பின்கட்டுக்குப் போனாள் சுகந்தி..

முகங்கழுவி வேறு உடை மாற்றிக் கொண்டு பத்து நிமிடத்தில் கூடத்துக்கு வந்தாள்...

ஒருவாய் சாப்பிடும்மா!.. கோயம்புத்தூர்...ல ராத்திரி பஸ் ஏறின புள்ளை..
வயிறு காலியாக் கெடக்கும்!..

காபி மட்டும் கொடுங்க.. சித்தி!.. - கையில் காபிக் கோப்பையை வாங்கிக்
கொண்டு ஆச்சி கிடக்கும் உள்ளறைக்குள் நுழைந்தாள்...

அங்கிருந்த மின் விளக்குகளை ஏற்றினாள்.. வெளிச்சம் பரவியது...

கட்டிலுக்கு அந்தப் பக்கமாகச் சென்று - ஆச்சியின் அருகில் அமர்ந்தாள்..

ஆச்சியின் முகத்தை உற்றுப் பார்த்தாள்...

ஆத்தா!.. சுகந்தி வந்திருக்கா... கண்ணத் தொறந்து பாருங்களேன்...

ம்ஹூம்.. ஆச்சியின் முகத்தில் எந்த உணர்வும் இல்லை..

ராசாத்தி!.. நாங்கள்...லாம் பேசிப் பார்த்துட்டோம்.. நீ கூப்பிட்டுப் பாரேன்!...

காந்திமதி.. ஆச்சிக்கு தங்கை முறை.. திருநெல்வேலியில் இருந்து முதல் ஆளாக
வந்தவர்கள்...

ஆச்சி.. ஆச்சி!.. - சுகந்தி மெல்ல அழைத்தாள்..

அங்கிருந்த பெண்கள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்கள்...

கல்லு மனசு... என்ன வேணும்...ன்னு வாயத் தெறந்து சொன்னாத்தானே
வெளங்கும்!.. - திருச்சுழி பெரியம்மா வருத்தப்பட்டுக் கொண்டார்கள்...

புள்ளை..ங்க முகத்த பார்த்தமா.. ரெண்டு வார்த்தை பேசுனமா..ன்னு இல்லாம!..
- விம்மல் சடாரென வெடித்தது..

ஆச்சி.. என்னைப் பாருங்களேன்!..  - மெதுவாக வலது கையை நீவி விட்டாள் சுகந்தி..

இந்தக் கையால எத்தனை நாள் எனக்கு சோறு ஊட்டி விட்டிருப்பீங்க!?..
இந்தக் கையால எத்தனை நாள் எனக்கு கால் கழுவி விட்டிருப்பீங்க!?.
இந்தக் கையால எத்தனை நாள் எனக்கு சட்டை போட்டு விட்டிருப்பீங்க!?..
இந்தக் கையால எத்தனை நாள் எனக்கு சடை போட்டு விட்டிருப்பீங்க!?..

கூடியிருந்த பெண்களெல்லாம் அழுகையை நிறுத்தி விட்டார்கள்...
புதுமையாக இருந்தது அவர்களுக்கு.. உன்னிப்பாக கேட்டார்கள்...

ஆச்சி.. உங்களுக்கு நினைவு இருக்கா?.. என்னைத் தூக்கிக்கிட்டு
பூங்காவுக்கு போனப்ப இந்த கால்...ல தான கண்ணாடி குத்துனது... அதை வெளியே
சொல்லாம... எவ்வளவு தூரம் நடந்தீங்க.. அப்போ உங்களுக்கு எவ்வளவு வேதனையா
இருந்திருக்கும்?..

அப்படியே - வலது காலை மிருதுவாக அழுத்தியபடி
மெலிந்திருந்த விரல்களை வருடி விட்டாள் சுகந்தி...

அந்த நேரத்தில் ஆச்சியின் புருவங்கள் மின்னலெனத் துடித்ததைக் கண்டதும்
அடி.. யாத்தீ!.. - என, அதிர்ந்து வீறிட்டார்கள் அங்கிருந்த பெண்கள்...

