செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

கேட்டு வாங்கிப்போடும் கதை :: கீதா சாம்பசிவம் - சீதை - சீதை 16

     சீதா - ராமன் - மன்னிப்பு - இந்த வாரம் கீதா சாம்பசிவம் அக்கா.


================================================================சீதை
கீதா சாம்பசிவம்பயந்த வண்ணம் நின்று கொண்டிருந்த ராமைப்பார்க்கையில் சீதாவுக்கே பாவமாக இருந்தது. அவன் உடையெல்லாம் அவள் வீசிக் கொட்டிய சூப் அபிஷேஹம்! உடையெல்லாம் நனைந்து தலையில் இருந்து சிவந்த நிறத் தக்காளி சூப் ரத்தம் போல் வழியத் திருதிருவென விழித்துக் கொண்டிருந்தான் ராம்.தலையில் அடித்துக் கொண்டாள் சீதா. ஒரு கணம் தான் தப்பு செய்துவிட்டோமோ என்று தோன்றியது. இப்போதும் ஒண்ணும் கெட்டுப் போய்விடவில்லை. எப்போ வேணாலும் ஊருக்குத் திருப்பி அனுப்பிடலாம். ஆனால் என்ன ஒரு கஷ்டம்னா அவளுக்குச் சாப்பாடுக்குத் திண்டாட்டமாக இருக்கும். ராமைப்போல் அடங்கி ஒடுங்கி வாய் திறக்காமல் சமைத்துப் போடும் கணவன் மறுபடி கிடைப்பானா? 


அந்த நேரம் பார்த்துத் தொலைபேசி அழைக்க, எடுத்தாள் சீதா! மறுமுனையில் அவள் அம்மா தான்! வழக்கமான பல்லவி தான்! "கணவனுக்கு மரியாதை கொடுத்து நடத்து! அவனைச் சமைக்கத் துணி துவைக்க விடாதே! நீயும் சேர்ந்து செய்! ஆயிரம் இருந்தாலும் ஒரு பெண்ணுக்குக் கணவன் தான் எல்லாம்!" இதே தான் கடந்த ஆறு மாதமாக!


"ஆஹா!" என்றாள் சீதா! பல்லைக் கடித்துக் கொண்டு, "அந்த முட்டாளுக்கு எல்லாத்தையும் சொல்லித் தானே கூட்டிட்டு வந்திருக்கேன்! ஒழுங்கா இருந்தா என்ன கேடு! அப்போ அப்போ தன் ஆம்பளைத் திமிரைக் காட்டறான்! திரும்ப ஊருக்கே அனுப்பிச்சுட்டு இவனை ஒரேயடியா வேண்டாம்னு ஒழிச்சுக் கட்டிடறேன்!" என்றாள் சீதா தன் அம்மாவிடம்.


"வேண்டாண்டி! உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கறேன். ராம் நல்ல பிள்ளை! இப்படி எல்லாம் படுத்தி எடுக்காதே! நீ என்னமோ நிபந்தனை எல்லாம் போட்டப்போ நான் அதை இவ்வளவு உறுதியா நீ கடைப்பிடிப்பேன்னு எதிர்பார்க்கவே இல்லைடி! அக்கம்பக்கம் கேட்டால் சிரிப்பாங்க! தயவு செய்து மாப்பிள்ளையோட அப்பா, அம்மா காதுக்கு விஷயம் போறதுக்குள்ளே இதை எல்லாம் நிறுத்திட்டு உன்னை மாத்திக்கோ! எங்களைச் சந்தி சிரிக்க வைச்சுடாதே!" மறுமுனையில் தன் தாய் கெஞ்சுவதைக் கேட்ட சீதா பொட்டென்று ஃபோனை வைத்து விட்டாள்.


*********************************************************விஷயம் இது தான். சீதா தற்கால நாகரிகமான வாழ்க்கை முறையில் ஈடுபாடு கொண்டவள். பெண்ணுரிமை, பெண்ணடிமை ஆகியவற்றில் அபார ருசி! வசந்திக்கும், ராமநாதனுக்கும் ஒரே பெண்! ஆகையால் அளவுக்கு மீறிச் செல்லம். இஷ்டப்பட்டபடி நடந்து கொண்டு பழக்கம். சமையலறை எந்தத் திசை என்று கூட அவளுக்குத் தெரியாது. தன் அப்பாவுக்குத் தன் அம்மா பார்த்துப் பார்த்துச் சமைப்பதைக் கண்ட அவளுக்கு உள்ளூரச் சிரிப்பாக வரும். அதே போல் அம்மா உடம்பு முடியாமல் படுத்துக் கொண்டாளானால் அப்பா வைக்கும் கேவலமான ரசத்தைச் சாப்பிட்டுவிட்டு அம்மா பாராட்டி மகிழ்வதைக் கண்டும் அவளுக்குச் சிரிப்பு வரும். இரண்டும் சுத்த அசடுகள்! அவரவர் விருப்பு, வெறுப்பை, சுவையை, சாப்பாட்டு முறையை மற்றவர்களுக்காக மாற்றிக் கொண்டு என்ன ஒரு அடிமை வாழ்க்கை! அவளுக்கு வேண்டாம் இந்த வாழ்க்கை முறை!


அவள் இஷ்டத்துக்குச் சமைத்துப் போடும் ஓர் ஆண்மகனே அவளுக்குக் கணவன் ஆக முடியும்! அவனும் அதைத் தான் சாப்பிடவேண்டும். அவன் ருசிக்கு வேண்டுமெனில் அவள் அனுமதி கொடுக்கும் அன்று அவன் சமைத்துக் கொள்ளட்டும். அவ்வளவு விரைவில் அவள் அனுமதி அவனுக்குக் கிடைத்து விடுமா? நாக்குச் செத்துப் போகட்டும்! இவங்க இனமே பெண்களை எப்படி எல்லாம் கொடுமைப் படுத்தி இருக்கிறது? மனைவியின் விருப்பத்துக்குச் சமைத்துச் சாப்பிடக் கூட இவங்க அனுமதி வேண்டும்! அப்படித் தானே நடந்து வந்திருக்கிறது! இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டியே ஆகணும். சீதா ஓர் முடிவுக்கு எப்போவோ வந்து விட்டாள். 


 அவளுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்து விட்டது! அங்கே போகத் துடித்தாள். ஆனால் என்னதான் நவநாகரிகப் பெண்ணாக இருந்தாலும் தாய் மனம் வசந்தியைத் தன் பெண்ணை மணக்கோலத்தில் பார்க்க நினைத்தது. சீதாவிடம் திருமணம் செய்து கொண்டு வெளிநாடு செல்லலாம் என்று கெஞ்சினாள். முதலில் மறுத்த சீதா பின் தன்னுடைய நிபந்தனைகளைச் சொன்னாள். 


சீதாவின் நிபந்தனைகளைக் கேட்ட அவள் பெற்றோருக்குத் தலை சுற்றியது! சீதா வேலை பார்ப்பாளாம். அவள் திருமணம் செய்து கொள்ளும் ஆண் வீட்டில் இருக்க வேண்டுமாம்! இவளுக்குச் சமைத்துப் போட்டுக் கொண்டு வீடு சுத்தம் செய்தல், துணி துவைத்தல் போன்ற வேலைகளை எல்லாமும் அவன் பார்த்துக்கொள்ள வேண்டுமாம்!  சின்ன வயசில் இருந்தே பெண்ணைத் தட்டிக் கேட்டு வளர்க்காததின் சங்கடத்தை வசந்தி நன்றாகப் புரிந்து கொண்டாள். 


"பையன் யாரு? அதையும் நீயே பார்த்துட்டியா? இல்லைனா நாங்க பார்க்கலாமா?" என்று ராமநாதன் கேட்டார்.


"அப்பா, எந்தக் காலத்தில் இருக்கீங்க? நீங்க பார்த்து ஒரு அம்மாஞ்சியைக் கூட்டி வந்து நிறுத்தினா நான் சம்மதிக்க முடியுமா? அதெல்லாம் நான் ஏற்கெனவே பார்த்துட்டேன்! காதல், கீதல்னு எல்லாம் பெரிசா எதுவும் இல்லை. என்னோட நிபந்தனைகளுக்கு ஒத்து வருவான் போல் இருக்கு! அதான்! எதுக்கும் அவனையும் கேட்டுப் பார்க்கணும்!" என்றாள்.


"என்னது? இன்னுமா கேட்கலை? எத்தனை நாள் பழக்கம்? எப்படிப் பழக்கம்?" வசந்திக்குக் கவலை! ஏதேனும் ஏடாகூடமாக இந்தப் பெண் செய்திருந்தால்!


சீதா மறுபடி பல்லைக் கடித்தாள். பின்னர் விருட்டென்று வெளியே சென்று விட்டாள். திரும்பி வந்த சீதா தன்னுடன் அழைத்து வந்த இளைஞனைப் பார்த்த வசந்தியும் ராமநாதனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். 


