சனி, 21 டிசம்பர், 2019

பெண்கள் மட்டுமே ஆட்சி செய்யும்....


1)  மனமிருந்தால் மார்க்கமுண்டு!
வீட்டில் வீணாகும் கழிவு நீரை பயன்படுத்தி, 2 ஏக்கரில் காய்கறி தோட்டம் அமைத்துள்ள, கரூர் மாவட்டம், க.பரமத்தியைச் சேர்ந்த யசோதா.2)  மாற்றம் வருமா?

".......இந்த மையத்தில், தினமும், 300 டன் கையாள முடியும். பொதுமக்கள் மற்றும் மறுசுழற்சியாளர்கள், இந்த புதிய இணையத்தில் பதிவு செய்து, தங்களிடம் உள்ள, மறுபயன்பாடு உள்ள பொருட்களை வாங்கவும், விற்பனை செய்யவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த சேவையை, இணையதளம் மற்றும் ஆண்ட்ராய்டு செயலி வாயிலாக பயன்படுத்தலாம். சேவையின் வாயிலாக, சென்னையில் உள்ள, பழைய இரும்பு, பேப்பர் வியாபாரிகள் அதிகளவில் பயனடைவர். பலருக்கு சுய வேலை வாய்ப்பு கிடைக்கும். சுற்றுச்சூழல் மற்றும் நிலம் மாசுபடுதல் தவிர்க்கப்படும்......"  இந்த சேவையின் பயன்பாட்டை துவக்கி வைத்த மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ்.
3)  பெண்கள் மட்டுமே ஆட்சி செய்யும், முதல் கிராம பஞ்சாயத்து என்ற பெருமையை, கொப்பாவளிபெற்றுள்ளது.இந்த கிராம பஞ்சாயத்தில் உள்ள, ஆறு வார்டுகளில், தனி வார்டு எதுவும் இல்லை. இதையடுத்து, கிராம மக்களே, இடஒதுக்கீடு கொடுக்க முடிவு செய்து, பொது வார்டான, ஆறாவது வார்டில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சாந்தியை, போட்டியின்றி தேர்வு செய்துள்ளனர்....
=====================================================================================================================


பேரருளாளனை ஆண்ட கோதை
ரமா ஸ்ரீனிவாசன்

“கோதை ஆண்டாள், தமிழை ஆண்டாள்,
கோபாலன் இல்லாமல் கல்யாணம் வேண்டாள்”சினிமா பாடலானாலும், ஆண்டாளின் அழுத்தமான மன உறுதிக்கு ஒரு
எடுத்துக்காட்டாகும் இந்த வரிகள்.

உங்களுக்கு ஒன்று தெரியுமா ?  நம் வைஷ்ணவ புலவர்களான
ஆழ்வார்கள் அனைவரிலும் ஒரே பெண் புலவர் என்ற பெருமையை
உடையவர்    நம் ஆண்டாள் மட்டுமே.  நம் 12 ஆழ்வார்களும் 63
நாயன்மார்களும் சேர்ந்து நம் தென் இந்தியாவில் ஒரு “பக்தி புரட்சியை”
உருவாக்க பெரும் பொறுப்பேற்றார்கள் என்று கூறினால் அது மிகை
ஆகாது. முக்தி அடைவதின் உண்மை நிலை நிதர்சனமான
பக்தியாலேயே அன்றி சடங்குகள் மற்றும் சம்ப்ரதாயங்கள் வழியே அன்று என்பதை ஆணித்தரமாக வெளிச்சம் போட்டு காண்பித்தவர்கள் நம் ஆழ்வார்களே. இதன் வழியாக அவர்கள் தமிழ் இலக்கியத்திற்கு ஒரு
பெரிய பொக்கிஷத்தை அளித்திருக்கிரார்கள்.

இந்த எழுத்தோவியம் மேந்தகு ஆண்டாளுக்கு நான் சமர்ப்பிக்கும்
ஒரு சிறிய காணிக்கையாகும்.