இந்த சப்தத்தைக் கேட்ட அளவில் மாடியில் சீட்டுக் கச்சேரி நின்று போனது...
எல்லாரும் பதற்றத்துடன் கீழே ஓடி வந்தனர்...

எத்தனை நாள் என்னை மார்..லயும் தோள்..லயும் தூங்க வெச்சிருப்பீங்க!...

சட்டென தோளுக்குக் கீழாக கையைக் கொடுத்துத் தூக்கிய சுகந்தி -
ஆச்சியைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டாள்...

சுகந்தியின் விழிகளில் தாரை தாரையாக நீர் வழிந்தது...

அந்த நீர்த்துளிகள் ஆச்சியின் கன்னத்தில் விழுந்த வேளையில்
ஆச்சியின் கைவிரல்கள் மெல்லத் துடித்தன...

செல்லக்கிளி விருட்டென எழுந்து
ஆச்சியின் கையைப் பற்றி சுகந்தியின் தோளில் வைத்தாள்...

ஒருவிநாடி - தோளில் ஊர்ந்தன ஆச்சியின் விரல்கள்...
மறுவிநாடி - மெல்ல மேலெழுந்து சுகந்தியின் கன்னத்தை வருடின...

ஆச்சியின் விழிகள் மெல்லத் திறந்து சுகந்தியின் முகத்தை ஏறிட்டன..

ஆச்சியின் கடை விழியில் திரண்ட நீர் கன்னத்தில் உருண்டது..

என்ன.. இது!.. நடப்பதெல்லாம் கனவா!..
- அதிசயித்துக் கொண்டிருந்த பெண்கள் - திடீரென குலவையிட்டனர்...

ஏலா.. செல்லக்கிளி.. உங்க ஆத்தா பாக்கியம் பொழைச்சிக்கிட்டாடி!..
இனிமே.. ஆயுசு நூறு தான்!.. அந்தக் காளீஸ்வரி தான் உம் மக ரூபத்தில வந்திருக்கா!..

அங்கே அழுகையும் சிரிப்பும் மகிழ்ச்சியும் பொங்கிப் பீறிட்டு எழுந்தன..

திருநெல்வேலி காந்திமதி ஆச்சி தட்டுத் தடுமாறி எழுந்தார்கள்...

என் ராசாத்தி!.. - என்றபடி சுகந்தியின் முகத்தை வருடி சொடக்கு எடுத்தார்கள்...

அதான் ஆச்சி மறு ஜென்மம் எடுத்துட்டாள்...ல!.. அழுவாதே!..

வாஞ்சையுடன் சுகந்தியின் கண்ணீரைத் துடைத்து விட்டார்கள்...

அங்கிருந்த ஒவ்வொருவரின் முகத்திலும்
புத்தம் புதிதாக பாசமும் நேசமும் பளீரிட்டது...

என்னப்பா... சொல்றே!..
ஆத்தாளுந்..தான் நல்ல மாதிரியா பொழச்சிக்கிட்டா!..
மீனாட்சி... பாக்கு மாத்திடுவமா!..
சங்கர பாண்டி.. இங்கிட்டு வாய்யா!..
சுகந்தி.. அத்தானைப் பாரு..டே!..

போங்க.. தாத்தா.. எனக்கு வெக்கமா இருக்கு!..

கண்ணீருக்கிடையேயும் - களுக்.. எனச் சிரித்தாள் சுகந்தி...



தமிழ்மணத்தில் வாக்களிக்க...

48 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    படித்துக்கொண்டு இருக்கின்றேன்....

    பதிலளிநீக்கு
  2. //அதான் ஆச்சி மறு ஜென்மம் எடுத்துட்டாள்...ல!.. அழுவாதே!..

