செவ்வாய், 8 அக்டோபர், 2019

கேட்டு வாங்கிப்போடும் கதை : நான்... நாகன் என்கிற... - துரை செல்வராஜூ



நான்..  நாகன் என்கிற..
====================

துரை செல்வராஜூ 

=====================

ஆழக் கிணற்றுக்குள் இருந்து மேலே வருவது போல இருக்கின்றது..

அதே சமயம் - மேலே செல்ல விடாமல்
யாரோ கீழே பிடித்து இழுப்பது போலவும் இருக்கிறது...

ஒரு விநாடி  கொடுத்தாலும் போதுமே!..
சற்று முன் என்னை உற்று நோக்கிய - அந்த அன்பு முகத்தை
மீண்டும் ஒருதரம் பார்த்துக் கொள்வேனே!..

மனம் கிடந்து அடித்துக் கொள்கிறது... ஆனாலும் முடியவில்லை...

நினைவின் சுழல் அப்படியே உள்வாங்கிக் கொள்கின்றது..

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒன்று
திரைப்படம் போல ஆழ்மனதில் ஓடுகின்றது...

மாரியம்மன் கோயில் திடலின் வடக்காகப் பள்ளிக் கூடம்...

பள்ளிக் கூடம் என்றால் சிமெண்ட் கட்டடம் ஒன்று...
பக்கத்திலேயே கூரைக் கொட்டகைகள் இரண்டு...
அந்தப் பக்கமாக மதிய உணவுக்காக - சமையல் கொட்டகை...

கூரைக் கொட்டகைகளில் பெஞ்சு பலகை மேசை நாற்காலிகள் கிடந்தாலும்
அவைகளுக்குப் பூட்டுத் திறப்பு கிடையாது...

கள்வர் நடமாட்டம் அப்படி இப்படி உண்டென்றாலும்
பள்ளிப் பொருட்களைத் திருடக் கூடாது என்ற அறிவு இருந்த காலம் அது...

திடலின் தெற்காக பெரிதாக நிழல் விரித்திருந்த மாமரம்...
அதுதான் காற்றோட்ட கல்விச் சாலை...

மாமரத்தை ஒட்டினாற்போல வண்டிச் சுவடு...
இன்னும் கருங்கல் ஜல்லியாகத் தான் கிடக்கின்றது..
அடுத்த வருசத்தில் தார்ச்சாலை ஆக்கி விடவேண்டும்.. ஊர்மக்களின் ஆசை..

மாமரத்து நிழலின் கீழ் ஆறாம் வகுப்பு நடந்து கொண்டிருக்கிறது...

நான் இன்று முதல் தமிழ் ஆசிரியர் இப்பள்ளிக் கூடத்துக்கு...

ஆறு முதல் எட்டு வரை மூன்று வகுப்புகள் மட்டுமே...
நாயனார் மடத்தில் பாலர் பள்ளி.. ஐந்து வகுப்புகள் வரை அங்கே!..

பிள்ளைகளுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்..
புது வாத்தியார்.. அதுவும் தெரிந்த வாத்தியார் என்று...

மாமரத்து நிழலின் கீழ் நாற்காலி ஒன்று..
அதில் எனது புத்தகங்களையும் குறிப்பேடுகளையும் வைத்துவிட்டு...
நின்றபடி பிள்ளைகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன் நான்...

" சாதிகள் இல்லையடி பாப்பா!.. - குலத்
தாழ்ச்சி உயர்த்தி சொல்லல் பாவம்!... "

பிள்ளைகளின் நடுவாக நின்று கொண்டு கல்பனா படிக்க -
தொடர்ந்து மற்ற குழந்தைகள் சத்தமாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்...

திடீரென்று அருகிருந்த சாலையில் பரபரப்பு..
நாலைந்து பேராக - தடி மாடுகள் என்று ஊரில் அறியப்பட்ட வெட்டிக் கும்பல்!...

" ஏய்... போயி புள்ளைய அழைச்சிக்கிட்டு வாடா...
இவன்....லாம் வந்து பாடஞ்சொல்லி வெளங்க வேண்டியதில்லை... "

" ம்...ன்னு சொல்லுங்க மாப்பிளே!... ரெண்டுல ஒன்னு பார்த்திடறேன்...
எல்லாம் அந்தப் பிரசிரண்டு செஞ்ச வேலை... ஆளுக்குத் தராதரம் தெரிய வேணாம்!?... "

" நீங்க ஒரு வார்டு மெம்பர்...
உங்கள எல்லாம் கேக்காம இவனை எப்படி நம்ம ஊர்ல போடலாம்?... "

அவர்கள் என்னைத் தான் வசை பாடுகின்றார்கள்...

" இவ்வளோ தூரம் பேசறோம்... ஏதாவது பதில் பேசறானா பாருங்க!... "

" அவன் எப்படிடா... பேசுவான்!?... "

சாலையோரத்துக் கூச்சலைக் கேட்டு மனம் கலங்கிய நான்
நாற்காலியில் இருந்த புத்தகங்களை எடுத்துக் கொண்டு நகர முற்பட்டபோது -

பாதகம் செய்பவரைக் கண்டால் நீ
பயம் கொள்ளலாகாது பாப்பா!..