இளைஞன் பார்க்க நன்றாகவே இருந்தான். எனினும் முகத்தில் மௌட்டியக் களை! அந்த இளைஞனைத் தான் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாக அறிமுகம் செய்து வைத்தாள் சீதா. இளைஞன் பெயர் ராம் என்றாள். அப்பா, அம்மா ஊரில் கிராமத்தில் இருக்கிறார்களாம். இங்கே ஓர் ஓட்டலில் வேலை செய்கிறானாம். அந்த ஓட்டலுக்கு அலுவலகத்தினருக்காக மதிய லஞ்ச் ஏற்பாடு செய்யப் போன போது சீதாவுக்கு அறிமுகம் ஆனானாம். சீதாவுக்குப் பிடித்து விட்டதாம். பதிவுத் திருமணம் தான் செய்து கொள்ளப் போவதாகவும் அறிவித்தாள் சீதா! அவன் பெற்றோருக்குத் தெரிய வேண்டாமா என்று கேட்டால் அதெல்லாம் தேவை இல்லை. இருவருமே மேஜர் என்று சீதாவே பதில் சொல்லி விட்டாள். அம்மாவைப் பார்த்து ஏளனமாக, "அம்மா, என் பெயர் சீதா என்பதால் நான் அந்த ராமாயண சீதையைப் போல் அடக்க ஒடுக்கமாக இல்லைனு உனக்குக் குறை தானே! இப்போப் பாரு, உன் மாப்பிள்ளை பெயர் ராம்! அந்த ராமாயண ராமன் மாதிரி ஏக பத்தினி விரதனாக இருந்து என்னை சந்தோஷமாக வைச்சுக்கப் போறானா, இல்லை தீக்குளிக்க வைப்பானா, பார்க்கலாம்!" என்றாள். 


வசந்திக்கு மனசு கிடந்து தவித்தது. வந்த இளைஞனோ எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு வாயை மூடிக் கொண்டு இருந்தான். வாயைத் திறந்து எதுவும் பேசவில்லை. அவன் முகத்திலிருந்தும் எதுவும் தெரிந்து கொள்ள முடியவில்லை. வசந்தியும், ராமநாதனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். வளர்ந்த பெண்! அடித்துத் திருத்தும் வயது இல்லை! என்ன செய்ய முடியும்?


"அதெல்லாம் சரி தான்! ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகவே இருக்கும்! நாளைக்கே ஒரு குழந்தை பிறந்தால்? " இது வசந்தியின் கவலை!


சீதாவோ அதற்கெல்லாம் அசையவில்லை! குழந்தை பிறந்தால் என்ன? பெற்றுப் போட்டுவிட்டு நான் அலுவலகம் கிளம்பிடுவேன். ராம் எல்லாத்தையும் பார்த்துப்பான்!"


"குழந்தைக்குப் பால்?" தயங்கித் தயங்கி வசந்தி கேட்க, "நான்சென்ஸ்" என்ற ஒரே பதில் வந்தது சீதாவிடமிருந்து. அடுத்த அஸ்திரத்தைப் பிரயோகம் செய்தனர் இருவரும்!  என்ன இருந்தாலும் நன்கு படித்த தங்கள் ஒரே மகளை இப்படிப் படிக்காத ஓட்டலில் வேலை செய்யும் ஒருவனுக்கு அவன் என்னதான் நல்ல குடும்பமாக இருந்தாலும் கொடுக்க இஷ்டமில்லை என்றார்கள். கொஞ்சம் வருத்தம் தான் வசந்திக்கும், ராமநாதனுக்கும்! தங்களைக் கேட்காமல் பெண் இப்படி ஓர் முடிவு எடுத்தது அவர்களை வருத்தத் தான் செய்தது.  ராமநாதன் தான் இத்தனைக்கும் காரணம் என்று வசந்தியும், பெண்ணை வளர்க்கத் தெரியலை என்று ராமநாதனும் ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சாட்டினார்கள். ஆனால் சீதாவோ இதை எல்லாம் லட்சியமே செய்யவில்லை. வேண்டுமானால் ராமின் பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவித்துவிட்டுக் கல்யாணம் செய்து கொள்வதாகச் சொன்னாள். அவள் சொன்ன தோரணை இதையே அவள்பெரிய மனசு பண்ணி விட்டுக் கொடுத்திருப்பது போல் இருந்தது.  


ஆனால் இவர்கள் கவலைக்கெல்லாம் நேரமே இல்லை. காலம் வேகமாகப் பறந்தது! ராமின் பெற்றோர்களுக்கும் எப்படியோ விஷயம் தெரிந்து அவர்கள் கிராமத்திலிருந்து வந்து விட்டார்கள். அன்று சீதாவைப் பார்க்க வந்தார்கள். சீதா அவர்கள் எதிரில் வந்து நின்று நமஸ்காரம் பண்ணுவது, புடைவை கட்டுவது இதெல்லாம் தன்னால் முடியாது என்று சொல்லி விட்டாள். விரித்த கூந்தலுடன் வந்து தன் நகப்பூச்சுப் பூசிய கைவிரல்களை நாசுக்காகக் கூப்பிவிட்டு உள்ளே சென்று விட்டாள். ஆனால் ராமின் பெற்றோர் இதைக் கண்டெல்லாம் கலங்கியதாகத் தெரியவில்லை. ஆனாலும் வசந்தியும் ராமநாதனும் ராமின் பெற்றோருடன் மனம் விட்டுப் பேசினார்கள். அதன் பின்னரே இருவருக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அடுத்தடுத்துக் காரியங்கள் மளமளவென்று நடந்தன. திருமணத்திற்கு முன்னரே இருவரும் தனித்தனியாக விசாவுக்கு விண்ணப்பம் கொடுத்து விசாவும் கிடைத்து விட்டது. ராமிற்கு விசா எடுக்கத் தன்னால் உதவ முடியாது எனவும் ராமே அவன் செலவில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் சீதா திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டாள். ராமும் அதற்கு ஒப்புக் கொண்டிருந்தான்.


சீதாவின் விருப்பப்படி பதிவுத் திருமணம் ஆயிற்று! தாலியெல்லாம் கட்டிக்கொள்ள மாட்டேன் என்று சீதா சொல்லிவிட்டாள்!  ஒரு ஓட்டலில் விமரிசையாக வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். ஆள் அம்சமாக அழகனாக இருந்ததால் யாருக்குமே ராமின் குறை தெரியவில்லை. அன்றிரவு முதலிரவு முடிந்ததும் ஒருவாரத்தில் இருவரும் வெளிநாடுக்குப் பறந்தனர்.  விமானத்தில் ராம் வாயே திறக்கவில்லை. அவனுக்குச் சரளமாக ஆங்கிலம் பேசத் தெரியாதது தான் காரணம் என்று புரிந்து கொண்டாள் சீதா. ஆனாலும் பிரயாணத்தின்போது ராம் தன் பாஸ்போர்ட், விசா போன்றவற்றை அவளிடம் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளவில்லை. அது கொஞ்சம் சீதாவுக்கு உறுத்தலாக இருந்தாலும் தன்னுடைய இத்தனை நிபந்தனைகளுக்கும் சம்மதித்துத் திருமணம் செய்து கொண்டவனைச் சந்தேகப்படவும் தோன்றவில்லை. என்றாலும் அவன் விரைவில்  அவன் ஓட்டலின் மூலம் அங்கே அதே ஊரில் ஓர் வேலையை அவன் சம்பாதித்துக் கொள்ளுவானோ என்னும் எண்ணமும் அவளிடம் இருந்தது. இது கொஞ்சம் கவலைப்பட வேண்டிய விஷயம். இது பற்றி அவனிடம் விசாரித்தாக வேண்டும். எங்கே போய்விடுவான்? அவனுக்கு அங்கே யாரையும் தெரியாது! நம்முடன் தானே இருந்தாக வேண்டும்!  நம்மை மீறி என்ன செய்யப் போகிறான் என்றும் நினைத்துக் கொண்டாள். 