    வாஞ்சையுடன் சுகந்தியின் கண்ணீரைத் துடைத்து விட்டார்கள்...//

    என்ன ஒரு பாசமும் நேசமும்!
    பேத்தியின் அணைப்பில், வருடலில் அன்பின் உயிர்நிலை திரும்பி வந்து விட்டது.
    ஆரம்பித்திலிருந்து படிக்க விறு விறுப்பு.
    முடிந்தவுடன் கண்ணில் கண்ணீர் துளி.
    வாழ்த்துக்கள்.
    எங்கள் ப்ளாகிற்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. அவர்களது கடைசி காலத்தில்?..


    அவர்களுடன் நாம் மனம் திறந்து பேசுதலே -

    அவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக் கடன்...


    அதனால் விளையும் மகிழ்ச்சியே அனைவரையும் வாழ்விக்கும்..//

    முதலில் வந்த வரிகளின் பலத்தை நிறைவில் பார்த்து விட்டேன்.
    அருமை.

    பதிலளிநீக்கு
  4. சென்ற வாரம் வரை இந்த நாளை நினைத்துக் கொண்டிருந்தேன்..
    அங்குமிங்குமாக ஊர்ப் பயணங்கள்..

    இதோ வந்து விட்டேன் நானும்.. உங்களுடன் நானும் கதையை வாசித்துக் கொண்டிருக்கின்றேன்,,

    பதிலளிநீக்கு
  5. அன்பின் ஜி..

    மகிழ்ச்சி..
    தங்களது முதல் வருகைக்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்..
    தங்களிடமிருந்து விரிவான கருத்துரையை எதிர்பார்க்கிறேன்..

    பதிலளிநீக்கு
  6. அன்புக்குரிய கோமதி அரசு அவர்களுக்கு வணக்கம்..

    >>> ஆரம்பித்திலிருந்து படிக்க விறு விறுப்பு.
    முடிந்தவுடன் கண்ணில் கண்ணீர் துளி.. வாழ்த்துக்கள்..<<<

    தங்களது வாழ்த்துரை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  7. அன்புக்குரிய கோமதி அரசு அவர்களுக்கு வணக்கம்..

    >>> அவர்களுடன் நாம் மனம் திறந்து பேசுதலே -
    அவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக் கடன்... <<<

    எத்தனை பேருக்கு இப்படியான பேறு கிடைக்கின்றது?..

    எல்லாருக்கும் இப்படியான பேத்திகள் கிடைக்க பிரார்த்திப்போம்..

    தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  8. கே வா போ க!!!! முதலில் சீ ரா ம என்று நினைத்துவிட்டோம்...

    கதை பிறந்த கதையைச் சொல்லியதே ஒரு கதை போன்று!!!
    அருமையான தமிழ் நடை!!! வழக்கம் போல!! குடும்பம் கண் முன் விரிகிறது என்றால் அதில் இழையோடும் அன்பு!! எத்தனைக் குடும்பங்கள் இப்படி இப்போதும் இருக்கின்றன? பேத்தியின் ஸ்பரிசத்தில், பேச்சில் அந்தப் பாட்டி உணர்வு பெற்று எழுகிறாள்!! எத்தனைப் பேருக்கு இப்படியான பேத்திகள் கிடைப்பார்கள். அரிதுதான்! அருமை அருமை! பாக்கியம்தான்!! ஒரு நேர்மறையான கதை! அன்பும் நல் வார்த்தைகளும் மட்டுமே தவழும் கதை!.. நீங்கள் உங்கள் தளத்திலும் கதைகள் அவ்வப்போது எழுதுவது அறிவோம். இன்னும் நிறைய எழுதலாம்..

    வாழ்த்துகள்! தங்களுக்கும் எங்கள் ப்ளாகிற்கும்!!

    பதிலளிநீக்கு
  9. முடிவில் மனது பூரிப்பில் நெகிழ்ந்துவிட்டது...

    வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  10. அன்பின் துளசிதரன் அவர்களுக்கு வணக்கம்..

    >>> கே வா போ க!.. முதலில் சீ ரா ம என்று நினைத்துவிட்டோம்..<<<

    விடாது கருப்பு!..

    இனிய கருத்துரையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  11. அன்பின் துளசிதரன்..