கல்பனா உரத்த குரலில் அழுத்தந்திருத்தமாகப் பாடினாள்...

" பாதகம் செய்பவரைக் கண்டால் நீ
பயம் கொள்ளலாகாது பாப்பா!..
மோதி மிதித்து விடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா!.. "

பிள்ளைகளிடமிருந்து கூடுதல் சத்தம் கிளம்பிட.
என் மனதில் ஆனந்தப் புயல் வீசியது...

" மோதி மிதித்து விடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா!.. "

மீண்டும் அதே வரிகள்...

" பாதகம் செய்பவரைக் கண்டால் நீ
பயம் கொள்ளலாகாது பாப்பா!.. "

குழந்தைகளின் கூச்சல் காதுகளில் இனித்தது...

வேலியோரத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள் கடுப்பாகி விட்டார்கள்...

" டேய்... யார்ரா இது!... போய் செவிட்டுல ரெண்டு கொடுத்துட்டு வரவா?... "

" அண்ணே!... அது போஸ்ட் மாஸ்டரோட பொண்ணு...
சென்ட்ரல் கவர்மெண்ட் சமாச்சாரம்... மேல கைய வைச்சா
உள்ளே தள்ளி நொங்கு எடுத்துடுவாங்க!... "

அந்த நேரம் பார்த்து வேர்க்க விறுவிறுக்க
தலைமையாசிரியர் சைக்கிளில் வந்து இறங்கினார்...

அவரும் உள்ளூர்க்காரர் தான்...
அங்கே கூடியிருப்பவர்களுக்கு உறவுக்காரர் தான்...

வயக்காட்ல நடவு ஆகிக்கிட்டு இருக்கு...
இங்கே இது வேற பிரச்னையா.. என்னடா வேணும் உங்களுக்கு?...

தனக்குள் பேசிக் கொண்டார்... அவருடைய கவலை அவருக்கு...

" காத்தமுத்து!.. என்னய்யா இதெல்லாம்?...
ஸ்கூல்..ல வந்து தகராறு பண்ணிக்கிட்டு?... "

" நீங்க யாரக் கேட்டு அவனை வாத்தியாராப் போட்டீங்க?... "

" யாரக் கேக்கணும்?... இல்லே... யாரக் கேக்கணும்..ங்கறேன்!... "
தலைமையாசிரியர் எதிர்த்துச் சத்தம் போட்டார்...

இதனை சற்றும் எதிர்பாராத -
காத்தமுத்து கோஷ்டியினர் வாயடைத்து நிற்க -
தலைமையாசிரியர் தொடர்ந்தார்...

" சும்மா அநாவசியமா யாரும் கூச்சல் போடக் கூடாது!..
இது பஞ்சாயத்து யூனியன் ஸ்கூல்... சேர்மனோட ஆர்டர் இது!..
தாசில்தார், ஆர் டீ ஓ, டி ஈ ஓ வரைக்கும் போய் கையெழுத்தாகிற விஷயம்!..
வெவரம் புரியாம ஏதும் பேசக் கூடாது!... "

" அப்போ எம்மகள நாம் கூட்டிக்கிட்டுப் போறேன்...
இவங்கிட்ட படிக்க வைக்க எனக்கு இஷ்டம் இல்லை... "

" காத்தமுத்து!.. அதோ குருக்களோட பொண்ணு... "
இதோ என்னோட பொண்ணு... பார்த்தீங்கள்...ல!..
எடுபிடிகளோட பேச்சைக் கேட்டு ஏடாகூடமா எதும் பேசாதீங்க...
பெரியவன்.. சின்னவன்...ங்கறதெல்லாம் காத்தோட காத்தா போயாச்சு!.. "

" காலம் மாறிப் போனது தெரியாமலா இன்னும் இருக்கீங்க?..
உங்க வறட்டு வாதத்துக்கு பொம்பளைப் பிள்ளையோட
படிப்பைக் கெடுத்துடாதீங்க!... "

" அத்தோட இந்த விஷயம் மேலே போனா நாளைக்கு என்கொயரிக்கு வந்துடுவாங்க...
உங்களுக்குக் கெட்ட பேரு.. ஊருக்குக் கெட்ட பேரு...
நல்ல தனமா நடந்துக்குங்க!..இந்த மாதிரி எல்லாம் பேசி வம்புல மாட்டிக்காதீங்க... "

வில்லங்கம் விவகாரம் என்றெல்லாம் விவரம் வெளிவந்ததும்
காத்தமுத்துவுடன் இருந்த கும்பல் மெல்லக் கலைந்தது...

காத்தமுத்துவும் காற்று இறங்கிப் போய் அங்கிருந்து நகர்ந்தார்...

" ம்.. நாகராசன்.. நீங்க பாடம் நடத்துங்க!... " - தலைமையாசிரியர் புன்னகைத்தார்..

" நீதி உயர்ந்த மதி கல்வி அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்... "

கல்பனாவிடமிருந்து உற்சாகம் பீறிட்டது...

