வியாழன், 3 ஆகஸ்ட், 2017

பிக் பாஸும் வேட்டையைக் கைவிட்டவனும்




டின்னுக்குள் புழுக்கள்









     நான் ஸ்கூல்ல படிக்கற காலத்துல எங்க கெமிஸ்ட்ரி வாத்தியார் ராஜமாணிக்கம் ஸார் ஒரு கதை சொன்னாரு. 

     சீனாவிலோ எங்கோ...   ஒரு உணவுப்பொருளை ஒரு டின்னுக்குள் போட்டு சில புழுக்களையம் உள்ளே போட்டு மூடி விடுவார்களாம்.  புழுக்கள் பல்கிப்பெருகி, உணவை உண்டு முடித்தபின் தங்களுக்குளேயே ஒன்றையொன்று தின்று தீர்க்குமாம்.  கடைசியாக ஒரே ஒரு புழு மிஞ்சுமாம்.  டின் முழுக்க வியாபித்து அந்த ஒற்றைப்புழு உள்ளே இருக்குமாம்.  தகுந்த காலத்தில் அந்த டின்னைத் திறந்து மிஞ்சியிருக்கும் அந்த ஒரு பெருத்த புழுவை வெளியில் எடுத்து துண்டாக்கிக் சாப்பிடுவார்களாம்!
     உண்மையோ, பொய்யோ, இத்தனை வருடங்களுக்குப் பிறகு இப்போது அந்தக் கதை ஞாபகத்துக்கு வருகிறது! -  பிக் பாஸ் பார்க்கும்போது...!




=========================================================================


வேட்டையைக் கைவிட்டவன்

இவானிசுக்

     நான் தன்னந்தனியே பாலைவனத்தில் தங்கியிருந்தேன்.  எண்ணெய் வயல் பணியாட்கள் இன்னும் வந்து சேரவில்லை.  எனவே, நான் காத்திருந்தேன்.  வேட்டையாடிக் பொழுதைக் கழித்தேன்.

     சிறு மணல் குன்று ஒன்றின் மேல் ஒரு கழுகு இருக்கக் கண்டேன்.  கழுத்தை நீட்டியபடி அது என் இருப்பிடத்தையே பார்த்துக் கொண்டிருந்தது.  பிறகு திடீரென்று உயரப் பறந்து வந்து என் தலைக்கு நேராக வட்டமிட்டது.  அதைக் கொல்லவேண்டும் என்று நான் நினைக்கவில்லை.  ஆனால் பாலைநிலத்தின் ஞாபகார்த்தமாக ஒரு பொருள் கொண்டுவரும்படி என் மனைவி என்னைக் கேட்டது நினைவுக்கு வந்தது.







     கழுகு என் தலைக்கு மேலே வானில் அசைவற்று நின்று கொண்டு, தன் கூரிய கண்களால் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது.  அதை நோக்கி என் துப்பாக்கி உயர்ந்தது....!  பெரிய இறக்கைகளை விரித்தபடியே கழுகு கீழே விழுந்தது.  என் கூடாரத்துக்கு அருகே விழுந்தபோது, அது பெரிய ஓலமிட்டது.  ஆனால், கழுகின் குரல் போல இல்லை அந்த ஓலம்;  உதவிக்காகஒலமிடும் மனிதக் குரல் போலவே இருந்தது.  எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.  இறந்து கொண்டிருந்த கழுகைப் பார்க்க விரும்பாமல் வானை நோக்கித் தலையைத் தூக்கி ஸ்தம்பித்து நின்றுவிட்டேன்.