    >>> முடிவில் மனது பூரிப்பில் நெகிழ்ந்துவிட்டது...<<<

    அதுதான் எனக்கு வேண்டும்.. எல்லாரும் மகிழ்ந்திருக்க வேண்டும்..

    அன்பின் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  12. //வறுமையுற்றிருந்த அவர்கள் கேட்ட தொகைக்கு மேலாக தாம்பூலத் தட்டில் வைத்துக் கொடுத்தார்...//

    //அவர்களோ அதிலிருந்து ஒரு நயா பைசா கூட அதிகமாக எடுத்துக் கொள்ளவில்லை...//

    மேன் மக்கள் மேன் மக்களே...

    அன்பின் ஜி அன்று மனிதம் உள்ள மாமனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு இது ஒன்றே சாட்சி

    சில மனிதர்களின் உயிர்கள் இப்படியும் மீண்டும் உயிர்த்தெழுந்து இருக்கின்றது சுகந்தி போன்றவர்களால் என்பது உண்மையே.... இருப்பினும் எமது வருத்தம் இது இன்னும் தொடரவேண்டும் அப்படி நிகழ்ந்தாலே முதியோர் இல்லங்கள் தகர்த்து எறியப்படும்.

    வயதானவர்களை இறைவனிடம் வழியனுப்பி வைக்கும்வரை சற்றே வாஞ்சையோடு நாலு வார்த்தை பேசி வைப்பதில் உள்ள தொண்டுக்கு இணை வேறென்ன ?

    நான் தற்பொழுதெல்லாம் எனது அம்மாவிடம் வழக்கத்தைவிட கூடுதலாக அன்பாய் நடந்து கொள்கிறேன் என்பது உண்மையே.... இருப்பினும் எனது அம்மாவுக்கு என்னைவிட தனக்கு துளியும் பயனில்லாமல், உருப்படாமல் போன பிள்ளைகள் மீதே அதிக பாசம் இது எனக்கு தெரிந்தும் நானே பார்த்துக் கொண்டு வருகிறேன் காரணம் இது எனது கடமை என்பதைவிட நாளை எனக்கும் இதே அரவணைப்பு கிடைக்கும் என்ற சுயநல ஆசை என்றும் சொல்லலாம்.

    இன்று சுதந்திர தின நன்நாள் இந்நாளில் தேசத்தியாகிகள் ‘’அனல்’’ அனுஷ்கா போன்றவர்கள் தொலைக்காட்சிகளில் எப்படியெல்லாம் சுதந்திரம் வாங்க பாடுபட்டோம் என்பதை தங்களது சுந்தரத்தமிழால் தெளிவாக சொல்லி வருவதை கண்டு மனம் மகிழும் நேரத்தில்......

    தனபாக்கியம் ஆச்சி உயிருக்கு போராடுவதை காண்பித்து இலவுகார வீடாக்கி மனதை கனக்க வைத்து விடுவீர்களோ என்ற பயந்த நேரத்தில் சந்கரபாண்டி – சுகந்திக்கு முடிச்சுப்போட்டு கல்யாண வீடாக்கி பதிவை சுபமாக்கி விட்டீர்கள் வாழ்க மணமக்கள்.

    மூன்று தலைமுறைகளை ஒரே சிறுகதையில் சுழலச்செய்ய தங்களைப் போன்றவர்களால்தான் இயலும்.

    அன்பின் ஜி இனிய சுதந்திர தின வாழ்த்துகள் (வாத்துகால் அல்ல)

    பதிலளிநீக்கு
  13. அன்பின் ஜி, தங்களுக்கு வணக்கம்..

    தங்களது விரிவான கருத்துரையில் மனம் நெகிழ்ந்தேன்..

    >>> சங்கரபாண்டி – சுகந்திக்கு முடிச்சுப்போட்டு கல்யாண வீடாக்கி பதிவை சுபமாக்கி விட்டீர்கள்.. வாழ்க மணமக்கள்!..<<<

    என்றைக்குமே மங்கலமாக இருக்க வேண்டும்..

    தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  14. படித்தேன், மிகவும் ரசித்தேன். (சாதி குறிப்பிடுவதைத் தவறாக எண்ணாதீர்கள்). எனக்கு திருநெவேலி நாடார் குடும்பச் சூழல்தான் மனதில் தோன்றியது. நல்ல நடை. காலையும் அதுவுமாக முதல் மரியாதை சிவாஜியின் முதல் காட்சி போன்று (ராதா ஊருக்குள் காலடி எடுத்துவைக்கும்போது நெஞ்சுக்குழி ஏறி இறங்கும்) சோகத்தில் முடித்துவிடுவீர்களோ என்று தோன்றியது. கடைசிப் பகுதியை (சுகந்தி பாட்டியை சந்திப்பதிலிருந்து) இன்னும் அதிகமாகவே எழுதியிருந்தால் கதையின் கனம் இன்னும் கூடியிருக்கும், சொல்ல வந்த க்ளைமாக்ஸ் இன்னும் பலம் பெற்றிருக்கும்.

    பிறகு மீண்டும் வருகிறேன். த ம முடிந்தது.

    பதிலளிநீக்கு
  15. அன்பின் நெல்லைத் தமிழன் அவர்களுக்கு வணக்கம்..

    >>> எனக்கு திருநெல்வேலி நாடார் குடும்பச் சூழல்தான் மனதில் தோன்றியது...<<<

    உண்மை அது தான்.. சென்ற சனிக்கிழமை நெல்லையில் தான் இருந்தோம்..

    ஸ்ரீராம் சிறுகதை தான் கேட்டார்.. நெடுங்கதையாகி விட்டது...

    கதை தங்களைக் கவர்ந்ததில் எனக்கு மிக்க சந்தோஷம்..

    தங்கள் வருகையும் கருத்துரையும் ம்கிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  16. கலங்க வைத்த கதை...

    செல்வராஜ் அண்ணாக்கு வாழ்த்துகள்

    உங்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  17. சிறப்பான நடையில் உயிரோட்டமுள்ள நல்ல கதை.சுகந்தி பாத்திரப் படைப்பு சிறப்பு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  18. சிறப்பான நடையில் உயிரோட்டமுள்ள நல்ல கதை.சுகந்தி பாத்திரப் படைப்பு சிறப்பு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  19. "அனுபோக ஒத்திக்கு" - இதன் அர்த்தம் புரியாதவர்களுக்கு - அவர்களுக்குத் தேவையான பணத்தை (சமயத்தில் 1 லட்சம், 2 லட்சம் போல். அந்தக் காலத்தில் 10,000) கொடுத்துவிட்டு வீட்டையோ அல்லது காணியையோ பாத்யதைக்கு எடுத்துக்கொள்வது. வீடு என்றால் நாம் வசிக்கலாம். காணி என்றால், விவசாயம் செய்துகொள்ளலாம். எப்போது நாம் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுக்கிறார்களோ அப்போது வீட்டையோ அல்லது காணியையோ திருப்பித்தரவேண்டும். இதற்கு வட்டி கிடையாது, ஏனென்றால் நாம இடத்தையோ நிலத்தையோ அனுபவிப்பதால்.

    "கடலை உருண்டை, எள் உருண்டை, வறுகடலை, உப்புக்கடலை, பட்டாணி, அதிரசம், அவல், சோளம், சீனி மிட்டாய்" - இந்த மாதிரிக் கடைகளில், பொரிகடலை உருண்டை, தேன் மிட்டாய் கண்டிப்பாக விற்பார்கள். அதிரசம் common இல்லை. சோளமும் common இல்லை.

    காந்திமதி - இந்தப் பெயர், கதை சார்ந்த சமூகத்தில் புழங்கும் பெயர் இல்லை. இது திருனெவேலி பிள்ளைமார்கள் வைத்துக்கொள்ளும் பெயர் (நெல்லை காந்திமதி அம்மையினால்).