அவர்கள் போய்ச் சேரவேண்டிய ஊர் போய்ச் சேர்ந்ததும் சீதா ஏற்கெனவே செய்திருந்த ஏற்பாடுகளின்படி அவள் நண்பர்கள் வந்து அழைத்துச் சென்று அவர்களுக்காகப் பார்த்திருந்த வீட்டில் கொண்டு விட்டார்கள். சாமான்கள் எல்லாம் தயாராக வாங்கிப் போடப் பட்டிருந்தன.  அன்று இரவே ராம் சமைக்க ஆரம்பித்து விட்டான். உணவு மேஜையில் எல்லாம் தயாராக வைத்து மிக அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்ததைக் கண்ட சீதாவுக்குக் கொஞ்சம் பிரமிப்பாக இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அதிகம் உணர்ச்சிவசப் படக்கூடாது என்பதிலும் ராமிடம் தான் அவனை விட உயர்ந்தவள் என்பதைக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் நினைத்துக் கொண்ட சீதா மிகவும் ஜாக்கிரதையாகப் பாராட்டுக்களைத் தெரிவிக்காமல் இருந்தாள். கொஞ்சம் பாராட்டினாலும் அவன் தான் ஆண்மகன் என்பதைக் காட்டிக் கொள்வானோ என்று அவளுக்கு எண்ணம். ஆண்களுக்குத் தான் கீழ்ப்படிந்தவள் இல்லை என்பதைத் தன் ஒவ்வொரு செயலிலும் காட்ட வேண்டும் என்பதே அவள் விருப்பம். சின்ன வயதிலிருந்து அவளுக்குத் தான் கல்யாணம் செய்து கொண்டு ஒரு ஆணுக்குக் கட்டுப்பட்டு வாழ்க்கை நடத்துவதில் இஷ்டம் இல்லை. இப்போது தான் விரும்பிய வாழ்க்கை கிடைத்ததில் அவளுக்குச் சந்தோஷமே! 


ராமை ஓர் அடிமை போல் நடத்தினாள். அவன் வாய் திறக்காமல் இருந்தாலும் அவளுக்கு அவன் மேல் ஏளனமாகவே நினைக்கத் தோன்றும்! ம்ம்ம், இப்படியும் ஓர் ஆண்மகனா என நினைத்துக் கொள்வாள்! பின் தன் சபதங்கள் நினைவில் வரும். பேசாமல் இருப்பாள்.   


இம்மாதிரி இருக்கையில் தான் ஒரு நாள் காலை உணவு உண்ண சீதா மேஜையில் வந்து உட்காரும்போது அவளுடைய உடையின் ஒரு நுனி  மேஜையிலிருந்த சூப்பில் பட்டுக் கவிழ்ந்து விட்டது. அலுவலகத்திற்கு முக்கியமான மீட்டிங்கில் கலந்து கொள்ள வேண்டி சீதா அணிந்திருந்த ஆடையில் சூப் பட்டு உடை வீணாகி விட்டது. கோபத்துடன் சீதா சூப் வைத்திருந்த பெரிய கிண்ணத்தைத் தூக்கி ராமின் முகத்தில் விசிறி அடித்து விட்டாள். 


அந்தச் சம்பவத்தைத் தான் ஆரம்பத்தில் பார்த்தோம். ராம் அதன் பின்னர் வாயே திறக்கவில்லை. மௌனமாகத் தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு மேஜையையும் சுத்தம் செய்து தரையையும் சுத்தம் செய்தான். சீதா அணிந்திருந்த உடைகளை மாற்றிக் கொள்ள வசதியாக அவளுக்கு வேண்டிய உதவி செய்தான். ஒரு மாதிரியாக அலுவலகம் போய்ச் சேர்ந்த சீதாவுக்குத் தான் செய்தது சரியா என்னும் எண்ணமே அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது. மாதங்கள் கண்மூடித் திறக்கும் முன்னர் பறந்தன. 


அன்று காலை உணவு மேஜையின் முன்னால் அமர்ந்து காலை உணவை உட்கொண்டிருந்த சீதாவுக்குத் திடீரெனத் தலை சுற்றியது. மயக்கமாக வந்தது. சமாளித்துக் கொண்டு மருத்துவரைத் தொடர்பு கொள்ள வேண்டும். தான் மயங்கிவிட்டால் ராமுக்கு என்ன தெரியப் போகிறது, யாரை அணுகி என்ன சொல்லவேண்டும் என்பது கூடத் தெரியாதே  என்று நினைத்தவண்ணம் எழுந்தவளால் ஓர் அடி எடுத்து வைக்க முடியவில்லை.  அப்படியே கீழே விழப் போனாள். 


ராமின் கரங்கள் அவளை மென்மையாகத் தாங்கின. சற்று நேரத்தில் ராம் அவளைத் தூக்கிக் காரில் கிடத்திக் கொண்டு காரை ஓட்டிக் கொண்டு மருத்துவமனை நோக்கிக் கிளம்பினான். அங்கு அவளை அவசரச் சிகிச்சைப் பிரிவில் கொண்டு போய்ச் சேர்த்தான், மருத்துவர்கள் கேட்ட கேள்விக்கெல்லாம் சரளமான ஆங்கிலத்தில் சரியான மறுமொழியையும் கொடுத்தான் ராம்.


அன்று முழுவதும் மயக்கத்தில் இருந்த சீதா மெல்ல மெல்லக் கண் விழித்தாள். தான் எங்கே இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளவே அவளுக்குக் கொஞ்ச நேரம் ஆனது. அதற்குள்ளாக ராம் அங்கே மருத்துவரிடம் பேசிக் கொண்டே வந்தான். சீதாவைப் பார்த்ததும் ராம் முகத்தில் புன்முறுவல் பூத்தது. சீதாவோ அதிர்ச்சிக்கு உள்ளானாள். என்ன இது! இங்கே என்ன நடக்கிறது? எதுவுமே புரியவில்லை! 


அதற்குள்ளாக மருத்துவர் அவளிடம் அவள் கணவனைப் பற்றிப் புகழ்ந்து கூறியதைக் கேட்டதும் மறுபடி மயக்கம் வரும்போல் ஆகிவிட்டது அவளுக்கு! அவளை இந்த மருத்துவமனையில் தான் சேர்க்கவேண்டும் என்பதை ராமுக்குச் சொன்னது யார்? அவளுடைய இன்சூரன்ஸ் கம்பெனி இந்த மருத்துவமனையில் தான் அவளுடைய வைத்தியங்கள் நடக்க வேண்டும் என்று சொல்லி இருந்தன. அதை ராமுக்குச் சொன்னது யார்? எப்படி அறிவான் ராம்?


அவள் உடலுக்கு ஒன்றும் இல்லை என்றும் அவள் கர்ப்பமாக இருப்பதாலும் அதிக வேலையினால் தூக்கமின்மையாலும் கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் எல்லாப் பெண்களுக்கும் ஏற்படுவது போலும் மயக்கம் அவளுக்கு ஏற்பட்டிருப்பதாகவும் அவள் கணவன் உடனடியாகச் செயல்பட்டு அவளுக்கு முதலுதவி அளித்து இங்கே அழைத்து வந்ததையும் சொன்ன மருத்துவர் அவள் கணவனை மிகவும் பாராட்டினார். இது போன்ற புத்திசாலியான மனைவியை அநுசரணையுடன் நடத்தும் கணவன் கிடைத்திருப்பது அவள் செய்த அதிர்ஷ்டம் என்றும் இருவரும் ஒருவருக்காகவே மற்றொருவர் பிறந்திருப்பதாகவும் சொல்லிப் பாராட்டினார். 


படிப்பறிவே இல்லாத ராம்! எப்படி இப்படி? எதுவும் புரியவில்லை அவளுக்கு! என்னதான் அவசர நேரத்தில் சமயோசிதமாக முடிவெடுப்பது என்பது சிலரால் இயலும் என்றாலும் அவளைத் தூக்கிக் கொண்டு காரில் போட்டு அழைத்து வந்து மருத்துவரிடம் அவள் உடல்நிலையை விவரித்து! இப்போது மருத்துவரிடம் பேசிக் கொண்டு வந்த தோரணை! இதெல்லாம் பார்த்த சீதாவுக்குத் தன்னிடம் ராம் ஏதோ மறைத்திருக்கிறான் அல்லது இன்னமும் மறைக்கிறான் என்பது புரிந்தது.


அவள் வீட்டுக்குச் சென்று விடலாம் என்று மருத்துவர் கூறியதை அடுத்து ராம்  அவளைத் தாங்கலாகப் பிடித்து அழைத்துச் சென்றான். காரில் அவளைப் பின் இருக்கையில் படுக்க வைத்தான். தான் முன்னிருக்கையில் அமர்ந்து காரை ஓட்டத் துவங்கினான். அவன் கார் ஓட்டும் திறமையையும், அந்த ஊரின் போக்குவரத்து நடைமுறைகளைப் புரிந்து வைத்திருப்பதையும் கண்ட சீதாவுக்கு இவனிடம் இன்டர்நேஷனல் ட்ரைவிங் லைசென்ஸ் இருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டாள். இல்லை எனில் இத்தனை மாதங்களாக வெளியே வந்து கார் ஓட்டியே அறியாதவன் இப்போது திடீரென எப்படிச் செயல்பட முடியும்?


வீட்டுக்கு வந்ததும் அவளைப் படுக்கையில் படுக்க வைத்த ராம் தான் உணவு தயாரித்து வருவதாகச் சொல்லிக் கிளம்ப அவன் கையைப் பிடித்து இழுத்த சீதாவின் கண்களில் கேள்விக்குறி!  ராமின் முகத்தில் புன்னகை விரிந்தது. மெல்லத் தன் கையை விடுவித்துக் கொண்டு தன் சாமான்கள் வைத்திருக்கும் பெட்டியைத் திறந்து அதிலிருந்து சில சான்றிதழ்களை எடுத்து வந்து அவள் முன்னால் போட்டான். 