நம் அருமை மிகு தாயார் ஆண்டாள் இல்லாமல் நம் தமிழ் மாதம்
“மார்கழி”யை நினைத்துக்கூட பார்க்க முடியாது. இது சுருக்கமாக
சொல்லப்பட்ட நம் தாயார் ஆண்டாளின் கதையாகும்.

தென் இந்தியாவிலே ஸ்ரீவல்லிப்புத்தூர் என்னும் ஊரில் விஷ்ணு
சித்தர் என்னும் ஒரு பெருமாள் பக்தர் வாழ்ந்து வந்தார். நிதமும் இவர்
பல விதமான மலர்களை ஒன்று சேர்த்து அழகு மிகு மாலையாக
தொடுத்து அன்புடன் பெருமாளுக்கு சார்த்தி வந்தார். வடபத்ரசாயீ
என்னும் மற்றொரு பெயர் கொண்ட பெருமாள் தினமும் இம்மாலையை
சூடிக்கொண்டு அழகு பார்த்து வந்தார்.

ஒரு நாள், மதுரையின் மன்னர், வல்லப தேவ பாண்டியா தன்
ஆன்மீக சந்தேகங்களுடன் குழம்பிக்கொண்டிருக்கும்போது, கடவுள்
விஷ்ணு சித்தரின் கனவில் வந்து, மன்னரின் சந்தேகங்களை தீர்க்கச்
சொன்னார். மன்னரின் அரசவைக்கு சென்ற விஷ்ணு சித்தர் அங்கு
மன்னரின் எல்லா கேள்விகளுக்கும் பதில் கொடுத்து, பெருத்த சன்மாம்
பெற்றார். அவரால் இந்த நிகழ்வுகள் எதையும் நம்ப முடியவில்லை.
ஆயினும், வந்த சன்மாத்தை கோவிலை நிர்மாணிப்பதற்கும் கோவிலை புதுப்பிப்பதற்கும் பயன் படுத்தினார்.

ஒரு நாள், விஷ்ணு சித்தர் மலர்கள் பறிக்கும்போது, தோட்டத்தில்
ஓர் அழகிய பெண் குழந்தையை ஒரு துளசிச் செடியருகில் கண்டெடுத்தார்.

அவர் அக்குழந்தையை கடவுளின் பரிசாக ஏற்று அவளுக்கு “கோதை”
என்று பெயரிட்டு, அவளுக்கு ஓயாது ராமர் கதைகளும் கண்ணன்
கதைகளும் சொல்லி வளர்த்து வந்தார்.

ஒரு நாள், கோதையின் தந்தை மலர் மாலையைத் தொடுத்து
வைத்துவிட்டு வெளியே சென்றிருந்தார். அப்போது அந்த மலர்
மாலையை பார்த்த கோதை அதை எடுத்து சூடிக்கொள்ள ஆசை பட்டாள்.
அப்போது அவளுக்கு ஐந்து வயது இருக்கும். ஒன்றும் அறியாத பருவம்.

ஒரு நொடியில், அந்த மாலையை எடுத்து சூடிக்கொண்டு கண்ணாடியில்
அழகு பார்த்துக்கொண்டாள். அப்பா வரும் அரவம் கேட்டவுடன் மாலயை
கழற்றி வைத்துவிட்டு நகர்ந்தாள். விஷ்ணு சித்தரும் அறியாமல்
மாலையை பெருமாளுக்கு சார்த்த எடுத்து சென்றார். சூட்டியும் விட்டார்.
இந்த கோதையின் விளையாட்டு தினம் தொடர்ந்தது. பெருமாளும்
கோதை சூடிக்கொடுத்த மாலையைதான் தினமும் சூடிக் கொண்டார்.
ஒரு நாள் நாரயணன் உலகுக்கு ஆண்டாளின் பக்தியை வெளிச்சம்
போட்டு காட்ட முடிவெடுத்தார். அன்று, விஷ்ணு சித்தர் அளித்த
மாலையில் ஒரு இழை முடி ஒட்டிக்கொண்டிருந்ததைப் பார்த்த பட்டர்
அவரை கோபித்துக்கொண்டார். மாலையை திருப்பி அவரிடமே
கொடுத்தார்.