" நீதி உயர்ந்த மதி கல்வி அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்... "

பிள்ளைகளிடமும் ஆரவாரம் பெருகிற்று...

என் முகத்தில் புன்னகை... பெரும் பாரம் இறங்கியதைப் போலிருந்தது..
முகத்தைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டேன்...

கையிலிருந்த குறிப்பேடுகளையும் புத்தகங்களையும்
மீண்டும் நாற்காலியில் வைத்தேன்...

" கல்பனா!.. இங்கே வாம்மா... "

புன்னகைப் பூவாக அருகில் வந்து நின்றாள்...

இருகைகளாலும் கன்னங்களை வருடி முத்தமிட்டேன்...

பிள்ளைகள் ஆரவாரத்துடன் கை தட்டினார்கள்....

" நீ நல்லா இருக்கணும் தாயீ!... "

இதோ.. இதோ... மீண்டும் நினைவுக் குமிழ்களுடன் மேலே வருகின்றேன்.....

மறுபடியும் அந்தப் புன்னகை முகம் நினைவுக்கு வருகின்றது..

ஆ..ஆ.. இது கல்பனாவின் பூ முகம் அல்லவா!...

சோர்வுற்று விழுந்த நேரத்தில் என்னைத் தூக்கி நிறுத்திய
அன்புத் தாயின் முகம் அல்லவா!...

" இறைவா!.. என் தெய்வமே!...
எனக்கு இன்னுமொரு வாய்ப்பு கொடு!...
என்னை வார்த்தெடுத்த வண்ண முகத்தை
மீண்டும் பாராட்ட வாழ்க்கை கொடு!... "

என் மனம் தவித்தது...

" பேஷண்ட் கண் முழிச்சிட்டார்!... " - நர்ஸின் உற்சாகக் குரல் எனக்குக் கேட்டது..

தேவதை ஒருத்தி புன்னகையால் என்னை உயிர்ப்பிப்பதைப் போலிருந்தது..
நான் மெல்லத் தலையைத் திருப்பி நோக்கினேன்...

அங்கே -

அன்றைக்குப் பாரதியின் பாட்டைப் பாடிய
புன்னகைப் பூ வந்து கொண்டிருந்தது...

டாக்டர் கல்பனா வந்து கொண்டிருந்தாள்...
ஃஃஃ

73 கருத்துகள்:

  1. அனைவருக்கும் விஜய தசமி நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. இன்று எனது கதையைப் பதிப்பித்த
    ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

      நீக்கு
    2. அன்பு ஸ்ரீராம், அன்பு துரை செல்வராஜு,இன்னும் வரப்போகிறவர்களுக்கு
      நல் வணக்கம்.
      விஜயதசமி எல்லோருக்கும் வெற்றி வழங்க வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்.

      துரை சாரின் கதை எப்பொழுதும் போல் தென்றலாக ஆரம்பித்து
      தென்றலாகவே முடிகிறது.
      ஒரு தமிழாசிரியரின் பண்பும், குழந்தையின் வீரமும்,
      பாரதிப் பாடலும் கதையை எத்தனையோ பெரிய உயரத்தில்
      கொண்டு வைத்து விட்டது.
      இப்போது அங்கே எல்லாம் நன்ன்மையாக மாறி இருக்கும் என்று
      நம்புகிறேன்.
      உண்மையில் அந்தக் கும்பல் ஆசிரியரைத் தாக்கி விடுமோ என்ற
      பயம் வந்தது.
      எத்தனை அழகான பள்ளியின் வர்ணனை. அந்தப் பள்ளித் தலைமை ஆசிரியரும்
      மஹாகவி பாரதி வழி நடப்பவர் போலிருக்கிறது.

      அருமை மிக அருமை. உயிர் காக்கும் மருத்துவராக வந்துவிட்ட கல்பனா
      அருமையான முத்தாய்ப்பு.

      நீக்கு
    3. தங்களது அன்பின் வருகையும் கருத்துரையும் மிக்க மகிழ்ச்சியம்மா..

      நெஞ்சார்ந்த நன்றியுடன்....

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் வணக்கங்களுடன் இந்நாள் அனைவருக்கும் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை பரிபூரணமாக பிரார்த்திக்கிறேன்.

    சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் எழுதிய கதையா? மிக அருமையாகத்தான் இருக்கும். படித்து விட்டு வருகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...  வணக்கம்.

      இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.  

      //சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் எழுதிய கதையா? மிக அருமையாகத்தான் இருக்கும்.//

      சந்தேகம் இல்லாமல்.    

      நீக்கு
    2. >>> சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் எழுதிய கதையா? மிக அருமையாகத்தான் இருக்கும்..<<<

      என் மீது இத்தனை நம்பிக்கையா!..

      நெஞ்சார்ந்த நன்றி.. மகிழ்ச்சியுடன்...

      நீக்கு
  4. இன்று விஜய தசமி..

    பெண்மையைப் போற்றுவோம்..
    பெண்மையைப் போற்றுவோம்!..
    திண்மையைப் போற்றுவோம்..
    உண்மையைப் போற்றுவோம்!..