அதில் ராம் ஐஐடி கரக்பூரில் படித்துப் பட்டம் பெற்றதற்கான சான்றிதழும் அதன் பின்னர் அவன் காடரிங் கோர்ஸ் படிக்க வேண்டும் என்று விரும்பிச் சேர்ந்து அதிலும் பட்டம் பெற்றதற்கான சான்றிதழும்,   அந்த ஊரின் பெரிய ஓட்டலின் தலைமைச் சமையல் காரர் பதவியை இன்னும் சில நாட்களில் ஏற்கப் போவதற்கான சான்றுகளும் கிடைத்தன! அதற்கான சம்பளம் சில லட்சங்களில் இருந்தது. 


இவை எல்லாவற்றையும் பார்த்த சீதா பிரமித்துப் போனதோடு அல்லாமல் ஏன் இதை எல்லாம் முதலிலேயே சொல்லவில்லை என்று கேட்டாள். சிரித்தான் ராம். அவள் பெற்றோர் ஏற்கெனவே ராமின் ஜாதகத்தோடு அவள் ஜாதகத்தையும் சேர்த்துப் பொருத்தம் பார்த்துவிட்டுத் தங்களை அணுகியதையும், தங்கள் பெண்ணின் நிபந்தனைகளைக் குறித்துச் சொல்லி வேதனைப்பட்டதையும் அவளிடம் கூறினான். அப்போது ராமின் பெற்றோரே இந்த யோசனையைத் தெரிவித்ததாகவும் நாளாவட்டத்தில் ராமின் நடவடிக்கைகளையும் சுபாவத்தையும் பார்த்துவிட்டு சீதா எல்லா ஆண்களும் ஆணாதிக்க மனோபாவம் கொண்டவர்களாக இருக்கமாட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்வாள். அடிப்படையில் சீதா நல்ல பெண்ணே என்றும் தற்காலத்திய பெண்ணுரிமை, பெண் சுதந்திரம் என்பனவற்றை அவள் புரிந்து கொண்டிருப்பதில் தான் வேறுபாடு என்றும் விவரமாகப் பேசினார்கள். தங்கள் பெண்ணைத் தங்களை விட ராமின் பெற்றோர் புரிந்து கொண்டிருப்பதைக் கண்டு சீதாவின் பெற்றோருக்கு ஆச்சரியம் ஏற்பட்டதையும் அதன் பின்னரே சீதா தன் ஓட்டலுக்கு வரப்போவதை அவள் பெற்றோர் மூலமே தெரிந்து கொண்டு தான் செயல்பட்டதாகவும் ராம் தெரிவித்தான். 

பெண் சுதந்திரம் என்பதும் பெண்ணுரிமை என்பதும் யாரும் கொடுத்துப் பெற வேண்டியது இல்லை என்பதும் அது தானாக அவரவர் வாழ்க்கையில் விரும்பி அனுபவிப்பது என்பதையும் சீதா இப்போது புரிந்து கொண்டாள். இருவரும் அவரவர் சுயம் மாறாமல் அவரவர் எண்ணங்களில் கருத்துவேறுபாடு இருந்தால் அவற்றை மட்டுமே பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் குடும்பம் என்பது இருவரும் சேர்ந்து நடத்த வேண்டிய ஒன்று என்றும் இதில் யார் தலைவன், யார் தலைவி என்னும் பேச்சுக்கே இடமில்லை என்பதையும் சீதா இப்போது புரிந்து கொண்டாள்.  அவள் நினைத்தது உண்மையில் பெண் உரிமையோ அல்லது பெண் சுதந்திரமோ இல்லை என்பதும் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசிக் கொண்டு விட்டுக் கொடுக்க வேண்டியதில் விட்டுக் கொடுத்தும் அனுசரிக்க வேண்டிய இடத்தில் அனுசரித்தும் செல்லவேண்டும் என்றும் இரட்டை மாடுகள் பூட்டிய இந்தக் குடும்பம் என்னும் வண்டியை இழுத்துச் செல்ல இருவருக்குமே சம உரிமைகள் உண்டு என்பதையும் அவள் தனக்கு மட்டுமே உரிமை எனத் தவறாகப் புரிந்து கொண்டு இருக்கிறாள்; அன்பான அவள் மேல் பாசம் உள்ள கணவனைத் தவறாகப் புரிந்து கொண்டு அவனை வேலை வாங்கி அடிமை போல் நடத்தியதாகவும் தெரிந்து கொண்டு விட்டாள். எனினும் அவன் தன்னிடம் தனக்கு உள்ள தகுதிகளைக் குறித்துக் கூறாததும் அதைப் பற்றி வாயே திறக்காமல் வெளியே காட்டிக் கொள்ளாமல் ஒரு மௌட்டீகம் போல் நடந்து கொண்டதையும் அவளால் ஏற்கத் தான் முடியவில்லை.

அப்போது ராம் அவளிடம் வந்து வழக்கமான பாணியில், "இன்று இரவுக்கு என்ன சமைக்கட்டும்?" என்று பவ்யமாகக் கேட்டான். சீதாவுக்கு முதலில் கோபம் தான் வந்தது என்றாலும் அவன் கண்களில் தெரிந்த குறும்பைக் கண்ட சீதா ராமனைப் போனால் போகிறது என்று மன்னித்தே விட்டாள். 


தமிழ்மணம் வாக்களிக்க.....

44 கருத்துகள்:

 1. அதிசயமான கதை. ராமன் தான் சீதையை மன்னிக்கணும் இதில். நல்ல வித்தியாசமான படைப்பு. மனம் நிறைந்த வாழ்த்துகள். கீதா.

  பதிலளிநீக்கு
 2. ஹை!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! நிஜம்மாவே போட்டுட்டீங்களா????????????????????

  பதிலளிநீக்கு
 3. >>> அப்போது ராம் அவளிடம் வந்து வழக்கமான பாணியில், "இன்று இரவுக்கு என்ன சமைக்கட்டும்?" என்று பவ்யமாகக் கேட்டான் <<<

  இனிய இல்லறம்..

  வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
 4. ஒரு பெண் உணர்ந்து கொள்ளும் முறையில் இருக்கிறது
  பெண்ணடிமையா ?சுதந்திரமா ? என்பது.

  உண்மையில் பெண்ணே குடும்பத்தை ஆள்கிறாள் இது உணரும் முறையில் இருக்கிறது அருமை சகோ.

  பதிலளிநீக்கு
 5. கதை ஓகே. இருங்க, காதுல சுத்தியிருக்கற பூவை கீழவச்சுட்டு மீதியைச் சொல்றேன்.. கதையைப் படிச்சிட்டு இந்தமாதிரி ராமன் எங்க கிடைக்கும்னு இப்போ உள்ள பொண்கள் கேட்காம இருந்தாச் சரிதான். த ம போட்டுட்டேன். நாளைக்கு, "புதன் புதிர்-கீதா சாம்பசிவம்"ஆ?

  எனக்குத் தெரிஞ்சு

  பதிலளிநீக்கு
 6. ரமணி சந்திரன் கதை படிச்ச எஃபெக்ட்! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 7. எனக்குத் தெரிஞ்சு பாரம்பர்ய சமையல், புதிய சமையல் குறிப்புகள், கதை எழுதும் திறமை, ஆன்மீகத்தில் நிறைய தெரிந்திருப்பது என்று பல தளங்களில் உங்கள் திறமையைப் பார்க்கிறேன் கீ.சா மேடம். பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 8. கீதாம்மா ஆன்மீகத்தைப் பத்தித்தான் அபாரமா எழுதுவாங்கன்னு நினைச்சேன். சிறுகதையிலே கூட பின்றாங்களே! அசத்தல்!

  பதிலளிநீக்கு
 9. //ராமன் தான் சீதையை மன்னிக்கணும் இதில்.
  எனக்கும் அப்படித்தான் தோன்றியது முதலில்.. கதையிலாவது இப்படி நடக்கட்டுமே?
  வித்தியாசமான படைப்பு - ஆனாலும் ஆசிரிய முத்திரை தெளிவாக விழுந்திருக்கிறது.

  பதிலளிநீக்கு
 10. கீதா சாம்பசிவம் அவர்கள் ஏதாவது சப்ஜெக்ட் எழுதாவிட்டால் தான் அதிசயம். இமயப் பதிவர்னா சும்மாவா?

  பதிலளிநீக்கு
 11. மறுபடி படித்தால் நல்ல ரொமான்டிக் கதை போலப் பட்டது.

  பதிலளிநீக்கு
 12. துளசி: அருமையான வித்தியாசமாக எழுதியிருக்கிறீர்கள்! நல்ல நடை! சொல்லிச் சென்ற விதம் எல்லாமே நன்றாக இருக்கின்றது...வாழ்த்துகள்! பாராட்டுகள்!

