செவ்வாய், 24 டிசம்பர், 2019

கேட்டு வாங்கிப் போடும் கதை :  கூடா நட்பு - T B R ஜோஸப் கூடா நட்பு (நிறைவுப்பகுதி)
டி பி ஆர் ஜோஸப் 


வங்கி மேலாளருடைய அறைக் கதவைத் திறந்துக்கொண்டு நுழைந்த பெண் அதிகாரி, ‘அந்த கார்டுல மறுபடியும் ரெண்டு அட்டெம்ப்ட் நடந்துருக்கு மேடம்... அதுல ஒன்னு மெர்ச்சண்ட் சைட்ல நடந்துருக்கு....’

மேலாளர் இது எதிர்பார்த்ததுதான என்பது போல் அதிகாரியை பார்த்தார். ’நா எதிர்பார்த்ததுதான்... அந்தாள் விவரம் இல்லாதவனா இருப்பான் போலருக்கு... மெர்ச்சண்ட் சைட்ல யூஸ் பண்ணது ஒக்கே ஆனா ஏடிஎம்ல பெர் டே லிமிட் முடிஞ்சிருச்சிங்கறது கூட அந்தாளுக்கு தெரியலையே? நம்ம பேங்க் மாதிரி வேற எந்த பேங்கும் பெர் டே அம்பதாயிரம் வித்ட்றாயல் அலவ் பண்றதில்லையே...’

‘ஆமாம் மேடம்... அதனால நாம ஏதாச்சும் பண்ணணும் மேடம்... அத்தோட ஏடிஎம் செண்டர்ல அவங்க சீனியர்க்கு எஸ்கலேட் செஞ்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன்... அப்படித்தான் எங்கிட்ட பேசினவர் சொன்னார்..’

’சரி... நீங்க ராமகிருஷ்ணன் சாரையும் கூப்டுங்க.. அவர் கிட்டயும் டிஸ்கஸ் பண்ணிட்டு ஏதாச்சும் செய்யணும்னா செய்யலாம்...’

பெண் அதிகாரி வெளியில் சென்று அந்த கிளையில் இருந்த மற்ற அதிகாரியையும் அழைத்துவந்தார். அவர் பணியிலிருந்து ஓய்வு பெற இன்னும் இரண்டு மாதங்களே இருந்தன. சுமார் முப்பது வருட அனுபவமும் இருந்ததால் அவரிடம் ஆலோசனை கேட்காமல் நாற்பது வயதும் கூட நிரம்பாத மேலாளர் முக்கிய முடிவுகளை எடுப்பதில்லை. 

அவர் வந்து இருக்கையில் அமர்ந்ததும் சற்று முன்பு பெண் அதிகாரி கூறியதை விவரித்து விட்டு ‘சொல்லுங்க சார் இப்ப என்ன பண்ணலாம்?’ என்றார்.

அவர் சிறிது நேரம் ஆலோசித்துவிட்டு கூறியது, ‘நம்ம ரீஜனல் ஆஃபீசுக்கு ஃபோன் பண்ணி விஷயத்த சொல்லலாம்... அவங்க பெர்மிட் பண்ணா போலீஸ் கம்ப்ளெய்ண்ட் குடுக்கலாம்... நம்ம ஏரியா எஸ்.ஐ. கூட நம்ம கஸ்டமர்தான்... ஆனா அவங்க ஒரு ரிட்டன் கம்ப்ளெய்ண்ட் குடுத்தாத்தான் இன்வெஸ்டிகேஷன் பண்ணுவாங்க....ஆனா அதுக்கு நம்மக்கிட்ட கஸ்டமரோட ரிட்டன் கம்ப்ளெய்ண்ட் வேணும்... அதனால இப்போதைக்கி எதுவும் செய்யாம இருக்கறதுதான் பெட்டர்னு நினைக்கிறேன்...’

‘நா அவங்க நம்பருக்கு ஃபோன் பண்ண சொன்னேனே சார்?’ என்றா மேலாளர்.

‘ரிங் போய்ட்டே இருக்கு ரெஸ்பான்ஸ் இல்லை..... ரெண்டு மூணு தரம் கூப்ட்டுட்டேன்... வேணும்னா மறுபடியும் ட்ரை பண்றேன்... அவங்க சொல்றதயும் கேட்டுட்டு மேற்கொண்டு செய்யவேண்டியத பத்தி டிசைட் பண்லாம்..’

‘ஆனா சார்.... இத ஏன் ஒடனே எங்களுக்கு ரிப்போர்ட் பண்லேன்னு ஆரெம் (RM) கேட்டா?’

‘கஸ்டமர்ஸ் ரிட்டன் கம்ப்ளெய்ண்ட் எதுவும் இதுவரைக்கும் குடுக்கலைன்னு சொல்லலாம்.... அந்த மேடம் இங்க வந்தப்போ வீட்ல டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்றேன்னுதான சொன்னாங்க? I think we will have to wait till they respond.'

மேலாளர் தன் எதிரில் நின்றிருந்த பெண் அதிகாரியை பார்த்தார். ‘Do you have anything to say?'

'இல்ல மேடம்...சார் சொல்றா மாதிரியே செய்யலாம்.’

‘சரி...’ என்ற மேலாளர் ராமகிருஷ்ணனை பார்த்தார். ‘இங்கருந்தே அந்த ஃபோனுக்கு கூப்டுங்களேன் சார்... கனெக்‌ஷன் கிடைச்சதும் ஸ்பீக்கர்ல போட்டுட்டு பேசுங்க.... ஏதாச்சும் ஏடாகூடமா பேசினா நா ரெஸ்பாண்ட் பண்ணிக்கறேன்.’