    ஓம் சக்தி.. ஓம் சக்தி.. ஓம்.. ஓம்!..

    பதிலளிநீக்கு
  5. கதையைப் படிக்க ஆரம்பித்தவுடன் பயம் தோன்றியது, தொடரோ என்று.

    அருமையான தீம். கிராமத்துப் பள்ளிக்கூடத்தை நினைவுபடுத்திய வர்ணனை.

    சாதி, மதம் என்ற சிந்தனையே எனக்கு உயர் கல்லூரி படிக்கும் வரையில் வந்ததில்லை. இத்தனைக்கும் நான் பல கிராமங்களில் பயின்றவன், அப்பாவுக்கு ஒவ்வொரு மூன்று நாலு வருடங்களில் டிரான்ஃபர் என்பதால். அப்புறம் 9லிருந்து ஹாஸ்டல், இடையில் இளநிலையின்போது இரண்டு வருடங்கள் அம்மாவுடன் என்று சென்றது. எங்கள் வீட்டுக்கு வருபவர்களை (என்னுடன் படித்தவர்களை) உணவிட்டு அம்மா உபசரித்திருக்கிறார்... அப்பா ஒன்றும் சொல்லி நான் கேள்விப்பட்டதில்லை (ஆனால் வருகிறவன் உருப்படியானவனா, கெட்டவழக்கம் இல்லையா என்று மட்டும் எங்க அப்பா அவதானிப்பார் என்று புரியும்)

    இந்த பின்னணியில் நான் வேலை பார்த்தபோது மற்றவர்கள் சாதியைப் பற்றி, தாங்கள் அதற்குக் கீழுள்ள சாதியைவிட உயர்ந்தவர்கள், எங்கள் ரத்தம் என்றெல்லாம் பேசும்போதும், தனக்கு மேல்நிலை எனச் சொல்லப்படுகிற சாதிகளுடன் சகஜமாக விரும்பிப் பழகுவதையும் கண்டு இந்த நோய் எவ்வளவு தூரம் வேரோடிப் போயிருக்கு என்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது.

    மனிதனின் ஆதாரத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், கல்வி, மருத்துவம், போக்குவரத்து ஆகிய அனைத்தும் சமூகத்தின் கூட்டு முயற்சி. சாதி என்று ஒன்றை நினைப்பவர்கள் இதனைச் சிந்தித்துப் பார்க்கணும்.

    கதை, சமூகத்தின் இந்தக் கூறைச் சொல்லி நல்ல முடிவை நோக்கிச் செல்கிறது. பாரதியார் பாடல்கள் மிகுந்த வலு சேர்க்கிறது.

    பாராட்டுகள் துரை செல்வராஜு சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை ..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி....

      இப்படியான சூழலில் தான் நானும் வளர்ந்தேன்.. அப்போதெல்லாம் எவ்வித பேதமும் இருந்ததில்லை...

      மகிழ்ச்சி..
      பாராட்டுரைக்கு நன்றி..

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    அழகான ஆழமான கருத்துடன் கூடிய கதை.

    இயற்கை நிறைந்த கிராமும், மாமரத்தின் வாசமான வீசும் இனிய காற்றும், புரிந்துணர்வு அதிகமாக இருந்த அன்பான குழந்தைகளின் படிப்பறிவும் , பாரதியின் பண்பாடு மிகுந்த பாட்டும், இவையனைத்தையும் படித்து வரும் போது, அங்கு பயிலும் மாணவ செல்வங்களுகிடையே நானும் இருப்பதைப் போன்ற ஒரு உணர்வை அடையப் பெற்றேன். இந்த ஆனந்தமான உணர்வை இப்படி நமக்குள் கொண்டு வர சகோதரர் துரை செல்வராஜ் அவர்களால் மட்டுமே முடியும். அவரின் உணர்வுபூர்வமான சிந்தனைக்கும், எழுத்துக்கும் முதலில் என் பணிவான வணக்கங்கள்.

    /அங்கே -

    அன்றைக்குப் பாரதியின் பாட்டைப் பாடிய
    புன்னகைப் பூ வந்து கொண்டிருந்தது...

    டாக்டர் கல்பனா வந்து கொண்டிருந்தாள்.../

    பாரதியாரின் பாடலோடு கல்பனாவின் இளம் வீரத்தை காட்டியபடி ஆரம்பித்த கதையை, சேவை செய்யும் அன்பான மருத்துவராக கல்பனாவை காட்டியபடி முடித்திருப்பது... இறுதியில் கற்றுக் கொடுத்த தமிழாசிரியரை மட்டும் உயிர்பிக்கவில்லை..! நம் உயிரினும் மேலான தமிழையும், தமிழுக்கு உரமிட்ட பாரதியையும், உயிர்ப்பித்திருக்கிறது. கதையை மிகவும் ரசித்தேன்.