மனச்சுமையுடனும் மனவலியுடனும் திரும்பிய விஷ்ணு சித்தர்
அன்று இரவு முழுவதும் தூங்காமல் குழம்பிப் போனார்.

அடுத்த நாள் காலையில் பூக்களை சேகரித்து மாலை கட்டியவர்
வெளியே சென்று விட்டு உடனே வீடு திரும்பிய நேரத்தில் கோதை
மாலையும் கழுத்துமாக நிற்பதை பார்த்து விட்டார். 

“அபச்சாரம்” என்று அலறிய விஷ்ணு சித்தர் பிதற்ற ஆரம்பித்து விட்டார். இதை பார்த்த குழந்தை அழ ஆரம்பித்து விட்டது. விஷ்ணு சித்தர் அந்த மாலையை தூக்கி எறிந்து விட்டு வேறு புது மாலை ஒன்று தொடுத்து மீண்டும் கோவிலுக்கு எடுத்துச் சென்றார்.

அன்று இரவு பெருமாள் விஷ்ணு சித்தரின் கனவில் வந்தார்.
விஷ்ணு சித்தரை பார்த்து “நான் இனி கோதை அணிந்த மாலையைதான்
அணிவேன். ஏனெனில், அந்த மாலையில் அவளின் பக்தியின் வாசம்
வியிருக்கிது. நான் சொல்வது போல நட” என்றார்.

திடுக்கிட்டு எழுந்த விஷ்ணு சித்தருக்கு அப்போது புரிந்தது தன்
மகள் ஒரு தெய்வீகப் பிறவி என்று. அடுத்த நாள் முதல், பெருமாளின்
மாலை கோதை அணிந்து கொடுத்த மாலையே ஆகும். அன்றுமுதல்
அவள் பெருமாளை “ஆண்டாள்” என்றும் “சூடிக் கொடுத்த சுடர்கொடி”
என்றும் போற்றப் பட்டாள்.

ஆண்டாள் தன் கவனாக கண்ணணையே வரிக்க நினைத்து தவம்
இருந்தாள். மார்கழி மாதம் முதல் நாள் முதல், விடிகாலையில் எழுந்து,
தன் தோழிகளுடன் நீராடிய பின், கோதையே இயற்றிய “திருப்பாவை” 30
பாட்டையும் பாடியவாறு தெருக்கள் யாவும் சென்று உறங்கும் தோழிகளை எழுப்பி கூட்டி சென்றார்.

விஷ்ணு சித்தருக்கு தன் மகளின் கல்யாண கவலை அதிகரித்துக்
கொண்டே இருந்தது.  

ஒரு நாள், மறுபடியும் ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் விஷ்ணு
சித்தரின் கனவில் வந்தார். கோதையை மணமகளாக அலங்கரித்து
ஸ்ரீரங்கம் அழைத்து வருமாறு விஷ்ணு சித்தருக்கு கட்டளை இட்டார்.
தான் அங்கு ஆண்டாளை தன் மனைவியாக ஏற்பதாகவும் உரைத்தார்.
விஷ்ணு சித்தர் இந் நற்செய்தியை மன்னருக்கு ப்ரத்யேகமாக
கூறியவுடன் மன்னர் கோதையை ஒரு பல்லக்கில் அழைத்து வர
ஏற்பாடுகள் செய்தார். சொல்லமுடியாத அளவு சீர்களும் பரிசுகளும்
கோதைக்கும் எம்பெருமானுக்கும் தயாராயின. மற்றபடி, யானைகளும்
குதிரைகளும் புடைசூழ ஊர்வம் ஏற்பாடாயிற்று.