ராமகிருஷ்ணன் தான் குறித்து வைத்திருந்த எண்ணிற்கு டயல் செய்ய ஒரு சில நொடிகளுக்குப் பிறகு எதிர்முனையில் இருந்து ‘ஹலோ’
என்ற பெண் குரல் கேட்டது. 

ராமகிருஷ்ணன் ‘இது இங்க வந்திருந்த லேடி மாதிரி தான் தெரியுது’ என்று ஒலி எழுப்பாமல் உதடுகளால் பேசினார். மேலாளரும் பெண் அதிகாரியும் ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தனர். ராமகிருஷ்ணன் செல்பேசியில் தொடர்ந்தார்..’மேடம் நாங்க இங்க பேங்க்லருந்து பேசறோம்’ 

‘ஓ....சொல்லுங்க.... நாந்தான் டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்றேன்னு சொன்னேனே?’

‘இல்ல மேடம்....ஒங்க கார்ட வச்சிக்கிட்டிருக்கறவரு மறுபடியும் மறுபடியும் வித்ட்றா பண்ண ட்ரை பண்ணிக்கிட்டே இருக்கார்.... அதான் கூப்ட்டோம்..

‘அந்த கார்டதான் என் பையன் ப்ளாக் பண்ணிட்டேன்னு சொன்னானே?’ 

அறையிலிருந்த மூன்று அதிகாரிகளும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். ’.அப்போ நாங்க அனுப்புன வெல்கம் கிட் ஒங்க சன் கிட்டதான் டெலிவிரி ஆயிருக்கு.... அப்படித்தான மேடம்?’ என்றார் ராமகிருஸ்ணன் சற்று அதிகாரத்துடன்..

‘இ.... இல்ல சார்.... அத வாங்கினது என் சன் இல்ல.... அவனோட கூட படிக்கறவன்... நா வேலைக்கி போயிருந்த நேரத்துல வீட்ல அவனுங்க ரெண்டு பேரும் தான் இருந்துருக்காங்க...அந்த பையந்தான் கையெழுத்துப் போட்டு வாங்கியிருக்கான்.... அதனாலதான் டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்றேன்னு சொன்னேன்.’

உடனே மேலாளர் இடைமறித்தார். ‘ஆனா மேடம் அந்த கையெழுத்த பாத்துட்டும் அது யார்னு தெரியாத மாதிரி ஷவுட் பண்ணீங்களே? அதெப்படி?’

மேலாளரின் குரலில் இருந்த கோபம் எதிர்முனையிலிருந்த பத்மாவை சிந்திக்க வைத்தது. வேணாம்....நாமதான் இறங்கிப் போவணும்... என்று தீர்மானித்தாள்.

‘சாரி மேடம்... தப்புத்தான்... அப்ப இருந்த மைண்ட்செட்ல எமோஷனல் ஆய்ட்டேன்.... இப்போ நோ இஷ்யூ மேடம்... we have recovered the money from that boy....அதனால இந்த விஷயத்த டிராப் பண்ணிறலாம்....we don't intend to pursue this matter.... OK ங்களா?’

ராமகிருஷ்ணன் சரி விட்றுவோம் என்பதுபோல் சைகை காட்ட மேலாளரும் சரி என்பதுபோல் தலையை அசைத்தார். 

‘ஓக்கே மேடம்... ஒங்களுக்கு கம்ப்ளெய்ண்ட் எதுவும் இல்லன்னா.... we will drop the matter....ஆனா ஒண்ணு அந்த கார்ட அந்த பையன் கிட்டருந்து ரிக்கவர் பண்ணிட்டா நல்லது.... அவர் மறுபடியும் எங்கயாச்சும் யூஸ் பண்ணா we will go to the Police... OKவா?’

‘இல்ல... இல்ல... அப்படி எதுவும் நடக்காது.... அத நா பாத்துக்கறேன்...extremely sorry for the inconvenience caused to you...வச்சிடறேன்.’

இணைப்பு துண்டிக்கப்பட ராமகிருஷ்ணன் மேலாளரை பார்த்தார். ‘பாத்தீங்களா? இந்த மாதிரி கேஸ்ங்கள நா நிறைய பாத்துருக்கேன்.... எந்த பேரன்ட்டும் அவங்க பசங்கள விட்டுக்கொடுக்க மாட்டாங்க... இந்த விஷய்த்துல அவங்களோட சன் நிச்சயம் சம்மந்தபபட்டுருப்பார்...’

‘கரெக்ட். . அது நாம காட்டுன குரியர் ரெக்கார்ட பாத்துட்டு அவங்க முகம் போன போக்குலருந்தே தெரிஞ்சிக்க முடிஞ்சது... சன்னோட ஃப்ரெண்டுங்கறது கூட பொய்யா இருக்கலாம்...’ என்று பதிலளித்த மேலாளர் எழுந்து நின்றார். ‘நல்ல நேரத்துல கரெக்டான அட்வைஸ் குடுத்தீங்க சார்... ’

‘எல்லாம் அனுபவம்தான்... இன்னும் நீங்க நிறைய பாக்க போறீங்க.... எதையும் ஆறப் போடறது பெட்டர்... எல்லா விஷயத்துக்கும் ஒரு தீர்வு தன்னாலயே கிடைச்சிரும்....’

அவர் அறையிலிருந்து வெளியேற மேலாளர் தன் எதிரில் நின்றிருந்த பெண் அதிகாரியை பார்த்தார்... ‘சார் சொல்றது ரொம்ப சரி.... experience counts ...இல்ல..?’