    அழகான கதையை அருமையான வார்த்தைகளோடு தொகுத்து படிக்கத் தந்த சகோதரர் துரை செல்வராஜ் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்களுடன் நன்றிகளும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகையும் அன்பின் கருத்துரையும்
      பாராட்டுகளும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. கதையைப் படித்தபோது என் வாழ்க்கையில் நிகழ்ந்தவைகள் மனதில் வந்து போனது. என் அப்பாவை நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.அவர் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர் (நான் 10ம் வகுப்பு படிக்கும் வரை) என்பதால் அவர் எனக்கு அந்த நல் நெறியைக் கற்றுத் தந்திருக்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. கல்பனாவை மருத்துவராக்கிய அந்த கடைசிநொடி படிக்கும்போது உடல் சிலிர்த்து விட்டது ஜி.

    அற்புதமான கதை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  9. அழகான கருத்து. அதை எழுத்தில் வடித்த விதமும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. >>> அழகான கருத்து. அதை எழுத்தில் வடித்த விதமும் அழகு.. <<<

      அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
  10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  11. கிராமத்து பள்ளியை நிலைக்களனாக கொண்டு, துரை சாருக்கே உரிய எளிய, அழகிய நடையில் அருமையான கதை.  //ஒரு விநாடி  கொடுத்தாலும் போதுமே!..
    சற்று முன் என்னை உற்று நோக்கிய - அந்த அன்பு முகத்தை மீண்டும் ஒருதரம் பார்த்துக் கொள்வேனே!..// இந்த வரிகளை படிக்கும் பொழுது நம் கற்பனை எங்கோ பறக்கிறது. ஆனால் அதை தறி கேட்டு ஓட விடாமல், இழுத்து வந்து, ஆசிரியர், மாணவி என்ற நிலையிலேயே நிறுத்திய மாண்புக்கு தலை வணங்குகிறோம். நன்றி.  காலை நேர கிராமத்து சூழல் போல சிலு சிலுவென்று ஒரு ஓட்டம். நீங்கள் இது போல் நிறைய எழுத அன்னை சரஸ்வதி அருள வேண்டுகிறேன்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. >>> இது போல் நிறைய எழுத அன்னை சரஸ்வதி அருள வேண்டுகிறேன்...<<<

      தங்களது பிரார்த்தனைக்கு நெஞ்சார்ந்த நன்றி...
      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. நான் லேட்டு நான் லேட்டு இன்று.

    காலையிலேயே கதையை வாசித்துவிட்டேன்...ஆனால் இந்த இணையம் தேவதைப் பக்கமே இணைய மடித்து அப்புறம் ஒரே அடியாகப் போய்டுச்சு.. இப்ப வரவும் ஓடி வந்துவிட்டேன்...

    துரை அண்ணாவின் கதை என்றாலே அஅழகான நடையில், நல்ல கருத்துடன், அருமையான மண் வாசனையுடனும் இருக்கும் என்ற எண்ணம் மனதில் பதிந்து போன ஒன்று.

    அண்ணா கதை வெகு வெகு அருமை. ரசித்தேன்..மிக மிக ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. >>> கதை வெகு வெகு அருமை. ரசித்தேன்..மிக மிக ரசித்தேன்...<<<

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
  13. அனைவருக்கும் விஜய தசமி வாழ்த்துக்கள்.
    அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் அன்பின் நல்வாழ்த்துகள்..
      அன்பின் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
  14. சாதி படுத்தும் பாடு நிறையவே அனுபவங்கள். எங்கள் வீட்டில் பார்த்ததில்லை. என் மாமாக்களும் ஆசிரியர்களே. அதிலும் மாமாக்கள் எல்லாக் குழந்தைகளையும் வீட்டிற்கு வரவழைத்து படிப்பு சொல்லிக் கொடுத்து அவர்களும் முன்னுக்கு வர வேண்டும் என்று நினைத்தவர்கள்.

    எனக்கும் என் மகனுக்கும் சில அனுபவங்கள் உண்டு. என்னை சாப்பாட்டு சமயத்தில் விலக்குவது, அப்புறம் மகன் கல்லூரியில் இருந்த போது முதலில் அவனோடு யாரும் பழகாதது அப்புறம் நாங்கள் அப்படியானவர்கள் இல்லை என்றதும் எங்கள் வீட்டில் கூட்டம் எப்பொதும் இருந்தது எல்லாம் பசுமையான நாட்கள். என் மகன் க்ளினிக் இன்டெர்ன்ஷிப் சென்ற போது அவனிடம் கேட்ட கேள்வி சாதி குறித்து...மகன் சொன்ன பதில் நான் மனித சாதி. அவன் முதுகில் அணைப்பது போன்று கை போட்டு தடவி சாதி அறிய முயல்வது போன்ற பல கசப்பான அனுபவங்கள். அப்போதுதான் தெரிந்தது எத்தனை தூரம் இது சிறிய கிராமங்களில் ஊர்களில் புரையோடிக் கிடக்கிறது பாதிக்கப்பட்ட மக்கள் அதனால்தான் இப்படி அவர்களின் அணுகுமுறை என்றெல்லாம்...ஆனால் அவர்கள் எல்லோரும் நம் அணுகுமுறை பார்த்து நண்பர்களானது மனதிற்கு இதமான ஒன்று. பல நினைவுகள் எழும்பியது துரை அண்ணா..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரங்கன்... - நீங்கள் சொல்வதைப்போல இது சுலபமானதல்ல. //முதலில் அவனோடு யாரும் பழகாதது// - எனக்கு இந்த பேதம் இல்லை என்பதற்காக நான் வெஜ் ஹோட்டலுக்குச் செல்வதோ இல்லை அசைவ உணவு சமைப்பவர்கள் வீட்டில் உண்ணுவதோ முடியாது (பிறர் வீட்டிலேயே நான் உண்ணுவதில்லை). ஆனால் இதற்குக் காரணம் நாம் வளர்ந்த முறை. அவ்வளவுதான். ஆனா, சிலர் என்ன எதிர்பார்க்கறாங்கன்னா, 'சாதி பேதம் பார்க்காதவன்' என்றால் உடனே அவங்க சாப்பிடும் எந்த உணவையும் அருவருப்பில்லாமல் (அதாவது அசூயை) மற்றவங்களும் சாப்பிடணும் என்று நினைக்கறாங்க. டிரிங்க்ஸில் கலந்துக்கணும்னு நினைக்கறாங்க. சிகரெட் புகைக்கணும்னு நினைக்கறாங்க.