    வர்ணனைகள் எல்லா ரொம்ப நல்லா அமைஞ்சிருக்கு. பேச்சு வழக்கும் நல்லா வந்திருக்கு. கதையை நல்லவிதத்தில் (சோகமுடிவாக இல்லாமல்) முடித்தது சிறப்பு.

    இந்தச் சமூகம் தங்கள், sheer உழைப்பால் முன்னேறியவர்கள். அவர்கள் 80 வருடத்துக்கு முன்பு இருந்த நிலையிலிருந்து, தங்கள் உழைப்பாலும், 'கல்வி' என்பது மிக முக்கியம் என்று புரிந்துகொண்டு அதற்கு முக்கியத்துவம் கொடுத்ததாலும், தங்களுக்கு இயல்பாக அமைந்த 'வியாபாரம்' செய்யும் திறமையைக் கொண்டும் நல்ல முன்னேற்றம் அடைந்தவர்கள். விருதுனகர், சிவகாசி, மதுரை போன்ற பல இடங்களில் பள்ளி, கல்லூரிகள் நிறைய சமைத்து, அதன்மூலம் சமூகத்தின் முன்னேற்றத்திற்குக் காரணமாக இருந்தவர்கள். கதையும் அதனை நன்றாகக் கொண்டுவந்துள்ளது.

    கதை சொல்லுகின்ற நகைகளும் மதுரை மற்றும் அதற்குக் கீழே நெல்லை குமரி வரையிலான இடங்களைச் சேர்ந்தவர்கள் அணிவது.

    பாராட்டுக்கள் துரை செல்வராஜு சார்.

    பதிலளிநீக்கு
  20. //முகம் அறிந்து பேசுவது இனிமை..

    மனம் உணர்ந்து பேசுவது இனிமையிலும் இனிமை...//

    மனம் உணர்ந்து பேசுகையில் பறக்கத்துடித்த ஜீவன் கூட பாசத்துடன் திரும்பி வந்த நிகழ்வை அருமையான தஞ்சைக் களத்தில் எழுத்தி அசத்தி விட்டீகள்!! மிக‌வும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள்! மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  21. திருமிகு ராஜி அவர்களுக்கு வணக்கம்..

    தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  22. திருமிகு பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு வணக்கம்..

    >>> சிறப்பான நடையில் உயிரோட்டமுள்ள நல்ல கதை. <<<

    தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  23. திருமிகு நெல்லைத்தமிழன் அவர்களுக்கு..

    மிகவும் துல்லியமாக அலசியிருக்கின்றீர்கள்..

    அதிரசம், சோளம் - Common என்பது சரிதான்.. இருந்தாலும் எங்கள் தஞ்சை பகுதியில் வீட்டு அதிரசம் சோளப்பொறி, சுற்று முறுக்கு என்று வியாபாரம் உண்டு..

    மேலும் நெல்லையில் அன்னை காந்திமதி எல்லாருக்கும் பொதுவானவள் அல்லவா!..
    அதனால் அன்பின் உறவுக்கு அன்னையின் பெயரைச் சூட்டினேன்.. மற்றபடி நெல்லையின் உள்ளார்ந்த வழக்கம் தெரியாது..

    நாடார் சமுதாய மக்களின் கடுமையான உழைப்பினை சிறப்பாகக் குறித்தமைக்கு நன்றி..

    >>> வர்ணனைகள் எல்லா ரொம்ப நல்லா அமைஞ்சிருக்கு. பேச்சு வழக்கும் நல்லா வந்திருக்கு. கதையை நல்லவிதத்தில் (சோகமுடிவாக இல்லாமல்) முடித்தது சிறப்பு.<<<

    தங்களுடைய அன்பான வருகையும் கருத்துரையும் பாராட்டுரையும் மனதிற்கு புத்துணர்ச்சி..

    மகிழ்ச்சியும் நன்றியும்!..

    பதிலளிநீக்கு
  24. திருமிகு மனோசாமிநாதன் அவர்களுக்கு வணக்கம்..