‘யெஸ் மேடம்... நா கூட கொஞ்ச நேரத்துல டென்ஷனாய்ட்டேன்....’

மேலாளர் சிரித்தார்...’நீங்க மட்டுமா நானுந்தான்.... சரி... போயி ரிலாக்ஸா மத்த வேலைய பாருங்க... RM கூப்ட்டா நா பாத்துக்கறேன்...’

*********

வங்கியுடன் இணைப்பில் இருக்கும்போதே தன் செல்பேசிக்கு வேறொரு அறிமுகமில்லாத செல்பேசியிலிருந்து அழைப்பு வந்ததை கவனித்திருந்தாள் பத்மா. ஆனால் வங்கியுடனான தொடர்பை துண்டிக்க விரும்பாததால் அதை நிராகரித்தவள் வங்கியுடனான பிரச்சினை தீர்ந்தது என்ற திருப்தியுடன் சற்று முன் அழைத்தது யாராயிருக்கும் என்று பார்த்தாள். 

ஒருவேளை கார்த்திதான் வேறெதாவது ஃபோன்லருந்து கூப்ட்றானோ என்ற நினைப்புடன் அந்த செல்பேசி எண்ணுக்கு தயக்கத்துடன் டயல் செய்தாள். எதிர்முனையிலிருந்து தன்னுடைய கணவரின் குரல் கேட்கவே... ஐயையோ இவருக்கு விஷயம் தெரிஞ்சிரிச்சி போலருக்கே என்ற பதட்டத்துடன் என்ன செய்வது என தெரியாமல் சில நொடிகள் தடுமாறினாள்...

‘யார் கிட்ட பேசிக்கிட்டிருந்த? ரொம்ப நேரமா எங்கேஜ்டா இருந்தது..? காலேஜ்லதான இருக்கே?’

‘இல்லைங்க... லேசா தலவலிக்கிறா மாதிரி இருந்துது.... ஹாஃபடே லீவ் போட்டுட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.... கார்த்தி கூடதான் பேசிக்கிட்டிருந்தேன்.’ சட்டெனு மனதில் தோன்றிய பொய்யை உதிர்த்த பத்மா பேச்சை மாற்றும் நோக்கத்துடன், ‘ஏங்க ஒங்க ஃபோன ஏன் எடுக்காம போனீங்க?’

‘ராத்திரி படுத்தப்போ என் பெட்லதான் இருந்துது... காலையில எழுந்து பாத்தா காணம்... நீயும் காலேஜுக்கு போய்ட்டே.... கார்த்தியும் என்னைக்கும் இல்லாம இன்னைக்கி காலையிலயே எங்கயோ போய்ட்டான். எல்லா எடத்துலயும் தேடிப் பாத்துட்டு வந்துட்டேன்... ஒங்க ரெண்டு பேர்ல யாராச்சும் இருந்துருந்தா ஒங்க ஃபோன்லருந்து டயல் செஞ்சி பாத்துருக்கலாம்.....’

‘சரி... எதுக்கு கூப்டீங்க?’

‘எங்க நீ சொல்ல விட்ட? நா இன்னைக்கி ராத்திரி வரமாட்டேன்.... ஃபாரின் கஸ்டமர்ஸ் கொஞ்ச பேர் வந்தாங்கன்னு நேத்து சொன்னேன்ல... அவங்களுக்கு மகாபலிபுரம் பாக்கணுமாம்... நானும் கூட போறேன்.. ஒரு பையன அனுப்பறேன்.. அவங்கிட்ட என் செல்ஃபோனையும் ஒரு நாளைக்கி வேண்டிய என் ட்ரஸ்ஸையும் அப்புறம் பேஸ்ட், ப்ரஷ் எல்லாத்தையும் ஒரு ப்ரீஃப்கேஸ்ல போட்டு குடுத்தனுப்பு.... இன்னும் பத்து பதினஞ்சி நிமிஷத்துல வந்துருவான்...’

இவ்வளவுதானா? நிம்மதியா போச்சி.... நாளைக்கி சாயந்தரம்தான் வருவார் போலருக்கு... அதுக்குள்ள இந்த பிரச்சினைக்கு ஏதாச்சும் சொலுஷன் கிடைச்சிரும்...

‘சரிங்க.... வேறென்ன?’

‘வேற ஒண்ணுமில்லை... வச்சிடறேன்.’

இணைப்பை துண்டித்துவிட்டு பத்மா எழுந்து கணவரின் படுக்கையறையை நோக்கி சென்றாள்..

அடுத்த கால் மணி நேரத்தில் கணவருக்கு தேவையானதை எடுத்து ஒரு சிறிய கைப் பெட்டியில் அடுக்கி வைத்துவிட்டு நிமிரவும் அழைப்பு மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது. விரைந்து சென்று வாசற்கதவை திறந்தாள். 

‘கம்பெனியிலருந்து வரேன் மேடம்.’ என்றவனிடம் தான் தயார் செய்து வைத்திருந்த கைப்பெட்டியை கொடுத்தனுப்பிவிட்டு அவனை தொடர்ந்து சென்று கேட்டையும் சாத்திவிட்டு திரும்ப வீட்டினுள்ளே அவளுடைய செல்பேசி ஒலிப்பது கேட்டது. கார்த்தியாத்தான் இருக்கும் என்று எண்ணியவாறு ஓடிச் சென்று எடுத்தாள். 

*******

’என்னடா இப்படி சொல்லிட்டே?’ என்றான் கார்த்தி கலவரத்துடன்... ‘நா வேணும்னா ஸ்டேஷன் வரைக்கும் போயி ஒங்கப்பா கிட்ட பேசட்டா?’