     மறுநாள் காலையில் கூடாரத்துக்கு வெளியே ஒரு பேரிரைச்சலைக் கேட்டேன்.  விமானத்தில் தண்ணீரும் சாப்பாடும் வருகிறது என்றே எண்ணி மகிழ்ந்தேன்.  படுக்கியிலிருந்து துள்ளி எழுந்தேன்.  ஆனால் வெளியே நான் கண்ட காட்சி!  என் சப்த நாடியும் பயத்தால் ஒடுங்கிவிட்டன.  மணலில் இறந்து கிடந்த கழுகை விட இருமடங்கு பெரிய கழுகு ஒன்று, பத்து மீட்டர் தூரத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்தது.  என்னைக் கண்ட கழுகு, உயர பறந்து மேலே கயிற்றிலிருந்து தொங்கவிட்டாற்போல வானிலே நிலைத்து நின்றது.  நான் கொன்றது ஒரு மனைவியை, ஒரு தாயை!  ஆம், ஒரு பெண் கழுகை நான் கொன்று விட்டேன்!


      ஆண்பறவை பழிதீர்க்க வந்துவிட்டதோ!  நான் என்னைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டிய நிலை, மீண்டும் இதைச் சுட்டுக் கொல்லாவிட்டால் இது எனது கூடாரத்தைக் கிழித்து என்னை அலங்கோலப்படுத்தி விடும்.

     எனவே, கூடாரத்தினுள் விரைந்து சென்று, என் துப்பாக்கியை எடுத்து வந்தேன்.  ஆனால் அதற்குள் இந்தக் கழுகு கீழே இறங்கியது.  இறந்து கிடந்த தன் மனைவியை கால்களுக்கிடையே பற்றிக்கொண்டு பறந்து சென்றது.  மிகத் தாழ்வாகவே பறந்து சென்ற இந்தக் கழுகு, குன்றின் மேலே சென்று இறங்கியது.  முன்பு பெண் கழுகு நின்றிருந்த அதே குன்று!

     கூடாரத்தினுள்ளே சென்று படிக்கலானேன்.  பாதி திறந்திருந்த இடைவெளியின் வழியே கழுகின் நிழலுருவம் தெரிந்தது.  சிறிது நேரத்துக்குப்பின், நான் வெளியே சென்று வானை நோக்கிச் சுட்டேன்.  கழுகு அசையவில்லை.

     அப்போதுதான் முதன்முதலாக பாலைநிலத்தில் தனிமையை நான் உணரலானேன்.  என்னுள்ளே ஒளிவீசும் எதையோ ஒன்றைக் கொன்று விட்ட உணர்வு...  காய்ந்து கருகிய முட்களும், உயிரற்ற மணலையுமே கண்டேன்.  பசுமையின் நுனியைக் கூடாக காணவில்லை!  நான்கு நாளாக இந்தக் கழுகு அந்தக் குன்றின் மீதே இருக்கக் கண்டேன்.  என் மனசாட்சி என்னைக் குத்திக் கொண்டேயிருந்தது.   கழுகை இந்த நிலையிலே தொடர்ந்து பார்த்துக் கொண்டேயிருக்க என் மனம் இடம் தரவில்லை.  இது சாப்பிடும் என்ற நம்பிக்கையில்லை எனக்கு.  இருந்தாலும் ஓர் இறைச்சித் துண்டை எடுத்துக்கொண்டு அந்த வழியே சென்றேன்.  வெயிலின் கடுமையால் சூடேறிய துப்பாக்கியின் தகடு என் கையைச் சுட்டது.  கழுகின் அருகில் சென்று கையை ஆட்டினேன்.  






     கழுகு அசையவில்லை.  ஆம்!  அது இறந்து விட்டது!  அதுமுதல் நான் வேட்டையாடுவதே இல்லை.





மூலம் சோவியத் சிறப்புக்கட்டுரை - வந்தது மஞ்சரி 1963  



=======================================================================






     நாம் கடவுளை வெளியே தேடுவதற்கு காரணம் ஏதாவது பிரச்சனை என்றால் அவர் மீது பழிபோட்டு தப்பிப்பதற்கு தான்....



     தவறை உணர்ந்து அதற்கு  தானே காரணம் என்று நினைப்பவர்கள் கடவுளை தேடுவதில்லை. அல்லது அவர்களுக்கு கடவுள் தேவை இல்லை.