மன மகிழ்ச்சியுடன் அனைத்து மக்களும் திரண்டு கோதையையும்
விஷ்ணு சித்தரையும் ஸ்ரீரங்கத்திற்கு ஊர்வலமாக கூட்டி சென்றனர்.
ஊர்வலம் கோவிலை அடைந்ததுமே ஆண்டாள் பல்லக்கில்
இருந்து இறங்கி, மக்களும் தந்தையும் பின்வர கர்ப்பக்ரஹத்தை நோக்கி
நடந்தாள். தன் பேரின்ப பெருமாளை கண்டவுடன், வேகமாக ள்ளே
சென்றாள். 

திடீரென்று ஒரு ஒளி பிழம்பு தெறிக்க, கோதை எம்பெருமாளுடன் ஒன்றெனக் கலந்தாள்.

கூடியிருந்த அனைவரும் மகிழ்ச்சியான அதிர்ச்சியில் மூழ்கினர்.  விஷ்ணு சித்தர் தன் மகளை பிரிந்த துக்கத்தில் அழுதாலும், கோதை பேரருளாளனை அடைந்து அன்னாரது துணைவியார் ஆனதில் மிக்க மகிழ்ச்சி அடைந்து பேரானந்தம் அடைந்தார்.

இவ்வாறாக ஆண்டாள் இறைவி ஆகினாள். 

சுவையான குறுந்தகவல்கள் :

1. கோதை இறைவனை அடையும்போது 15 வயதே ஆனவர்.

2. திருப்பாவையைத் தவி ஆண்டாள் 143 செய்யுள்களை கொண்ட
“நாச்சியார் திருமொழி” என்ற பாடல் தொகுப்பையும் இயற்றி
உள்ளார்.

3. விஷ்ணு சித்தர் “பெரியாழ்வார்” என்றும் அழைக்க பட்டார். அவர்
பேரருளாளன் நீண்ட ஆயுள் பெற வாழ்த்தினார். ஏனெனில்,
பேரருளாளன் அவரது மாப்பிள்ளை ஆவார்.

4. இன்னொரு ஸ்வாரஸ்யமான தகவல் என்னவென்றால், நம் தமிழக
அரசின் சின்னமே ஸ்ரீவில்லிப்புத்தூரின் ராஜ கோபுரம்தான்.

55 கருத்துகள்:

 1. ஈதல் இசை பட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு..

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
 2. கோதை ஆண்டாள்..
  தமிழை ஆண்டாள்..
  கோபாலன் இல்லாமல்
  கல்யாணம் வேண்டாள்....

  அவர் கவியரசர் அல்லவா..
  தன் வழியில் சிறப்பித்தார்
  தமிழ்ச் செல்வியை..

  ஆண்டாள் வரலாறு அக்கார அடிசில் போல...
  அவளைப் பற்றி நினைப்பது அமிர்தக் கடலில் திளைப்பது போல..

  சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்
  திருவடிகள் போற்றி..

  பதிலளிநீக்கு
 3. ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரைப் பற்றி சிந்திப்பதற்கும் வந்திப்பதற்கும் இளங்காலைப் பொழுதில் நல்வாய்ப்பினை நல்கிய ஸ்ரீமதி ரமா ஸ்ரீ நிவாஸன் அவர்களுக்கும் அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருமதி ரமா ஸ்ரீனி பதில் அளிப்பார் என்று நம்புகிறேன்.  

   நீக்கு
 4. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை பரிபூரணமாக பிரார்த்திக்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா...   காலை வணக்கம்.   நன்றி.

   நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

   இன்று என் பதிவாக ஒரு சமையல் பதிவு. தாங்கள் வந்து பார்க்கவில்லையே! நேரம் இருக்கும் போது வந்து பார்த்து கருத்திட்டால் மகிழ்வடைவேன். நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 5. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், வாழ்த்துகள், நலவரவு, பிரார்த்தனைகள்.ஆண்டாள் கதையைச் சொல்லி இருக்கும் இவங்க தான் "ரேவதி" சொன்ன ரமாவா? இவங்களைப் பற்றி நிறையச் சொன்னார். வாழ்த்துகள். தெரிந்த கதையானாலும் அதைச் சுவைபடச் சொன்னதில் அவர் எழுத்துத் திறமை பளிச்சிடுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா அக்கா...   வணக்கம், நல்வரவு, நன்றி. 
     
   //இவங்க தான் "ரேவதி" சொன்ன ரமாவா? இவங்களைப் பற்றி நிறையச் சொன்னார். //

   ஆம், அவரேதான் இவர்!  உற்சாகப் பட்டாசு!

   நீக்கு
  2. நீங்க, சுஜா, பானுமதி, எல்லோருமாகக் கலகலப்புடன் பேசியதில் தன் மனம் ரொம்பவே நிறைவாக இருந்தது என்றும் சொன்னார். பானுமதி தனியாகவே வந்து தனியாகவே கிளம்பியதைப் பற்றியும் ஆச்சரியப்பட்டார். என்ன இருந்தாலும் அவங்க எங்களை விடச் சின்னவர் இல்லையா? எனக்கோ, ரேவதிக்கோ துணை இல்லாமல் போக இயலாது! :)))))

   நீக்கு
  3. பானு அக்கா சாதாரணமாக தனது டூ வீலரில் வந்து விடுவார்.  அது பெங்களுருவில் இருப்பதால் மற்ற போக்குவரத்து வசதியை நம்ப வேண்டியிருந்தது அவருக்கு.   அவர், கீதா ரெங்கன் எல்லாம் வாகனம் வைத்திருப்பவர்கள்.  

   நீக்கு
  4. இந்த விஷயத்தில் கீதா ரங்கன் என்னை விட பல படிகள் மேல். பெங்களூரில் நான் இருப்பது ஒரு கோடி, அவர் இருப்பது மறு கோடி. இருந்தாலும் இரண்டு பஸ், பிறகு ஆட்டோ என்று மாறி மாறி பயணித்து என் வீட்டிற்கு மூன்று முறை வந்திருக்கிறார்.

   நீக்கு
 6. முதல் செய்தியை உங்களுடைய முகநூல் பக்கத்தில் பார்த்திருக்கேன். 3 ஆவது தெரியும்! ஏற்கெனவே படிச்சேனோ? இரண்டாவது புதுசு. அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. ரமாவின் ஆண்டாள் சரிதம் சுருக்கமாக இருந்தாலும் நிறைவாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 8. அனைத்து செய்திகளும் அருமை... அனைவருக்கும் பாராட்டுகள்... வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் சகோதரரே

  இன்றைய பாஸிடிவ் செய்திகள் வழக்கம் போல அனைத்தும் அருமையாக உள்ளது.

  ஸ்ரீ கோதையாண்டாளை பற்றிய சரிதம் சுவைபட வாசித்தேன். புதிதாக படிப்பது போல அவ்வளவு அருமையான எழுத்துக்கள். இதை எழுதிய சகோதரி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்களுக்கும், பகிர்ந்த தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி.  திருமதி ரமா ஸ்ரீனியும்  பதில் அளிப்பார் என்று நம்புகிறேன்.