அவன் எதிரில் நின்ற சேகர் முறைத்தான். ‘டேய்... இந்த விஷயமா இங்க வந்தீங்கன்னா ஒன் ஃப்ரெண்டதான் முதல்ல அரெஸ்ட் பண்ணுவோம்னு சொல்றப்போ என்னெ என்னடா பண்ண சொல்ற? நீ குடுக்காமயா அந்த கார்ட் அவங்கிட்ட போச்சி? அப்போ இந்த க்ரைம்ல நீயும் கூட்டாளியாம்.... நீ உள்ள போக தயாரா? சொல்லு நானும் வேணும்னா ஸ்டேஷன் வரைக்கும் வரேன்....’

‘இப்ப என்னடா பண்றது? கையில பணத்தோட வீட்டுக்கு போலன்னா.... அம்மாவ ஃபேஸ் பண்ண முடியாதுறா.... தொகை வேற பெருசா போயிருச்சி... இல்லன்னா எங்கயாச்சும் கிடைக்குதான்னு ட்ரை பண்ணி பாக்கலாம்... அந்த தடியன் வேற என் ஃபோன பாத்தாலே கட் பண்றான்....மெசேஜும் குடுத்து பாத்துட்டேன்... ரெஸ்பாண்டே பண்ண மாட்டேங்குராண்டா... இவன் இந்த மாதிரி பண்ணுவான்னு நினைச்சே பாக்கலடா...’ என்று படபடத்த கார்த்தி சட்டென்று ‘டேய் ஒன் ஃபோன குடேன்... இதுலருந்து ட்ரை பண்ணி பாக்கலாம்..’ என்றான்.

‘டேய்... லூசு... எனக்கும் அவன் க்ளாஸ்மேட்தானடா... நானே அவனுக்கு பல தடவ ஃபோன் பண்ணிருக்கேன்... என் நம்பரும் அவன் காண்டாக்ட் லிஸ்ட்ல இருந்தா?’

‘எதுக்கும் ட்ரை பண்ணி பாக்கலாண்டா... ஒனக்கு இந்த விஷயம் தெரியுங்கறது அவனுக்கு தெரிஞ்சிருக்காதே.’

‘சரி....என்னமோ பண்ணு...’ என்ற சேகர் தன்னுடைய செல்பேசியை குடுத்தான். ‘எதுக்கும் ஏர்டெல் நம்பர்லருந்து டயல் பண்ணு.... இந்த நம்பர் அவங்கிட்ட இல்லாம இருந்தாலும் இருக்கலாம்... சாதாரணமா அவுட்கோயிங் காலுக்கு ஜியோ நம்பர்தான் நா யூஸ் பண்ணுவேன்.. அவன் எடுத்தான்னா எங்கிட்ட குடுத்துரு நா பேசிக்கறேன்... உன் குரல் கேட்டதும் கட் பண்ணாலும் பண்ணிருவான்.’

அவர்கள் எதிர்பார்த்ததுபோலவே எதிர்முனையிலிருந்து சிதம்பரத்தின் குரல் கேட்டது. உடனே சேகர் அதை வாங்கி, ‘டேய் எங்கருக்கே?’ என்றான்.

ஒரு சில நொடிகள் தாமதித்தே சிதம்பரத்தின் பதில் வந்தது...’டேய் துரோகி...ஒங்கப்பா இன்ஸ்பெக்டர்ங்கற கெத்த எங்கிட்டவே காமிச்சிட்ட இல்ல?’

சேகர் ஒரு புன்னகையுடன் கார்த்தியை பார்த்தான். சக்சஸ் என்று கட்டை விரலை உயர்த்தி காட்டியவாறே, ‘என்ன சொல்ற? புரியல?’

‘டேய் நடிக்காத. இப்பத்தான் ஒங்கப்பா ஃபோன் வந்துது.... உங்கூட அந்த துரோகியும் நிக்கிறானா? அவனே கார்ட குடுத்து எடுறான்னு சொல்லிட்டு....ஒங்கிட்ட போட்டு குடுத்துட்டானா? வச்சிக்கறேண்டா ... ஒங்க ரெண்டு பேருக்கும் இருக்கு.... ஏதோ இப்ப எனக்கு போறாத காலம்.... மாட்டிக்கினு முழிக்கிறேன்.’

‘டேய்... இப்பவும் புரியல...நா சும்மாத்தான் கூப்ட்டேன்....’ என்றான் சேகர் ஒரு விஷம புன்னகையுடன். 

‘வேணாம்டா.. கடுப்படிக்காத.... ஒன் பக்கத்துல நிக்கிறவன்கிட்ட சொல்லு.... எடுத்த காச அவன் வீட்ல போயி குடுக்கறதுக்குத்தான் போய்கிட்டிருக்கேன்....’

சேகரின் பதிலுக்கு காத்திராமல் இணைப்பு துண்டிக்கப்பட்டது,

‘டேய் எங்கப்பா ஒண்ணும் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டு அவன கூப்ட்டு மிரட்டியிருக்கார் போல...பய மிரண்டு போய் பணத்தோட ஒங்க வீட்டுக்குதான் போய்கிட்டிருக்கான்... வா போலாம்...’ என்றவாறே சேகர் தன் வாகனத்தில் ஏறினான். 