  கீதா: அருமை கீதாக்கா. எந்த விதத்தில் கொண்டு வந்து சீதை ராமனை மன்னிக்கப் போகிறாள் அதுவும் ராமன் மிகவும் நல்லவனாக இருக்கிறானே என்று நினைத்தாலும் அந்த சூப் சம்பவம் அதன் பிறகு அவன் நல்லவன் ஸோ புரிந்து, மன்னித்து?!! ஏற்றுக் கொள்கிறாள்....வித்தியாசம்... கீதாக்கா வாசித்து வரும் போதே சீதா ராமை அழைத்து வந்து அம்மா அப்பாவிற்குக் காட்டும் போது அம்மாவும் அப்பாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள் என்ற வரியை வாசித்ததுமே.....அவர்களின் நாடகம் இருக்குமோ என்றும் இருக்கிறது என்பதும் சற்றுப் புரியத் தொடங்கியது. மட்டுமல்லா ராம் க்வாலிஃபைட், நடிக்கிறான் அவளை மாற்றுவதற்கு அதுவும் பொறுமாயாக என்பதும் புரியத் தொடங்கியது. இப்படியான ராமன்கள் அதிசயப் பிறவிகள்!!!

  உங்கள் எழுதும் விதம் அருமை!! பாராட்டுகள்! வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 13. மிடில்க்ளாஸ் மாதவி சொல்லியிருப்பது போல், கல்லூரிக் காலத்தில் நான் வாசித்த ரமணிச்சந்திரன் மற்றும் மில்ஸ் அண்ட் பூன்ஸ் போல ....அதுவும் நானும் தோழிகளும் இவர்கள் ரெண்டுபேரையும் கம்பேர் பண்ணிப் பேசியதுண்டு. அது ஓரு காலம்...அப்புறம் இவர்கள் இருவரின் கதைகளை வாசித்ததில்லை...

  கீதா

  பதிலளிநீக்கு
 14. பெரும்பாலான இன்றைய இளம் பெண்களின் மனப்போக்கைச் சித்தரிக்கும் வேறுபட்ட கோணம். நன்று. இன்னொரு பத்தாண்டுகளில் ராமன் சீதையை மன்னிக்கும் தொடர் ஒன்றை ஆரம்பிக்க வேண்டி வரலாம்.

  பதிலளிநீக்கு
 15. // இரட்டை மாடுகள் பூட்டிய இந்தக் குடும்பம் என்னும் வண்டியை இழுத்துச் செல்ல இருவருக்குமே சம உரிமைகள் உண்டு //

  ஆகா...!

  பதிலளிநீக்கு
 16. அருமையான கருத்துள்ள கதை

  பதிலளிநீக்கு
 17. இந்தக் கதையைப் படித்தால், இங்கிலீஷ் பேசத்தெரிந்த qualified அம்மாஞ்சிகளைத் தேட ஆரம்பித்துவிடுவார்களே நமது யுவதிகள் !

  பதிலளிநீக்கு
 18. /ஆனால் ராமின் பெற்றோர் இதைக் கண்டெல்லாம் கலங்கியதாகத் தெரியவில்லை. ஆனாலும் வசந்தியும் ராமநாதனும் ராமின் பெற்றோருடன் மனம் விட்டுப் பேசினார்கள். அதன் பின்னரே இருவருக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
  //

  சீதாவுக்குத் தன்னிடம் ராம் ஏதோ மறைத்திருக்கிறான் அல்லது இன்னமும் மறைக்கிறான் என்பது புரிந்தது.//

  இதை படித்தவுடன், ராமின் பெற்றோரும், சீதையின் பெற்றோரும், ராமும் சேர்ந்து இந்த நாடகத்தை நடத்தி இருக்கிறார்கள்.

  சீதையின் போகிற போக்கில் போய் சீதையை வழிக்கு கொண்டு வந்து விட்டார்கள்.
  கதை அருமை.

  முத்திரை கதை.

  பதிலளிநீக்கு
 19. இதை படித்தவுடன், ராமின் பெற்றோரும், சீதையின் பெற்றோரும், ராமும் சேர்ந்து இந்த நாடகத்தை நடத்தி இருக்கிறார்கள். என்பது தெரிந்து விட்டது.

  பதிலளிநீக்கு
 20. தான்பிடித்த முலுக்கு மூன்றுகால்தான், நல்ல பிடிவாதக்காரி இதுபோன்றதகுதிகளுள்ள சீதா தாய்மை என்ற ஒன்றினால் முழுதும் மாறி சீதாராம் ஆகிவிடுகிறாள்..காலத்திற்கேற்ற சீதாராம். கதையாசிரியை மிகவும் கெட்டிக்காரி. திரும்பத் திரும்ப கீதா சாம்பசிவம் பற்றி இதே எண்ணம்.அருமை. அன்புடன்

  பதிலளிநீக்கு
 21. பிடிவாதக்காரி

  கதை அருமை
  வாழ்த்துகள் கீதாக்கா

  பதிலளிநீக்கு
 22. சீதாவை கட்டிக்க முன் வந்ததே, ராமன் சீதையை மன்னித்த மாதிரிதானே :)

  பதிலளிநீக்கு
 23. கதாசிரியையின் கருத்துக்களை முழுவதும் பிரதிபலிக்கும் கதை ராமன் அல்லவா சீதயை மன்னித்து இருக்கவேண்டும்

  பதிலளிநீக்கு
 24. வித்தியாசமான சிந்தனை.

  இப்படி ஒரு ஆள் எங்கே இருக்கிறார் என்று சிலர் தேடலாம்!

  த.ம. 15-ஆம் வாக்கு.

  பதிலளிநீக்கு
 25. கீதா, இந்தக் கதையைப் படித்தவுடன் எனக்கு உங்களுக்குப் பிடிக்காத ஜிவாஜி மற்றும் பானுமதி நடித்த அறிவாளி திரைப்படம் நினைவிற்கு வந்தது. நானும் நெல்லைத் தமிழன் கட்சி.:))

  கடைசி நான்கு ஐந்து பாராக்கள் கொஞ்சம் ஜவ்வு போல ஆகிவிட்டது. அவற்றையெல்லாம் வாசகர்களின் யூகத்திற்கு விட்டிருக்கலாம். இன்னும் ஒரு தடவை படித்துப் பார்த்துவிட்டு 'ட்ரிம்' செய்திருக்கலாம் கதையை என்று தோன்றியது.

  யார் எழுதிய கதை என்று உங்கள் பெயரைப் போடாமல் விட்டிருந்தால் கூட கண்டுபிடித்து விடும் அளவிற்கு உங்களின் முத்திரையைப் பதித்திருப்பதற்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

  பதிலளிநீக்கு
 26. எச்சூச்ச்மீஈஈஈ தாமதமான வருகைக்கு முதலில் மன்னிச்சுக்கோங்ங்ங்:).

  ஏதோ ஒரு ரஜினி படம் பார்த்த பீலிங்காக இருக்கு...
  கீதாக்கா கதையை நன்றாகவே எழுதியிருக்கிறீங்க ஆனா இதில் வரும் சீதை மட்டும் என் கையில அகப்பட்டாவோ அவ்ளோதான்ன்ன்ன்... ரொம்ப ரொம்ப ஓவர் பெண்:). இதில அவ வேற ராமை மன்னிக்கிறாவாமோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ராமுக்கும் அடிக்க ஆட்களில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்:)...

  பதிலளிநீக்கு
 27. எனக்கொரு டவுட்டூஊஊஊஊஊ... ஸ்ரீராம் இப்போ றூல்ஸ் ஐ எல்லாம் லூஸ் பண்ணி விட்டிட்டாரோ? இது ஒரு பக்கக் கதை எனத்தானே ஆரம்பித்தார்... அதனால கோபு அண்ணனே கஸ்டப்பட்டுக் குட்டிக் கதை எழுதினாரே... இப்போ வர வர மிக பெருத்துக்கொண்டே போகுதே.... சரி அது போகட்டும்...
  நான் இன்னும் கொம்பியூட்டர் பக்கம் போகவில்லை அதனாலேயே அனத்தும் மொபைலில் செய்ய முடியல்ல:(

  பதிலளிநீக்கு
 28. அதிரா...... நீண்ட இடைவெளி காரணமாக மறந்து விட்டதோ!!!!! ஒரு பக்கக் கதை என்று நான் எப்போ சொன்னேன்? முன்னாலேயே விளக்கமும் கொடுத்த நினைவு..!! அப்படி ரூல் இருந்தால் கீதா ரெங்கன், செல்லப்பா ஸார் கதை எல்லாம் எப்படி இரண்டு மூன்று வாரங்கள் வந்திருக்கும்! .க்ர்ர்ர்ர்ர்....