   நீக்கு
 10. //ஒரு நாள், மதுரையின் மன்னர், வல்லப தேவ பாண்டியா தன்
  ஆன்மீக சந்தேகங்களுடன் குழம்பிக்கொண்டிருக்கும்போது,//
  பாண்டிய ராஜாவின் அரண்மனையின் வழியே ஒரு வட நாட்டு பைராகி,"இரவுக்கு வேண்டிய உணவை பகலிலேயே தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும், மழை காலத்திற்கு தேவையான உணவை வெயில் காலத்திலேயே தேடிக்கொள்ள வேண்டும், முதுமைக்கு தேவையான செல்வத்தை இளமையிலேயே சேர்த்து வைக்க வேண்டும், மறுமைக்குத் தேவையான புண்ணியத்தை இந்த பிறவியிலேயே தேடிக்கொள்ள வேண்டும்" என்று பாடாக்கொண்டு செல்வதை கேட்கிறார். மற்ற எல்லா விஷயங்களும் புரிந்தாலும் கடைசியாக,சொன்ன மறுமைக்கு வேண்டிய புண்ணியத்தை இம்மையில் எப்படித்தேடுவது? என்று புரியாத மன்னன் அதை யாராவலாவது தெளிவு படுத்த முடியுமா? என்று கேட்க பெரியாழ்வார் அவனுடைய சந்தேகத்தை தீர்த்தார்.

  பதிலளிநீக்கு
 11. ஆண்டாள் புராணம் அறிந்தேன் நன்று.

  பதிலளிநீக்கு
 12. எழுத்து பிழைகளை மன்னிக்கவும்

  பதிலளிநீக்கு
 13. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கோமதி அக்கா.    வாங்க... கைக்காயம் தேவலாமா?

   நீக்கு
  2. வணக்கம் சகோதரி

   தங்கள் உடல் நலத்திற்கு என்ன பிரச்சினை? கையில் காயம் பட்டுள்ளதா? இப்போது எப்படி உள்ளது? தாங்கள் உடல் நலத்தை கவனித்துக் கொள்ளவும். பூரண குணமடைய வேண்டி நானும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

   அன்புடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 14. பாஸிட்டிவ் செய்திகள் மூன்றும் அருமை.
  வாழ்த்துக்கள் எல்லோருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கை காயம் ஆறி வருகிறது.
   நன்றி ஸ்ரீராம், நன்றி கமலாஹரிஹரன்.

   உங்கள் எல்லோர் அன்பு விசாரிப்பில் சரியாகி விட்டது.
   பார்த்துக் கொள்கிறேன் உடல் நலத்தை.

   நீக்கு
 15. ரமா அவர்களின் ஆண்டாள் வரலாறு அருமை.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனைவருக்கும் எனது இனிய காலை வணக்கங்கள்.  எல்லோருடைய பாராட்டுக்களுக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.  ஆண்டாளை நான் ஒரு தெய்வப்பிறவியாகவே பார்க்கவில்லை.  தான் நினைத்த காரியத்தை முழு மூச்சுடன் நடத்தி காட்டிய ஒரு சுய சிந்தனையும் சுய நம்பிக்கையும் உள்ளவராகவே பார்க்கிறேன்.  அதுவும் அக்காலத்து பெண்.  "திருவாடி பூரத்தில் ஜகத்துதித்தாள் வாழியேதிருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே........
   ஆண்டாள் திருவடிகளே சரணம்."

   நீக்கு
  2. வாங்க ரமா ஸ்ரீனிவாசன்.    பெயருடன் சீக்கிரம் வருவீர்கள் என்று நம்புகிறேன், வேண்டுகிறேன்!  நம் அரட்டையிலும் இன்னும் கலந்து கொள்வீர்கள் என்றும் நினைக்கிறேன்.

   நீக்கு
 16. அனைத்து பெண்கள் ஊராட்சி மன்றம் என்பது வரவேற்கத்தக்கது தான் ஆனால் உண்மையிலேயே அந்த பெண்கள் சுதந்திரமாக செயல்பட அவருடைய வீட்டில் உள்ள கணவன்மார்கள் அனுமதிப்பார்களா என்பது சந்தேகம்தான். எங்கள் பகுதியிலும் நகராட்சி வார்டு உறுப்பினராக ஒரு பெண் தான் இருந்தார்.ஆனால் அவருடைய கணவரின் அட்டூழியங்கள் தாங்கமுடியாமல் இருந்தது . அவர் கணவராலேயே அவர் அடுத்த தேர்தலில் தோற்றுப் போனார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜோஸப் ஸார்.   லல்லு போல லொள்ளு ஆகாது என்று நம்புவோம்.  இங்கு அந்தக் கணவர் ரொம்பவே நல்ல பெயர் எடுத்திருக்கிறார் என்றும் செய்தியில் இருக்கிறது.