கார்த்தி தன் தாயின் செல்பேசி எண்ணை டயல் செய்து, ‘அம்மா சிதம்பரம் பணத்தோட அங்கதான் வந்துக்கிட்டிருக்கான். அவன் பேசினதுலருந்து அவன் ரொம்ப கோவமா இருக்கான் போலருக்கு... உங்கக் கிட்ட மரியாதை இல்லாம நடந்துக்கவும் சான்ஸ் இருக்கு. நீங்க எதுக்கும் வாச கதவ மூடியே வச்சிருங்க... கேட் மட்டும் தொறந்திருக்கட்டும்.... அவன் கிட்ட எதுவும் பேசாதீங்க... ‘ 

பத்மா சரி என்றதும் கைப்பேசியை அணைத்து சேகருடன் இணைந்து வீடு நோக்கி புறப்பட்டான்.. 

********

காவல் ஆய்வாளர் தனபால் தன்னுடைய மகன் சேகரிடமிருந்து வந்த அழைப்பை துண்டித்த கையோடு தன் எதிரில் நின்றிருந்த காவலரை பார்த்தார். 

‘யோவ் ரெண்டு மூணு மாசத்துக்கு முன்னால ஒரு சீட்டிங் கேஸ்ல அப்பா, புள்ள ரெண்டு பேர அரெஸ்ட் பண்ணமே.... அந்த கேஸ் ஃபைல்ல சிதம்பரம்கற பேர்ல செல்ஃபோன் ஏதாச்சும் நோட் பண்ணியிருக்கமான்னு பாரு?’ 

அவர் என்ன சொல்கிறார் என்பதே விளங்காதவன் போல் காவலர் விழிக்க ஆய்வாளர் கடுப்பானார். ‘ஒனக்கு எல்லாத்தையும் டீட்டய்லா சொல்லணும்யா... நீ போயி ரைட்டர் ஏகாவ வரச் சொல்லு....’

அவன் உடனே ஓடிப்போய் ஏகா என்கிற ஏகாம்பரத்தை அழைத்து வந்தான். ஆய்வாளர், ‘அதான்யா அந்த சீட்டிங் கேஸ்ல...’ என்று சொல்வதற்கு முன்பே ஏகாம்பரம், ’இதோ பாக்கறேன் சார்.’ என்று பதிலளித்துவிட்டு சென்று அடுத்த சில நிமிடங்களில் கேஸ் கோப்புடன் வந்து நின்றார். ‘இருக்கு சார்.... டயல் பண்ணி தரவா?;’

’இப்படி இருக்கணும்யா? மசமசன்னு நிக்காம இவர பாத்து கத்துக்கோ.’ என்று மற்ற காவலரிடம் எரிந்து விழுந்த ஆய்வாளர், ‘நீங்க நம்பர சொல்லுங்க...’ என்றார் ஏகாம்பரத்திடம்.

அவர் டயல் செய்து முடித்த அடுத்த விநாடியே எதிர்முனையிலிருந்து சிதம்பரத்தின் குரல் ஒலித்தது. ‘எங்கடா இருக்கே?’ என்றார் தனபால் அதிகாரத்துடன். 

‘என்ன சார்? நா எதுவும் பண்ணலையே?’

தனபால் உரக்க சிரித்தார். ‘ஆமா... தப்பு பண்ணாமத்தான் நா ஒன்னெ கூப்ட்டு குசலம் விசாரிக்கறனாக்கும்? நீங்கல்லாம் திருந்தவே மாட்டீங்களாடா? பெய்ல வந்து முழுசா ரெண்டு வாரம் கூட ஆவல... அதுக்குள்ள ஒன் வேலைய ஆரம்பிச்சிட்ட இல்ல?’

‘என்ன சார் சொல்றீங்க? புரியல!’

‘வேணாம் கடுப்படிக்காத.... ஒன்மேல ,’...............' ஏரியா ஸ்டேஷனுக்கு அந்த ஏரியாவுலருக்கற பேங்லருந்து ஒரு கம்ப்ளெய்ண்ட் போயிருக்கு.... இன்னொருத்தர் அக்கவுண்ட்லருந்து அவங்க டெபிட் கார்ட யூஸ் பண்ணி அம்பதாயிரம் எடுத்திருக்கியாமே.... ஒன் மூஞ்சி ஏடிஎம் கேமராவுல தெரியுதாம்... போயி பாக்கறியா?’

சிதம்பரம் அதிர்ந்து போனான்..... அதுக்குள்ள கண்டுபுடிச்சிட்டானுங்களா? அவனுக்கு சட்டென்று நினைவுக்கு வந்தது... இது சேகர் வேலையாத்தான் இருக்கும்... தனபால் சேகரின் தந்தை என்பது சிதம்பரத்திற்கு தெரியும்... கார்த்திதான் அவன் மூலமா இவர் கிட்ட சொல்லியிருப்பான்.... திருட்டு பசங்க... கூட இருந்தே குழி பறிச்சிட்டானுங்க... எங்கிட்ட குடுக்கறா மாதிரி குடுத்துட்டு இந்த கார்த்தி பய..... இவர முதல்ல டீல் பண்ணிட்டு அப்புறம் அவனுங்கள பாத்துக்கலாம்...

‘என்னடா சைலண்டாய்ட்டே.... இவ்வளவு சீக்கிரமா மாட்டுவோம்னு நினைச்சி பாக்கல இல்ல? பணத்த என்ன பண்ணே.? வச்சிருக்கியா இல்ல....’

’இல்ல சார்...’ என்றான் சிதம்பரம் அவசரமாக.... ‘எங்கிட்டதான் சார் இருக்கு.....என் ஃப்ரெண்டு கார்த்தின்னு ஒருத்தன் சார்... அவங்கப்பா அக்கவுண்ட்லருந்துதான் எடுத்தோம்... அவந்தான் ஐடியாவும் குடுத்து கார்டையும் குடுத்தான்.’ மவனே என்னையா மாட்டி விடற../ நீயும்தான இதுல கூட்டாளி? என்று மனதுக்குள் கார்த்தியை கருவினான்.