    >>> மனம் உணர்ந்து பேசுகையில் பறக்கத் துடித்த் ஜீவன் கூட பாசத்துடன் திரும்பி வந்த நிகழ்வை அருமையான தஞ்சைக் களத்தில் எழுதி அசத்தி விட்டீர்கள்!..<<<

    அன்பின் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  25. தென் மாவட்டத்து வட்டார வழக்கில் அருமையானதொரு கதை! நல்ல முடிவும் கூட! இம்மாதிரி அதிசயங்கள் எப்போதாவது நிகழ்பவையே! அதிலும் இந்தக் கதையின் மாந்தர்கள் அனைவருமே நல்லவர்கள், வல்லவர்கள், அன்பைப் பரிபூரணமாக உணர்ந்தவர்கள். ஆகவே அவர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப காந்திமதி ஆச்சியும் உயிர்பெற்று எழுந்து விட்டாள். பேத்தியின் கல்யாணத்தையும் பார்க்கணுமே!

    பதிலளிநீக்கு
  26. திருமிகு கீதா சாம்பசிவம் அவர்களுக்கு வணக்கம்..

    பேத்தியின் கல்யாணத்தைக் காண வேண்டும்.. பேத்தியின் மகளைக் கொஞ்ச வேண்டும்.. நிறைய ஆசைகள் காத்துக் கிடக்கின்றதே!..

    >>> தென் மாவட்டத்து வட்டார வழக்கில் அருமையானதொரு கதை! நல்ல முடிவும் கூட!..<<<
    தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  27. அன்பின் துரை செல்வராஜுவுக்குப் பாராட்டுகள். நாம் எதை நினைக்கிறோமா அதுவாக மாறுகிறோம் நல்லஎண்ணங்களே உங்கள் பண்பு அதுபோல் கதையும் நல்ல எண்ணங்களால் உருவாயிற்று மீண்டும் பா ராட்டுகள்

    பதிலளிநீக்கு
  28. //ராஜ வம்சத்தினர் வாழ்ந்த வீடு…வெகுகாலம் புழங்குவார் யாருமின்றிக் கிடந்தது.. அந்த வீட்டுக்குள் ஆவி நடமாட்டம்…! //

    சரி, genre மாறிவிட்டது. அமானுஷ்யக் கதை எழுத ஒருத்தர் வந்துவிட்டாரே! நல்லதுதான்…என்று நினைத்து மேற்கொண்டு வாசித்தால், அட, இது பழக்கப்பட்ட பாசமலர்தான் ! ஆயினும் வட்டார வழக்குகள் ஆங்காங்கே கலந்து கதை ஓடுகிறது. பாம்படம், அட்டிகை, ரெட்டைவடம் போன்ற வார்த்தைகளை அடுத்த தலைமுறையிடம் சொன்னால் ’அப்படீன்னா என்னா ! ஸ்வீட்டா? இல்ல, பலகார ஐட்டமா?’ என்று ஒருவேளை கேட்கக்கூடும்.

    நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  29. அருமையான Flow. தலைமுறை தாண்டிய உறவுகளின் நேர்த்தி அப்பட்டமாக மனசில் ஒட்டிக் கொண்டது.

    முடிவும் சரியே. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  30. அன்பின் GMB ஐயா அவர்களுக்கு வணக்கம்..

    >>> நாம் எதை நினைக்கிறோமா அதுவாக மாறுகிறோம்.. <<<

    தங்கள் அன்பு வருகையும் பாராட்டுரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  31. அன்பின் ஏகாந்தன் அவர்களுக்கு வணக்கம்..

    >>> பாம்படம், அட்டிகை, ரெட்டைவடம் போன்ற வார்த்தைகளை அடுத்த தலைமுறையிடம் சொன்னால் -
    அப்படீன்னா என்னா! ஸ்வீட்டா? இல்ல, பலகார ஐட்டமா?.. என்று ஒருவேளை கேட்கக்கூடும். <<<

    உண்மைதான்.. அப்படித்தான் ஆகிவிட்டது வாழ்க்கை முறை..