      ஒவ்வொரு மனிதனும் கடவுளே, தன் தவறுகளை ஒப்புக் கொள்ளும் போது.



     ஒவ்வொரு மனிதனும் கடவுளே, தன் மனதிற்கு ஒவ்வாத காரியங்களை செய்யாதிருக்கும் போது....








- கூகிள் பிளஸ்சில் ஆர் கே ஞானம் பகிர்விலிருந்து  -


==================================================================


படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன் எடுத்தாளப்பட்டது.


தமிழ்மணம் வாக்கு

30 கருத்துகள்:

  1. முதல் படிச்சுட்டேன். இரண்டாவது கண்ணில் நீர் வர வைத்தது. மூன்றாவது அனுபவ உண்மை! நல்லதொரு தொகுப்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. பிக்பாஸ் கதை பொருத்தம்
    மற்றது மனம் கனக்க வைத்தது
    நல்ல கருத்துக்கவி

    பதிலளிநீக்கு
  3. பிக்பாஸ் பற்றி எனக்கு அதிகம் தெரியாது; மற்றவர்கள் சொல்வதை அல்லது எழுதுவதை வைத்துத்தான் எனது அனுமானம். டின்னுக்குள் புழுக்கள் …. உவ்வே ….

    இரண்டு கழுகுகள் – படித்து முடித்தவுடன் நெஞ்சம் கனத்தது. ஒவ்வொரு உயிருக்கும் ஒரு இணை உண்டு.

    நான் கடவுள் அல்ல. மனிதன்.

    பதிலளிநீக்கு
  4. உயிர்களை உணவாக பார்க்கும் அனைவரும் இரக்கமற்ற வேட்டைக்காரர்கள்
    மற்ற உயிர்களை தம்மைப் போல் கருதி அன்பு பாராட்டுபவர்கள் மட்டும்தான் மனிதர்கள்.

    பதிலளிநீக்கு
  5. தொகுப்பு அருமை!
    பிக் பாஸைப் பற்றி - முதலில் நீங்கள் பார்ப்பதாக ஒத்துக் கொண்டதற்கு பாராட்டுக்கள். பார்த்தாலும் அதை ஒத்துக் கொள்ளாதவர்களையே வலையுலகில் பார்க்கிறேன் - அப்புறம் அவர்களுக்கு எப்படி இந்த இன்டிரிகஸீஸ் புரிந்தது என்பதை கமல் ஹாஸன் தான் விளக்க வேண்டும்! நான் இந்நிகழ்ச்சியைப் பார்க்கிறேன், ஸ்கிரிப்டட் என்று அவ்வப்போது தோன்றுகிறது.
    கழுகு கதை பல கோணங்களை சிந்திக்க வைக்கிறது. வேட்டைக்காரன் கடவுளாகி விட்டான்!!

    பதிலளிநீக்கு
  6. அருமையான தொகுப்பு.
    டின் புழு முன்பே உங்கள் பதிவில் படித்தது போல் நினைவு.
    கழுகு மனது கனத்து விட்டது படித்து.
    ஆர். கே பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
  7. #கூகிள் பிளஸ்சில் ஆர் கே ஞானம் பகிர்விலிருந்து#
    பெயரில் மட்டுமா ஞானம் ?கருத்திலும் உண்மை ஞானம் :)

    பதிலளிநீக்கு
  8. ரஷ்ய எழுத்துக்களில் ஒரு கவர்ச்சியை நான் சிறுவயதிலிருந்தே உணர்ந்துள்ளேன். நான் படித்த முதல் வெளிநாட்டுச்சரக்கு அதுதான் என்பதாலும் இருக்கலாம். ’வேட்டையைக்கைவிட்டவன்’ கதையில் பாலைவெளியினூடே சோகம் கவ்வுவதை உணர முடிகிறது.