‘டேய்...... அத நா பாத்துக்கறேன்.... மரியாதையா எடுத்த பணத்த அவங்க வீட்ல குடுத்துட்டு அவங்க வீட்லருந்தே எனக்கு ஃபோன் பண்ற. இன்னும் ஆஃபனவர்தான் ஒனக்கு டைம்...’ இணைப்பை துண்டித்துவிட்டு தன் எதிரில் நின்றிருந்தவர்களை பார்த்தார். ‘இவன் கேஸ் மறுபடியும் எப்பய்யா ஹியரிங்?’

’அடுத்த வாரம் சார்’ என்றார் ஏகாம்பரம்.

‘சட்டுபுட்டுன்னு முடிச்சி அவனெ கொஞ்ச நாளைக்கி உள்ள வைக்கணும்... காலேஜ் படிக்கற பையனாச்சேன்னு பெயில்ல விட்டு வச்சா... அவன் பண்ற வேலைய பாத்தியா.... ? எங்கிட்டவே லா பேசறான்..... நீங்க ஒன்னு பண்ணுங்க... நம்ம ஏபிபிக்கு (APP - Asst Public Prosecutor) போன் போட்டு அடுத்த தடவையும் வாய்தா வாங்காம கேச முடிக்க சொன்னேன்னு சொல்லுங்க.. போங்க...’

**********

சேகரும் கார்த்தியும் கார்த்தியின் வீட்டை நெருங்குவதற்கு சற்று தொலைவிலிருந்தே தன்னுடைய தாய் வாசலில் நிற்பதை கார்த்தி பார்த்துவிட்டு வாகனத்தின் வேகத்தை கூட்டினான்.

‘என்னம்மா எதுக்கு வெளியில வந்து நிக்கிறீங்க?’ என்றான் படபடப்புடன்..

‘உள்ள வா... சொல்றன்...’ என்று பதிலளித்துவிட்டு வாசலை நோக்கி நடந்த பத்மா திரும்பி சேகரை பார்த்தாள். ’நீயும் வாப்பா...’

மூவரும் வீட்டிற்குள் நுழைந்தனர். நுழைந்ததுமே ஹாலில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் டீப்பாயில் கிடந்ததை கார்த்தியும் சேகரும் கவனித்தனர். ‘சிதம்பரம் வந்திருந்தானாம்மா?’ 

‘ஆமாடா அத ஏன் கேக்கற?’

‘ஏன் என்னாச்சி?’

‘குடிச்சிருப்பான் போலருக்கு... நீ சொன்னா மாதிரியே வாச கதவ சாத்தியே வச்சிருந்தது நல்லதா போச்சி.... வெளியிலயே நின்னு பணத்த ஜன்னல் வழியா வீசி எறிஞ்சிட்டு போய்ட்டான்.... போற வழியில திரும்பி, ’இருக்கு ஒன் புள்ளைக்கி’ ன்னு சொல்லிட்டு நீ குடுத்திருந்தியே அந்த கார்டையும் ரெண்டா மடிச்சி தூக்கி எறிஞ்சிட்டு போயே போய்ட்டான்.... பணம் திருப்பி கிடைக்கணுமே வேண்டிக்கிட்டு இருந்த எனக்கு இப்ப அவன் ஒன்னெ ஏதாச்சும் செஞ்சிருவானோங்கற கவலைதாண்டா பெருசா இருக்கு... இப்படிப்பட்ட ஒருத்தன் கூட எப்படிறா ஒன்னால ஃப்ரென்டா இருக்க முடிஞ்சது?’

‘அப்படியெல்லாம் ஒன்னும் ஆவாதும்மா.... நா இத அப்பாக்கிட்ட சொல்லி டீல் பண்ணிக்கறேன்.. நீங்க கவலப்படாம இருங்க...’ என்று அவளை சமாதானப்படுத்திய சேகர் ‘டேய் எதுக்கும் ரெண்டு மூணு நாளைக்கு காலேஜ் பக்கம் வராத... அவன் இங்க வந்து செஞ்சிட்டு போனத நா அப்பாக்கிட்ட சொல்லி இத நல்லபடியா முடிக்க பாக்கறேன்.,,,, என்ன? நா வரேன்’ என்று கார்த்தியிடம் கூறிவிட்டு வெளியேறினான்..

கார்த்தி கலவரத்துடன் சோர்ந்து அமர்ந்திருந்த தன் தாயின் தோள்களை தொட்டான். ‘அம்மா.... உமா வர்ற நேரத்துல நீ இப்படி டல்லா இருந்தா அவளுக்கு விஷயம் தெரிஞ்சிரும்...அப்புறம் வேற வினையே வேணாம்... இனி நீ சொல்ற மாதிரியே நடந்துக்கறேம்மா.....எழுந்திரும்மா....’

முகத்தை துடைத்துக்கொண்டு எழுந்த பத்மா, ‘நீ சொல்றதும் சரிதான்....உமாவுக்கு இந்த விஷயம் தெரியவே கூடாது.... இந்த பணத்த எடுத்து பீரோவுல வை... நாளைக்கி முதல் வேலையா பேங்க்ல கொண்டு போயி கட்டிரு...’

‘சரிம்மா...’ என்றவாறு டீப்பாயில் கிடந்த பணத்தை சேகரித்துக்கொண்டிருந்த கார்த்தியை பார்த்தாள் பத்மா, ‘மறுபடியும் ஏதாச்சும் கோல்மால் பண்ணாம கட்டிருவியா?"