    தங்கள் அன்பு வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  32. அன்பின் தனபாலன் அவர்களுக்கு வணக்கம்..
    தங்கள் அன்பு வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  33. அன்பின் ஜீவி அவர்களுக்கு வணக்கம்..

    >>> தலைமுறை தாண்டிய உறவுகளின் நேர்த்தி..<<<
    தங்கள் அன்பு வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  34. தூய்மையான அன்பு நிகழ்த்திய அற்புதம். அருமையான கதை.

    பதிலளிநீக்கு
  35. நல்ல மனிதர்களை அனுபவங்களில் அதிகம் பார்க்க முடியாத குறைய சில நல்ல கதைகள் தருவது மகிழ்ச்சி. அதுவும் அந்த நெல்லைத்தமிழ், பழைய நினைவுகளைக் கிளறிவிட்டது. பிரமாதமான நடை!

    பதிலளிநீக்கு
  36. அன்பின் ஐயா புலவர் ராமாநுசம் அவர்களுக்கு வணக்கம்..

    தங்களது வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  37. திருமிகு ராமலக்ஷ்மி அவர்களுக்கு வணக்கம்..

    தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  38. அன்பின் சேட்டைக்காரன் அவர்களுக்கு வணக்கம்..

    தங்களது அன்பு வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  39. போட்டோவில்..அந்த அரண்மனை வீட்டு முன்னால்தான் நீங்க நிற்கிறீங்களா துரை செல்வராஜூஜி :)

    பதிலளிநீக்கு
  40. அன்பின் பகவான் ஜி அவர்களுக்கு வணக்கம்..

    இந்த அரண்மனை வீடு நம்முடையதல்ல..

    கல்லணையில் இருக்கும் கரிகாற்சோழனின் மணிமண்டபம்..

    தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  41. அருமை
    மனதோடு ஒட்டி உறவாடும் எழுத்துக்குச் சொந்தக்காரர்
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  42. அன்பின் கரந்தை JK அவர்களுக்கு வணக்கம்..

    தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  43. பாட்டியின் நேசம், பேத்தியின் பாசம் இதுதான் அருமை. யதார்த்தமாக இருந்தது. பேத்தி கூப்பிடுகிறாள்என்று நினைக்க வைக்கிறது. அருமை,பெருமையும் கூட. அன்புடன்

    பதிலளிநீக்கு
  44. அன்பின் காமாட்சி அம்மாள் அவர்களுக்கு வணக்கம்..

    பாட்டியின் நேசம் பேத்தியின் பாசம் - இவையிரண்டும் தேடக் கிடைக்காத திரவியங்கள்..

    தங்களது அன்பான வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  45. அன்பின் ஐயா அவர்களுக்கு...
    கதையை முன்னரே வாசித்து கருத்தும் இட்டிருந்தேன்... என் கணிப்பொறி பிரச்சினையால் கருத்து எங்கள் பிளாக்கைச் சென்றடையவில்லை...
    இப்போதும் வேறு வித முயற்சியில்தான் கருத்து இடுகிறேன்... இதன் மூலம் கருத்து இடுவதில் அதிகம் வாசிக்க முடியாது என்றாலும் சில தளங்களையாவது வாசிக்க முடிகிறது.

    மூன்று தலை முறை...

    பாட்டி பேத்தி நேசம்...

    ஒரு மரணப் போராட்டத்தை மனப் பிணைப்பு உடைத்தெறிகிறது...

    ஒரு வாழ்க்கையை வாழ்ந்த அனுபவத்தைக் கொடுக்கும் கதை.

    தொடர்ந்து எழுதுங்கள் ஐயா...

    மண்ணின் மனத்தோடு கதைகள் எழுதுவது என்பது வரம்... அது நன்றாகவே கைகூடியிருக்கிறது.

    ஆன்மீகம் எழுதும் ஐயா வாழ்க்கைக் கதைகளையும் எழுதுங்கள்..
    அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..

      >>> மண்ணின் மனத்தோடு கதைகள் எழுதுவது என்பது வரம்... அது நன்றாகவே கைகூடியிருக்கிறது..<<<

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி...

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!