      அந்த எண்ணத்தில்தான் அவங்க தவறு செய்யறாங்கன்னு தோணுது.

      உணவுப் பழக்கம், இறைப் பழக்கம் வேறு... எல்லோரிடமும் சரி சமமாகப் பழகுவது வேறுன்னு நான் நினைக்கறேன்.

      நீக்கு
    2. சகோதரி கீதா அவர்கள் சொல்வதைப் போல் எல்லாம் அறிந்ததில்லை..

      நெல்லை அவர்கள் சொல்வதைப் போல

      >>> அவங்க சாப்பிடும் எந்த உணவையும் அருவருப்பில்லாமல் (அதாவது அசூயை) மற்றவங்களும் சாப்பிடணும் என்று நினைக்கறாங்க. டிரிங்க்ஸில் கலந்துக்கணும்னு நினைக்கறாங்க. சிகரெட் புகைக்கணும்னு நினைக்கறாங்க.. <<<

      இதை வெகுவாக சந்தித்தாயிற்று..

      உணவுப் பழக்கமும் சரிசமமாகப் பழகுவதும் வேறு வேறு தான்...

      நீக்கு
  15. மிக அருமையான கதை.
    கதைக்கு எடுத்துக் கொண்ட கரு அருமையானது,
    பாரதி பாடல் அதற்கு வலு சேர்த்து விட்டது.

    கிராமத்து பள்ளிக்கூடம் கண்முன் விரிந்தது.

    //அன்றைக்குப் பாரதியின் பாட்டைப் பாடிய
    புன்னகைப் பூ வந்து கொண்டிருந்தது...

    டாக்டர் கல்பனா வந்து கொண்டிருந்தாள்...//

    சோர்வுற்ற தன்னை தூக்கி நிறுத்திய அன்புதாய் என்று கல்பனாவை " நீ நல்லா இருக்கணும் தாயீ!... " என்று வாழ்த்திய வாழ்த்து வீண்போக வில்லை. எல்லோரையும் நலம்பெற வைக்கும் மருத்துவர் ஆகி விட்டார் கல்பனா.

    அருமையான கதை வாழ்த்துக்கள்., பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  16. பாரதிபாடலுடன் அற்புதமாக கதை நகர்ந்து செல்கிறது.பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  17. அழகான, அருமையான கதை ஐயா...
    பாரதி பாடலும் அதன் பின்னே நகரும் கதையுமாய் செம...
    கலக்கிட்டீங்க...
    அருமை... அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  18. //ஒரு விநாடி கொடுத்தாலும் போதுமே!..
    சற்று முன் என்னை உற்று நோக்கிய - அந்த அன்பு முகத்தை
    மீண்டும் ஒருதரம் பார்த்துக் கொள்வேனே!..//

    அண்ணா ஹிஹிஹி....இந்த வரிகள் வேறொரு ஊகத்துக்குக் கொண்டு சென்றது!! ஆனால் அது மாணவி என்று அறிந்ததும் மனம் ஆஹா அருமை என்று சொன்னது....அதுவும் இறுதியில் செம முடிவு!!! அருமை அருமை!

    இடையில் பாரதியின் வரிகள் சொல்லப்பட்ட இடம் அந்த விதம் மிகவும் பொருத்தமாக அதை ஒட்டி ஆசிரியரின் மனதில் தோன்றிய அந்த சிலிர்ப்பு என்று அனைத்தையும் ரசித்தேன்...மனதில் ஆஹா அண்ணா என்னமா அழகா பொருத்தமாகச் சொல்லியிருக்கிறார் அண்ணா என்று தோன்றியது!!