  பதிலளிநீக்கு
 29. வல்லி சிம்ஹன் = எங்கும், எதிலும், யாரிடமும் குறையே சொல்லத் தெரியாதவர்! ஆகவே அவர் பாராட்டு புதுசு இல்லை. :)

  கில்லர்ஜி= கில்லர்ஜி சொல்லி இருப்பது தான் பெரும்பான்மைக் குடும்பங்களில் நடப்பது! ஆனால்........... எல்லாப் பெண்களும் உணர்கின்றனரா என்பதே கேள்விக்குறி!

  கரந்தை ஜெயக்குமார்= எப்போவும் போல்

  துரை.செல்வராஜு= வாழ்த்தி இருக்கார். எதிர்பார்த்தது தான்!

  நெ.த.= கிண்டலை எதிர்பார்த்திருந்தேன். சரியான விமரிசனம் என்றாலும் காதுல பூ எனச் சொல்லி இருப்பதைக் கண்டு சிப்பு சிப்பா வருது. ஏனெனில் பெரும்பாலான பெண்கள் இப்போ இல்லை 40,50 வருடங்கள் முன்னரே கணவனையோ, கணவனின் தந்தையையோ வேலை வாங்கிக் கொண்டு உட்கார்ந்து அதிகாரம் செய்வதைப் பார்த்திருக்கேன்! அதில் ஒருவர் சுமார் நாற்பது வருடங்கள் முன்னர் மருமகளின் புடைவை மற்றத் துணிகளைத் தோய்த்து உலர்த்திய பின்னரே சாப்பிடலாம். இதைக் கிட்டே இருந்து பார்த்திருக்கேன் என்பது கொடுமை.

  மற்றபடி உங்கள் விமரிசனம் என்னைப் பொறுத்தவரை ஓகே! நாளைப் புதிரெல்லாம் கொடுக்கும் அளவுக்கு எனக்கு ம.ம. இருக்குனு நினைக்கும் ஒரே ஆள் நீங்க தான்! :))

  மிகிமா= கிட்டத்தட்ட ஃபான்டசி மாதிரித் தெரிந்தாலும் உண்மையில் இது கொஞ்சம் கடுமையாகவே பெண்களிடம் காணப்படுகிறது. நான் இதை ஓர் நகைச்சுவைக் கதையாகவே எழுத நினைத்தேன். ஆனால் என்னையும் அறியாமல் இப்படி வந்து விட்டது. ஶ்ரீராமிடம் இதைப் போட வேண்டாம், வேறே அனுப்பறேன்னு சொல்லி இருந்தேன். ஹிஹிஹி, ஏற்கெனவே அப்படி ஒரு கதையை அனுப்பிட்டுப் போட வேண்டாம்னு சொல்லித் தான் இதை அனுப்பிச்சு வைச்சேன். இதையும் போடவேண்டாமானு ஶ்ரீராம் கடுப்பாகி இருப்பார். ஆனால் பாருங்க, உங்க எல்லோருடைய நல்லவேளையா எனக்கு அப்புறமா இருந்த வேலைத் தொந்திரவிலே இதை மறந்தே விட்டேன். பிழைச்சீங்க!

  சேட்டைக்காரர்= உங்களுக்கு என்னைப் பத்தி நன்றாகத் தெரியும். ஆகவே உங்கள் பாராட்டை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்.

  அப்பாதுரை= அதென்னமோ அப்பாதுரைக்கு என்னிடம் ஏதோ திறமை இருக்கிறதாத் தோணுது! ஹிஹிஹி, நல்லது தானே! அப்படியே இருக்கட்டும்! ரொமான்டிக்காவும் எழுதி இருக்கலாம். எங்கேயோ ஆரம்பிச்சது எங்கேயோ போயிடுச்சு! நீங்கல்லாம் அசாதாரணமா எழுதறதைப் பார்த்துப் பார்த்து பிரமிச்சுப் போறது ஒண்ணு தான் எனக்குத் தெரிந்தது!

  தில்லையகத்து துளசிதரன்/கீதா இருவருடைய பாராட்டுக்களையும் ஏற்றுக் கொள்கிறேன்.

  கீதா= "அம்மாவும் அப்பாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள் என்ற வரியை " இதை எழுதும்போது நான் நினைத்தது வேறே! ஆனால் நீங்க புரிஞ்சுண்ட மாதிரியும் தோணும்னு இப்பத் தான் நானும் கவனிச்சேன். ஹிஹிஹி, ரமணி சந்திரன் எனக்குப் பிடிக்காத எழுத்தாளர்! :) அவர் கதைகளில் அதிகம் கற்பனை, ஓவரான அன்பு, பாசம், நடக்க முடியாத விஷயங்கள் எல்லாமும் இருக்கும். என்றாலும் அவருக்கும் தனி ரசிகர்கள் இருக்கிறார்களே!

  ரா.ல.= சரியாகப் புரிந்து கொண்டதுக்கு நன்றி. இப்படி ஓரிரு இடங்களில் பார்க்க நேர்ந்ததே இந்தக் கருவைத் தேர்ந்தெடுத்தேன். முதலில் ரஞ்சனி எழுதி இருக்கிறாப்போல் எதுக்கெடுத்தாலும் விவாக ரத்து என்னும் கருவைத் தான் நினைச்சேன். அப்புறமா இதுவும் இன்றைய பல குடும்பங்களில் நடக்கும் விஷயம். திருமணமாகிப் பல ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் பிறந்தும் குழந்தைகள் பள்ளி செல்ல ஆரம்பித்த பிறகும் எனக்குத் தெரிந்த ஓர் பெண் சாப்பாடு வெளியில் தான் வாங்குகிறாள். வீட்டில் சமைப்பதில்லை. இப்படியும் நடக்கிறது. யார் வந்தாலும் அந்தச் சாப்பாடுதான்!

  டிடி= நன்றி டிடி.

  அசோகன் குப்புசாமி= நன்றி

  புலவர் ராமானுசம்= நன்றி

  பதிலளிநீக்கு

 30. விஜய்= எப்போதும் போல்

  ஏகாந்தன்= ஏற்கெனவே பல வீடுகளில் இப்போதெல்லாம் கணவன் தான் சமையல்! :) ஒரு முறை தொலைக்காட்சியில் குழந்தைகள் நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. ஒரு குழந்தை தன் வீட்டில் அப்பா தான் சமைப்பார் என்று சொல்லியது! அந்தக் குழந்தையின் அம்மாவிடம் கேட்டப்போ தனக்குச் சமைக்கத் தெரியாது என்றும் சமைக்கப் பிடிக்காது என்றும் சொன்னார். ஆகவே இப்போதைய ஆண்களின் தகுதியில் சமையல் தெரிந்திருக்கணும்; குறைந்த பட்சமாக ஒரு வேளைப் பொறுப்பையானும் கணவன் எடுத்துக்கணும்னு எதிர்பார்க்கும் பெண்களே அதிகம்.

  கோமதி அரசு= முத்திரைக்கதை எல்லாம் இல்லை. இரண்டு முடிவுகள் எழுதி இருந்தேன். இது கொஞ்சம் பரவாயில்லை ரகம். மற்றபடி நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தே இதைத் தேர்ந்தெடுத்தேன். பெண்ணை விடப் பெண்ணின் பெற்றோரின் எதிர்பார்ப்பு இப்போதெல்லாம் அதிகம். :) யூகம் செய்யும்படித் தானே கொடுத்திருக்கேன். வாசகர்களின் திறமை அறிந்த ஒன்றே!

  காமாட்சி அம்மா= உங்கள் பாராட்டுக்கு நன்றி. உங்கள் அன்பினால் அளவு கடந்து பாராட்டுகிறீர்கள் என்றாலும் அதுவும் எனக்குத் தேவையாகவே இருக்கிறது! தாய்மை எல்லாப் பெண்களையும் ஓரளவுக்காவது மாற்றும் என்னும் எதிர்பார்ப்பிலே தான் இந்தக் கதை! மாறாத பெண்களையும் பார்த்தாச்சு. :(

  ராஜி= நன்றி! பிடிவாதமாக இருந்தவளையும் மனம் மாற வைத்த ராமுக்கு அல்லவோ நன்றி சொல்லணும்.

  பகவான் ஜி= சீதாவைத் திருமணம் செய்து கொண்டது ராமுக்கு ஒரு சவால்! சீதா மனம் மாறலாம் என்பதும் ஓர் எதிர்பார்ப்பே! கடைசி வரையில் மனமே மாறவில்லை எனில்? அப்படியும் ஓர் முடிவை யோசிச்சிருந்தேன். சுபமாகவே இருக்கட்டும்னு இதையே கொடுத்துட்டேன்.

  ஜிஎம்பி சார்= கணவன், மனைவிக்குள்ளே மன்னிப்பெல்லாம் அநாவசியம் என்னைப் பொறுத்தவரை அது தேவை இல்லை. என்றாலும் ஶ்ரீராம் கொடுத்த வாக்கியத்துக்காக அதைச் சேர்த்தேன்.