    ஒரு காலத்தில் கிராமத்திலிருந்த இடதுசாரிகளின் ஜனசக்தி படிப்பகத்தில் அமர்ந்து பெரிய சைஸில் வந்த ’சோவியத் நாடு’ இதழ்களைப் புரட்டியிருக்கிறேன். அதன் ஆங்கில பதிப்பான Soviet Land-ம் அங்கு கிடைத்தது. இரண்டையும் படித்து, ஒப்பிட்டு வார்த்தைகளின் -வெளிநாட்டு மொழியின் - உச்சரிப்பு, பொருள் போன்றவற்றை கவனித்ததுண்டு. அப்போது நான் பதின்மவயது சிறுவன். சாதாரண சங்கதிகளுக்கும் இலக்கியத்துக்கும் வித்தியாசம் தெரியாதவன். ஏதோ ஒரு ஈர்ப்பில் அங்குபோய் உட்கார்ந்து புரட்டுவேன் பக்கங்களை. பிறகு வந்த காலகட்டத்தில், சோவியத் புத்தக்கண்காட்சிக்கு(புதுக்கோட்டையில்) சென்று மணிக்கணக்காகப் புரட்டியுள்ளேன் புத்தகங்களை. அப்போதுதான் டால்ஸ்டாய், ஆண்டன் செகோவ், அலெக்ஸாண்டர் சால்ஸெண்ட்ஸின், புஷ்கின் போன்றோரைப்பற்றிக் கேள்விப்படலானேன். அதற்கு ஜெயகாந்தனின் எழுத்துக்கள், முன்னுரைகளும், பேச்சுக்களும்கூட, ஒருவிதத்தில் தூண்டுகோலாயிருந்தது. சோவியத் யூனியனில் ஜெயகாந்தனுக்கு (ரஷ்யனில் மொழிபெயர்க்கப்பட்டவை) வாசகர்கள் அதிகம். மரியாதை அதிகம். சோவியத் நாட்டின் விருதுகள் அவரைக் கௌரவித்துள்ளன.

    பதிலளிநீக்கு
  9. பிக் பாஸ் பார்ப்பதில்லை ஆனால் அது பற்றி அறிவதிலிருந்து ....உங்கள் ஒப்பீடு செம....

    சோவியத் தமிழாக்கம் கதைகள் முன்பு வாசித்ததுண்டு....கழுகுகள் அருமை....இன்னும் பலசிந்தனைகள் வருது....மனம் கனத்தது இறுதியில்.....

    3 வது அனைத்தும் அருமை...

    கீதா

    பதிலளிநீக்கு
  10. பெரிய தண்டனை : அவரவர் மனச்சாட்சி கொடுப்பதே...

    பதிலளிநீக்கு
  11. பிக் பாஸ் நானும் சில நாட்கள் முன்பு வரை பார்த்தேன். எனக்கென்னவோ அடுத்தவர் வீட்டை அவர்கள் அறியாமல் பார்ப்பதாகத்தான் தோன்றுகிறது. அதனால் பெர்சனல் பேச்சுக்கள் வரும்போது சேனல் மாற்றிவிடுவேன். இப்போ நிச்சயமாக ஸ்கிரிப்ட் படி நடக்குதுன்னு தோணுது. காயத்ரி போன்றவர்கள் அவர்களது மோசமான குணத்தைக் காண்பிக்கிறார்கள். ஆனாலும் கமலஹாசன் வேறு வழியில்லாமல் அவரைத் தாங்கிப்பிடிக்கிறார். ஓவியாவை வெளியேற்றுவதற்காக (அவரே போறேன்னு சொல்லியிருக்கலாம்) அதற்கேற்றபடி ஸ்கிரிப்ட் இப்போது மாறியிருக்கிறது. இதெல்லாம் பார்க்கும்போது, ஒருவருமா உண்மையானவர் இல்லை என்று தோன்றுகிறது. (ஏன்னா, மனிதன், நாகரீகம் கருதி அடுத்தவர்களின் குறைகளை நேரிடையாகச் சொல்லத் தயங்கி, பூசி மெழுகி ஒவ்வொருவரிடமும் பேசும்போது ஒரு முகமூடி போட்டுக்கொள்கிறான். நாம வெளில இருந்து பார்க்கும்போது, ஒருவனும்/ஒருத்தியும் நல்லவர்போலவே இல்லை)

    வேட்டையைக் கைவிட்டவன் - மிகவும் ரசித்தேன். சமயத்துல அப்பாவிகளுக்கு நாம் அநீதி இழைத்தபின்பும் இந்த மாதிரி எண்ணம் தோன்றும்.