    அருமை அண்ணா பாராட்டுகள், வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கீதா வருகையும் கருத்துரையும் பாராட்டுரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  19. ஆஹா மிக அருமையான கதை .கல்பனாவை மருத்துவராக கண்டதில் அந்த ஆசானுக்கு மறுபிறப்பு கிடைத்திருக்கும் .சூப்பர்ப் துரை அண்ணா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அஞ்சு என்ன ஜொள்றா?:) நான் இன்னும் கதை படிக்கேல்லையாக்கும்... அடுத்த கிழமை ஆருடைய கதையோ தெரியேல்லையே... ஏனெண்டு சொல்ல மாட்டேன்:)..

      நீக்கு
    2. ஓ!! கவரிமானின் கதையோ!!!

      அடுத்த கிழமை ஆருடைய கதையோ தெரியேல்லையே... ஏனெண்டு சொல்ல மாட்டேன்:)..// இது சொல்லுதே ஏதோ...!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
    3. >> கல்பனாவை மருத்துவராக கண்டதில் அந்த ஆசானுக்கு மறுபிறப்பு கிடைத்திருக்கும் ..<<<

      என்னே ஒரு தீர்க்க தரிசனம்!..

      அன்பின் ஏஞ்சலின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      >> நான் இன்னும் கதை படிக்கேல்லையாக்கும்....<<< க. ப. அதிரா..

      இந்த வாரக் கதையையே இன்னும் படிக்க வில்லை..
      இதற்குள் அடுத்தவாரம் பற்றிய சிந்தனையா?...

      அன்பின் க.ப.அதிராவின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      >> ஓ!! கவரிமானின் கதையோ!!! ..<<< கீதா...

      குழப்பம் தான் மிச்சம்!...

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  20. மஹாகவியின் பாடலை உபயோகித்து கதை பின்னியது பிரமாதம
    விஜயதசமி திருநாளுக்கேற்ப கல்விச்சாலை கதை.
    இடையில் 'சென்ட்ரல் கவர்ன்மெண்ட் சமாச்சாரம்' என்று ஒரு போடு போட்டு நிகழ்காலத்துக்கு இழுத்து வந்தது புன்னகைக்க வைத்தது.
    எதற்காக இந்தத் தகராறு என்று வெளிப்படச் சொல்லாமலேயே தகராறுக்கான காரணத்தை பாரதியாரின் பாடலை வைத்து யூகிக்க வைத்தது சிறப்பு. அதுவும் அவரவருக்கு என்ன தோன்றுகிறதோ அப்படியே அர்த்தப்படுத்திக் கொள்ளட்டும் என்று விட்டு விலகியது இன்னும் சிறப்பு.
    நிகழ்கால யதார்த்தங்கள் வேறாக இருக்க, கற்பனையில் தான் சந்தோஷப்பட வேண்டுமா என்று எனக்கென்னவோ முடிவில்
    ஒரு ஏமாற்றம் இருக்கத் தான் செய்தது.
    அந்த வெட்டிக் கும்பல் புது தமிழாசிரியரைத் தாக்கியிருந்தால் கதை விளைவிக்கும் எஃபக்ட் இன்னும் வாசிப்பவர் மனசில் ஆழப்பதிந்திருக்கும்.
    பதிலுக்கு கதையிலாவது மோதி மிதித்து முகத்தில் உமிழ்ந்திருக்கலாம்.
    ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் எம்ஜிஆர் பட எஃபெக்ட். :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

      ஆனாலும்
      ஏதோ சில புறம்போக்குகள் தமிழாசிரியரைத் தாக்குவதா!...

      நாகராசனின் பணி தொடர்வதே - அவர்களை மோதி மிதித்ததைப் போலத் தானே!...

      அன்பின் கருத்துரைக்கு நெஞ்சார்ந்த நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
  21. துரை அண்ணன் எப்போ நாகன் ஆனார்ர்ர்ர்?:)... நோஓஒ நான் இதை ஒத்துக்க மாட்டேன்ன்ன்ன்ன்:)... அப்படியெனில் கலா அண்ணிக்கும் பேர் மாத்தோணுமாக்கும்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா அதிரா பாவம் துரை அண்ணா..அழகான ஒரு கதை எழுதினா...அதுல கலா அண்ணியைக் கொண்டுவந்து..இப்படிக் குழப்பி விடுறீங்களே அவரை!!!!!! ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  22. அனைவருக்கும் நல்வரவும்,வணக்கமும், வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும். இந்த விஜயதசமி நன்னாளன்றாவது இனியாவது ஜாதி குறித்த மோதல்கள், மத பேதங்கள் இல்லாத நாட்டுக்காகப் பிரார்த்தித்துக்கொள்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் பிரார்த்தனையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  23. கிராமத்துப் பள்ளிக்கூடத்தை அப்படியே கண்ணெதிரே கொண்டு வந்து நிறுத்திவிட்டார் துரைத்தம்பி. எங்க மாமனார் ஊரான பரவாக்கரைப் பள்ளி கிட்டத்தட்ட இம்மாதிரியான சூழலிலேயே இருந்தது. இப்போல்லாம் கொஞ்சம் கொஞ்சம் மாற்றங்கள். ஆனால் நான் படித்த காலத்தில் எல்லாம் இவ்வளவு ஜாதி வெறி இருந்ததாகத் தெரியவில்லை. என்னுடன் படித்த மாணவிகளில் பலதரப்பட்டவர்களும் இருந்தனர். கலந்து தான் படித்தோம். யாரும் யாருடைய ஜாதியைப் பற்றியும் நினைத்தும் பார்த்ததில்லை. கேட்டுக்கொண்டதும் இல்லை. சாப்பிடும்போது மட்டும் அசைவம் சாப்பிடும் மாணவிகள் தனியாகச் சாப்பிடுவார்கள். அவ்வளவே நான் கண்ட பேதங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அக்கா அவர்களின் வருகைக்கு மகிழ்ச்சி..