  வெங்கட் நாகராஜ்= தேடவே வேண்டாம்! பலரும் இப்போது இப்படித் தான் இருக்கின்றனர். இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் அநுசரணையாகவே நடந்து கொள்கின்றனர். :)

  வாங்க ரஞ்சனி= கிட்டத்தட்ட "அறிவாளி" மாதிரித் தான்! அந்தக் காலத்திலேயே இருக்கும்போது இந்தக் காலத்தில் இருப்பதில் ஆச்சரியம் என்ன? கதை நீளம் என்பது தெரியும். ஶ்ரீராமிடம் திருத்தி அனுப்பறேன் என்று தான் சொல்லி இருந்தேன். அப்புறமா எனக்கு மறந்தே போச்சு! வாரா வாரம் சீதை ராமனை மன்னித்த கதைகளைப் படிக்கையில் கூட நினைவில் வரலை! வேலைகளின் அழுத்தம்!

  கடைசிப் பாராக்களைச் சொல்லாமல் விட்டிருந்தால் கதை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்னும் உங்கள் கருத்தை ஏற்கிறேன். தத்தித் தத்தித் தானே நடந்து பழக வேண்டும். சுருக்கமாகச் சொல்லத் தெரியவில்லை! மற்றபடி உங்களுடையதும், நெல்லையுடையதும் தான் ஒளிவு, மறைவில்லா விமரிசனம் என்பதையும் தெரிந்து கொண்டிருக்கிறேன்.

  ஆஷாபோஸ்லே அதிரா= அதிரடியா வந்து கலக்கிட்டீங்க. வந்ததுக்கும் ரஜினி படம் பார்த்த ஃபீலிங்னு சொன்னதுக்கும் நன்னியோ நன்னி! ஹிஹிஹி, தமிழ் சினிமால்லாம் இப்படித் தான் இருக்கு! :) கதை நீளம்னு எனக்கே தெரிஞ்சது. ஆனால் குறைச்சுத் திருத்தி எழுத மறந்து போச்ச்ச்ச்ச்ச்ச்ச்!

  பதிலளிநீக்கு
 31. இதையும் ஒரு கதைனு ஏற்றுக் கொண்ட என் இனிய நண்பர்களுக்கு நன்றி. இதை நான் எழுதி அனுப்பினதுமே சினிமாக் கதை மாதிரி அதுவும் தமிழ் சினிமாக் கதை மாதிரி இருக்குனு தம்பி ஶ்ரீராம் சொல்லிட்டார்!ஆனால் முதலில் அனுப்பின கதை கொஞ்சம் தீவிரமான கதைக்கரு! அதை அனுப்பிட்டேன். ஆனால் வெளியிட வேண்டாம்னு சொல்லிட்டேன். அதே மாதிரி திரைப்படம் ஒண்ணு தமிழில் வந்திருக்கு! அப்புறமா யோசிச்சு இதை எழுதினேன். எல்லோருமே ராம் அல்லவோ சீதையை மன்னிக்கணும்னு கேட்டிருப்பதற்கு நானும் உடன்படுகிறேன். ஆனால் சீதா தானே கோபக்காரி! சுலபத்தில் விட்டுக் கொடுக்காதவளும் கூட. கதைப்படி ராம் இணக்கமான மனோபாவம் கொண்டவன். கோபம்,தாபம் மனதில் வைத்துக் கொள்ளாமல் சீதாவிடம் எப்போதும் போல் அன்புடன் நடந்து கொள்கிறான். அதைப் பார்க்கும் சீதாவுக்குத் தன் மேலேயே கோபம் வந்தாலும், தன்னை இப்படி எல்லாம் நடக்கும்படி செய்த தன் பெற்றோர், மற்றும் தன்னை இத்தனை காலம் பொறுத்துக் கொண்டிருந்த ராம் ஆகியோர் மேலும் கோபம் வருகிறது. அந்தக் கோபத்தைத் தான் அவள் அடக்கிக் கொண்டு ராமை மன்னிக்கிறாள். அதோடு கதையின் முடிவில் சீதை தானே ராமனை மன்னிக்க வேண்டும்! இதைக் குறித்து ஒரு தீவிரமான சிந்தனைப் பதிவும் எழுதி வைச்சிருக்கேன். அநேகமா இன்னிக்கு வெளியிடலாம். அனைவருக்கும் மீண்டும் நன்றி. என்னையும் பாராட்டியதற்கும் ஊக்கம் கொடுத்ததற்கும்.

  பதிலளிநீக்கு
 32. கீதாக்கா எனக்கும் ரமணிச் சந்திரன் கதைகள் பிடிக்காது! அது நாங்கள் கல்லூரிக் காலத்தில் தோழிகளுக்குள் விவாதம் வரும் அதற்காக அவரது கதைகளை வாசித்தது விவாதத்திற்காக....அதுவும் மில்ஸ் அண்ட் பூன்ஸ் கதைகளையும் கம்பேர் பண்ணி விவாதம் பண்ணுவதற்காக...அதன் பின் எல்லாம் வாசித்ததே இல்லை. அவரது கதைகள் என்றில்லை பலரது கதைகளையும் அதன் பின் வாசித்ததில்லை.

  கீதா

  பதிலளிநீக்கு
 33. http://sivamgss.blogspot.in/2017/08/blog-post_95.html

  இன்றைய பதிவு! விருப்பமுள்ளவர்கள் வந்து வாசித்துக் கருத்திடலாம். நன்றி. :)

  பதிலளிநீக்கு
 34. மயக்கத்திற்குக் காரணம் கர்ப்பம் என்று சொன்னது தான் தடுக்கி விழுந்த இடம். ராமு அவளைப் பொருத்த மட்டில் கணவன் இல்லை. அவளைப் பொருத்த மட்டில் கூடவே இருக்கும் சமையல்காரன் என்ற உறுதியான நினைப்பு தான். முதல் இரவு என்று ஒரு வரியில் சொல்லிப் போனாலும் இடம் கொடுக்கும் அளவுக்கு அவள் மனநிலை இல்லை என்பது தெரிந்து போன விஷயம்.

  அப்படியே அவள் கர்ப்பம் என்று கொண்டாலும் ராமு தந்த செல்வத்தைத் தானே சுமக்கிறோம் என்ற நிதர்சன உண்மையில் ராமுவின் காதல் மலர்ந்ததாகக் காட்டியிருக்கலாம். கதை சிறப்பாக வேறு பாதையில் திரும்பியிருக்கும்.

  ராமு படித்தவன், தனக்கு நிகராக வேலைக்குப் போகப்போகிறான், சம்பாதிக்கப் போகிறான் என்ற அடிப்படையில் சீதாவிடம் ஏற்பட்ட மாற்றம் அடிப்படையே ஆட்டம் கண்ட மாதிரி இருக்கிறது.

  இவள் யார் ராமுவை (போனால் போகிறது என்றானும்) மன்னிப்பதற்கு?..

  பதிலளிநீக்கு
 35. Ippadippatta penkalum irukkirkal enra yartha unmaiai solvantha kathai ithu enral muzhu vetri ungalukky!

  Kathayai ezhuthiyavar solvathu pola amaikkaamal ezhuthi irukkalam. Anal intha kalaththil peyar pettra ezhuththalarkal kooda ippadithan ezhthugirargal.

  Ippadi neenda kathai neengal ezhuthi naan padithathillai. Vazhthukkal.


  பதிலளிநீக்கு
 36. இப்படிப்பட்ட பெண்களும் இருக்கிறார்கள் (ஆமாம், இருக்கிறார்கள் தாம்) என்ற யதார்த்த உண்மையைச் சொல்ல வந்த கதை இது என்றால் முழு வெற்றி உங்களுக்கே!

  கதை எழுதியவர், சொல்வது போல அமைக்காமல் எழுதியிருக்கலாம். (உ-ம்) (அந்த சம்பவத்தைத்தான் ஆரம்பத்தில் பார்த்தோம் என்பது போல வரும் இடங்கள்) ஆனால் இந்தக் காலத்தில் பெயர் பெற்ற எழுத்தாளர்கள் கூட இப்படித்தான் எழுதுகிறார்கள்..

  அவர்கள் தாம் எழுத்தில் கதை எழுதத் தெரியாமல் சொல்வது போல எழுதுகிறார்கள் என்றால் அந்தக் கால எழுதத் தெரிந்தவர்களின் கதைகளைப் படித்தத் தேர்ந்த நீங்கள் அப்படியாக எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது?.. சொல்லுங்கள்.

  இப்படி நீண்ட கதை நீங்கள் எழுதி நான் படித்ததில்லை. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 37. அச்சச்சோ அபச்சாரம் அபச்சாரம் ... இடைவேளை விட்டு வந்த ஒரு சுவீட் 16 பிள்ளையை, ஈப்பூடி ஒரு பப்புளிக்குப் பிளேசில வச்டு ஸ்ரீராம் பேசிப்போட்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... :) இதைத் தட்டிக் கேட்க இங்கின ஆருமே இல்லயா????... இருங்கோ கறுப்புப் பூனைப் படையோடு வருகிறேன்... அப்போதாவது பயப்புடீனமோ பார்ப்பம் கர்ர்ர்ர்ர்:).