கார்த்தி புன்னகையுடன் தன் தாயை நிமிர்ந்து பார்த்தான்.... ’இதுலருந்து ஒரு அஞ்சாயிரம்.....’ என்று இழுத்தான் விஷமத்துடன்..

அவனை அடிக்க கையை ஓங்கிய பத்மா அவன் முகத்தில் தெரிந்த விஷம புன்னகையை பார்த்து அவளும் சிரித்தாள்.... ‘நீ திருந்தவே மாட்டியாடா? போயி ஒழுங்கு மரியாதை பணத்தை கட்ற வழிய பாரு.... நா போயி காப்பி போடறேன்... தல வலிக்குது.....’

பத்மா சமையலறையை நோக்கி நடக்க கார்த்தி பணத்தையும் ஹாலின் ஒரு மூலையில் கிடந்த உடைக்கப்பட்ட டெபிட் கார்டையும் எடுத்துக்கொண்டு தன் தந்தையின் படுக்கையறையை நோக்கி நடந்தான்....

***********

(நிறைவு)

43 கருத்துகள்:

 1. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா அக்கா...     வணக்கம்,  நல்வரவு,   நன்றி.

   நீக்கு
 2. கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது..

  வாழ்க நலம்....

  பதிலளிநீக்கு
 3. புத்தி கொள்முதல்...

  இனியாவது நல்லபடியாக இருக்கட்டும்....

  பதிலளிநீக்கு
 4. இந்தக் கால விடலைகள் அவசியம் படிக்க வேண்டிய கதை...

  ஆனாலும் அவிங்க எங்கே படிக்கப் போறாங்க!?..

  பதிலளிநீக்கு
 5. நாட்டின் நடப்புகளில் இதுவும் ஒன்று...
  இது முடிந்த மாதிரித் தெரியவில்லை...

  பதிலளிநீக்கு
 6. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா...   காலை வணக்கம்.  இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.

   நீக்கு
 7. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 8. கதை நன்றாக இருக்கிறது.
  நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது.
  வங்கி பணியில் ஏற்படும் கஷ்டங்கள், சிரமங்கள் புரிகிறது.

  நல்லோர் நட்பு நலம் பயக்கும் , கூடா நட்பு தீமை விளைவிக்கும் என்பதை உணர்த்தும் கதை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லோர் நட்பு நலம் பயக்கும் , கூடா நட்பு தீமை விளைவிக்கும் என்பதை உணர்த்தும் கதை.//

   உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

   நீக்கு
  2. உங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

   நீக்கு
 9. இதில் முடிவில் டெபிட் கார்டு உடைக்கப்பட்டது நல்ல உத்தி.

  இதில் வரும் சிதம்பரம்-கார்த்திக் போன்றே எனக்கு தெரிந்த குடும்பம் ஒன்று இருக்கிறது ஐயா.

  நான் இரண்டையும் முடிச்சு போடவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ///நான் இரண்டையும் முடிச்சு போடலை///

   அதான் முடிச்சை அவுத்தாச்சே!...

   நீக்கு
  2. இதில் வரும் சிதம்பரம்-கார்த்திக் போன்றே எனக்கு தெரிந்த குடும்பம் ஒன்று இருக்கிறது ஐயா.//

   அப்படியா? எனக்கு தெரியாதே!

   நீக்கு
 10. நல்ல கதை. இதில் வரும் அம்மா செய்யும் தவறைதான் அதாவது மகன் செய்யும் பிழையை தந்தையிடமிருந்து மறைத்து,அவன் குற்றத்திற்கு துணை போவது, பெரும்பாலான தாய்மார்கள் செய்கிறார்கள்.திருந்த வேண்டியது கார்த்தி மட்டுமல்ல, பத்மாவும் கூடத்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லோருக்கும் இது ஒரு எச்சரிக்கைப் பதிவாக இருக்கட்டும்.
   கணவன் ,மனைவி இருவரும் ஒற்றுமையாகப்
   பிள்ளைகளைக் கவனிக்க வேண்டும்.
   வங்கி நடவடிக்கைகள், போலீஸ் ஒத்துழைப்பு எல்லாம்
   கிடைத்ததால் பணம் திரும்ப வந்தது.

   மிக நல்ல கதையைக் கொடுத்த திரு ஜோசஃப் அவர்களுக்கு நன்றி.

   நீக்கு
  2. மிக நல்ல கதையைக் கொடுத்த திரு ஜோசஃப் அவர்களுக்கு நன்றி//

   மிக்க நன்றி.

   நீக்கு
  3. அம்மா செய்யும் தவறைதான் அதாவது மகன் செய்யும் பிழையை தந்தையிடமிருந்து மறைத்து,அவன் குற்றத்திற்கு துணை போவது, //

   மிகச் சரியாக சொன்னீர்கள். பாசத்திற்கும் ஒரு அளவு வேண்டும். பிள்ளைகள் தவறு செய்யும்போது அதனை உடனே கண்டித்து திருத்த வேண்டும். இல்லையென்றால் இதுபோன்ற விபரீதங்கள் நடக்க வாய்ப்புண்டு.

   நீக்கு
 11. I am outside shopping for Christmas. My cellphone Tamil keyboard is not working. Therefore I'll come back and respond to your comments in the evening. Thanks to all those who have commented so far

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Welcome...
   தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்..

   நீக்கு
  2. மிக்க நன்றி சார்.

   அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

   நீக்கு
 12. வங்கி போலிஸ் கதைகள் என்றால் பிச்சு உதறுகிறீர்கள்

  பதிலளிநீக்கு
 13. //தன் தந்தையின் படுக்கையறையை நோக்கி நடந்தான்....

  *********** //

  (இந்த இடத்தில் ) அடுத்து நடக்கப் போவதை அறியாதவனாய்.

  (என்று ஒரு வரியைச் சேர்த்திருக்கலாம்.)

  (இவ்வளவு எழுதியது போதாதா என்று சிரிக்காதீர்கள்.)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுவரை எழுதியது போதும் என்று நினைத்தாலும் இனிமேல் இதை தொடர்வதற்கு வேறு வலுவான காரணம் இல்லை என்பதாலும் கதையை நிறைவு செய்து விட்டேன்.

   உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  2. என்னைக் கேட்டால் நீங்கள் விட்ட இடம் தான் கதையின் தொடக்கமாக இருக்க வேண்டும்.

   வங்கியின் நடைமுறைகள் கதையின் பெரும் பகுதியை அடைத்துக் கொண்டிருக்கிறது. நம் கதையோ கார்த்தி அவன் அம்மா பத்மா சம்பந்தப்பட்ட கதை என்பதினால் மெயின் கதைக்கு சம்பந்தப்படாத விவரணைகளைக் கறாராக குறைத்துக் கொள்ளலாம்.

   இது வரை நீங்கள் எழுதியவற்றை இரண்டே பாராக்களில் நினைவலைகளாக அடக்கி விடலாம்.

   கார்த்தி, அவன் அம்மா பாத்திரப்படைப்பு மூலமாக கதாசிரியர் சமூகத்திற்கு சொல்ல வேண்டியவை தான் கதையின் செழுமையான பகுதி.

   ஆக சொல்ல வேண்டிய கதை சொல்லப்படாத உணர்வே விஞ்சி நிற்கிறது.

   நீங்களே வேறு கதையாக அதைத் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்.

   வாழ்த்துக்கள்.

   நீக்கு
 14. பல வீடுகளில்,கொஞ்சம் மகன் வளர்ந்ததும், மகனின் பக்கம் அம்மாக்கள் சாய்ந்துவிடுவது, மறைக்க முடியாத துயரம்.. தீதும் நன்றும் பிறர் தர வாரா..

  அழகிய கதை, வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட! கர்ண பரம்பரை அதிரா? என்னத்தை தானம் செய்தீங்க? கர்ணனுக்குப் போட்டியா?

   நீக்கு
 15. தீதும் நன்றும் பிறர் தர வாரா..//

  உண்மைதான் அனைத்தும் நம்மிடம் இருந்துதான் வருகின்றன.

  பதிலளிநீக்கு
 16. பையரின் தாயே பையரை ஊக்குவிக்கும் விதத்தில் நடந்து கொள்கிறார். இத்தனைக்கும் படித்துக் கல்லூரிப் பேராசிரியராக இருப்பவர். எந்த முகத்தோடு மாணவிகளுக்கு நல்லொழுக்கம் போதிக்க முடியும்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாத்தியார் பிள்ளை மக்கு என்று
   கேள்விப்பட்டதில்லையா அது மாதிரிதான் இதுவும் :))

   நீக்கு
 17. வணக்கம் சகோதரரே

  சகோதரர் திரு. டிபிஆர் ஜோசப் அவர்கள் எழுதிய கதை மிகவும் அருமையாக இருந்தது. நான் மூன்று தொடரையும் ஒரு சேர படித்து விட்டேன். மிகவும் நன்றாக கதை அமைந்துள்ளது.

  தன் மகனுடைய கூடாநட்பினால் வந்த தீங்கும், அவன் சரியான பாதை தவறி சென்று விடுவானோ என உணரும் சமயம் அவனை பிறர் அறியாமல் எப்படி திருத்துவது என அந்த தாய்க்கு முதலில் வந்த பதட்டம் சரிதான்.!
  ஆனால், நட்பு கெட்ட வழிக்கு நம்மை அழைத்துச் செல்கிறது என்பதை பையன் உணர்ந்து விட்டான் என தாய் புரிந்து கொள்ளும் போது அந்த தாய்க்கு உண்மையிலேயே சந்தோஷம் வந்திருக்கும்.கடைசியில்,பல நுணுக்கமான விஷயங்களை அவன் நல்ல நட்பு மூலமாக நடத்தி, அவன் இக்கட்டிலிருந்து தப்பியது போல் முடித்திருப்பதில் அந்த தாய் மட்டும் மன நிம்மதியை அடையவில்லை. படிக்கும் நமக்கும் மனதில் நிம்மதி பிறந்தது. நல்ல அருமையான கதை. பகிர்வுக்கு மிக்க நன்றி. தாமதமாக வந்து கருத்துக்கள் தந்ததற்கு மன்னிக்கவும்.

  சகோதரர் திரு.டிபிஆர்.ஜோசப் அவர்களுக்கும், மற்றும் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுடைய விரிவான கருத்துரைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி.

   உங்களுடைய கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள் மிக்க நன்றி

   நீக்கு
 18. கடந்த மூன்று வாரங்களாக என்னுடைய கதையை பிரசுரித்த அன்பு நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  அதே போன்று மூன்று வாரங்களும் தளராமல் வந்திருந்து வாசித்து கருத்துரை இட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.

  உங்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  மீண்டும் எங்கள் ப்ளாகுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 19. ஜோசப் அவர்களுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும், மற்றும் எபி குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய கிறிஸ்த்மஸ் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!