      பலதரப்பட்ட பசங்களுடன் படித்த அந்தக் காலத்தில்
      எங்களுக்குள் எவ்வித பேதமும் இருந்ததில்லை...

      சாப்பிடும்போது மட்டும் அசைவம் சாப்பிடுபவர்கள் தனியாகச் சாப்பிடுவார்கள்.
      அவ்வளவு தான்..

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  24. பாரதியார் பாட்டின் மூலம் உத்வேகம் பெற்ற தலைமை ஆசிரியர், தமிழாசிரியர் நாகராஜன் ஆகியோரின் நெஞ்சு உரமும், தைரியமும் எல்லோருக்கும் வரவேண்டும். இப்போதும் ஆங்காங்கே ஒரு சில ஜாதி மோதல்கள் காதில் விழுகின்றன. அவை முற்றிலும் நீங்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருப்பினும்
      ஆங்காங்கே ஒரு சில ஜாதி மோதல்கள் காதில் விழுகின்றன. அவை முற்றிலும் நீங்க வேண்டும்.

      அனைவரது விருப்பமும் இதுவே... வாழ்க நலம்...

      நீக்கு
  25. ஒங்களுக்கு இதே வழக்கமாப் போச்சு.. அடிக்கடி என்ன இப்படிக் கிராமப் பக்கம் கொண்டுபோய் விட்டுட்டு வந்திடறீங்க. திரும்பி வர நான் படுறபாடு, எனக்குல்ல தெரியும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் இப்படித்தாங்க...

      கதைக்காக கிராமத்துக் களத்துக்குள் சென்றால்
      திரும்பி வருவதற்குத் தோன்றுவதேயில்லை...

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி...

      நீக்கு
  26. ஸ்ரீராம்ஜி மீண்டும் சில நாட்களாக வர இயலாமல் போனது. சில மரணங்கள், அதற்கான பயணங்கள்.முன்பு வேலை செய்த பாலக்காடு பள்ளியில் பழைய மாணவர்கள் குழுமி சந்திப்பு என்று சில நிகழ்வுகள்.

    இனி மீண்டும் தொடர்ந்து வாசிக்க இயலும் என்று நினைக்கிறேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  27. துரை செல்வராஜு ஐயா உங்கள் கதை மிக அருமை. முடிவு மிகவும் பிடித்தது. ஆரம்பவரிகள் யாரந்த பெண் என்று தான் தோன்றியதே தவிர மாணவி என்று தோன்றவில்லை. ஆனால் அது மாணவி என்று முடிந்த விதம் அருமை. எழுத்தின் நடையும் மிகவும் சிறப்பாக இருக்கிறது வழக்கம் போல.

    நானும் ஆசிரியன் என்பதால் மனதுள் சில மாணவ மாணவிகள் வந்து சென்றனர். ஒரு சிலர் மட்டுமே நினைவில் ஆழமாகப் பதிகின்றனர். எத்தனை ஆண்டுகளானாலும் அந்த முகம் மறப்பதில்லை.

    நான் பிறந்து வளர்ந்த ராசிங்கபுரம் கிராமத்திலும் அதன் பின், மதுரையில் கல்லூரியில் படித்த நேரத்திலும் விடுதியில் இப்படியான பிரச்சனைகள் அனுபவம் எனக்கும் நேர்ந்திருக்கிறது. நல்ல நெருங்கிய நண்பரின் தொடர்பே அப்போது விட்டுப் போய் அதன் பின் பல வருடங்கள் கழித்து முகநூல் மூலம் கிடைக்கப்பெற்றேன்.

    அருமையான கதை. வாழ்த்துகள், பாராட்டுகள் ஐயா

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆசிரியராகத் தாங்கள் வழங்கிய கருத்துரைக்கு மிக்க மகிழ்ச்சி...

      தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  28. இறையியல் கதைகளோடு நல்ல வாழ்வியல் கதையும் தருவதில் வல்லவர் துரை சார் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா...
      தங்கள் வருகையும் பாராட்டுரையும் மிக்க மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  29. ஆஹா.... மிகச் சிறப்பாக வந்திருக்கிறது இந்தக் கதை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் பாராட்டுரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  30. அடடா ...என்ன ஒரு கதை ...

    படிக்கும் போது கல்பனா கண் முன்னால் நின்று பாரதியின் பொன் வரிகளை வாசிக்கிறாள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!