  பதிலளிநீக்கு
 38. கீதா சாம்பசிவம் மேடம் -

  //இப்போ இல்லை 40,50 வருடங்கள் முன்னரே கணவனையோ, கணவனின் தந்தையையோ வேலை வாங்கிக் கொண்டு உட்கார்ந்து அதிகாரம் செய்வதைப் பார்த்திருக்கேன்! அதில் ஒருவர் சுமார் நாற்பது வருடங்கள் முன்னர் மருமகளின் புடைவை மற்றத் துணிகளைத் தோய்த்து உலர்த்திய பின்னரே சாப்பிடலாம். இதைக் கிட்டே இருந்து பார்த்திருக்கேன் என்பது கொடுமை. //

  எனக்குக்கீழ் வேலை பார்த்த நல்ல பொசிஷனில் உள்ள 38 வயதுடையவர் (தெலுகுதேசம்) சொன்னது. (அவருடைய மனைவி அழகாக இருப்பார். இவர் சுமார், ஆனால் நல்ல வேலை) அவருடைய மாமனார், இவரது எல்லாத் துணியையும் துவைத்துத் தருகிறேன் என்று செய்வாராம் (ஏனென்றால் மனைவி, பெண் மற்ற எல்லாரது துணி துவைப்பது, போன்ற எல்லா வீட்டுவேலையும் மாமனார்தானாம்). இவருக்குத்தான் அவர், இவரது உள்ளாடையெல்லாம் தோய்த்துத் தருவது சங்கடமாக இருக்குமாம். எங்கள் டிபார்ட்மென்டில் எல்லோரும் இன்னொரு தீவுக்கு ஆபீஸ் சுற்றுலாவாகப் போனோம், இரவு தங்கும்படியாக. அப்போ இவரை எவ்வளவு அந்தப் பெண் ஏவுகிறாள், தெலுங்கில் திட்டுகிறாள், இவர் எவ்வளவு சமாதானமாக (அடிமையாக) போகிறார் என்பதையெல்லாம் காண நேர்ந்தது. ஆனால் இதுமாதிரியான ஆட்கள் மிக மிகச் சிலரே.

  சில சமயம் கேரக்டர்கள் சரியில்லை என்றால் (கதையாக இருந்த போதும்), கொஞ்சம் படிக்கும்போதே பளார் என்று ஒரு அறை விடத் தோன்றும் (அந்த கேரக்டருக்கு).

  எழுத முயற்சிக்கிறவங்க, என்ன எழுதினாலும் பாராட்டலாம். ஆனால் உங்களைப் போல அனுபவசாலிகளையும் அப்படியே பாராட்ட எண்ணவில்லை. தவறாக எண்ணாதீர்கள். (கதையை மீண்டும் மீண்டும் படிக்கும்போது அது மெருகேறும். ஆனால் இந்த அவசர உலகில் அதற்கான நேரம் எங்கே.)

  பதிலளிநீக்கு
 39. நன்றி, சோழநாட்டில் பௌத்தம்/

  ஜீவி சார், ஏற்கெனவே சீதாவின் தாய் குழந்தை பிறப்புக்கு அப்புறமா என்ன நடக்கும் என்பதைக் குறித்து சீதாவிடம் கேட்டிருக்கிறதைச் சொல்லி இருக்கேன். ஆகவே முதல் இரவுக்கு இடம் கொடுக்கவில்லை எனச் சொல்ல முடியாது. நான் அவளுடைய அகங்காரமான போக்கைத் தான் சுட்டிக் காட்ட நினைத்தேன். ஆகவே அதற்கே முக்கியத்துவம் கொடுத்தேன். ராமின் குழந்தையைத் தான் சுமக்கிறாள். ஆனால் அது அவளுக்கு அப்போது தெரியாது அல்லவா? மயக்கம் அடைந்ததும் கர்ப்பம் என்றால் சினிமா, சின்னத்திரை மாதிரி இருக்கேனு நினைச்சேன். அதைக் கொஞ்சம் மாத்தி இருக்கலாம்னு இப்போத் தோணுது! :) பட்டால் தானே தெரியும்.

  ராமுக்கு அவளிடம் காதல் இருந்ததால் தான் கல்யாணத்துக்கே சம்மதித்திருக்கிறான். எப்படியும் தன் வழிக்குக் கொண்டு வரலாம் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. ஆனால் இப்படிப் பட்ட பெண்களும் இருக்கத் தான் செய்கிறார்கள் என்பது கசப்பான உண்மை! ஒரு முறை என் சொந்தக்காரப் பெண் ஒருத்தியே (இன்னும் திருமணம் ஆகவில்லை) தன் சிநேகிதி நிறையப் படித்திருப்பதாகவும், ஆனால் இப்போது கணவன், மாமியார் ஆகியோருக்குச் சமைப்பதாகவும் அவள் படிப்பு இதற்குத் தானா என்றும் கேட்டதோடு இல்லாமல் அந்த மாமியாருக்கு எப்படி இவ்வளவு படித்த பெண்ணை வேலை வாங்க மனம் வந்தது என்று கேட்டிருந்தாள். மாமியாரும் ஒரு பெண் தானே! அவங்க வேலை செய்யலாமானு நான் திருப்பிக் கேட்டிருந்தேன். அதோடு படித்தவர்கள் என்றால் அவங்க சமைச்சுச் சாப்பிடக் கூடாதா? அது பெரிய தப்பா என்றும் கேட்டிருந்தேன். இன்னொரு பெண் சமைத்துப் போட்டுச் சாப்பிடுகையில் அந்த இன்னொரு பெண்ணின் உரிமையை நசுக்கி விட்டுத் தானே நம் உரிமையை நிலை நாட்டுகிறோம்! அதை முதலில் புரிஞ்சுக்கணும் இல்லையா?

  அதோடு சமையல் பண்ணினாலோ, கணவனுக்குச் சமைத்துப் போட்டாலோ பெரிய படிப்புப் படித்தவர்கள் குறைந்து போக மாட்டார்கள். மாறாக இன்னும் பெருமை சேர்க்கும். எனக்குத் தெரிந்த ஒரு மருத்துவர் பெண்மணி அவங்க வீட்டுக்கு நாங்க போனப்போ சமையல்கார மாமி மத்தியானம் லீவுனு சொல்லிட்டு அவங்களே காஃபிபோட்டு எங்களுக்கு டிஃபனும் செய்து கொடுத்தாங்க! ஆணோ, பெண்ணோ சமையல் தெரிஞ்சிருக்கணும்! அதையும் வலியுறுத்தி இருக்கணுமோ?

  அடுத்து.

  //கதை எழுதுபவர் சொல்வது போல் அமைக்காமல் எழுதி இருக்கலாம்//
  உண்மையைச் சொல்லணும்னா இதை எல்லாம் நுட்பமாக நினைத்தோ, கவனித்தோ எழுதவில்லை. ஆகையால் இதை எல்லாம் விட்டுட்டு எழுதி இருக்கணும் என்பது எனக்குப் புரியவில்லை. :) உங்களைப் போன்ற தேர்ந்த எழுத்தாளர்களுக்கு இது வசப்படலாம். நானெல்லாம் அமெச்சூரில் கூடச் சேர்த்தி இல்லை! மற்றபடி கதை நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்டு விட்டது தான்! குறைச்சிருக்கணும்! சுத்தமா நினைவில் இல்லை! இல்லைனா கொஞ்சம் எடிட் செய்து ஶ்ரீராமுக்கு மறுபடி அனுப்பி இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 40. நெ.த.நான் அனுப்வசாலியெல்லாம் இல்லை. ஆகவே குற்றம், குறைகளைத் தாராளமாச் சொல்லலாம். சொன்னால் தானே திருத்திக்க முடியும். இப்போதெல்லாம் இணையத்தில் மட்டுமில்லாமல் பரவலாக உள்ள ஓர் பழக்கம் என்னவெனில் சுமாராக இருந்தால் கூட ஏகத்துக்குப் பாராட்டு மழை! அது சமையலோ, விளையாட்டோ, கைவேலையோ, கதையோ, பதிவோ எதுவானாலும் சரி! யாரும் குறைகளைச் சுட்டுவதில்லை. ஓரிருவரிடம் குறைகளைச் சுட்டி விட்டு வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கேன். அதுக்கப்புறமா இடம் பார்த்துச் சுட்ட ஆரம்பித்தேன். :)

  நீங்கள் சொன்ன மாதிரிப் பொது வெளியில் கூடக் கணவனைக் கேவலமாக நடத்தும் பெண்களை நானும் பார்த்து வருகிறேன். அவர் சமாதானமாகப்போகாமல் பதிலுக்குப் பேசி இருந்தால் நிலைமை இன்னமும் மோசமாகப்போய் விடுமே! அதனாலேயே அவர் வாய் மூடி இருக்கலாம்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!