    ஞானம் எழுத்து நல்லா இருக்கு. "ஒவ்வொரு மனிதனும் கடவுளே, தன் தவறுகளை ஒப்புக் கொள்ளும் போது, அதை மீண்டும் செய்வதில்லை என்று உறுதி கொள்ளும்போது' என்று இருந்தால் சரியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  12. கழுகு மனம் நெகிழ்வு. தொகுப்புகள்நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. அனைத்து பதிவும் நெகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  14. கழுகுக்கதை மனது கஷ்டமாகிவிட்டது. ஞானம் வந்து விட்டால் அர்த்தமும் புரியலாம்,தெரியலாம். அன்புடன்

    பதிலளிநீக்கு
  15. அருமை,இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
    தமிழ் செய்திகள்

    பதிலளிநீக்கு
  16. ரஷ்யன் கதை மிக அருமை. ஐயோ பாவம் அந்தக் கழுகு.
    இறைவனைத்தேடுவது துயரம் வரும்போது என்ற நிலை மாறி
    எப்போதும் நினைத்தால் தவறுகள் நேராமல் இருக்கலாம்.
    நான் பிக் பாஸ் பார்ப்பதில்லை. ஆசையும் இல்லை.

    பதிலளிநீக்கு
  17. ரஷ்ய கதை சிறப்பு. பிக் பாஸ் பார்ப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  18. 2வது மனதை நெகிழவைத்தது... முதலாவது பார்த்திருந்தால் புரிந்திருக்கலாம்... 3வைத்து மிக அருமை உண்மை

    பதிலளிநீக்கு
  19. சைனாவில் இருந்த போது சில சமயம் என்னை உள்ளூர் விருந்துக்கு அழைத்திருக்கிறார்கள் போயிருக்கிறேன். ம்ம்ம்.

    பதிலளிநீக்கு
  20. அருமையான தொகுப்பு. முதல் சீனா செய்தி முன்பு எப்போதோ கேட்டது. மிக நெகிழ்ச்சியான பதிவு.

    பதிலளிநீக்கு
  21. டின்னில் வளர்ந்த கொழுத்த புழுவுக்கும் பிக் பாசுக்கும் என்ன முடிச்சு தெரியவில்லைஞானத்தின் கருத்து சிறப்பு ஆனால் நம்மில் பெரும்பாலோர் படித்து மகிழ்வது தவிர வாழ்வில்செயல் படுத்த நினைப்பதில்லை கழுகு கதைகள் நல்லகற்பனை

    பதிலளிநீக்கு
  22. பிக் பாஸுக்கான ஒப்பீடு பிரமாதம்!

    வேட்டையை மறந்தவன் படித்த பொழுது, பல வருடங்களுக்கு முன் குமுதத்தில் படித்த ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. இணையோடு இருந்த புறாக்களுள், பெண் புறாவை ஒருவர் சுட்டு வீழ்த்தி விட, ஆன் புறா இறந்து கிடந்த பெண் புறாவின் உடலை சுற்றி சுற்றி வந்ததாம், பின்னர் தரையில் இருந்த கூழாங் கற்களை விழுங்கி விட்டு உயரே பறந்ததாம், ஓரளவு உயரம் பரந்த பின், சட்டென்று தன் இறக்கைகளை மடக்கிக் கொண்டதால் பெண் புறாவுக்கு அருகிலேயே கீழே விழுந்து உயிரை விட்டதாம். மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!