   நீக்கு
 17. அன்பின் நட்புகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  சென்னையின் மறுசுழற்சி ஏற்பாடு செய்தி வரவேற்கத்தக்கது.

  பெண்களால் அமைக்கப்
  பட்ட பஞ்சாயத்து வளம் பெறட்டும்.வாழ்த்துகள்.

  ரமா ஸ்ரீனிவாசனின்
  தெளிவான எழுத்து மிக அழகு.
  மார்கழிக்கு வேண்டிய பதிவு.

  பெருமாளுக்கே பல்லாண்டு பாடியதால் அவர் பெரியாழ்வார்.
  ஒரு குழந்தையிடம் தந்தைக்கு,தாய்க்கு உள்ள
  பாசத்தைக் காட்டி,கண்ணெதிரே தோன்றிய
  பெருமாளுக்கு கண்ணேச்சில் படக்கூடாது என்று
  பாசுரங்கள் சொன்னது இன்றும் கோயில்களில் சொல்லப்
  படுவது வழக்கம்.
  ரமாவுக்கு மனம் நிறை வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா...   பாசிட்டீவ்செய்திகளில் இடம்பெற்றவர்களை வாழ்த்துவோம்.
   மேலதிகத் தகவல்களுக்கு நன்றி. 

   நீக்கு
 18. இன்று என்ன பெண்கள் தினமா? பாஸிட்டிவ் செய்திகளில் பெண்கள். ஆண்டாள் வரலாறு...! நன்றி.

  பதிலளிநீக்கு
 19. //விஷ்ணு சித்தர் “பெரியாழ்வார்” என்றும் அழைக்க பட்டார். அவர்
  பேரருளாளன் நீண்ட ஆயுள் பெற வாழ்த்தினார். ஏனெனில்,
  பேரருளாளன் அவரது மாப்பிள்ளை ஆவார்.// பேரருளாளன் அவருக்கு மாப்பிள்ளை ஆவதற்கு முன்பாகவே அவருக்கு ஆழ்வார் பல்லாண்டு பாடி விட்டார் இல்லையா? வல்லி அக்கா நன்கு விளக்கியிருக்கிறார்.

  பதிலளிநீக்கு
 20. போற்றுதலுக்கு உரியவர்கள்
  போற்றுவோம்

  பதிலளிநீக்கு
 21. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 22. //நம் வைஷ்ணவ புலவர்களான
  ஆழ்வார்கள் அனைவரிலும் ஒரே பெண் புலவர் என்ற பெருமையை
  உடையவர் நம் ஆண்டாள் மட்டுமே. நம் 12 ஆழ்வார்களும் 63
  நாயன்மார்களும் சேர்ந்து நம் தென் இந்தியாவில் ஒரு “பக்தி புரட்சியை” உருவாக்க பெரும் பொறுப்பேற்றார்கள் என்று கூறினால் அது மிகை ஆகாது. //

  எதற்கு இத்தனை 'நம்'கள்?.. 'நம்'கள் விசாலமான நாம்கள் ஆவதற்கு இந்த 'நம்'கள் நிச்சயமாக உதவாது.

  பதிலளிநீக்கு
 23. பல்சுவைச்செய்திகள் வழக்கம்போல சிறப்பு. ஆண்டாளைப் பற்றிய செய்திகள் அருமை.

  பதிலளிநீக்கு
 24. கழிவுநீரில் தோட்டம் நல்ல முயற்சி பாராட்டுகள்.மார்கழி ஆண்டாள் அருமை.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!